2009 இல் 1984?

collector_transferredநினைத்துப் பாருங்கள். காம்ப்ரிட்ஜில் பொருளாதாரம் பயின்று முனைவர் பட்டம் பெற்று இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவராக (சரியாகவோ தவறாகவோ) ,முன்னிறுத்தப்படுபவர், ஒரு இளைஞரை “தேசிய இளைஞர் தலைவர்” என புகழ்கிறார். புகழப்படுபவர் தமது எம்ஃபில் பட்டப்படிப்பில் தேசிய பொருளாதார திட்டமிடுதலிலும் கோட்பாட்டியல் எனும் பிரிவில் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை வாங்காதவர். இதனை வீண்புகழ்ச்சி என்று கருதுவீர்களென்றால் தவறு…இது அதைவிட மோசமானது. அரசியல் சக்தி கொண்டவரை வீண் புகழ்ச்சி செய்வதும் அவரது கை-கால் பிடிக்கும் கலையும் இந்திய அரசியல்-ஊடக வட்டங்களுக்கு புதிதல்ல. ஆனால் இம்முறை அது ஒரு அபாயகரமான மாற்றத்தை பெற்றுள்ளது. இவ்வாறு நிகழ்வதில் இந்த தேசத்தின் ஜனநாயகத்துக்கும் உண்மையான மதச்சார்பின்மைக்கும் பெரும் ஆபத்துக்கள் உள்ளன.

வைகோவின் தொகுதியில் நடந்துள்ள “விபத்தில்” இந்த ஆபத்து வெளிப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் தேர்தல் அன்று இத்தொகுதியில் பதிவானதாக அறிவிக்கப்பட்ட வாக்குகள், 7,44,880. வாக்கு எண்ணிக்கை நாளன்று எண்ணப் பட்டதாக அறிவிக்கப்பட்ட வாக்குகள்: 7,67,653 அதாவது இடையே 22 ஆயிரத்து 773 வாக்குகள் வித்தியாசம். (மாலைச்சுடர், 17 மே 2009) சிதம்பரம் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியிலும் முதலில் சிதம்பரம் தோல்வியுற்றதாக செய்திகள் வெளியாகி பின்னர் 300 வாக்குகள் வித்தியாசத்திலும் அதன் பின்னர் 3000 வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் வென்றதாக அறிவிக்கப்பட்டதை பார்த்தோம். என்றால் மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்குகள் எண்ணும் போது மாற்றங்கள் செய்ய முடியுமா எனும் கேள்வி எழுகிறது. இண்டர்நெட்டில் தேடினால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல குளறுபடிகள் செய்யமுடியும் என தெரிகிறது. ஆனால் இவை எல்லாம் அமெரிக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில். இந்திய சூழலில் இவற்றின் சாத்தியக்கூறுகள் இன்னமும் அதிகமாகலாம். இவையெல்லாம் குறித்து அனைத்து தரப்பினரும் சரியாக பரிசீலித்தார்களா தெரியவில்லை. ஜூன் 2 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட பதிப்பு நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டது. அதன்படி பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியர் இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு காரணமாக இருந்தவர் அமைச்சர் சுரேஷ் ராஜன். (சுரேஷ்ராஜன் அண்மையில் தலித் அதிகாரி ஒருவரை சாதிய வெறியுடன் திட்டியதாக சர்ச்சைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.) நிருபரிடம் ஒரு திமுக அதிகாரி இந்த ஆட்சியர் மாற்றத்துக்கு ஆதாரமாக அவர் பாஜகவுக்கு வாக்களித்த புகைப்படம் அமைச்சரிடம் இருப்பதாக கூறியுள்ளார். இது உண்மையாக இருக்குமானால் ஒவ்வொரு தனிமனிதனின் இரகசிய வாக்களிப்பு என்பதே கேள்விக்குரியதாகவும் அடிப்படை ஜனநாயக உரிமையே கேலிக்குரியதாகவும் மாற்றப்பட்டுவிட்டது என்பதே அதிர்ச்சிகரமான உண்மை. இதற்கிடையில் மின்னணு வாக்களிப்பு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து எலெக்ஷன் வாட்ச் (Election Watch) என்கிற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மற்றொரு பத்திரிகை செய்தி எந்தெந்த தொகுதி எந்தெந்த கட்சிக்கு அதிகமாக வாக்களித்தது என கண்டுபிடித்துவிட முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. அத்தகைய சாத்தியக்கூறு தம் கட்சிக்கு எதிராக வாக்களித்த தலித் மக்களை கட்சி குண்டர்கள் தாக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 16 மே 2009) தேர்தல் ஆணையத்தின் தலைவரின் காங்கிரஸ் நெருக்கம் அவர் குறித்து எழுந்த புகார்கள் ஆகியவை தேர்தல் ஆணையத்தையும் மக்கள் முழு நம்பிக்கையுடன் பார்க்கவைக்கும்படியாக இல்லை.

இருந்தாலும் இந்த தேர்தல் முடிவுகளில் சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளன. பிராந்திய மற்றும் பிரிவினை வாத சக்திகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளனர். ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை மட்டுமே இடதுசாரிகளை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. ஏனெனில் கேரளாவில் பொதுவாக ஒரு சுழற்சி முறை உண்டு. எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்கு எதிராக மத்திய தேர்தலில் முடிவுகள் வரும். எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இடதுசாரிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. மன்மோகன் சிங் அரசுக்கு கிடைத்திருக்கும் அதிக வலிமையை அவர் எப்படி பயன்படுத்துவார் என்பது தெரியவில்லை. அவர் அமைச்சரவையை நிர்ணயிக்க பத்து நாட்கள் எடுத்துக்கொண்டார். திமுகவின் வாரிசு பட்டியலுக்கு வளைந்து கொடுத்தார். அதே சமயம் ராகுல் காந்தி மந்திரி சபையில் சேர மறுத்திருக்கிறார். கட்சியை பலப்படுத்துவதில் ஈடுபடப் போவதாக சொல்லியிருக்கிறார். அடாவடி வாரிசு அரசியலுக்கும், காங்கிரஸின் அழுத்தமான வாரிசு தயார்படுத்தலுக்குமான வேறுபாட்டை தேசம் பார்த்துள்ளது.

பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் சில முக்கிய பாடங்களை படித்திருக்க வேண்டும். அத்வானியின் தலைமையில் மிக சிறப்பான ஒரு தேர்தல் வாக்குறுதியுடன் இந்த கட்சி தேர்தலை சந்தித்தது. அதன் வாக்குறுதிகள் தேச சீரமைப்பையும் பாதுகாப்பையும் குறித்து அமைந்திருந்தன. பொதுவாக அதன் எதிரிகள் சொல்லும் மதவாத குற்றச்சாட்டுக்களையெல்லாம் சொல்ல அக்கட்சி அவ்வளவாக வாய்ப்பளிக்கவில்லை. மோடியின் பிரச்சாரமும் சமுதாய பொருளாதார வளர்ச்சியையே மையம் கொண்டு இருந்தது. இப்போது அக்கட்சி கண்ட தோல்வியை அடுத்து சில சக்திகள் பாஜக மீண்டும் தனது பழைய பிரச்சனைகளுக்கு திரும்ப வேண்டுமென கோருகின்றனர். ஆனால் அந்த பிரச்சனைகளை பாஜக கைவிடவில்லை. மாறாக அன்றைக்கு அப்பிரச்சனைகள் ஒரு நோயின் குறியீடாக விளங்கின. அந்த நோயானது அப்படியேதான் உள்ளது. அதனை தீர்க்க பாஜக பல உக்திகளை கையிலெடுத்துள்ளது. தனது சமூக அடித்தளத்தை விஸ்தீகரித்தலும் மத அடிப்படையிலான சலுகைகளை நிராகரித்து அதே நேரத்தில் அனைவரையும் உள்ளிணைக்கும் சமூக பொருளாதார மேம்பாட்டை முன்வைப்பதும் இன்று பாஜக தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது. இது மிகவும் சரியான அணுகுமுறையாகும். 1980களின் இறுதிகாலகட்டத்தையும் 2010களையும் நாம் ஒரே நிலையில் பார்க்கமுடியாது. அப்படி எதிர்காலத்தை பின் நோக்கும் கண்ணாடியில் பார்த்தால் இன்னும் மக்களிடமிருந்து அன்னியப்பட்டுத்தான் போகும் அக்கட்சி. உண்மையில் அக்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்கள் அக்கட்சியிடம் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அதனை நிறைவேற்றுவதும், மற்ற இடங்களில் அக்கட்சியை வளர்ப்பதும் அவசியம். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்து கோவை ஆகிய இடங்கள் பாஜக கோட்டையாக மாறி இன்று தகர்ந்து விட்டன. கட்சியின் உள் கட்டமைப்பு குலைந்து கிடப்பதும் உட்கட்சி ஆளுமை பூசல்களும் இந்த நிலைக்கு காரணம்.

சொல்லி வைத்தது போல ஏதோ இந்திய தேர்தல் முடிவுக்காகவே காத்திருந்தது போல பாகிஸ்தானில் மும்பை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாத தலைவன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறான். உள்துறை அமைச்சரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் ஏதோ வழக்கமான சடங்குத்தனத்துடன் அதனை கண்டித்திருக்கிறார்கள்.

ஆக இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை ஆதாரத்தை இந்த தேர்தல் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஜியார்ஜ் ஆர்வெல் சர்வாதிகார சமுதாயம் குறித்து எழுதிய நாவல் “1984”. இதில் அவர் மக்களை மூளை சலவை செய்ய அரசாங்கம் மேற்கொள்ளும் பல உக்திகளைக் குறிப்பிடுகிறார். இந்தியர்களுக்கு ஓர்வெல்லிய சர்வாதிகாரத்தை ஜனநாயகமாக ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறதா?

4 Replies to “2009 இல் 1984?”

 1. முதலில் இந்த அருமையான கட்டுரைக்கு ஒரு வாழ்த்து. ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர். அதனால்தான் இன்னொரு மன்னர் என்ன செய்கிறார் என்பதை ஒரு மன்னர் வேவு பார்த்திருக்கிறார். வேவு பார்த்த மன்னருக்கு அதிகாரமும் இருந்ததால் வேவுபார்க்கப்பட்ட மன்னருக்கு தண்டனை அளித்திருக்கிறார். எவ்வளவு தூரம் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்பட முடியுமோ அவ்வளவுதூரம் ஆக்குகின்றனர். பனமும், அதிகாரமும் மட்டும் இருந்தால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை மதுரைத் தொகுதியும், சிவகங்கைத் தொகுதியும் நமக்கு நிரூபிக்கின்றன. எத்தனை ஓட்டைகள் இருப்பினும் ஜனநாயகமே சிறந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

 2. சில கட்டுரைகள் எதுகை-மோனை மற்றும் எளிமை தரும் சுவையைத் தாண்டிப் போவதில்லை. சில கட்டுரைகள் கருத்துக்களை திணிக்கும் வெறியோடு எழுதப்பட்டிருக்கும். ஆனால், அரவிந்தனின் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்குக் கேள்விகள் தாமாகவே எழுகின்றன. இந்தக் கட்டுரையும் அப்படியே.

  உண்மை ஜனநாயகம் எது? இந்தியாவில் இருப்பது உண்மையில் ஜனநாயகம்தானா?

  அல்லது, ஜனநாயகம் எனும் கண் மறைப்பிற்குப் பின்னால் ஆதிக்க சக்திகள் இந்தியர்களின் அடிமை நிலையைத் தொடருகின்றனவா?

  நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா?

  அமெரிக்கா போன்ற நாடுகளில் அந்த நாட்டின் அதிகாரத் தலைமைகளைக் கேலி செய்வதும், கேள்வி கேட்பதும் சாதாரண புழக்கத்தில் இருக்கிறது.

  ஆனால், தமிழ்நாட்டில் கிழடுதட்டிய ஒரு அரசியல் தலைமைக்குப் பின்னர் அடுத்த தலைமைப் பொறுப்பிற்கு யார் பொருத்தமானவர் என்ற கருத்துக் கணிப்பு நடத்திய பத்திரிகையின் மீது வன்முறை நடத்தப்பட்டு, இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள்.

  சில நாட்கள் கழித்துப் பத்திரிக்கையின் தலைமையும், அரசியல் தலைமையும் கைகோர்த்து சொந்த லாபங்களைப் பெருக்கிக்கொண்டே இருக்கின்றன.

  இந்த நிலையில் அந்த இரண்டு பேர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எங்கே போய் குறை சொல்ல முடியும்?

  இதை எல்லாம் பார்க்கிறோம். ஆனால், நாம் வேலை பார்க்கும் அமைப்பின்மேல் ஆதிக்க சக்திகளுக்கு ஆத்திரம் ஏற்படுமாயின், இறக்கப்போவது நாமாக இருக்கமாட்டோம் என்றே கனவு காணுகிறோம்.

  சென்னையில் உள்ள ஒரு கிருத்துவப் பள்ளியில் பைபிள் சரியாகப் படிக்காத ஒரு மாணவியின்மேல் வன்முறை நடத்தப்பட்டு, மனம் நொந்த அந்தக் குழந்தை தற்கொலை செய்துகொண்டது.

  மதவாதிகளின் அதிகாரம் பாய்ந்தததால், அந்தப் பெண்ணின் பெற்றோரே தனது குழந்தை தற்கொலை செய்ததற்கு பள்ளிக்குப் பொறுப்பில்லை என்று சொல்லும்படியானது.

  இந்த சூழ்நிலையில் இந்தக் கட்டுரை நமது சுகமான கனவுகளைக் கலைக்கிறது. இது போன்ற கட்டுரைகளில் இருந்து விலகிப்போனால் நாம் நமது கனவுகள் தரும் நிம்மதியைத் தொடரலாம்.

  பள்ளிக்குப் போயிருக்கும் நமது குழந்தைகள் இந்தக் கனவை கலைக்காதிருக்கட்டும்.

  நம்பிக்கைதானே வாழ்க்கை?

 3. இந்த கேரளாவை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஹிந்துக்கள் வாய் கிழிய பேசுவதோடு சரி. காரியத்தில் ஒன்றும் காணோம். மாற்றி மாற்றி கம்யூனிஸ்டுகளையும் காங்கிரஸயும் பதவிக்கு கொண்டுவந்து வைக்கிறார்கள்.

  பா.ஜ.க.வா எல்லா பொழுதும் உள் சண்டையிலேயே கழிந்துவிடுகிறது.

  கேரளாவிற்கு கதி மோட்சமே இல்லை போலிருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *