ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8

தொடர்ச்சி..

உபாதிகள் எல்லாம் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் கற்பனை என்று பார்த்தோம். அந்த உபாதிகள் உண்மையற்றவை என்றாலும், அவை எந்த விதமாகவெல்லாம் நம் சுய உருவத்தை மறைத்து விதவிதமான அறியாமையை வளர்க்கின்றன என்று இப்போது பார்ப்போம். அவைகள் ஒருவனை எவ்வளவு பாதித்துள்ளன என்று பார்த்து, அதற்குத் தகுந்தபடி ஒவ்வொருவனது பயிற்சியின் தொடக்கமும் இருக்க வேண்டும் என்பதால் இந்த விவரங்கள் நமக்குத் தேவை ஆகின்றன.

11. नानोपाधिवशादेव जातिवर्णाश्रमादयः |
आत्मन्यारोपितास्तोये रसवर्णादिभेदवत् ||

நாநோபாதிவஷாதேவா ஜாதிவர்ணாஷ்ரமாதயஹ |
ஆத்மன்யாரோபிதாஸ்தோயே ரஸவர்ணாதிபேதவத் ||

பலவாம் உபாதிகள் பற்றியே நாமம்
குலம் ஆசிரமம் முதல் கொள்கை – சலத்தில்
சுவை நிறம் ஆதிபோல் சுத்த ஆன்மாவில்
அவை கற்பிதமாம் அறி

Adisankara-Holy-Vs-Lowly
பலவிதமாம் உடல் பற்றிய உபாதிகளைப் பற்றியே பெயர், குலம், வாழ்முறை முதலான நடைமுறைக் கொள்கைகள் உண்டாகின்றன. சுத்தமான நீரில் இனிப்பு, கரிப்பு, கடுப்பு என்ற பலவிதமான சுவைகளும், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலான நிறங்களும் காணப்படுவது போல, உடல் பற்றி உண்டாகும் விதவிதமான உபாதிகள் பரிசுத்தமான ஆன்மாவைப் பற்றுவதாகக் கற்பனையால் அறியப்படுகின்றன.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களில் நிலமாகிய மண் ஒன்றுக்குத்தான் வேறு வேறு மாதிரியான நிறங்களும், மணங்களும் ஆன குணங்கள் எல்லாம் உண்டு. மற்ற பூதங்களில் நீருக்கும், காற்றிற்கும் அதனோடு மற்றவை கலப்பதால் வரும் குணங்கள்தான் உண்டு. நெருப்பும், ஆகாயமும் அவைகளுக்குண்டான இயற்கைக் குணத்தோடு இருப்பவை. நீர் அது இருக்கும் மண்ணுக்குத் தகுந்தாற்போல் இனிப்பு, கரிப்பு, கடுப்பு போன்ற சுவைகளையும், சிவப்பு, மஞ்சள், கருப்பு போன்ற நிறங்களையும் தழுவிக்கொண்டு விளங்கும். அதேபோல உடல் பிறந்து, வளர்ந்து வரும் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறி மாறி வரும் நிலைகளை அதனோடு விட்டுவிடாமல், உடல் இருக்கக் காரணமாக உள்ள ஆன்மாவுடன் தொடர்புபடுத்தி அந்த நிலைகள் எல்லாம் ஆன்மாவைச் சார்ந்தன என்று கலக்கம் அடைகிறார்கள் என்று சங்கரர் கூறுகிறார்.

ஒவ்வொருவரையும் தனித்தனியே குறிப்பிடுவதற்காக என்று பெயர்கள் அமைகின்றன. அந்தப் பெயர் அவரது உடலுக்கா, மனத்திற்கா? பெயரைச் சொல்லி ஒருவரைக் கூப்பிடும்போது அவருடைய உடல்தான் ஒத்துழைத்து திரும்பிப் பார்க்கிறது. அதேபோல தூரத்தே அவர் வருவதைப் பார்த்து விட்டால், அவர் பெயரைச் சொல்லி அவர் வந்துகொண்டிருக்கிறார் என்போம். அப்போதும் அவர் உடலைத்தான் குறிப்பிடுகிறோம். ஆனால் நாம் அவரைப் பற்றிப் பேசும்போது அவரது உடலைப் பற்றிப் பேசுவதில்லையே; அவரது எண்ணங்களை, மனதை பற்றிப் பேசுகிறோம். அதாவது அவரைப் பற்றிய ஒட்டுமொத்தமான உருவகத்துக்குத்தான் அந்தப் பெயர் என்பது சரிதானே?

sankaracharyas
சாதி அல்லது குலம் என்னும்போது ஒருவர் பிறந்த பிரிவைத்தான் இக்காலத்தில் குறிப்பிடுகிறோம். பொதுவாக மனித சாதி, மிருக சாதி, தாவர சாதி என்ற வகையில்தான் சாதி என்னும் சொல்லே ஆரம்பத்தில் இருந்திருக்கின்றன. பின்பு மனிதர்களுள் வெவ்வேறு தொழில் வகையினரைக் குறிப்பிடப் பயன்படுத்திய வர்ணம் என்ற சொல்லிற்குப் பதிலாக இப்போது சாதி என்ற சொல் புழங்கி வருவதும் அல்லாமல், சிலரை மேல் தரத்தினர் என்றும் வேறு சிலரைக் கீழ் தரத்தினர் என்றும் சொல்லப்படும் தேவையற்ற அளவுக்கு அந்தச் சொல் பழக்கத்தில் மக்கிப் போயிருக்கிறது. இந்தச் செய்யுளில் குலம் என்று சொல்லப்படுவது பிறந்த ஒருவர் எந்தத் தொழில் செய்யும் வம்சத்தில் பிறந்திருக்கிறார் என்று குறிப்பிடவே பயன் படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது பிறந்த அவரது உடலை வைத்துக்கொண்டுதான் அவரைப் பற்றி நாம் கணிக்கிறோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
வர்ணம் அல்லது ஆசிரமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது ஒருவனது வாழும் முறையைப் பற்றியதாக வருகிறது.

hindu-life-stages
நம் பண்டைய வழக்கப்படி முதலில் கல்வி கற்கும்போது பிரம்மத்தைப் பற்றியே அறிவதற்குண்டான சகல கட்டுப்பாடுகளுடனும், ஒழுக்கம், நெறிகளுடனும் இருந்து பயில்வதற்கு ஒரு பிரம்மச்சரிய வாழ்முறை; பின் மனையாளுடன் இருந்து நல்வாழ்க்கை வாழ்ந்து சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த ஒரு கிருஹஸ்தாச்ரம வாழ்முறை; தன் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் கடமையுடன் பணியாற்றியபின் அதுவரை தேவையாயிருந்த சுகபோகங்களைக் குறைத்துக்கொண்டு தான் பிறந்ததன் பயனைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு வானப்பிரஸ்தாச்ரம வாழ்முறை; இறுதியில் இவ்வுலகச் சுகங்களை முற்றிலும் துறந்துவிட்டு சந்நியாச வாழ்க்கை என்று ஒருவன் கடைத்தேறுவதற்கு படிப்படியாக வாழ்முறைகளை நம் முன்னோர் வகுத்திருக்கின்றனர். இதில் எந்த முறைகளைப் பார்த்தாலும், ஒருவன் உடலுடன் பிறந்திருப்பதால் அவனது உடலை வைத்துக்கொண்டு அவன் ஆற்றும் கடமைகளால் நுண்ணறிவு பெற்று அவன் எப்படி முன்னேறுவது என்றுதான் இருக்கும். ஆக எல்லா வாழ்முறைகளும் உடலையே முதலாகக் கொள்கின்றன.
ஆக நாமம், குலம், வாழ்முறை இவை எல்லாமே உடல் சம்பந்தப்பட்ட சரீரத் தர்மங்கள் ஆகின்றன. இவைகளை ஆத்மாவின் தர்மங்கள் என நினைத்து மயங்கக்கூடாது. சரியாகச் செய்யாததால் முன்பு ஏற்பட்ட உபாதிகள் மறையவேண்டும் என்பதே சரீர தர்மங்களின் குறிக்கோள். ஆனால் அவைகளை இப்போதும் சரியாகச் செய்யாது போனால் புதிய வகையான உபாதிகள் வரக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. எப்படியானாலும் அவை ஆன்மாவைப் பற்றுவதில்லை என்பதை தீர்க்கமாக அறிந்து கொள்ளவேண்டும். இதை நன்கு உணர்வதற்கு நாம் ஆதி சங்கரர் வாழ்க்கையிலேயே நடந்த ஒரு நிகழ்ச்சியை அலசிப் பார்க்கலாம்.

புனிதமான கங்கையில் குளித்துவிட்டு ஆச்சாரியார் தன் சீடர்களுடன் வரும்போது, எதிரே ஒரு புலையன் நான்கு நாய்களைப் பிடித்துக்கொண்டு வருகிறான். சீடர்கள் அவனை அவர் மேல் படாதவாறு ஒதுங்கச் சொல்ல, அப்போது அவன் சங்கரரைப் பார்த்து இப்படிக் கேட்கிறான்: “யதிகளில் சிறந்தோரே, அன்ன மயத்தாலான இந்த சரீரத்தை அன்னமயமான இன்னுமொரு சரீரத்திலிருந்து விலகச் சொல்கிறீர்களா? அல்லது ஒரு சைதன்ய சொரூபத்தில் இருந்து இன்னொரு சைதன்ய சொரூபத்தை அகலும்படிச் சொல்கிறீர்களா? கங்கை நதியில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பம், சண்டாளனின் குடிசையின் பக்கத்தில் இருக்கும் குளத்தில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பத்திலிருந்து வேறாகுமோ? பொன் குடத்தின் உள்ளே இருக்கும் ஆகாசம் மண் குடத்தில் உள்ளதிலிருந்து வேறுபடுமோ? எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சத்திய ஆனந்த போதத்தில் திளைத்திருக்கும் உம்மிடம் “இவன் மேலோன், அவன் கீழோன்” என்ற பெரும் மயக்கம் எப்படித் தோன்றுகிறது?”.

இதைக் கேட்ட ஆச்சாரியார் தன் மனம் ஆன்மாவின் உன்னத நிலையை மறந்து உடலின் தூய்மை பற்றிய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி பாமரத் தன்மை அடைந்ததை உணர்கிறார். அதனை அகற்றி, “பரம்பொருளின் தன்மையை உணர்ந்து உறுதியான போதத்துடன் இருப்பவர் சண்டாளர் ஆயினும், அந்தணர் ஆயினும் அவரை என் குருவெனப் போற்றுகின்றேன்” என்று ஈற்றடி வருமாறு “மனீஷா பஞ்சகம்” என்ற ஐந்து ஸ்லோகங்களை இயற்றுகிறார். ஆக உடல்-ஆன்மா குழப்பம் எப்போதும் வராதவாறு நம்மைக் கண்காணித்துக் கொள்ளவேண்டும்.

12. पञ्चीकृतमहाभूतसंभवं कर्मसंचितम् |
शरीरं सुखदुःखानां भोगायतनमुच्यते ||

பங்க்சீக்ருதமஹாபூதசம்பவம் கர்மஸஞ்சிதம் |
ஷரீரம் சுகதுக்கானாம் போகாயதனமுச்யதே ||

கலந்த பெரும் ஐம்பூதம் காரியம் ஆகும்
கலந்த வினை சார்ந்த கலமாம் – கலக்கும்
இடர் இன்பபோகம் எவையும் புசித்தற்கு
இடம் இவ்வுடல் என்றிரு

ஐந்து பெரும் பூதங்களின் சேர்க்கையினால் உண்டான, முற்பிறவியில் செய்யப்பட்ட நல்வினை தீவினைகளின் கலப்பினால் அடையப்பட்ட தூல சரீரம், உள்ளத்தைக் கலக்கக்கூடிய துன்பங்களையும், சுகபோகங்களாகிய இன்பங்களையும் ஆன எல்லாவற்றையும் சீவன் அனுபவிப்பதற்காக இவ்விடம் இந்த உடலாக வந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஆன்மாவில் ஜாதி, வர்ண, ஆசிரமங்கள் ஆன வேற்றுமைகள் உபாதிகளால் தோன்றுவதாக முந்தைய செய்யுளில் கூறப்பட்டது. அந்த உபாதிகள் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றில் முதலாவதான தூல உபாதி பற்றி இந்தச் செய்யுளில் சொல்லப்படுகிறது.

ஆன்மாவை மறைக்கும் தூல உபாதிகளில் முதன்மையானது நாம் எடுத்திருக்கும் இந்த உடலோடு நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதுதான். ஏனென்றால் இந்த உடல்தான் நம்மை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது, நம்மையும் அப்படியே நினைக்கவும் வைக்கிறது. உலகமும் பௌதீகம், உடலும் பௌதீகம் என்பதால் நாம் காண்பது எதுவும் ஐந்து பூதங்களால் உருவானது என்று சொல்லப்படுகிறது. இந்த ஐந்துமே மிகவும் தூலமான மண் அல்லது நிலத்திலிருந்து ஆரம்பித்து படிப்படியாய் தூலம் குறைந்து சூக்ஷமம் அதிகமாகி மிகவும் நுண்மையான ஆகாயத்தில் போய் முடியும். இந்த ஐந்தின் கலவைகளாக உடலும் உலகமும் கருதப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓர் உடல் முன்பு செய்திருந்த செயல்களால் தூலமாகவும், நுண்மையாகவும் பல விளைவுகள் நிகழ்ந்திருக்கும். அதையெல்லாம் அனுபவித்தபின் அந்த உடல் இறுதியில் மரணம் அடையும்போது தூலங்கள் எல்லாம் உடலோடு முடிந்து, நுண்ணிய விளைவுகளை தன்னகத்தே மனம் போன்ற வடிவில் கொண்டு இன்னமும் மீதியிருக்கும் நுண்ணிய வினைப்பயன்களை அனுபவிக்க ஒரு உடலைத் தேடி மறுபிறவி எடுக்கிறது என்பதுதான் இங்கு சொல்லப்படும் தத்துவம்.

panjabootham
உடல் என்று ஒன்று தூல வடிவில் இருந்தால்தான் எல்லாவித அனுபவங்களும் நிகழும் என்பதை நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். ஆசை ஒன்று இருக்கும்போது அது எண்ண வடிவிலேயே சூக்ஷமமாக இருக்கும். அதைப் பூர்த்தி செய்யவும், ஆண்டு அனுபவிக்கவும் தூல வடிவில் உடல் தேவைப்படுகிறது. நாம் முன்பு செய்த மற்றும் இப்போது செய்யும் செயல்களுக்கு உண்டான விளைவுகளை அனுபவிப்பதற்கு உடல் தேவைப்படுகிறது. அதாவது அனுபவிக்க என்று எந்த விளைவுகளும் இல்லாது போனால், அங்கு மனம் என்ற ஒரு நுண்ணிய பொருளும் இல்லை, அதனால் உடல் என்ற தூலப் பொருளும் தேவை இல்லாது போகிறது. அப்போது பிறப்பும் அதனால் இறப்பும் இல்லாது போவதால், ஆன்மிகத் தேடல் என்பதற்கு அங்கு அவசியம் இல்லாது போகிறது.

உடல் வந்துவிட்டால் அதற்குத் தேவை இருக்கிறது என்று புரிந்துகொண்டு, அந்த உடலைப் பயன்படுத்தி நாம் நமது ஆன்மிகப் பாதையில் முன்னேறப் பார்க்கவேண்டும். மாறாக உடல் இருக்கும்போது நமது ஐம்புலன்கள் மூலம் சுக துக்கங்களை அனுபவிப்பதே வாழ்க்கை என்று இருந்துவிட்டால், இந்த பிறப்பு-இறப்பு சுழல் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆன்மிகப் பாதையில் செல்வது என்பது நமது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி அந்தப் புலன்களை இயக்கும் மூலத்தை அறிந்து, அனைத்து சீவராசிகளுக்கும் உள்ள ஒற்றுமை உணர்வை அறிவதே.

அதனால் உடல் ஒன்று தோன்றுகிறது என்றால் அது எதேச்சையாக ஏற்பட்டதில்லை. சூக்ஷ்ம வடிவில் உள்ள எண்ணங்களே ஒரு உடலைத் தழுவி ஒரு சீவனாகப் பிறக்கிறது. பிறந்த அது உடலைத் தன்னுடையது என்று அபிமானித்துச் செயல்படும்வரை, அந்த வினைகளின் விளைவுகள் அந்த உடலைத் தூல வடிவில் பாதித்து, அதைத் தழுவிய மனத்தை நுண்ணிய வடிவிலும் பாதிக்கும். அப்படிப் பாதிக்கப்பட்ட மனம் மேலும் மேலும் வரும் பிறவித் தொடரில் கொண்டுபோய்விடும். ஆக உடல் என்பது நல்லதோ, கெட்டதோ நடக்க இருக்கும் விளைநிலம் என்று கொள்ளவேண்டும். அதையே கீதாசாரியன் க்ஷேத்ரம் என்பார். க்ஷேத்ர தரிசனங்கள் எல்லாம் இறுதியில் தானாகிய க்ஷேத்திரத்தை உணர்வதற்குத்தான். அதற்கு உடல் ஒரு கருவியாகத் தேவைப்படுகிறது.

13. पञ्चप्राण मनो बुद्धिः दशेन्द्रिय समन्वितं |
अपंचीकृतभूतोत्थं सूक्ष्माङ्गं भोगसाधनम् ||

பஞ்சப்ராண மனோ புத்தி தஷேந்த்ரிய ஸமன்விதம் |
அபங்க்சீக்ருதபூதோத்தம் சூக்ஷ்மாங்கம் போகசாதனம் ||

வாயுக்கள் ஐந்து மனம் புத்தி ஈரைந்தாய்
ஏயும் கருவிகள் ஏய்ந்த நுண் – காயம்
கலவாத நுண்பூத காரியமாம் போகத்து
உலவாத சாதனமாம் ஓர்

கலவாத நுண்ணிய வடிவில் உள்ள ஐம்பூதங்களில் இருந்து உண்டான ஐந்து பிராண வாயுக்கள், மனம், புத்தி, ஞான-கர்ம இந்த்ரியங்களாக உள்ள பத்தும் உள்ள கரணங்கள் இவை யாவும் அடங்கிய சூக்ஷ்ம சரீரம், வற்றாத சுக துக்கங்களை அனுபவிப்பதற்குக் கருவியாக உள்ளது என்பதை அறிந்துகொள்.

முந்தைய ஸ்லோகத்தில் உபாதிகளான ஸ்தூல சரீரம் பற்றிப் பேசப்பட்டது என்றால், இங்கு சூக்ஷ்ம சரீரம் பற்றிப் பேசப்படுகிறது. ஐம்பெரும்பூதங்களும் கலப்பதற்கு முன்னால் இருக்கும் நுண்ணிய வடிவில் பதினேழு பகுதிகளாக இருப்பதை சூக்ஷ்ம சரீரம் என்று விவரிக்கப்படுகிறது. உடலின் பல பகுதிகளில் உள்ள வாயுக்களை பிராண, அபான, சமான, வ்யான, உதான என்ற ஐந்து அமைப்புகளோடு, உடன்பாடு-எதிர்மறை எண்ணங்களோடு சந்தேகத்துடன் இருக்கும் மனம், உறுதியாக இருக்கும் புத்தி இவ்விரண்டும் கூடி ஏழு பிரிவுகளும், ஞான இந்திரியங்களான ஐம்புலன்களின் சூக்ஷ்ம சக்தியான ஐந்தும், கர்ம இந்திரியங்களான வாய், கால், கை, பாயு (கழிவுக்கு), உபஸ்தம் (வம்ச விருத்திக்கு) என்ற ஐந்தும், ஆக எல்லாமாகச் சேர்ந்து பதினேழு ஆகின்றன.

நமது தூல உடலில் சூக்ஷமமாக முதலில் நாம் காண்பது நமது சுவாச அமைப்பே. அதற்குண்டான மூச்சு விடும் அமைப்பு (பிராண), உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவு அமைப்பு (அபான), நாம் கொள்ளும் உணவை சக்தியாக மாற்ற உதவும் ஜீரண அமைப்பு (சமான), மாற்றப்பட்ட சக்தியை உடலின் பல பாகங்களுக்கும் பரவலாகக் கொண்டு செல்ல ஓர் இரத்த மற்றும் திரவ ஓட்ட அமைப்பு (வ்யான), தும்மல், வாந்தி போன்றவைகள் மூலம் உடலுக்குத் தகாதவைகளை வெளியேற்றி உடலைக் காக்க ஒரு தற்காப்பு அமைப்பு (உதான) என்றவைகளே முதலில் சொல்லப்பட்ட “பஞ்ச ப்ராண” வாயு அமைப்புகள்.

நாம் வெளியே காணும் ஐம்புலன்கள் சம்பந்தப்பட்ட உறுப்புகள் அவைகளின் வேலையைச் சரியாகச் செய்வதற்கு உள்ளே தேவையான சக்தியை ஞான இந்திரியங்கள் என்று பகுத்து வைத்திருந்தனர். அதாவது உடலில் நமது உறுப்புகள் இருந்தாலும் அவை சரியாக வேலை செய்யவேண்டும் அல்லவா? இல்லை என்றால் கண் இருக்கும் ஆனால் பார்வை இருக்காது, காது இருக்கும் ஆனால் ஒன்றும் கேட்காது என்றபடிதானே அமையும். இத்தகைய நுண்ணிய சரீரம் சரியாக வேலை செய்தால்தான் ஐம்புலன்கள் வழியே நாம் உலகைக் காண முடியும். இவை மூலம் நாம் உலகை அறிவதால் இவை ஞான இந்திரியங்கள் எனப்படுகின்றன.

ஐம்புலன்கள் மூலம் நமக்கு உலகம் விவரங்கள் கொடுப்பதுபோல, நாம் உலகுக்கு அளிப்பதற்கு என்று மேலே சொல்லப்பட்ட ஐந்து கர்மேந்திரியங்கள் இருக்கின்றன. உலகில் நாம் செய்யக்கூடிய செயல்கள் எல்லாமே இந்த ஐந்து கர்ம இந்திரியங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. இந்த பத்து இந்திரியங்கள் மூலம் நாம் பெறுவதனாலோ, தருவதனாலோ வரும் சுக-துக்கங்களே நம் வாழ்க்கை அனுபவங்களாக ஆகின்றன.

உலகத்தில் உள்ளவைகளை அனுபவித்து போகமாக இன்பத்தில் திளைக்கவே நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணியே அனைவரும் வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இன்பமோ வெகுநாட்கள் நீடிப்பதில்லை, மேலும் இன்பமாய் இருப்பதே சில நாட்களில் துன்பம் கொடுப்பதையும் பலர் பார்க்கின்றனர். அப்போதுதான் சிலருக்கு புலன்களைக் கொண்டு போகம் அடைவதைவிட்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி யோகம் செய்து பேரின்பப் பெருநிலையை அடையும் வழிகள் தெரியவருகின்றன. அப்படிச் சிறிது சிறிதாக மனத்தைக்கொண்டே அவைகளைக் கட்டுப்படுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்திப் பயிற்சிகளைச் செய்வதே உபாதிகளை நீக்கி ஆனந்த நிலையை அடையும் வழி.

தூல மற்றும் நுண்ணிய சரீரங்களாகிய உபாதிகளைப் பற்றி மேலே உள்ள இரண்டு ஸ்லோகங்களில் பார்த்தோம். நாம் காண்பது தவிர பிறரும் காணும்படி உள்ளது தூல உபாதி. பிறர் காணவோ அல்லது அறியவோ முடியாதபடி, நாம் மட்டுமே உணரக்கூடியதாக உள்ளது சூக்ஷ்ம உபாதி. அடுத்த ஸ்லோகத்தில் வரும் மூன்றாவது உபாதியான காரண சரீரமாகிய “அவித்யா” எனப்படுவது நாமும், பிறரும் எவருமே அறியாதபடி உள்ளது என்பதைப் பார்ப்போம்.

(தொடரும்)

4 Replies to “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8”

  1. ஆன்மீக விஷயங்கள் எதுவானாலும் படிக்க சுவையாக தருவது ஒரு கலை ஆகும். இந்த தொடரினை நான் தொடர்ந்து படிக்க இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பினை கொடுத்துள்ளான். இந்த சுவையான தொடர் மனதை கவர்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தில்லை அம்பலத்தான் உங்களுக்கு அனைத்து நலன்களையும் அருளட்டும்.

  2. What is most necessary today is every one should learn Sanskrit.Many truths are hidden in it.Tamil and Sanskrits are the only very old languages in India highly possess init with Spiritual,intellectual, reasoning parts in it. Hate Sanskrit is the creation of Dravida Kazakam,and Dravida Munetra Kazakam. You People please think,whether these parties extend any help to the Tamil language.The Answer will be a very Big NO only.These persons decendents send there children to .posh school and educate them in a very big way.,but people here suffer like any thing very much struggling to get an admission in the lower school. It is very pity. we feel very sorry.

  3. திரு முரளி கிருஷ்ணன்,

    தங்கள் கருத்து சரியானதே. ஆனால் தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள். ஏனெனில் தங்கள் கருத்து பலருக்கும் போய் சேரவேண்டும் ஆனால் இன்னமும் தமிழே சிறந்த தொடர்பு மொழி. திராவிட இயக்கங்கள் தமிழை ஒழிக்க எவ்வளவோ சதிசெய்து, நம் தமிழ்நாடு முழுவதும் புற்றீசல் போல, ஆங்கில வழி கல்வி தரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை திறந்து , நல்ல வியாபாரம் செய்துவருகின்றன. இதில் என்ன அதிசயம் என்றால், இவ்வளவு அக்கிரமங்களை செய்யும் திராவிட இயக்கத்தினரின் கடும் முயற்சிகளுக்கு பின்னரும், இன்னமும் தமிழ் நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள். தமிழை ஒழிக்க திராவிட இயக்கத்தினர் செய்த தொண்டுகளை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

    சமஸ்கிருதம் பரவாமைக்கு கடந்த சுமார் நானூறு வருடத்தில், உயர்சாதிக்கெடுமதியாளர்கள் தாங்கள் மட்டுமே வேதம் கற்று மற்ற சாதியினரை வேதம் படிக்ககூடாது என்று தடுத்ததே காரணம். பாரதியை போன்றோர் அதிக எண்ணிக்கையில் இருந்திருந்தால் இந்தநிலை வந்திருக்காது. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன கன்னடத்து பெரியார் ஈவேராவின் சதி வெற்றிபெற்று , தமிழை படிப்படியாக அழித்துவருகிறார்கள். கன்னடமும் காட்டுமிராண்டி மொழியே என்று பதிலுக்கு லாவணி பாடவோ, தமிழ் காட்டுமிராண்டி மொழி அல்ல என்று சொல்லி , பெரியாரை எதிர்த்தோ அன்றைய , தமிழ் திராவிட இயக்க தலைவர்கள் பிணங்கள் போல இருந்தனர். இன்று பெரியார் படத்தை போட்டு மோசடி அரசியல் செய்யும், ராமதாஸ், திருமா போன்றவர்கள் சிந்திப்பார்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *