நம் முன்னோர்கள் எந்தச்செயலைச் செய்தாலும் அதை இசையோடு சேர்த்தே செய்தார்கள். ஆடிப்பாடி வேலைசெய்தால் அலுப்பிருக்காது என்பதால் அப்படிச் செய்தார்கள். குழந்தையைத் தூங்கவைக்கத் தாலாட்டுப் பாடினார்கள். அம்மானைப் பாட்டுப்பாடி அம்மானை விளையாடினார்கள். ஏற்றமிறைக்க ஏற்றப்பாட்டும் வண்டியோட்ட வண்டிக்காரன் பாட்டும் பாடினார்கள். ஆலோலம் பாடி தினைப்புனம் காத்தார்கள். ஓடம்விடும் போது ஓடப்பாட்டுப் பாடினார்கள். இவைதவிர கோலாட்டம் கும்மிப் பாட்டுகளும் பாடி, ஏன் மரணமடைந்தால் ஒப்பாரியும் பாடினார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு பாடல் இயற்றினார்கள்.
காவடிப்பாட்டு
இதேபோல் காவடி எடுத்துச் செல்லும் போதும் பாடினார்கள். அனேகமாக முருகன் மலைமேல் கோவில் கொண்டிருப்பான். பழனிமலையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் காவடி எடுத்து வருவதைப் பார்க்கலாம்.
பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்,
சந்தனக் காவடி, சக்கரக் காவடி,சேவல் காவடியாம்,
சர்ப்பக் காவடி, மத்ஸ்யக் காவடி,புஷ்பக் காவடியாம்
மலையைச் சுற்றி காவடியாட்டம் தினமும் நடக்குதாம்
என்று ரமணியம்மாள் பாடுவது போல காவடியெடுத்து வருபவர்கள் ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் வருவார்கள். வேல்,வேல் முருகா எனவும் வெற்றிவேல் முருகா எனவும் அரோகரா என கோஷங்கள் எழுப்பியபடியும் வருவார்கள். காவடிச்சிந்து மெட்டுக்கள், படித்தவர், பாமரர் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. பாரதியும் காவடிச்சிந்து மெட்டில் பாடல்கள் பாடியுள்ளார். காவடிச்சிந்து என்றாலே நம் நினைவுக்கு வருபவர், அண்ணாமலை ரெட்டியார். இவர் கழுகுமலைக்கருகில் உள்ள சென்னிகுளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்துகளின் வாயிலாகக் கழுகுமலையைப் பார்க்கலாம். கழுகுமலையின் மலைவளம், வாவிவளம், நகர்வளம் கோவில்வளம், இவற்றைப் பார்ப்போம்
மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சி நிலத்துக்குரிய கருப்பொருள் களான யானை, சிங்கம், மயில், குரங்கு இவற்றை யெல்லாம் பாடுகிறார். கழுகுமலையில் வீற்றி ருக்கும் முருகப் பெருமானை முனிவர்களும், தேவேந்திரர்களும் வந்து வணங்குகிறார்களாம். இவ்வளவு பெருமை யுடைய முருகனை நாம் பார்க்க முடியுமா? தரிசிக்க முடியுமா, என்ற தயக்கம் வேண்டாம், அவன் வெந்திறல் அரக்கர்களான சூரபத்மன், சிங்கமுகன் முதலிய அசுரர்களை வென்றவன் என்றாலும் அண்ணாமலை ரெட்டியார் நெஞ்சிலும் குடி கொண்டவன்.அதோடு வேட்டுவ குலப் பெண்ணான வள்ளி கொடுத்த தேனும் தினைமாவையும் ஆசையோடு வாங்கித் தின்றவன். வள்ளியிடம் அன்பை யாசித்தவன். அடியார்களுக்கு எளியவன்.
பொன்னுலவு சென்னிகுள நன்னகர்அண்ணாமலையின்
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் – முந்தி
வெந்திறல் அரக்கர்களை வென்றவன் – அடி
பூவையே உனது தஞ்சம் என்றவன்-அவள்
ஈயும் மாவினையும் மென்று தின்றவன் – அவள்
வாயூறு கிளவிக்குத் தேனூறி நின்றவன் ….
மலைவளம்
அவன் வீற்றிருக்கும் கழுகு மலையின் வளத்தைப் பார்ப்போம்.
கழுகுமலையிலே வண்டுகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து வருகின்றன. அவை அங்குள்ள பலவிதமான பூக்களிலுள்ள தேனை உண்டு பறக்கின்றன. மலைத்தேன் அல்லவா? அது மிகவும் ருசியாக இருக்கிறது. அதிகமாகத் தேனை உண்ட வண்டுகள் பாட ஆரம்பிக்கின்றன.
அவை மோகனமாக முகாரி ராகம் பாடுகின்றவாம். தேனுண்டதால் மயக்கம் வருகிறது. அந்த மயக்கத் திலே அவை தன் பெடையுடன் கூடுகின்றன. இந்த நேரம் மேகங்களும் சூல் கொண்டு மலைச்சிகரங்களிலே வந்து மூடுகின்றன. மேகத்தைக் கண்டால் மயிலுக்குக் கொண்டாட்டம் தானே? இந்த வண்டுகள் மோகனமாக முகாரி ராகம் பாட மயில்களும் ஆட ஆரம்பிக்கின்றன.
மூசுவண்டு வாசமண்டு காவில் மொண்டு தேனை உண்டு
மோகன முகாரி ராகம் பாடுமே – மைய
லாகவே பெடையுடனே கூடுமே – அலை
மோது வாரிதி, நீரை வாரி – விண்
மீதுலாவிய சீதாளாகர
முகில் பெருஞ் சிகரமுற்று மூடுமே – கண்டு
மயிலினம் சிறகை விரித்தாடுமே.
இந்தப் பாட்டைக் கேட்டால் நமக்கும் கூட ஆட்டம் வரும்!
இந்த மலையிலே பெரிய பெரிய யானைகள் கூட்டம் கூட்டமாகச் செல்லுகின்றன. இந்த யானைகளின் தந்தங்கள் நீண்டு பருத்திருக்கின்றன. அவை தமது நீண்ட துதிக்கைகளை உயரே தூக்கி வானத்திலிருக்கும் கற்பக மரங்களின் கிளைகளைப் பிடித்து ஒடிக்கின்றன. அந்த மலையிலுள்ள பலாமரங்கள் மிக உயரமாக இருப்பதால் அவை சந்திரனையே தொட்டு விடுகின்றன. அதனால் அம்மரத்தின் பழங்கள் நசுங்கி அதன் சாறு கீழே வழிய கீழேயிருக்கும் குரங்குகள் அள்ளி அள்ளிக் குடிக்கின்றன. பலா மரங்கள் மட்டுமல்ல, அங்குள்ள சந்தன மரங்களும்தான் எப்படி வளர்ந்திருக்கின்றன! அவை,
அந்தரம் உருவி வளர்ந்து இந்திர உலகு
கடந்து அப்புறம் போய் நின்றசையும் …
அம்மலையிலுள்ள சிங்கங்களின் கர்ஜனையைக் கேட்டு தேவேந்திரனின் ஐராவதம் கூட நடுங்குமாம்.
கந்தரம் தொறும் கிடந்து
கந்தரம் பயந்தொ துங்கும்
கர்ஜனை புரியும் திறல் சிங்கமே – நெஞ்சில்
அச்சமுறும் விண்ணுறை மாதங்கமே
[கந்தரம்-மலைக்குகை. முகில். மாதங்கம்—யானை]
வாவி வளம்
இவ்வளவு வளம் பொருந்திய மலையிலிருந்து இறங்கி வருகிறோம். ‘’தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்த’’தால் அங்குள்ள வாவி (குளம்) களில் நீர் நிரம்பி வழிகிறது. வெள்ளை வெளேரென்ற நாரைகள் அந்தக்குளக்கரைக்கு மீன் தேடி வருகின்றன. நாரையிடமிருந்து தப்பிய வாளை மீன்கள் கரையிலுள்ள தாழை மரத்தில் போய் மோது கின்றன. இன்னும் சில மீன்கள் அங்குள்ள தென்னம் பாளைக ளில் போய் மோதுவதால் தாழை மரங்களோடு, தென்னை மரங்களும் சாய்கின்றன!
வெள்ளை நாரை கொத்தும் வேளை- தப்பி
மேற்கொண்டெழுந்து சின வாளை – கதி
மீறிப் பாயுந்தொறும் கீறிச் சாயும் தென்னம்
பாளை – உடன்
தாழை.
தந்ததனத் தன தானா – தன
தந்ததனத் தன தானா – தன
தனதானன தனதானன தனதானன தனதானன
தானா – தன
தானா
என்ற சந்தத்தில் வரும் இந்தப் பாடல்களைப் படிக்கும் போதே அந்த தாளத்தில் நம் மனம் லயிக்க ஆரம்பித்து விடும்!
அந்தக் குளத்திலே பூத்திருக்கும் தாமரை மலர்களைப் பார்த்ததும் வண்டுகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. வரும்போதே அவை இனிமையாக ரீங்காரம் செய்து கொண்டு வருகின்றன. குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் சேவலும் அன்னங்களும் இந்த ரீங்கார இன்னிசையில் மயங்கித் தாமரை மலர்களிலே வந்து உறவாடுகின்றன. இப்படி மதுர ராகம் பாடிய வண்டுகள் அந்தத் தாமரை மலர்களிலுள்ள தேனைப் பருகிய மயக்கத்தில் முயங்குகின்றன.
வன்னத் தாமரையைக் கண்டு – வாயில்
ராகமது பாடிக் கொண்டு – மதி
மயங்கிப் பேட்டினுடன் முயங்கியே கிடக்கும்
வண்டு – கள்ளை
உண்டு.
தெள்ளும் பிள்ளை அன்னப்பேடும் – இளஞ்
சேவலானதுவும் ஊடும் – பின்பு
தேமலர்த்தவிசில் காமமுற்று வந்து
கூடும் – உற
வாடும்
|
(இந்தப் பாடல் வரிகளை காவடிச் சிந்து மெட்டில் கேட்க, மேலே உள்ள ப்ளேயரை க்ளிக் செய்யவும்)
ஒரு நாடு சிறப்புற்றிருக்க வேண்டு மானால் அது நீர்வளமும் நிலவளமும் நிரம்பப் பெற்றிருக்க வேண்டும். இங்கு அண்ணாமலை ரெட்டியார், தாமரைகள் பூத்திருப்பதன் மூலமாகவும், வண்டுகள் ரீங்காரம் செய்வதன் மூலமாகவும் நாட்டின் செழிப்பை விளங்க வைக்கிறார். நீர்வளம்இல்லாவிட்டால் தாமரைகள் பூக்க முடியுமா? மீன்கள் தான் துள்ளுமா? வண்டுகள் தான் ரீங்காரம் செய்யுமா? அந்த அன்னக் குஞ்சுகளுக்குத்தான் அங்கே என்ன வேலை?
இந்த வாவிகளிலே நீர் விளையாட்டு விளையாட தேவலோகத்துப் பெண்களும் வருகிறார்கள். இவர்களுடைய நடையைக் கண்டு வெட்கப்பட்ட அன்னங்கள் முன்னே செல்லாமல் பின்னே செல்கின்றன.
சகலகலைகளுக்கும் அதிபதியான கலைமகளை “அரச அன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத் தாயே!”
என்று குமரகுருபரர் தோத்திரம் செய்கிறார். அது போல இங்கு வரும் தேவ மகளிர் நடையைக் கண்டு அன்னங்கள் நாணி அவர்கள் பின்னே செல்கின்றன.
இந்த வாவியிலே குளிக்க கன்னங் கரேலென்று மேகத்தைப் போலிருக்கும் எருமைகள் வருகின்றன. அவை குளிக்கும் போது, குளத்திலுள்ள வரால் மீன்கள் துள்ளிக் குதித்து எருமைகளின் மடியை முட்டுகின்றன.உடனே அந்த எருமைகள் தங்களுடைய கன்றுகளை நினைத்த மாத்திரத்தில் மடுவிலிருந்து பால் சொறிகிறது. பால் கொட்டவே அந்தக் குளம் பால்குளமாக மாறிவிடுகிறதாம்! இப்படி நீர்வளமும் நிலவளமும் பால்வளமும் நிறைந்தது கழுகுமலை.
மந்தமேதி யுள்ளே எட்டும் – சினை
வராலு மெழுந்துமே முட்டும் – போது
மடிசுரந்து கன்று தனை நினைந்து கண்ட
மட்டும் – பாலைக்
கொட்டும்.
நகர்வளம்
இனி கழுகுமலை ஊருக்குள் செல்வோம் அந்த ஊரின் மாடங்களில் கட்டப் பட்டுள்ள கொடிகள் நம்மை வரவேற்கின்றன.(இப்பொழுது எந்த ஊருக்குச் சென்றாலும் முதலில் நம்மை வரவேற்பது கட்சிக் கொடிகள் தான்!) கழுகு மலையில் மிக உயர்ந்த மாடங்களில் கொடிகள் கட்டப்பட்டிருப்பதால் அவை சூரியனின் தேர்க்குதிரைகள் செல்வதற்கு இடைஞ்சலாக இருக்கிறதாம்! அதனால் அந்தக் குதிரைகள் கொஞ்சம் விலகித்தான் செல்ல வேண்டியிருக்கிறதாம்!
வெள்ளிமலை ஒத்த பல மேடை – முடி
மீதினிலே கட்டுக் கொடியாடை – அந்த
வெய்யவன் நடத்தி வரும் துய்ய விரதப் பரியும்
விலகும் – படி
இலகும்.
கழுகுமலை வீதிகளிலே எப்பொழுதும் வேத ஒலியும் , சிவ வேதியர்கள் ஓதும் சாம வேதத்தின் ஒலியும் கேட்டுக் கொண்டேயிருக்குமாம். சிவபெருமானுக்குச் சாமகீதம் மிகவும் உகந்தது. கயிலை மலையை எடுத்த ராவணனைப் பெருவிரலால் சிவன் அழுத்திய பொழுது, அவன் சாமகீதம் பாடி ஈசனை மகிழ்வித்தான். சிவகுமாரனான முருகனுக்கும் சாமகீதம் உகந்ததுதானே?
திருவாரூரின் சிறப்பைப் பேசவந்த சேக்கிழார்,
வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் மணிமுழவோசையும்
கீத ஓசையுமாய் கிளர்வுற்றவே
என்று வேத ஓசையை முதலில் வைத்தார்.
கழுகாசல நகர் வளத்தைக் கூற வரும் அண்ணாமலை ரெட்டியாரும் இப்படிப் பாடுகிறார் –
தெள்ளு தமிழுக்குதவு சீலன் – துதி
செப்பும் அண்ணாமலைக்கனுகூலன் – வளர்
செழியப் புகழ்விளைத்த கழுகுமலை வளத்தைத்
தேனே – சொல்லு
வேனே.
வீதிதொறும் ஆதிமறை வேதம் – சிவ
வேதியர்கள் ஓது சாமகீதம்-அதை
மின்னும் மலர்க்காவதனில் துன்னும் மடப் பூவையுடன்
விள்ளும் – படி
கிள்ளும்.
|
(இந்தப் பாடல் வரிகளை காவடிச் சிந்து மெட்டில் கேட்க, மேலே உள்ள ப்ளேயரை க்ளிக் செய்யவும்)
அந்த ஊரிலுள்ள சோலைகளில் வாழும் பறவைகளும் கூட அந்த வேத மந்திரங்களைச் சொல்லுமாம்.
’ஆறு கிடந்தன்ன வீதி’ என்று மதுரைக் காஞ்சி மதுரை வீதிகளைப் பற்றிச் சொல்கிறது. இங்கு கழுகுமலையில் கடலொத்த வீதிகள் காணப்படுகின்றன. அங்குள்ள கடைகளின் முன்பு முத்துப் பந்தல் போட்டிருக்கிறார்கள். அந்தப் பந்தலின் ஒளியினால் அஷ்ட கஜங்களுடைய தந்தங்களின் ஒளி கூட மழுங்கி விடுமாம்.
கத்துக் கடலொத்த கடை வீதி – முன்பு
கட்டுத் தரளப் பந்தலின் சோதி – எங்கும்
காட்டுவதால் ஈரிரண்டு கோட்டுமத
களிறும் – நிறம்
வெளிறும்.
கற்றுத் துறைபோகிய மக்கள்
கழுகாசல மக்களைப் பார்த்துக் கொண்டே செல்கிறோம். இவர்களைப் பார்த்தாலே கற்றுத் துறை போகியவர்கள் என்று தெரிகிறது. அகத்தின் அழகு முகத்தில்! இவர்கள் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் தேர்ந்த வர்கள். இந்தக் கழுகுமலை, போக பூமியாகிய இந்திர னுடைய அமராவதிப் பட்டிணத்தையும் மிஞ்சி விடுமாம்! கழுகுமலையை அடைந்தவர்களுக்கு அந்த அமராவதியும் வெறுத்து விடுமாம்!. இந்தக் கழுகாசல மக்கள் சகலகலா வல்லவர்களாக இருபதால் தமிழ் தந்த அகத்திய முனிவருக்கும் கூட இவர்களைக் கண்டால் அச்சம் ஏற்படுமாம்!
முத்தமிழ் சேர் வித்வ ஜனக் கூட்டம் – கலை
முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் – நெஞ்சில்
முன்னுகிற போது தொறும் தென்மலையின் மேவு குறு
முனிக்கும் – அச்சம்
ஜனிக்கும்
எத்திசையும் போற்றமரர் ஊரும் – அதில்
இந்திரன் கொலுவிருக்கும் சீரும் – மெச்சும்
இந்த நகரந்தனை யடைந்தவர்க்கதுவும் வெறுத்
திருக்கும் – அரு
வறுக்கும்.
இதுவரை கழுகுமலையின் மலைவளம், வாவிவளம், நகர்வளம் இவற்றையெல்லாம் பார்த்த நாம், கழுகாசல முருகன் வீற்றிருக்கும் கோவிலுக்குச் செல்கிறோம். தூரத்தில் வரும்போதே கோபுரம் தெரிகிறது. கோபுர தரிசனம் பாப விமோசனம். இந்தக் கோபுரம் தான் எப்படிப் பிரகாசிக் கிறது! அதிலுள்ள தங்க ஸ்தூபிகள் நமது கண்களை மட்டுமல்லாமல் தேவலோக வாசிகளின் கண்களையும் கூசச் செய்கிறது. உள்ளே நுழையும் போதே சிலம்பொலி கேட்கிறது. அங்கே அப்ஸரஸ் போன்ற பெண்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு வரும் அடியார்கள் ஒலிக்கும் முழவோசை, இடியோசை போலக் கேட்கிறது
திருவையாறிலே முழவோசை கேட்ட குரங்குகள் அதை இடியோசை என்று நினைத்து அஞ்சி மழை வருகிறதா என்று பார்க்க மரமேறி மேகக் கூட்டங்களைப் பார்க்கிறது
வலம் வந்த மடவார்கள் நடமாட
முழவதிர, மழை என்(று) அஞ்சி
சில மந்தி அலமந்து, மரமேறி
முகில் பார்க்கும் திருவையாறே
என்று தேவாரத்தில் பார்க்கிறோம். இங்கு கழுகுமலையில் முழவோசை கேட்டுப் பாம்புகள் மருண்டோடுகின்றன.
நூபுரத்து த்வனி வெடிக்கும் – பத
நுண்ணிடை மாதர்கள் நடிக்கும்-அங்கே
நுழைவாரிடு முழவோசைகள்
திசை மாசுணம் இடியோவென,
நோக்கும் – படி
தாக்கும்.
ஒருபுறம் நடனமாதர்கள் நடனமாடுகிறார்கள். ஒருபுறம் அடியார்கள் அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாடலுக்கு மைக்செட் தேவையில்லை. அவர்கள் பாடல் ஓசை தேவேந்திரலோகம் வரை சென்று தேவேந்திரனின் செவிகளை அடைக்கிறது.
ஆனால் அந்த முழக்கங்களும் தேவேந்திரனுக்கு உகப்பாகவே யிருக்கிறது. ஏனென்றால் தேவர்குறை தீர்த்த முருகனின் புகழல்லவா அது? சசி தேவி மாங்கல்ய தந்து ரக்ஷாபரண க்ருபாகரன் அல்லவா முருகன்?
அருணகிரி நாவில் பழக்கம்-தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம்-பல
அடியார் கணம் மொழியோதினில்
அமராவதி இறையோன் செவி
அடைக்கும் – அண்டம்
உடைக்கும்.
சிலம்பொலிகளையும், முழவோசைகளையும் திருப்புகழையும் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைகிறோம்.
அழகன் முருகன்
அங்கே முருகனைக் கண்டு ஆனந்த மடைகிறோம். அழகன் முருகன்தான் எப்படிக் காட்சி யளிக்கிறான்! அந்த முகத் திலேதான் என்ன புன்சிரிப்பு! கண்களிலேதான் என்ன கருணை! காதுவரை நீண்டிருக்கும் பன்னிரு விழி களும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கின்றன!
அன்னப் பறவைகளோ? ஆறுமுகா! புன்சிரிப்பு
இன்னமுத இதழ் அழகால் இன்சொற்கள் தாம் வருமே
வன்ன மலர்த்தாமரையில் வண்டுலாவும் விழியழகை
என்ன சொல்ல சிவபாலா! எழில் தாமரை முகனே!
என்று பாடத்தோன்றுகிறது.
இந்த முருகணின் அழகைப் பார்ர்க்கப் பார்க்க, அருணகிரிநாதர் கேட்பது போல் ‘’நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’’ என்று நினைக்கத் தோன்றுகிறது. முருகனின் சன்னதியில் ஆறுகால பூஜைகளை யும் ஆறுமுகனின் தரிசனத்தையும் பார்த்துக் கொண்டே யிருக்கலாம்.
வெள்ளைமலர் மணமாலை
விலையுள்ள வைரமாலை
வேலுமயில் கண்ட பேர்க்கு
வினையெல்லாம் ஓடிப்போகும்
வெறுக்குதில்லையே – மனம்
பொறுக்குதில்லையே – தேகம்
தரிக்குதில்லையே இந்த அலங்காரம், அலங்காரம்
என்று பக்தர்கள் பாடுகிறார்கள். இப்படியெல்லாம் ஆறுமுகனைப் போற்றிப் பாடுகிறார்களே, இதனால் இவர்கள் பெறப்போகும் நன்மை என்ன அதையும் சொல்கிறார் அண்ணாமலை ரெட்டியார்.
கருணை முருகனைப் போற்றி – தங்கக்
காவடி தோளின் மேலேற்றி – கொழுங்
கனலேறிய மெழுகாய் வருபவரே திரு மிகவே கதி
காண்பார் – இன்பம்
பூண்பார்
கழுகாசல முருகனைப் போற்றி, காவடிஎடுத்து வருபவர்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் அதிகமாகும், அவர்கள் நல்ல கதியடைந்து இன்பம் அனுபவிப்பார்கள் என்று பலனையும் சொல்கிறார்.
’’வெற்றி வேல் முருகனுக்கு, அரோகரா!
கழுகு மலையையும் காவடியையும் இதைவிட அழகாக வருணிக்க முடியாது நன்றி
How to reach this place?
வேல் முருகா எனவும் வெற்றிவேல் முருகா எனவும் அரோகரா இது போலே அரோகரா பாட்டு required. Please send me the link
Thanks,
Rajasekaran
காவடி சிந்து பாடல் வரிகள் அனைத்தையும் இங்கு தர முடியுமா?
தெரிதர்க்கரிய மந்திரமதை தனது தந்தை செவியில் புக மொழிந்த வாயனை
இள ரவியில் கதிர் செறிந்த காயனை
சிஹர கிரி பிளந்த வேலனை
உமை தகர குழல் கொள் வஞ்சி பாலனை
போன்ற வரிகள் ஒன்றிரண்டு மட்டும் நினைவில் உள்ளன
I AM VERY PROUD TO SPENT MY SCHOOL DAYS HERE AND I INFORM YOU THAT THE ALL HUMANS MUST VISIT ONCE THIS PLACE ITS REFLECTS OUR CULTURE BEFORE WHAT WE HAD BEEN…..
PRABHU RAJENDRAN
KARADIKULAM COLONY
mika sirappu.