கொலைகாரக் கிறிஸ்தவம் – 16

கோவா இன்குசிஷன் விசாரணைகள் — கிறிஸ்தவர்களல்லாத பிற மதத்தவர்களைக் கண்டறிந்து தண்டனையளிப்பது, அவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது, அதற்கு உடன்படாத பிறமதத்தவர்களையும், மதம்மாறிய பின்னரும் தங்களின் பழைய மதங்களை ரகசியமாக பின்பற்றுபவர்களையும் சித்திரவதை செய்து கொல்வது போன்ற நடவடிக்கைகள் — போர்ச்சுகலில் யூதர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை ஒட்டிச் செய்யப்பட்டவையாகும். கோவாவில் ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைக் குறித்த ஆவணங்கள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டன. இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் குறிப்புகளின் அடிப்படையில் இந்தக் கொடூரங்களைக் குறித்து நாம் அறியக் கிடைக்கிறதென்றாலும் அவை அதிர்ச்சியை அளிப்பவை என்பதில் சந்தேகமேயில்லை.

இந்திய ஹிந்துக்களின் அறியாமை எந்த அளவிற்கு இருக்கிறதென்றால் — எந்த செயிண்ட் சேவியர் கோவா ஹிந்துக்களைக் கொடுமைப்படுத்தி அவர்களின் ஆலயங்களை இடித்தானோ –அதே செயிண்ட் சேவியர் இன்றைக்குப் புனிதனாகக் கருதப்படுகிறான். தான் கட்டாயமாக மதம்மாற்றப்பட்டதை உணராத கோவா கிருஸ்தவன், தன்னை ஒரு கிறிஸ்தவனாக அறிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறான். இந்தியாவின் பிறபகுதியிலிருக்கும் ஹிந்துக்கள் இந்தக் கொடுமைகளை இன்றுவரை அறியவில்லை. உலகின் எந்தவொரு பகுதியிலும் வலிமைபெறும் கிறிஸ்தவம் அந்தந்த பகுதியின் மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் என அத்தனையையும் அழித்தொழிக்கும் என மீண்டும்மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனை உணரச்செய்வதே இந்தத் தொடரின் நோக்கம் என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

*           *           *

கோவா இன்குசிஷன் விசாரணைகளின் இரண்டு தீர்ப்பாயங்கள் (tribunals) ஏறக்குறைய போர்ச்சுக்கல்ல் விதிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டுப்படுகள் அடிப்படைகளில் அமைந்தவை. Regimento do Santo Officio da Inquisicam dos Reynos de Portugal (Manual of Rules and Regulations of the Holy office of the Inquisition in the Kingdom of Portugal) என அறியப்படும் இன்குசிஷன் சட்ட வரையறைகள், நடைமுறைகளைக் குறித்த இந்தப் புத்தகம் 1640-ஆம் ஆண்டு பிஷப் ஃப்ரான்ஸிஸ்கோ டி காஸ்ட்ரோ என்பவரால் போர்ச்சுக்கலில் வெளியிடப்பட்டது. 1613-ஆம் வருடம் இன்குவிசிடர் ஜெனரலாக இருந்த பிஷப் பெட்ரோ டி காஸ்ட்டில்ஹோ என்பவரால் எழுதப்பட்ட புத்தகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட காஸ்ட்ரோவின் புத்தகம் பல மாற்றங்களையும், புதிய சட்டங்களையும், தண்டனைகளையும் இணைத்து எழுதப்பட்ட ஒன்று.

மூன்று தொகுதிகளாக எழுதப்பட்ட காஸ்ட்ரோவின் இன்குசிஷன் சட்டப்புத்தகம் ஒவ்வொன்றிலும் 22 அத்தியாயங்கள் உண்டு. முதலாவது தொகுதியின் ஒவ்வொரு அத்தியாயமும் இன்குசிஷன் நடைமுறைகளையும், அதனைச் செய்யும் அதிகாரிகளின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், தகுதிகள் மற்றும் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிகள் குறித்தும் விளக்குகின்றன.

28 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாவது தொகுதி இன்குசிஷன் விசாரணைகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், 27 அத்தியாயங்கள் கொண்ட மூன்றாவது தொகுதி இன்குசிஷன் விசாரணையில் கண்டறியப்பட்ட குற்றவாளிகளுக்கு அளிக்கவேண்டிய தண்டனைகளையும், அபராதங்களையும் குறித்த விவரங்களையும் கூறுகிறது.

மேற்கண்ட புத்தகமே நமக்கு கோவாவில் ஹிந்துக்களின் மீது எத்தகைய நடவடிக்கைகள் போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவ மதவெறியர்களால் எடுக்கப்பட்டன என்பதனை அறிந்துகொள்ள உதவும் ஒரு தெளிவான அடிப்படையைத் தருகிறது. இந்தப் புத்தகம் வெளீயவந்த பிறகு கோவாவில் பிற மதத்தவர்கள், கிறிஸ்துவின் மீது நம்பிக்கையற்ற கிறிஸ்தவர்கள் இவர்களின்மீது விசாரணைகள் துவங்கியிருப்பதான அரசாணை வெளியிடப்படுகிறது.

“போர்ச்சுக்கீசிய அரசருக்குக் கட்டுப்பட்ட இந்தப் பகுதியின் புனித இன்குசிஷன் விசாரணைகளின் இன்குவிசிட்டர் ஜெனரல்களாகிய நாங்கள் அறிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்தியாவிலிருக்கும் கோவா நகரத்தின் ரெவரெண்ட் ஆர்ச்பிஷப் மற்றும் அவரது அலுவலர்கள் இன்குசிஷன் புனித விசாரணைகளைத் துவங்கியிருக்கிறார்கள். எனவே இந்தப் புனித இன்குசிஷன் அலுவலகம் கோவா பகுதியில் இந்த விசாரணைகளை தொடங்கி நடத்துகையில், பரமண்டலத்தில் இருக்கும் நமது பிதாவிற்கோ அல்லது புனித கத்தோலிக்க மதத்திற்கோ எந்தவிதமான அவப்பெயரும் வராமல் நடத்தப்படவேண்டும். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் எவ்வாறு முறையாக, எந்தப் பிழையும் இல்லாமல் நடத்தவேண்டும் என்பதை இந்தப் புத்தகத்திலிருந்து படித்து உணர்ந்து கொள்ள வேண்டும்…..”

இன்னின்னாருக்கு இன்ன பதவிகள் வழங்க வேண்டும், முக்கியமாக அவர்கள் கிறிஸ்தவர்களாகவும், போர்ச்சுக்கீசிய அரசருக்கும், சர்ச்சுகளுக்கும் அடிபணிய வேண்டியவர்களாகவும், ரகசியங்களைக் காப்பாற்றுபவர்களாகவும், சட்ட வரைமுறைகளை இரக்கமின்றி செயல்படுத்துபவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம் என உணர்த்தப்பட்டது. பதவி ஏற்பதற்கு முன்னர் ஒவ்வொருவரும் தாங்கள் உண்மையாக இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதற்கென உருவாக்கப்பட்ட சிறைகள் ஆர்ச் பிஷப்பின் வீட்டினை ஒட்டிக் கட்டப்பட்டன. விசாரணைக்கு வரும் கைதிகளை விசாரித்துத் தண்டனையளிக்க எளிதாகும் என்பதால். ஒருவேளை அப்படியான சிறைகள் கிட்டவில்லையென்றால் அல்லது அந்தச் சிறைகள் நிரம்பிவிட்டால் அந்தப் பகுதியிலிருக்கும் எந்தவொரு வீட்டையும் இன்குசிஷன் விசாரணை அதிகாரிகள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த வீடுகளில் அடைக்கப்படுபவர்கள் விசாரணை முடிந்தவர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் நடத்தாமலிருக்கும் பொருட்டு எச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோலவே வெளியார் எவரும் அங்கு நடப்பதைக் காண்பதற்கோ அல்லது தொடர்புகள் வைத்துக் கொள்வதற்கோ வழியில்லாமல் மிகக் கடுமையானமுறையில் அந்த வீடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

இப்போதைக்கு கோவாவிலும், கொச்சியிலும் நிகழ்ந்த இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து மட்டும் பார்க்கலாம்.

விசாரணைகள் தொடங்குவதாக கோவாவில் அறிவித்த பின்னர், கொச்சியிலும் இதே போன்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டன. போர்ச்சுக்கீசியர்களின் கீழிருந்த பகுதிகளில் இந்த இரண்டு நகரங்கள் மட்டுமே ஓரளவிற்கு மக்கள்தொகை கொண்டவையாக இருந்தன என்பது முக்கிய காரணம்.

இன்குசிஷன் விசாரணைகள் தொடங்குவதனைக் குறித்து அந்தந்த நகரங்களில் உள்ள முக்கியமான சர்ச்சுகளில் நிகழ்ந்த பிரார்த்தனைக் கூட்டங்களில் அறிவிக்கப்பட்டன. மேலும் அதற்கான சட்டங்கள் எழுதப்பட்ட புத்தகங்கள் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்ப்பட்டன. இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு நான்குமாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டு, புதிதாக மதம்மாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் தாங்களாகவே முன்வந்து அவர்களின் குற்றங்களை — அவர்கள் தங்களின் பழைய மத ஆச்சாரங்களைப் பின்பற்றுவதாக, ஒப்புக்கொண்டால் அவர்களுக்குச் சிறை தண்டனைகளிலிருந்தும் அபராதங்களிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் அவர்கள் இனிமேல் கிறிஸ்தவ மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றுவதாக உறுதிமொழிகள் அளிக்கவேண்டும்.

சர்ச்சுகளில் இரண்டு பக்கங்களுள்ள ஒரு பெரிய நோட்டுப் புத்தகம் வைக்கப்பட்டு, அதன் ஒருபகுதியில் தாங்கள் கிறிஸ்தவ மதத்தை இனிமேல் பின்பற்றுவதாக உறுதிமொழியும், அடுத்த பக்கத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகத் தாங்கள் செய்த பாவங்களைக் குறிப்பதற்கும் எடுத்துச் சொல்லப்பட்டது. தாங்கள் செய்த பாவங்களுக்கு மனம் கனிந்து இரக்கம் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிடவும் சொல்லப்பட்டது.

இம்மாதிரியான குறிப்புகள் எழுதப்பட்ட புத்தகங்கள் எண்கள் இடப்பட்டு அந்தச் சர்ச்சின் பாதிரியால் கையொப்பம் இடப்பட்டது. பின்னர் அவை ஆர்ச் பிஷப்பின் முன்னிலையில் இன்குசிஷன் விசாரணைகள் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுபோலவே கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவன் பிடிக்கப்படுகையிலும், அவன் ஆர்ச் பிஷப்பின் முன்னிலையில் வைத்தே இன்குசிஷன் விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அவ்வாறு ஆர்ச் பிஷப் இல்லாத நிலையில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள கிறிஸ்தவப் பாதிரிகள் அந்த இடத்தை வகித்தார்கள்.

Image result for goa inquisition

ஒரு ஹிந்துவையோ, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாத கிறிஸ்தவனையோ விசாரணைக்கு கைது செய்யுமுன்னர் அதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அந்த வாரண்ட்டில் ஆர்ச் பிஷப் கையெழுத்திட்டார். அவ்வாறு கைது செய்யப்பட வேண்டியவன் முக்கியஸ்தனாக, பணக்காரனாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்து வைசிராயிக்குச் சொல்லப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

கிறிஸ்துவுக்கு, கிறிஸ்தவ மதத்திற்குப் புறம்பாக ஒருவன் நடப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டால், அவனது அசையும்-அசையாத சொத்துகள் அனைத்தும் ஜப்தி செய்யப்பட்டு இன்குசிஷன் விசாரணை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  அம்மாதிரியானவர்கள் ஹிந்துக்களாக இருந்தால் அவனது சொத்துக்கள் அனைத்தும் போர்ச்சுக்கீசிய அரசனுக்கு அளிக்கப்பட்டது. இருப்பினும் போர்ச்சுக்கல் அரசன் 1559-ஆம் வருடம் பிறப்பித்த அரசாணையின்படி அவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்கள் புதிதாக மதம்மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் மதம்மாறி ஐந்து வருடங்களாகியிருந்தால் அவர்களின் சொத்து முழுமையும் போர்ச்சுக்கீசிய அரசனுக்குச் சொந்தமாகும்.

புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துவோ அல்லது முஸ்லிமோ கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக நடந்து கொண்டால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டால் அதற்கு மன்னிப்பு வழங்கப்பட்டது என்றாலும் முதலில் அவர்கள் ஒரு தனியறையில் அடைக்கப்பட்டு பரமண்டலத்திலிருக்கும் பிதாவின் மகிமையைக் குறித்தும், கிறிஸ்தவ மதத்தின் மகிமையைக் குறித்தும் பாடம் கற்றபிறகே அங்கிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

ஏசு கிறிஸ்துவை பாவங்களைத் துடைக்க வந்த கடவுளின் குமாரனாக ஒத்துக் கொள்ளாதவர்கள், யூத மதச் சடங்குகளைச் செய்தல், திருவிழாக்களில் பங்கெடுத்தல், சனிக்கிழமைகளில் வேலைசெய்தல், பன்றி இறைச்சியை உண்ணதிருத்தல், முயல்களையும், செதில்களில்லாத மீன்களைத் திண்ணுதல், பிறமதத்துப் பிரார்த்தனைகளைச் சொல்லுதல், செத்தவர்களைக் குளிப்பாட்டுதல், புதிய துணிகளில் தைக்கப்பட்ட நீண்ட அங்கிகளை அணிதல், புதிய தரையில் இறந்தவர்களை ஆழமாகப் புதைத்தல், அவர்களின் குழந்தைகளின் முன்னே அழுதல், இறந்தவர்களின் வாயில் வெள்ளி, தங்கக் காசுகளை வைத்தல், நகங்களை வெட்டி அவற்றைக் காப்பாற்றி வைத்தல், உட்கார்ந்திருக்கும் நாற்காலியைவிடவும் உயரம் குறைந்த மேசையில் உணவு உண்ணுதல், துக்ககாலத்தில் கதவுக்குப் பின்னே ஒளிந்திருத்தல் — இவை அனைத்தும் இயேசுவுக்கு எதிரான குற்றச் செயல்களாகக் கருதப்பட்டன.

மதம்மாற்றப்பட்ட எந்தவொரு முஸ்லிமும், குரானைப் படிப்பதோ அல்லது முகமது நபியைக் குறித்துப் பேசுவதோ குற்றமாகும். மார்ட்டின் லூதர் அல்லது கால்வின் போன்ற கிறிஸ்துவுக்கு எதிரானவர்களைப் புகழ்வது, கிறிஸ்துவைக் குறித்தும் அவர் செய்த அற்புதங்களைக் குறித்தும் சந்தேகம் கொண்டு பேசுவது, வானத்தில் சொர்க்கம் இருப்பதனை மறுதலிப்பது, கிறிஸ்தவர்கள் மட்டுமே சொர்க்கத்திற்குப் போவார்கள் மற்றவர்களுக்கு நரகமே கிடைக்கும் என்கிற நம்பிக்கையைக் கேலிசெய்வது, பாவமன்னிப்புக் கேட்கத் தவறுவது, பாவமன்னிப்பில் உண்மையைச் சொல்லாமல் மறைப்பது, பைபிளில் கூறப்பட்ட எந்தவொரு பகுதியைக் குறித்தும் சந்தேகம் கொள்வது, மனைவி உயிருடன் இருக்கையில் இன்னொரு மணம் புரிவது, மனிதன் தனக்குப் பிரியமானதைச் செய்யவும், சொல்லவும் உரிமையில்லை என்று சொல்வது, மதப்பற்றில்லாமலேயே நல்ல செயல்களைச் செய்து தனது ஆன்மாவைக் காப்பாற்றி கொள்ள முடியும் என்றும், பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நடப்பதற்கு மனிதன் பொறுப்பல்ல என்றும், புனிதர்கள் என்று எவருமில்லை எனச் சொல்வதும், புனித அடையாளங்களை மறுதலிப்பதுபோன்ற செயல்களும் இன்குசிஷன் விசாரணைகளில் கிறிஸ்துவுக்குக்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் எதிரானவை எனக் கொள்ளப்பட்டுத் தண்டனைகள் அளிக்கப்பட்டன.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *