தாலாட்டு
பிள்ளைத்தமிழ் நூல்களில் செங்கீரைப் பருவத்துக்கு அடுத்து வருவது தாலப் பருவம். தால் என்றால் நாக்கு என்று பொருள். நாக்கு அதாவது தாலை அசைத்து ஒலியெழுப்புதலால் இது தாலாட்டு என்றாயிற்று. மலையாளத்திலும் தமிழகத்தில் சில பகுதிகளிலும் தாலாட்டு எனும் இப்பெயர் தாராட்டு என்று வழங்கி வருகின்றது. திராவிடமொழிகளிலில் இடையெழுத்துக்களான ரகரமும் லகரமும் மாறி வருவதுண்டு. (கோவையில் லாரி(Lorry)யை ‘ராலி’ என்பார்கள். உலக்கையை ‘ரக்கை’ என்பார்கள். தெலுங்கில் ‘உரல்’ என்னும் சொல் ரோலு’ என வழங்கும்)
அழுகின்ற குழந்தை அதன் அழுகையினை நிறுத்தித் தன் கவனத்தைத் தம்மிடம் திரும்புமாறு செய்யத் தாயர் நாவினை அசைத்து, ‘ரொரொரொ ஆயீ’, என்பது போன்ற ஒலியினை எழுப்புவர். ஆரிரரோ, ஆராரோ என்பன போன்ற சொற்கள் இலக்கிய வழக்கில் ‘தாலேலோ’ என ஆயின. ஒலியின்பத்தைத் தவிர இவ்வகை ஒலிகளுக்குத் தனிப் பொருள் ஒன்றும் இல்லை.
இன்று தாலாட்டுப் பாடும் தாயர் அருகிவிட்டனர். ஆனால் சென்ற தலைமுறையினர் வரைக்கும் தாலாட்டுக் கேட்டுத் துயிலாத குழந்தைப் பருவமே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இந்த இலக்கியவகை தாய்மாருடன் ஒட்டுறவு உடையது. கடந்த தலைமுறைகளில், குழந்தையைப் பெற்ற தாய்க்குக் குழந்தை அழுகின்றபோதெல்லாம் பால் இயல்பாகச் சுரந்ததைப்போல அது அழுகின்றபோதெல்லம் அதனைச் சமாதானப் படுத்தி உறங்க வைக்கத் தாலாட்டுப் பாட்டும் அவளிடத்தில் இயல்பாகப் பிறந்தது. தாய்மை உணர்வின் வெளிப்பாடாகவே தாலாட்டு மலர்கின்றது என்பர்.
திருக்கழுமலம் எனும் சீகாழியில், செல்வர் வாழும் உயர்ந்த மாளிகையின் மேலுள்ள உச்சி மாடத்திலிருந்து கொண்டு (சூளிகை– terrace) குழந்தைகளைப் பாட்டிசைத்துப் பாராட்டினராம். மகப் பாராட்டும் அந்தத் தேனிசையைக் கேட்டு விண்ணியங்கு தேவர்கணமும் மகிழ்வெய்தியதாம். இவ்வாறு தாய்மையோடு உறவுடைய தாலாட்டிசையைப் புகழ்கிறார், திருஞானசம்பந்தர்.
“பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச் சயமெய்தும் பரிசு வெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு சிலைவளைத்தோன் பொருந்தும் கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின் சூளிகைமேல் மகப்பா ராட்டக்
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு மகிழ்வெய்துங் கழுமலமே”
தாலாட்டுப் பாட்டுப் போலவே அதனைப் பாடும் இசையும் இயல்பாக தாயின் உணர்வினின்றும் பிறந்தது. தாய்மை உணர்விலிருந்து பிறந்த அந்த இசையை இசையிலக்கணம் வல்லவர்கள் குறிஞ்சி என்றும், ஆனந்தபைரவி என்றும் நீலாம்பரி என்றும் வகுத்துக் கொண்டனர். மனத்தை மயக்கும் தாலாட்டிசையினை இந்தச் சுட்டியில் அனுபவிக்கலாம்.
தாலாட்டு உலகத்தில் உள்ள எல்லாமொழிகளிலும் அமைந்திருக்கும் இலக்கிய வகை யென்றால், தாலாட்டிசை உலகின் அனைத்து இன, மொழித் தாய்மாரின் நாவிலும் நடமாடும் இசை என்றும் கூறலாம்.
தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தொடர்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் தாலோ தாலேலோ என ஆளப்படுகின்றது. தாலாட்டு எனும் தனித்ததொரு இலக்கியவகை பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கிய வகைக்கு உறுப்பாகவும் உள்ளது. தனி இலக்கிய வகையாக இருக்கும்போது அதன் எல்லைக்கு அளவில்லை.
பொதுவாகத் தாலாட்டுப் பாடல்கள் குழந்தை உறங்கும் வரை நீளும் என்பர்.. ஆனால், பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் பருவத்திற்குப் பத்துப்பாடல்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆதலால் தாலப்பருவத்தில் பத்துபாடல்களே அமைந்திருக்கும்.
தாலாட்டுப் பாடுவது குழந்தையை உறங்கப் பண்ணுதற்கே. எனவே, உறங்கும் காலம் வந்துவிட்டபோதிலும் ஏன் உறக்கம் வரவில்லை எனத் தாய் குழந்தையிடம் கேட்பதாகப் பெரும்பாலான நாட்டுப்புறத் தாலாட்டுகள் அமைந்திருக்கும்.
செம்மை இலக்கியம் அந்த உத்தியை உள்வாங்கிக் கொண்டது. உலகமெல்லாம் உறங்கும் இந்த நேரத்தில் நீ விழித்துக் கொண்டு இருக்கின்றாயே, இரவு நெடுநேரமாயிற்று, கண்ணே உறங்கு எனத்தாய் தாய் கூறுவதாக அமைந்துள்ள பிள்ளைத் தமிழ்த் தாலப்பருவப் பாடல்களில் இன்பமளிக்கும் இரவு வருணனை இருக்கும்.
இலக்கியங்களில் இயற்கை வருணனைகள் நூல்களின் பாவகங்களுக்கு (உள்ளுறைப்பொருள்) ஏற்ப இருக்கும். சங்க இலக்கியங்களில் முதற்பொருள் கருப்பொருள் விளக்கமாக இயற்கை வருணனை இருக்கும். அவ்வருணனை உரிப்பொருளுக்கு, அதாவது, பாட்டுடைத் தலைமக்களின் மனநிலைக்கும் ஒழுகலாறுக்கும் பின்புலமாகப் பொருத்தமாக இருக்கும். காப்பியங்களிலும் அவ்வாறே கதைப் போக்கிற்கு ஏற்ப இயற்கை வருணனை இருக்கும். சிலப்பதிகாரம் அந்திமாலை சிறப்புச்செய் காதை, அந்திநேரத்தில் இயற்கையாக நிகழும் நிகழ்ச்சிகள் எவ்வாறு,
“தாழ்துணை துறந்தோர் தனித்துய ரெய்தக் காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வெய்த”
செய்தன எனக் காட்டுகின்றது.
அவ்வாறே பிள்ளைத் தமிழ் நூல்களில் பாட்டுடைத் தலைமகனை/மகளைக் கண்வளரச் சொல்லும் தாலப்பருவப்பாடல்கள் அந்திமாலை, இரவு வருணனைகள் இலக்கிய இன்பத்தோடு சமய ஒழுக்கப் பண்பாட்டினை (நித்திய கர்மானுஷ்டானங்கள்) மாலைநேர வருணனையின் பின்னணியில் விளக்குவனவாக உள்ளன.. கவிஞன் ஏன் இவ்வாறு வருணிக்கின்றான் என வருணனைகளின் நோக்கத்தை அறிந்திருந்தால்தான் அக்குறிப்பிட்ட இலக்கியத்தின் பயனை நுகர இயலும்.
இதோ ஒரு பிள்ளைத் தமிழில் ஒருமாலை வருணனை
கதிரோன் குடபான் மலைமறைந்தான்
ககனத் தடத்தி லுடுவரும்பி
கதிர்மா மதிய மலர்பூத்துக்
கமழ்பூந் தென்ற லுலவிடுமால்
முதிரா விளம்பார்ப் பினம்தாயர்
முடங்குஞ் சிறையி லொடுங்கினபூ
முளரிக் கதவ மடைத்துவரி
முழங்கும் வண்டுந் துயின்றனவால்
எதிரா சர்கள்அந் தியின்மறைக
ளியம்பிக் கடன்க ளியற்றியபின்
இதயக் கமலத் துனையிருத்தி
யிமைகள் பொருந்தி யொடுங்கினர்காண்
சதுரா னனனைச் சிறையிட்ட
சதுரா தாலோ தாலேலோ
தமிழா கரவெட்டிக் குடிவாழ்
தலைவாதாலோ தாலேலோ
“கதிரவன் மேற்குத்திக்கில் மலைகளினூடே மறைந்துவிட்டான். வானவெளியாகிய தடாகத்தில் விண்மீன்கள் அரும்பி விட்டன. நிலவொளி பரப்புகின்ற பெரிய மதியம் பூத்துவிட்டது. நறுமணத்துடன் தென்றல் வந்து உலவுகின்றது. பறவைக் குஞ்சுகள் தம் தாய்ப்பறவைகளின் வளைந்த சிறகுகளாகிய கரங்களில் ஒடுங்கின. வரிப்பாடல்களை ஓயாது இசைக்கும் வண்டுகளும் தாமரை மலரிதழ்களாகிய கதவத்தை அடைத்து துயிலுகின்றன. யதிராசர்களாகிய தவமுனிவர்கள் அந்தியில் வேதமந்திரங்களை இயம்பி ‘நித்திய கர்மானுஷ்டானங்களை’ இயற்றியபின் இதயக் கமலத்தில் உனை இருத்தி, இமைகளை மூடி ஒடுங்கினர்(தியானத்தில் உள்ளனர்) எட்டிகுடி முருகா! தாலேலோ”
இப்பாடலில் இயற்கையே சலனமின்றி ஒடுங்கி உறங்குகின்ற நிலையைக் காண்கின்றோம்..
மாலைக் காலம் வந்துவிட்டதே! முதலே! முருகா!1 நீயும் அறி துயில் கொள்வாயாக எனத் தாயர் வேண்டும் மற்றொரு மாலைக்கால வருணனை:
‘குருமலை முருகா! மாலைக் காலம் வந்து விட்டது. மெல்லிதழ்களையுடைய தாமரை மலர்கள் வாய் குவியுறும். அம்மலரிடத்தே இதுவரைக்கும் தங்கியிருந்த வண்டுகள் தம்மிருப்பிடமான சோலைகளுக்குப் போகின்றன. ஆண்பறவைகள் தம் உயிர்த்துணையான பெடைகளுடன் குஞ்சுகளை நினைந்து சென்று அடையும். தன்னுடைய ஒளியினால் உலகத்தை ஆண்டுகொண்டிருந்த கதிரவனும் தன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரினில் மேற்குத் திக்கில் பொழில்கள் செறிந்த மலைகளில் மறைந்தான். அதனால் உலகில் இருள் பரவுதலை அறிகிலையோ. சந்திரனைப் போன்ற முகமுடைய மாதர்கள், கூந்தலில் சூட்ட மணம் கமழும் மலர் மாலைகளைக் கையிற் கொண்டு தம் கணவன்மார் வரும் மாலைக் காலத்தை வரவேற்கலாயினர். வேதவிதிப்படி வேள்வியை நிறைவு செய்த வேதியர்கள் உன் திருவடியைத் தியானிக்கத் தொடங்கினர். நல்வேத முழுமுதலே! உறங்குவாயாக! குருமலை முருகா! தாலோ தாலேலோ.!” .
பதுமமென் மலர்வாய் குவிவுறும் அதன்வாய்
பயிலளி பொழில்போமே
பறவைகள் உயிர்நேர் துணையொடும் எதிர்பார்
பறழ்தமை யுறலாமே
பொதுவற உலகாள் கதிரவன் விரைவார்
புரவிகள் குடபாலே
பொழில்குல வியநீள் வரைபுக இருள்மேல்
பொதிவுறு விதமோராய்
விதுமுக மடவார் விரைமலர் கொடுமா
லையைஎதிர் கொளலானார்
விதிமறை முறையா குதிநிறை வுறவே
தியருன கழலோர்வார்
சதுர்மறை முடிவா கியமுழு முதலே
தாலோ தாலேலோ
சரவண பவனே குருமலை முருகா
தாலோ தாலேலோ.
தாலாட்டுப் பாடும் தாய் சிவக்குடும்பத்தினள்; சைவநெறியில் வாழ்பவள். எனவே அவள் மாலைநேரத்தை வருணிக்கும்போதும் சிவத்தினொடு தொடர்பான செய்திகளே அவள் நினைவுக்கு வருகின்றன.
“திருநிலை நாயகி ! உமையே! அத்தகிரியில் (சூரியன் மறையும் மலை) மந்தேகரைக் கதிர்வாளால் வென்ற ஆதித்தன் மறைந்து விட்டான். (மந்தேகர் என்பார் சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் அவனைத் தடுத்துப் போர்புரியும் ஒருவகை அசுரர் கூட்டம்).
நல்ல அந்தணர்கள் சந்தி செய்தார். அரனடியார்கள் உள்ளமொன்றி ‘சிவாய’ எனும் திருவைந்தெழுத்தைச் சிந்தித்து தியானித்திருந்தார்.
திருமுறைகளைப் பாடித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எங்கும் பக்தி பரவுமாறு சிவன் கோயிலில் மாலைக்கால பரார்த்த பூசை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே,
பாலுண்டு, பசிதீர்ந்து, சிவன் புகழ் பொருளாயமைந்த பாடல்களைக் கேட்டுத் தூய பராசக்தியே! திருநிலைநாயகியே~! உமையே! கண்ணுறங்கு’ என அத்தாய் வேண்டுகின்றாள்
“அத்தகிரியில் மந்தேகர் அழியக் கதிர்வா ளான்வென்ற
ஆதித் தன்போய் மறைந்தனன்நல் லந்த ணாளர் சந்திசெய்தார்
சித்த மொருங்கும் அரனடியார் சிவாய வென்று சிந்தித்துத்
தியானித் திருந்தார் திருமுறைகள் செப்பித்தொண்டர் களிகூர்ந்தார்
பக்தி பரவச் சிவன்கோயிற் பரார்த்த பூசை நடைபெறுமால்,
பாலுண் டுன்றன் பசிதீர்ந்து பாடல் கேட்டுத் தூயபரா
சக்தி யுமையே திருநிலையே தாலோ தாலோ தாலேலோ!
சண்பைப் பைம்பொற் பெண்பாவாய் தாலோ தாலோ தாலேலோ!
இத்தகைய தாலாட்டுகளைக் கேட்டுத் துயிலும் குழந்தைகளுக்கு சிவநெறிப் பண்பும் நல்லொழுக்கமும் இயல்பாக வளரும்.
உறங்கும் நேரம் கழிந்தும் கண் விழித்திருக்கும் குழந்தையிடம் தாய் அவனை உறங்கச் செய்யத் தான் அவனுக்குச் செய்த சீராட்டுக்களையெல்லாம் வரிசையாகக் கூறி, உரிய நேரத்தில் உறங்குவாய் என்ற எதிர்பார்ப்பில் இவற்றைநான் செய்து முடித்தேன், ஆனால் நீ இன்னும் உறக்கம் கொள்ளாமல் மழலை பேசிக்கொண்டு விழித்துக் கிடக்கின்றாயே எனப் பாசம் கலந்த சலிப்புடன் பேசுகின்றாள்.
சீராட்டும் தாராட்டும் உடனிகழ்வதால்தான் ‘சீராட்டித் தாலாட்டி” எனும் இரட்டைச் சொல் பிறந்தது
‘குஞ்சி (ஆண்குழந்தைகளின் தலைமுடிக்குக் குஞ்சி என்பது பெயர்) அலங்கரித்து, நீராட்டி, குவளைமலர் போன்ற கண்களுக்கு மையெழுதி, அணிகலன்கள் பூட்டி, பாலூட்டி, முத்தமிட்டு, தோழர்களுடன் சிறிதுநேரம் தெருவில் விளையாட விட்டு, பின் அந்திநேரத்தில் அயினி நீர் சுழற்றி திருஷ்டி கழித்து, தொட்டிலில் இட்டு, இனிய பாடல்களை அன்பால் இசைத்துத் துயில்வித்தால், எங்கள் அரசே, நீ மழலை பல பேசி, இன்னம் கண் வளராமல் விழித்துக் கிடக்கின்றாயே! உறங்குக’
எனத் தாய் ஒருத்தி ‘கொட்டுகொட்டென்று’ விழித்துப் பேசிக் கிடக்கும் குழந்தையிடம் கெஞ்சுகின்றாள்.
“குஞ்சி திருத்தி நீராட்டிக்
குவளைக் கண்கள் மையெழுதிக்
கொள்ளும் கலன்கள் பலபூட்டிக்
கொங்கை யருத்தி முத்தாடி
மஞ்சர் நவவீ ரர்களுடனே
மறுகி லாட விடுத்துப்பின்
மாலை யயினி நீர்சுழற்றி
மணிப்பூந் தொட்டி லினில்வளர்த்தே
அஞ்சொற் கிளிமா தர்கள்பாட ல்
அன்பாய்ப் பாடித் துயில்வித்தால்
அரசே மழலை பலபேசி
அங்கண் விழித்துக் கிடந்தனையால்
தஞ்ச மடைந்தார் தமக்கெளிய
சாமீ தாலோ தாலேலோ
தமிழா கரவெட் டிக்குடிவாழ்
தலைவா தாலோ தாலேலோ”
பொதுவாகப் பெண் குழந்தை நிறையப் பேசும் என்பார்கள். உறங்க வேண்டிய நேரத்தில் பேசிக்கொண்டே இருக்கும் குழந்தையைப் பார்த்து ஒரு தாய் பேசுகின்றாள்.
“ உன் மழலைமொழிகளைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்து, உனக்கு ‘மதுர வாகீசுவரி’ எனப் பெயரிட்டோம். அந்தப் பெயருக்கேற்றபடி நீ தூங்கும் வேளையில் கூட ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கின்றாய். வாகீசுவரி என்ற நிலை நீங்கி, இனி மாமூகேசுவரியாகி (மூகம் – ஊமை)க் கொஞ்ச நேரம் துயில் கொள்ளமாட்டாயா? உன் கண்ணழகைப் பார்த்துக் ‘கயற்கண்ணி’(மீனாட்சி) என்றோம். மீன் போல நீ இரவும் பகலும் கண்ணுறங்கா திருக்கின்றாய். குவளைக்கண்ணை உடையாய்(நீலாயதாட்சி) என்று சொன்னால் இரவில் கண்பொருந்தாய். எனவே, தாமரைக் கண்ணாள்(பதுமாட்சி, அறிதுயில் கொள்ளும் செந்தாமரைக் கண்ணனின் தங்கையாதலின் பதுமாட்சி) என்று கூறினோம். தாமரை இரவில் இதழ்குவியுமல்லவா? அதனால் இரவு வேளையில் விழிமூடிப் பாவாய், உன்னுடைய தூவாயைத் திறவாமல் தொட்டிலில் இனிது உறங்குக”
எனத் தாலாட்டுகின்றாள்
மதுர வாகீசுவரி யென்றோம்
மலர்வாய் மழலை யொழியாயால்
மாமூ கேசு வரியாகி
மணியே சிறிதே துயிலாயோ
குதிகொள் கயற்கண் ணாளென்று
குறிதே மிரவு பகலுறங்காய்
குவளைக் கண்ணா யென்றாலும்
கூடாய் துயிலிவ் விரவெல்லாம்
பதும விழியா யென்றின்னே
பகர்ந்தோ மிரவு விழிமூடிப்
பாவாய்! தூவாய் திறவாமால்
பட்டே ணையினி லுறங்குகவே
சதுர மறைசேர் சண்பைநகர்த்
தலைவீ தாலோ தாலேலோ!
சம்பந்தர்க்குப் பாலளித்த
தாயே தாலோ தாலேலோ!
இப்பாடலில் இறைவியின் திருநாமங்களான வாகீசுவர், மூகேசுவர், மீனாட்சி, நீலாயதாட்சி, பதுமாட்சி என்பன துயில் கொள்ளும் கண்ணுக்கேற்ற வகையில் ஆளப்பட்டுள்ள நயம் இன்பமளிக்கின்றது.
நீண்டநேரம் தாலாட்டியும் உறக்கம் கொள்ளாத குழந்தையிடம் தாய்ப் பாசம் சினம் கொள்ளுவதில்லை. மாறாக அன்புடன், வீட்டில் உள்ளவர்களையெல்லாம் சுட்டிக் காட்டி , ‘அவர்கள் அனைவரும் உறங்கிவிட்டனர், சுற்றுச் சூழலில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் உறங்கிக் கிடக்கின்றன. அவைகளைப் போல, கண்ணே!, நீயும் உறங்கு’ என்கின்றாள்
“பரவைத் திரையி லரவணைமேற்
பையத் துயின்றா னுன்றமையன்
பதுமைப் பாங்கி அறம்மறவாப்
பண்பார் மனையில் துயில்கின்றாள்;
கரமுற் றவிசைத் தந்திரியாள்
கலைஞர் மனத்திற் றுஞ்சினளால்;
கறவைப் பசுவுங் கன்றுகளும்
கட்டுங் கொட்டி லுறங்கினவால்;
மரமும் கொடியும் புள்ளினமும்
மற்ற வுயிரும் செயலடங்கி
மறந்து தம்மை நித்திரையை
மருவிப் பரம சுகமார்ந்த;
சரசுவதியே திருநிலையே
தாலோ தாலோ தாலேலோ!
சண்பைப் பைம்பொற் பெண்பாவாய்
தாலோ தாலோ தாலேலோ!!”
தூங்குதல், உறங்குதல் ஆகிய சொற்களுக்குப் பொதுவாகக் கண்ணுறக்கம் கொள்ளுதல் என்று பொருள். இச்சொற்களுக்கு ‘நீங்காது இருத்தல்’ என்பது சிறப்புடைப் பொருள். பம்பரம் வேகமாகச் சுழலும்போதூ, அசையாது நிற்பதுபோலக் காட்சியளிக்கும். இதனைச் சிறுவர்கள் பம்பரம் ‘தூங்குகின்றது, உறங்குகிறது’ என வழங்குவர். மேற்கண்ட பாடலில் இச்சொற்கள் இந்த இரண்டு பொருள்களிலும் ஆளப்பட்டிருப்பது அறிந்து மகிழலாம்.. அரவணையில் அறிதுயிலில் நீங்காது பயில்கின்றான், அம்பிகையின் தமையனான திருமால். அம்பிகையின் அழகிய பாங்கியாகிய திருமகள் அறம் குடிகொண்டுள்ள மனைகளில் நீங்காது உறங்குகின்றாள். அறவர்கள் வீட்டில் திருமகள் நிலைகொண்டுள்ளாள் என்பது பொருள். தந்திரி யாழைக் கையிலேந்திய கலைமகள், கலைஞர் மனத்தை விட்டு அகலாமல் உறைகின்றாள்.(துஞ்சினாள்.)
தாலாட்டும் தாய்க்குத் தனக்குக் குழந்தையாக வந்து வாய்த்திருப்பது பராசத்தியே என்ற நினைப்பு வந்துவிடுகின்றது. பராசத்தியின் இயக்கத்தால் அல்லவா இப்பிரபஞ்சம் இயங்குகின்றது? தாயுள்ளம் சிவசத்தியாகிய குழந்தையிடம் பேசுகின்றது.
“ நீ, உன்னுடைய மைவிழிகள் இமை திறந்தால் வையம் தோன்றும்; விழித்திருந்தால், உலகம் விழித்திருக்கும்; இமையை மூடினால் உலகம் மறையும் என்று நினைந்தா உறங்காதிருக்கின்றாய்? (அடி அசடே!) உன் தமையன், திருமகள் மணாளன் தான் அரவணைமேல் பையத்துயின்று பாரனைத்தும் காத்து வருதலை நீ அறிந்திலையோ? செங்கோல் அரசன் தூங்கினாலும் அவனது ஆணையாகிய ஒளி உலகத்திற்கு எந்தத் தீங்கும் வாராது காக்கும் திறங்கொண்டதல்லவா? அதனால், நீ கண் துயின்றாலும் உனது ஆக்ஞா சக்கரம், உனது ஆணையாகிய பேரொளி உலகத்திப் புரந்திடும். ஆதலால், நீ கண்ணுறங்குவாயாக!
என்கிறாள்.
“மையார் தங்கண் ணிமைதிறந்தால்
வையந் தோன்றும் விழித்திருந்தால்
வாழும் இமைப்பின் மறையுமென
மனத்தில் நினைந்தே யுறங்காயோ!
செய்யாள் கேள்வன் துயின்றுமிந்தச்
செகத்தை யளித்தல் தெரிந்திலையோ!
செங்கோ லரசின் ஒளியேயெத்
தீங்கும் வாராத் திறங்காக்கும்
பொய்யா மறையொர் இரப்பார்க்கிப்
போதப் போதென் னார்வேண்டும்
பொருள்க ளனைத்தும் பொழிவார்வாழ்
புகலி புரந்த பொன்கொடியே
செய்யாள் பரவுந் திருநிலையெஞ்
செல்வீ தாலோ தாலேலோ!
செகதண் டங்க ளீன்றளிக்கும்
திருவே தாலோ தாலேலோ!!
குழந்தையுடன் நாள் முழுவதையும் செலவிடும் தாய் காலை முதல் மாலைவரை அக்குழந்தை செய்யும் சேட்டிதங்களை கண்டு களிப்புறுகின்றாள். மாலையில் அவற்றை நினைவு படுத்தி,
“கண்ணே! புலர்காலையில் அலர்ந்த செந்தாமரை எனும்படியாக உன்னுடைய துயிலுணர்ந்து விழித்த கண்ணின் பொலிவு கண்டு அகமகிழ்ந்தோம். பின், நீ, பூவை கிள்ளை குழல் யாழ் போல மிழற்றும் உன்னுடைய மழலை மொழி கேட்டு எம் நீண்ட செவி குளிர்ந்தோம். பின், கலகல என சதங்கை மென்மையாக ஒலிக்க நடை பயிலுகின்ற தாமரை அனைய உன்னுடைய திருவடி அழகு கண்டோம். உன்னுடைய மலர்க் கரங்களில் பாவையை ஏந்தி விளையாடுவதைக் கண்டு மகிழ்ச்சி கொண்டோம். பூம்புனலில் திருமஞ்சனம் ஆடி, பொற்பட்டு உடுத்தி, நகைகள் அணிந்து, அருள்விழிக்கு மையெழுதி நுதலினில் பொட்டும் இட்டு, உன் மேனி அழகு பார்த்தோம். உன்னுடைய இத்தனைக் கொள்ளை அழகினையும் கண்ட நாங்கள், தாமரை இதழ் போன்ற கண்ணிமைகள் பொருந்தி, உன், விழிதுயிலும் அழகையும் காணுமாறு நீ துயில் கொள்வாயாக!”
என்று தாய் குழந்தையிடம் கேட்கின்றாள்.
“புலரியில் அலர்ந்தசெங் கமலமென நின்விழிப்
பொலிவுகண் டுளமகிழ்ந்தோம்
பூவைகிளி யாழ்குழற் போலவிசை மழலைமொழி
புகல்வார் செவிகுளிர்ந்தோம்
கலகலென மஞ்சீர முரல நடைபயிலும்நின்
கமலசர ணழகுகண்டோம்
கரமலரின் மென்பாவை வைத்து விளையாடலுங்
கண்டுநகை கொண்டனம்நறும்
பொலன்மணிப் பாசனப் பூம்புனன் மஞ்சனம்
புரிந்துபொற் பட்டுடுத்திப்
பூணணிந் தருள்விழியின் மையெழுதி நுதலினிற்
பொட்டுமிட் டுக்கண்டெனம்
சலசநிகர் விழிதுயிலும் அழகையுங் காணுமா
தாலேல தாலேலவே!
சதுர்மறைகள் பரவுதிரு நிலைமர கதப்பெணே
தாலேல தாலேலவே!!
(நறும் பொலன் மணிப் பாசனம் பொலன் மணிப் பாசனம் – இரத்தினங்கள் பதித்த தங்கக் குடம். அதில் நிறைத்துள்ள நீரில் நறுமலர்களும் வாசனைப் பொருள்களும் இட்டு நறுமணம் ஏற்றுவர்)
(இன்னும் வரும்)
This is a very golod tip eespecially to those fresh to thee blogosphere.
Brief but very prdecise info… Appreciate your sharing this one.
A must read article!