ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8

புனிதமான கங்கையில் குளித்துவிட்டு ஆச்சாரியார் தன் சீடர்களுடன் வரும்போது, எதிரே ஒரு புலையன் நான்கு நாய்களைப் பிடித்துக் கொண்டு வருகிறான். சீடர்கள் அவனை அவர் மேல் படாதவாறு ஒதுங்கச் சொல்ல, அப்போது அவன் சங்கரரைப் பார்த்து இப்படிக் கேட்கிறான்: “யதிகளில் சிறந்தோரே, அன்ன மயத்தாலான இந்த சரீரத்தை அன்ன மயமான இன்னுமொரு சரீரத்திலிருந்து விலகச் சொல்கிறீர்களா? அல்லது ஒரு சைதன்ய சொரூபத்தில் இருந்து இன்னொரு சைதன்ய சொரூபத்தை அகலும்படிச் சொல்கிறீர்களா? கங்கை நதியில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பம், சண்டாளனின் குடிசையின் பக்கத்தில் இருக்கும் குளத்தில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பத்திலிருந்து வேறாகுமோ? பொன் குடத்தின் உள்ளே இருக்கும் ஆகாசம் மண் குடத்தில் உள்ளதிலிருந்து வேறுபடுமோ? எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சத்திய ஆனந்த போதத்தில் திளைத்திருக்கும் உம்மிடம் “இவன் மேலோன், அவன் கீழோன்” என்ற பெரும் மயக்கம் எப்படித் தோன்றுகிறது?” இதைக் கேட்ட ஆச்சாரியார் தன் மனம் ஆன்மாவின் உன்னத நிலையை மறந்து உடலின் தூய்மை பற்றிய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி பாமரத் தன்மை அடைந்ததை உணர்கிறார். அதனை அகற்றி, “பரம்பொருளின் தன்மையை உணர்ந்து உறுதியான போதத்துடன் இருப்பவர் சண்டாளர் ஆயினும், அந்தணர் ஆயினும் அவரை என் குருவெனப் போற்றுகின்றேன்” என்று ஈற்றடி வருமாறு “மனீஷா பஞ்சகம்” என்ற ஐந்து ஸ்லோகங்களை இயற்றுகிறார். ஆக உடல்-ஆன்மா குழப்பம் எப்போதும் வராதவாறு நம்மைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும்…..

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8