மெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்

இந்தியா விடுதலை அடைந்து அறுபதாண்டுகள் கடந்து விட்டன. ஆனால் சமுதாய வன்கொடுமைகளோ தொடர்கின்றன தொடர்கதையாக.

சொந்த நாட்டில், சொந்த சகோதரர்களால் தீண்டத்தகாதவராக நடத்தப்பட்ட சமுதாயத்தினர் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறார்கள். தீண்டாமையை ஒரு வன்கொடுமையாக பிரகடனம் செய்கிறது அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியல் சட்டம். தீண்டாமை ஒரு பாவம் என்கிறார் மகாத்மா காந்தி. ஆனால் இவை அனைத்துக்கும் அப்பால், கிராமங்களில் வாழ்வதற்கான உரிமையும் சுயமரியாதையும் தலித் சகோதரர்களுக்கு மறுக்கப்பட்டே வருகின்றன.

அத்தகைய ஒரு நிகழ்ச்சிதான், திண்டுக்கல் மாவட்டம் மெய்கோவில்பட்டி கிராமத்தில், தேவேந்திரகுல வெள்ளாளர் எனப்படும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சடையாண்டி என்கிற இளைஞருக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஆனால் அதிகார வர்க்கமும் சாதி உணர்வும் இணையும் போது, அநீதி இழைக்கப்பட்டவரே குற்றவாளி போல தலைமறைவாக வாழ நேரி்ட்டுவிடுகிறது. இது கொடுமையின் உச்சங்களில் ஒன்று.

இன்று குடும்பத்தையும் கைக்குழந்தையையும் விட்டு சொந்த ஊரையும் விட்டு தலைமறைவாக பகுஜன்சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறார் அந்த இளைஞர். அவர் செய்த குற்றம்தான் என்ன?

அந்த கிராமத்தின் தலித் பகுதிகளில் இரண்டு தலித் வகுப்பினர் வசிக்கின்றனர். கிராமத்தின் பிற பதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தலித் பகுதியின் ஆதார அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருந்தன. வீதிகளின் அருகிலேயே குண்டு குழிகள், கழிப்பிட வசதி இல்லாதது போன்ற அவலங்கள். விசாரிக்க சென்ற குழுவிடம் ஆற்றாமல் அழுதபடி நடந்த சம்பவத்தை விவரித்தார் சடையாண்டியின் மனைவி. கையில் மூன்று மாத குழந்தை.

இந்த தாக்குதல்களில் சாதியத்தின் கொடிய கரத்தை நாம் தெளிவாகக் காண முடிகிறது. சடையாண்டி மீதான தாக்குதல் கிறிஸ்தவ ஆதிக்க சாதிகளால் நடத்தப்பட்டது என்ற உண்மை, மதம் மாறினால், சாதியம் அப்படியே மறைந்துவிடாது என்பதை மீண்டும் முகத்தில் அறைந்தாற்போல சொல்கிறது.

ஆனால் இதில் ஒளிந்திருக்கும் மற்றொரு உண்மை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உண்மை நிலவரம் என்ன என்று அறிய அந்த இளைஞரின் கிராமத்துக்கு சென்ற போதுதான், அந்த உண்மையின் மற்றொரு விசித்திரம் நமக்கு காணக்கிடைத்தது. அது வேதனையானதும் கூட.

காவல் துறையிலும், உள்ளூர் அரசு சேவை மையங்களிலும், கல்விச்சாலைகளிலும் தலித் சமுதாயத்தினருக்கு பாதுகாப்பில்லை. அரசு அதிகாரிகள் தலித்துகளை சரியான முறையில் கவனிப்பதில்லை முழுமையான நேரத்தை ஆதிக்க சாதியினருடனேயே செலவழிக்கின்றனர் என்பது தலித் மக்களின் குமுறல்.

ஆதிக்க சாதிகள் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களுடன் இணைந்துகொண்டு, நலிவுற்ற பிரிவினரை, அதிலும் குறிப்பாக மதம் மாறாமல் இருக்கும் நலிவுற்ற பிரிவினரை அதிக உக்கிரத்துடன் தாக்குகிறார்கள். நாம் இந்த மக்களிடம் பேசியபோது, இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

கிறிஸ்தவ கத்தோலிக்க சபை இரண்டு விதங்களில் தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள்.

முதலாவதாக, தலித்துகளின் குடியிருப்புக்களை சுற்றி நிலங்களை வளைத்துப் போட்டுவிட்டு, ஆதிக்கசாதியினருக்கு ஆதரவாக பாதிரியார் தலைமையில் வேலி அமைத்திருக்கிறார்கள். இரண்டாவதாக, கிறிஸ்தவ மக்களுக்கும் தலித் இந்துக்களுக்கும் இருக்கும் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில், வேண்டுமென்றே கிறிஸ்தவ சப்பர விழாவை அம்மன் கோவிலை ஒட்டி நடத்தி கோவிலில் சிறிய உடைப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பொதுவாக இரண்டு ஊர் மக்களையும் இணைக்கும் ஒரு பாலமாக காளியம்மன் கோவில் இருந்திருக்கிறது. பல ஆதிக்க சாதி சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் (கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்த போதிலும் கூட!!) தாங்கள் காளியம்மன் மீது சத்தியமாக, தலித் சமுதாயத்தினரை தீண்டத் தகாதவர்களாகப் பார்க்கவில்லை என்றார்கள். இந்த தாக்குதல் நடக்கவேயில்லை என்ற பேச்சையும், அது ’சின்னப் பசங்க’ செய்த தவறு என்ற பேச்சையும் ஆதிக்க சாதியினரிடையே காணமுடிந்தது. மேலும் இரண்டு பக்கங்களிலுமே சாதியத்தலைவர்களின் பங்கு எதிர்மறையாக உள்ளதை தலித் மக்கள் எடுத்துச் சொன்னார்கள்.

தலித்துகளுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையே நிலவும் உறவுகள் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டவை. மானுடத்தின் சுய மரியாதைக்கு பங்கம் விளைவிக்கக் கூடியவை. இது ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம் பாரம்பரிய சாதிகளுக்கு இடையேயான உறவுகளில் ஒருவித பங்காளி உறவுத் தன்மையும் இருக்கத்தான் செய்கிறது. இந்த உறவுத் தன்மையை வலுப்படுத்திக்கொண்டே, சுரண்டலையும், மானுடமற்ற சாதிய வெறியையும் அழிப்பதுதான் இன்றைக்கு சமுதாயத் தலைவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பெரிய சவால்.

சாதியக் கொடுமைகள் யாரை நோக்கி ஏவப் படுகிறதோ அவரை காயப் படுத்துகின்றன. அந்தக் காயங்கள் அவரை வலிமையாக்கும். சமூக நீதிக்கான போராட்டத்தின் தேவையை அவை வெளிப்படுத்தும். ஆனால் கொடுமை செய்பவருக்கோ அது ஆழமான ஆன்மிக வடுவையே ஏற்படுத்துகிறது. கொடுமை செய்பவரை மானுடத்தன்மையிலிருந்து கீழே இறக்கி விடுகிறது.

வெறும் சாதி உணர்வுகளை தூண்டிவிடுபவர்களோ அல்லது அடங்கி செல்ல அறிவுறுத்துவோரோ தலித் விடுதலையை வென்றெடுக்க முடியாது. தமிழகத்தின் தலித் தலைவராக தன்னைத்தானே ஏகபோகமாக முடிசூடிக்கொள்ளும் சிலர், அன்றைக்கு மட்டுமல்ல, அதற்கு பிறகும் அங்கு எட்டிக்கூட பார்க்கவில்லை. இந்த கசப்பான உண்மை இந்த யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டும்.

பிறர் மீது வெறுப்பை சுமக்காமல், சாதியமற்ற சமுதாயத்தை ஏற்படுத்த நமது ஆன்மிக சமுதாயத் தலைவர்கள் நல்வழியைக் காட்டியுள்ளார்கள். புத்தரின் அறவழியைத் தேர்ந்தெடுத்த அண்ணல் அம்பேத்கர், அத்வைதம் கூறும் ஆன்மிக விடுதலையை சமுதாய நீதிக்கு விரிவாக்கிய நாராயணகுரு, தாழ்த்தப் பட்டவர்களுக்காக இன்னுயிர் ஈந்த வீரன் சேகரன், சிதம்பரத்தில் நந்தனாரே மீண்டு வந்ததது போல நமக்காக போராடிய துறவி சகஜானந்தர் ஆகியோர் காட்டிய வழியில் நாம் செல்ல வேண்டும்.

அந்த வழி எளிதான வழியல்ல.
ஆடம்பரத்தின் வழியல்ல.
வன்முறையின் வழியல்ல.

உண்மையான வீரத்தின் வழி.
தியாகத்தின் வழி.
முட்பாதைகள் நிறைந்த வழி.

நாம் அந்தப் பாதைகளில் நடந்து உரிமைகளை வென்றெடுப்போம். அன்பும் தோழமையும் மானுடமும் கொண்ட ஆன்மநேய தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவோம். நம் குழந்தைகள் சாதியத்தின் விஷக்கடிகள் எதுவுமின்றி, மலர்மீது நாளை நடப்பார்கள்.


வன்கொடுமை ஒழிப்போம். ஆன்மநேயம் வளர்ப்போம்.

பார்க்க: நந்தனார் சேவாஸ்ரம டிரஸ்ட் இணையதளம்

[இந்த கள ஆய்வு வீடியோக்களை பயன்படுத்த அனுமதி தந்தமைக்கு, இந்த வீடியோக்களை எடுத்து வெளியிட்ட தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் திரு கௌதமன் அவர்களுக்கு தமிழ்ஹிந்து.காம் தளம் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.]

7 Replies to “மெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்”

  1. மெய்க்கோவில்பட்டியில் நிகழ்ந்த அநியாயத்தின் பின்னணியில் கிறிஸ்தவ மத உயர் சாதியினர் ஒன்றுகூடி செயல்பட்டிருப்பது ஒன்றும் தற்செயலான சம்பவம் இல்லை. நம்மிடையே ஒற்றுமை ஓங்கச்செய் வதர்க்கு ஹிந்து சமுதாயத்தின் ஆதாரமான கருத்துக்களை நமது தாழ்த்தப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு உணர்த்துவதற்கு பண்பாட்டு வகுப்புக்களும் ஆன்மீக அரங்கங்களும் நடத்தப்படவேண்டும். நாம் ஒன்றுபட்டு விழித்தெழுந்தால் வெற்றி நிச்சயம்.

  2. சில நாட்களுக்கு முன் வந்த இந்த பரிதாபகரமான செய்தியை ஏதோ குழாய்யடி சண்டைபோல் கையால் ஆகாத பதிவியில் உள்ள குருட்டு கபோதிகள் கண்டுகொள்ளவில்லை. இருட்டடைப்பு செய்யப்பட்ட அநாகரிக செயலை வெளிச்சம் போட்டு வெளியிட்ட தமிழ் இந்துவுக்கு நன்றி கழுதைபுலி கட்சியும் கண்டுகொள்ளவில்லை கருப்பு சட்டை சிவப்பு சட்டை கட்சியும் கண்டுகொள்ளவில்லை. அவர்களிடம் மணிதாபிமானத்தை எதிர் பார்ப்பது தவறு.

    மதம் மாறவில்லை என்றால் எல்லாவிதமாக கீழ்தரமான செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள் கிருஸ்துவர்கள் என்பதற்க்கு இந்த நிகழ்வு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

    தமிழர்கள் எல்லோரும் வெட்கப்படவேண்டும் வேதனைபடவேண்டும். பாதிக்கப்பட்டவருக்காக நான் அனுதாபப்படுகிறேன். கடவுள் நிச்சயம் கயவர்களை வெகு விரைவில் தண்டிப்பார்

    (edited and published)

  3. நண்பர்களே ஒவ்ஒரு ஊரிலும் உள்ள இலஞ்சர்கள ஒன்றிணைத்துநமது பண்பாடு, கலாசாரம், மதம்பற்றி
    விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும். ஒரு இயக்கம் காணவேண்டும்.இது
    காலத்தின் கட்டாயம், இல்லையேல் வருங்கால சந்ததிகள் மனவெறுமையும்,பாதுகாப்பில்லாத வாழ்வையும் சந்தித்தே ஆகவேண்டும்.இது அரசியல் சார்பற்ற பணியாக செய்யவேண்டும்.
    இவன்-அரசை வடிவேல்.

  4. i dont know why these so called secular media hasn’t shown this. I think they are very busy to show nithyanada’s so called sex scandal…

  5. இந்த செய்தியும் ஆவணப்படமும் ஏதேனும் தொலைக்காட்சியில் வந்தால் மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்கும்

  6. தமிழ் ஹிந்து நிர்வாகிகளுக்கு
    இந்த தளத்தில் ஒரு சிலரின் கட்டுரைகளை மட்டுமே பதிவு செய்தால் போதாது. ஹிந்து மதம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வீடியோ ஆடியோ சொற்பொழிவுகள் பஜனை பாடல்கள், கோவில்கள் போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *