காலையில் எழுந்து பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால் ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் அவர்களின் நடமாட்டம் இருந்தது. இரவில் பார்த்த பத்துப் பதினைந்து பேருக்கும் மேலாக நிறையபேரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள் எல்லாம் சுற்று வட்டார கிராமத்து ஜனங்கள் என்றார் ஜார்ஜ்.
சரி வாங்க, காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு குளித்து ஏதாச்சும் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ஸ்டேஷனில்தான் எல்லா வசதிகளும் இருக்குமே. அது ஒரு சின்ன ஸ்டேஷன்தான். அதிகம் கிராமத்து ஏழை ஜனங்களின் நடமாட்டம்தான். ஸ்டேஷனில் உள்ள பொது இடங்களில், உள்ளே இருக்கும் கழிவறை, ப்ளாட்பாரத்தில் இருக்கும் தண்ணீர்க் குழாய் எதானாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். பெரிய ஸ்டேஷன்களில்தான் அநாவசிய கெடுபிடி, அதிகாரத்தைக் காட்டும் பெருமைக்காகவே அதிகாரம் செலுத்துவார்கள். சாதாரணமாகவே ஒடியா மக்கள் சாது. கிராமத்து ஜனங்கள் படிப்பில்லதவர்கள். அதிலும் ஹிராகுட், கலுங்கா போன்ற ஆதிகுடிகள் வசிக்கும் இடங்களில் அவர்கள் சிநேகமாகவே இருப்பார்கள். சாது மக்களைப் பார்த்து நமக்கும் அதிகாரத் தோரணை மேலிட்டால் ஒழிய வம்பில்லை
எனக்கு இப்போது நினைவிலிருப்பது ஜார்ஜ் வழிகாட்ட சர்சுக்குப் போய்க்கொண்டிருந்தோம். வழியில் ஒரு பெரிய கன்னிமாடம் (nunnery) அதிலிருந்து நிறைய ஆதிவாசிப் பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த இடம் முழுதுமே சர்ச்சுக்குச் சொந்தமானதாக அதன் பராமரிப்பில் இருப்பதான தோற்றம் தந்தது. ஜார்ஜிடம் கேட்டதற்கு இந்த ஏரியாவிலேயே அது ஒரு பெரிய சர்ச் என்றும் இதாலிய கத்தோலிக்கப் (Roman Catholic) பாதிரிமார்களால் நடத்தப்படுவது என்றும் சொன்னார். அவருக்கு இதுதான் முதல் தடவை. ஆனால் இங்கு வரும்முன் அவருக்கு இந்த இடத்தைப் பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதன்பின் அவரும் இந்த இடம் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முனைந்திருக்கிறார். சர்ச்சை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம்.
எனக்கு அடுத்து நினைவுக்கு வருவது- சர்ச்சில் பிரார்த்தனை நடக்கிறது. நானும் தேவசகாயம், ஜியார்ஜ், பஞ்சாட்சரம், மணி வேலு இத்யாதி எல்லோரும் சர்ச்சில். என்னவோ லத்தீன் மொழியில் நடக்கிறது. நாங்கள் மண்டியிட்டு கைகள் கூப்பி இருக்கிறோம். மற்றவர்கள் அவ்வப்போது என்னவோ ஆமென்–னோ என்னவோ சொல்கிறார்கள். நான் சும்மா மண்டியிட்டு கைகூப்பி இருந்தாலும், பாதிரியாரும் மற்றவர்களும் பார்க்க நானும் பிரார்த்தனை செய்கிறேன் என்று இருக்க வேண்டாமா? அந்த சர்ச்சில் அன்றைய பிரார்த்தனையில் சுமார் 150-லிருந்து 200 பேருக்குள்ளாக இருந்திருப்பார்கள். என் கண்களுக்கு வேறென்ன வேலை? சுற்றி மேய்வதுதானே? அதுவும் பாதிரியாரின் கண்கள் என்பக்கம் இல்லாதபோது. ஆனாலும் இந்தப் புதிய காட்சிகளின், சடங்குகள், கூட்டம் இவற்றின் புதுமையும் சுவாரஸ்யமும் வெகுநேரம் நீடிக்கவில்லை. மண்டியிட்டே பழக்கமில்லை. ஸ்கூலில் கூட பெஞ்ச் மேல் ஏறி நிற்கச் சொல்வார்கள். அது அதிகம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீளாது. இல்லையெனில் வகுப்புக்கு வெளியே நிற்கச் சொல்வார்கள். ஸ்கூல் ஹெட் மாஸ்டரின் மருமகனானாலும் எனக்கு ஒன்றிரண்டு தடவை இந்தத் தண்டனை கிடைத்ததுண்டு. ஆனால் மண்டியிடும் நிலைமை என்றும் எனக்கு நேர்ந்ததில்லை. யாருக்குமே நேர்ந்ததில்லை. நான் ஒண்ணாங்கிளாசிலோ என்னவோ சேர்ந்தபோது ஒரு பையனுக்கு காலில் கட்டையொன்றைச் சங்கிலியால் பிணைத்திருந்தார்கள். அவன் அதை இழுக்கமுடியாது இழுத்துக்கொண்டு நடப்பான், பார்க்கப் பரிதாபமாக இருக்கும். ஆனால் அது ஒரே ஒரு முறைதான். அந்த மாதிரி தண்டனை பின்னர் வெகு சீக்கிரம் கைவிடப்பட்டது என்று நினைக்கிறேன். பள்ளி நாள்களில் இப்படி தண்டனை அனுபவிக்காத நான் இப்போது ஒரு சர்ச்சில் நடக்கும் ஈஸ்டர் பிரார்த்தனையில் மற்றவர்களோடு விரும்பிக் கலந்துகொண்டது ஏதோ தண்டனை கொடுக்கப்பட்டு அனுபவிப்பது போலத்தான் தவித்தேன். சின்ன வயதில் ஒரு வேளை அரை மணி நேரம் மண்டியிடுவது சாத்தியமாகியிருக்கலாம். ஆனால் காலை ஒன்பது ஒன்பதரை மணிக்கு சர்ச்சுக்குள் நுழைந்த நாங்கள் அதிக நேரம் உள்ளே நின்றிருக்கவில்லை. மண்டியிடும் நேரம் வெகு சீக்கிரம் வந்து விட்டதென்றே நினைக்கிறேன். அரை மணிக்கு மேல் தாங்கவில்லை. கால் கடுக்க ஆரம்பித்தது. பின் அது வேதனையாக மாறி சர்ச்சின் சடங்குகளில், பிரார்த்தனையில் மனம் கொள்ளாது முழங்கால் வலியிலேயே மனம் துன்பப்பட்டுக்கொண்டிருந்தது. எப்போடா இந்த பிரார்த்தனை முடியும், இந்த இடத்தை விட்டு வெளியே போவோம் என்றே எண்ணித் தவித்துக்கொண்டிருந்தேன். அது ஒன்றும் அப்படி அவசரப்பட்டு வருவதாகத் தெரியவில்லை. இனி ஜியார்ஜ் என்ன, யார் அழைத்தாலும் ஈஸ்டர் ப்ரேயர்ஸ்க்கு கட்டாயம் மறுத்து விடுவது, போனால் போகிறது நண்பர்களாயிற்றே என்று புது வருஷ பிரார்த்தனைக்கு வேண்டுமானால் ஷாமியானா எழுப்பி சம்பல்பூரில் நடந்தது போல நடக்குமானால் நண்பர்களுக்காக அதில் கலந்து கொள்ளலாம். தூக்கம் வந்தால் வெட்ட வெளியில் தூங்கவும் செய்யலாம் என்று மனம் சலித்துகொண்டிருந்தது.
அன்றைய என் வேதனை சொல்லி மாளாது. மற்ற நண்பர்களும் இப்படிக் கஷ்டப்பட்டார்களா, இல்லை மனதுக்குள் அடக்கிக் கொண்டுள்ளார்களா தெரியவில்லை. இப்படி நேரிடும்மென்று ஜியார்ஜோ இல்லை தேவசகாயமோ சொல்லியிருக்கலாம். ஒரு வேளை அவர்கள் சர்ச்சுகளில் இப்படி இருக்காதோ என்னவோ. ஒரு வழியாக இந்த அவஸ்தை 12.30 மணிக்கோ 1 மணிக்கோ நின்றது. வெளியில் வந்ததும் நான் என் வேதனையைச் சொன்னேன். அவர்கள் பாதி பச்சாதாபப்படுவதும் பாதி சிரிப்பதுமாகத்தான் இருந்தார்கள். பின்னர் பச்சாதாபம் நின்று சிரிப்பது மட்டுமே தொடர்ந்தது. சற்று நேரம் இளைப்பாறிவிட்டு பாதிரியாரைப் போய்ப் பார்க்கலாம் என்று ஜியார்ஜ் சொல்ல, மற்றவர்களும் அதை ஆமோதிக்க, நானும் அவர்களுடன் சென்றேன். மரியாதை நிமித்தம்தான். நாம் தூரத்திலிருந்து வந்திருக்கிறோம் நாம் எல்லோருமே கிறித்துவர்கள் இல்லை என்றும் அவருக்குச் சொன்னால் அவர் சந்தோஷப்படுவார் என்றார் ஜியார்ஜ். அப்படித்தான் நடந்தது. ஏதோ ஒரு சில நிமிடங்கள் அவர் எங்களையெல்லாம் விசாரித்து, வந்தது பற்றித் தம் சந்தோஷத்தைத் தெரிவித்ததோடு கர்த்தர் எங்களை எந்த வித்தியாசமும் பாராட்டாது ரக்ஷிப்பார் என்று ஒரு ஆசீர்வாதமும் தர, பெற்று நாங்கள் வெளியே வந்தோம். ஒரு விஷயம் கவனிக்க வேண்டியது. பாதிரியார் ஒடியா இல்லை. இந்தியரும் இல்லை. இத்தாலியர். அவருடன் இருந்த மற்றவர்களும் இத்தாலியரே.
அங்குமிங்கும் ஓடி வேலை செய்தவர்கள்தான் ஒடியாக்கள். ஆதிவாசிகள். எங்களுடன் அவர் பேசியது ஆங்கிலத்தில். அவர்களுக்கு உதவிய சர்ச்சின் வேலையாட்களுடன் அவர் பேசியது ஆதி வாசிகளின் பாஷையில். ஒடியா கூட இல்லை. ஒடியாவில் எனக்கு ஒரு சில வார்த்தைகளுக்குமேல் தெரியாதென்றாலும், பேசுவது ஒடியாவென்றால் அது தெரிந்திருக்கும்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜியார்ஜ், தேவசகாயும் இன்னும் மற்றவர்களிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.
“அவங்களுக்கு அத்தனை அக்கறை இருக்கு. கத்துக்கறாங்க. மதப் பிரசாரத்தோட அதுவும்தான்.. அவங்க பாஷையிலே பேசலைன்ன எப்படிப் பிரசாரம் செய்யறது?” என்று ஜியார்ஜ் சொன்னார்.
”நாம இங்கே வந்து மூணு வருஷம் ஆகுது. நமக்கு ஒடியா தெரியுமா? அவ்வளவுதான் நம்ம அக்கறை” என்று பஞ்சாட்சரமோ மணியோ சொன்னார்கள்.
“சாமிநாதனுக்கு நாலஞ்சு வார்த்தை தெரியும்” என்றார் தேவசகாயம்.
“அது தானா வந்ததுய்யா, நானா கத்துக்கிடலை” என்றேன்.
அன்று சாயந்திரம்வரை எங்கே போனோம், எங்கே சாப்பிட்டோம் எப்படிப் பொழுதுகழிந்தது என்பதெல்லாம் ஒன்றும் நினைவில் இல்லை. நினைவில் பளிச்சென்று மறையாமல் இருப்பது அன்று மாலை ஒரு திறந்த வெளியில் நாங்கள் தரையில் உட்கார்ந்திருக்க அங்கு கூடிய கூட்டம். மணி ஆறுக்கு மேல் இருக்கும். சூரியனின் தகிப்பு குறைந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டத் தொடங்கிவிடும். அத் திறந்த வெளியில் நாலா பக்கங்களிலிருந்தும் நீண்ட கம்புகளோடு (இன்னம் வேறு ஏதும் ஆயுதம் இருந்ததா என்பது நினைவில் இல்லை. என் மனத்தில் பதிந்திருப்பது) கம்புகளோடு நிறைந்து வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமான ஆதிவாசிகளின் கூட்டம். முந்தின தினம் இரவு ஸ்டேஷனில் இம்மாதிரி ஒரு பத்துப் பதினைந்து பேரைப் பார்த்து அடைந்த பயம் இப்போது இல்லை. ஆச்சரியத்துடன் பார்த்து இருக்கும் அதிசயமாக இருந்தது அது. சுமார் ஆயிரம் ஆயிரத்து ஐந்நூறு பேர் இருக்கலாம் அந்தக் கூட்டத்தில்.
கூட்டத்தின் நடுவில் ஒரு வட்டமான வெற்றிடம். மேடை ஏதும் இல்லை. இரவு சூழும் நேரத்தில் இத்தாலியப் பாதிரிமார்களும் அவர்களைச் சுற்றிய மற்றோரும் வந்தார்கள். சுற்றிக் குழுமியிருக்கும் கம்பும் கழியுமாக தூக்கிக் கச்சமாகக் கட்டிய அழுக்கு வேட்டிக் கூட்டத்தினிடையில் நீண்ட வெள்ளையும் சிகப்புமான அங்கியும் தரித்து இருக்கும் வெள்ளைப் பாதிரிமார்.
இதுவும் ஈஸ்டர் சடங்குகளில் ஒன்றோ என்னவோ. சர்ச்சுக்கு சர்ச்சு மாறுமோ என்னவோ. அவர்களிலும்தான் 10–12 வகைகள் இருக்கின்றனவே; நம்மில் இருக்கும் ஜாதிகள் போல. பிள்ளைமார் வீட்டுக் கல்யாணம் மாதிரியா அய்யர் வீட்டுக் கல்யாணமோ, நாயக்கர் வீட்டுக் கல்யாணமோ இருக்கும்?
நடந்தது எல்லாம் இலத்தீன் மொழியில். எனக்கோ ஜியார்ஜுக்குமோ இல்லை தேவசகயாத்துக்குமோ என்ன புரியும்?
ஹிந்தியில் இல்லை. ஒடியாவில் இல்லை. அந்த ஆதிவாசிகள் மொழியிலும் இல்லை. இலத்தீன் மொழியில். என்னமோ இரண்டு மணி நேரம் நடந்தது. எங்களுக்கு ஏதோ நாடகம் பார்ப்பது போல் இருந்தது. யாரும் மண்டியிடவில்லை. நானும் மண்டியிட வேண்டாம். அது ஒரு பெரிய ஆசுவாசம். அப்பாடா என்று இருந்தது. கூட்டத்தோடு நின்று கொண்டோ அல்லது முடிந்தால் பார்க்க சௌகரியம் இருதால் கூட்டத்துக்கு வெளியே நின்று கொண்டோ பார்த்தோம். அந்த ஆதிவாசிகள் கூட்டத்துக்கு என்ன புரிந்ததோ என்ன கிடைத்ததோ தெரியாது. ஆனால் அந்தக் கூட்டம் அனைத்தும் மிக சிரத்தையோடு ஆர்வத்தோடும் அதில் கலந்து கொண்டனர். அவ்வப்போது ”ஆமென்” சொன்னார்கள். நாம் அர்ச்சகர் கொடுக்கும் விபூதியை இட்டுக்கொண்டு எரியும் சூடத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டால் போதும் என்று இருக்கு இல்லியா அது போலத்தான்.
வேறொன்றும் எனக்கு நினைவில் இல்லை. இன்னமும் அது பற்றி யோசிக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் விஷயம்.. நாங்கள் கலுங்கா போனது 1952 அல்லது 1953-ல் ஒரு மார்ச் மாதம். கலுங்கா ஒரு காட்டுப் பிரதேசம். எங்கும் மின்சார இணைப்புகூடக் கிடையாது. ரயில் நிலையத்திலிருந்து ஒன்றிரண்டு கிலோ மீட்டர் உள்ளே இருப்பவைதான் அந்த சர்ச்சும் கன்னிமாடமும் இன்னும் மற்ற அந்த சர்ச் சம்பந்தப்பட்ட கட்டடங்களும். சுற்றி உள்ள காட்டுப் பிரதேசத்தில் இந்த ஆதிவாசி கிராமங்கள். ஐம்பது வருஷங்களுக்கு முன்னோ, அல்லது அதற்கும் முன்னோ, அதாவது 20-ஆம் நூற்றாண்டுக்கு ஆரம்பத்தில் அல்லது சற்றுமுன் அவர்கள் இத்தாலியிலிருந்து போப்பின் கட்டளையின் பேரில், தங்கள் மதத்தைப் பரப்ப இங்கு வந்திருக்கிறார்கள். இந்தக் காட்டில். ரோமிலிருந்து இந்தக் காட்டுக்கு. இங்கு வந்து இந்த ஆதிவாசிகளுடன் பழகி, அவர்கள் மொழியைக் கற்று, அவர்களுக்கு படிப்போ மருத்துவ உதவிகளோ ஏதோ செய்து அவர்களையும் கத்தோலிக்கர்களாக்கி… அதுவே எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்திருக்கும்! அந்த ஆதிவாசிகளுக்கு ஆதிகாலம் தொட்டு தம் இனப் பழக்க வழக்கங்கள், தெய்வங்கள், தொழும் முறை இவற்றில் எல்லாம் இருந்திருக்கக் கூடிய பிடிப்பு சாதாரணமாகவா இருந்திருக்கும்? அதையெல்லாம் உதறியெறியச் செய்து, என்னமோ அவர்கள் கண்களுக்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் உடைகளையும் சடங்குகளையும் புரியாத மொழியில் ஆர்வம் கொள்ளச் செய்து, இடையிடையில் அவர்கள் “ஆமென்” சொல்ல வேண்டும்.. வேறு பங்கேற்பு ஏது? இந்த மாயம் எப்படி நிகழ்கிறது? 1950-களின் ஆரம்ப வருடங்களில், ஒரிஸ்ஸாவின் ஒரு ஒதுங்கிய காட்டுப் பிரதேசத்தில். அப்போது அவர்கள் வந்து தங்களை அவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் ஸ்தாபித்துக்கொள்ள ஐம்பது வருடங்களாவது ஆகியிருக்கும். அந்த இத்தாலியப் பாதிரிமார்களுக்கு இது ஒரு வேலையா? சேவையா? அல்லது அர்ப்பண உணர்வா?
அதே சமயம் இப்போது கிட்டத்தட்ட மூன்று மாத காலமாகக் கூடங்குளத்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் நினைவுக்கு வராமல் இருப்பது சாத்தியமில்லை. இது என்ன வகையைச் சார்ந்தது? அரசியலா, பின்னிருக்கும் வர்த்தகப் பேராசை, மதப் போர்வை போர்த்துக் கொண்டுள்ளதா? இந்த பாதிரிமார்களுக்குப் பின்னிருப்பது மக்களா, இல்லை சர்ச்சா? சர்ச்சானால் அதன் பின்னிருப்பது எது?
தூய மத உணர்வின் அர்ப்பண ரூபம்தானா அங்கு கலுங்காவில் பார்த்ததும்?
வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.
ஆசிரியரின் சொந்த அனுபவம் வழங்கப்பட்ட விதம் நேரில் பார்ப்பது போல் உள்ளது. லேசாக முழங்கால் வலிப்பது போலவும் உள்ளது!
வீட்டில் அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்பு குளித்த பின்,அவரவர்க்கு சௌகரியமான நேரங்களில், வணங்குகிறோம். ஒரே பூஜை அறையில் சிவன் , விஷ்ணு தொடங்கி மதுரை வீரன் வரை சிரித்தபடி இருக்கிறார்கள். விருப்பபட்டவர் கோயில் போகிறோம். இல்லாவிட்டால் ” நீ போய் வா . இன்னிக்கு மனசு சரியில்லை ” என்று சொல்லவும் சுதந்திரம் இருக்கிறது. பண்டிகை நாட்களில் சேர்ந்து பெரியவர்களை நமஸ்காரம் செய்கிறோம். மனம் லேசாகிறது. நிழலின் அருமை!
” அர்ப்பண உணர்வு ” பற்றி
எந்த விஷயமும் தர்மமா, அல்லவா என்பதை நோக்கத்தைப் பொறுத்துத்தான்
.முடிவெடுக்கிறோம்.
துருவனும் தவம் செய்தான், தன்னை அர்ப்பணம் செய்து-நோக்கம் பகவானை அடைவது. அடையவும் செய்தான்.
ராவணனும் செய்தான், தலைகளை அர்ப்பணமாக அரிந்து போட்டு. அது நம்மால் முடியாத பயங்கரக்காரியம் தான். ஆனால் ராவணன் நோக்கம் சித்திகள் பெற்று உலகை அடக்கி ஆள்வதல்லவா? அத்தைகைய அர்ப்பணம் அழிவுப்பாதையில் மட்டுமே அழைத்து செல்வது. அந்த சித்திகளுக்கும் குறிப்பிட்ட காலம் தவத்தின் தீவிரத்தைப் பொறுத்து பலன் உண்டு போலும்.
இன்றைய சூழலில் துருவர்களை மட்டும் தேட வேண்டிஉள்ளது. எதிர்மறை ‘தவங்களுக்கு ” தேவைப்படும் சக்தி உலகில் இப்போது அதிகப்படியாக தோன்றுகிறது.
சரவணன்
அந்த இத்தாலிய பாதரிமார்களுக்கு இது ஒரு வேலையா ? சேவையா ? அர்பண உணர்வா ?
சரியாகதான் தூபம் போட்டு உள்ளீர்கள். மறுமொழிகள் இனி கனல் பறக்க வரும். என்பங்கிற்கு மேலே சொன்ன எவையுமே மத மாற்றத்திற்கு பொருந்தாது. மத மாற்றம் என்பதே ஆட்டு மந்தைகளை பெருக்கவேண்டும் அவர்களை அடிமைபடுத்தி அவர்கள் அறியாமலே அவர்களது சொத்து சுகங்கள் வசிக்கும் இடங்களை கைப்பற்றி அவர்களை கொண்டே அந்த அந்த நாட்டிற்கு எதிராக சதிகள் செய்ய தூண்டி உண்ட வீட்டில் கன்னம் வைக்கும் வேலையை செய்து தாங்கள் சுகம் காணவேண்டும் என்பதுதான் உண்மை. எனவே மத மாற்றம் என்பது ஒரு மோசடி வேலை என்பதை தவிற வேறு ஏதும் இல்லை.
ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பே இவர்கள் மோசடி பேர்வழிகள் என்பது உலகம் அறியும். ஏமாறுபவர் இருக்கும் வரை இந்த ஏமாற்றும் பேர்வழிகள் இருப்பார்கள்.
“Missionaries are perfect nuisances and leave every place worse than they found it.” – Charles Dickens (1812-1870).