கருணைக் கணபதி

பிள்ளையார்

பிரணவ மந்திரத்தின் பொருளே கணபதி
பக்தி செய்வோரைப் பரிபாலிப்பான்
கருணையின் நாயகன் கவலையைத் தீர்ப்பான்
கற்பகத் தருவாய்க் கனகம் பொழிவான்.

தனக்கே ஒருவன் தலைவனில்லாதான்
தரணியில் மூலாதாரத் திருந்து
அனைத்து(உ)யிர்களையும் அருளிக் காப்பான்
அத்வைத சாரம் அவனிடம் விளங்கும்.

பரமனின் பிள்ளை பாருக்கும் பிள்ளை
படைக்கும் படையலில் பெருக்கும் பிள்ளை
பெருமான் முகமே யானை முகம்தான்
பார்க்கப் பார்க்கச் சலிக்கா முகம்தான்.

பஞ்ச பூதமும் பாரும் அனைத்தும்
பிள்ளையாரிடம் அடைக்கல மாகும்
அஞ்சா நெஞ்சும் அறிவும் ஆற்றலும்
அவனை வணங்கிப் பெறலாம் நாமும்.

தத்துவம் மேவிய அவனது வடிவம்
தலையால் அவனே பிரணவ ஸ்வரூபி
ஐந்தொழில் செய்யும் ஐங்கரங்களுமே
இருசெவி ஆன்மா தனைக்காத் தருளும்.

சோம சூரிய அக்கினி எனுமிவை
முக்கண் களினால் முழுமையில் விளங்கும்
பிரம்ம வடிவமே நாபியில் பொலியும்
பெருமுகம் தானே திருமால் வடிவம்.

அருமை முக்கண் அப்பன் சிவமயம்
அங்கே இடப்புறம் அம்மை வடிவம்
சூரிய வடிவம் வலப்புற மிருக்க
அவனை வணங்குவோர்க் கின்னல் ஏது?

இச்சா சக்தி சித்தியே யாவாள்
கிரியா சக்தி புத்தியே யாவாள்
தத்துவ ஞானச் சக்தி யாகவே
தவக் குமாரன் செயல்படு கின்றான்.

யுகத்தின் முடிவில் சக்திக ளடக்கி
யாவரின் மாணியாய்த் திகழ்வான் கணபதி
மகாபாரதத்தைச் சுழி போட் டெழுதி
மகத்துவம் ஒன்றை உணர்த்திய பிள்ளை.

எல்லாத் தெய்வமும் ஏற்றும் கடவுள்
எங்கள் பிள்ளை எழில் கணபதியே
பொல்லாத் தடைகளைப் போக்கி நமக்குப்
புனிதப் பேரும் படைத்தருள் செய்வான்.

அருகம் புல்லும் எருக்கும் வன்னியும்
அன்பாய்ச் சூட அகமகிழ்ந் திடுவான்
கருத்தாய்த் தலையில் குட்டிக் கொண்டு
தோப்புக் காரணம் போட்டால் நெகிழ்வான்.

தந்தை தாய்க்கும் தம்பிக்கு மவனே
தகவுற காரியம் தானே முடிப்பான்
சிந்தையில் அவனைச் சிறை செய்திடுவோம்
சங்கடம் நீங்கிச் சுகமே பெறுவோம்.

வல்லப கணபதி வல்லமை தருவான்
வறுமை யொழிப்பான் நர்த்தன கணபதி
பொல்லாத் துயரம் நீக்கி அருள்வான்
பலபெயர் கொண்ட பார்புகழ் கணபதி.

5 Replies to “கருணைக் கணபதி”

  1. Great poem, Please keep up your good work, sorry, I am unable to write in Tamil

  2. கீதா அவர்களே:

    நல்ல கவிதை, கருணையின் மறுவடிவமல்லவா கணபதி ! விநாயகர் அகவல் போற்றும் விநாயகன் எப்போதும் உங்களுடைய நினைவில் நிற்க வாழ்த்துக்கள்.

    கீதாவின் பிள்ளையார் கீதம் மனதிற்கு
    தோதா யினித்திடும் பா.

    அம்மாவின் பிள்ளை துணைவரு மண்ணன்
    நமக்குள்ளே யென்று மவனே.

    நன்றி
    பி.கு: “யாவரின் மாணியாய்த் திகழ்வான்” என்பதற்கு அர்த்தம் புரியவில்லை…

  3. எளிமையான நடையில் அழகான கவிதை. உருகவைக்கிறது.. பாட்டைப் பார்க்கும் போது ராகம் போட்டு பாடலாம் போல இருக்கிறது. ஆனால், தெரியவில்லை.
    கணபதியின் பிறப்பு தத்துவங்களை பாடலில் பொதிந்தது நன்றாக இருக்கிறது.

    நன்றி

    ஜயராமன்

  4. ராமா (ரமா?), மனோ, ஜயராமன் ஆகியோரின் பாராட்டுதலுக்கு நன்றி.

    மனோ அவர்களே!
    “மாணி” என்றால் பிரம்மச்சாரி என்று அர்த்தம். சாதாரண பிரம்மச்சாரி அல்ல. புலன் அடக்கி, சகல சக்திகளும் உடைய, அறிவொளி ஸ்வரூபமான பிரம்மச்சாரி. பிள்ளையாருக்கு செய்யும் அஷ்டோத்திர நாமாவளி அர்ச்சனையில் கூட “பிரம்மச்சாரிணே நமஹ” என்று வருகிறது.

    மாணி என்றாலே சிறப்பு என்று கூட சொல்லலாம். பிரம்மச்சரியத்திற்கும் என்றுமே ஒரு சிறப்பு உண்டு. உதாரணத்திற்கு, ஆஞ்சநேயர், ஐயப்பன்,…..

    அனைவரின் துன்பங்களையும் தீர்த்து அருள் பாலிப்பவனாதலால் “யாவரின் மாணி” என்று எழுதினேன்.

    பாராட்டிய அனைவர்க்கும் மீண்டும் நன்றி.

    அன்புடன்
    ப.இரா.கீதா.

  5. சிந்தையில் சிறை செய்வோம் எனக் கூறி காக்கும் கடவுளின் புகழை மிக எளிமையாக அனைவரும் படித்து-பாடி சுவைக்கும் வண்ணம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் பணியை. வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *