தமிழ்ப்புலவர்கள் தமிழ்மொழியில் இல்லாத இலக்கிய வடிவங்களை வடமொழியில் கண்ட போது, அவ்விதமான புதிய ஆக்கங்களை தமிழில் உருவாக்கி மொழியை வளப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாறே, காவியங்கள், இதிஹாசங்கள், யமகம், சிலேடை முதலிய சித்திரக்கவிகள் யாவும் தமிழில் தோன்றியுள்ளன. இது போலவே, மேலை நாட்டு மொழிகளை பின்பற்றியே சிறுகதை, நாவல் போன்ற இலக்கியங்கள் தமிழில் வந்து மொழி வளத்திற்கு உதவின என்பதும் மறுக்கவியலாததாகும்.
என்றாலும், இன்னும் தமிழுக்கு வராத சில, பல இலக்கிய வடிவங்கள் சம்ஸ்கிருதத்தில் இருப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பல வகை யமகப்பாடல்களும், நாகபந்தம், ரதபந்தம் முதலிய சித்திரக்கவிகளும், தமிழுக்கு வடமொழி வழி வந்துள்ளன.
யமக வகைகளில் நிரோட்டயமகம் என்பதும் முதன்மையான ஒன்று. செய்யுளை வாசிக்கும் ஒருவரது வாய் உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டாத (தீண்டாத) வண்ணம் ப,ம போன்ற தீண்ட வைக்கும் சொற்கள் அமையாத செய்யுள் நிரோட்டச் செய்யுளாகும். (நிர்- ஓஷ்டம் -நிரோஷ்டம்- ஓஷ்டம்- உதடு)
இவ்வளவு கடினமான நிரோட்ட செய்யுள்கள் நிறைந்த அந்தாதிகள் கூட நூறாண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வித்துவத்திறன் மிக்க புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன.
ஆனால், இன்னும் கூட கொம்புகளும் (‘கெ’,’கே,’கோ’ எழுத்துக்களில் உள்ளது போன்று) காலும் (‘கா’, ‘மா’, ‘யா’) வராமல் கவிதைகள் தமிழில் எழுந்ததாக என்னால் அறிய முடியவில்லை. ஆனால், இவ்வாறான அமைப்புடைய கவிதைகள் மட்டும் இணைந்த ஒரு சிறு பிரபந்தம் சம்ஸ்கிருத மொழியில் மிகுந்த பொருட்சுவையோடும், சொற்சுவையோடும் சந்த நயத்தோடும் கூடியதாக மிகுந்த தொன்மையோடும் பிரபலத்தோடும் விளங்கி வருகிறது என்றால் ஆச்சர்யமான ஒன்றல்லவா..?
இந்த அதி அத்புதமான சித்திரக்கவியை சில வருடங்களுக்கு முன் அமரத்துவம் எய்திய யாழ்ப்பாணத்து ஆவரங்கால் என்ற ஊரில் வசித்த பண்டிதர் ச.சுப்பிரமணியம் என்னும் புலவர் பெருமான் சுவை, பொருள் மாறாது மொழி பெயர்த்து தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
ஆடவல்ல பெருமானாகிய ஸ்ரீமத் நடராஜமூர்த்தி திருநடனம் செய்யும் இடத்தில், நந்தி, ப்ருங்கி என்கிற தேவாம்சமுடையவர்களும், வியாக்கிரபாதர், பதஞ்சலி என்ற மாமுனிவர்களும் இருப்பதாக ஐதீகம்.
நந்திதேவருக்கு இரண்டு கொம்புகள், நான்கு கால்கள், ப்ருங்கிமுனிவருக்கு மூன்று கால்கள், வியாக்ரபாதருக்கு நகங்கள் கூட கால்கள் போலவே இருக்கும். ஆனால், ஆதிசேடனின் அம்சமான பதஞ்சலிக்கு கால்கள் எங்கே…? கொம்புகள் எங்கே..? ஆக, மூவரும் பதஞ்சலியை கொஞ்சம் கேலி செய்தார்களாம்.
இதனை கேட்ட பதஞ்சலி முனிவரோ.. “எனக்கு காதும் கண்ணும் ஒன்றே எனவே. இறைவன் ஆடுவதை பார்க்கிற போதே, அவனது திருவடிகளின் தாளலயத்தையும் உணர்கிறேன். அதற்கு ஏற்றாற் போல, கொம்பும் காலும் இல்லாத ஸ்தோத்திரம் ஒன்று செய்கிறேன்.” என்று அழகான ஒரு ஸ்தோத்திரம் பாடினாராம்… இந்த கதை காஞ்சி மாமுனிவர் தாமாக கற்பனை செய்து ரஸமாகச் சொன்ன கதை. (ஆச்சார்ய சுவாமிகள் உபதேசங்கள்)
ஆனால், அது போலவே, கால் போடும் தீர்க்கமான எழுத்துக்களும், கொம்பு போடுகிற ஏ,ஓ போன்ற உயிர் சார் எழுத்துக்களும் இல்லாமல் பதஞ்சலி முனிவர் இந்த ஸ்தோத்திரத்தை படைத்திருக்கிறார்.
இதோ ஒரு பாடல்..
ஆடவல்ல பெருமான் ஆடுகிற போது, அவரது திருவடிச் சதங்கைகள் ‘ஜலஞ்ஜல ஜலஞ்ஜல’ என்று ஒலியெழுப்புகின்றன.
‘அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி
ஜலஞ்ஜல ஜலஞ்ஜல ரவம்..’
அந்த லயத்திற்கேற்ப, பிரம்மாவும், திருமாலும் ‘திமித்திமி’ என்று மத்தளம் வாசித்து கைத்தாளம் போடுகின்றனராம்
‘முகுந்த விதி ஹஸ்த கத மத்தள லயத்வநி
திமித் திமித் நர்த்தந பதம்..’
இதை முருகன், கணபதி, நந்தி, பிருங்கி, பிரம்மா, பதஞ்சலி என்று ஒரு பக்த வெள்ளமே நின்று பார்த்து ஆனந்த வெள்ளத்தில் திளைக்கிறதாம்..
‘சகுந்தரத பர்ஹரத நந்திமுக தந்திமுக
ப்ருங்கிரிடி ஸங்க நிகடம்’
இது மட்டுமல்ல பிரம்மஞானிகளான சனகாதி முனிவர்கள் கூட இந்த நடனத்தில் மயங்கி பெருமான் தாள் பணிகிறார்களாம்… இவ்வாறாக அம்பலத்தில் ஆடும் அருட்கூத்தை நினைந்து நினைந்து ஹிருதயத்தில் துதிப்பாயாக..
‘ஸநந்த ஸநகப்ரமுக வந்தித பதம் பர
சிதம்பர நடம் ஹ்ருதி பஜே‘
முதலில் சிலம்பொலி கேட்கிறது… பின்னர் முழவொலிக்கிறது… தாள வாத்தியக்கருவிகள் இசைக்கப்படுகிறது… திரை விலகுகிறது… இதோ தேவரும் காணாத் திருவடிகள் சதங்கை குலங்க காட்சி தருகின்றன… பரம பக்தர்கள் முதல் பரம ஞானிகள் வரை யாவரும் இந்த காட்சியை கண்டு மனம் பறி கொடுத்து ஆனந்த தாண்டவ தரிசனம் பெறுகின்றனர்…
முழமையாக மீண்டும் ஒரு முறை ஸ்லோகத்தை படித்துப் பாருங்கள்…
“அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி
ஜலஞ்ஜல ஜலஞ்ஜலரவம்
முகுந்த விதி ஹஸ்தகத மத்தளலயத்வநி
திமித்திமித நர்த்தநபதம்
சகுந்தரத பர்ஹரத நந்திமுக தந்திமுக
ப்ருங்கி ரிடி ஸங்க நிகடம்
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம்பர
சிதம்பர நடம் ஹ்ருதி பஜே“
இந்த பதஞ்சலி முனிவர் அருளிய இந்த நடேச மஹிமா அல்லது நடேச அஷ்டகத்தை அப்படியே, தமிழில் யாழ்ப்பாணத்துக்கவிஞர் ஒருவர் மொழி பெயர்த்ததாக சொன்னோம் அல்லவா..? அதை பாருங்கள்..
‘அநந்தநவ ரத்நமுறு பதசிலம் பின்கணணி
மணிசலஞ் சலஞ்சல சலத்துவனியன்
அநந்தசய னன்னய னடிக்குமத் தளலயத்துக்
கண்ணுதிமி திமித்திமி நடன்பிருங்கி
அநங்கருடன் மயிலதிபர் ரிடி நந்தி தந்திமுகர்
அங்கருகு றச்சநக ரஞ்சலியுற
அநந்த சுக முறபரசி தம்பரநட ம்புரியும்
அடிபரவு மன்பகத் துற்றமருக’
மூலம் போலவே, இதனிலும் கொம்போ, கால்களோ இல்லாது கவி சிறப்பாக அமைந்திருப்பது இரசிப்பதற்குரியது. இரண்டையும் ஒன்றோடொன்று இணைத்துப் படிக்கிற போதே அதன் சுவை மேன்மேலும் பொலிவதை காண முடிகின்றது.
“சம்பு நடனம்” என்ற பெயராலும் இந்த ஸ்தோத்திரம் அழைக்கப் படுகிறது. சிறந்த கர்நாடக இசைக் கலைஞர்களான கணேஷ் குமரேஷ் சகோதரர்கள் இந்த ஸ்தோத்திரத்தின் சுலோகங்களை வயலினிலும் வாய்ப்பாட்டிலும் ராக மாலிகையாக இசைப்பதை இந்த வீடியோவில் காணலாம்.
பாரத தேசமெங்கும் சம்ஸ்கிருத வாரம் சிறப்பாக கொண்டாடப் பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வாறான அபூர்வமான இலக்கியச்சுவைகளை பகிர்வது இரு மொழி உறவியலின் நீடிப்பையும் அதன் தேவைப்பாட்டையும் வெளிப்படுத்தும் என நம்புகின்றேன்.
இனிமை மயூரகிரியாரே, நன்றி. இறை அருள் மேலும் கூடுக.
இந்த முழு பாடல் கீழ்வுள்ள வெப் பக்கத்தில் வுள்ளது:
https://www.shaivam.org/tamil/sta_sk_natesastakam.pdf
—கிருஷ்ணமுர்த்தி
மிகவும் அருமையான ஒரு கதை. சமஸ்க்ருத ஸ்லோகமும் அதன் தமிழாக்கமும் மிகவும் அருமை. படித்து ரசிக்கத்தக்க ஒன்று. வளரட்டும் தமிழ் ஹிந்துவின் இதுபோன்ற நற்பணிகள்.
நல்ல விளக்கம். நிரோட்ட யமகம், கொம்பும் காலுமில்லாக் கவிதைகள்! என்னே கவிதை நயம்! இன்று நான் புதிதாகக் கற்றேன்! நன்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! நமச்சிவாய!
அருமையான பாடல் ! அதை தமிழில் செய்த யாழ்பாண புலவருக்கு வாழ்த்துக்கள் !
வெகு நாட்களுக்குப் பின்னர் நவ க்ருஹஸ்தரான ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயரிடமிருந்து ஒரு அருமையான வ்யாசம்.
ஆடல்வல்லானைப் பற்றிப் பாடப்புகையில் அதில் சந்தம் மிளிர்தல் சுகானுபவம். ஒரு புறம் சந்தம் மறு புறம் பாஷா சமத்காரம்.
அருளாளர்களைச் சந்தம் மிளிரப்பாடல் புனைய உந்துதலாக இருப்பது ஆடல்வல்லானின் நடனமும் கண்ணன் காளியன் மீதாடின நடனமும் என்று பொதுவாக அறியப்படும்.
சந்தம் பொங்கி ப்ரவஹிக்க இந்த இரு நடனத்தையும் பற்பல கவிகள் பாடியுள்ளனர்.
சந்த லயத்துக்குரித்தானவன் மால் மருகனும் என்பதும் பகிரப்பட வேண்டிய விஷயம்.
அதுவும் பாடுபவர் சம்பந்தப்பெருமானைப் போல சந்தக்கவி பாட எனக்கருள்தா என கயிலைநாதனை இறைஞ்சிப்பாடிய எங்கள் வள்ளல் பெருமான் அருணகிரிநாதர் எனில் ………..
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் …… கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் …… றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் …… சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் …… சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் …… கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் …… சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் …… கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் …… தம்பிரானே.
இந்தப்பாடலில் இன்னொரு சிறப்பு புண்டரிகர் தந்தையும் என்ற படிக்கு முருகப்பெருமான் மால்மருகன் எனவும் சிவபாலன் எனவும் சிவபெருமானையும் திருமாலையும் சம்பந்தப்படுத்தும் அழகு. கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடும் என்ற படிக்கு ச்ருங்கார ரஸம். சூரபத்ம வதத்தை ஸம்ரித்த படிக்கு வீர ரஸம்.
ச்ருங்கார ரஸம் மற்றும் வீர ரஸத்தை சந்தத்தில் இருத்தி வள்ளல் அருணகிரிப்பெருமான்……. கண்குளிர என்றன் முன் சந்தியாவோ எனப்பாடுகையில்……. வள்ளிக்கு வாய்த்த பெருமான் வள்ளல் பெருமானுக்கு மட்டிலுமன்றி இந்த திருப்புகழமுதத்தை சுவைக்கும் அனைத்து அன்பர் தம் மனக்கண்ணிலும் நடனம் செய்வாரன்றோ!!!!!!!!!!!!!
வேலும் மயிலும் சேவலும் துணை.
ஸ்ரீ லங்காவில் சம்ஸ்க்ருதக்கல்வியில் ஆர்வமுடைய அன்பர்கள் இருக்கிறார்கள் என்றறிய மகிழ்வாக இருக்கிறது.
அதுவும் இந்த அழகான ஸ்துதியின் கருத்தை உள்வாங்கி அதையொத்து தமிழில் சந்தம் கமழ கவிதை வடித்தமை அருமை.
இந்த வ்யாசத்தில் பத்து ச்லோகங்களால் ஆன இந்த ஸ்தோத்ரத்தின் நான்காவது ச்லோகம் அழகுடன் பகிரப்பட்டுள்ளது. முழு ச்லோகத்தையும் கீழ்க்கண்ட உரலில் எளிய ஆங்க்ல வ்யாக்யானங்களுடன் வாசித்து மகிழலாம்.
இந்த் வ்யாசத்தில் பகிரப்பட்டுள்ளது பதஞ்சலி க்ருத (பதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்ட) சரண ச்ருங்க ரஹித ஸ்தோத்ரம்
https://sanskritdocuments.org/all_sa/nataraj_sa.html
சரணம் – பாதம் – கால்
ச்ருங்க – கொம்பு
ரஹித – விடுத்த
குறிப்பாக தீர்க்க ரஹித ஸ்தோத்ரமாக — நெடிலெழுத்து அற்ற ஸ்தோத்ரமாக வடிக்கப்பட்டுள்ளது.
அப்படியே நடராஜப்பெருமான் நடனமாடும் லயத்திற்கேற்றபடி வடிக்கப்பட்ட ச்லோகமாக வாசிப்பதற்கு இனிமையாக இருக்கிறது.
எனது இக்கட்டுரையை மிகச்சிறப்பாக, இசைவடிவத்தையும் இணைத்துப் பதிவிட்ட ஆசிரியர் குழாத்துக்கு மிகுந்த நன்றிகள் உரியதாகட்டும்…
இந்த இடத்தில் கடலங்குடி நடராஜசாஸ்திரிகள் என்பவர் எழுதிய மணிப்பிரவாள சதகம் குறித்தும் பதிவிட விரும்புகின்றேன்…
தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் ஒரு முழுமையான செய்யுள் நூலாக இது காணப்படுகின்றது… 1926ல் இந்நூல் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கிறது… இதன் பெயர் வள்ளி பரிணய மணிப்ரவாள சதகம்…
இந்த நூலின் சில பகுதிகளையே படித்திருந்தேன்.. இன்று தான் இந்நூல் முழுமையாக எனக்குக் கிடைத்தது….
முதற் செய்யுளை பாருங்கள்…
நம்பிராஜ இதிக்யாத: சிற்றூரில் அவஸத்ஸ_கம்
முருகன் பாதயோர் பக்திம், தீவ்ரமாய்க்
கொண்டனன் ஸஹி
இந்த முதற் பதிப்பில் தமிழ்ச்சொல் எல்லாம் தமிழ் எழுத்திலும், சம்ஸ்கிருதச்சொல் எல்லாம் நாகரத்திலும் அமைந்திருக்கிறது… இன்று எனக்கு கிடைத்த பதிப்பில் இப்படியே அமைந்து பிறகு, முழுமையாக தமிழ் எழுத்திலும் தரப்பட்டிருந்தது…
இவ்வாறான நூல் பெருமரியாதைக்குரிய க்ருஷ்ணகுமார் அவர்கள் போன்றவர்களின் எழுத்துக்களுக்கு வலுச் சேர்ப்பது போல, மிக வித்யாசமாக அமைந்திருக்கிறது….
நூலை முழுமையாகப் படித்து விட்டு, மேலும் எழுதுவேன்…
பழைய பதிப்பு மதறாஸ் திருவல்லிக்கேணி ஆர்யமத ஸம்வர்த்தனி பிரஸ்ஸில் 1926ல் நாலணா விலையில் அச்சிடப்பட்டதாக தெரிகிறது..
இன்று கிடைத்த புதிய பதிப்பு கடலங்குடி பப்ளிகேஷன்ஸால் 2007ல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது…
பதிவிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகளும்… வணக்கங்களும் உரியதாகட்டும்…
//ஸ்ரீ லங்காவில் சம்ஸ்க்ருதக்கல்வியில் ஆர்வமுடைய அன்பர்கள் இருக்கிறார்கள் என்றறிய மகிழ்வாக இருக்கிறது//
நமஸ்காரத்திற்குரிய க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு,
இலங்கையிலும் வடமொழிப்பண்டிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்… இன்றைய சூழலில் வடமொழி அறிஞர்களின் தொகை குறைந்து விட்டது… ஆனால், 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் வடமொழி அறிந்தவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள்…
நான் வாழும் நீர்வேலியில் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச பண்டிதர் எனும் இருவரும் வடமொழியை நன்கு கற்று பல நூல்களைச் செய்தவர்கள்…
இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இருவருடைய நூல்கள் கூட இன்று கிடைப்பது கடினமாகி விட்டது.. சங்கரபண்டிதர் சம்ஸ்கிருத வியாக்கியாணம் பேசும் ‘சத்தசங்கிரஹம்’ என்ற நூலையும், அவர் மகன் சிவப்பிரகாசபண்டிதர் சம்ஸ்கிருதபால சிட்சை’ என்ற நூலையும் எழுதியுள்ளார்… இவர்கள் இருவரும் அந்தணர்களல்ல என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது…
அச்சுவேலி என்ற ஊரில் வாழ்ந்த குமாரசுவாமிக்குருக்களின் ‘சிவலிங்கப்பிரதிஷ்டாவிதி, சிவாகமசேகரம்’ என்ற இரண்டு சிவாகமநூல்களும் சிவாச்சார்யர்களின் கிரியைகளுக்கு முன்னோடியாக இன்று வரை தமிழகத்திலும், இலங்கையிலும் பயன்படுகின்றன… இவர் சம்ஸ்கிருதம் கற்றதே நான் முன் கூறிய சிவப்பிரகாசபண்டிதரிடமே என்பது இன்னொரு செய்தி….
இதை விட இங்கே வந்திருந்து சம்ஸ்கிருதக்கல்வியை வளர்த்தவர்கள் பலர்… சிதம்பரசாஸ்திரிகள், ஸ்ரீநிவாஸசாஸ்திரிகள், சீதாராமசாஸ்திரிகள், நாராயண சாஸ்திரிகள், சுப்பிரம்மண்ய சாஸ்திரிகள், என நீளும்… இவர்களில் யாரும் இன்றில்லை… இவர்களிடம் கற்றவர்களை இன்று காண்பதே அரிது…
என்றாலும் இன்று வரை இலங்கையில் சம்ஸ்கிருத ஆர்வம் ஆங்காங்கே இருந்து வருவது சிறப்பாகச் சொல்லத்தக்கதே ஆகும்…
ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்ம மஹாசயர் அவர்களுக்கு,
\\\ தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் ஒரு முழுமையான செய்யுள் நூலாக இது காணப்படுகின்றது… 1926ல் இந்நூல் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கிறது… இதன் பெயர் வள்ளி பரிணய மணிப்ரவாள சதகம்…\\\ இந்த முதற் பதிப்பில் தமிழ்ச்சொல் எல்லாம் தமிழ் எழுத்திலும், சம்ஸ்கிருதச்சொல் எல்லாம் நாகரத்திலும் அமைந்திருக்கிறது… இன்று எனக்கு கிடைத்த பதிப்பில் இப்படியே அமைந்து பிறகு, முழுமையாக தமிழ் எழுத்திலும் தரப்பட்டிருந்தது…\\ வநூலை முழுமையாகப் படித்து விட்டு, மேலும் எழுதுவேன்… \\\
அவச்யம் செய்யப்பட வேண்டிய கார்யம்.
திருப்புகழிலிருந்தே முருகப்பெருமானுக்கு அஷ்டோத்திரத்தை தொகுத்திருக்கிறார்கள் எமது ஆசான்கள்.
தமிழ்த்ரயவிநோதப்பெருமான், முத்தமிழ்விரகன், நாற்கவிராஜன், அவுணர்குலம் பொடியாக்கிய பெருமாள்……………… என்று நீளும் பட்டியலில் அடியார் மனத்தை வெகுவாகக் கொள்ளை கொள்ளும் ஒரு நாமம் ***வள்ளிக்கு வாய்த்த பெருமான்****……………
குறவள்ளிப்பிராட்டியை கடிமணம் புரிய என்னனென்ன லீலைகளையெல்லாம் செய்ய வேண்டியிருந்தது முருகப்பெருமானுக்கு. அப்படி பெருமானின் உளத்தைக் கொள்ளை கொண்டவளல்லவோ வள்ளிப்பிராட்டி.
எந்த தமையனிடம் மாம்பழத்திற்காக தோல்வியுற்றதான லீலா விடம்பனத்தைச் செய்தானோ பெருமான், அதே தமையனை…………….வள்ளிப்பிராட்டியை கடிமணம் புரிவதற்காக வேண்டி……
******வேளை தனக்கு உசிதமாக வேழமழைத்த பெருமாளே*********** என்று அதி சமத்காரமாக வள்ளல் அருணகிரிப்பெருமான் பாடுகிறாரே.
ஒரு காலத்தில் தமிழகத்தில் நாடக சபைகளில் ஸ்ரீ எஸ்.ஜி. கிட்டப்பா பின்னர் அவர் குரலையொட்டிப்பாடிய ஸ்ரீ டி.ஆர்.மஹாலிங்கம் போன்றோரின் நாடகங்களில் கொடிகட்டிப்பறந்த நாடகம் ஸ்ரீ வள்ளி. நவரஸமும் ததும்பும் காவ்யம் வள்ளி பரிணயம். தமிழகத்து மக்கள் மிகவும் விரும்பும் காவ்யம். இன்றைக்கு அரிதாகிப்போய் விட்டது. இனிய எளிய பொலிவான தமிழில் ஸ்வாபாவிகமாக எழுதும் தங்களது முயற்சியால் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இந்த உயர்ந்த காவ்யத்தை மீள் வாசிப்பு செய்யும் பாக்யம் கிட்டட்டும்.
தமிழகத்தில் திருப்புகழ் அன்பர்கள் வள்ளி கல்யாணத்தை சம்ப்ரதாய பூர்வமாக கொண்டாடுகிறார்கள். யதோக்தமாக. த்யானாவாஹனாதி பூஜாக்ரமங்களையெல்லாம் திருப்புகழ் வாயிலாகவே செய்யும் திருப்புகழ் அன்பர்கள் வள்ளி கல்யாண க்ரமத்தையும் திருப்புகழ் வழியாகவே தொகுத்துள்ளனர் என்று அறிந்துள்ளேன். பரதேசியாக இருக்கும் எனக்கு இந்த வைபவத்தில் கைங்கர்யம் செய்யும் பாக்யம் கிட்டியதில்லை.
அந்தக்குறையை தங்களது வ்யாசம் பூர்த்தி செய்யட்டும்.
மங்களானி பவந்து.
இந்த வ்யாசம் தமிழகத்தில் சம்ஸ்க்ருத வாரம் கொண்டாடப்பட்ட உசிதமான சமயத்தில் பகிரப்பட்ட வ்யாசம்.
\\\\ இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இருவருடைய நூல்கள் கூட இன்று கிடைப்பது கடினமாகி விட்டது.. சங்கரபண்டிதர் சம்ஸ்கிருத வியாக்கியாணம் பேசும் ‘சத்தசங்கிரஹம்’ என்ற நூலையும், அவர் மகன் சிவப்பிரகாசபண்டிதர் சம்ஸ்கிருதபால சிட்சை’ என்ற நூலையும் எழுதியுள்ளார்… இவர்கள் இருவரும் அந்தணர்களல்ல என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது… \\\
காசிவாசி ஸ்ரீ செந்திநாதைய்யர் சரித்ரம் வாசிக்குங்கால் அவர் தனது வித்யாகுருவான ஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களைப் பற்றிப் பகிர்ந்த படிக்கு அவரும் சம்ஸ்க்ருத வித்வான் என்று வாசித்ததாக நினைவு இருக்கிறது.
தமிழகத்திலும் முறையாக சம்ஸ்க்ருதம் கற்று பாரங்கதம் பெற்ற அன்பரகளில் பலர் அந்தணர்கள் அல்லர் என அறிவேன்.
பண்டிதமணி ஸ்ரீ கதிரேசன் செட்டியார் மஹாசயர், பூர்வ ந்யாயாதிபதி அமரர் ஸ்ரீ அ.வெ.ரா. க்ருஷ்ணஸ்வாமி ரெட்டியார் மஹாசயர் போன்றோர் உடன் நினைவுக்கு வரும் பெரியோர்கள். அதிலும் பூர்வ ந்யாயாதிபதி அவர்கள் சௌந்தர்யலஹரி ஸ்தோத்ரத்தை தமிழாக்கம் செய்து….. அது திருச்சி அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி ப்ராகாரத்தில் மூலத்துடன் தமிழாக்கமும் பதியப்பட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. ஆராய்ச்சியாளர் ஸ்ரீ வையாபுரிபிள்ளை மஹாசயரும் நினைவுக்கு வருகிறார். ஸ்தாபத்யத்தில் நிபுணத்வம் உள்ள பெரியோர்கள் அனைவரும் சம்ஸ்க்ருத பாண்டித்யம் உள்ளவர்கள். தஞ்சை நால்வர் என்ற பெயருடைய சஹோதரர்களான பெரியோர்கள் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரிடம் முறையாக சிக்ஷை பெற்றவர்கள். சம்ஸ்க்ருத பாஷா பாரங்கதம் உள்ள பெரியோர்கள் என அறிவேன்.
நாதஸ்வர வித்வான் ஸ்ரீ ஷேக் சின்னமௌலானா சாஹேப் அவர்களுடைய பௌத்ரரான / தௌஹித்ரரான ஸ்ரீ காசிம் சாஹேப் போன்ற அன்பர்களும் யதோக்தமாக சம்ஸ்க்ருதம் கற்றவர்கள் என்று பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிய மகிழ்வாக இருந்தது. க்ருதிகளை முறையாக மனதில் வாங்கி பாவத்தை வடிக்க மொழியறிவு அவச்யம் என்ற படிக்கு பாஷா ஞானத்தைப் பெறுவதற்கு அவ்வாறு அறிவுறுத்தப்பட்டதை அவர் பகிர்ந்தார்.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் என்பது ஆன்றோர் வாக்கு.
மற்ற பாஷைகளையும் முறையாகக் கற்று அவற்றில் உள்ள அரிதான கருத்துக்களை தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பகிரும் அனைத்து அன்பர்களுடைய செயற்பாடுகளும் போற்றத்தக்கதே.
சம்ஸ்க்ருதம் என்பது பார்ப்பனர் பாஷை உர்தூ என்பது முஸல்மாணியர் பாஷை போன்ற ப்ரசாரங்களெல்லாம் பாஷா த்வேஷிகளின் துஷ்ப்ரசாரங்களே. ஒவ்வொரு மொழியும் மொழிநடையும் அதனதன் வடிவில் மிகுந்த அழகைக் கொண்டவை. அனைத்து மானுட சமுதாயத்திற்கும் இறைவன் அளித்த கொடை என்பது மட்டிலுமே தத்யம். மற்ற ப்ரசாராதிகள் அனைத்தும் அசாரமாகக்கருதிப் புறந்தள்ளப்படவேண்டியவையே.
\\\\ நான் வாழும் நீர்வேலியில் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச பண்டிதர் எனும் இருவரும் வடமொழியை நன்கு கற்று பல நூல்களைச் செய்தவர்கள்… \\\\
நீர்வேலி, நல்லூர் என்ற பெயரைக்கேழ்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வருவது அங்கு வாழ்ந்த திக்கஜங்களான……… உபயவேதந்திகளான…………. பெரியோர்களே.
கூடவே நெடிதுயர்ந்த கோபுரங்களுடன் மனதைக்கொள்ளை கொள்ளும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் ஆலயம். அகலகில்லேன் என நெஞ்சில் நிறையும் முருகப்பெருமானின் ரதோத்ஸவம். அன்பர் ஸ்ரீ வியாசன் அவர்களது தளத்தில் போன முறை கண்ணிமைக்காது பார்க்கும்படிக்கு உத்ஸவக்காட்சிகளை காணொளிகளாகப் பகிர்ந்திருந்தார்.
இந்த வர்ஷத்து ப்ரம்மோத்ஸவம் நிறைவு பெற்று விட்டதா தெரியவில்லை? அதன் மத்தியில் தாங்கள் பரிச்ரமம் எடுத்து இந்த வ்யாசத்தை சமர்ப்பித்திருக்க வேண்டும் என அறிகிறேன். இந்த முறை காணொளிக்காட்சிகளை இணையதளத்தில் பார்க்கும் பேறு கிட்டவில்லை.
வேலும் மயிலும் சேவலும் துணை.
இரண்டு கவிதைகளும் அருமை ..செழுமை ..
///////யமக வகைகளில் நிரோட்டயமகம் என்பதும் முதன்மையான ஒன்று. செய்யுளை வாசிக்கும் ஒருவரது வாய் உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டாத (தீண்டாத) வண்ணம் ப,ம போன்ற தீண்ட வைக்கும் சொற்கள் அமையாத செய்யுள் நிரோட்டச் செய்யுளாகும். (நிர்- ஓஷ்டம் -நிரோஷ்டம்- ஓஷ்டம்- உதடு)///////
முதலில் இலக்கியத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணக்கிடைப்பதை, தனியாக அடையாளங்கண்டு, பிறகு இப்படி ஒரு விதியை வகுத்துக்கொண்டு, அவ்விதிப்படி இலக்கியம் புனைவதுதான் இயற்கையான போக்கு. அந்தவகையில் பார்த்தால், தமிழிலேயே இத்தகைய செய்யுள்கள் புனையப்பட்டுள்ளன. திருக்குறளிலேயே ஓரிரு குறள்கள் அப்படி அமைந்துள்ளன:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
மேலும், கந்தர் அந்தாதியில் வரும்
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.
என்னும், தகர வரிசை உயிர்மெய்களை மட்டும் பயன்படுத்தி எழுதப்பட்ட ஓரெழுத்துப்பாவும் கூட இந்த வகையிலும் அடங்கும்:
அருணகிரிநாதர் இப்படி நிறைய எழுத்தாடல், சொல்லாடல், செய்யுளாடல்களைச் செய்துள்ளார். அவர் இயற்றியுள்ள தமிழ்க்கடலில் மூழ்கினால் நீங்கள் தேடும் முத்துக்களும் கிடைக்கலாம்.
கவிதைகள் மிக்க அழகு வாய்ந்தவை. நீண்ட நாட்களாக சம்பு நடன ஸ்லோகத்தைக் கேட்டு வந்துள்ளேன்; திரு ஓ.எஸ். அருண் பாடி சம்போ மகாதேவ தேவா என்ற ஒரு குறுந்தகடு வெளியாகியுள்ளது.ஆயினும் இன்று தான் இதன் உட்பொருளையும், இவ்வளவு சாமர்த்தியமாகக் கவித்துவம் ததும்ப எழுதியது எனவும் அறிந்து மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். இதனை அழகுற விளக்கியதற்கு மிக்க நன்றி. பணிவான வணக்கங்கள்.
திரு.க்ருஷ்ணகுமார்,
/// நவ க்ருஹஸ்தரான ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயரிடமிருந்து ஒரு அருமையான வ்யாசம்.///
உங்களின் சமக்கிருதத் தமிழைப் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பமாக இருக்கிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும்.
நவம் என்றால் தமிழில் ஒன்பது
கிரகம் என்றால் தமிழில் கோள்கள்
கிருகம் என்றால் தமிழில் வீடு, (e.g.: கிருகப்பிரவேசம்)
இங்கே நீங்கள் நவ க்ருஹஸ்தரான ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா என்கிறீர்கள்.
இங்கே நீங்கள் அவரை யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒன்பது வீடுகளுக்குச் சொந்தக்காரர் என்கிறீர்களா அல்லது ஒன்பது பெண்டாட்டிக்காரர் என்கிறீர்களா? ஒன்றும் புரியவில்லை, தயவு செய்து விளக்கவும். 🙂
முத்தான சொற்களைப் பகிர்ந்த ஸ்ரீ முத்து அவர்களுக்கு பணிவார்ந்த வணக்கங்கள்.
\\\ அருணகிரிநாதர் இப்படி நிறைய எழுத்தாடல், சொல்லாடல், செய்யுளாடல்களைச் செய்துள்ளார். அவர் இயற்றியுள்ள தமிழ்க்கடலில் மூழ்கினால் நீங்கள் தேடும் முத்துக்களும் கிடைக்கலாம். \\\
எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானைப் பற்றிய தூஷணத்தை வாசிக்கும் தீயூழுடையே சிறியேனுடைய தாபத்தை ……….தணிப்பிக்கும் படிக்கான வாசகங்கள் மனதில் பதிய வேணும்……… என்பதற்காக…….. வள்ளல் பெருமானின் திருவுளம் போலும்…….. மேற்கண்ட வாசகங்களை வாசிக்கும் பேற்றினை சிறியேனுக்கு அனுக்ரஹத்தமை.
பின்னிட்டும் வாசகத்தில் ஹ்ருதய பூர்வமாக ஒரு அரும் சொல்லை இணைத்து விடுகிறேன்.
அருணகிரிநாதர் இப்படி நிறைய எழுத்தாடல், சொல்லாடல், செய்யுளாடல்களைச் செய்துள்ளார். அவர் இயற்றியுள்ள தமிழ் அமுதக் கடலில் மூழ்கினால் நீங்கள் தேடும் முத்துக்களும் கிடைக்கலாம்.
அந்த அமுதக்கடலில் மூழ்கும் வாய்ப்பு வள்ளல் அருணகிரிப்பெருமானுடைய மற்றும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுடைய அசீம க்ருபையைப் பெற்ற அன்பர்களுக்கு மட்டிலும் உரித்தானது என்பது பகிரப்பட வேண்டிய விஷயம்.
வாக்கிற்கும் கருணைக்கும் வள்ளல் அருணகிரிப்பெருமானை தமிழ் கூறும் நல்லுலகம் விதந்தோதுகிறது என்பதும் பகிரப்பட வேண்டிய விஷயம்.
வாக்கிற் கருணகிரி வாதவூரார் கனிவில்
தாக்கில் திருஞான சம்பந்தர் – நோக்கிற்கு
நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்
சொற்குறுதிக்(கு) அப்பரெனச் சொல்.
காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி
ஆசுக்குக் காளமுகி லாவனே – தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன் உவக்கப் புகழேந்தி
கூழுக்கிங் கௌவையெனக் கூறு.
வேலும் மயிலும் சேவலும் துணை.
பேரன்பிற்குரிய ஸ்ரீ வியாசன் அவர்களுக்கு
நவ – புதிய
க்ருஹஸ்தர் – இல்லறத்தார்
நவ க்ருஹஸ்தர் – சமீபத்தில் விவாஹமானவர்
நிற்க.
இந்த வ்யாசத்தின் கருப்பொருள் தீர்க்க ரஹித (நெடிலெழுத்தற்ற) ஸ்தோத்ரம் (பனுவல்)
ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா அவர்கள் இந்த வ்யாசத்தின் மூலம் நெடிலற்ற ஒரு சம்ஸ்க்ருத ஸ்தோத்ரம் ஆடல்வல்லானைப் பற்றிப் பாடுவதை பகிர்ந்துள்ளார். கூடவே இந்த சந்தத்தில் மனமொன்றிய ஒரு ஈழத்து பண்டிதர் சம்ஸ்க்ருத ஸ்தோத்ரத்தின் பொருளையும் அதன் சந்தத்தின் அழகையும் உள்வாங்கி சந்தமும் கருத்தாழமும் மிக்க தமிழ்ப்பனுவல் (மணிப்ரவாளப் பனுவல்) சமைத்ததையும் பகிர்ந்துள்ளார்.
எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் சதா மனதிலுறைவதால்………. சந்தம் கமழும் ஒரு பனுவலை நினைக்கும்போதெல்லாம் ………. எங்கள் வள்ளல் பெருமானும்…….. அவர் பாடித்துதிக்கும் எங்கள் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுமே நினைவில் நிற்பர்.
இதை வாசித்த பின்னர் மனமெலாம் சந்தம் கமழும் திருப்புகழே நிறைந்திருந்தது என்றால் மிகையாகாது. ஸ்ரீமான் முத்து அவர்கள் அந்தாதியிலிருந்து பகிர்ந்த ஓரெழுத்துப் பனுவலை ஆராயுங்கால் ஓரெழுத்தால் யாக்கப்பட்ட பனுவலாக இருப்பினும் அதிலும் நெடில் காணப்படுகிறதே என்று யோசித்தேன்.
மனமெல்லாம் வள்ளல் அருணகிரிப் பெருமான் தீர்க்கரஹிதமாகத் திருப்புகழ்ப் பனுவல் ஏதும் அருளிச்செய்திருக்கிறாரா என்றே சிந்தனை.
அவனருளாலே அவன் தாள் நினைந்திருப்பவரை எம்பெருமான் உபேக்ஷிப்பதில்லையே!!!!!!!!!
மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட
அகத்திய முநிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவன்………. ஆகிய எங்கள்
முருகப்பெருமானையும் திருப்புகழின் பெருமையையும் ஒருசேர
வினைப்பகை அறுப்பவன் நினைத்தது முடிப்பவன்
மனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் க்ருபைக்கடல்
வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே
என்று சித்து வகுப்பில் பகிர்கிறாரே…………
என்று அவன் தாளை நினைந்து திருப்புகழமுதத்தில் அமிழ்ந்திருக்கையில்…………
முருகன் திருப்புகழைப் படிப்பவர்க்கு அவன் திருக்கையால் வழங்கப்படுவதாகிய ப்ரசாத மகிமையைக்கூறும் ………..
திருக்கையில் வழக்க வகுப்பு நினைவுக்கு வர,,,,,,,,,,,,,,,,,
அதன் ஈற்றடிகளை அவன் தாள் நினைந்து பகிர்கிறேன்…………..
திருத்திய புனத்திடை வனத்தழை உடுத்தினி
திருப்பவள் விருப்புறு வரைப்புயன் வினைப்பகை
செகுப்பவன் நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல்
சிவத்த கமலச் சரவணத் தறுமுகப்பொருள்
செகத்ரய முகிழ்த்த உதரத் திரிபுரைக்கொரு
திருப்புதல்வன் உற்பல கிரிப்பெயர் தரித்தருள்
திருத்தணி மலைக்கிறை திருப்புகழ் படிப்பவர்
சிறப்பொடு பெறத்தரு திருக்கையில் வழக்கமே.
இந்த திருவகுப்பு முழுதும் தீர்க்கரஹிதமானது. நெடிலெழுத்து அறவே காணப்படாத திருவகுப்பு.
உள்ளபடி அறுமுகப்பெருமான் அருளும் ஒப்புயர்வற்ற ப்ரசாதம் சிவஞானமே.
பின்னிட்டும் ஒப்பாரும் மிக்காரும் அற்றவர் எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் என்ற எமது சௌபகமதமும் பொய்க்காதருளினான் எங்கள் பழனியாண்டவன் என்றாலும் மிகையாகாது.
இந்தத் திரியில் சிவனடியாரான தாங்கள் பங்கு பெற்றதன் பலனை சிறியேனாகிய அடியேனும் வாசகர்களும் பெறவேண்டுமானால் தாங்கள் திருமுறைகளிலிருந்து தீர்க்கரஹிதமானப் பனுவல்களைப் பகிர்வதே ஆகும்.
அல்லது தமிழறிஞரான தாங்கள் …… நல்லூர்வாழ் எம்பெருமான் முருகனையோ கதிர்காமத்துறை கதிர்வேலனையோ த்ரிகோணமலையுறை ஈசனையோ…… தாங்களே புனைந்த சந்தப்பாவாலோ அல்லது முறையாக தளை தட்டாது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா போன்ற பாக்களினால்……. தாங்கள் புனைந்த பாமாலைகள் சூட்டுதலே முறையானதாகும்.
கற்றதனாலாய பயனென் கொல்வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே
தருப்புகழ் வல்ல சுரர்மகள் நாயகன், சங்கரற்குக்
குருப்புகழ் வல்ல குமரேசன், ஷண்முகன் குன்றெறெறிந்தோன்
மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல்சொன்ன
திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளி என் சென்னியதே
வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா
ஞான தண்டாயுத பாணிக்கு ஹரஹரோஹரா
வேலும் மயிலும் சேவலும் துணை
Kamala & Vedanarayanan Pune. The dilogue on this suject is really a Vidwat Sadas as we enjoyed.
At the end of revery Pradosha Pooja / Shiv Pooja, we remember to have heard this Patanjali stotram recited by the Ved Pandits on the Pooja stage , with the Sankaracharyas also joining the recital.
It is a traditon.. I am sharing this diologue with my friends circle ..like minded…who would also enjoy
yaan petra inbam peruga iv Vaiyyagam.