தன் சிறு வயது முதல் தெய்வீக இசை பாடியும், சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் இறைப்பணியில் இடையறாது ஈடுபட்டிருந்த டாக்டர் சிவானந்த விஜயலக்ஷ்மி அவர்கள் தமது 74வது வயதில் 2011 நவம்பர்-8 (செவ்வாய்) அன்று மறைந்தார்.
மதுரையைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி என்ற அந்த 13 வயதுச் சிறுமியின் இசைத் திறமைகளைக் கண்டு பூரித்த சுவாமி சிவானந்தர், ரிஷிகேஷ் வருமாறு பணித்தார். ராமாயணப் புத்தகத்தை அவளுக்குப் பரிசாக அளித்து இன்னும் சில மாதங்களிலேயே வால்மீகி ராமாயணச் சொற்பொழிவு செய்யும் அளவுக்கு பாண்டித்யம் உண்டாகும் என்றும் ஆசீர்வதித்தார்.
குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்ட அந்தப் பெண் ‘சிவானந்த’ என்ற குருவின் திருப்பெயரையும் தனது பெயருடன் இணைத்துக் கொண்டார். மடைதிறந்தாற்போல சுலோகங்களும், பாசுரங்களும், சொற்பொழிவுகளும் அவர் நாவினின்று பெருகின. வால்மீகி, கம்பர், துளதிதாசர் ஆகிய மூவரின் ராமாயண காவியங்களையும் இணைத்து “திரிவேணி ராமாயணம்” என்ற வடிவில் சொற்பொழிவாக வழங்கும் பாணியை அவரே மிகப் பெரிய அளவில் பிரபலப் படுத்தினார். இது தவிர, 15 இந்திய மொழிகளில் இருந்த ராமாயணங்களையும் கற்று அவற்றில் உள்ள நயங்களையும் தனது சொற்பொழிவுகள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். மதுரை சௌராஷ்டிர சமூகத்தில் உதித்த நடனகோபால நாயகி சுவாமிகள் என்ற மகானின் அருளாசி பெற்று அவரது கீர்த்தனங்களைப் பல்வேறு ராகங்களில் பாடிப் பிரசாரம் செய்தார்.
இனிய குரல்வளமும், தேர்ந்த கர்நாடக சங்கீதப் பயிற்சியும் அவரது பக்தி வெளிப்பாட்டிற்கு மெருகூட்டின. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தையும், அபிராமி அந்தாதியையும் ராக மாலிகையாக அவர் பாடி அளித்த இசைப் பதிவுகள் இன்றும் ஏராளமான இல்லங்களில் பக்தி மணம் கமழச் செய்து வருகின்றன. ஸ்ரீ லலிதா திரிசதி, லலிதா பஞ்சரத்னம், மீனாட்சி பஞ்சரத்னம் என்று மேலும் பற்பல சுலோகங்களையும் அவர் இசையுடன் கலந்து பாடி அளித்துள்ளார்.
அவரது புனித நினைவுக்கு நம் அஞ்சலி.
கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. குரல் கேட்ட மாதிரி இருக்கிறது. எப்போது எங்கே என்று தெரியவில்லை. ஆனால் இப்போது திரும்பக் கேட்க்கும் வாய்ப்பு உங்களால் கிடைத்த வாய்ப்பு தான். நன்றி. இதில் நிறையவே இன்னும் பல பதிவாகியிருக்கின்றன.
சம்பிரதாயத்துக்காகச் சொல்லவில்லை. சந்தொஷமாக இருக்கிறது. இன்னும் நல்ல பரிச்சயத்தை, அடிக்கடி கேட்கும் பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்ள வில்லையே என்றும் வருத்தமாக இருக்கிறது. இப்போது நான் இருக்கும் இடத்தில் பொதிகை இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. வேளுக்குடி கேட்பது ஒரு வாரமாக ந்ன்று விட்டது. ஆனால் விஜய், ஜெயா போன்றவற்றில் உபன்யாசம் செய்யும் யாரையும் கேட்கவோ சகித்துக்கொள்ளவோ முடியவில்லை. செய்யுள் எழுதத் தெரிந்தவர்கள் எல்லாம் கவிஞர்கள் ஆகமாட்டார்கள் என்பது போல உப்ன்யாசகர்கள் எல்லோரும் உபன்யாசகர்கள் ஆகிவிடமாட்டார்கள்.