மூக்குக்கண்ணாடி
எனக்கு ஒன்பது வயதிலேயே கிட்டப்பார்வை வந்துவிட்டதால் மூக்குக்கண்ணாடி போடநேர்ந்தது. வகுப்பில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதுவது முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்தும் மங்கலாகத் தெரிந்ததால், பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனைப் பார்த்து எழுத்த்துவங்கினேன். அவன் முதலில் அதை அனுமதித்தபோதிலும், தேர்வுகளில் என்னைப் பார்த்து அவன் எழுத நான் அனுமதிக்காததால், அதற்குமேல் எனக்கும் அனுமதி மறுத்துவிட்டான். தேர்வுவேறு, மற்றசமயம்வேறு என்று நான் பலவாறு எடுத்துரைத்தும் அவன் காதில் அந்த நியாயம் ஏற்வில்லை.
அதுவும் நல்லதற்கே என்று பின்னால்தான் தெரிந்தது. இல்லாவிட்டால் அதிகமான கிட்டப்பார்வை மிகவும் மோசமாகியிருக்கும்.
அனுமதி மறுக்கப்பட்டதால், வேறுவழியின்றி, முதல்பெஞ்சிலிருந்து இறங்கித் தரையில் அமர்ந்து கரும்பலகையைப் பார்த்து எழுதத் துவங்கியபோதுதான் ஆசிரியர் என்னவென்று விசாரித்தார்.
“அவன் பொட்டைக்கண்ணு சார்; அவனுக்குக் கண்ணு சரியாகத் தெரியாது!” என்று எனக்கு அனுமதிமறுத்த மாணவன் ஒரு பெரிய உண்மையை முதன்முதலில் கண்டுபிடித்து அறிவிப்பதுபோல — ஆசிரியருக்கு மட்டுமன்றி, வகுப்பிற்கும் உரத்தகுரலில் அறிவித்தான்.
அன்றிலிருந்து சில ஆண்டுகள் ’பொட்டைக்கண்ணன்’ என்ற பட்டப்பெயர், நான் மூக்குக்கண்ணாடி அணிந்து சரியான பார்வையைப் பெற்றும்கூட என்னைத் தொடர்ந்துவந்தது.
என் தாய்வழிப்பாட்டனாரை நன்கறிந்த எனது ஆசிரியர் என் கண்களைப்பற்றிய உண்மையைத்[!] தெரிவித்ததும், மதுரைக்கு அழைத்துச்சென்று — ஏனெனில் காரைக்குடியில் அப்பொழுது சிறந்த கண்மருத்துவர் இல்லை– கண்களைச் சோதித்துக் கண்ணாடி வாங்கித்தந்தார்கள்.
கண்ணாடியைத் தேவையின்றிக் கழட்டக்கூடாது என்ற மருத்துவரின் பரிந்துரை என் நெஞ்சில் ஆழமாக்ப் பதிந்திருந்ததால், எனது மூக்குக்கண்ணாடி ஒருவகையில் எனக்குக் கவசகுண்டலமாகிவிட்டதென்றால் மிகையில்லை.
வகுப்பிலேயே கண்ணாடியணிந்த மாணவன் நான் ஒருவன் என்பதால், நான் பலவிதச் சோதனைகளுக்குள்ளாக நேர்ந்தது. உடன்பயிலும் நண்பர்கள் என் பார்வையைச் சோதிக்கவேண்டி, கண்ணாடியுடனும், அது இல்லாமலும், அவர்கள் சுட்டும் கைவிரல்கள் எத்தனை என்ற பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்டேன். அலுத்துவிட்டபடியால் அவற்றை மறுத்த எனக்கு, ‘சோடாபுட்டி’, ‘கோலிசோடா,’ ‘நாலுகண்ணன்’ போன்ற கௌரவப்பட்டங்களும் தாராளமாக வழங்கப்பட்டன.
கண்ணாடியைக் கழட்டக்கூடாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதால், விளையாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டியிருந்தது. அதனால் விளையாட்டு பிரியடுகளில் பாடப்புத்தகத்தைப் படித்துப் பொழுதுபோக்கியதால், தேர்வில் மதிப்பெண்கள் உயர்ந்தன என்பது ஒரு நல்ல பக்கவிளைவு.
இப்படியிருக்கையில் சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் எனது ஒன்றுவிட்ட மாமனின் திருமணம் நடந்ததால், மூன்று நாள்கள் அங்கு செல்லவேண்டிவந்தது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. யாரும் என்னைப் பட்டப்பெயர் சொல்லி அழைக்கமாட்டார்களென்ற மகிழ்வுடன், என் வயதொத்த எனது உறவுச் சிறார்களையும் சத்திக்கலாமென்ற மகிழ்வும் சேர்ந்துகொண்டது.
முதல் நாளே திருமண நிகழ்ச்சிகள் ‘போர’டித்துவிட்டன. கைக்கெட்டும் கூந்தல்பனை இலைகளைக் கிழித்து ஊதல் செய்து விளையாடுவதும், அதில் விமானம் செய்து மகிழ்வதற்கும், எங்கள் மாமா அதட்டல்போட்டு முற்றுவைத்தார். அத்தோடுநில்லாமல், எங்கள் கையிலிருந்த ஊதலையும், விமாங்களையும் பறித்துக் கிழித்தும் எறிந்துவிட்டார். பெரியவராயிற்றே! எதிர்த்துப்பேசவியலாத ஒரு கையாலாகாத்தனம். அதுமட்டுமல்ல, எதிர்த்துப்பேசினால் கன்னத்தில் அறைவிழும், அதைத் தவிர்க்கவேண்டும் என்ற புத்திசாலித்தனமும்கூட…
எனவே, என்னசெய்யலாம் என்று அலைந்து திரிந்துகொண்டிருந்த நானும், என் மாமன் மகனும் திருமணமண்டபத்திற்கு அருகாமையில், சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையோரத்தில் இருக்கும் சுமைதாங்கியில் ஏறி அமர்ந்து, இரண்டுபக்கமும் செல்லும் பஸ்களை எண்ணிக்கொண்டிருந்தோம்.
அப்பொழுது ஒரு மூதாட்டியும், என் வயதொத்த ஒரு சிறுவனும், ஒரு ஆட்டுக்குட்டியுடன் அங்குவந்து நின்றனர்.
எங்களைப் பார்த்த அச்சிறுவன் விடுவிடென்று சுமைதாங்கியில் ஏறி, என்னருகில் அமர்ந்துகொண்டான்.
“எலே, முனிசாமி, பார்த்துடா; கண்ணுதெரியாமக் காலைவச்சு விளுந்துடாதடா.” என்று கரிசனத்துடன் கூறினாள்.
எனக்குத் திக்கென்றது. என்னருகில் அமர்ந்த சிறுவனை ஏற இறங்கப் பார்த்தேன்.
வழியவழிய எண்ணெய்தடவி வாரப்பட்ட சுருட்டைமயிர்; அதிகப்படியான எண்ணெய் நெற்றியில் இறங்கி புருவத்தைத் தொட்டு நின்றதோடுமட்டுமல்லாமல், அவன் பூசியிருந்த திருநீற்றையும் கருப்பாக்கியிருந்தது. பெரிய கண்கள்; வெள்ளைவெளேரென்ற விழியின் நடுவில் பளிச்சிடும் கருவிழி…
இவனுக்கா கண் தெரியவில்லை?!
முனுசாமி என் கண்ணாடியைக் கூர்ந்து கவனித்தான்.
அவன் மட்டுமல்ல, அந்த மூதாட்டியும் கவனித்தாள் என்பது இருவரும் ஒரே சமயத்தில், “ஏன் தம்பி, உனக்கு அதுக்குள்ள வெள்ளெழுத்து வந்துடுச்சா? கண்ணாடி போட்டிருக்கியே?” இருவரும் கேட்ட கேள்வியிலிருந்து தெரிந்தது.
சிறிது தயங்கிய நான், ‘வெள்ளெழுத்து இல்லை. தூரத்திலே இருக்கறது மங்கலாத் தெரியும், அதனாலே கண்ணாடி போட்டிருக்கேன்,” என்று பதில் சொன்னேன்.
ஏதோவொரு அதிசயத்தைக் கண்டதுபோல என் கண்ணாடியையே உற்றுநோக்கினான், முனுசாமி.
“எனக்கும் தூரத்தில இருக்கறது மங்கலாத்தான் தெரியுது. இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டா நல்லாக் கண்ணு தெரியுமா?”
முனுசாமியின் குரலில் ஏக்கம், நம்பிக்கை, வியப்பு கலந்திருந்தன.
“ஆமாம், தெரியும்,” என்று சுருக்கமாகப் பதிலளித்தேன் நான். பள்ளி நண்பர்களின் ஏச்சுக்கும், எள்ளலுக்கும் பாத்திரமாகிவந்தபடியால், எனது கிட்டப்பார்வையைப்பற்றி அதிகம் பேசவிரும்புவதில்லை நான்.
சிறிதுநேரம் ஒன்றுமே பேசாமல் முனுசாமி தன்னுடன் வந்த மூதாட்டியையும், என் கண்ணாடியையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.
மிகவும் தணிந்த குரலில், “எனக்கு கண்ணு நல்லாத் தெரிஞ்சா எப்படி இருக்குமிண்டே தெரியாது. உன்னோட கண்ணாடிய ஒரு நிமிசம் போட்டுப் பாக்கலாமா?” என்று கேட்டான்.
எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.
என்னையும் அறியாமல் என் கைகள் கண்ணாடியைக் கழட்டச் சென்றன.
“வேண்டாம். கண்ணாடியைக் கழட்டக்கூடாதுன்னு வீட்டிலே சொல்லியிருக்காங்க இல்லையா? எனக்கே நீ ஒருதடவைகூட..” என்று எச்சரித்த எனது மாமன்மகனையும் பொருட்படுத்தாது என் கண்ணாடியை முனுசாமியிடம் நீட்டினேன். என்னையுமறியாமல் அவன் எனக்கு மிகவும் நெருங்கிவந்துவிட்டதைப்போன்ற ஒரு நேச உணர்வு..
ஏதோவொரு மாயக்கண்ணாடியை வாங்குவதுபோன்ற எதிர்பார்ப்புடன், மிகவும் கவனமாக என்னிடமிருந்து மூக்குக்கண்ணாடியை வாங்கி, மெல்ல அதை அணிந்துகொண்டான் முனுசாமி.
அவன் தலை நாலாபக்கமும் சுழன்றது.
வாயெல்லாம் பல்லாக அவன் முகம் மலர்ந்தது.
“ஆயா, கண்ணு நல்லாத் தெரியுது ஆயா! ஒம் மூஞ்சிலே இவ்வளோ சுருக்கம் இருக்குன்னு இப்பத்தான் பாக்குறேன்.” இதுவரை கண்டிராத மூதாட்டியின் முதுமையைக் கண்டதில் அவனுக்கு அவ்வளவு பரவசம்!
“கோயில் கோவரத்திலே எத்தன பொம்மைக இருக்கு, ஆயா! இதுவர அதுக இருக்குன்னுகூட எனக்குத் தெரியல. இது மாயக்கண்ணாடிதான், ஆயா!”
அவனது மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டது.
“வேறென்ன தெரியுது? கண்ணாடி இல்லாம எனக்கு இப்ப கோபுர பொம்மைகள் தெரியலே!” என்று என் நிலைமையை அவர்களுக்கு அறிவித்து மகிழ்ந்தேன். என் இயலாமையை வெளியிடுவதில், அதைத் தயக்கமில்லாமல் பகிர்ந்துகொள்வதில் – அதைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு ஜீவனிடம் பகிர்ந்துகொள்வதில் கிடைத்த அந்த நிம்மதி, அந்த மகிழ்ச்சியை எண்ணும்போது இப்பொழுதும் இனிக்கிறது.
“நெசமாவா சொல்லுறே, முனுசாமி? இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டா, ஒனக்குக் கண்ணு நல்லாத் தெரியுதா?!”
மூதாட்டி பெரிய சொத்து கிடைத்துவிட்டமாதிரி மகிழ்ந்தாள்.
சிறிது நேரம் கழித்து, “முனுசாமி, இந்தத் தம்பிகிட்டே கண்ணாடியத் திருப்பிக் கொடுத்துடு.” என்று கட்டளை பிறக்கவே, மனமேயில்லாமல் என்னிடம் கண்ணாடியைத் திருப்பிக் கொடுத்தான் முனுசாமி.
“இப்ப பழையபடியே ஆயிடுச்சு, ஆயா. ஒம் முகத்துலே இருக்கற சுருக்கமும் தெரியல், கோயில் கோவரத்திலெ இருக்கற பொம்மகளும் தெரியலே. எல்லாம் மாயமா மறஞ்சுபோச்சு. இது மாயக்கண்ணாடிதான், ஆயா! எனக்கு இந்தமாதிரி ஒரு கண்ணாடிய வாங்கிக் கொடு, ஆயா!”
முனுசாமியின் குரலில் ஏக்கம் இருந்தது.
“தம்பி, கொஞ்சம் கீளே எறங்கி வாரியா!” என்று என்னை அழைத்தாள் மூதாட்டி.
மூவரும் சுமைதாங்கியைவிட்டுக் கீழிறங்கினோம்.
“என்ன ஆயா?” முனுசாமியின் ஆயா எனக்கும் ஆயா ஆகிவிட்டிருந்தாள்.
“தம்பி, நீ இந்த ஊரா?”
“இல்லை, ஆயா. காரைக்குடி.”
“இந்தப்பக்கம் எப்பிடி?”
“எங்க சின்னமாமாவுக்குக் கல்யாணம். அதோ அந்த மண்டபத்திலதான் நடக்குது. அதுக்குத்தான் நாங்க வந்தோம். என் பெரியமாமா மகனையும் அந்த ‘நாமி’ல் சேர்த்துக்கொண்டேன்.”
“நாங்க நாலுகோட்டையிலேந்து வந்திருக்கோம்.”
இது முனுசாமி. நாலுகோட்டைக்குச் சோழபுரத்திலிருந்து சில மைல்கள் செல்லவேண்டும். எனது தந்தைவழிப்பாட்டியின் ஊர் அது என்று பின்னர் கேள்விப்பட்டிருக்கிறேன்.
“ஏந்தம்பி, இந்தக் கண்ணாடியைக் காரக்குடிலே வாங்கினியா?”
“இல்லே, ஆயா. மதுரைலே வாங்கினது.”
“சிவசங்கை [சிவகங்கை] வரிச்சியூர் வளியா, பஸ் அங்கு போகுமிண்டு கேள்விப்பட்டிருக்கிறேன். மருதை போனதேயில்லை.” மூதாட்டி ஒரு ஏக்கத்துடன் இயம்பினாள்.
“நான் சிவசங்கை போனதே இல்லை. நாலுகோட்டைவிட்டா, சோளவரம் — சோளவரம் விட்டா, நாலுகோட்டை. அவ்வளவுதான்.” முனுசாமி யாரும் கேட்காமலேயே அறிவித்தான்.
“மருதையில எந்தக் கடயில தம்பி கண்ணாடிய வாங்கினே?”
“முதல்ல கண்டாக்டர்கிட்ட கண்ணைச் சோதனைசெய்யனும். அதுக்கப்பறம் அவர் எப்படிப்பட்ட கண்ணாடிபோடனும்னு ஒரு சீட்டிலே எழுதிக்கொடுப்பார். அதை வாங்கிக்கிட்டுப்போயி, மூக்குக்கண்ணாடிக் கடையிலே கொடுத்து, கண்ணாடி வாங்கணும், ஆயா,” என்று நான் சொன்னதும், மூதாட்டியின் முகம் தொங்கிவிட்டது.
“இதெல்லாம் நான் எப்பிடிச் செய்யமுடியும் தம்பி? ஒரே ஒரு தபா நான் சிவசங்கை போயிருக்கேன். அவ்வளவுதான். அதுவும், பஸ்சிலே அடிபட்டுச் செத்த இவன் அப்பன், ஆயி பொணத்த எரிச்சுட்டுவர காஞ்சிரங்காடு வரைக்கும்தான். நானாவது, இவனைக் கூட்டிக்கிட்டு மருதை போகறதாவது..?”
ஆற்றாமையில் அலுத்துக்கொண்டாள் அந்த மூதாட்டி.
“ஆயா, இந்தக் கண்ணாடிதான் எனக்கு நல்லாத் தெரியுதே! இத்த நம்ம வாங்கிக்கிட்டா, இந்தத்தம்பி வேற கண்ணாடி வாங்கிக்கலாமில்லே!”
ஒரு எதிர்ப்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும், மூதாட்டியைக் கேட்டான் முனுசாமி.
“நீபாட்டு கேட்டுப்புட்டேடா, நாம் எத்தைக் கொடுத்து தம்பிகிட்டே கண்ணாடியைக் கெக்குறது?”
“அதுதான் நம்மகிட்ட இந்த ஆட்டுக்குட்டி இருக்குதுல்ல, ஆயா. இத்தக் கொடுத்துட்டாப் போகுது…”
இழுத்தான் முனுசாமி.
“நீ சொல்லறது நல்லா இருக்குடா. இந்தத் தம்பியைப் பார்த்தா சைவச்சாப்பாடு சாப்புடறவக மாதிரியில்ல இருக்கு. இவுக ஆட்டுக்குட்டிய வச்சுக்கிட்டு என்ன செய்வாக? கிடேரிக் கன்னுக்குட்டினாலும், பெரிசானதுக்கப்பறம் இவுகளுக்கு உவயோகப்படும். அத்தவிடு, சாயபு கொஞ்சநேரத்துல இத்த வாங்கிக்க வந்துடுவாருல்ல…” என்று பதிலுக்கு இழுத்தாள் மூதாட்டி.
“சாயபுகிட்ட பணத்த வாங்கி இவுக கையிலே கொடுத்துட்டு, கண்ணாடிய வாங்கிக்கலாமில்ல..” நப்பாசை விடவில்லை முனுச்சாமிக்கு.
நான் எனது கண்ணாடியைக் கொடுக்கச் சம்மதித்துவிட்டதுபோலவும், அதை எப்படி பைசல்செய்வது என்பதுதான் பிரச்சினை என்பதுபோல இருந்தது அவர்கள் பேச்சு.
என் மாமன்மகன் இப்பேச்சை இரசிக்கவில்லை என்பதுபோல, “வாடா, போகலாம். நம்மைத் தேடுவாங்க.’’ என்று என் கையைப்பற்றி இழுத்தான்.
எனக்கோ இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை ஏற்பட்டது. பாவம், முனுசாமி, நான் என் கண்ணாடியைத் தராவிட்டால் பார்வை இல்லாமலல்லவா கஷ்டப்படுவான்? காலாகாலத்தில் கண்ணாடி போடாவிட்டால் பார்வை மோசமாகும் என்றல்லவா டாக்டர்வேறு சொல்லியிருந்தார். அதனால்தானே எனக்கு உடனே கண்ணாடி போட்டார்கள்! நானாவது வேறு கண்ணாடி வாங்கிக்கொள்ளலாம். சீட்டு இருக்கிறது. ஆனால், முனுசாமி…?
என் நண்பர்கள் என்னைச் செய்த பழிப்புச்சொற்கள் அனைத்தும் என் காதில் தாமாகவே ஒலித்தன. பாவம், முனுசாமியை மற்றவர்கள் எப்ப்டிப் பழிக்கிறார்களோ?
இதற்குள் எனது பெரியமாமா ஒரு பக்கத்திலிருந்தும், லுங்கியும் தொப்பியும் அணிந்த ஒரு சாயபு இன்னொரு பக்கத்திலிருந்தும் வந்துசேர்ந்தார்கள்.
“சாயபு, இந்த ஆட்டுக்குட்டிக்கான பணத்தத் தர்றீகளா, இந்தத் தம்பிக்குக் குடுக்கணும்..” முனுசாமியின் குரலில் அவசரம் இருந்தது.
சாயபுவோ புரியாமல் விழித்தவாறு மூதாட்டியைப் பார்த்தார்.
“என்னடா விவகாரம்? இவங்க உனக்கு எதுக்குப் பணம் தரேன்னு சொல்லறாங்க?” என் மாமாவின் குரலில் அதட்டல் இருந்தது.
“வாங்க ஐயா.” என்று என் மாமாவை வாயெல்லாம் பல்லாக வரவேற்ற முனுசாமி, “தம்பியோட மூக்குக்கண்ணாடிய நான் வாங்கிக்கப்போறேன். அதுக்கு காசு கொடுக்கணுமில்ல? எங்க ஆட்டுக்குட்டிய தம்பிக்குக் கொடுக்க முடியாதுல்ல. சாயபுதானே ஆட்டுக்குட்டிய வாங்கிக்கப்போறாரு. அதான் அவருகிட்ட காசைக் கேக்குறேன்.” என்று உற்சாகமாக என் மாமாவுக்கு விளக்கினான்.
என் மாமாவின் புருவங்கள் உயர்ந்தன.
“என்னடா இது? கல்யாணத்துக்கு வந்தோம், தின்னோம், போனோம்னு இருக்காமக் கண்ணாடிய விக்கறேன்னு இது என்னடா கூத்து? கண்ணாடியக் கொடுத்துட்டு நீ என்னடா கம்பை ஊணிக்கிண்டா போகப்போறே?”
என் மாமா என்னைப் பார்த்துக் கத்தினார். அவருக்குக் கோபம்வந்தால் என்ன பேசுகிறோம், யார் மனம் புண்படுகிறது என்றே பார்க்கமாட்டார்.
அவர் சொற்கள் என்னைச் சுட்டன. என் மனம் முனுசாமிக்காக உருகியது. அவரை எதிர்த்துப்பேசத் திராணியின்றி நின்றேன்.
சாயபு என் மாமாவைச் சமாதானப்படுத்தும்விதமாகப் பேசினார்.
“நீங்க அமைதியா இருங்க, ஐயா. இந்தக் கிளவி எனக்குப் பணம் தரணும். அதுக்குத்தான் இந்த ஆட்டுக்குட்டியக் கொடுத்து கடனைத்தீர்க்க வந்திருக்கு. நல்ல , மானஸ்தமான பொம்பளைங்க ஐயா இது. ஆனா அதிர்ஷ்டம்கெட்டது. போன வருசம்தான் இதோட புள்ளையும், மருமகளும் சிவேங்கைச் சந்தைக்குப் போறபோது அவங்க மாட்டுவண்டிமேல பஸ்மோதி செத்துப்போனாங்க. அப்ப வாங்கின கடன். மாசாமாசம் கொஞ்சம்கொஞ்சமா கடனைத் தீர்த்துக்கிட்டு வருது. கடைசித் தவணையாத்தான் இந்த ஆட்டுக்குட்டியக் கொண்டுவந்திருக்கு. என் மகளுக்கு நிக்கா வச்சுருக்கோம். அதுக்கு கறிபோட்டு விருந்து வைக்கணுமில்ல. அதுதான். சரிங்க, வர்றேன்.”
ஆட்டுக்குட்டியை இழுத்துக்கொண்டு சென்றார் அந்த சாயபு.
முனுசாமியின் கண்பார்வையின் தீர்வையும் அவர் இழுத்துக்கொண்டு செல்லவதுபோலடத்தான் எனக்குப் பட்டது. தான் பலியாகப் போவதை அறியாமல், அவர் பையிலிருந்து வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் முருங்கைக் கீரையைத் தின்றுகொண்டே அவர் பின்னால் சென்றது ஆட்டுக்குட்டி.
நானும் அந்த ஆட்டுக்குட்டியைப்போல, முனுசாமியைத் திரும்பித்திரும்பிப் பார்த்துவாறே என் கையாலாகாத்தனத்தை நொந்துகொண்டு என் மாமாவைத் தொடர்ந்து சென்றேன்.
முனுசாமிக்கு என்னவாயிற்று, அவன் கிட்டப்பார்வைக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டானா, அல்லது பார்வை மிகவும் மோசமாகித் தவிக்கிறானா என்ற எண்ணம் அவ்வப்போது என்னுள் எழுங்கால் — அவனுக்கு எந்த உதவியும் செய்யாதுபோன என் கையாலாத்தனத்தை எண்ணியெண்ணி என் நெஞ்சு கனத்து வலிக்கிறது.
[கையாலாகாத்தனம் தொடரும்]
மிகவும் உருக்கமாக இருக்கிறது. வாசிப்பவரது மனமும் வலிக்கிறது.
ஏழ்மை, அறியாமை, வசதியின்மை, இவற்றுடன் வெள்ளந்தியான கிராமப்புற மக்களைக் காணும்போது உள்ளம் குழைந்து, கண்களில் நீர் சோருகின்றது. எனது பள்ளிப்பருவத்திலும் இதுபோன்ற சில சம்பவங்கள் நிகழ்ந்து மனதை உறுத்தியுள்ளன.
வாழ்வில் ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் என எழும் கேள்விக்கு விடைகளே கிட்டுவதில்லை என்பதே நிதர்சனம்….
Excellent
மனம் மிகவும்கனக்கிறது. வாழ்க பாரதம்.
Ignorance and poverty are cursed
Simply superb Sir.