கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நினைவு மண்டபத்திற்கு எதிரே உள்ளது ஸ்ரீபாதக் கோயில். அந்தப் பெரிய பாறை மீது ஓரிடத்தில் இயற்கையாகவே பாதம் போன்ற அமைப்பு உள்ளது. குமரியில் ஒற்றைக் கால் ஊன்றி தவம் புரியும் தேவியின் திருப்பாதமாக பாவித்து, அதனை சக்தி பீடமாக வணங்கும் ஐதிக மரபு நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. அந்த இடத்தில் தான் 1960-களில் அதைச் சுற்றி ஸ்ரீபாதக் கோயில் எழுப்பப்பட்டது.
அதை முதன்முதலில் பார்த்தபோது நான் அடைந்த பரவசம் சொல்லில் அடங்காதது. ஒரு கணம் கண்மூடி கோயில் எழுவதற்குமுன் அந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்று மனதில் கற்பனை செய்து பார்த்தேன். அந்த மாபெரும் பாறை நடுவி்ல் ஊன்றிய ஒற்றைப் பாதம். அதன் மீது அகண்டாகாரமான வான வெளி. அந்த வெளி முழுவதையும் அந்த ஒற்றைப் பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்பது போல ஒரு தோற்றம். அந்தப் பாதத்தைத் தாங்கும் பாறை. அதைத் தாங்கும் கடல். உண்மையில் எது எதைத் தாங்கிக் கொணடிருக்கிறது? அந்த எண்ணமே அப்படி ஒரு சிலி்ர்ப்பை எனக்கு அளித்தது.
ஜெயமோகனின் தாயார் பாதம் கதையைப் படித்தபோது, இந்த நினைவுடன் இணைத்து மீட்டிப் பார்க்கையில், அபாரமான உணர்வெழுச்சி கொண்ட அந்தக் கதை இன்னும் நெருக்கமானது. சமீபத்தில் கம்ப ராமாயணம் படித்துக் கொண்டிருக்கையில் ஒரு வரி அப்படியே கட்டிப்போட்டு விட்டது –
பாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ?
இந்த வரி அந்தச் சிலிர்ப்பான அனுபத்தைக் கவிதையில் வடித்துத் தருகிறது என்று தோன்றுகிறது.
வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ?
ஓதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப்
பூதங்கள் தொறும் உறைந்தால், அவை உன்னைப் பொறுக்குமோ?
[அறைகின்ற – விரித்துப் பேசுகின்ற
ஓதம் – குளிர்ச்சி,
உறைந்தால் – வாசம் செய்தால்,
பொறுக்குமோ – தாங்குமோ]
எல்லையில்லாத உலகங்கள் உள்ளன என்று வேதங்கள் கூறுகின்றன. அத்தகைய உலகங்கள் அனைத்திலும் விரிந்து பரவி நிரம்பியுள்ளது பரம்பொருளே என்றும் அவை கூறுகின்றன. அந்த இறைக்காட்சியை இராமனின் பாத தரிசனமாகக் கண்ட விராதன் பரவசத்தில் பாடும் பாடல் இது.
படிவம் என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்கு வடிவம் என்று பொருள். வடிவம் என்றால் உருவம் மட்டுமல்ல, அழகு என்றும் பொருள்படும். அதனால்தான் வடிவுடை நாயகி என்று அம்பிகையைக் கூறுகிறோம். பிரபஞ்சத்தின் ஸ்தூல வடிவின் பாதமே இப்படி என்றால், அதன் மற்ற அவயவங்கள் எல்லாம் சேர்ந்த முழுமையின் அழகுதான் எப்படி இருக்கும்!
பாதோஸ்ய விச்’வா பூதானி, த்ரிபாதஸ்யாம்ருதம் திவி-
இங்கு தோன்றுவது அனைத்தும் அவருடைய கால் பங்கு, அதாவது பாதம் மட்டுமே. அவரது முக்கால் பங்கு அழிவற்ற விண்ணில் உறைகிறது என்கிறது வேதம்.
எனது ஒரு அம்சத்தால் இந்த புவனம் முழுவதையும் தாங்குகிறேன் என்று பகவான் கீதையில் கூறுகிறார்.
ஆதி இயற்கையான மூலப் பிரகிருதி வெளிப்பட்டும் (வ்யக்தம்) வெளிப்படாமலும் (அவ்யக்தம்) நிற்கிறது என்கிறது சாங்கிய தரிசனம்.
நமது கண் காணும், மனம் காணும் இந்தப் பிரபஞ்சம் மகா பிரபஞ்சத்தின் ஒரு பகுதி மட்டுமே என்ற பிரமிப்பின் எதிரொலியே இந்தப் பாடல்.
பாத தரிசனம் கண்ட பக்தனுக்கு உடனே பாற்கடல் ஞாபகம் வந்து விடுகிறது. நல்லவேளை நீருக்குள் மட்டும் வாசம் செய்கிறாய். நிலைத்திருக்கும் நிலம், பாய்ந்தோடும் நீர், மேலெழுந்து எரியும் தீ, பத்துத் திசைகளிலும் வீசும் காற்று, எங்கும் பரவியிருக்கும் விசும்பு என்று ஒன்றுக்கொன்று ஒவ்வாமல் இருக்கும் ஐந்து பூதங்களிலும் வாசம் செய்தால் அவற்றால் உன்னைத் தாங்கத் தான் முடியுமா என்ன? என்று குழந்தைத் தனமாகக் கேட்கிறான். யார் யாரைத் தாங்குவது? எல்லாவற்றையும் தாங்குபவள், தரிப்பவள் தரணி. அந்தத் தரணியையே தரிப்பவன் அவன். அதனால் தான் தரணீதரன் என்றே அவனுக்குப் பெயர்!
இவ்வாறு தொடங்கி விராதன் இராமனைத் துதிக்கும் பாடல்கள் அனைத்துமே அழகிய கவித்துவம் கொண்டவை.
அயோத்திலிருந்து கிளம்பி வனவாசத்தை ஆரம்பித்ததும், முனிவர்களை அரக்கரின் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவேன் என்று அபயம் அளித்திருக்கிறான் இராமன். கானகத்தில் நுழைந்தவுடன் அவன் முதலில் எதிர்கொள்வது விராதன் என்ற அரக்கனைத்தான். தன்னை எதிர்த்துப் போரிடும் இராம லட்சுமணர்களைத் தூக்கிக்கொண்டு பெரு உருவம் கொண்ட விராதன் மேலெழ, அவன் தோளிலிருந்த இராமன் விராதனைக் காலால் உதைத்துத் தள்ளி, மீண்டும் போரிட்டு அவனை வீழ்த்துகிறான். அப்போது அரக்கனாக இருந்த விராதன் சாப விமோசனம் அடைந்து கந்தர்வனாகிறான். தன்னுலகம் சென்று அடைகிறான். இந்தச் சரிதத்தைக் கூறுவது ஆரணிய காண்டத்தில் உள்ள விராதன் வதைப் படலம்.
வால்மீகி ராமாயணத்தில், சாப விமோசனம் தந்த இராமனுக்கு நன்றி தெரிவித்து விட்டு விராதன் சென்று விடுகிறான். ஆனால், தனது இராமவதார காவியத்தில், விராதனுக்கு சாப விமோசனம் மட்டுமல்ல, இராம ஸ்பரிசத்தால் மேலான நல்லறிவும் உண்டாயிற்று என்று கம்பன் எழுதுகிறான்.
பொறியின் ஒன்றி, அயல் சென்று திரி புந்தி உணரா,
நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும்,
பிறிவு இல் அன்பு தனி பண்டு உடைய பெற்றி தனினும்
அறிவு வந்து உதவ, நம்பனை அறிந்து பகர்வான்.
[பொறியின் ஒன்றி – ஐந்து புலன்களுக்கு வசப்பட்டு
அயல் சென்று திரி – வேறு விஷயங்களில் சென்று திரிகின்ற
புந்தி – புத்தி
நினைவு – எண்ணம்
உண்டதனினும் – உண்டாகியதாலும்
பிறிவு இல் – பிரிவில்லாத
தனி – ஒப்பற்ற
பண்டு – முன்பு
பெற்றி தனினும் – தன்மையினால்
நம்பனை – இராமனை, பகர்வான் – சொல்வான்]
முன்பு நன்னெறியில் இருந்து வழுவியதால்தான் அவனுக்கு இந்த அரக்கப் பிறவி ஏற்பட்டது. இப்போது இராமனின் திருவடி தீட்சையினால், புலன்களின் வழி சென்று விஷய விகாரங்களில் சிக்கிய புத்தியினால் உணர முடியாத, நன்னெறியிலே பொருந்தி நிற்கின்ற எண்ணம் மீண்டும் அவனுக்கு உண்டாகியது. அதோடு, முற்பிறவியில் அவனுக்கிருந்த இறையன்பின் மிச்ச சொச்சமும் சேர்ந்து இப்போது இராமனைக் கண்முன்னால் கண்டவுடன் அதனை அறிந்துகொள்ளக்கூடிய அறிவாக வந்து கூடியது.
தனது புத்தியால் தீண்டி உணர்ந்தவை அந்தத் திருவடிகள். அதனால் பாதங்கள் *இவை* என்று துதிக்கிறான்.
கடுத்த கராம் கதுவ, நிமிர் கை எடுத்து, மெய் கலங்கி,
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள, உறு துயரால்,
“அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே” என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப, நீயோ அன்று ஏன் என்றாய்?
[கடுத்த – கோபம் கொண்ட
கராம் – க்ராஹம் என்ற வடசொல் திரிபு, முதலை;
கதுவ – கவ்வ;
உடுத்த திசை – சூழ்ந்த திசை;
அடுத்த – பொருந்திய;
வாரணம் – யானை]
இப்படி உலகங்கள் அனைத்தையும் தாங்கும் பரம்பொருள் ஆனாலும், திசைகள் அதிருமாறு பரமே பரமே என்று யானை கதறி அழைக்க, அன்பின் வசப்பட்டு அந்த அழைப்பின் விடையாக வந்து ஏன் என்று கேட்டது நீயோ அன்றோ? ஆனால் இன்று நான் உன்னை நினைக்கவும் இல்லை, அழைக்கவும் இல்லை. ஆனாலும், நீயே வந்து அருள் செய்தாயே என்று நெகிழ்கிறான்.
கஜேந்திர மோட்சதில் யானைக்கு மட்டுமல்ல, முதலைக்கும் விமோசனம் கிடைத்தது. ஒரு விலங்கினால் மற்றொரு விலங்கிற்கு விளைந்த துயர் நீக்க வந்து, இரு விலங்குகளுக்கும் முக்தியளித்தாய். அதே போன்று, என்னையும் எனது விலங்குத் தன்மையில் இருந்து நீக்கி ஞானம் தந்து அருளினாய் என்று போற்றுகிறான்.
புறம் காண, அகம் காணப் பொதுமுகத்தின் அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமான்! இயம்புதியால்;
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி
கறங்கு ஆகும் எனத் திரிய, நீயேயோ கடவாய் தான்?
[இயம்புதி – சொல்வாயாக
ஆல் என்பது அசைச் சொல்
கறங்கு – காற்றாடி
நீயேயோ – நீ தானோ
கடவாய் – கடமையுடையவன்]
‘புறம் காண, அகம் காண’ என்ற சொல்லாட்சி ஆழமானது.
தன்னுள்ளேயே அகத்தாராக இருக்கும் பரமபத வாசிகளான நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும், அதற்குப் புறத்தே நிற்கின்ற அனைத்து பக்தர்களுக்கும் பொதுநோக்குடன் பாரபட்சமின்றி அருள் தரும் பெருமான். இந்த வைணவத் தத்துவம் இங்கே பேசப்படுகிறது என்று இதற்கு ஒரு பொருள் கொள்ளலாம்.
புறத்தே உள்ள ஊனக் கண்களாலும், அகத்தே உள்ள ஞானக் கண்களாலும் காணத் தக்கவன் என்றும் கொள்ளலாம். வேதாந்த நோக்கில், புறப் பிரபஞ்சமாகவும், ஜீவாத்மாகவும் உள்ளது பரம்பொருளே என்பதை உணர்த்தும் வரி இது. அம்பிகையின் ஆயிரம் திருப்பெயர்களில் பரா (அப்பாற்பட்டவள், வெளி நின்றவள்) என்ற நாமத்திற்கு உடனடியாக அடுத்து வருவது ப்ரத்யக் சிதீ ரூபா (உள்முகமாகக் காணும் உணர்வு வடிவானவள்) என்பதை இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.
அறம் காப்பதற்கு உன்னை விட்டால் வேறு ஆள் கிடையாதா? ஒரு துணையும் இன்றி நீ ஒருவன்தானா காற்றாடி போலச் சுழன்று சுழன்று அவதாரம் எடுத்து உலகைக் காப்பாற்றிக் கொண்டிருக்க வேண்டும்!
பரம்பொருளே இராமனாக வந்து தன் முன்னே நின்று கொண்டிருக்கிறது என்பதைத் தன் ஞானத்தால் கண்டு கொண்ட விராதன், அந்த அவதார மகத்துவத்தைப் போற்றும் பாங்கு இது.
பகவான் கூறுகிறார்–
‘பார்த்தா, மூன்று உலகங்களிலும் எனக்கு யாதொரு கடமையும் இல்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லை. ஆயினும், இடையறாது கர்மத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன். அர்ஜுனா, நான் அயர்வின்றி எப்போதும் கர்மத்தில் ஈடுபடாவிடில் மனிதர் எப்போதும் என் வழியையே பின்பற்றுவர். நான் செயலில் இயங்காவிடில் இவ்வுலகங்கள் அழிந்து போகும், குழப்பத்தை உண்டாக்கி நானே மக்களைக் கெடுத்தவன் ஆவேன்’
கீதையின் இந்த தத்துவார்த்தத்தை அற்புதமாக ஒரு துதிப்பாடலின் நடுவில் தேக்கி நிற்கிறது கம்பனின் கவிதை.
அவன் இப்படிக் காலம் தோறும் அவதாரம் எடுத்துக் காப்பது தன்மீது அகத்தில் பக்தி பூண்டொழுகும் அடியார்களை மட்டுமல்ல. அவனை வணங்காது நிற்கும் “புறத்தார்களையும்” சேர்த்துதான். அதனால் தான் “பொது நோக்கம் இறங்காத தாமரைக் கண் எம்பெருமான்”!
தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகில், ஐய!
நீ அறிதி எப்பொருளும், அவை உன்னை நிலை அறியா;
மாயை இது என் கொலோ? வாராதே வர வல்லாய்.
[ஆயும் – பசுவும்
என் கொலோ – என்னவோ]
தாய் போன்ற கருணையுடன் இப்படி உலக உயிர்களையெல்லாம் காக்க அவதாரம் எடுத்து வருகிறாய். ஆனால் கன்றுகள் தாய்ப்பசுவை இயல்பாகக் கண்டுகொள்வது போல, இந்த உலக உயிர்கள் உன்னைக் கண்டுகொள்வதில்லையே; இதுவும் உந்தன் மாயமோ? என்று வியக்கிறான்.
வந்தாய் போலே வாராதாய் வாரா தாய்போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனிவாய் நால்தோளமுதே எனதுயிரே
என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிக் கருத்தை அவர்மீது பெரும் ஈடுபாடு கொண்ட கம்பன் அப்படியே எடுத்தாண்டிருக்கிறான்.
மனத்திற்கும் வாக்கிற்கும் அறிவிற்கும் எட்டியது போல் இருந்து எட்டாதிருப்பதும், எதற்கும் எட்டாமலிருந்து அன்பிற்கு வசப்பட்டு எட்டுவதும் இறைவனது தன்மைகள். இந்த முரணும் அவனது மாயத்தின் ஒரு பகுதியே. “வாராதே வரவல்லாய்” என்ற வரி அதைத்தான் சுட்டுகிறது.
அரவு ஆகிச் சுமத்தியால், அணி எயிற்றின் ஏந்துதியால்
ஒரு வாயில் விழுங்குதியால், ஓர் அடியால் ஒளித்தியால்
திரு ஆன நிலமகளை; இஃது அறிந்தால் சீறாளோ
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பின் வைகுவாள்?
[அரவு – பாம்பாகிய ஆதிசேஷன்
அணி எயிற்றின் – அழகிய பற்களால்
மரு ஆரும் – மணம் வீசும்
துழாய் அலங்கல் – துளசி மாலை
வைகுவாள் – வசிப்பவள்]
அவன் இப்படி சுழன்று சுழன்று அவதாரம் எடுப்பதற்கு அறம் காப்பது மட்டுமல்ல, இன்னுமொரு காரணமும் இருக்கிறது. பூமி மீது கொண்ட காதல்!
ஆதிசேஷனாகித் தன் ஆயிரம் தலைகளால் இந்த பூமியைச் சுமக்கிறான். வராகமாகி வந்து பற்களில் ஏந்துகிறான். பிரளய காலத்தில் அப்படியே ஆசையோடு எடுத்து விழுங்கி விடுகிறான். இராமனாக வந்து பூமிப் பிராட்டியாகிய சீதையைக் கரம் பிடிக்கிறான். மார்பில் வாழும் திருமகளே பொறாமைப் படுமளவுக்கு இருக்கிறது மண்மகள் மீது விண்ணவன் கொள்ளும் காதல்.
மண்ணும் விண்ணும் தழுவிக் கொள்ளும் நேசத்தைக் கவிஞன் பாடும் அழகு இது.
நீ ஆதி பரம்பரமும்; நின்னவே உலகங்கள்;
ஆயாத சமயமும் நின் அடியவே, அயல் இல்லை;
தீயாரின் ஒளித்தியால், வெளி நின்றால் தீங்குண்டோ?
வீயாத பெருமாய விளையாட்டும் வேண்டுமோ?
[பரம்பரமும் – பராத்பரமும், அதாவது மேலான கடவுளும்;
ஆயாத – ஆராய்ந்தறிய முடியாத
நின் அடியவே – உன்னைக் காரணமாகப் பற்றியவையே
தீயாரின் ஒளித்தி- வஞ்சகர்களைப் போல் ஒளிந்து கொள்கிறாய்
வீயாத – அழியாத]
ஆகாயத்திலிருந்து விழும் மழைத்துளிகள் எல்லாம் கடலைச் சென்று அடைவது போல, எல்லா நமஸ்காரங்களும் கேசவனைச் சென்று அடைகின்றன என்பது மகாபாரத வாக்கியம். ‘ஆயாத சமயமும் நின் அடியவே’ என்று அதை அருமையாக இங்கே கம்பன் எடுத்துரைக்கிறான்.
ஒளிந்து விளையாடுவது தெய்வத்திற்குப் பிடித்தமான செயல் என்கிறது வேதம் (பரோக்ஷ ப்ரியா இவ ஹி தேவா:). இதற்கு ‘அடியார்களை சோதனை செய்வது, பிறகு வரம் கொடுப்பது’ என்ற சாதாரணப் பொருளை பெரும்பாலான பக்தர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதன் உண்மைப் பொருள் அதுவல்ல. பிரபஞ்ச இயக்கமேதான் அந்த விளையாட்டு. தெய்வ லீலை என்று நமது மரபு அதனை அழைக்கிறது. ஒன்று பலவாகவும், பலது ஒன்றாகவும் மாறி மாறி ஆகிக் கொண்டேயிருப்பதுதான் லீலை.
ந.பிச்சமூர்த்தி “லீலை” என்று அற்புதமான கவிதை ஒன்று எழுதியிருக்கிறார் –
மண்ணில் பிறந்தால்
வானேற ஆசை
காலோடிருந்தால்
பறப்பதற்காசை
வானாயிருந்தால்
பூமிக்கு வேட்கை
கொண்டலாயிருந்தால்
மழையாகும் ஆசை
மின்னாயிருந்தால்
எருக்குழிக்காசை
எருக்குழியானால்
மலராகும் பித்து
இரும்பாயிருந்தால்
காந்தத்திற்காசை
துரும்பாயிருந்தால்
நெருப்புக்காசை
தனியாயிருந்தால்
வீட்டுக்கு ஆசை
வீட்டோடிருந்தால்
கைவல்யத்திற்காசை
நானாயிருந்தால்
நீயாகும் ஆசை
உனக்கோ
உலகாகும் ஆசை.
ஆறு நாள்களில் உலகத்தைப் படைத்துப்போட்டுவிட்டு, அதன் மீது பாவம் என்ற பாறாங்கல்லை சுமத்தி விட்டு, இறுதித் தீர்ப்பு நாளுக்காகக் கறுவிக் கொண்டிருக்கும் பொறாமை கொண்ட தேவனின் கணக்கு வழக்கு அல்ல பிரபஞ்சம். நமது தரிசனங்கள் இறையின் விளையாட்டாகவே பிரபஞ்சத்தைக் காண்கின்றன. இறை ஒன்றே எங்கும் நிரம்பியிருப்பதால் இங்கு போட்டிக்கு யாருமில்லை. இது போட்டிக்காக ஆடும் விளையாட்டல்ல. ஆசைக்காக விளையாடும் விளையாட்டு. விளையாட்டுக்காகவே ஆடும் விளையாட்டு. அந்த விளையாட்டு இயல்பானது, குழந்தைத் தனமானது. அதில் வெற்றி தோல்வி இல்லை. இலாப நஷ்டங்களும் இல்லை. ‘அலகிலா விளையாட்டுடையார்’ என்று ஆரம்பத்திலேயே கம்பன் சொல்லி விடுகிறான்.
சரி, எதுவுமே இல்லாவிட்டால் பிறகு எதற்கு விளையாட்டு?
இந்த விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்கிறது, மாயம் இருக்கிறது, ஆனந்தம் இருக்கிறது, அறிதல் இருக்கிறது. முக்கியமாக ‘படிவங்கள் எப்படியோ?’ என்று கேட்ட அந்தப் பெருவியப்பும் இருக்கிறது.
மிக அருமையான ஆன்மீக கட்டுரை. விராதன் பற்றிய குறிப்பை என்னுடைய கம்ப இராமாயண வலைத்தளத்திலிருந்து கொடுத்திருக்கிறேன். இயன்றால் என் வலைத் தளத்தையும் பார்க்கவும்.
httu://www.kambaramayanam-thanjavooraan.blogspot.com
“இராம லக்ஷ்மணர் தண்டகாரண்யம் சென்றடைந்தபோது, அங்கே விராதன் எனும் கொடிய அரக்கன் எதிரே வருகிறான். இவ்வரக்கன் பல யானைகள், அதைவிட இருமடங்கு சிங்கங்கள், பதினாறு யாளிகள் இவற்றின் பலங்கொண்டவன். அவன் கையில் கொடிய மும்முனை சூலம் ஏந்தியிருந்தான். அவன் ஐம்பெரும் பூதங்களும் ஒன்று சேர்ந்ததைப் போன்ற உருவத்தையுடையவன். இடி போன்ற உரத்த குரலையுடையவன். பிரமதேவன் அளித்த வரத்தால் இருபத்தையாயிரம் யானை பலம் கொண்டவன். இத்தகைய விராதன், இராம லக்ஷ்மணரின் எதிரில் வந்து நிற்கிறான்.
வந்தவன் ஒரே கணத்தில் சீதா பிராட்டியைத் தன் ஒரு கையால் அள்ளிக்கொண்டு ஆகாய மார்க்கத்தில் செல்லத் தொடங்குகிறான். திடீரென்று வந்து ஓர் அரக்கன் தேவியை தூக்கிச் சென்றதும், இராமனும் இலக்குவனும் திகைத்தனர். கோபம் மேலிட தங்கள் வில்லை எடுத்து நாணைப் பூட்டி, விராதனைக் கூவி அழைத்து “அடே! அற்பனே! இப்படியொரு வஞ்சகம் செய்துவிட்டு எங்கே போகிறாய்? திரும்பு” என்றார்கள்.
விராதன் சொல்லுகிறான், “மனிதப் பதர்களே! பிரமதேவன் அளித்துள்ள வரத்தினால் எனக்கு மரணம் இல்லை. உலகத்தில் உள்ளோர் அனைவரையும் ஆயுதம் இல்லாமலே அழித்துவிடவல்ல ஆற்றல் படைத்தவன் நான். போனால் போகிறது, உங்களுக்கு உயிர் பிச்சை அளிக்கிறேன். இந்த பெண்ணை என்னிடம் விட்டுவிட்டு உயிர் பிழைத்து ஓடிவிடுங்கள்” என்கிறான்.
இராமன் சிறிய புன்னகை புரிந்தான். இவன் அறியாமையை எண்ணி, தன் வில்லின் நாணை இழுத்து ஒரு பேரொலியை எழுப்பினான். அவ்வொலி ஏழு உலகங்களும் அஞ்சும் வண்ணம் பேர்முழக்கமாகக் கேட்டது. ஒரு கொடிய பூனையின் வாயில் சிக்கித் தவிக்கும் கூண்டுக் கிளிபோல அன்னை அவ்வரக்கன் பிடியில் அஞ்சிக் கதறிக்கொண்டிருந்தாள். பிராட்டியைக் கீழே விட்டுவிட்டு, அவ்வரக்கன் மிகுந்த கோபத்துடன் தன் கையிலிருந்த கொடிய மும்முனை சூலத்தை இராமன் மீது வீசினான்.
அவன் வீசிய அந்தச் சூலாயுதம் அஷ்டதிக் கஜங்களும் நடுங்க, அனைத்துலகங்களும் அஞ்சி நடுங்க, மின்னலோடு விரைந்து இராமனுடைய மார்பை நோக்கி வருகிறது. இராமன் தன் கோதண்டத்தினின்றும் ஓர் அம்பைப் பூட்டி அந்த அரக்கன் வீசிய சூலத்தின் மேல் எய்தலும், அந்த சூலம் இரண்டாக உடைந்து வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழுவதைப் போல பூமியின் எல்லையில் போய் விழுந்தது. இதனால் அரக்கனின் கோபம் மேலும் அதிகமாகியது. மலைகளையெல்லாம் வேரோடு பிடுங்கி இராமன் மீது எறிகிறான். அப்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் மலைகளை இராமன் தன் வாளியால் அடித்து, அவை மீண்டும் அவ்வரக்கன் மீதே விழும்படி செய்கிறான்.
காயங்களால் புண்பட்ட உடலோடு விராதன் ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி இராமன் மீது வீசுகிறான். இராமன் நன்கு அம்புகளை ஏவி, அந்த மரத்தைத் துண்டு துண்டாக்கி கீழே தள்ளிவிட்டு, பன்னிரெண்டு அம்புகளை அவ்வரக்கனின் உடலின் பல பாகங்களிலும் உட்புகுமாறு செலுத்த, அவன் அலறி மேலும் கோபத்துடன் காட்டுப் பன்றிபோலத் தன் உடலை உதறுகிறான்.
அவன் உடலில் அம்பு துளைத்த பகுதிகளில் இரத்த ஆறு பெறுக்கெடுத்து ஓடுகிறது. உடல் சோர்வுறுகிறது. இவன் சாகா வரம் பெற்றவன் அதனால் எந்த ஆயுதத்திற்கும் இவன் சாகவில்லை. மலைபோல கிடக்கும் இவன் கரங்களை வெட்டிவிடுவோம் என்று இராமனும் இலக்குவனும் முடிவு செய்து கொண்டு தங்கள் உடைவாளை எடுத்துக் கொண்டு அவன் தோள்மீது ஏறிவிடுகிறார்கள்.
மகா கோபமடைந்த அவ்வரக்கன், அவர்களை அப்படியே அழுத்திப் பிடித்துக் கொண்டு வானத்தில் எழுந்து செல்ல முயல்கிறான். இராம லக்ஷ்மணர்களைத் தூக்கிக் கொண்டு அரக்கன் வானத்தில் பறப்பதைக் கண்டு தரையிலிருந்த சீதை மனம் பதைத்தாள். “அரக்கனே! அவர்களை விட்டுவிடு. என்னை உண்டு கொள்” என்றாள், வாய் குழறி அழுதாள்.
இதனைக் கண்ட இலக்குவன் இராமனிடம் “தேவி மனம் வருந்தி அழுதுகொண்டிருக்க, நீங்கள் இவனிடம் இப்படி விளையாடலாமா?” என்று கேட்டதும், இராமன் “லக்ஷ்மணா! இந்த கொடிய காட்டை இவன் மீது அமர்ந்து கடந்துவிட எண்ணினேன். இவனைக் கொல்வது ஒரு பொருட்டே அல்ல. இதோ பார்!” என்று சொல்லிக்கொண்டே தன் காலால் அந்த அரக்கனை எட்டி உதைக்க, அவன் கீழே விழுந்தான்.
தங்கள் வாளால் அவன் தோள்கள் இரண்டையும் வெட்டி வீழ்த்தினர். பின் அவன் உடலினின்றும் கீழே குதித்தனர். அப்போதும் கோபம் வீறிட்டெழ, அந்த அரக்கன் தாக்குவதற்கு ஓடிவர, இராமன் “லக்ஷ்மணா! இவனை பூமிக்கடியில் புதைத்துவிடுவோம்” என்று சொல்லி காலால் உந்தித் தள்ளவும், அவன் போய் ஓர் ஆற்றின் கரையிலிருந்த பெரும்பள்ளத்தில் வீழ்ந்து புதைந்துபோனான்.
இந்த விராதன் ஒரு கந்தர்வனாக இருந்தவன். குபேரன் இட்ட சாபத்தால் கொடிய அரக்கப் பிறவி எடுத்தான். இராமன் காலால் உதைபட்டதும் அந்த சாபம் நீங்கி அவனுடைய பழைய கந்தர்வ உடல் கிடைக்கப்பெற்றான். மண்ணில் புதையுண்ட அந்த உடலினின்றும் ஹிரண்யகர்ப்பம் எனும் முட்டையிலிருந்து பிரம்மன் எழுந்ததைப் போல அந்த கந்தர்வன் எழுந்தான்.
அந்த கந்தர்வன் இராமபிரான் கால்களில் வீழ்ந்து பணிந்து போற்றுகிறான். “இராமா! உனது திருவடி என்மீது பட்டதால், என் இருவினைகளும் தீர்ந்து பிறவிக் கடல் கடந்தேன்” என்றான்.
“உனக்கு எப்படி இந்தக் கதி ஏற்பட்டு அரக்கனாக உருவெடுத்தாய்?” என இராமன் கேட்கவும், விராதன் சொல்லுகிறான் “பரம்பொருளே! இராமா! நான் வானுலகில் குபேரனது ஆட்சிக்கு உட்பட்டவன். தும்புரு எனும் கந்தர்வனாக வாழ்ந்து கொண்டிருந்தேன். தேவலோகத்தில் அரம்பை எனும் பெண்ணிடம் காதல் கொண்டு அவளோடு கூடினேன். இதைக் கண்டு என்னை அரக்கனாகப் பிறக்கும்படி குபேரன் சாபமிட்டான். அழுது புரண்டு என் தவறுக்காக வருந்தி, எனக்குச் சாப விமோசனம் வேண்டியபோது, குபேரன் “நீ இராமபிரான் காலடி பட்டு சாப விமோசனம் அடைவாய்” என்றான். ஆதிமூலமே! அன்று முதல் இன்று வரை அறிவற்ற நான் நன்மை தீமை தெரியாமல் தீய வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். நின் பொற்பாதம் என்மேல் பட இன்று சாபம் நீங்கப் பெற்றேன்” என்றான் விராதன்.”
துணுக்குத் தோரணம்.
என்ன ஆயிற்று தமிழ் இந்துவிற்கு ?
.
அருமை
ஜடாயு
அருமை!
ஜடாயு,
நல்ல பாடல். வேதங்கள் அறைகின்ற பாடலை யதுகுல காம்போஜியில் பாடுவார்கள். ரொம்ப நல்லா இருக்கும்.
‘பாதங்கள் இவையென்னில் படிவங்கள் எப்படியோ” கம்பநாட்டாழ்வாரின் அற்புதமான தொடர்களில் இதுவும் ஒன்று. கட்டுரையாசிரியர் ஜடாயு வாதலினால் இப்பாதங்கள் இராமனின் திருப்பாதங்களை நினைவு கூர்ந்தார்.
இன்னொரு ஜடாயூ இருக்கின்றார். அவர்,
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான்” ஆகிய புள்ளரசன் ஜடாயு
இப்புள்ளரசர் கண்ட பாதத்தின் படிவம் மணிவாசகர் கண்டது போல இருக்கும்.
போற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் னந்தமாம் செந்தளிர்கள்
போற்றி யெல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி யெல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி யெல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியா மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்”
இப்பாடலில் பாதத்திற்குப் பரியாய நாமங்களாகப் பாதமலர், செந்தளிர்கள், பொற்பாதம், பூங்கழல்கள், இணையடிகள் புண்டரிகம், பொன்மலர்கள் என்பவை ஆளப் பெற்றுள்ளன எட்டுமுறை போற்றி சொல்லப்பட்டுளது. அது சிவத்தின் அட்டமூர்த்தங்களை அர்ச்சித்த்து என்றும் அட்டபுட்பங்களைக் குறிக்கும் என்றும் கூறுவர்.
திருவடியென்பது திருவருட்சத்தியாகும். திருவருளே ஈண்டுத் திருப்பாதமாக உருவகிக்கப்பட்டது.பேரூழியின் பின் மாயாகாரியமாகிய பிரபஞ்சம் முதலிய மேயேயங்கள் அனைத்தும் முதற்காரணமாகிய மாயையில் ஒடுங்க மாயை இறைவனின் திருவடியில் வேண்டும்போது பயன்படுத்தும் பரிக்கிரகசத்தி அல்லது அவனுடைய வைப்புச் சத்தியாக நிற்கும். புனருற்பவத்தில் திருவருட்சத்தியினால் திருவடியில் ஒடுங்கிய மாயினின்றும் அனைத்தும் தோன்றும். அத்துணைப் பெருமை வாய்ந்த நின் திருவடிகளை எங்களுக்கு அருள வேண்டும் என்பது இத்திருப்பாடலின் கருத்து..
பொற்பாதம் இறைவனின் திருவடி. பொன் இயல்பாகவே களிம்பற்றது. அது இயல்பாகவே பாசங்களினீங்கிய இறைவனின் திருவடிகளுக்கு உவமையாயிற்று.சிவன், “ஸ்ர்வஜ்ஞ்: பஞ்சக்ருத்ய சம்பந்நஸ் ஸர்வேச்வர ஈச:பசுபதி” அக்கிருத்தியங்களைச் செய்வது திருவடியாகிய திருவருளே.
திருவருளால் தான் உய்யும் நிலையினை நன்குணர்ந்த பக்தனாகிய (சீவான்மா) பிரமரம்(வண்டு) திருவருளாகிய பாதபங்கயத்தில் கொப்புளித்துப் பொழியும் பரமானந்தமாகிய மதுவை புசித்துக் களிக்கும்.
ஸ்ரீபாதத்தின் படிவத்தை தெய்வப்புலவர் திருவள்ளுவர் முதல் திருநாவுக்கரசர், மணிவாசகர் திருவடிப்புகழ்ச்சி பாடிய வடலூர் வள்ளலார் பலரும் அனுபவித்துள்ளனர்
ஜடாயூ அவர்களின் இலக்கிய, சமயதத்துவ்ச் சிந்தனையைக் கிளறும் சிறந்த கட்டுரை.
ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் இருவரியும் கான வேண்டும் எனும் ஆவல் எனக்கு இருந்தது. இருவருடைய முகங்களையும் உடையும் இந்தியா நூல் வெளியீடு புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன்.. முத்துக்குமாரசுவாமி
வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பலமுறை வாசித்து அனுபவித்த வ்யாசம் தந்த ஸ்ரீ ஜடாயு மஹாசயருக்கு நன்றி. வ்யாசத்தின் தாக்கம் பரமனின் திருவடி ஸ்பர்சம் பெற்ற பாக்யவான்களை ஸ்மரிக்கச் செய்தது. ராமாயண காவ்யத்திலேயே பரம ஆதுரத்துடன் திருவடி ஸ்பர்ச பாக்யம் பெற்ற அஹல்யை முதலில் நினைவுக்கு வருகிறாள்.
பின்னர் புராணாந்தரங்களில் திருவடி ஸ்பர்ச பாக்யம் பெற்ற மஹாபலி சக்ரவர்த்தி மற்றும் சகடாசுரன் நினைவுக்கு வருகிறார்கள். திருவடி ஸ்பர்சம் ஆதுரத்துடனிருக்கட்டும் அல்லது க்ஷுத்ரத்துடன் கொடுத்த உதையாகத்தானிருக்கட்டும் ஸ்பர்சம் பெற்ற பாக்யவான்கள் அடைந்தது நற்கதியே என்பதில் வித்யாசமில்லை.
இவ்யாசத்தை வாசித்து பரசிவனின் பொற்பாதங்களை ஸ்மரித்து எழுதிய முத்துக்குமாரஸ்வாமி மஹாசயரின் உத்தரம் வாசித்தபின்
குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் என் நினைவில் வந்தன.
அத்திருவடிகளை நினைக்கும் புத்தி எப்படி கிட்டும் என்பதனையும் வள்ளல் அருணகிரிப்பெருமான் பகர்கிறார்.
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு …… நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் …… இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை …… வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை …… மறவேனே
கந்தவேளின் திருவடிகளையும் வேலையும் மயிலையும் சேவலையும் துதிக்கும் நற்புத்தி பெற்றிட வேழக்கொம்பனை துதிக்கவேணும் என்கிறார். அதுவும் எப்படி
கணபதியை வலம் வர வேணும்.
அவருக்குகந்த மலர்களால் பங்கயம் போன்ற சிலம்பணிந்த அக்கணபதியின் திருப்பாதங்களில் அர்ச்சிக்க வேணும்.
அவருக்குகந்த ஸ்தோத்ரங்களால் அவரை ஸ்துதிக்க வேணும்.
கையால் சிரசில் குட்டிக்கொள்ள வேணும்.
தூக்கிய கைகளால் காதைப்பிடித்து தோப்பிக்கரணம் போட வேணும்.
முப்பழம், அப்பம், புதிதாகக் கறந்த பால், தேன், முறுக்கு, கரும்பு, லட்டுகம், அரிசி,பருப்பு, எள், பொரி, ஒப்பிலாத இனிய கதலிப்பழங்கள், இளநீர் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேணும்.
இப்படி கரிமுகவனை ஸ்துதித்தால் இளைய ஸ்கந்தப்பெருமாளின் தண்டையணி வெண்டையங் கிண்கிணிசதங்கையுந் தண்கழல்சிலம்புடன் கொஞ்சும் சீர்பாதங்களையும் வேலையும் மயிலையும் சேவலையும் நினைவிலிருத்தும் நற்புத்தியை கணநாதர் நமக்கருள்வார்.
திரு ஜடாயு அவர்களுக்கு
இராமாயணத்தில் ராமர் இலங்கையை வென்ற பின் அங்கே அவர் ஆலயங்களையும் நிருவுல்லரா அல்லது விபிஷணன் தான் என்ன செயதார் என்பதை விளக்குவீரா
என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் எங்கேயோ இருக்கும் அந்தமான் இந்தியாவுடன் இருக்கும் போது எப்படி இலங்கை தனி நாடு ஆனது என்பது விளங்கவில்லை