அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி

சீதைப் பிராட்டியும் இலங்கேஸ்வரனும்தாயின் உயர்வைச் சொல்லும் முதுமொழிகள் ஏராளம். ஏனென்றால் அன்பே உருவானவள் தாய். அரக்க குலத்தில் பிறந்த பெண் ஒருத்தி, அவள் காட்டும் அன்பின் காரணமாகத் தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். ஆம், திரிசடையைத்தான் கம்பன் இப்படி அறிமுகம் செய்கிறான். ஏன் என்பதைப் பார்ப்போம்.

சீதாப் பிராட்டி அயோநிஜையாகப் பூமியில் கண்டெடுக்கப் பட்டாள்.

உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற புவி மடந்தை, திருவெளிப் பட்டென்ன

பெண்ணரசி தோன்றினாள்

சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் இராமகாதையில் சீதையின் தந்தையான ஜனக மன்னனைப் பற்றிய செய்திகள் காணக் கிடைக்கிறதே தவிர சீதையின். தாயைப் பற்றிய செய்திகள் காணக் கிடைக்கவில்லை. அயோத்தி வாசத்திலும் கோசலை, கைகேயி, சுமித்திரை இவர்களை அன்னை என்று அழைத்ததாகத் தெரியவில்லை. வனம் சென்றபோது சுமந்திரனிடம் செய்தி சொல்லி அனுப்புகிறாள்.அப்பொழுது “அரசர்க்கு, அத்தையர்க்கு என்னுடை வணக்கம் முன் இயம்பி” என்றுதான் சொல்கிறாள். வனத்திலே தசரதன் இறந்த செய்தி கேட்டபோதும் அன்னையே என்று அழைத்து ஆறுதல் சொன்னதாகத் தெரியவில்லை. அசோக வனத்திலே அனுமனிடமிருந்து கணையாழி பெற்றபின் சில அடையாளங்களைச் சொல்கிறாள். அப்பொழுதும்

சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள்

என்று தன் வணக்கத்தைத் தெரிவிக்கிறாள். இங்கும் அன்னையர் மூவர்க்கும் என்று சொல்லவில்லை. ஆனால் கடல்கடந்த அயல்நாட்டில் அரக்க மகளான திரிசடையை (இவள் சீதையைவிடவயதில் இளையவளாகக் கூட இருக்கலாம்) ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அன்னை, அன்னை, அன்னை என்று விளிக்கிறாள். அது மட்டுமல்ல அதற்கு மேலே ஒருபடி போய் தெய்வமாகவே காண்கிறாள். திரிசடைக்கு அவ்வளவு ஏற்றம் கொடுக்க என்ன காரணம்?

சீதையின் தவிப்பு

அசோகவனத்தில் சீதைக்குக் காவல் இருந்த அரக்கியர் எப்படியிருக்கிறார்கள்?

வயிற்றிடை வாயினர் வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர் கொடிய நோக்கியர்
எயிற்றினுக்கு இடை இடை யானை, யாளி, பேய் என
துயில் கொள் வெம்பிலன் என தொட்ட வாயினர்

இவ்வளவு பயங்கரமானவர்களுக்கு நடுவே ஓவியம் புகைபடிந்ததுபோல் இருக்கிறாள் சீதை. என்ன செய்வதென்று தெரியாமல்

விழுதல், விம்முதல், மெய்யுற வெதும்புதல்,வெருவல்
எழுதல், ஏங்குதல், இரங்குதல்,இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்
அழுதல்

இவையன்றி வேறறியாமல் தவிக்கிறாள். தனது தவிப்பையும் அனுபவத்தையும் திரிசடையிடம் சொல்லி ஆறுதல் தேடுகிறாள். திகிலோடிருக்கும் சீதைக்கு உற்ற தோழியாக விளங்குகிறாள் திரிசடை. இவள் மேதாவிகட்கெல்லாம் மேதாவியான வீடணரின் அருமைப் புதல்வி, நயந்த சிந்தையை உடையவள். “என் துணைவி ஆம் தூய நீ கேட்டி,” என்று சொல்லத் தொடங்குகிறாள்:

முனியொடு மிதிலையில் முதல்வன் முந்துநாள்
துனிஅறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன, ஈண்டும் ஆண்டு என
நனி துடிக்கின்றன,ஆய்ந்து சொல்வாய்

“திரிசடை, விசுவாமித்திர முனிவரோடு இராமன் மிதிலைக்கு வந்த அன்றும் இதேபோல் என் இடது கண்ணும், புருவமும், தோளும் துடித்தன. இன்றும் அதேபோலத் துடிக்கின்றன. தம்பி பரதனுக்கு நாடளித்து நாங்கள் வனம் புகுந்த நாளிலும், நஞ்சனைய இராவணன் என்னை வஞ்சமாகக் கவர்ந்த நாளிலும் என் வலம் துடித்தன. ஆனால் இன்று என் இடப்பக்கங்கள் துடிக்கின்றன எனக்கும் ஏதேனும் நன்மை வருமா?”

திரிசடையின் கனவுக் காட்சிகள்

இதைக்கேட்ட இன்சொல்லின் திருந்தினளான திரிசடை “தேவி, உனக்கு மங்களங்கள் வந்துசேரப் போகின்றன. நீ நிச்சயம் உன் கணவனைச் சேரப் போகிறாய். உன் காதிலே பொன்நிறத் தும்பி வந்து ஊதிப் போனதை நான் பார்த்தேன். நிச்சயம் உன் தலைவனிடமிருந்து ஒரு தூதுவன் வந்து உன்னை சந்திக்கப் போகிறான். உனக்குக் கொடுமை செய்த தீயவர்களுக்குத் தீமை வருவதும் நிச்சயம்” என்று தேறுதல் சொல்கிறாள். அதன்பின் தான் கண்ட கனவை விவரிக்கிறாள்:

“இராவணன் தலையில் எண்ணை தேய்த்துக் கொண்டு பேய்களும் கழுதைகளும் பூட்டிய தேரில் தென்திசை போகக் கண்டேன். அவன் மட்டுமல்ல, அவன் மக்களும் சுற்றமும் கூடப்போனார்கள். நகரில் இருந்த தோரணக் கம்பங்கள் ஒடிந்தன. யானைகளின் தந்தங்கள் முறிந்தன. பூரண கும்பத்திலிருந்த புனித நீர் கள்ளைப் போல் பொங்கி வழிந்தது. மங்கையர்களின் தாலியெல்லாம் தாமே இற்று வீழ்ந்தன. மண்டோதரியின் கூந்தலும் அவிழ்ந்து சுறு நாற்றம் நாறின.

“இன்னும் கேள். இரண்டு சிங்கங்கள் புலிக்கூட்டத்தோடு இங்கு வந்து மத யானைகள் வாழும் வனத்தை வளைத்து அவற்றோடு போர் செய்தன. யானைகள் கூட்டம் கூட்டமாக வீழ்ந்து பட்டன. அந்த வனத்திலிருந்த மயிலும் பறந்து போனது. அதே நேரம் ஓர் அழகான பெண் இராவணன் அரண்மனையிலிருந்து அடுக்குதீபம் ஏந்தியபடி வீடணன் அரண்மனைக்குச் சென்றாள். இந்தச் சமயம் நீ என்னை எழுப்பி விட்டாய்” என்கிறாள். இதைக்கேட்ட சீதை அக்கனவின் உட்பொருளை ஒருவாறு உணர்ந்து கொள்கிறாள். இராவணன் குலத்தோடு அழியப்போகிறான். இரண்டு சிங்கங்களும் இராம இலக்குவர்களைக் குறிக்கின்றன, அந்த மயில் தன்னைக் குறிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறாள். அவள் கவலையெல்லாம் பறந்து சென்ற மயில் எங்கே போனது? எனவே கனவின் முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கை கூப்பி “அன்னையே! இன்னும் துயில்க, அதன் குறைகாண்” என்று வேண்டிக் கொள்கிறாள். மீண்டும் உறங்கினால் அதே கனவு தொடரப் போவதில்லை என்ற போதும், அவளை அன்னையே என்று விளித்து இவ்வாறு வேண்டிக் கொள்வது சீதாப்பிராட்டியின் நிலைமையை நமக்கு உணர்த்துகிறது.

இராவணன் சாபம்

இந்த நேரம் இராவணன் அரம்பையர்கள் புடைசூழ ஆடம்பரமாக வருகிறான். சீதையிடம் காதலை யாசிக்கிறான். சீதை அவனைப் பலவாறு இகழ்ந்து, பழித்துப்பேசி இடித்துரைத்து அறிவுரை சொல்கிறாள். இதனால் சீற்றமடைந்த இராவணன், அயோத்தி சென்று பரதன் முதலானோர் உயிர் குடித்துப் பின் மிதிலை சென்று அங்குள்ளவர்களையும் கொன்று பின் உன்னையும் கொல்வேன் என்று அச்சுறுத்துகின்றான். போகும்போது அரக்கிமார்களிடம் சீதையை அச்சுறுத்தியோ அல்லது அறிவுரை சொல்லியோ என் வசப்படுத்த வேண்டும், என்று கட்டளையிட்டுவிட்டுச் செல்கிறான். அவன் ஆணைப்படி அரக்கிமார்கள் சீதையை அச்சுறுத்துகிறார்கள். இந்தச் சமயம் திரிசடை அங்கு வருகிறாள். “தாயே நான் முன்பு கண்ட கனவின் முடிவைப் பற்றி முன்னமே சொன்னேன் அல்லவா? அப்படியிருக்க மீண்டும் ஏன் மனம் கலங்குகிறீர்கள்? மனம் கலங்குவது தகாது” என்று அறிவுறுத்துகிறாள். அதனால் மனம் தேறிய சீதை “அன்னே! நன்று” என்று தேறுதல் அடைகிறாள். அரக்கியரும் அடங்கி விடுகிறார்கள்.

திரிசடை சீதைக்குக் கனவின் தன்மைபற்றிக் கூறியதோடு கூடவே, ஒரு முக்கியமான, சீதைக்கு மிகவும் உபயோகமான, அவளுக்கு நம்பிக்கையும் தைரியமும் தரக்கூடிய செய்தியையும் சொல்கிறாள். தன்னை விரும்பாத பெண்ணை இராவணன் தொட்டால் அவன் தலை வெடிக்கும் என்று ஒரு சாபம் இருப்பதை சீதைக்குச் சொல்கிறாள். இது சீதைக்கு எவ்வளவு முக்கியமான செய்தி! இது சீதையின் செவிகளில் இன்பத்தேனைப் பாய்ச்சியிருக்கும். தினம் தினம் என்ன நடக்குமோ என்று அஞ்சும் அவளுக்கு உயிர் வாழ்வதற்கு வேண்டிய நம்பிக்கையைக் கொடுத்ததே இந்தச் செய்திதான். இதை அனுமனிடமும் தெரிவிக்கிறாள்.

மாயா ஜனகன்

அனுமன் வந்து சென்றபின் சீதை ஒருவாறு மனம் தேறியிருந்தாலும் அவளுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறான் இராவணன். போர் ஆரம்பமாகிவிட்டது. முதல்நாள் போரில் அனைத்தையும் இழந்து வெறுங்கையோடு இலங்கை புகுந்த இராவணன் கும்பகருணனைப் போருக்கு அனுப்பிவிட்டுச் சீதையைப் பார்க்க அசோகவனம் வருகிறான். மகோதரனின் ஆலோசனையின் பேரில் மாயா ஜனகனைச் சிருஷ்டி செய்து அவனைச் சங்கிலியால் பிணித்து இழுத்துவரச் செய்கிறான். அவன்மூலமாகச் சீ£தையைத் தன் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தி வசப்படுத்தலாம் என்று திட்டமிடுகிறான். மாயாஜனகன், இராவணனின் விருப்பத்திற்கு இணங்கும்படி சீதைக்கு அறிவுரை சொல்கிறான். இதைக் கேட்ட சீதை வெகுண்டு மாயாஜனகனைக் கடிந்து பேசுகிறாள். “நீ இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன? என்று அவனைச் சீறுகிறாள். இராவணன் மாயாஜனகனைக் கொல்லப் போவதாக வாளை உருவுகிறான். அந்த நேரம் கும்பகர்ணன் போர்க்களத்தில் மாண்ட செய்தி வருகிறது. சீதையை அழவைத்த இராவணன் கதறி அழுதுகொண்டே போகிறான். சீதை களிப்படைகிறாள். இந்தச் சமயம் திரிசடை வந்து உண்மையைச் சொல்கிறாள்.

உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்
அந்தம் இல் கொடுந்தொழில் அரக்கனாம் எனா
சிந்தையின் உணர்த்தினாள் அமுதின் செம்மையாள்

தந்தையே தனக்குத் துரோகம் இழைத்து விட்டானே என்று சீதை மிகவும் மனம் கசந்து போயிருந்த சமயத்தில் அவளுக்கு ஆறுதலாகத் திரிசடை, உயிர்போகும் தறுவாயில் அமுதம் போன்ற வார்த்தைகளைச் சொல்லி உயிர் பிழைப்பிக்கிறாள். அதனால் அவளை அமுதின் செம்மையாள் என்கிறான் கம்பன்.

களம் கண்ட சீதை

போர்க்களத்தில் இலக்குவனும் இந்திரஜித்தும் கடுமையாகப் போர் செய்கிறார்கள். பிரும்மாஸ்த்திரத்தை விட இலக்குவன் முயன்றபோது இராமன் அவனைத் தடுக்கிறான். இந்திரஜித்து ஒருவனைக் கொல்வதற்காக பிரும்மாஸ்திரத்தை நீ ஏவினால் அது அவனைமட்டும் முடிக்காமல் மூவுலகங்களையுமே அழித்து விடும். அதனால் அதைப் பிரயோகம் செய்ய வேண்டாம் என்று தடுத்து விடுகிறான். இலக்குவனும் கீழ்ப்படிகிறான்.

ஆனால் மாயாவியான இந்திரஜித் மறைந்து நின்று பிரும்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான். அதனால் அனைத்து வானர வீரர்களும் கீழே சாய்கிறார்கள் இலக்குவனும் வீழ்ந்து விடுகிறான். இதைக்கண்ட இராமன் மிகவும் வருந்திப் புலம்புகிறான். தாங்க முடியாத துயரத்தில் மூர்ச்சையாகி விடுகிறான். இராமனும் மரணமடைந்துவிட்டதாக நினைத்த அரக்கர்கள் இராவணனிடம் சேதி சொல்கிறார்கள் இராமனும் மரணமடைந்து விட்டதாக நினைத்த அரக்கர்கள் இராவணனிடம் சேதி சொல்கிறார்கள். செய்தியறிந்த இராவணன் மிகுந்த உற்சாகத்தோடு மக்களை வெற்றி விழாக் கொண்டாடும்படி உத்தரவிடுகிறான். மாண்ட அரக்கர்களின் உடல்களைக் கடலில் தள்ளிவிடும்படி ஆணையிடுகிறான். சீதையைப் புஷ்பக விமானத்தில் ஏற்றி இராம இலக்குவர்கள் வீழ்ந்து கிடப்பதைக் காட்டுமாறு உத்தரவிடுகிறான். களம்கண்ட சீதை மலர்ந்த தாமரைப்பூ நெருப்பில் விழுந்தது போல் துவண்டு வாடிப் போகிறாள். சீதை அழ, தேவமாதர்களும், பார்வதியும், திருமகளும், கலைமகளும், கங்கைநதியும் கொற்றவையும் அழுகிறார்கள். இரக்கம் இன்னதென்று அறியாத அரக்கியரும் கூட அழுகிறார்கள். சீதை வருந்திப் புலம்புகிறாள். “நீ, அயோத்தியிலேயே இருப்பாய் என்று சொன்னதைக் கேட்காமல் காட்டுக்கு வந்தே தீருவேன் என்று அடம்பிடித்து வந்தேனே. அதோடு அமையாமல் மான் வேண்டும் என்றும் பிடிவாதம் செய்ததால் நானே உன் முடிவுக்குக் காரணமாகி விட்டேனே” என்று கதறுகிறாள்.

தகைவான் நகர் நீ தவிர்வாய் என்னவும்
வகையாது தொடர்ந்து, ஒரு மான் முதலா
புகை ஆடிய காடு புகுந்து உடனே
பகை ஆடியவா, பரிவு ஏதும் இலேன்

என்று கல்லும் கரையும்படி கதறுகிறாள். இந்தத் துன்பத்திலிருந்து விடுபட்டு ஆறுதல்பெற இராமன் மேனியில் விழுந்து உயிர்விடுவேன் என்று எழுகிறாள். அந்த நேரம் சீதை தேடிய தவப்பயன் போன்ற திரிசடை அவளை அணைத்து சீதையின் செவியில் “தாயே இந்த அரக்கர்களின் மாயம் தாங்கள் அறியாததா? மாயமானை விடுத்ததும் மாயாஜனகனை உன்னிடம் அனுப்பியதையும், நாகபாசம் அழிந்து போனதையும் எண்ணிப்பார். நன்றாக உற்று கவனித்துப்பார். இராமன் உடம்பில் அம்புகள் தைக்கவில்லை. இலக்குவன் உடலில் அம்புகள் இருந்தாலும் கூட அவன் முகம் இன்னமும் சூரியன் போல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. இராமன் உயிருக்கு இறுதி நேர்ந்தால் இந்த உலகம் இன்னமும் இயங்குமா? உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டு தானேயிருக்கிறது? ஏன்? இராமன் உயிரோடு இருப்பதால்தான்.

“இன்னொன்றையும் எண்ணிப்பார். இன்றுபோல் என்றும் இருத்தி என்று நீ வாழ்த்தியதால் சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற அனுமனுக்கு முடிவு ஏது? தேவி உன் கற்புக்கு அழிவு உண்டோ? மேலும் தேவர்கள், இராம இலக்குவர்களை வணங்குவதைக் கண்டேன். தேவர்கள் உன்னைப் போல் கலக்கமடையவில்லை. அதனால் இராம இலக்குவர்கள் உயிருக்கு ஒன்றும் நேர வில்லை என்று தெரிந்துகொள். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் புஷ்பகவிமானம் மங்கலநாண் இழந்த கைம்பெண்களைத் தாங்காது. நான்சொன்ன இத்தனை கருத்துக்களையும் நன்றாக ஆராய்ந்து எண்ணிப் பார்” என்று விரிவாகச் சொல்கிறாள்

சீதை உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் பாதிக்கப்பட்டவளாகவும் இருந்தாள். திரிசடை அறிவுநிலையில் நின்று காரண காரியங்களை விரிவாக ஆராய்ந்து சொல்ல சீதை கொஞ்சம் மனம் தேறி ஆசுவாசம் அடைகிறாள். மனம் கலங்கி அழும் குழந்தையைத் தேற்றி அணைத்து ஆறுதல் சொல்வது போல், தனக்கு ஆறுதல்சொன்ன திரிசடையை

அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே
உன்னையே தெய்வமாக் கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன்

என்று தொழுகிறாள் சீதை.

முன்பு திரிசடை சொன்னபடி இராமதூதனாக அனுமன் வந்து கணையாழி கொடுத்துச் சென்றதும், மாயாஜனகன் நாடகத்தின் உண்மை வெளிப்பட்டதாலும், நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது என்கிறாள். அதுபோலவே இப்பொழுதும் இராம இலக்குவர்கள் இறக்கவில்லை, இதுவும் அரக்கர்களின் மாயையே என்று தெளிவடைந்து, “திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது போல, “நின்னையே தெய்வமாக் கொண்டு இத்தனை காலம் உயிர் தரித்திருந்தேன்” என்கிறாள்.

உலக அன்னையான திருமகளின் அம்சமான சீதையாலேயே அன்னை என்றும் தெய்வம் என்றும் போற்றப்படும் பெருமை பெறுகிறாள் அரக்கர் குல மகளான திரிசடை. பிறப்பினால் அல்லாது பண்பினாலேயே ஒருவர் உயர்வர் என்பதை இவ்வாறு நம் முன்னோர்கள் பல இலக்கியங்களிலும் எழுதி வைத்துச் சென்றுள்ளனர் நம் பொருட்டாக.

9 Replies to “அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி”

  1. DEAR MADAM

    IT IS QUITE FANTASTIC. I have enjoyed both your tamil & kambanin kavirasam. please very frequently you write like this. Janaki, the jewel of ramayana is praising thirisadai. ThIS shows- we have to aceept the good people irrespective of their birth, colour,caste, religion etc.

  2. திரிசடையைப் பற்றிய அருமையான கட்டுரை. கம்பனின் கவிரசங்களை இப்படி சுவைபட எழுதும் உங்களது சமய இலக்கியப்பணி தொடரட்டும்.

  3. Thanks for your article on Thirisadai. Are you sure that Thirisadai is Vibhisana’s daughter? I had read Rajajis’s version of Ramayanam 20 25 years back in my teens.

    In Ramesh Sagar’s Ramayanam TV serial (being televised in Sun TV) does not speak about this. Please confirm this.

  4. திரு வெங்கட்,

    திரிசடை, விபீஷணனுடைய மகள் என்பது கம்பனுடைய வாக்கு. வால்மீகியில் இது விவரிக்கப்படவில்லை.

    ‘அன்ன சாவம் உளது என, ஆண்மையான்,
    மின்னும் மௌலியன், மெய்ம்மையன், வீடணன்
    கன்னி,
    என்வயின் வைத்த கருணையாள்,
    சொன்னது உண்டு, துணுக்கம் அகற்றுவான்.

    என்று சுந்தர காண்டம், சூடாமணிப் படலத்தில் அனுமனிடத்தில் சீதை குறிப்பிடும்போதும்;

    அன்னவன் தனி மகள், “அலரின்மேல் அயன்
    சொன்னது ஓர் சாபம் உண்டு; உன்னைத் துன்மதி,
    நன்னுதல்! தீண்டுமேல், நணுகும் கூற்று” என,
    என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள்.

    என்று வீடணன் அடைக்கலப் படலத்தில் அனுமன் ராமனிடத்தில் தெரிவிக்கும் சமயத்தில், ‘உன்னை ராவணன் தீண்ட மாட்டான். ஏனெனில், பிரமனின் சாபம் ஒன்று அவனுக்கு உண்டு’ என்று சீதைக்கு எடுத்துச் சொல்லி அவளை திடப்படுத்தியவள் திரிசடையே. அந்தத் திரிசடை, இவனுடைய (விபீஷணனுடைய) மகள் (அன்னவன் தனிமகள் என்று மேற்படிச் செய்யுளில் சொல்லப்படுவது) என்ற பாடலிலும் காணப்படும் குறிப்பின் அடிப்படையிலேயே, திரிசடை வீடணன் மகள் என்பது பெறப்படுகிறது. இந்த இரண்டு பாடல்களைத் தவிர இது குறித்த குறிப்புகள் கம்பனிலும் இல்லை; வான்மீகத்திலும் இல்லை. வான்மீகத்தி்ல், திரிசடை ஒரு வயது முதிர்ந்த, அறம் நிறைந்த அரக்கியாக மட்டுமே குறிக்கப்படுகிறாள். அவளுக்கும் வீடணனுக்குமோ அல்லது மற்றவர்களுக்குமோ உள்ள உறவுமுறை சொல்லப்படவில்லை.

    இப்படி, வால்மீகி சொல்லி, கம்பன் சொல்லாமல் விட்டிருப்பது விபீஷணனுடைய மனைவியின் பெயர். சரமை என்ற பெயரை வால்மீகி குறிப்பிடுகிறார். கம்பனில் இதற்கான குறிப்பு ஏதும் கிடையாது.

  5. Mikka nandri Thiru. Hari Krishnan.

    Just happen to see your comments. Sorry for writing in english. Very interesting version. I have to inform this to my daughter.

    Even in Mahabharatham there are certain minute differences like this between Rajaji and Kirubanandavariar. Variar mentions Chera, Chola and Pandiya fought on the side of Pandavas and got killed by Ashwathama (Dronachariar’s son). Rajaji does not mention this. Probably Rajaji had translated Vyasa’s version directly.

  6. திரு வெங்கட்:

    நீங்கள் சொன்னது: “ Even in Mahabharatham there are certain minute differences like this between Rajaji and Kirubanandavariar. Variar mentions Chera, Chola and Pandiya fought on the side of Pandavas and got killed by Ashwathama (Dronachariar’s son). Rajaji does not mention this. Probably Rajaji had translated Vyasa’s version directly.”

    1. ராஜாஜி, வாரியார் எல்லோருடைய மஹாபாரத வடிவங்களும் மிகமிகச் சுருக்கமானவை. அவற்றில் பற்பல நுணுக்கமான விவரங்கள் இடம்பெறாமல் போக வாய்ப்புண்டு. ஏனெனில் அவர்கள் மூலக்கதையை மட்டுமே கருத்தில் கொண்டு, தொகுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

    2. வியாச பாரதத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் யுத்தத்தில் கலந்துகொண்ட குறிப்புகள் நிறையவே இருக்கின்றன. சங்க இலக்கியத்திலும் (குறிப்பாக புறநானூறு, பாடல் 2) பாரதத்தில் பங்கேற்ற மன்னர்களைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. புறநானூற்றுப் பாடலில் சேர அரசன் குறிப்பிடப்படுகிறான். மலையத்வஜ பாண்டியன், சத்யஜித் என்ற பாண்டிய மன்னன் போன்றோருடைய பெயர்கள் வியாச பாரதத்தில் குறிப்பிடப்படுகின்றன. மேலும் விவரங்கள் தேவைப்படுமாயின் சொல்கிறேன். நீங்கள் குறிப்பிடும் ‘அஸ்வத்தாமனால் கொல்லப்பட்ட பாண்டியன்’ பெயர் மலையத்வஜ பாண்டியன்.

    ஆறு வேறுவேறு மஹாபாரதப் பதிப்புகள், வில்லி பாரதம் என்றெல்லாம் படித்தபிறகு, அவற்றிலெல்லாம் தாகம் அடங்காமல் வியாச மூலத்தின் மொழிபெயர்ப்பையும் வடமொழி வடிவத்தையும் கலந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

    ஒவ்வொருடைய விவரிப்பும் ஒவ்வொரு விதத்தில் உயர்வானதாகவும்; பல இடங்களில் பல கேள்விகளுக்கு விடை தராததாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக, அரசுரிமை உள்ளவன் தர்மபுத்திரனே; துரியோதனனுக்கு அரசுரிமை இல்லை என்று திருதிராஷ்டிரனே சொல்வது வியாச பாரதத்தில் மட்டுமே காணப்படுகிறது. மூலத்தைப் படித்தால் மட்டுமே எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ள இயலும். மற்ற விவரிப்புகள் கதையின் அடிநாதத்தை மட்டுமே உணர்த்துகின்றன. நுட்பமாக அறிய வியாசரைப் படிப்பது ஒன்றே வழி.

  7. கம்ப ராமாயணம் போல் ஒரு சிறந்த நூலை இதுவரை கண்டதுமில்லை பார்த்ததுமில்லை. சீதா தேவி மட்டுமா போற்றப்படுகிறாள்? மண்டோதரி திரிசடை போன்ற மாதரசிகளும் அல்லவா சிறப்பிக்கப்படுகிறார்கள்.

  8. திரிசடை பற்றிய ஆய்வுடன் கூடிய அருமையான கட்டுரை!
    வாழ்த்துக்கள்!!

    T.R.Veeraraghavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *