நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே
இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.
எந்த நேரத்திலும் தான் ஔரங்கஸிப்பினால் கொல்லப்படலாம் என்கிற அசாதரண சூழ்நிலை உருவாகியிருப்பதனை ராம்சிங்கின் மூலம் அறியும் சிவாஜி, இனியும் தாமதிக்கக்கூடாது முடியாது என்கிற முடிவுக்கு வருகிறார். தன்னுடனிருக்கும் தனது முக்கிய அலுவலர்களை உடனடியாக வெளி வேலகளுக்குச் செல்வதுபோன்ற பாவனையுடன் வெளியேற்றுகிறார். சிவாஜியைப்போலவே தோற்றமளிக்கும் அவரது சகோதரரான ஹிரோஜி ஃபர்ஜானந்த் மட்டுமே உடனிருக்கிறார்.
ஆகஸ்ட் 17, 1666யன்று சிவாஜியும் அவரது மகனான சாம்பாஜியும் பழக்கூடைகளில் அமர்ந்து கொள்கிறார்கள். மாலைமயங்கியதும், அந்தக் கூடைகள் சிவாஜியைக் காவல்காத்துக்கொண்டிருந்த படையணிகளின் வழியாக வெளியே கொண்டுசெல்லப்படுகின்றன. சிவாஜியைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்துக் கொண்டிருந்த படைவீரர்களில் ஒருவர்கூட அந்தக் கூடைகளில் சிவாஜியும், சாம்பாஜியும் இருப்பதனைப் பற்றிய சந்தேகம்கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட இடம்வரை கொண்டுசெல்லப்பட்ட பழக்கூடைகள் ஓரிடத்தில் வைக்கப்பட்டவுடன், அதனைச் சுமந்துவந்தவர்கள் திரும்ப அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.
அந்தக் கூடைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சிவாஜியின் மிக நம்பகமான அலுவலர்களான மற்றும் தானாஜி மலுஸ்ரே ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள். கூடையிலிருந்து வெளியேவரும் சிவாஜியையும், சாம்பாஜியையும் குதிரைகளில் ஏற்றி, வடக்கே மதுராவை நோக்கி (தெற்கிலிருக்கும் தக்காணத்திற்கு பதிலாக) தப்பிச் செல்லவைக்கிறார்கள்.
இதே நேரத்தில் சிவாஜியின் கூடாரத்தில் இருக்கும் சிவாஜியின் சகோதரர் ஹிரோஜி ஃபர்ஜானந்த் அங்கிருக்கும் காவலர்களிடம் சிவாஜி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்கிடப்பதாகவும், அவரைத் தொந்திரவுசெய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஆட்கள் பரபரப்பாக சிவாஜியின் கூடாரத்திற்குள் மருந்துக் குப்பிகளை எடுத்துச் செல்வதும், வெளியே வருவதுமாக இருக்கிறார்கள். சிவாஜி ஆக்ராவைவிட்டுத் தொலைதூரம் செல்லும்வகயில் நேரத்தைக் கடத்துவதே அதன் முக்கிய நோக்கம்.
சிவாஜியின் படுக்கையில் நிலைகுலைந்த நிலையில் படுத்திருக்கிறார் ஹிரோஜி. அவரது ஒரு கை மட்டும் போர்வையிலிருந்து வெளியே தெரிகின்றது. அந்தக் கையின் ஒரு விரலில் சிவாஜியின் முத்திரை-மோதிரம் இருக்கிறது. சிவாஜியைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் முகலாய சிப்பாய்கள் அவ்வப்போது கூடாரத்திற்குள் எட்டிப்பார்த்து, சிவாஜி படுத்துக்கிடக்கிறார் என்று உறுதி செய்துகொள்கிறார்கள். சிவாஜிபோலப் படுத்திருக்கும் ஹிரோஜியின் காலடியில், சாம்பாஜியின் வயதையொத்த ஒரு சிறுவன் அமர்ந்து, அவரது கால்களை அமுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறான். இப்படியாக இரவு கழிந்து, பகலும் வருகிறது. ஆனால் யாருக்கும் எந்த சமாச்சாரமும் தெரியவில்லை என்றாலும் சிவாஜியைக் காக்கும் காவலர்களிடையே அமைதியின்மை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.
இதற்கிடையே கூடாரத்திலிருந்து வெளியே வந்த ஹிரோஜியும், சிறுவனும் தாங்கள் மருந்து வாங்குவதற்காக மருத்துவரிடம் போவதாகச் சொல்லுகிறார்கள். சிவாஜியின் நிலைமை மிகமோசமாகிவிட்டதாகவும் காவலர்களிடம் சொல்கிறார்கள். எனவே மாலை மூன்று மணியளவில் இருவரும் சிவாஜியின் கூடாரத்தைவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் சென்ற சிறிதுநேரத்தில் சிவாஜியின் கூடாரத்தை எட்டிப்பார்த்த காவலனொருவன் அங்கு எவரும் இல்லாததைக் கண்டு கூச்சலிடுகிறான். உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவலர்கள் சிவாஜியையும் அவரது மகனையும் தேட ஆரம்பிக்கிறார்கள்.
சிவாஜி தப்பிவிட்ட செய்திகேட்டு புலந்த்கான் அந்த இடத்திற்கு விரைந்து வருகிறான். சிவாஜி உண்மையிலேயே தப்பிவிட்டதை உணர்ந்த புலந்த்கானின் தலையில் இடிவிழுந்தது போலாகிறது. சிவாஜியின் படுக்கையில் யாரோ படுத்திருப்பதனை உணர்ந்த புலந்த்கான் அவனை எழுப்புகிறான்.
“என்னைப் படுக்கையில் படுக்கச் செய்த சிவாஜி எங்கேயோ போய்விட்டார். எனக்கு அதற்குமேல் ஒன்றும் தெரியாது,” எனச் சொல்லும் அந்த ஆசாமியையும், வேறு சில வேலைக்காரர்களையும் கட்டி இழுத்துச் செல்லும் புலந்த்கான், சிவாஜி தப்பிய செய்தியை ஔரங்கஸிப்பிற்குத் தெரிவிக்கிறான். தக்காணத்து சிவாஜி தப்பிய செய்தியைக் கேட்ட ஆக்ராவாசிகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறார்கள்.
ஔரங்கஸிப் கோபத்துடன் அந்தப் பகுதியைச் சுற்றிக் கடுமையாகத் தேடச் சொல்கிறார். முகலாய அரசின் கவர்னர்கள் அனைவருக்கும் தப்பிச் சென்ற ‘சிவா’வைப் பிடிக்க உத்தரவுகளை அனுப்பிவைக்கிறார். சிவாஜி தப்பிய பதினைந்து மணி நேரம் கழித்து, சிவாஜியின் அலுவலர்களிடையே ஔரங்கஸிப்பினால் அமர்த்தப்பட்ட உளவாளி ஒருவன் சிவாஜி தப்பிவிட்டதாகவும், தக்காணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறான்.
அதாகப்பட்டது, சிவாஜியின் கூடாரங்களைச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்த காவலர்களுக்குத் தெரிவதற்குமுன்பே ஔரங்கஸிப்பிற்கு விஷயம் தெரிந்துவிட்டது. இருந்தாலும், அவர் அதனை நம்பாமல் ஒரு கொத்வாலை (போலிஸ்காரன்) அனுப்பி, சோதித்துவரச் சொல்லுகிறார். அதன்படி சிவாஜியின் கூடாரத்திற்குள் எட்டிப் பார்க்கும் கொத்வால், சிவாஜியின் கையில் இருக்கும் முத்திரை மோதிரத்தைப் பார்த்துவிட்டு உளவாளி சொல்லும் செய்தி பொய்யென்று ஔரங்கஸிப்பிடம் சொல்கிறான். மூன்றாவது முறையாக அதையே சொல்லும் உளவாளி, “இன்னேரம் சிவாஜி முப்பது மைல்களைக் கடந்திருக்காவிட்டால் என்னை வெட்டிக் கொல்லுங்கள்” என்கிறான்.
அதனைத் தொடர்ந்தே சிவாஜியின் கூடாரத்தை முழுமையாகச் சோதிக்கச் சொல்கிறார், ஔரங்கஸிப். அப்பொழுதுதான் கூடாரத்தைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலர்கள் உண்மையை அறிந்து அதிர்ச்சிகொள்கிறார்கள். ஔரங்கஸிப் ஜெய்சிங்கின் மகனான ராம்சிங்மீது சந்தேகம்கொள்கிறார். ராம்சிங் முகலாய அரசவைக்குள் நுழைவது தடைசெய்யப்படுகிறது.
ஆக்ராவின் உளவாளிகளும், புலந்த்கான் போன்றவர்களும் ஔரங்கஸிப்பினால் வறுத்தெடுக்கப்படுகிறார்கள். பலரின் பதவி பறிக்கப்படுகிறது. தனது மாமனான சைஸ்டாகான், நரக ஹிந்து நாய் சிவாஜியின் மந்திரவித்தைகளைக் குறித்துத் தனக்கு ஏற்கனவே அறிவித்திருந்தும், தான் கவனமாக இல்லாமல் போய்விட்டதை எண்ணி மனம்குமைகிறார் ஔரங்கஸிப்.
ஔரங்கஸிப்பிடம் சிவாஜியின் மனுக்களைக் கொண்டுவந்த அவரது வலதுகரமான ரகுநாத் பல்லால் கோர்டே கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்படுகிறார். சிவாஜியைப் போல நடித்துப் படுக்கையில் படுத்திருந்த அவரது சொந்த சகோதரரான ஹிரோஜியும், அவருடனிருந்த சிறுவனும் பிடிக்கப்பட்டு ஔரங்கஸிப்பின் முன்னர் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். ஔரங்கஸிப் ஹிரோஜியை வாய்க்கு வந்தபடி ஏசி, சிவாஜியைக் குறித்த விபரங்களைத் தருவதற்கு நிர்பந்திக்கிறார் ஔரங்கஸிப். ஹிரோஜி தனக்கு ஒன்றும் தெரியாதென்றும், முந்தியநாள் மாலை தன்னுடைய படுக்கையில் படுத்துக்கொள்ளச் சொன்ன சிவாஜி, எங்கே போனாரென்று தனக்குத் தெரியாதென்றும் மீண்டும் மீண்டும் சாதிக்கிறார். ஹிரோஜியுடன் இருந்த சிறுவனும் அதனையே திரும்பத் திரும்பச் சொல்கிறான்.
அந்தச் சிறுவன் ஒரு முஸ்லிம். அவனது பெயர் மதாரி மெஹ்தார் — கூடாரங்களில் விரிக்கப்பட்டுள்ள கம்பளங்களை சுத்தம் செய்பவன். ஔரங்கஸிப், “முஸல்மானான நீ எனக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்; இல்லாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என மிரட்டுகிறார். மதாரி மீண்டும் அதே கதையைச் சொல்கிறான். ஔரங்கஸிப்பிற்குக் கோபம் உண்டானாலும் அவர்களின் விஸ்வாசத்தை மெச்சிக்கொள்கிறார். பின்னர் அவர்கள் இருவரையும் விடுதலைசெய்கிறார்.
ஹிராஜியும், மதாரி மெஹ்தாரும் பின்னர் பாதுகாப்பாகத் தக்காணத்தை வந்தடைகிறார்கள். சிவாஜி, ஹிரோஜிக்கு ராய்காட் கோட்டையின் ஹவில்தார் பதவியைக் கொடுத்து கவுரவிக்கிறார். மதாரி மெஹ்தாருக்கும், அவனது குடும்பத்திற்கும் சிறப்புச் சலுகை ஒன்று வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மராட்டா அரசரும் முடிசூடும் சமயத்தில் வழங்கப்படும் பெரும் பரிசுகளின் அளவு பரிசுகள் மதாரி மெஹ்தாரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது. மதாரி ஔரங்கஸிப்பிடம் உண்மையைச் சொல்லியிருந்தால் ஏராளமான பதவியும், பரிசுகளும் அவனுக்குக் கிடைத்திருக்கும். இருந்தாலும் சிவாஜியின் மீது கொண்ட விசுவாசம் காரணமாக அவன் அதனைச் செய்யவில்லை. மதாரியின் சந்ததியினர் இன்றைக்கும் சதாராவில் வாழ்ந்து வருகிறார்கள்).
ஔரங்கஸிப் தனது நெற்றியில் கைவைத்து தனது தலைவிதியை நொந்துகொள்கிறார். சிவாஜி தப்பியது முற்றிலும் தனது கவனக்குறைவாலே வந்தது; சிவாஜி சந்தேகப்படும்வகையில் அவரது கூடாரத்தைச் சுற்றி ஏராளமான படைகளைத் தான் நியமித்திருக்கக் கூடாது எனக் கூறிக்கொள்கிறார். முகலாய அரசின் அத்தனை பகுதிகளுக்கும் சிப்பாய்களையும், உளவாளிகளையும் அனுப்பி வைக்கும் ஔரங்கஸிப், சிவாஜி மாறுவேடமிடுவதில் விற்பன்னர் என்பதால் சிப்பாய்களும், உளவாளிகளும் தங்களின் கண்முன் தெரியும் அத்தனை சன்னியாசிகளையும் (Jangam, Jogi, Joshi, Sanyasi, Bairagee, Nanak Panthi, Gorakh Panthi, Kangal….), பிச்சைக்காரர்களையும், பைத்தியக்காரர்களையும் நன்கு விசாரணை செய்யவேண்டும் என உத்தரவிடுகிறார்.
தன்னைச் சுற்றிலும் பாதுகாப்பையும் பலப்படுத்துகிறார், ஔரங்கஸிப். இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருந்து தப்பிய ஒருவன், நிச்சயமாக தனக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆக்ராவுக்குள் எங்கேனும் ஒளிந்து கொண்டிருப்பான் என நம்புகிறார். கோபமும், வருத்தமும் தோய்ந்த மனிதராக மாறும் ஔரங்கஸிப், சிவாஜியைக் கண்டதும் கைதுசெய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ராஜா ஜெய்சிங்குக்குக் கடிதம் எழுதுகிறார்.
[தொடரும்]
சிவாஜியின் இந்த வீர தீர சாகசம் நான் படிக்கும் போது பாடத்திட்டத்தில் இடம் பெற்றது.தற்சமயம் இருக்கின்றதா என்பது தெரியவில்லை. அருமையாச சாகசம்.
அறிவாற்றலுக்கும் ஒழுக்கத்தற்கும் நோ்மைக்கும் புகழி பெற்ற சிவாஜி இன்றும் மக்கள் மனதில் இடம் பெற்று வருகின்றார்.அவரது சரித்திரம் இன்றும் மக்களுக்கு விரும்பி படிக்கும் பாடம்.