3. புது புஷ்கோட்டு!
நான் சிறுவனாக இருந்தபோது நடுத்தரக் குடும்பங்களில் ஆண்டுக்கு இருமுறைதான் புத்தாடைகள் வாங்குவார்கள் – தீபாவளிக்கும், வருஷப்பிறப்புக்கும். நிதிநிலைமை நன்றாக இருந்தால் பொங்கலுக்கும் புத்தாடைகள் வாங்கப்படும்.
அப்பொழுது ரெடிமேடு ஆடைகள் மிகக் குறைவு. மேலும் அவை விலை அதிகம் என்பதால் தையற்காரரிடம் அளவெடுத்தே தைக்கப்படும். என்னைப்போன்ற — அதாவது வளரும் சிறார்களுக்கு புத்தாடைகள் தைக்கும் அழகே தனி. புத்தாடை அணிந்துவரும் எங்களுக்கும் சோளக்கொல்லைப் பொம்மைகளுக்கும் அதிக வேறுபாடு காணமுடியாது.
ஏனென்று கேட்கிறீர்களா?
ஆண்டுக்கு இரண்டே செட் ஆடைகள் என்னும்போது — அவை எங்கள் வளர்த்திக்கும் இடமளிக்கவேண்டுமல்லவா? சிறுமிகள் இவ்விஷயத்தில் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் — ‘டக்கு’ பிடிக்கிறோம் என்று பாவாடையின் துணியைக் குறுக்குவாட்டில் மடித்துத் தைப்பார்கள். சிறுமி உயரஉயர, ‘டக்’கைப் பிரித்து, பாவாடையை நீளப்படுத்திவிடுவார்கள். உயரவாட்டில் பல சுருக்கங்கள்வைத்துத் தைப்பதால், அகலவாட்டைப்பற்றிய கவலையுமில்லை. ஆனால், எங்கள்பாடுதான் — அதாவது, சிறுவர்கள்பாடுதான் திண்டாட்டம். சிறுமிகளின் பாவாடையைப்போலத் தைக்கவழியில்லாததால், வேறுவழியைக் கையாளுவார்கள்.
உயர்வதைச் சமாளிக்கவேண்டி முழங்காலுக்கும், கணுக்காலுக்கும் நடுவரை டிராயர் நீண்டிருக்கும். போலீஸ்காரரின் டிராயர்கூட அவ்வளவுதூரம் முழங்காலுக்குக் கீழே இறங்கியிருக்காது. அகலத்தைச் சமாளிக்க இடுப்பளவு தாராளமாக அதிகரிக்கப்படும். பெல்ட்போட்டாலும் இறுக்கமுடியாது. எனவே இடுப்பிலிருந்து துணிப்பட்டைகள் இரண்டு இருபக்கமும் ஏறி, தோள்பட்டைவழியாகப் பின்சென்று, ஒன்றையொன்று குறுக்குவாட்டில் கடந்து பின்பக்கத்தில் தைக்கப்ப்பட்டிருக்கும். அகலப்பிரச்சினை தீர்ந்தது!
இது ஒருவகையில் வசதிதான். டிராயரைக் கழட்டுவது மிகவும் எளிது. இரண்டுகைகளையும் வார்ப்பட்டைகளில் கொடுத்து வெளிப்புறம் தள்ளினால் டிராயர் தானாகவே கீழேவிழுந்துவிடும்!
டிராயர் இந்த அழகென்றால், சட்டையைப்பற்றிக் கேட்கவேவேண்டாம்! வளர்ச்சியை முன்னிட்டு அகலமாகவும், நீளமாகவும், கைகள் முழங்கைக்கும், மணிக்கட்டுக்கும் இடையிலும் நீண்டிருக்கும்.
இப்படிப்பட்ட டிராயரையும், சட்டையையும் அணிந்துகொண்டால் இரண்டுகால்களும், கைகளும் குச்சிகுச்சியாகக் கீழே நீட்டிக்கொண்டிருக்கும். நாங்களும் சோளக்கொல்லை பொம்மைகள்போலக் காட்சியளிப்போம்!
ஆனாலும், அதைப்பற்றிய கவலை எங்களுக்குச் சிறிதும் இருக்காது. புத்தாடை அணிகிறோம் என்ற பெருமைதான் இருக்கும்.
அந்தப் பெருமைகூட அதிகநேரம் நீடிக்காது. ஓரிருமணி நேரம் அணிந்துகொண்டபின்னர் அதைக் கழட்டிக் கொடுத்துவிட்டுப் பழைய ஆடைகளைத்தான் அணிந்துகொள்ளவேண்டும்.
அதற்கும் காரணமில்லாமலில்லை.
உறவினர்கள் அதிகமுள்ள [தூரமோ, கிட்டவோ, ஒன்றுவிட்டவோ, இரண்டுவிட்டவோ, உறவினர்கள் உறவினர்கள்தானே!] எங்கள் குடும்பத்தில் அடிக்கடி திருமணம், முதல் பிறந்தநாள், வளைகாப்பு, சீமந்தம், அறுபதாண்டு நிறைவுநாள் என்று பல குடும்ப விசேஷங்கள் உள்ளூரிலும், வெளியூரிலும் நடந்துகொண்டேயிருக்கும்.
அப்பொழுது பழைய ஆடைகளை அணிந்துகொள்ளமுடியுமா? எங்களிடமிருந்து வாங்கி உள்ளே வைக்கப்பட்ட புத்தாடைகள் அப்பொழுது எங்களுக்கு அணியத்தரப்படும். வயதொத்த உறவினர்களிடம் புத்தாடைகளைக் காட்டி மகிழ்ந்துகொள்வோம். ஒரு ஆண்டு கழிந்தபின்னர், அவை பழைய ஆடைகள் நிலையை அடைந்தபின், தினப்படி அணிவதற்குத் தரப்படும்.
மேலும் ஒரு ஆண்டு கழிந்தபின் அந்த ஆடையை அணியமுடியாதபடி வளர்ந்திருப்போம். எனக்கு ஓரிரு வயது குறைவான தம்பி இல்லாததால் அது வீட்டுவேலை செய்யும் மகனுக்கோ, அல்லது பழையதுணிக்கு பேரிச்சம்பளம் விற்பவநுக்கோ, பிளாஸ்டிக் பாத்திரங்கள் விற்பவனுக்கோ போய்ச்சேரும்.
இப்படியிருக்கையில்தான் ஒருநாள் சென்னை சென்றிருந்த என் தந்தை வந்துசேர்ந்தார்.
வெளியூர்சென்று திரும்பிவரும்போது எனக்குத் தின்பண்டங்களும், என் தங்கைக்குச் சொப்புகளும் [மரப் பொம்மைப் பாத்திரங்கள்] வாங்கிவருவது அவரது வழக்கமாதலால், நான் ஆவலுடன் அவரருகே சென்றேன்.
வழக்கத்திற்கு மாறாக அவர் பெரிதாக ஒரு பொட்டலத்தைக் கையில் எடுத்து என்னிடம் நீட்டினார்.
அதை ஆவலுடன் வாங்கிப் பிரித்த என் விழிகள் வியப்பில் விரிந்தன.
அறைத்த சந்தன நிறத்தில் ஒரு புஷ்கோட்டும், முழுக்கால் சட்டையும் அதில் இருந்தன. அரைக்கை சட்டையையும், அரைக்கால் டிராயரையும் தவிர வேறு எதையும் அணிந்து அறியாத எனக்கு அளவுகடந்த ஆனந்தம் மனதில் கரைபுரண்டோடியது.
“போட்டுப் பார்க்கட்டுமா, அப்பா?” என் குரலில் பொங்கிவந்த உற்சாகத்திற்கு அணைபோட்டார்கள் என் அம்மாவும், பாட்டியும்.
“கசக்கிப்பிடுவே! தீபாவளிக்குப் போட்டுக்கோ!” என்ற அவர்கள் கட்டளையை மீறமுடியாத ஒரு கையாலாகாத்தனம். புஷ்கோட்டை ஆசையுடன் தடவிப்பார்த்த கைகள் அதைக்கொடுக்க மறுத்தன.
“போட்டுப்பார்த்துட்டு, உடனே கழட்டிடறேன்!” என்று கெஞ்சினேன்.
என் பாட்டிக்கு நான் செல்லமாதலால், அவர்கள் மனமிரங்கி, “போகட்டும், போட்டுப்பார்க்கட்டும். வாங்கினது சரியா இருக்கா இல்லையான்னு பார்க்கவேண்டாமா?” என்று எனக்கு அனுமதி கொடுத்தார்கள்.
கரைமீறிய களிப்புடன் புஷ்கோட்டையும், பாண்டையும் அணிந்துகொண்டேன்.
எனக்கென்றே அளவெடுத்துத் தைத்தமாதிரி மிகவும் சரியாக இருந்தன புஷ்கோட்டும், பாண்ட்டும்.
எனக்கு ஒரே பெருமை! சினிமாவில் வரும் கதாநாயகனாக என்னை நினைத்துக்கொண்டு, அனைவரையும் அசத்தலாக ஒரு பார்வை பார்த்தேன். என் புஷ்கோட்டையும், பாண்ட்டையும் பாராட்டுவார்கள் என்று எண்ணிய எனக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.
என் பாட்டியின் முகத்தில் ஒரு சுளிப்பு. “சின்னப்பையனுக்கு இவ்வளவு சரியா வாங்கினா எப்படி?” என்று முணுமுணுத்தார்கள்.
“ஆறு வயசுப் பையன்னு கேட்டேன். இவனுக்குக் கொஞ்சம் வளர்த்தி ஜாஸ்தியா இருக்கும்னு நினைக்கலே!’ என்று தணிந்தகுரலில் சொன்னார் என் அப்பா.
“காசான காசைப்போட்டு இப்படியா வாங்குவா? ரெண்டு வயசைக் கூட்டிச்சொன்னால் என்னவாம்? குறைந்தா போய்விடும்?” என்று என் அம்மா என் அப்பாவுக்குச் சான்றிதழ் வழங்கினார்கள்.
எனக்குப் புத்தாடைகள் வாங்கி வந்திருப்பதைப் பார்த்த என் தங்கை தனக்கு ஏன் வாங்கவில்லை என்று அழத்துவங்கினாள்.
அவளைச் சமாளிக்க, உள்ளை வைத்திருந்த ஒரு புதுப்பாவாடையையும் சட்டையையும் அவளுக்கு அணிவித்தார்கள் என் அம்மா.
சிறிதுநேரத்திற்குப் பின்னர் எங்கள் இருவரையும் புத்தாடைகளைக் கழட்டச் சொன்னார்கள்.
மூன்றரை வயதான என் தங்கை கண்டிப்பாக மறுத்துவிட்டாள். அதட்டினால் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாள் என்பதால் அவளிடம் தாஜா செய்தார்கள்.
சுவரில் மாட்டியிருந்த போட்டோக்களைப் பார்த்த அவள், தன்னைப் போட்டோ எடுத்தால்தான் புத்தாடையைக் கழட்டுவேன் என்று பிடிவாதம் பிடிக்கவே, எங்கள் இருவரையும் ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றார் என் அப்பா.நான் அங்கிருந்த ஒரு மரக்குதிரைமேல் ஐயனார்போல ஜம்மென்று அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கோண்டேன். குதிரைமேல் அமர என் தங்கை பயந்துவிட்டதால், அவள் குதிரையின் கடிவாளம்மாதிரி துருத்திக்கொண்டிருக்கும் கம்பைப்பிடித்துக்கொண்டு நிற்கச் சம்மதித்தாள். விரல்சூப்பும் பழக்கம் அவளிடம் இருந்ததால், எனது தொப்பியை அவளிடம் கொடுத்து, விரலைச் சூப்பாமல் தடுத்து போட்டோ எடுக்கப்பட்டது.
அடுத்தபடி இரண்டுபேரையும் ஒன்றாக நிறுத்திவைத்துப் புகைப்படம் எடுத்தார்கள்.
வீடுதிரும்பியதும், மகிழ்ச்சியுடன் நான் புது புஷ்கோட்டையும், பாண்ட்டையும் களைந்துகொடுத்து பழைய ஆடைகளை அணிந்துகொண்டேன்.
மிட்டாய் வாங்கித்தந்துதான் என் தங்கையிடமிருந்து அவளது புத்தாடைகளைத் திரும்பப் பெறமுடிந்தது.
என் தாய்வழிப்பாட்டியின் உறவினர்கள் யாரோ இறந்துபோகவே, அந்த ஆண்டு தீபாவளியைக் காரைக்குடியில் கொண்டாடமுடியாமல் போனது. எனவே, சிவகங்கையில் இருக்கும் என் தந்தைவழிப் பாட்டனாரின் இல்லத்தில் கொண்டாடுவதற்காகச் சென்றோம்.
தீபாவளி நாளன்று காலையில் எழுந்து, எண்ணெய் நீராடிவிட்டு, புது புஷ்கோட்டை அணிந்துகொள்ள ஆவலுடன் வந்த என்னை ஏமாற்றமே எதிர்கொண்டது. புறப்படும் அவசரத்தில் புஷ்கோட், பாண்ட்டை எடுத்துவைத்துக்கொள்ள என் அம்மா மறந்துபோய்விட்டார்கள்.
அந்த தீபாவளிக்கு புஷ்கோட் என்ன, வழக்கமான புத்தாடையுமே எனக்கு இல்லாமல் போயிற்று. நாளும் கிழமையுமாகப் புத்தாடை இல்லாமல் இருக்கவேண்டாம் என்று என் தந்தைவழிப் பாட்டனார் கொடுத்த புதுத்துண்டைக் கட்டிக்கொள்ளவும் மறுத்துவிட்டேன் நான். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை அனைவரின் சமாதானமும் என்னிடம் எடுபடவில்லை.
“இவனுக்கு இவ்வளவு ஆங்காரம் ஆகாது,” என்ற வசவுதான் கிடைத்தது.
பிழியப்பிழிய அழுது என் கண்களில் நீரும் வற்றிப்போனது. தீபாவளிப் பட்சணங்கள் எதையும் நான் தொடவில்லை. என் தங்கை அதை ஆவலுடன் எடுத்துக்கொண்டபோதும் நான் அதைச் சட்டைசெய்யவில்லை. மத்தாப்பு, கேப் எதையுமே தொடவில்லை.
என்னைப் பொறுத்தவரை — என் மனதைப்பொறுத்தவரை — காரைக்குடிக்குப் பறந்துசென்று, புது புஷ்கோட்டையும், பாண்டையும் அணிந்துகொள்ளமாட்டோமா என்றுதான் அன்றுமுழுவதும் தோன்றியது.
யாருடனும் பேசாமல் மொட்டைமாடியில் தனியாக உட்கார்ந்துகொண்டு அன்றைய பொழுதைக் கழித்தேன்.
என் தங்கை தான் கொளுத்தப் பயப்படும் கம்பிமத்தாப்பையும், கேப்வெடிகளையும் எனக்குத் தந்து சமாதானப்படுத்த முயன்றும் நான் எதையும் தொடவில்லை, சமாதானமும் ஆகவில்லை.
என் தாய்வழிப் பாட்டியின் உறவினர்கள்வகையில்தான் திருமணம் போன்ற திருநாள்கள் அதிகம் நடைபெறும். உறவினர் மரணத்தால் எதுவும் நடைபெறவில்லை. புது புஷ்கோட்டை அணிந்துகொள்ளவும் வழியின்றிப்போனது.
கடைசியில் தமிழ்ப்புத்தாண்டும் வந்தது.
‘அம்மா, வருஷப்பிறப்புக்கு எனக்குப் புது புஷ்கோட் வேணும். மறக்காமல் எடுத்துக்கோ!” என்று பலதடவை நச்சரித்து, சிவகங்கை செல்லும்போது, அம்மா புஷ்கோட்டை எடுத்துவைத்துக்கொண்டார்களா என்று பெட்டியைப் பரிசோதனை செய்து, அது இருக்கிறது என்று உறுதி செய்துகொண்ட மகிழ்வுடன் சிவகங்கைக்குக் கிளம்பினேன்.
புத்தாண்டும் வந்தது.
அம்மாவும் புஷ்கோட்டையும், பாண்ட்டையும் எடுத்துக் என்னிடம் கொடுத்தார்கள்.
அதை அணியமுயன்ற எனக்கு மீண்டும் ஏமாற்றமே!
காரணம் — அதை அணியமுடியாதபடி நான் அந்த ஆறுமாதங்களில் வளர்ந்துவிட்டிருந்தேன். அளவெடுத்துத் தைத்ததுபோலிருந்த அந்த புஷ்கோட்டும், பாண்டும் எனக்குச் சேரவில்லை. புஷ்கோட்டின் பொத்தான்களைப் போடமுடியாத அளவுக்கு மார்பில் இடைவெளி இருந்தது. கைகள் தோள்பட்டையை இருக்கின. பாண்ட்டை அணியவேமுடியவில்லை. கால்கள் நுழைந்தால்தானே!
இடுப்பைப் பிரித்துத் தைக்கமுடியாதபடி சரியாகத் துணி இருந்தது.
மீண்டும் அழுகை, புத்தாண்டு எனக்குக் கொண்டாட இயலாத ஒன்றாகவே இருந்தது.
காரைக்குடி திரும்பியபின் வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் என்னைப் பார்த்து ஏளனம் செய்தது. நான் புது புஷ்கோட்டுடனும், பாண்ட்டுடனும், ஒரு கோட்டையைக் கைப்பற்றிய வீரனின் பெருமிதம் முகத்தில் தெரிய கம்பீரப்பார்வையுடன் மரக்குதிரையில் சவாரி செய்யும் புகைப்படத்துடன், என் தங்கையுடன் நான் நிற்கும் படமும், என் தங்கை குதிரையின் கடிவாளக் கம்பைப் பிடித்துக்கொண்டு இருக்கும் படமும் என்னைப் பார்த்துச் சிரித்தன.
முதன்முதலாக நான் ஒரேயொருமுறை அணிந்து மகிழ்ந்தாலும், அது நிழலாக, புகையாகவே போனதை, என் கையாலாகாத்தனத்தை நையாண்டிசெய்வதுபோல அப்புகைப்படம் என்னைப்பார்த்துச் சிரித்தது. என்னுள் ஒரு விம்மல் வெடித்து வெளியேறியது.
காரணம் அறியாது என் தாத்தா பாட்டி திகைத்தனர்.
அதற்கப்புறம் ஏனோ எனக்கு அழுகையை அடக்கத் தெரிந்துபோய்விட்டது.
அடுத்த சில நவராத்திரிகளில் கொலுபார்க்கச் செல்வதற்கு ஆண்போல மாறுவேடம் அணிய என் தங்கை அந்த புஷ்கோட்டையும், பாண்ட்டையும் அணிந்துகொள்வாள்.
நான் எனக்குள் எழும் மனவருத்தத்தை உதட்டைக்கடித்து அடக்கிக்கொள்வேன். கண்களிலிருந்து ஒருசொட்டு நீர் வராது. சிறிதுநேரம் அந்தப் புகைப்படத்தையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன். ஓரிரு பெருமூச்சுகள் என்னையுமறியாமல் வெளிவந்தபின்னர் அங்கிருந்து அகன்றுவிடுவேன்.
இதை என் பாட்டி கவனிக்காமலில்லை.
என் அப்பாவிடம் ஒருதடவை, “மாப்பிள்ளை! நீங்கள் கொஞ்சம் பெரிதாக புஷ்கோட் வாங்கிவந்திருந்தால், போட்டுக்க முடியாமல் சுருங்கிப்போயிருக்குமா? இவன் இப்படி ஒடிஞ்சுபோவானா?” என்று என் காதுபடவே வருத்தத்துடன் சொன்னார்கள்.
விவரம் அறிந்த என் அப்பா வருந்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கருஞ்சிவப்புநிற புஷ்கோட் ஒன்று வாங்கித் தந்தார். அதைக் கழட்டாமல், உடனே வெளியே சென்று, மண்ணில்புரண்டு விளையாடி, அதை அழுக்காக்கிப் பழசாக்கி, அதை உள்ளேவைக்கமுடியாமல் செய்து, வாரம் ஒருமுறையாவது அந்த புஷ்கோட்டை அணிந்து ஆறேமாதத்தில் அதைக் கிழித்துக் கந்தலாக்கினேன். அது ஒருவிதமான திருப்தியைத் தந்தது.
ஆனாலும், முதல்முதலாக ஒரே ஒருமுறையே அணிந்த அந்த முதல் புஷ்கோட் தந்த மகிழ்ச்சியை — இரண்டாவது புஷ்கோட்டோ, அதற்குப்பின்னர் நான் கல்லூரியில் படிக்கும்போது வாங்கியணிந்த புஷ்கோட்டோ, வேலைபார்க்கும்போது, திருமண மாப்பிள்ளை அழைப்பின்போது — மேலே விவரிப்பானேன் — எந்தப் புத்தாடையுமோ தரவில்லை. மாறாக தீபாவளிக்கும், வருஷப்பிறப்புக்கும் அணிந்துகொள்ளாமல்போன முதல் புஷ்கோட்டின் நினைவும் ஒரு கையாலாகத உணர்வும் என்னுள் எழும்
ஒவ்வொருமுறை அப்புகைப்படத்தைப் பார்க்கும்போதும், ஒரு கையாலாகாத உணர்வு என்னுள் எழுந்தாலும், என் மகிழ்ச்சியை என்னுள் நிரந்தரமாக்குவதுபோல அந்த புது புஷ்கோட்டின் புகைப்படம் ஒருங்கே தந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தப் படம் இன்னும் என்னிடம் இருக்கிறது.
[கையாலாகாத்தனம் தொடரும்]
மிக அருமை..என் சிறு வயதிற்கு சென்று வந்தது போல் ஒரு உணர்வு.. சிக்கனம் என்ற பெயரில் சிறு வயதில் தொலைத்த சந்தோஷங்கள் எத்தனை எத்தனை…
Really good and humorous article.