வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இந்தக் கட்டுரை தான்.
இதன் முதல் பகுதி தமிழ்ஹிந்துவில் சென்ற வாரம் வெளிவந்தது. அடுத்தடுத்த பகுதிகளை ஏற்கனவே அவர் அனுப்பி வைத்திருந்தார்.
அவை வெளியாவதற்கு முன்பே 21-அக்டோபர் அன்று வெ.சா மறைந்து விட்டார்.
இன்னும் ஆறாத கண்ணீருடன் அவரது நினைவைப் போற்றி இப்பகுதியை வெளியிடுகிறோம்.
– ஆசிரியர் குழு
தொடர்ச்சி..
ஒரு பேட்டி – வெங்கட் சாமிநாதனுடன் – ஜெயபிரகாஷ்
(2)
நானும் ஆரம்ப வருஷங்களில் தேசீய நாடக பள்ளியின் நாடகங்களைப் பார்க்கச் செல்லும் போது வேறு யாரும் தமிழர்களை நான் பார்த்ததில்லை. எழுபதுகளில் வந்து சேர்ந்த இரண்டாவது தமிழர் டாகடர் செ. ரவீந்திரன். பேசிக்கொண்டிருந்த போது ராமானுஜம் சொன்னதுண்டு. நான் ஃபிரோஷ் ஷா கோட்டையின் நடந்த அந்தா யுக் நாடகத்தின் தானும் தன்னோடு படிக்கும் குமார ராஜா என்னும் மலையாள நண்பரும் இருந்ததாகச் சொன்னார். அந்நாட்களில் இரண்டு பேருக்குமே ஹிந்தி தெரியாது. இருந்தாலும் பள்ளியில் சேர்ந்து நாடகம் கற்று, ராமானுஜம் கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் நாடக வளர்ச்சியில் தன் முத்திரை பதிக்க விருக்கிறார். குமார ராஜாவும் பின்னர் சந்திகரில் நாடகாசிரியராக செயல்பட விருக்கிறார். ராஜேந்திரன் நாடகப் பள்ளியில் ஆசிரியராக சேரவிருக்கிறார். இப்படி நான் இன்னும் ஒன்றிரண்டு பேரைத் தான் நினைவுக்குக் கொண்டு வரமுடிகிறது.
அறுபதுகளின் பின் வருடங்களில், அனேகமாக 1966-67 என்று நினைக்கிறேன். க.நா.சுப்ரமணியம் தில்லி வந்து தங்கலானார். அவருடன் பழக்கமும் நட்பும் ஏற்பட்டதும், அவரும் என்னோடு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவுக்கு வருவார். அவருக்கும் ராமானுஜத்தை அறிமுகப்படுத்தினேன். ராமானுஜமும் குமார வர்மாவும் என்று நினைவு, தேசீய நாடகப் பள்ளிக்கு அரை மைல் தூரத்தில் கர்ஸான் ரோடிலிருந்து பிரியும் ஒர் சின்ன சந்து. அதுக்கு பெயர் வேடிக்கையாக, எலெக்ட்ரிக் லேன். அதில் ஒரு தென்னிந்திய ஹோட்டல் உண்டு. அங்கு சௌகரியத்துக்கு ஏற்ப பக்கத்தில் எங்காவது ஒரு நிகழ்ச்சிக்கு போகவிருந்தால் மாக்ஸ்ம்யூல்லர் பவன் அப்படி ஒரு இடம் அருகில். அந்த எலெக்ட்ரிக் லேன் ஹோட்டலுக்குப் போய் ஏதும் சிற்றுண்டி காபி சாப்பிடப் போவது வழக்கம். ராமானுஜத்துக்கு நாடகப் பள்ளியில் படிப்பு முடியவிருந்த தருணம். அப்போது ஒரு நாள் மாலை ராமானுஜம் க.நா.சு; பின் நான் மூவரும் அந்த ஹோட்டலில் சிற்றுண்டியின் போது இடையே பேச்சில், ராமானுஜம் க,நா.சுவிடம் கேட்டார். “எனக்கு படிப்பு முடிய விருக்கிறது. தமிழ் நாட்டின் ஒரு புகழும் வெற்றியும் பெற்ற நாடக ஸ்தாபனத்திலிருந்து (ராமானுஜம் பெயரைச் சொன்னார் தான்) எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவர்களைச் சேரும்படி. அது இல்லையென்றாலும், நான் முன்னர் இருந்த காந்தி கிராமத்துக்கும் போகலாம். அங்கு குழந்தைகள் நாடகம் நடத்தலாம். என்று சொல்லிக்கொண்டே, க.நா. சு விடம் யோசனை கேட்டார். க.நா.சு. வுக்கு அல்காஷியை நன்கு தெரியும். அவரைப் பற்றி ஒரு பெரிய கட்டுரையே (feature) பரோடாவிலிருந்து வரும் ENLITE என்ற வாரப் பத்திரிகைக்கு எழுதியிருக்கிறார். க.நா.சு. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் ஆழ்ந்த யோசனைக்குப் பின்னர், அவர் சொன்னதை நான் இப்போது சொல்லமுடியாது. முன்னர் ராமானுஜத்தைப் பற்றி எழுதும் போதும் சொல்ல வில்லை. இப்போதும் சொல்லப் போவதில்லை. வேறு வார்த்தைகளில், “உங்களைக் கேவலப்படுத்திக் கொள்ளத் தயாரென்றால், நீங்கள் அங்கு சேரலாம்” என்றார். வில்லியம் ஃபாக்னர் சொன்னதாக ஒன்று சொல்வதுண்டு: “ ஒரு எழுத்தாளன் தன் நேர்மையையும் சுயகௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அவன் ஒரு இரவு விடுதியில் பியானோ வாசிக்கவேண்டும், தன் பிழைப்புக்கு”, என்று. ராமானுஜம் வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளைச் சந்தித்து இருக்கலாம். ஆனால் அவர் என்றும் க.நா.சு. எச்சரித்தது மாதிரியான வழியைத் தேர்ந்தவர் இல்லை. ராமானுஜம் தான் செய்ய நினைத்ததையே செய்யும் வழியைத் தானே கண்டுகொண்டார் என்று தான் சொல்லவேண்டும். எந்த நாடகக் கம்பெனியிலும் சேர்ந்தவரில்லை. ஃபாக்னர் சொன்னது போலக்கூட வேறு தொழில் ஏதும் செய்தவரில்லை. தன்னால் இயன்றவரை தன் கருத்தில் உருவாகும் நாடகத்தையே பின் தொடர்ந்தார் என்று சொல்ல வேண்டும்.
நாடகப் பள்ளியை விட்டதும், அவர் சென்றது காந்தி கிராமத்துக்குத் தான். ஆசிரியராக இருந்து, தில்லியில் நாடகப் பயிற்சி பெற்று திரும்ப காந்திகிராமத்துக்கு ஆசிரியராக. அங்கு இருந்த போது நான் ஒரு முறை மதுரை சென்றிருந்த போது ராமானுஜத் தோடு சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது அவருடன் காந்தி கிராமம் சென்றேன். காந்தி கிராமத்தில் இருந்த போது அவர் ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகத்தை தான் பொறுப்பேற்ற நாடகப் பட்டறைக்கு பயிற்சிக்கு எடுத்துக்கொண்டார் என்றும் அது சுற்றியிருந்த கிராம மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்றும் சொன்னார்கள். அது தான் முத்துசாமியின் நாடகம் எதுவும் எங்கும் நடிக்கப்பட்ட முதல் நிகழ்வு. என்றும், பின்னர் அவர் நாடகங்கள் மேடையேற, நடிக்கப் பட, கூத்துப் பட்டறை வரவேண்டியிருந்தது என நான் நினைக்கிறேன். அந்த பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் என மு. ராமசாமி, ஜெயந்தன், பூமணி போன்றோர் இருந்தனர் என்றும் செய்தி வந்தது. ஒரு முறை தேசீய நாடகப் பள்ளி ஏற்பாடு செய்திருந்த பாரத் ரங்க மஹோத்ஸவ்க்கு, தில்லி சென்றபோது நாடகப் பள்ளியின் நுழைவாயிலிலேயே காந்தி கிராம நாடக;ப் பயிற்சி முகாமின் ஒரு காட்சி, புகைப்படம் பெரிதாககப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. ஏதோ பயிற்சி வெட்ட வெளியில். அதில் முதல் வரிசையிலேயே ஜெயந்தன் இன்னும் ஓரிருவரோடு நின்று கொண்டிருக்கிறார், அனேகமாக அது Life size- எனத் தோன்றும் பதிவு அது. சந்தோஷமாக இருந்தது. ஜெயந்தனுக்குச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் இவ்வுலகில் இல்லை.
பின்னர் இம்மாதிரி ஒரு பயிற்சிப் பட்டறை நாடகமாகத்தான் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதியின் பாஞ்சாலி சபதத்தைத் தழுவி ராமானுஜம் எழுதிய நாடகம் மேடையேறியது, தில்லிக்கும் அது வந்தது. அதன் பின் ராமானுஜம் திருச்சூரில் ஜி. சங்கரபிள்ளை நடத்தி வந்த நாடகப் பள்ளியில், இது கள்ளிக்கோட்டை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தது. ராமானுஜம் தக்கலையில் பிறந்து தமிழோடு மலையாளமும் நன்கு அறிந்தவராதலால், திருச்சூரில் இருந்த போது கேரள மலையாள நாடக சூழலில் தன்னையும் ஒரு முக்கிய சக்தியாக ஸ்தாபித்துக்கொண்டார். திருச்சூரில் இருந்த போது தான் சங்கர பிள்ளையின் கறுத்த தெய்வத்தைத் தேடி என்ற மலையாள நாடகத்தோடு தில்லியின் தேசிய நாடகப் பள்ளிக்கு வந்தார் அக்காலங்களில் தேசிய நாடகப் பள்ளியின் உள்ளே இருந்த ஒரு சின்ன ஹாலைத் தவிர ரவீந்திர பவனின் புல்வெளியில் ஒரு பெரிய மரத்தைச் சுற்றிய மேடையும் அதன் முன் பார்வையாளருக்கான ஒரு நூறு பேருக்கான இருக்கையும் தான். திறந்த வெளி தான். அதில் தான் உலகின் பெரிய நாடகத் தலைகள் இயக்கிய ப்ரெக்ட் என்ன, செகாவ் என்ன, நாடகங்களைப் பார்த்தோம். ரிச்சர்ட் ஷெக்னரும், பெர்லினர் ஆன்செம்பிளிலிருந்து அடிக்கடி வந்து ப்ரெக்ட் நாடகங்களை பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் Fritz Bennevitz,, ஜப்பானிலிருந்து ஒரு முறை ஷோஸோ சாடோ (Shozo Sato) வந்து ஒரு காபுகி/நோ நாடகப் பயிற்சி கொடுத்து, ஒரு காபுகி நாடகத்தை ஹிந்தியில் மேடையேற்றியது மட்டுமல்லாமல் ஜப்பானிய Tea Ceremony பற்றியும் சொல்லிக் கொடுத்தார். இது போல அப்பள்ளிக்கு வரவழைத்து நாடகப் பயிற்சி தந்த வெளிநாட்டுக் கலைஞர் எண்ணற்றவர். இப்போது என் நினைவில் இல்லை. அது மட்டுமல்ல. தொன்னூறுகளில் என்று நினைப்[பு. இருபதுகளிலிருந்து வட மாகாணங்களில் பிரசித்த மாகியிருந்த பார்ஸி நாடக உலகைச் சேர்ந்த ஃபிதா ஹுஸேன் என்னும் நடிகர் வந்து பார்ஸி நாடகப் பயிற்சி கொடுத்தார் அவருடைய சொற்பொழிவு ஒன்றை நான் கேட்டேன். வட இந்தியாவின் பல இடங்களில் சுமார் முப்பது நாற்பது வருடங்கள் நாடக வாழ்க்கை பற்றிச் சொல்லி, (அப்போது அவர் எழுபது சொச்சம் வயதினர். ஆறடிக்கும் மேலான உயரம் கொண்டவர்.) மகாபாரதத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் அர்ஜுனன் பேச்சு ஒன்றை சுமார் 20 25 நிமிடத்துக்கு தன் கம்பீரமான உச்ச குரலில் அங்கு பேசிக்காட்டினார். என்ன நினைவாற்றல். என்ன கம்பீரமான குரல்! என்று வியக்கத் தோன்றியது. அவர் நூறு வருடங்களுக்கும் மேலான பார்ஸி நாடக மரபைத் தொடர்ந்து வந்துள்ளார் அவ்வளவே. ஏதும் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கிவிட்டதாக யாரும் அவரைப் புகழவில்லை தன் முதிய வயதிலும். அவரது கம்பீர கர்ஜனைக்காக யாரும் “சிம்மக் குரலோன், ஏதாவது திலகம் என்றோ பட்டம் பெற்றுவிடவில்லை. வெறும் வெறும் ஃபிதா ஹுசேன் தான் அவர்.
இம்மாதிரி தான் .அந்த மரத்தடி நாடக அரங்கில் மலையாள நாடகாசிரியரும் ராமானுஜத்தின் திருச்சூர் குருவுமான ஷங்கர பிள்ளையின் கறுத்த தெய்வத்தைத் தேடி நாடகமும் அதில் ராமானுஜம் இருக்கிறார் என்ற தெரிவுடன். பார்த்தோம். ஆனால் எனக்கு அதில் ஏதும் பிடிப்பு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் அது மலையாளத்தில் இருந்தது என்பதில்லை. நாடக ஆக்கம் என்னில் ஏதும் பிடிப்பை ஏற்படுத்தவில்லை. முன்னர் ராமானுஜத்தின் பிணம் தின்னும் சாத்திரங்கள் நாடகம் தில்லியில் பார்த்த போது, ராமானுஜம் தொடர்ந்து நாடக பயிற்சி தருதலிலும் நாடக மேடையாக்கதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்து சந்தோஷமாக இருந்தது. வித்தியாசமான, தமிழ் உலகம் பழகிய, நாடகங்களை மீறி, வித்தியாசமான பயிற்சியும் அது பற்றிய கருத்தோட்டமும் கொண்டு நாடக வாழ்க்கையைத் தொடர்வதில் என்ன வாழ்க்கை சாத்தியம். அப்படியும் அவர் நாடகத்தையே தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டதிலும், இன்னும் மற்றவர்க்கு பயிற்சியும் கொடுக்கிறார் என்றால் சந்தோஷம் தான். அது ஒன்றும் எனக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்க வில்லை. கேரளாவிலும் சரி, கர்நாடகாவிலும், நாடகம் பற்றிய ஆரோக்கியமான, கலாபூர்வமான விழிப்புணர்வு இருந்தது. தமிழ் நாட்டில் அது சுத்தமாக இல்லை. ஆக, ராமானுஜத்திற்கு நாடகம் உதவாவிட்டாலும், காந்தி கிராமமும், கேரளா திருச்சூரும் உதவும் என்ற திருப்தி தான். அந்த உணர்வு தான் எனக்கு நாற்பது வருஷங்கள் கழித்து இன்றும். கேரளா தான் அவருக்கு ஆதரவாக இருக்கிறது. அவர் மதிப்பு அறிந்து கௌரவம் அளித்துள்ளது
ஆனால், திருச்சூரில் இருந்த வரை அவரால் பெரிதாக ஏதும் சாதித்துவிட முடியவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்போது, இப்போது என்றால், அதை விட்டு வெளிவந்த பின் வருடங்களில் அவர் தானே கண்டு வரித்துக்கொண்ட பாதையைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுகிறது. ராமானுஜம் தனக்கு நாடக வாழ்வு அளித்த நாடகாசிரியர் சங்கர பிள்ளையைப் பற்றி நான் இப்படிச் சொல்வதை விரும்பமாட்டார் ஒத்துக்கொள்ளவும் மாட்டார். ஒரு பார்வையில் இப்படிச் சொல்வதும் சரியல்ல தான். ஒரு மாதிரியான நன்றி கெட்ட தனம் தான். ஆனால் யாதவ பிரகாசரை விட்டு வந்த பின் தானே ராமானுஜர் ராமானுஜராக முடிந்தது? ஆனால் நம் ராமானுஜம் விஷயத்தில் இது இயல்பாக,ஏதும் திட்டமிடாமல் நடந்தது. சங்கர பிள்ளையிடம் எவ்வளவு பணிவுடனும் சிஷ்ய பாவத்துடனும் ராமானுஜம் இருந்தார் என்பதை இருவரையும் தில்லி ஸ்ரீராம் செண்டரில் தூர இருந்து பார்த்தபோது எனக்குத் தெரிந்தது. அது மட்டுமல்ல. கேரளத்தில் ராமானுஜத்தைத் தம் குருவாக பணிந்து வணங்கி நிற்கும் ஒரு கூட்டமும் உருவாக வழி வகுத்தது அவரது திருச்சூர் வாழ்க்கையும் அதன் பின்னான கேரள பிணைப்பும். அதையும் நான் பாண்டிச்சேரியில் ராமானுஜத்துக்கு தலைக்கோல் விருது அளிக்கப்பட்டபோது, அங்கிருந்த இளம் நாடகக் கலைஞர் மனதில் எத்தகைய பாவம் ராமானுஜம் பற்றி அவர்களுக்கு இருந்தது என்பதை அருகில் இருந்து பார்த்தது மனதுக்கு நெகிழ்ச்சி தருவதாக இருந்தது. “எங்கட குருவான” என்று அரங்கில் பக்கத்திலிருந்த எனக்குச் சொல்லப்பட்டது முகம் பூரிக்க. அந்த இளைஞர் ஒருவரின் தயாரிப்பை நான் காஸர்கோடில் பார்த்தேன் வெற்று மனிதர் இல்லை. தனக்கென ஒரு ஆளுமை கொண்டவர். அலட்டிக்கொள்ளாத எளிமையான ஆனால் தன் முத்திரை பதிக்கும் நாடக ஆக்கம். அவரது நாடகம் ஒன்றை காஸர்கோடில் பார்த்தேன் என்று நினைவு.
அத்தகைய திருப்பம் நிகழ்ந்துள்ளது என எனக்குத் தெரிய வந்தது, தில்லி எக்ஸிபிஷன் க்ரௌண்ட்சின் நான்கோ ஐந்தோ அரங்கங்கள் ஒன்றில், ராமானுஜம் தன் வெறியாட்டம் என்னும் நாடகத்தோடு வந்த போது. அதைப் பார்த்த போது தான் ராமானுஜம் has arrived என்று எனக்குப் பட்டது. அல்காஷியின் மாணவர்கள், ரத்தன் தீயம், பிரசன்னா, காரந்த், விஜயா மேத்தா, உஷா கங்கூலி (கல்கத்தாவில் ஹிந்தி நாடகம் நடத்தும் வங்காளி) போன்றோர் (இவரகள் சட்டென என் நினைவுக்கு வருபவர்கள் அவரவர் ஊர் திரும்பி தமதேயான தம் முத்திரை தாங்கிய நாடக ரூபங்களில் நாடக வாழ்க்கை – சிலர் சினிமாவிலும் கூட, தொடங்கியிருந்தனர். இவர்களில் ரத்தன் தீயம் மிக முக்கியமானவர். தன் மணிபுரி ட்ரைபல் வடிவங்களில் தனது நாடக வடிவை புதிதாக உருவாக்கியிருந்தார். அவரது படிப்பு முடிந்ததும் தில்லியிலேயே ஸ்ரீராம் தியேட்டரில்,உசேத் லெய் மெய் டோங் என்ற அவரது நாடகம் நடைபெற்றது அது தான் அவரது முதல் நாடகம். அவரதே கதையும். அவரதே நாடக மேடையேற்றமும். எங்களுக்கு அது முற்றிலும் புதியதாக, இந்திய நாடகத்துக்கு ஒரு புதிய வடிவமும் வளமும் சேர்ப்பதாக இருந்தது. பிரசன்னா ஒரு சமூக சீர்திருத்த வாதிபோல, தனக்கேயான அரசியல் சமுக பார்வைகள் கொண்டவர் எனபதை அவர் நாடகங்களில் சொல்ல முயல்பவர். காரந்த் குப்பி வீரண்ணா நாடக கம்பெனியில் இருந்தவர். கன்னட பாரம்பரிய நாடக மரபுகளில், சங்கீதத்தில் ஆழ்ந்தவர். மரபில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர் என்பதை அவர் மேடையேற்றும் ஒவ்வொரு நாடகத்திலும் காணலாம். இப்படி ஒவ்வொருவர் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். ராஜேந்திரன், நான் அங்கிருந்த வரை தேசீய நாடக மன்றத்திலேயே ஆசிரியரானார். அவர் படிப்பிப்பது சமஸ்கிருத நாடகங்கள். அவ்வப்போது நாடகப் பட்டறை ஏற்று நடத்த தமிழ் நாடு வருவார். ரத்தன் தீயம் போல, பிரசன்னா போல, தமிழ் நாடு வந்து ஒரு நாடக இயக்கத்தின் ஆரம்பமாகக்கூட யாரும் ஏதும் செய்யவில்லை. அதற்கான சூழல் தமிழ் நாட்டில் இல்லை.
ஆனால் அன்று ராமானுஜத்தின் வெறியாட்டம் பார்த்த பிறகு, அவர் கடைசியாக, காந்திகிராமத்திலும், திருச்சூர் பள்ளி சங்கரபிள்ளையின் நிழலிலும் இருந்த வரை, அவரிடம் காணமுடியாத ஒரு தனித்துவம் அன்று வெறியாட்டம் என்னும் மேடையேற்றத்தில், காணமுடிந்தது சந்தோஷம் தருவதாக இருந்தது. முன்னர் கருத்த தெய்வத்தைத் தேடி, பிணம் தின்னும் சாத்திரங்கள் என்னும் இரு நாடகங்களையும் பார்த்தபோது அதிகம் சொல்வதற்கு ஏதும் இல்லை என்று இருந்த என்னை, வெறியாட்டம் என்னை அது பற்றி எழுதத் தூண்டியது.
வெறியாட்டம், கி.மு. 400 சொச்சத்தில் வாழ்ந்த கிரேக்க நாடகாசரியரான யூரிபிடிஸின் ட்ரோஜன் விமன் (ட்ராய் நகரத்துப் பெண்கள்) என்னும் நாடகத்தைத் தழுவி, எழுதப்பட்ட நாடகம். ஒரு நீண்ட ஒப்பாரி பாடலாக. காரணம் அது பெலெப்பொனேஷிய யுத்தத்தில், ட்ராய் நகரத்தின் அழிவில் சிக்கிய ஊரிழந்து, தம் கணவரை இழந்து, வாழ்க்கையையே இழந்து கதறிக்கொண்டிருக்கும் பெண்களின் அவலத்தைச் சொல்ல ராமானுஜம் ஒப்பாரியைத் தேர்ந்தது, சரிதான் என்றாலும் அது மேடையில் எவ்வளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று சந்தேகிக்கக்கூடும். இது நாடகத்தை முதலில் பார்த்த போது தோன்றவில்லை என்பதே அது வெற்றிகரமாகவே பொருந்தியது என்று சொல்ல வேண்டும். பின்னர் அது பற்றி யோசிக்கும் போது தான் இது எப்படி சாத்தியமாகியது என்று வியக்கத் தூண்டியது வியப்பதற்கும் கொண்டாடுவதற்கும் நிறையவே இருந்தன. மிக எளிமையான மேடையேற்றம். தயாரிப்பு. யாரும் பயிற்சி பெற்ற நடிகர்கள் இல்லை. ஆக, நாடகத்திலும் நடிப்பிலும் தான் கவனம் சென்றதே தவிர, செட், உடைகள் இத்யாதி பற்றி எண்ணத் தோன்றவில்லை. கலாபூர்வமான மிக எளிமையாக, ஆனால் சக்தி வாய்ந்த ஒரு தயாரிப்பாக, மேடையேற்றமாக அது இருந்தது. உடனே அதுபற்றி எழுதவேண்டும், பிறருக்கும் சொல்லவேண்டும், ”எங்களிடமும் ஒரு நாடக கலைஞர் இருக்காரய்யா, அல்காஷியின் பெயர் சொல்ல,” என்று தோன்றிற்று. அதை வரவேற்க, ஒரு ஆங்கில பத்திரிகாசிரியரும் இருந்தார். வங்க நாடக வளம் பற்றி மிக நன்றாக அறிந்தவர். என். எஸ். ஜகன்னாதன், Financial Express-ன் ஆசிரியர். அவர் கேட்க நான் எழுதிக்கொடுத்தேன் Theatre of Threnody and Drama of Dirge என்ற ஜகன்னாதன் கொடுத்த தலைப்புடன் கட்டுரை பிரசுரமாயிற்று. இது பிரசுரமான தேதியை வைத்துக்கொண்டு (29.3.1987) இந்த நாடகம் தில்லியில் 1987=ல் வந்தது என்று என்னால் இப்போது கூறமுடிகிறது.
தமிழுக்கு ஒரு நாடக ஆசிரியர், தயாரிப்பாளர் அப்பாடா என்று 1987-ல் கிடைத்து விட்டார் என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு. பின்னர் தான் எனக்குத்தெரிந்தது ராமானுஜம் அப்போது திருச்சூரில் இல்லை. தஞ்சாவூர் பல்கலைக் கழ்கத்தில் நாடகத் துறை பேராசிரியராக உள்ளார் என்றும். சுதந்திரமாக தன் துறைப் பொறுப்பை எப்படியும் சீரமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவருக்குத் தந்துள்ளார் என்பதும், தன் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையைத் துவங்க செ.ராமானுஜத்தை தேர்ந்தெடுத்தது துணைவேந்தரின் வித்தியாசமான நோக்கும், அணுகுமுறையும் என்றெல்லாம் கேள்விப் பட்டேன். அவர் வித்தியாசான கல்வித் துறை அறிஞர் என்று க.நா.சு. சொல்லத் தான் எனக்குத் தெரிந்தது. அவர் பெயரை அப்போது தான் நான் கேட்கிறேன். க.நா.சு. தனித்து ஒருவரைப் பாராட்டுகிறார் என்றால் அவர் சாதாரணமாக தமிழ் நாட்டின் விளைபயிர்களிலிருந்து வித்தியாசமான அறுவடையாகத் தான் இருக்க வேண்டும். அவர் தான் ராமானுஜத்தை, மறைந்திருந்த ராமானுஜத்தை வெளிக்கொணர உதவியிருக்க முடியும். தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் இருந்த போது தான் ராமானுஜம் வெறியாட்டத்திற்கு தப்பாட்டத்தை உபயோகப் படுத்திக்கோண்டது போல, கிராமப்; புறங்களில் காணும் நாட்டுப் புற ஆட்டங்களையெல்லாம் பல்கலைக் கழக வட்டத்துக்குள் கொணர்ந்து அவற்றிற்கு புனர் வாழ்வு தரவும் பிராபல்யப் படுத்தவும் ,வேறு சாத்தியக் கூறுகளையும், நாடக மேடையில் தப்பாட்டம் பயன்பட்டது போல, ஆராய முனைந்தார்.
”திறந்த கூண்டிலிருந்து விடுதலை பிறந்த பறவை பறந்தோட’’த்தான் செய்யும். ஆனால் இது ராமானுஜத்தின் காதில் விழுந்தால், என்னை அவர் வன்மையாக மறுப்பார். அவருடைய குரு பக்தி அதற்கு இடம் கொடாது. எப்படியிருந்தாலும், இது எனக்குப் பட்டதைச் சொல்கிறேன். நானும் ராமானுஜமும் எங்கள் கிட்டத்தட்ட ஐம்பது வருட நட்பில், தனித்திருந்து சுதந்திரமாக பேசும் பின் மாலை வேளைகளில் அவருக்கு ப்ரீதியாக இருக்கும் என்ற நினைப்பில் நான் எதுவும் சொன்னது கிடையாது. ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று கடிந்து தான் நட்புரிமையுடன் பேசியிருக்கிறேன். இதற்கு அவர் ஒரு முறை கூட என்னை அயோக்கியன் என்று திட்டியவரில்லை. மனதுக்குள் வன்மம் கொண்டவருமில்லை. இந்த இரண்டு வித எதிர்வினைகளையும் நான் நிறைய பேரிடம் கண்டிருக்கிறேன், உடனிருந்த நண்பர்கள், “இது சரியல்ல” என்று சொன்னவர் எவருமில்லை. அவர்களுக்கெல்லாம் ஏதோ வேறு அக்கறைகள். நிர்ப்பந்தங்கள். ஆனால் ராமானுஜம் தன் செயல்பாட்டின் நிர்ப்பந்தங்களை நான் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நேரிலும் பொதுவில் வெளியிலும் சொல்லியிருக்கிறார். இருப்பதை, கிடைப்பதை வைத்துக்கொண்டுதானே நான் எதுவும் செய்ய இயலும்? என்பது அவர் கேள்வி. ஏதாவது தானே செய்யவேண்டும் என்று தோன்றும் போது தானே வெறியாட்டம் எழுதுகிறார். அல்லது செம்பவளகாளி எழுதுகிறார். சிலசமயம் நிரபராதிகளின் காலம், அண்டோரா கிடைத்துவிடுகிறது. இல்லையெனில் கைசிக நாடத்தைப் புதுப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவர் சொல்வதும் உண்மைதான்.
இதன் பிறகு, அதாவது தஞ்சை பல்கலைக் கழகம் சேர்ந்த பிறகு அவரது செயல்பாடுகள் நான் சொல்வதை சாட்சியப்படுத்தும். நான் அவரது நாடக மேடையேற்றங்கள் நிறையப் பார்த்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. தில்லிக்கு அவர் ஒரு முறை நிரபராதிகளின் காலம் என்று தான் நினைக்கிறேன், அவர் அந்த நாடகத்தை தில்லியின் மாவ்லங்கர் ஹாலில் நடத்தினார் என்று நினைவு. நான் ஒரு விபத்தில் கால் அடிபட்டு படுக்கையில் இருந்தேன். வீட்டுக்குள்ளேயே கூட நடக்கமுடியாத நிலை என்னை அழைக்க வந்தராமானுஜம் வந்து என் மனைவியை எனக்கு பதிலாக அழைத்துச் சென்றார். நண்பர்கள் அது பற்றிச் சொன்னதிலிருந்து அது realistic ஆக மேடையேற்றப் பட்ட ஒன்று. இதே போல அண்டோரா என்ற ஒரு நாடகமும் சென்னையில் மேடையேற்றப்பட்டது. அது பற்றி, சுப மங்களாவிலும் மற்ற நண்பர்களும் சொன்ன விவரங்களிலிருந்து அதுவும் இயல்பான நடிப்பில், எந்த ஸ்டைலிஸ்டிக் அரவணைப்புக்கும் இடம் கொடாது, மேடையேற்றப்பட்டது என்று கோமல் ஸ்வாமிநாதன் சொன்னர். எழுதியும் இருக்கிறார். அவருக்கு என் பார்வையோடு முழு உடன்பாடு. இந்த ஸ்டைலைசேஷன் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதலில் நமக்கு வேண்டியது ரியாலிஸ்டிக்கா மேடையில் நடக்க பேச கத்துக்கோ. அதிலேயிருந்து தான் இந்த ஸ்டலைசேஷனெல்லாம் வரணும். ரியாலிஸ்டிக்கா உனக்கு நடிக்க வராததினால் தான் இந்த ஸ்டைலைசேஷன் கூத்தடிப்பு என்று அவர் தன் தலையங்கத்திலேயே எழுதியிருக்கிறார். இதையே தான் ராமானுஜமும் காவ்யா வெளியிட்ட அவரது கட்டுரைத் தொகுப்பில் சொல்கிறார். ஆனால் நம் தமிழ் நாட்டு நாடக மேதைகளுக்கு இது காதில் விழுவதில்லை. இது உவப்பாக இல்லை. நம் தமிழ் நாட்டுக் கலை உலகில் இருப்பவர்கள் எல்லாம் ஆராதனைப் பிரியர்கள். அபிஷேகப் பிரியர்கள்.
சென்னைக்கு தேசீய நாடகப் பள்ளியின் நாடகப் பயிற்சிப் பட்டறை ஒன்று அவரது பொறுப்பில் வந்த போது அவர் பயிற்சி கொடுத்தது அவர் எழுதிய செம்பவளக் காளி என்ற நாடகம். அதை அவர் மேடை ஏற்றியதும் வித்தியாசமான அவரே கற்பித்த ஒரு பத்ததியில். அவர் எடுத்துக்க்கொள்ளும் நாடகத்திற்கேற்ப அதை மேடையேற்றும் முறையும் மாறும். வெறியாட்டத்தின் தப்பாட்டத்தையும் ஒப்பாரி பாடல்களால் ஆன கதை சொல்லலும் வேறு எதிலும் அவர் பயன்படுத்த வில்லை. வெறியாட்டம் சம்பந்தப்பட்ட எல்லாமே எளிமையானவை. அதற்கான உடைகள், மேடை எல்லாம் உருவாக்கியது அவரது காந்தி கிராம நண்பர் ஸ்ரீனிவாசன்.
வெறியாட்டத்தின் முக்கியத்வம் கருதி அதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் தஞ்சை [பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருக்கு இதை பதிவு செய்வதன் முக்கியத்வத்தைப் பற்றி எழுதினேன். புத்தகங்கள் பாதுகாக்கப் படுவது போல் இதற்கும் ஒரு காப்பகம் தேவை, அது வெறியாட்டத்தோடு தொடங்கட்டும் என்று எழுதினேன். துரதிர்ஷ்டம், வி.ஐ. சுப்பிரமணியம் அப்போது இல்லை என்றும் அவருக்கு பதிலாக வேறொருவர் வந்துள்ளார் என்றும் பின்னர் எனக்கு செய்தி வந்தது. இனி அது ஒரு அரசு அலுவலகம் ஆகிவிட்டது என்று விட்டு விட்டேன். ராமானுஜமும் பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றிருப்பார். தஞ்சைக்கு அக்கம் பக்கம் இருக்கும் நாட்டார் கலைகளை தஞ்சைக்கு அழைத்து அவற்றுடனனான ஒட்டுறவை, பல்கலைக்கழகத்துடனும், நகர வாழ் மக்களுடனும் நாடக் கலையுடனும் புதுப்பிக்கும் காரியத்தில் இறங்கினார் என்று கேள்விப்பட்டேன். அதன் விளைவு தான் திருக்குறுங்குடி கோவிலுடன் இணைந்த கைசிக நாடகத்திற்கு அவர் புத்துயிரூட்டியது எல்லாம்.
ஆனால் அதன் பிறகு ராமானுஜம் தனி மனிதராக நிறைய நாடகங்கள் நிகழ்த்தியிருக்கிறார். திருச்சூரை விட்டு அவர் வந்தாலும் கேரளம் அவரை விட்டதில்லை. தமிழ் நாட்டை விட கேரளத்தில் தான் அவருக்கு நாடகங்கள் நிகழ்த்தும் சந்தர்ப்பங்களும் குருவாக அவரை மதித்து கௌரவிக்கவும் பட்டங்கள் கொடுத்து கொண்டாடவும் மனிதர்களும் சந்தர்ப்பங்களும் அதிகம். தமிழ் நாட்டில் அவர் புதுச்சேரி சங்கரலிங்கனார் நாடக மன்றத்தின் இயக்குனர் இந்திரா. பார்த்தசாரதி அழைப்பிலொ அல்லது சென்னை கூத்துப்பட்டறையில் ந.முத்துசாமி அழைப்பிலோ அவரவர் நாடகங்களை பயிற்சி கொடுத்து மேடையேற்றவோ அழைக்கப்படுவதும் உண்டு. இப்படி பல வாய்ப்புகள். தமிழ் நாட்டில் அவரைக் கௌரவப்படுத்திய ஒரே நிகழ்வு என எனக்குத் தெரிந்து, பாண்டிச்சேரியில் கருஞ்சுழி ஆறுமுகம் அவருக்கு அளித்த தலைக்கோல் விருது தான். தில்லியின் தேசீய நாடக மன்றத்துக்கு ஆலோசகராக அவர் அவ்வப்போது போவதுண்டு.
அப்போது நிகழ்ந்த சம்பவத்தைச் சொல்லவேண்டும். இது செய்தியாக என் காதில் விழுந்தது. அ;ப்படி ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் தான் மணிப்புரி நாடகக் கலைஞரான, கன்னையா லால் மிகுந்த ஆச்சரியப்பட்டு ராமானுஜத்தைக் கேட்டிருக்கிறார். “ என்ன இதுவரை உங்களுக்கு சங்கீத நாடக அகாடமியின் விருது கிடைக்கவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறதே. இங்கு இந்த கூட்டத்துக்கு வரும் உங்க தமிழ் ஆட்களுக்குக் கூட இது தெரியவில்லையா, இல்லை அவர்களுக்கு உங்கள் நினைவு வரவில்லையா? சரி, இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே. இனி இது என் பொறுப்பு, பார்க்கலாம்” என்று சொன்னவர் பின்னர் அதே முனைப்பில் இருந்தவர் ராமானுஜத்திற்கு சங்கீத நாடக் அகாடமி விருது கிடைக்கச் செய்தபின் தான் ஓய்ந்தார். இது ஏன் தில்லிக்கு அடிக்கடி ஆலோசனை கூறவோ அல்லது எதிலும் பங்கு பெறவோ சொல்லும் தமிழ் நாட்டு கலைஞர்களின் மனதில், படாமலேயே போகிறது?
(தொடரும்)