போகப் போகத் தெரியும் – 7

ஆறு பேரை அழைக்கிறேன்
Pasumpon Muthuramalinga Thevar

தேவரய்யா சட்டமன்ற உறுப்பினராக சென்னையில் இருந்த நேரம். சசிவர்ணத் தேவரை அழைத்து ‘பாண்டியனூருக்குப் போய் காவிப் புடவையில் சிவப்புப் புள்ளி வைத்தபடி வாங்கிட்டு வா’ என்கிறார். சசிவர்ணத் தேவருக்கோ குழப்பம். யாருக்காக வாங்கிவரச் சொல்கிறார் என்று.போய் இரண்டு புடவைகளை வாங்கி வருகிறார். டாக்ஸி பிடித்து நேரே வீட்டுக்கு வருகிறார். தங்கையான இந்திராணி அம்மையாரிடம் ஒரு அம்மாளை அழைத்துவரச் சொல்ல – அவரும் வயதான பெண்மணியை அழைத்து வருகிறார். அவர் வந்ததும் சாஷ்டாங்கமாக அந்த அம்மையார் காலில் விழுந்து வணங்குகிறார் தேவர். கொண்டு வந்திருந்த காவிப் புடவைகளையும், பணத்தையும் கொடுக்கிறார். அந்த அம்மையார் – வீர வாஞ்சிநாதனின் மனைவி. எப்போது அவர் வந்தாலும் பணம் கொடுக்கச் சொல்கிறார். அவரின் பென்ஷனுக்காகச் சட்ட மன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்; பென்ஷன் கிடைக்கவில்லை.

ராமச்சந்திரன் / பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் / புதிய பார்வை.

விடுதலைக்குப் பிறகு வந்த காங்கிரஸ்காரர்கள் ஆதிக்க மனப்பான்மையில் இருந்தனர் என்பதற்கு ‘வாஞ்சிநாதன் பென்ஷன்’ ஒரு உதாரணம். அதனால்தான் 67ல் விட்டதை அவர்களால் 2007லும் பிடிக்க முடியவில்லை.

இந்தத் தொடர் கொஞ்சம் தடத்திலிருந்து விலக வேண்டியிருக்கிறது. 6-ஆம் பகுதியில் எழுதப்பட்ட விஷயங்கள் குறித்து ஒரு மறுமொழி வந்திருக்கிறது. அதில் “ஊடகங்களின் கடாட்சத்தால் உருவானது திராவிட இயக்கம் என்று பொதுவாகச் சொல்லக் கூடாது. காங்கிரஸ் ஆதரவு திரைப்படங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிற பொருளில் யாழ்வாணன் என்ற நண்பர் எழுதியிருந்தார்.

அவருக்குப் பதில் சொல்லிவிட்டு, அடுத்த முறை தொடரை விட்ட இடத்தில் பிடித்துக் கொள்ளலாம்.

திரையுலகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள உறவுக்கும், திரையுலகத்திற்கும் திராவிட இயக்கங்களுக்கும் உள்ள உறவுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

காங்கிரஸ் ஆதரவு திரைப்படங்கள் அடக்குமுறையை மீறி வெளிவந்தவை. திராவிட இயக்கத் திரைப்படங்கள் சுதந்திர இந்தியாவின் உரிமையை முழுமையாகப் பயன்படுத்தியவை.

‘பராசக்தி’ திரைப்படம் தணிக்கைக் குழுவிடம் போனது 1952ல். அங்கே அந்தப் படத்திற்காகப் போராடிய தணிக்கைக் குழு உறுப்பினர் ஒரு காங்கிரஸ்காரர். படத்தைத் தணிக்கை செய்து வசனத்தை நீக்கினால் பதவி விலகிவிடுவேன் என்று அவர் மிரட்டினார். அவர் பெயர் மணிக்கொடி சீனிவாசன். காங்கிரசின் போராட்டங்களுக்கு வெகுஜன ஆதரவு கிடைத்தபோது அதில் சினிமாவின் பங்கும் இருந்தது. ஆனால் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களிடம் தலைமைப் பொறுப்பு தரப்படவில்லை; கதை வசன கர்த்தாக்களைக் காரியக் கமிட்டியில் சேர்க்கவில்லை. அரசியல் நிர்ணய சபையை அரிதாரத்தால் அலங்கரிக்கவில்லை.

திராவிட இயக்கத்தின் நடைமுறை என்ன? சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய முன்று முதலமைச்சர்கள் சினிமாவின் பின்புலம் உடையவர்கள். இதைத் தவிர கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.ஆர். ராதா என்று பட்டியலே இருக்கிறது. இது முக்கியமான வித்தியாசம்.

திரைப்படத் தொழில் வளர்ச்சியடையாத காலத்தில் அதில் தேசியக் கருத்துகள் இடம் பெற்றன. தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகி ரசிகர்களின் எண்ணிக்கை பன்மடங்கான சுதந்திர இந்தியாவில் சினிமா விளைச்சலை அறுவடை செய்தவர்கள் அண்ணாவின் தம்பிகள்தான்.

காங்கிரசுக்குப் பயன்பட்ட திரைப்படங்கள் எவை? திராவிட இயக்கங்களுக்கு உதவிய திரைப்படங்கள் எவை? என்பதைக் கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம். என்னுடைய பதிலை சான்றாவணங்களாகவும் சாட்சியாகவும் கொடுக்கிறேன். அதற்காக ஆறு பேரை அழைக்கிறேன். அவர்கள் 1. தியோடர் பாஸ்கரன், 2. அறந்தை நாராயணன், 3. ராண்டார்கை, 4. வெங்கட் சாமிநாதன், 5. கண்ணதாசன், 6. எம்.ஜி.ராமச்சந்திரன்.

விடுதலைப் போரில் திரைப்படங்களின் பங்கு பற்றி தியோடர் பாஸ்கரன் கூறுகிறார். வெள்ளித்திரை கண்ட வெட்டுகள் / தினமணி சுதந்திரப் பொன்விழா மலர் / ஆகஸ்ட் 1997:

ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து (1919) நாடெங்கும் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது. எல்லா ஊடகங்களிலும் தங்களது கருத்துக்களை தேசியவாதிகள் பரப்ப முற்பட்டனர். அவற்றில் பத்திரிகை, நாடகம், கிராமஃபோன், சினிமா ஆகியவையும் அடங்கும்.

எழுத்தறிவு குறைந்த சமுதாயத்தில் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்க முடியும் என்பதையும் சுதந்திரப் போராட்டத்துக்கு இச்சாதனம் பயன்படுத்தப்படும் என்பதையும் பிரிட்டிஷ் அரசு உணர்ந்தது. சினிமா தணிக்கை எனும் கிடுக்கிப் பிடியை இறுக்கினார்கள். சென்னை திரையரங்குகளுக்கு தணிக்கைக் குழு இன்ஸ்பெக்டர்கள் சென்று ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் உள்ளனவா எனச் சோதித்தனர். பல படங்கள் சின்னாபின்னப்படுத்தப்பட்டன.

கோகினூர் பிலிம்சாரின் ‘பக்த விதுரர்’ (1921) படம், பிரிட்டிஷாரின் கவனத்திற்கு வந்தது. இதன் கதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. இந்திய தேசப்படத்திலிருந்து பாரதமாதா வருவது போன்று ஒரு காட்சி. விதுரருக்குப் பெயர் விதுர்ஜி. கதராடை அணிந்து காந்தி தொப்பியுடன் அவர் நூற்பது காட்டப்பட்டது. சிறையில் விதுர்ஜி வாடுவதுபோல் ஒரு காட்சி. வரிகொடா இயக்கம் பற்றிய கருத்துக்களும் படத்தில் காட்டப்பட்டன. மதுரை கலெக்டருக்கு வந்தது கோபம். படத்தைத் தடை செய்தார்…

ஆர்.எஸ்.டி.செளத்ரி இயக்கிய உக்கிரம் (1931) என்ற மெளனப்படம் சேலத்தில் திரையிடப்பட்டது. அதில் காந்திஜியைப் போன்றே உடை உடுத்தி கைத்தடியுடன் அஹிம்சை, தீண்டாமை ஒழிப்பு பற்றி பிரசாரம் செய்யும் ஒரு பாத்திரம். மாவட்ட மாஜிஸ்ட்ரேட் படத்தைத் தடை செய்தார்…

சென்னை ராஜதானியில் 1937-ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று 1939 வரை பதவியில் இருந்தது. இந்தக் காலத்தில்தான் ‘மாத்ருபூமி’, ‘ஆனந்த ஆஸ்ரமம்’ முதலிய நாட்டுப் பற்றைப் போற்றும் படங்கள் வெளிவந்தன.

ஆரம்ப நாட்களில் நாடகங்கள் மூலமாகவே தேசிய உணர்வு ஊட்டப்பட்டது. கதர் உடையில் காந்திக் குல்லாவோடு எஸ்.ஜி. கிட்டப்பா மேடையில் தோன்றி கே.பி. சுந்தராம்பாள் துணையுடன் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடுவார். சங்கரதாச சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோர் பங்கு முக்கியமானது. இது பற்றி அறந்தை நாராயணன் எழுதுகிறார்.

தமிழ் சினிமாவின் கதை / நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்:

தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் எழுதிய ‘கதரின் வெற்றி’, ‘தேசியக் கொடி’, ‘பதிபக்தி’, ‘பம்பாய் மெயில்’ என்னும் நாடகங்கள் கருத்துப் பரப்பலை நோக்கமாகக் கொண்டவை….

கதர்க்கப்பல் கொடி தோணுதே – கரம்
சந்திர மோகனதாஸ் காந்தி இந்தியா சுதேசக் (கதர்)

எனத் தொடங்கும் பாடலை எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் என்னும் நாடக நடிகர் எந்த வேடத்தில் தோன்றினாலும் பாடுவதை ஒரு மரபாகக் கொண்டிருந்தார்…

நீதிக்கட்சி சென்னை மாநில அமைச்சரவைப் பொறுப்பில் இருந்தது (1928). பாரதி பாடல்கள் ஆங்கிலேயரின் தூண்டுதலால் தடைசெய்யப்பட்டதைக் கண்டித்துச் சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி பேசுகையில் தேசியம், தேசபக்தியில் அனா, ஆவன்னா கூடத் தெரியாத சென்னை அரசாங்கம் தனது அழுக்குக் கரங்களால் புனிதமான நூலை அசுத்தப்படுத்தியுள்ளது என்றார்.

பாரதி பாடல்களைத் தடைசெய்த நீதிக்கட்சியினர் திரைப்படங்களில் வெளிப்பட்ட ஆபாசம் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நாராயணன் தயாரிப்பில் பிரகாஷ் இயக்கிய லைலா – மிஸ்ரெல்லா நட்சத்திரம் (1931) என்ற படத்தில் வந்த நடிகைகள் மறைக்க வேண்டியதையெல்லாம் காட்டிவிட்டார்கள்; கமல்ஹாசனே பொறாமைப்படும் அளவுக்கு முத்தக் காட்சிகளும் இருந்தன. அதாவது கவர்ச்சிக்குத் தடை இல்லை. கருத்துக்குத் தடை உண்டு என்பது அந்த அரசின் கொள்கையாக இருந்தது.

காங்கிரஸ் ஆதரவு படங்களில் முக்கியமானது ‘தியாகபூமி’ (1939). ‘தியாகபூமி’ எழுத்தாளர் கல்கியின் பேனாவில் பிறந்தது; திரைப்படமாகவும் உருவானது.

சேரி மக்களுக்குச் சேவை செய்யும் பிராமண மிராசுதார், கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டும் நாட்டு விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் இளம்பெண் என்று சுவையான கருத்துக் கோவை இந்தப் படம்.

திரைப்படம் தயாரிக்கப்படும் போதே ஆனந்த விகடனில் ‘தியாக பூமி’ தொடராக வெளிவந்தது. ஒவ்வொரு இதழிலும் பதினாறு பக்கங்கள் கொண்ட தனியான ஃபாரம், அதுவும் விலை உயர்ந்த கிளேஸ் காகிதத்தில். வாசகர்கள் அதைத் தனியாக எடுத்து பைண்டு செய்து கொள்ளலாம். திரைப்படத்தின் ஸ்டில்களையே பயன்படுத்தியது இதில் புதுமை.

விளைவு, தியாகபூமியின் கதாநாயகிக்காகக் கண்ணீர் விட்டு வெள்ளிக்கிழமை இரவுகளில் படுக்கைகளை நனைப்பது படிப்பறிவுள்ள தமிழ்ப் பெண்களின் விரதமானது.

‘தியாகபூமி’ திரைப்படத்திற்கு அரசு விதித்த தடைபற்றிக் கூறுகிறார் ராண்டார் கை / தி ஹிந்து / 21.03.08:

திரைப்படத்தைத் தடை செய்யும் அரசு ஆணை வந்தபோது தயாரிப்பாளர் கே. சுப்ரமணியமும் முதலீடு செய்த எஸ்.எஸ். வாசனும் அசராமல் இருந்தார்கள். கெயிட்டி திரையரங்கில் தொடர்ந்து இந்தப்படம் திரையிடப்பட்டது. எல்லாம் டிக்கட் இல்லாத காட்சிகள்; அனைவருக்கும் அனுமதி என்று செய்துவிட்டார்கள். லத்திகளை வீசிக் கொண்டு வரும் போலீஸ் படைக்குத் தலைவராக ஒரு அதிகாரி வந்தார்; திரையரங்கில் இருந்தவரிடம் தடை உத்தரவைக் கொடுத்தார். ‘உடனே நிறுத்த வேண்டும்’ என்றார். அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கேயே தடியடி நடத்தப்பட்டது. ஈவிரக்கமில்லாத வகையில் திரையரங்கின் உள்ளே தடியடி நடத்தப்பட்டது சினிமா வரலாற்றில் இதுதான் முதல் முறை.

venkat-swaminathanகாங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு திரைப்படத் துறையினர் செய்த பணிகளைப் பார்த்தோம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் தலைமை எப்படி நடத்தியது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதைச் சொல்லப் போகிறவர் வெங்கட் சாமிநாதன் / வியப்பளிக்கும் ஆளுமைகள்:

துர்காபாய் தேஷ்முக், என்.எஸ். கிருஷ்ணனை காங்கிரஸ் கட்சி வட்டத்துக்குள் கொண்டு வந்து அவரை அக்காலத்தில் மேலவை உறுப்பினராக ஆக்க விரும்பி முயற்சிகள் மேற்கொண்டார். முதலில் துர்காபாய் தேஷ்முக் என்.எஸ். கிருஷ்ணனை, ஜவஹர்லால் நேருவிடம் அழைத்துச் சென்று ஒரு சம்பிரதாயச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இதற்கிடையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜ் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, கூத்தாடிகள் காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிடுவதென்றால் காங்கிரஸ் கட்சியைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதாக என்.எஸ். கிருஷ்ணன் காதுக்கு சேதி எட்டியதும் அவர் டெல்லி செல்வதை, நேருவைச் சந்திப்பதை, சட்டமன்றத் தேர்தலுக்கு நிற்பதை எல்லாவற்றையும் உதறிவிட்டார்.

காங்கிரஸில் இடமில்லாதவர்களை தி.மு.க ஏற்றுக் கொண்டது. சினிமா என்கிற தந்திர வித்தையை தி.மு.க. வினர் திறமையாகப் பயன்படுத்தினர். ஒலிபெருக்கிகளும் ஓசையும் ஊரை வளைத்துப் போட்டன. இதைப்பற்றிக் கண்ணதாசன் சொல்கிறார் / நான் பார்த்த அரசியல்:

தொழிலாளர்கள் அனைவருமே திராவிட முன்னேற்றக் கழகத்தால் ஈர்க்கப்பட்டார்கள். இவர்கள் என்ன புரிந்து இந்தக் கட்சிக்கு வந்தார்கள் என்று கேட்டால் எதுவும் இல்லை. எதைச் சொல்லி அவர்களை இந்தக் கட்சி ஈர்த்தது? அதனுடைய மையக் கொள்கை என்ன? எதைச் சொன்னால் மற்ற கட்சிகள் அதே மாதிரி ஈர்க்க முடியும் என்று ஏதாவது ஒரு இலக்கணம் உண்டா என்றால் அதுவும் இல்லை…

அதற்குக் கவர்ச்சி ஊட்டுகிற வகையில் பின்னாலே நடிகர்களும் வந்து சேர்ந்தார்கள். சினிமா நடிகர்கள் ஈடுபட்ட உடனேயே அதற்குப் புதியதொரு கவர்ச்சி வந்தது. இந்தப் புரியாத விஷயங்களே சினிமாவிலும் வரத் தலைப்பட்டன.

M.G.Ramachandranதிரைப்படங்களால் தி.மு.க. வளர்ந்தது. தி.மு.க.வால் திரைப்பட வசூல் குவிந்தது. இதன் உச்சகட்டமாக உதித்தவர்தான் எம்.ஜி.ராமச்சந்திரன். தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அவருடைய முத்திரை அழுத்தமாக விழுந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது (1967) அவர் குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்தார். தொகுதிக்குப் போகாமலே பரங்கிமலையிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரைப் பார்க்க இரா.செழியன் வந்தார்.

அங்கே நடந்ததை எம்.ஜி.ஆரே சொல்கிறார் / நான் ஏன் பிறந்தேன்:

“என் உடல்நிலை பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு தன்னிடமிருந்த ஒரு காகிதக் குறிப்பை எடுத்து என்னிடம் காண்பித்தார். ‘என்ன இது’ என்றேன். ‘இந்தக் குறிப்பில் அமைச்சர்களின் பெயர்களும் அவர்க்ளுக்குத் தரப்படவிருக்கும் இலாகாக்களின் பெயர்களும் அடங்கியிருக்கின்றன’ என்று சொன்னார். நான் இரா.செழியன் அவர்களிடம் கேட்டேன் ‘என்னிடம் ஏன் காண்பிக்கிறீர்கள்’ என்று. அவர் சொன்னார் ‘அணணா அவர்கள் உங்களிடம் இதைக் காண்பிக்கச் சொன்னார்கள்’ என்று.”

தி.மு.க.வின் அதிகார மையத்தில் யாருக்கு மதிப்பு இருந்தது என்பதை அந்தக் காகிதக் குறிப்பு சொல்லிவிட்டது. இதோடு நண்பர் யாழ்வாணன் மனமாற்றம் அடைந்திருப்பார் என்று நம்புகிறோம்.

இனி, அடுத்த பகுதியில் வைக்கத்திற்குப் போகலாம்.

மேற்கோள் மேடை:

ராஜீவ் காந்தி ஒரு நல்ல தேச பக்தராக, மனிதாபிமானியாக முழு வளர்ச்சியை நோக்கி வளர்ந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் மனித வெடிகுண்டிற்கு அவர் பலியாக்கப்பட்டார். அதை என்றோ நடந்த ஒரு துன்பியல் நிகழ்ச்சியாக மறக்கும்படி, மரத்துப்போன மனம் படைத்தவர் சொல்லலாம். அது நன்றி கொன்ற செயல். எனவே

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு’

என்று வள்ளுவர் எழுந்து நின்று முழங்குவது கேட்கிறது.

– தா. பாண்டியன் / ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள்

4 Replies to “போகப் போகத் தெரியும் – 7”

  1. இந்திய விடுதலைக்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சியில் தேசத்திற்குப் போராடுபவர்கள், மக்களுக்காக உழைப்பவர்கள் முன்னிறுத்தப்பட்டார்கள். விடுதலைக்குப் பின்பு வந்து, பெற்ற விடுதலையை exploitation செய்த திராவிட கழகத்தார் மக்களுக்காக உழைப்பதுபோல “காட்டிக்கொள்பவர்களை” வளர்த்துவிட்டார்கள்.

  2. திரு. சுப்பு அவர்களுக்கு,
    உருப்படியான கட்டுரைத் தொடர். இந்தத் தொடரில் நீங்கள் காங்கிரஸின் ஊடகப் பயன்பாட்டுக்கும் திராவிட இயக்கத்தின் பயன்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டி இருக்கிறீர்கள். சுருக்கம் கருதி சுட்டல் அதிகம் விரிக்கப் படாமல் இருப்பதாக எனக்குத் தோன்றியது.
    தியோடர் பாஸ்கரனின் புத்தகத்தில் இந்த வேறுபாடு சுட்டப்பட்டுள்ளதா இல்லையா என்று கேட்கத் தோன்றியது. என் கைவசம் புத்தகம் இல்லாததால் இந்தக் கேள்வி.
    திராவிட இயக்கத்தினர் ஏதோ தம் கருத்துப் பிரச்சாரம் கடும் எதிர்ப்புக்கு இடையே ந்டந்ததாகவும், தாம் வெஞ்சிறையில் வாடிப் போராடித்தான் சமூகத்தில் வெற்றி பெற்றதாகவும் பல அரங்குகளில் நாடகம் ஆடுகிறார்கள். உண்மையில் இந்திய அரசோ, தமிழக அரசோ மிகக் குறைவான கட்டுப்பாட்டைத்தான் அந்த இயக்கங்கள் மீது விதித்தன. மாறாக காங்கிரஸ் இயக்கம் ஒரு கால்னியத்தின் அடக்கு முறையைத் தொடர்ந்து சந்தித்தது. ஆனால் இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலும் பதவிக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் ஒட்டுண்ணிகள், இயக்க வளர்ச்சிக்காகப் பாடுபட்டு தியாகங்கள் செய்து நலிந்தவர்கள் அல்ல. மாறாக அரசியல் சூதாட்டங்களில் பதவிக்கும அதிகாரத்துக்கும் பகடைகளை உருட்டத் தெரிந்த மோசடிப் பேர்வழிகள்.

    நீங்கள் சொன்ன ஒரு கருத்து எனக்கு உடன்பாடு. தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்ந்ததற்கு ஒரு அடிப்படைக் காரணம் அதன் மமதையும், மக்களோடு அது தொடர்பற்றுப்போனதும், ஒரு அளவில் காமராஜரின் பேச்சு அற்ற நடத்தையும். பக்தவத்சலமாகட்டும், சி.சுப்ரமண்யமாகட்டும், வெங்கட்ராமனாகட்டும் பல காங்கிரஸ் தலைவர்களும் பேச்சுத் திறமை அற்றவர்கள் மட்டுமல்ல, மக்களுடன் பேச்சு மூலம் தொடர்ந்த ஒரு பரிமாற்றம் தேவை என்பதைக் கூட உணராதவர்கள். அதிகாரிகளின் அரசின் பிரதிநிதிகளாக மட்டும் செயல்பட்டு, மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டியதை மற்ந்து போனார்கள். காங்கிரசின் சார்பில் கருத்தியல் போராட்டத்தை அதிகாரமற்ற கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றார் நடத்தினார்கள். அது வெகுநாள் நீடிக்காததற்குக் காரணமும் இவர்களுக்கு கட்சிக்குள் அதிகாரமட்டத்தில் அங்கீகாரம் இல்லை, தொண்டர்களிடமும், பாமர மக்களிடமும்தான் இருந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தது. இதே வழக்கம் இன்றும் கூட காங்கிரஸில் இருக்கிறது. இன்றைய இந்துக் கட்சிகளிடமும் கூட பேச்சுத் திறமையை வளர்க்கவோ, கருத்துப் பிரச்சாரத்தை வலுவான முறையில் செய்யவோ தகுந்த முயற்சிகள் இல்லை. ஊடகங்களில் இந்தக் கட்சிகளின் பாதிப்பு மிகக் குறைவே. திராவிட இயக்கங்களுக்கு public presentation, representation ஆகிய இரண்டிலும் நல்ல ஈடுபாடு இன்னமுமே உள்ளது. அதுவே அவற்றின் தொடர்ந்த அதிகார ஆதிக்கத்தைச் சாத்தியமாக்குகிறது.

  3. கருணாநிதியின் ‘பராசக்தி’ படம் வெளிவர காரணமாயிருந்தது ‘மணிக்கொடி சீனிவாசன்’ என்னும் தகவல் ஆச்சரியகரமானது..கழகம் சார்ந்த எந்த ஒர் எழுத்திலும் இந்த தகவல் ஏன் பதிவு செய்யப்படவில்லை..?

    ஆதித்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *