ஜோதியில் கலந்தோர்

sivabhaktavilasam_as_narrated_by_sage_upamanyu_idi514smமது இதிகாசங்களும், புராணங்களும் பல நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன . பலருக்கும் அவை அனைத்தும் ஏதோ கற்பனையில் உதித்த கட்டுக்கதைகள் என்றே எண்ணங்கள். அவை அப்படி அல்ல என்று காட்டுவதற்காகவோ, அல்லது அவைகளில் பொதிந்துள்ள உண்மைகளை உணர்த்துவதற்காகவோ சில நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. அறுபத்துமூன்று நாயன்மார்களைப் பற்றி பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதியுள்ள பெரிய புராணத்தில் நடந்ததாக சொல்லப்பட்ட ஒரு நிகழ்வையும், சமீபத்தில் 1950-ம் வருடம் நிகழ்ந்ததையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது இக்கட்டுரை.

வட மொழியில் இருந்து வந்த வால்மீகி ராமாயணத்தை கம்பரும், வியாசர் எழுதிய மகா பாரத்தை வில்லிபுத்தூராரும் தமிழில் எழுதியதைப்போல, தமிழிலிருந்து வட மொழிக்குச் சென்ற ஒரே காப்பியம்தான் பெரிய புராணம். அது உபமன்யு முனிவர் சொல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ள காப்பியம்; வட மொழியில் அதற்கு சிவபக்தவிலாசம் என்று தலைப்பு.

அதன் ஆரம்பக் காட்சிகளிலேயே, கைலாயத்தில் உட்கார்ந்து கொண்டு உபமன்யு முனிவர் தனது சீடர்களுக்கு சிவ பெருமான் பெருமையை சொல்வதுபோல் வரும். உபமன்யு அப்படி உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் மின்னல் போன்ற ஒரு சுடர் தென் திசையிலிருந்து சிவ பெருமான் வீற்று இருக்கும் திசை நோக்கிச் செல்கிறது. அதைக் கண்டதும் முனிவர் கை கூப்பித் தொழுது நிற்கிறார். கூட இருந்த சீடர்களுக்கோ ஒரே ஆச்சரியம். அங்கு நடப்பது என்ன என்று குருவை வினவ, அவரும் விளக்குகிறார்.

sundarar1“முன்பு ஒரு முறை சிவனின் இன்னோர் அம்சமாக விளங்கிய ஆலால சுந்தரர் என்பவர் தான் அவர். சிவ பூஜைக்கு உரிய பணியைக் கவனிப்பவர். அப்பணியில் நேர்ந்த கவனச் சிதறலால், அவரை இறைவன் தென்னாட்டில் மானிடனாகப் பிறக்கக் கட்டளை இடுகிறார். அவரால் தென்னாட்டில் நடைபெற இருக்கும் ஒரு பணி முடிந்ததும் அவர் மீண்டும் கைலாயம் திரும்புவார் என்றும் இறைவன் அருள்கிறார். அந்தப் பணிதான் சிவன் நாமத்தை ஓதுவதும், சிவன் புகழைப் பாடுவதும் அன்றி வேறு எதுவும் அறியாத சிவனடியார்களான அறுபத்து மூவர்களைப் பற்றிப் பாட வேண்டியது. அவர் அப்பணியைச் செவ்வனே முடித்து விட்டு சுந்தரமூர்த்தி நாயனாராகத் திரும்பியிருக்கிறார்” என்று முனிவர் கூறினார். அவ்வாறு பாடப் பெற்ற சுந்தரரின் ‘திருத்தொண்டத் தொகை’ தான், சேக்கிழாரின் பெரிய புராணத்திற்கு ஒரு முன்னோடியாக அமைந்தது.

சுந்தரர் கைலாயம் திரும்பும்போது நிகழ்ந்த ஒரு ஒளிப் பயணம் போலவே, 1950 -ம் வருடம் ஏப்ரல் மாதம் இரவு 8:47 மணிக்கு, பகவான் ரமணரின் இறுதி மூச்சு நிற்கும்போதும் திருவண்ணாமலையில் நடந்தது. அப்போது அவர் படுத்திருந்த அறையிலிருந்து ஒரு ஒளியானது அருணாச்சல மலையின் உச்சி நோக்கிச் சென்றதை பலரும் பார்த்ததாகச் சொல்வர்.

ramanaஅதில் ஒரு அதிசயம் என்னவென்றால், அதைப் பல தரப்பட்ட மனிதர்களும், வெவ்வேறு ஊர்களிலிருந்தும் பார்த்திருக்கின்றனர். அப்படிக் கண்கூடாகப் பார்த்தவர்களில் இருவரை நான் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவ்விருவரில் ஒருவர் அப்போது வேலூரில் தண்ணீர் குழாயில் நீர் பிடித்துக் கொண்டிருந்தாராம். மற்றவர் திருக்கோவிலூர் அருகே ஒரு மடத்தில் தவ சிரேஷ்டர் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். திடீரென்று அத்தவ முனிவர் ஆகாயத்தைப் பார்த்து, ‘அதோ, அதோ ரமணர் போய்க் கொண்டிருக்கிறார்’ என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாராம்.

இப்படியான நிகழ்ச்சிகள், மனிதனாகப் பிறந்தாலும் ஒருவன் உயர் நிலைக்குச் சென்று உண்மை நிலையை உணரும்போது இறைவனுடன் ஒளியாக ஐக்கியம் ஆகிறான் என்பதைக் காட்டுகிறது. 1950 -ல் நடந்த அந்த நிகழ்வு எனக்கு நல்லோர் வாயிலாகத் தெரிந்திருக்கவில்லை என்றால், நானும் மற்றோரைப் போலவே இது போன்றவைகளில் என்ன என்ன கட்டுக் கதைகள் இருக்குமோ என்றுதான் நினைத்திருப்பேன்.

3 Replies to “ஜோதியில் கலந்தோர்”

 1. எனது அன்னை, தந்தை, பாட்டி உட்படப் பலரும் இந்த ஜோதியைக் கண்டதாகக் கூறக் கேட்டிருக்கிறேன். இப்போதும் எனது அன்னை சென்ற வாரம் இது பற்றிக் கூறினார்.

  இவை போக சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கேரளத்துப் பெரியவரைக் சந்தித்தபோது அவர் 1950 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தபோது இந்த ஜோதியைக் கண்டதாகக் கூறக் கேட்டேன். இதில் முக்கிய விஷயம் அந்தப் பெரியவர் ஒரு நாத்திகர்!

 2. அன்புள்ள ஐயா,

  பகவான் ரமணர் ஜோதி ச்வரூபமாக அருணாச்சலத்துடன் கலந்ததை
  பாண்டிச்சேரி அன்னையும் பார்த்து உடனே நமச்கரிததாக எனது நண்பர்
  ஒருவர் கூறியுள்ளார்

  நமஸ்காரம்,

  சுப்ரமணியன். இரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *