(இக்கட்டுரைத் தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்)
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிச் செய்த
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்
மொழிபெயர்ப்பு: கோவை கவியரசு கு. நடேசகவுண்டர்
விளக்கவுரை: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி
(7)
பா³ல்யாதி³ஷ்வபி ஜாக்³ரதா³தி³ஷு ததா² ஸர்வாஸ்வவஸ்தா²ஸ்வபி
வ்யாவ்ருʼத்தாஸ்வனுவர்தமானமஹமித்யந்த꞉ ஸ்பு²ரந்தம்ʼ ஸதா³ ।
ஸ்வாத்மானம்ʼ ப்ரகடீகரோதி ப⁴ஜதாம்ʼ யோ முத்³ரயா ப⁴த்³ரயா
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥ 7॥
பாலியமு தற்பருவம் நினைவாகி நிலையெனப்
படுவேறு நிலையி லெல்லாம்
மாலையுறு நாறென ஒரேபொருள தாய்நின்று
மாறா ததன்ம யத்தைக்
கோலியசின் முத்திரையின் அறிவுறுக் கின்றநற்
கோலத்த ஞான யோகச்
சீலமுறு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !
இந்தப் பாடலில் பகவத்பாதரவர்கள் ஆன்மாவின் சொரூபத்தை, உண்மைநிலையை உணர்த்தியருளுகின்றார். முந்திய பாடல்களில் ஆன்மா சூனியமன்று, தேகமன்று, இந்திரியங்களன்று, பிராணனன்று என்பதை உணர்த்தினார். இப்பாடலில் ‘தன்மயம்’தான் (வடமொழியில் ஸ்வாத்மானம்’ svatmanam) ஆத்மாவின் இயல்பு. ‘நான்’ என்பதுதான் ஆத்துமாவின் சொரூபம் என்பதை அழகாக விளக்குகின்றார்.
மனித வாழ்க்கையில் நான்கு நிலைகள் அல்லது அவத்தைகள் கூறப்படும். பாலியம், குமரம் அல்லது கௌமாரம், வாலிபம், முதுமை அல்லது கிழப்பருவம் இவை தொடர்ச்சியாக வரும் நிலைகள். நாள்தோறும் நாம் அனுபவிக்கும் அவத்தைகளும் உண்டு. நனவு, கனவு, சுழுத்தி, உறக்கம், பேருறக்கம் என்பன அந்த அவத்தைகள். இவைதொடர்ச்சியாக நிகழ்வன அல்ல. இடையீடுபட்டு நிகழ்வன. இவைபோலவனவே கோபம், மகிழ்ச்சி இன்பம் துன்பம் வெறுப்பு விருப்பு போன்ற உணர்வுகள் நாம் அனுபவிக்கின நிலைகள்.
இந்த நிலைகளை அனுபவிக்கும் போதெல்லாம் ‘நான்’ குழந்தையாக இருந்தேன், ‘நான்’கௌமாரன், ‘நான்’ வாலிபன். ‘நான் முதியவன்’, ‘நான்’ கோபத்துடன் இருக்கிறேன், ‘நான்’ அமைதியுடையேன், ‘நான்’ நோயுடையேன், ‘நான்’ வலியேன் என எல்லா அவத்தைகளிலும் ‘நான்(இவ்வாறு) இருக்கிறேன்’ எனும் உணர்வு, பூக்களை மாலையாகக் கட்டிய நார் போலத் தொடர்ந்து உள்ளதை அறியலாம். இதனால் ‘நான்’ வேறு; என் குணமாக அறியப்பட்ட குழந்தைப் பருவம் முதலியன, நனவு கனவு முதலியன, கோபம் மகிழ்ச்சி என்பனவெல்லாம் என் இயல்பல்ல, நான் எப்பொழுதும்.இருப்பதுதான் என்னியல்பு என அறிதல் வேண்டும். அதாவது பூக்கள் எந்நிறத்தவாயினும், எந்த அளவினவாயினும் அவற்றை மாலையாகக் கட்டபெற்ற நார் ஒரே பொருளாக இருப்பது போல, எல்லா அவத்தைகளிலும் மாறாத ”ஒரேபொருளதாய்( நின்று ) மாறாத தன்ம ய) “நான்” என்ற ஆன்மா இருக்கின்றது.
இந்த ‘நான்’ எனும் மாறாத தன் மயத்துடன் , ‘நான் இவ்வாறு இருக்கிறேன்’ எனும் அடைமொழி அல்லது அவத்தைக் குணம் சேரும் போது ‘அஹங்காரி’ எனப்படும். எந்த அடைமொழியும் இன்றித் ‘தன்மயமாய்’ இருக்கும்போது ‘ஆன்மா’ எனப்படும்.
இவ்வாறு ஆன்மா எனும்பொருள் எத்தகையது எனக் குருநாதர் மாணாக்கருக்கு அறிவித்தார்.
இந்த உண்மையைக் குருநாதராக வந்த பரம குருவாகிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி எவ்வாறு உணர்த்தினார்? வாக்கால் சொல்லாமல் ‘மௌன வியாக்கியானம்’ செய்தார். உடல்மொழியால் (body language) உணர்த்தினார். ஏனெனில் ஆன்மாவின் ‘தன்மயமாகிய’ நிலை ஓதி, அறிவித்து அறிவதன்று. வாக்கு மௌனம், காயமௌனம் மனோமௌனமாக இருந்து அனுபவித்து உணர்வதாகலான். ஆன்மாவின் ‘தன்மயம்’ அனுபவ அறிவேயன்றி ஓதியறியும் அறிவன்று.
ஆன்மாவின் ‘தன்மய’மாம் உண்மையை மாணாகருக்கு உணர்த்த ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி பயன்படுத்திய உடல்மொழிக்குச் ‘சின்முத்திரை’ என்பது பெயர். அவர் தமது வலக்கரத்தால் சின்முத்திரைகாட்டி ஆன்மாவின் தன் மயத்தை உணர்த்தினார். ( வரலாற்று மரபின்படி வராத குருக்கள்மார் சிலர் இடக்கரத்தால் சின்முத்திரை காட்டுகின்றனர். அதுமரபன்று. பிழையும் பாவமுமாகும்)
மாணக்கர்கள் சர்வதுக்க நிவிர்த்தி பரமானந்த பிராப்தி (பேரின்பவீடு) அடையும்பொருட்டுச் சற்குருநாதர் தம் கையில் அமைத்துக் காட்டும் முத்திரை சின்முத்திரையாகும்.
வலக்கரத்தில் ஐந்து விரல்கள் உள்ளன. அவற்றில் கட்டைவிரல் தனித்தும் மற்றைய நான்கு விரள்கள் இணைந்தும் உள்ளன. தனித்து நிற்கும் கட்டைவிரல் சிவப்பிரமத்தைக் குறிக்கும். சுட்டுவிரல் சீவனைக் குறிக்கும். நடுவிரல் ஆவரணம் எனும் அறியாமையைக் குறிக்கும். மோதிரவிரல் அவரணத்தின் நீட்சியாகிய விக்ஷேபத்தைக் குறிக்கும் அறியாமையினால் விளைவது சித்தசலனம் எனும் சித்தசஞ்சலம். சிறுவிரல் மலம் எனும் பாப கருமங்களைக் குறிக்கும். பாபவினைகள் ஆவரணம் எனும் அறியாமையினாலும் விக்ஷேபம் எனும் சித்த சஞ்சலத்தாலும் விளைவது.
குருநாதர் சுட்டு விரலாகிய ஆன்மாவை ஆவரணம் விக்ஷேபம் பாபகர்மம் எனும் மூன்று விரல்களிலிருந்து பிரித்துச் சிவப்பிரமம் எனும் கட்டைவிரலொடு இணைத்துச் சின்முத்திரை காட்டுகின்றார். சுட்டுவிரல் நுனியையும் கட்டை விரல் நுனியையும் சேர்த்து ஒன்றுபடுத்திக் காட்டுகின்றார்.
இந்தச் சின்முத்திரையின் பொருள்:
1. சுட்டுவிரலை நடுவிரலினின்றும் பிரித்துக் காட்டுவதால் ஆவரணம் என்னுமறியாமையை ஆத்மபிரம்ம ஐக்கிய (ஏக) சொரூபத்தை அறிவதாகிய ஞானத்தால் விலக்க வேண்டும்.
2. மோதிர விரலை விலக்குவதால், ஈசனைக் குறித்த நிஷ்காம உபாசனையால்( எதனையும் வேண்டாத வழிபாடு) விக்ஷேபம் எனும் சித்த சஞ்சலத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.
3. சுண்டுவிரலாகிய சிறுவிரலை விலக்கிக் கொள்வதால், ஈசுவரனைக் குறித்த நிஷ்காம புண்ணிய கர்மத்தால் மலம் எனும் பாபகருமத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆவரணம் விக்ஷேபம் மலம் ஆகிய மூன்று உபாதிகளையும் நீக்கிக் கொண்ட ஆன்மா சச்சிதானந்தமாக விளங்கும். இவ்வாறு அது நீ என்ற தத்துவமசி மஹாவாக்கியம் சின்முத்திரையின் வாயிலாக உணர்த்தப்பட்டது.
மற்றொரு விளக்கம்:
நடுவிரல் தூலதேகம்; மோதிரவிரல் சூக்கும தேகம்; சுண்டுவிரல் காரணதேகம்.தூலதேகம் ஆன்மாவுக்கு நெருக்கமாகவும் காணும்படிப் பெரிதாகவும் உளது.
சுட்டுவிரல் நடுவிரல் மோதிர விரல் சுண்டு விரல் மூன்றையும் விட்டு விலகிக் கட்டை விரலுடன் ஒன்றி இணைந்து இருப்பது, ஆன்மா உபாதியகிய மூன்று தேகங்களையும் விட்டுநீங்கிப் பிரமத்துடன் ஒன்றி இருப்பதுவே முத்திநிலை என்பதை உணர்த்தும்.
கட்டைவிரல் சத்து ஆகிய உள்பொருள் (existence) ; ஞானமாகிய ஆன்மா (consciousness). இரண்டும் ஒன்றே; இதைத்தவிர வேறு பொருள் இல்லை என உணர்த்துவதாகும். இந்தச் சின்முத்திரையில் சுட்டுவிரல் நுனி பெருவிரல்மேல் நின்று ஒரு வட்ட வடிவை (circle)க் காட்டும். விலக்கப்பட்ட மூன்று தேகங்களும் அவற்றின் காரணமுமே சித்தைச் சத்துடன் சேராமல் பிரித்துள்ளன என்பது கருத்து.
சைவத்தில் சின்முத்திரை கந்தபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
உமையம்மை இமய அரசன் வேண்டுகோளுக் கிரங்கி அவனுக்கு மகளாக இறைவன் அனுப்பப் பிரிந்தவுடன் , இறைவன் தனியே இருந்தனன். அப்பொழுது வேதம் முழுதும் கற்றுணர்ந்த சனகாதி முனிவர் இறைவனிடம் வந்து,” ஐயனே!கடல் போல விரிந்த பொருட்பரப்புள்ள வேதங்களைக் கற்றும் மனம் அடங்காமல், நள்ளிரவில்சூறாவளிக் காற்றடிக்க எழும் அலைகள் மோதித் தாக்க அலைப்புண்ட கப்பல் போல மனம் ஒருநிலைப்படாமல் கலங்கினோம். இந்தக் கலக்கம் நீங்க அருளுவாயாக” என்று இரந்தனர். இறைவன் அந்தமில் ஆகமத்தின் அரும்பொருள் மூன்றும் (சரியை, கிரியை, யோகம்) கூறினன். முனிவரர்கள் மனம் அடங்கும் ‘ஞானபோதகம்’ போதி என்றனர். இறைவன் அது சொல்லத்தக்கதன்று; இப்பரிசினால் இருத்தல் கண்டீர் எனக் கூறி,
“உரத்திர் சீர்கொள் கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி, ஒருகணம் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான்”
மோனமுத்திரை என்றது, சின்முத்திரையை சின்முத்திரை உணர்த்தும் பொருள்யாது?
கட்டைவிரல் சிவபரம்பொருளைக் குறிக்கும் . சுட்டுவிரல் உயிரைக் குறிக்கும் சுட்டுவிரலுடன் ஒட்டிய நடுவிரல் உயிருடன் இணைந்த ஆணவமலத்தையும் மோதிரவிரல் மாயாமலத்தையும் சுண்டுவிரல் கன்மமலத்தையும் குறிக்கும். சுட்டுவிரல் மற்றைய மூன்று விரல்களையும் விட்டு விலகிப் பெருவிரலின் அடியினைப் பொருந்தி நிற்றல், உயிர் , மும்மலங்களையும் நீத்துச் சிவனின் தாளிணையில் படிந்து நிற்றல் முத்தி என்பதைக் குறிக்கும். இதனை,
“மும்மலம் வேறுபட் டொழிய மொய்த்துயிர்
அம்மலர்த் தாள்நிழல் அடங்கும் உண்மையைக்
கைம்மலர்க் காட்சியில் கதுவ நல்கிய
செம்மலை யலதுஉளம் சிந்தி யாதரோ.”
எனத் திருவானைக்காப் புராணம் – வரங்கொள்படலம். உணர்த்திற்று.
சின்முத்திரையின் மூன்றுவடிவங்கள் இங்குச் சுட்டப்பட்டன. முதலாமது, சுட்டுவிரலின் நுனி கட்டைவிரலின் நுனிமேல் படிந்திருத்தல். (மூக்குப் பொடியைப் பிடித்திருத்தல் போல என வேடிக்கையாய்க் கூறுவர்) இரண்டாவது, சுட்டுவிரலின் நுனி கட்டை விரலின் நுனிமீது பொருந்தி , இரு விரல்களுமிணைந்து ஒருவட்டம் போன்ற வடிவினைக் காட்டல். மூன்றாவது, சுட்டு விரல் வளைந்து கட்டைவிரலின் முதல் வரியின் அடியில் படிந்து நிற்றல். இது,சிவனுடைய திருவடியில் அடியவனின் தலை படிந்து நிற்றல் போன்றது என்பர்.
(8)
விஶ்வம்ʼ பஶ்யதி கார்யகாரணதயா ஸ்வஸ்வாமிஸம்ப³ந்த⁴த꞉
ஶிஷ்யாசார்யதயா ததை²வ பித்ருʼபுத்ராத்³யாத்மனா பே⁴த³த꞉ ।
ஸ்வப்னே ஜாக்³ரதி வா ய ஏஷ புருஷோ மாயாபரிப்⁴ராமித꞉
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥ 8॥
நனவிலும் கனவிலும் உறக்கத்திலும் யாவன்
நள்ளிருந் தேமா யையால்
கனவிய பிராந்தனாய் உலகமிதனைக் கார்ய
காரணத் தன்மையோடும்
தனதுதன் சாமிதாய் தந்தைமுத லியபேதத்
தன்மையும் காண வல்ல
சினமதறு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !!
ஆன்மா சித்சத்து; சித்தாகிய அறிவும் சத்தாகிய உண்மையும் ஆகும். ஆன்மா மெய்ஞ்ஞானமும் உள்பொருளுமாகிய சத்துசித்து ஆகும். இவ்வாறு தன்னை அறியுந்துணையும் அகண்டாகார ஞானமய ஆன்மாவாகும்; எப்பொழுது மாயையின் குணங்களுடன் சேருகின்றதோ அப்பொழுது ஆன்மா தன் சத்து சித்தாகிய வியாபகத் தன்மையின் நீங்கி ‘நான்’’ எனும் அகங்காரியாகிக் குறுகிவிடுகின்றது. துக்கியாகிய ஏகதேச அறிவை உடையதாகின்றது. மயக்க அறிவுடன் கனவுலகில் வாழும் பிராந்தனாகி விடுகின்றது. பாரமார்த்த ஆன்மா என்ற நிலை ஒழிந்து வியவகாக அஹங்காரி என்ற நிலையை அடைகின்றது. இது ஆத்மாவின் வீழ்ச்சி..
வியாபகஞானமான ஆன்மா, ‘நான்’ எனும் வியவகார அஹங்காரியாக வீழ்கின்றபோது அதன் நிலையில் பல மாறுதல்கள் விளைகின்றன. மாண்டூக்கிய உபநிடதம் அந்த நிலைகளைக் கூறுகின்றது.
ஆத்மா வாகிய ‘நான்’, நனவுலகில், அதாவது சாக்கிரஉலகில் தூல உடலில் ‘விஸ்வன்’ என்ற பெயருடைவன் ஆகி, வெளிஉலக அனுபவம் அடைகின்றேன். . சொப்பன வுலகில், சூக்கும உடலில், ‘தைஜசன்’ எனப் பெயருடைய வனாகிக் கனவுலக அனுபவத்தை உண்மையென அனுபவிக்கின்றேன்.. சுழுத்தியாகிய அவத்தையில் , காரண சரீரத்தில்,ப்ராஞ்ஞன் எனும் பெயருடன் எந்தப் பொருளையும் அனுபவியாமல் அறியாமையை உடையவனாக இருக்கிறேன். [ இன்பமோ துன்பமோ எந்த அனுபவத்தையும் அனுபவிக்காமல் இருளாக இருக்கும் இந்த அறியாமையை இன்பமென்று கூறுவாருமுளர்.]
ஆனால், ஆத்மாவாகிய என் உண்மை நிலை துரியன் எனப்படுகின்றது. துரியம் எனும் நிலையில் ஆத்மா எந்தவொரு அனாத்மாவுடனும் சம்பந்தப் படுவதில்லை. விஸ்வன், தைஜசன், பிராஞ்ஞன் எனும் மூன்று நிலைகளும் தூலம், சூக்குமம், காரணம் எனும் மூன்றுவகை உடல்களுடனும் சம்பந்தப்பட்டநிலை. உண்மையில் ஆன்மாவுக்கு இந்த மூவகை உடல்களுடனும் சம்பந்தமில்லை. தனக்கொரு சம்பந்தமில்லாத ஒன்றினைச் சம்பந்தமுடையதாக நினைத்துக் கொண்டு கீழ்நிலை அடைவதைத்தான் பகவத்பாதரவர்கள்,
“நனவிலும் கனவிலும் உறக்கத்திலும் யாவன்
நள்ளிருந் தேமா யையால்
கனவிய பிராந்தனாய்”
என்றருளினார்.
பிராந்தன் – அறிவு மயங்கியவன். பிராந்தனாய் அறிவுமயங்கிய நிலையைக் “காரிய காரணத் தன்மையோடும்” எனக் கூறியது எவ்வாறு பொருந்தும்? அஹங்காரியின் வியவகார உறவுகளெல்லாம் காரண காரியங்களாகும்.. பிறப்பு என்ற காரியம் கன்மம் எனும் காரணத்தின் விளைவாகும் என்னுடைய பிராரப்த கன்மம் என்னுடைய உலக வாழ்க்கையின் இன்பதுன்பங்களுக்குக் காரணமாகிறது.
என்வாழ்க்கையின் எல்லா நிலைகளுக்கும் என் கன்மமே காரணமாகிறது. பலவித உறவுகளுக்கும் அதனால் வரும் பேதங்களுக்கும் இக்காரணகாரியமே அடிப்படையாகும். பகவத் பாதர்கள் அத்தகைய உறவுகள் சிலவற்றை எடுத்துக் காட்டாகக் கூறுகின்றார். சிஷ்யன் – குரு, தாய்- தந்தை ,மகன் – தந்தை, உடையான் – உடைமை, ஆண்டான் – அடிமை, ஆண்டவன் – பக்தன் முதலிய உறவுகளும் அதனால் தோன்றும் பேதங்களும் அகண்டாகார நித்திய வியாபக சச்சிதானந்தப் பிழம்பாகிய பிரமமாகிய ஆன்மா, ஏகதேசியாகிய அஹங்காரியாகத் தன்னைக் கருதிக்கொள்வதன் விளைவாகும்.
விஸ்வன், தைஜசன், பிராக்ஞன் ஆகிய மூன்று அவத்தைகளிலும் எவ்வித விகாரமுமின்றி இருப்பவன் ‘துரியன்’ எனும் நான்காமவனே. பொன்னால் ஆன அணிகலன்களின் வடிவம் வேறுவேறாக இருந்தாலும் அவற்றின்மூலப்பொருள் பொன்னாகிய ஒன்றே. அவ்வாறே பிரமமே பிரபஞ்சத்தில், விவகார நிலையில் பல்வேறு வேறுபாடுகளை உடையதாகக் காணப்படுகின்றது.
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அதனுள் மெய்ப்பொருள்காணும் நுண்ணறி வுடை யவனுக்கு வியவகார நிலையில் இத்தனை பேதங்களாகவும் இருப்பவன் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஒருவனே என்பது புலனாகும். அத்தகைய ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்கு என் வணக்கம்.
இந்தப்பாடலுக்கு மாண்டூக்கிய உபநிடதத்தை வைத்துப் பொருள் காண முயன்றுள்ளேன். பிழையாகவும் இருக்கலாம். அறிந்தவர் திருத்தினால் பணிவுடன் ஏற்றுக் கொள்வேன். மாண்டூக்கிய உபநிடதத்தைச் சைவசித்தாந்தி நோக்கும் நிலை தனிக் கட்டுரைக்கு உரியது. எனவே, அதனை இங்கு விளக்கவில்லை.
மணிவாசகப் பெருமான் கோயில் திருப்பதிகத்தில், திருவாசகத்தின் உயிர்ப் பாடல் எனக் கருதப்படும் “இன்றெனக் கருளி இருள்கடிந்திட்டு” எனத்தொடங்கும் பாடலின் இறுதியில், “ஒன்றும்நீயல்லை யன்றியொன்றில்லை யாருன்னை அறியகிற்பாரே” என அருளியதை இங்கு நினைவு கூர்க.
(தொடரும்)