அஇஅதிமுக தொடங்கப்பட்டவுடன், கருணாநிதியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, எம்.ஜி.ஆர். அன்றைய ஆளுநரிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தார். மேற்படி மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் கேட்கப்பட்ட போது. பார்த்தேன், படித்தேன், ரசித்தேன் என கிண்டலாக பதில் அளித்தார். தந்தையை போலவே மகனும், பாரத பிரதமர் திமுகவின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய பொது, பிரதமர் கூறிய குற்றச்சாட்டுகள் கற்பனையானவை என பதிலளித்தார். உண்மையில் திமுக ஆட்சியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகள் கற்பனையானவையா என்பதை திரும்பி பார்க்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன் என்.டி.டி.வி. தொலைக்காட்சி நிறுவனம், சென்னையில் நடத்திய தமிழ்நாடு உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதல்வர், பிரதமர் , திமுக ஆட்சியின் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இது முழுவதும் கற்பனையாகும். என முத்து உதிர்த்துள்ளார். அகராதியில் ஊழல் என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமான இன்னொரு சொல்லை சேர்க்க வேண்டுமென்றால், அது திமுக என்பதாகத் தான் இருக்கும். முதல்வரின் தகப்பனார் திருவாளர் கருணாநிதியின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி, நீதிபதி சர்க்காரியா, விஞ்ஞானபூர்வமான ஊழல் என பட்டம் கொடுத்ததை மறந்து விட்டு, தமிழக முதல்வர் இறுமாப்பாக பேசியுள்ளார்.

2024 – 2025 –ம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை செயல்படுத்தியதில், 78,784 முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதன் மூலம் சுமார் ரூ 14 கோடிக்கும் மேல் கூடுதலான தொகை கையாடல் செய்திருப்பதாகவும் சமூகத் தணிக்கை துறையினர் தெரிவித்துள்ளார்கள். இது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா? இதுவும் தமிழக முதல்வரின் பார்வையில் கற்பனையா?
2021-ல் ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து, இன்று வரை ஸ்டாலின் அரசு மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். ரூ.888 கோடி பணி நியமன ஊழல் ரூ. 4730 கோடி மணல் கொள்ளை. கடந்த நான்கரை ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையின் மொத்த மதிப்பு ரூ.1.80 கட்சம் கோடி ரூ.1020 கோடி ஒப்பந்த ஊழல் ரூ.366 கோடி பணியிட மாற்ற ஊழல் . ரூ.1240 கோடி நெல் கொள்முதல் ஊழல் ரூ. 165 கோடி நெல் சரக்குந்து ஒப்பந்த ஊழல் பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடி ஊழல் , மது வரி ஏய்ப்பு -ரூ.1.82 லட்சம் கோடி ஊழல் , ஆண்டுக்கு ரூ.5400 வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.27,000 கோடிக்கு பாட்டிலுக்கு ரூ.10 ஊழல் ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.75,000 கோடி மின் கொள்முதல் ஊழல்.
மேற்கணட 10 ஊழல்களில் பணி நியமன ஊழல், மணல் கொள்ளை ஊழல், ஒப்பந்த ஊழல் சம்பந்தமான ஆவணங்களை அமலாக்கத்துறை 3 கடிதங்கள் வாயிலாக தமிழக டிஜிபிக்கு வழங்கியுள்ளது. ஆவணங்களை அளித்த பின்னரும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் அகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறியதும் முதல்வர் ஸ்டாலினுக்கு அம்னிசியா நோயின் காரணமாக மறந்து விட்டதாரா?
ரூ. 1.82 லட்சம் கோடி மது வரி ஏய்ப்பு ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் எதுவும் எழுப்பவில்லை. மாறாக திமுக ஆட்சியில் முதலில் நிதியமைச்சராக பணியாற்றிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தான் 15.03.2022-ல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கலால் வரி ஏய்ப்பு குறித்து குற்றஞ்சாட்டியிருந்தார். அவர் குற்றஞ்சாட்டி நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை கலால் வரி ஏய்ப்பைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வில்லை. அப்படிப்பட்டவர் ஊழலுக்கும், தமக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறுவது வினோதமாக உள்ளது.
ஊழல் செய்வதில் மட்டுமின்றி, ஊழல் செய்தவர்களை சட்டவிரோதமாக காப்பாற்றுவதிலும் திமுக அரசு தான் முன்னணியில் உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, சாத்தூர் இராமச்சந்திரன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்படி வழக்கு தள்ளுபடி செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து தீர்ப்பளித்தது. திமுகவினர் ஊழல் செய்வதிலும், அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்புவதிலும் வல்லவர்கள் என்பதற்கு இதுவே சான்று.
தற்போதைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, அதிமுக ஆட்சியில் பருப்பு, சர்க்கரை, பாமாயில் கொள்முதல் செய்ய கிறிஸ்டி குமாரசாமி நிறுவனங்களுக்கு விடுத்த டெண்டரில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டை முன் வைத்தவர், தான் ஆட்சிக்கு வந்தவுடன் , ஊழல் குற்றச்சாட்டு கூறிய அதே, கிறிஸ்டி குமாரசாமி நிறுவனங்களுக்கு ஏன் டெண்டர் கொடுத்தீர்கள்? 107 சதவீதம் அதிகமான தொகைக்கு டெண்டர் விட்டதில் ரூ992 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என தங்களுக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும், 40 பக்க புகார் கடிதத்துடன், 565 ஆவணங்களை அனுப்பியும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பகல் கொள்ளை அடிக்கும் உங்கள் அரசிற்கு எதற்கு இந்த வேடம்? தமிழநாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரை தமிழ்நாடு கியிஸ்டி சப்ளை கார்ப்பரேஷன் என்ற பெயரை மாற்றி வைக்கலாமே.
பிரதமர் தங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் கற்பனையானவை என கூறும் முதல்வர், ஒரு தனியார் தொண்டு நிறுவனம் கொடுத்த 30க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் மீது தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்த முடியுமா? கே பி பார்க் ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல், பஸ் ஷெல்டர் ஊழல், நெடுஞ்சாலை ஊழல் என பல ஊழல்களில் FIR போடாமல் தடுத்து நிறுத்துவது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அரசே! கிறிஸ்டி ரேஷன் ஊழல் , அதானி நிலக்கரி ஊழல், கல் குவாரி ஊழல், அண்ணா பல்கலைக்கழக ஊழல் என பல ஊழல்களில் FIR போட அனுமதி கூட கேட்காமல் விசாரணையை மாத வருட கணக்கில் இழுத்தடிப்பது லஞ்ச ஒழிப்பு துறை! சென்னை கோவை மாநகராட்சி ஊழல் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து நீதிமன்றம் 2 வாரங்களுக்குள் செய்ய சொன்ன பிறகும், இது நடந்து 4 மாதங்கள் ஆகியும் இன்று வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து முடிக்கப்படவில்லை. மத்திய தணிக்கைத் துறை டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் பற்றிய விவரமான அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பியது கூட தமிழக முதல்வருக்கு தெரியவில்லை.
டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு நடைபெறும் முறைகேடுகள் குறித்து இந்தியத் தணிக்கைத் துறைத் (CAG) சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.. முக்கியமாக 2024-ல் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களின் அதிகபட்ச விற்பனை விலையைவிட (MRP) கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதை தணிக்கை அறிக்கை உறுதி செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு முறையான பற்றுச்சீட்டு (Cash Bill) வழங்கப்படுவதில்லை. பரிவர்த்தனைகள் அனைத்தும் பெரும்பாலும் பணமாகவே (Cash-based) நடைபெறுகின்றன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால், இது போன்ற முறைகேடுகள் ஊக்குவிக்கப்படுவதாக சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது. அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மதுபானங்களின் விற்பனை வருவாயைக் கணக்கிடுவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் சுமார் ரூ 424 கோடி வரை மதிப்புக் கூட்டு வரி (VAT) குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டபோது, கையிருப்பில் இருந்த சரக்குகளுக்குச் செலுத்த வேண்டிய கூடுதல் கலால் வரியைச் செலுத்தாததால் அரசுக்கு சுமார் ரூ30.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மதுபானங்களை டெண்டர் எடுப்பதிலும், அவற்றை மதுக்கடைகளுக்குக் கொண்டு செல்லும் போக்குவரத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அறிக்கை கூறுகிறது: சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டர்களில் கூட்டுச் சதி (Cartelisation) நடைபெற்றுள்ளது. தகுதியான ஆவணங்கள் (GST எண், வாகனக் காப்பீடு போன்றவை) இல்லாத நிறுவனங்களுக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் லாரிகளுக்குப் பதிலாக ‘டேங்கர்’ லாரிகள் பயன்படுத்தப்பட்டதாகப் பதிவுகள் காட்டப்பட்டுள்ளன. திருவாளர் தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, தமிழ்நாடு நகர்ப்பற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் பத்து ஸ்மார்ட் சிட்டிகளின் மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் உள்ளிட்ட டெண்டரில், அந்த வேலைக்குத் தொடர்பே இல்லாத மெட்டல் ஷீட் தயாரிக்கும் நிறுவத்தைப் பங்கேற்க வைத்து, அந்த டெண்டரை குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்கு பொடுக்க வேண்டும் என்று ஆணவப்போக்குடன் செயல்படுகிறது என அறிக்கை விட்டவர். மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, தங்களது ஆணவப் போக்கை காட்டுகிறது . 2025-ம் ஆண்டுத் தொடக்கத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனைகளில், டாஸ்மாக் பார் உரிமம் மற்றும் மது விற்பனையில் சுமார் ₹1,000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கு பெயர் ஊழல் என்றால், கற்பனையானது என கூறும் நாட்டிலேயே முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) நடந்துள்ள கொள்முதல் முறைகேடுகள் மற்றும் நிதி இழப்புகள் குறித்து மத்திய தணிக்கை துறை (CAG) தனது சமீபத்திய அறிக்கைகளில் (குறிப்பாக 2021 முதல் 2024 வரை தாக்கல் செய்யப்பட்டவை) மிக முக்கியமான மோசடிகளை சுட்டிக் காட்டியுள்ளது. நிலக்கரி இறக்குமதிக்கான ஒப்பந்தங்களில் ‘மாறுபடும் விலை முறைக்கு’ (Variable Pricing Method) மாறாததால், சுமார் ரூ746.12 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. சுரங்கத்திலிருந்து மின் நிலையங்களுக்கு நிலக்கரி வரும் வழியில் அதன் தரம் (GCV) பெருமளவு குறைவதால், சுமார் 2,012.65 கோடி அளவுக்கு வீண் செலவு ஏற்பட்டுள்ளது. இந்த வீண் செலவு, அரசுக்கு இழப்பு, யாருக்கு ஆதாயம் என்பதை தமிழக முதல்வர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்தாரா? சந்தையில் சூரிய மின்சக்தி விலை குறைந்து வந்த போதிலும், பழைய அதிக விலையிலேயே ஒப்பந்தங்களை மேற்கொண்டதால் மின்சார வாரியத்திற்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டது. குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் போது, அதைத் தவிர்த்து அதிக விலை கொண்ட தனியார் மின்சாரத்தை வாங்கியதால் சுமார் ரூ3,493.74 கோடி கூடுதல் செலவானது. மத்திய மின் உற்பத்தி நிலையத் திட்டங்களை முடிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், மின்சாரத்தின் அடக்க விலை உயர்ந்து 2,381.54 கோடி கூடுதல் சுமை உருவானது. இந்த தாமதத்தை ஏன் ஏற்படுத்தினார்கள், தாமதத்தின் காரணமாக ஆதாயம் அடைந்தது யார் என்பதை முதல்வர் கூறுவாரா?
மத்திய தணிக்கை துறை குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், மோசடிகள் நடந்துள்ளன என கூறாமல் கூறியுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி பிரதமர் பேசினால், அது கற்பனை என கூறும் தமிழக முதல்வர். இதற்கு என்ன பதில் கூறுவாறோ என தெரியவில்லை. எனவே பெரும்பாலான புகார்களை FIR போடாமல் மூடி மறைக்க வேலை செய்யும் லஞ்ச ஒழிப்பு துறையையும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசையும் வலுவாக கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது.
