காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாரதப்பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று இந்நிகழ்வை தொடக்கி வைத்திருக்கிறார்.
இதை ஒட்டி காசி – இராமேஸ்வரம், காசி- காஞ்சி, காசியும் பாரதியும், வட காசியும் தென்காசியும், காசியும் நகரத்தாரும், காசியும் குமரகுருபரரும், காசியும் முத்துஸ்வாமி தீக்ஷிதரும் என்று பலரும் பலப்பல வகைகளில் காசியுடனான தமிழ்- தமிழக உறவை பேசியும் எழுதியும் வருகின்றனர்.
ஆனால், காசிக்கும் இலங்கைத் தமிழகத்திற்கும் உள்ள உறவை பலரும் மறந்து விட்டது போல தெரிகிறது
இலங்கையிலிருந்தும் காசிக்கும் காசியிலிருந்து இலங்கைக்கும் கால காலமாக அறிஞர்களும் பக்தர்களும் பயணித்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தரசனான பரராஜசேகரன் காசியிலிருந்து காச்யப கோத்திரத்து கங்காதரஐயரையும் அவர் மனைவி அன்னபபூரணி அம்மாளையும் அழைத்து வந்து நல்லூரில் குடியேற்றி ராஜகுருவாக போற்றியதாக யாழ்ப்பாண சரித்திர நூல்கள் பேசும்.
கங்கை போல, காசியை தழுவும் யமுனை நதியை போற்றிய இவ்வரசர்கள் காசிக்கு சென்று யமுனை நதி நீரை எடுத்து வந்து நல்லூரில் யமுனா ஏரியில் அந்த புண்ணிய தீர்த்தத்தை சேர்த்ததாகவும் ஐதீகம்.
இலங்கையின் பல பாகங்களிலும் காசி விஸ்வநாதருக்கு பேராலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல நூறாண்டு பழைமையான இவ்வாலயங்களின் வரலாறுகளில் காசியிலிருந்து லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டித்ததாகவே சொல்லப்படுவதும் கவனித்தற்குரியது.
திருகோணமலை விஸ்வநாத சுவாமி பெருங்கோயில், சுதுமலை, தெல்லிப்பளை உள்ளிட்ட விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் என மிகப்பல கோயில்கள். திருக்கோணேஸ்வரத்தில் தறபோதுள்ள கர்பக்கிரஹ மூலவரும் காசியிலிருந்து வந்த லிங்கமென்றே அறியப் படுகிறது.
ஒல்லாந்தர் காலத்தில் வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலை அமைத்த வைத்திலிங்க செட்டியார் தம் அந்திம காலத்தில் காசியில் வாழ்ந்து முக்தி எய்தியதாக சொல்லப்படுகிறது.
எல்லாவற்றினும் மேலாக, யாழ்ப்பாணத்தில் தோன்றிய காசிவாசி செந்திநாதையர் அவர்கள் வேதம், தத்துவம், சித்தாந்தம், ஆகமம், சம்ஸ்க்ருதம், புராணம், ப்ரம்ம ஸூத்திரம், உபநிடதங்கள், என யாவற்றிலும் ஈடற்ற புலமையாளராக ஐயர் விளங்கினார். இதற்காக, 1888 முதல் 1898 வரை பத்தாண்டுகள் காசியில் ஐயரவர்கள் கடும் தவம் செய்திருக்கிறார். இந்த தவக்காலத்திலும் அங்கிருந்து கொண்டும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார். முக்கியமாக, இந்துசாதனம் இதழுக்கு தொடர்ந்து எழுதி அனுப்பி வந்திருக்கிறார். அக்கட்டுரைத் தொகுப்பு 1897ல் “வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்த சமயம்” என யாழ்ப்பாணத்தில் நூலாகியிருக்கிறது.சிவ பரத்துவத்தை நிறுவி, வைதிக மார்க்கம் சைவமே என காட்டிய ஐயரவர்கள் ஸ்ரீ கண்டபாஷ்யத்தை பல இடங்களிலும் தேடி காசியில் கண்டு பிடித்து, மிக மிக முயன்று பிரம்மசூத்திரத்துக்கான சைவ பாஷ்யமான அதனை தமிழ் உரையுடன் 1907ல் பதிப்பித்திருக்கிறார்.
“செந்திநாதையர் அவர்கள் மணிகர்ணிகை கட்டத்தில் சிவாத்துவித பாடிய ஏடு கிடைத்ததாக கூறியுள்ளார். காசியில் தினமும் ஒன்றுக்கு மூன்று இடங்களுக்கு மதியபோசனத்துடன் கூடிய தானத்துக்குப் போய்க் கிடைத்த தட்சணைப் பணத்தை வைத்தும், கிடைத்த மேலதிக ரொட்டிகளை விற்றும் வரும் பணத்தில் எண்ணெய் வேண்டி இரவிரவாக விளக்கொளியில் சிவாத்துவித பாடியத்தை தமிழில் உரை எழுதியதாக கூறுவார்கள். அவரும் நகைச்சுவையாக ஒன்றுக்கு மூன்று இடங்களில் போசனத்துக்குப்போய் எழுதியது என்று குறிப்பிடுவாராம்” – லம்போதரன் இராமநாதன்
கதிர்காம வேலர் திருவருட்பா என்றொரு பழைமையான அற்புத பிரபந்தம் இருக்கிறது. இதனை சைவாதீன தம்பிரான் ஒருவர் காசியிலிருந்த போதே அங்கிருந்து கதிர்காமத்து ஐயனை நோக்கிப் பாடியதாக வாசித்த ஞாபகமும் உண்டு. இதனை காசி கதிர்காம வேலர் திருவருட்பா என்றும் அழைப்பதுண்டு.
அதிவீரராம பாண்டியர் பாடிய காசி மகாத்மியமான காசி காண்டம் ஈழத்தின் சுழிபுரம், வழக்கம்பரை முதலிய சில ஆலயங்களில் கார்த்திகை மாதத்தில் புராண படன மரபில், படனம் செய்யப்படுவதும் தொன்று தொட்டு உள்ள வழமை.
நூறாண்டுகளுக்கு முன் சேர்.பொன். இராமநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு இந்துப்பல்கலைக் கழகத்தை தொடங்க கனவு கண்டார். எனவே, யாழ்ப்பாணத்து திருநெல்வேலியில் அக்கனவுடன் அமைத்த பரமேஸ்வரா கல்லூரியை காசி ஹிந்து பல்கலைக்கழக சாயல் கட்டடங்களோடு அமைத்தார். அதுவே பிற்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்றது.
இப்படி காசிக்கும் இலங்கை சைவ தமிழர்களுக்கும் உள்ள தொடர்பும் கூட இவ்வேளையில் சிந்திக்கப்பட வேண்டும் என்பது எமது விருப்பமாகும்.