பாவை நோன்பும் தைந் நீராடலும் – 2

பாவை நோன்பும் தைந் நீராடலும் – பாகம் 1

… பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை.

vaigarai‘நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்பர் அங்குக் கூடியுள்ள மகளிர். காட்டாற்று வெள்ளமெனப் பெருகி வந்த ஆற்று நீர், மார்கழி மாதம் தெளிந்து, முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும். அதுவே தக்க நீர். எதற்குத் தக்கது என்றால், தங்கள் மன விருப்பங்களையும், தவத்தையும் அந்த நீரிடம் கூறும்பொழுது, கண்ணாடி போல் தெளிந்த அந்நீர் அவற்றைத் தைத்துக் கொள்ளும். அதுவே ‘தைந் நீர்’. தெளிந்து இருக்கும் அந்நீர், அந்த மகளிரின் தவத்தை அப்படியே வாங்கிகொண்டு, நிறைவேற்றிக் கொடுக்கும்.

அவர்கள் இயற்றும் தவம்தான் என்ன என்பதை அடுத்த வரிகளில், புலவர் கூறுகிறார். இங்கேதான் அக வாழ்வின் வேண்டுதல்களைப் பொது நலம் கொண்ட பாவை நோன்புடன் தைக்கும் அருமையான கருத்துகள் புலனாகின்றன.

‘ “கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ என்மாரும்,
‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!’ என்மாரும்,
‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும்,
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” என்மாரும்

“எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். பல பூக்களை நாடும் வண்டுகள் போல, எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும். எம் கணவரும், யாமும், கிழவர், கிழவியர் என்று உலகத்தோர் கூறாவண்ணம், பேரிளம் பெண் என்னும் எமது ஏழாம் பருவம் எய்துமளவும், இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற வேண்டும்.”

இப்படி வேண்டிக் கொண்டு, பரிபாடல் இசைத்துப் பாடி இறுதியாக அவர் வேண்டுவது இது.

முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
நறு நீர் வையை நயத் தகு நிறையே!

“நாங்கள் முன்பிறப்பில் செய்த தவத்தாலே, இப்பிறவியில் நின்பால் இத் தைந் நீராடலாகிய தவத்தைப் பெற்றோம். அத்தவத்தினை யாவரும் விரும்பத்தக்க நினது நீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பிலும் நாங்கள் பெறுவோமாக,” என்று பிறவி தோறும் தொடரும் தவமாக, இந்த வேண்டுதல் நடப்பதே பாவை நோன்பின் அகத் திறமும், தைந் நீராடலின் மகத்துவமும் ஆகும்.

இந்த வர்ணனைகள் பாவை நோன்பின் முதல் நாளான மார்கழி பௌர்ணமியன்று நடப்பவை. அதன் பின்னரும் என்ன ஆயிற்று, எவ்வளவு நாட்கள் இந்த நோன்பு தொடர்ந்தது என்று பார்க்கும் முன், இந்நோன்பில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

neeraadalபிள்ளைப்பருவத்தின் ஐந்து முதல் ஒன்பது வரையிலான வயதுச் சிறுமியர் செய்வது என்று கூறப்படும் இந்தப் பாவை நோன்பில், முது பெண்டிர் கலந்து கொண்டு, மற்றவர்களுக்கு செய்யும்முறை சொல்லிக் கொடுக்கின்றனர். கன்னிப்பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதே பாடலில் ஓரிடத்தில், பாவை ஆடிய கன்னிப் பெண்ணைக் கண்டு மயங்கின இளமகனைப் பற்றிய விவரங்கள் வருகின்றன. கணவனை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டும் இள மங்கையர் கலந்து கொள்கின்றனர். ஆக, வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் அனைவரும் இந்த நோன்பை மேற்கொண்டுள்ளனர். வருடம் தோறும் செய்திருக்கின்றனர்.

ஹோமம் செய்யும் ஆண் மக்கள் அங்கே இருக்கின்றனர். பெண்கள் பாடுவதையும், ஆடுவதையும் வேடிக்கை பார்க்கும், இளம் பருவ ஆண்கள் அங்கே நீராடித் திரிந்து கொண்டிருக்கின்றனர். நோன்பில் கலந்து கொண்டவர்கள் என்று சொல்லத்தக்க வகையில், இளம் சிறுவரும் அங்கே இருந்துள்ளனர். அவர்கள் பாடிய பாடலுக்கு மாறாக, சிறுமியர் அபிநயித்துள்ளனர் என்று புலவர் கூறுகிறார்.

மறுநாள் முதல், ஆற்றங்கரைக் காட்சியாக இந்தச் சிறுவரும், சிறுமியரும் ஆற்றில் நீராடி, சிறுமியர் பாவை சமைக்க, அவர்களோடு சேர்ந்து சிறுவர்களும் விளையாடுவர். இந்த வர்ணனையை புற நானூறு 243 -இல் காணலாம்.

தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் புலவர், தான் போகும் வழியில், ஆற்றங்கரையில் பாவைப் படிமங்கள் செய்யும் சிறுமியரையும், அவர்களோடு கைகோத்து, நீரிலும், மணலிலும் குதித்து, கள்ளமில்லாமல் விளையாடும் சிறுவர்களையும் பார்த்து, அவர்களைபோன்ற இளமைக்காலம் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்.

“திணிமணல் செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை”

என்னும் இவ்வரிகளில் சிறுவர்- சிறுமியர் ஒன்றாகப் பாவை ஆடி விளையாடியமை தெரிகிறது.

“அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து”

என்னும் புறநானூறு 11-இன் மூலம் இள மங்கையரும் மணலில் பாவை செய்து, மலர் சொரிந்து வழிபட்டனர் என்று தெரிகிறது.

நோன்பின் காலம்

andalஆண்டாள் கூறும் முறைப்படி, மார்கழி முழுவதும், ஆற்றங்கரையில் நோன்பிருக்கப்பட்டது. அது தை, மாசி மாதங்களிலும் தொடர்ந்திருக்கின்றது. பங்குனி நாள் வரை என்று நாச்சியார் திருமொழியில், இரண்டு இடங்களில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மழைத் தொடர்பு வகையில் பார்த்தால், மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் இருக்கும் மூன்று வகைப்பட்ட இயற்கைச் சூழ்நிலையைப் பொருத்தே, ஆவணி மாதம் தொடங்கி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை உட்பட நான்கு மாதங்களிலும் மழை இருக்கும். மார்கழி தொடங்கி நான்கு மாதங்களிலும், என்றெல்லாம் மூவகைச் சூழ்நிலைகள் நன்றாக இருந்தனவோ, அன்றிலிருந்து 195ஆம் நாள் நல்ல மழை பொழியும். இதன் அடிப்படையில், பங்குனி வரை நோன்பு தொடர்ந்திருக்க வேண்டும்.

நாச்சியார் திருமொழி அடிப்படையில் நோக்கும் போது, மார்கழியில், மணலில் பாவை சமைத்தாலும், தையில் சிற்றில் இழைத்தலும் இருந்திருக்கக்கூடும். திருக்கூடல் போன்ற பிற மணல் விளையாட்டுகளையும், சிறுமியர் பிற மாதங்களில் விளையாடியிருக்கின்றனர்.

திருக்கூடல் என்பது, மணலில் வட்டமாக வரைந்து, கையை எடுக்காமல் அப்படியே அந்த வட்டத்தின் உட்புறம் சுழிகள் பல வரைய வேண்டும். பிறகு, இரண்டிரண்டாக சுழிகளை என்ன வேண்டும். கடைசியில் இரட்டைபடையில் கூடினால், நினைத்தது நடக்கும். ஒற்றைப்படையில் கூடினால், நினைத்தது நடக்காது. ஆண்டாள் நினைத்தது, நாராயணனே தன்னிடம் வரவேண்டும், தன்னை மணம் புரிய வேண்டும் என்பது. நோன்பின் தொடர்ச்சியான இந்த விளையாட்டுகளிலும், வரப்போகும் கணவனைப்பற்றியே வேண்டுதல்கள் இருந்திருக்கின்றன.

ranganathar-serthi-sevaஅதன் ‘க்ளைமாக்ஸ்’ பங்குனித் திருநாள்! அதுதான் பங்குனி உத்திரம் என்னும், பங்குனி மாதப் பௌர்ணமி. அன்றுதான் காமன் பண்டிகை. காதலர்களை காமதேவன் சேர்த்து வைத்த நாள். அன்றுதான், யார் காரணமாக காமதேவன் மலர்க்கணை தொடுத்து, அதனால் சிவனால் எரிக்கப்பட்டு, அனங்கன் என்று ‘உருவம் இல்லாதவன்’ என்னும் பெயர் பெற்றானோ, அந்தப் பார்வதி, பரம சிவனை மணந்த நாள். அதுவே, ராமன் சீதையை மணந்த நாள். பாற்கடலில் ஸ்ரீதேவி தோன்றிய நாள், அது மட்டுமல்ல, அந்த நாராயணனையே மணந்த நாள். அரங்கநகர் பெருமான், தாயாரை மணந்த நாளும் அதுவே. அந்தப் பங்குனி உத்திரப் பெரு விழா ஸ்ரீரங்கத்தில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்திருக்கின்றது என்று அக நானுறும் பறை சாற்றும் திருநாள். அன்றுதான் ஆண்டாளும், அரங்கனை மணந்தாள். அந்நாளே சேர்த்தி – திருமணப் பிணைப்பில் சேர்த்து வைக்கும் நாள் எனப்படுகிறது.

பாவை நோன்பின் ஒரு பகுதியாக காமதேவனைத் தொழுவர். பரிபாடலில் மங்கையர் தெரிவிக்கும் விருப்பங்களைப் பார்த்தால், கணவன் அன்பு குறையாமல், தம்மை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்னும் காமதேவன் அருளும் வரங்களே. சிவனை நோக்கியே மலர்க்கணை தொடுத்தவன் காமதேவன் என்னும் மன்மதன். அவன் தமக்கும் அருள் புரிய வேண்டும். தாம் விரும்பும் மணவாளனை அடைய உதவ வேண்டும். அடைத்த கணவன் என்றும் அன்புடனும், பிரியாமலும் இருக்க வேண்டும் என்பது பாவையாடும் பெண்டிர் விருப்பம். இதை ஆண்டாளும் தெரிவிப்பதை நாச்சியார் திருமொழியில் காணலாம்.

marriage4ஹோலிப் பண்டிகையன்று கொண்டாடப்படும், பங்குனி உத்திரமே பாவை நோன்பின் முடிவு நாள். திருமணப் பருவத்தில் இருக்கும் கன்னியர் மார்கழியில் இந்த நோன்பை ஆரம்பிக்க, அடுத்த மூன்று மாதத்திற்குள் அவர்களுக்கு வரன் அமைந்து, பங்குனி உத்திரத்திற்குள் மண வாழ்கை அமைய முன்னேற்பாடுகள் நடந்து விடும். இதைத்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றனர் நம் முன்னோர்.

பாவை உருவம்

மணலில் பாவை என்னும் பொம்மை செய்வர் என்று பார்த்தோம். அது என்ன பொம்மை என்று வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தில், கார்த்யாயினி என்னும் பெண் தெய்வத்தைப் பாவையாக வடிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. நம் தமிழ் மண்ணில் என்ன செய்திருப்பார் என்று ஆராய்வோம்.

வெளிப்படையாகத் தெரிவது, பாவை என்பது கொல்லிப் பாவை என்னும் பெண் தெய்வமாக இருக்கலாம். பாவைப் பாட்டு என்பது முன்பு இருந்தது என்று தொல்காப்பிய உரையில் காணப்படுகிறது. அதுபோல பாவைக் கூத்து அல்லது பாவை ஆட்டம் என்பதும், பதினோரு கூத்து வகைகளுள் ஒன்று. இதை ஆடியவள் செய்யோள் என்னும் செந்நிறம் கொண்ட திருமகள். அவளுக்குக் கொல்லிப் பாவை என்று பெயர் உண்டு. போருக்கு வந்த அசுரர்கள் மோகித்து, மெலிந்து விழும்படி அவள் புனைத்து கொண்ட உருவம், கொல்லி மலையின் மேற்புறத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதை காண்போர் அப்பொழுதே மோகிப்பர் என்று சொல்லப்படுகிறது. மோகத்தைத் தரும் காமதேவன் போல, இவள் பாவை உருவமே மோகத்தைத் தரும். எனவே இவள் உருவைப் பாவையாக அமைத்திருக்கலாம்.

முன்னிக்கடலை” என்னும் திருவெம்பாவையிலும், சக்தியின் உருவாக வருணிக்கப்பட்டு, மழை பொழிதலுடன் பாவை நோன்பு சொல்லப்படுகிறது. எனவே, பராசக்தி என்னும் பெண் தெய்வத்தையே வடித்திருக்கலாம்.

ஆனால் சிலப்பதிகாரத்தில் வஞ்சின மாலையில், புகார் நகரில் வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்டிரில் ஒருவராக ஒரு இளம் பெண் வடித்த பாவை பற்றிய குறிப்பு வருகிறது. பொன்னிக் கரையில் மணல் பாவை அமைக்கிறாள் அந்தப் பெண். அதுவே அவள் கணவனாகும் என்று மற்ற பெண்கள் சொல்லுகின்றனர். பிறகு அவர்கள் எல்லோரும் வீடு திரும்பிய பின்னரும், அந்தப் பெண் மட்டும் அங்கிருந்து அகலவே இல்லை. அந்தப் பாவையே தன் கணவன் என்று அவள் அந்த இடத்திலேயே இருக்கிறாள். அப்பொழுது ஆற்று நீர் கரை புரண்டு மணலில் பாய்கிறது. ஆனால் அவள் வடித்த பாவையை மட்டும் அழிக்காமல், அதைச் சுற்றிக் கொண்டு போகிறது. தான் வடித்த பாவை தன் கணவன்தான் என்று அவள் இருந்தமை அவள் பத்தினித்தனத்துக்குச் சாட்சி என்று சொல்லப்படுகிறது.

இங்கே இரண்டு விஷயங்கள் புலனாகின்றன. ஒன்று, இப்படிப்பட்ட உருவம் கொண்டவன்தான் தன் கணவனாக வரவேண்டும் என்று அவ்வுருவைப் பாவையாக அமைக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது.

மற்றொன்று, அந்த உருவம் கொண்டவனே அவள் கணவனாவான் என்று மெய்ப்பிப்பது போல ஆற்று நீரும் நடந்து கொண்டிருக்கின்றது. இது பிறவி தோறும் பாவை நோன்பு நோற்பதனால் ஏற்படும் பயனைத் தெரிவிப்பதாக இருக்கின்றது. இப்பிறவியில் இனி வரப்போகும் கணவன், முன் பிறவியிலும், இவளுக்குக் கணவனாக இருந்திருக்கின்றான். இவளது ஆழ் மனதில் பதிந்துள்ள அவன் உருவத்தையே பாவை நோன்பின்போது, மணலில் பாவையாக வடித்துள்ளாள். அவள் கணவன் அவனே என்று அவள் உறுதியாக அவ்விடத்திலேயே இருந்ததை, அவள் நோன்பினை ஏற்றுக்கொண்ட ஆற்று நீர், ஆமோதிக்கும் வண்ணம் அந்தப் பாவையை சிதைக்காமல் சென்றது. அவள் கணவன் யார் என்பதை அவளது பல பிறவிகளிலும், அந்த ஆற்றங்கரையில் அவள் நோன்பிருந்தமையால், ஆற்று நீர் தெரிந்து கொண்டிருக்கிறது.

இதற்கு மாறாக, சிறுமியர் வடித்த பாவையை, வைகை நீர் சிதைத்தது. அதனால் அவர் அழுவர் என்னும் வருணனையும் பரிபாடல் -7 இல் வருகிறது. தாங்கள் வடித்த பாவை சிதைந்து விட்டதே என்னும் துக்கம் இருக்கலாம். அல்லது, மேற்கூறிய வகையில் தன் கணவன் உருவம் என்று சமைத்த உருவம் சிதைந்ததே என்றும் அழுதிருக்கலாம்.

இந்த வகையில் சிந்திக்கும் போது, ஆண்டாள் வடிவமைத்த பாவை நிச்சயமாக கண்ணன் அல்லது விஷ்ணுவின் அவதாரங்களாகவோ அல்லது வேங்கடம், மாலிரும் சோலை போன்ற பதிகளில் உள்ள திருமால் உருவமாகவோ இருந்திருக்கலாம்.

பின்னாளில் பாவை நோன்பு

பாவை நோன்பு விவரிக்கும் பரிபாடல், அப்பாடல் எழுதப்பட்ட காலத்தைக் கணிக்கும் விதமாக கோள்களின் நிலையைக் கூறுகிறது. நான் தேடின வரையில் கி.மு. 1042, ஆவணி மாதம் இருந்த கோள் நிலை அதை ஒட்டி வருகிறது. பரிபாடல்கள் முதல் சங்கக் காலத்திலிருந்தே பாடப்பட்டு வந்திருக்கின்றன. பிறவி தோறும் பெண்டிர் பாவை நோன்பு நோற்றமை பற்றிக் கூறவே இந்நோன்பும், அது பற்றி விளக்கும் இப்பாடலும் மிகப் பழமை வாய்ந்தவையாக இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம்.

kannagi-on-separationபிற்கால வழக்கிலும் இந்நோன்பு இருந்திருக்குமா என்று தேடினால், சிலப்பதிகாரத்தில் இதை ஒத்த ஒரு நோன்பு சொல்லப்படுகிறது. கணவனைப் பிரிந்து வாடும் கண்ணகியைப் பார்த்து, பார்ப்பனப் பெண்ணான அவள் தோழி தேவந்தியும் வருந்துகிறாள். தீய கனவு கண்டு வருந்தும் கண்ணகியிடம், கணவனைப் பிரியாமல் இருக்கச் செய்யும் நோன்பினை முன்பிறவியில் கண்ணகி செய்திருக்க மாட்டாள். அதனால்தான் இத்துன்பம் வந்திருக்கிறது. இருந்தாலும், இப்பிறவியில், அந்த நோன்பைச் செய்ய காவிரி நதியானது கடலில் சங்கமிக்கும் புகார்த் துறையில், சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு துறைகளில் நீராடி, காமதேவனைத் தொழுதால் இப்பிறவியிலும் கணவனைப் பிரியாது இருக்கலாம். மறு பிறவியிலும் போக பூமியில் பிறந்து கணவனைப் பிரியாது இருக்கலாம் என்கிறாள். ஆனால் கண்ணகி தங்களுக்கு அது வழக்கம் இல்லை என்கிறாள்.

(கனாத்திறம் உரைத்த காதை)
கணவற்கு ஒருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்’

பாண்டிய நாட்டில் வைகை நதி தைந் நீராக – தக்கதாக இருந்தது போல, சோழ நாட்டில், காவிரி ஆறு இருந்திருக்கின்றது. சோம குண்டம் என்பது சந்திரன் துறை. சந்திரனும், சூரியனும் ஒருவரை ஒருவர் பார்க்கும் மார்கழித் திருவாதிரையில் பாவை நோன்பு ஆரம்பித்தார்போல, இவை இரண்டும் எதிர்நோக்கும் துறைகளாக இருந்திருக்கலாம். அங்கே நீராடி, காமதேவனைத் தொழுதல், பாவை நோன்புக்கு இணையாக இருக்கிறது.

பின்னால், கோவலனுடன், கண்ணகியும் மதுரை புறப்பட்ட போது, இதே சங்கமத் துறைக்கு வருவது சொல்லப்படுகிறது. ஆனால், காமதேவனைத் தொழும் நேரமல்ல அது. அவ்விடத்தில் மணிவண்ணன் கோட்டத்தை வலம்வந்து, பயணத்தைத் தொடர்கின்றனர். மணிவண்ணன் என்பது திருமால். காமதேவன் திருமாலின் மைந்தன். சங்கமிருந்து காமதேவன் தொழுது, அருகில் திருமாலை வணங்கிச் செல்லும் வழக்கம், அந்நோன்பு நோற்றாரிடை இருந்திருக்க வேண்டும். அந்தணர்கள் குடும்பத்தில் இந்த வழக்கம் இருந்திருக்க வேண்டும். பாவை நோன்பிலும், அந்தணப் பெண் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுப்பாள் என்று வருகிறது. சிலம்பிலும், அந்த நோன்பைப் பற்றிக் கூறுபவள் ஒரு அந்தணப் பெண்.

சிலப்பதிகாரம் காலத்திற்குப் பிற்பட்டு, ஆண்டாள் காலத்திலும் இந்த வழக்கம் இருந்திருக்கலாம். கண்ணனை அவள் அடைய விரும்பவே, தான் இருக்கும் இடமே ஆயர்பாடி என்று அவள் உருவகித்து, திருப்பாவை அமையும் களம் ஆயர்பாடி எனப் பாடியிருக்கலாம்.

‘அங்கண் மா ஞாலத்து’ எனத் தொடங்கும் பாசுரத்தில், அரசர்களும் ‘சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்’ என்று சொல்வதன் மூலம், புகாரின் கண் உள்ள சங்கத் துறையைக் கோடிக் காட்டியிருக்கலாம். சோம குண்டம், சூரிய குண்டம் போல, அந்தப் பாடலில் ‘திங்களும், ஆதித்யனும்’ பற்றிய குறிப்பும் வருகிறது.

பாண்டிய, சோழ நாட்டில் மட்டுமல்ல, சேர நாட்டிலும் இந்த வழக்கம் இருந்திருக்கின்றது என்று கோபால பணிக்கர் என்பவர் எழுதிய புத்தகம் கூறுகிறது.

தமிழ் கூறும் உலகம் என்று மட்டுமல்லாமல், யமுனைக் கரையிலும், இந்த நோன்பு செய்யப்பட்டது என்பதால், இது, மழையை நம்பி இருக்கும் எல்லா இடங்களிலும் பொதுநலம் கருதி, ஆன்மிகமும் இணைத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். மழைக்குக் காரணன் இந்திரன். மழையை நம்பி இருக்கும் நிலங்களில் அவனுக்குப் பெயர் உண்டு. பாகவதத்தில் வரும் ஒரு குறிப்பில், இமயமலைப் பகுதியில் யாரும் இந்திரனை நம்பி இல்லை. ஊற்று நீரும், பனி உருகிய நீருமே அவர்களுக்குப் போதும் என்று வருகிறது. அந்த இமயப் பகுதியில் சேடி நாட்டைச் சேர்ந்த புது மணத் தம்பதியர், காமன் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, புகார் நகரில் இந்திர விழா காணப் புறப்பட்டனர் என்று சிலப்பதிகாரம் கூறிகிறது.

பங்குனி உத்திரத்தில் வரும் காமன் பண்டிகை இமயத்தில் பிரசித்தமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை – அது பார்வதியின் பிறந்தகமாக இருக்கவே. தென் கோடியிலும் காமன் பண்டிகை, வட கோடியிலும் காமன் பண்டிகை. மனமொத்த மண வாழ்க்கையை விரும்பும் மக்கள், பாரதத்தில் எங்கிருந்தாலும், காமதேவனைக் குறித்து ஏதேனும் தவமோ நோன்போ இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்திர விழா என்பது மழையை எதிர் நோக்கி வாழும் தமிழ் பூமியில் நடந்திருக்கின்றது.

இந்திரனுக்கும் சேடி நாட்டுக்கும் ஒரு தொடர்புண்டு. இந்திரக் கொடியை நாராயணனிடமிருந்து இந்திரன் பெற்றுக் கொள்கிறான். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொடியை சேடி நாட்டவரிடம் இந்திரன் கொடுத்ததாக வராஹா மிஹிரர் கூறுகிறார். அந்த இந்திரனுக்கு எடுக்கப்படும் விழவு என்பதால், சேடி நாட்டு தம்பதியர் புகார் வருவதற்கு ஒரு காரணமாக இருக்க வேண்டும்.

மாறுபாடு உடையது என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒன்றே மதம், ஒரே வித வழக்கம் என்று இந்த பாரதப் பெரு நிலம் இருந்து வந்திருக்கின்றது என்பதற்கு இவையெல்லாமே சாட்சி.

தெய்வம் என்பதே இல்லை என்பதுதான் பகுத்தறிவு என்று கூறும் இன்றைய தமிழர் வாழும் இந்நாட்டில், இயற்கையும், மானுடமும் ஒத்து வாழ்ந்த இயல்பினைக் காட்டுவது பாவை நோன்பாகும். இயற்கையைப் பேணுங்கள், இயற்கை உங்களைப் பேணும் என்னும் உயரிய கருத்தின் அடிப்படையில் அமைந்தது இந்நோன்பு. அறிவியலும், ஆன்மிகமும் கலந்த பண்பாட்டினைப் பேசுவதுதான் இந்நோன்பு. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ‘தங்களுக்கு வழக்கம் இல்லை’ என்று கூறிய கண்ணகியே, தெய்வமான பிறகு, இளங்கோ அடிகளிடம் சொன்னாளே அதை மறவாமல் இருக்க வேண்டும்..

“தெய்வம் தெளிமின்: தெளிந்தோர்ப் பேணுமின்:
….தானம் செய்மின்: தவம் பல தாங்குமின்.”

முற்றும்.

3 Replies to “பாவை நோன்பும் தைந் நீராடலும் – 2”

  1. பாவைநோன்பு பற்றிய பல விஷயங்களை சொன்னதற்கு நன்றிகள்.. தொடரட்டும் உங்கள் பணி..

  2. “அருமையான பதிவுகள்! “கார்த்யாயினி என்பது நமது கன்னியாகுமரியில் இருக்கும் சிறு பெண்வடிவில் இருக்கும் கன்னித் தெய்வமே!

    இதை “கார்த்தியாயினி வித்மஹே கன்னியகுமாரி தீமஹி தந்நோ துர்கிப் ப்ரசோதயாத் ” என்பதே துர்கா காயத்ரி மந்தரம் மூலம் அறியலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *