கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்

வாசகர் எதிர்வினை

ஐயா,

அற்புதமான இந்த கட்டுரைக்கு நன்றி. இது ஒரு துளியாக இருந்து இன்னும் ப்ரவாகமாய் பெருகட்டும்.

இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கும்பகருணன் பாத்திரத்தால் ஒரு இடைஞ்சல் ஏற்படுகிறதே. அவனை ராமலக்குவர்கள் ஏன் இப்படி கொடூரமாக தண்டிக்கிறார்கள். வீடணனுக்கு அளித்த பாக்கியத்தில் கொஞ்சமும் இவனுக்கு கிடைக்க வில்லையே. அவன் நல்ல எண்ணம் (கம்பனின் பார்வையில்) ஒரு மதிப்பையும் பெற்றுத்தரவில்லையே.

வீடணனும் இந்த படலத்தில் (வால்மீகத்தில்) ராமலக்குவர்களை கட்டி இழுத்துவரலாம் என்று ஐடியா கொடுப்பதை இங்கு ஒப்பிட்டு பார்க்கிறேன். ஆக வால்மீகி இரண்டு பாத்திரங்களையும் கருப்பாகத்தான் தீட்டியிருக்கிறார் – இந்த இடத்தில்.

இதை உங்கள் புத்தகத்திலும் வாசித்திருக்கிறேனே. தர்பாரில் அனுமனை தண்டிக்கலாம் என்று ராவணன் பேசும்போது வீடணன் மட்டுமே தூதனை தண்டிக்க கூடாது என்று சொல்லிவிட்டு இப்படியும் சொல்கிறானே!

ஹரி கிருஷ்ணனின் பதில்

> இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கும்பகருணன் பாத்திரத்தால் ஒரு இடைஞ்சல்
> ஏற்படுகிறதே. அவனை ராமலக்குவர்கள் ஏன் இப்படி கொடூரமாக தண்டிக்கிறார்கள்.
> வீடணனுக்கு அளித்த பாக்கியத்தில் கொஞ்சமும் இவனுக்கு கிடைக்க வில்லையே. அவன்
> நல்ல எண்ணம் (கம்பனின் பார்வையில்) ஒரு மதிப்பையும் பெற்றுத்தரவில்லையே.

அவசர டபேல் 🙂 ! கடைசி வரைக்கும் காத்திருக்கவும். இன்னும் ரெண்டு தவணையில் முடித்துவிடுகிறேன். கும்பகர்ணன் கம்பனின் உன்னத சிருஷ்டி.

வாசகர் எதிர்வினை

ஐயா,

அற்புதமான இந்த கட்டுரையை இங்கு எங்களுக்காக பதிந்தது மிகவும் மகிழ்ச்சி. தங்களின் விளக்கங்கள் கம்பனின் பாடல்களுக்கு இன்னும் சுவை சேர்க்கின்றன.

கும்பகர்ணன் ராவணனை அண்ணனாக பாசமாக பார்த்தான். ஆனால், ராவணன் அவனை அப்படி பார்க்கவில்லை. சண்டைக்காகவே அவனை கூட வைத்திருந்தான். போருக்காகவே உனக்கு மதுவும், மாமிசமும் கொடுத்து வளர்த்தேன் என்று ராவணனே கும்பனிடம் சொல்கிறான். போரில் உதவ மாட்டான் தம்பி என்று அவனுக்குத் தோன்றி இருக்குமானால் கும்பனுக்காக சாப்பாட்டு பட்ஜட் ஒதுக்கி இருக்க மாட்டான் அவன். இதை கும்பன் நன்றாக அறிந்தவன். கும்பனே இதை வீடனனிடம் சொல்கிறான்.

இதுதான் கும்பனுக்கும் வீடணனுக்குமுள்ள வித்தியாசம். உடம்பால் கடமைப்பட்டவன் கும்பன். அதனால் தன் உடம்பை அண்ணனுக்காக வழங்குகிறான். செஞ்சோற்றுக் கடன். அதனால்தான் தன் உடம்பை அரக்கனுக்கு பக்கத்தில் கிடக்க வேண்டும் என்று பூடகமாக சொல்கிறான்.

அரக்க சாதியான்கும்பனின் படைப்பில் இரு பரிமாணங்கள் கொஞ்சம் விசித்திரமானவை. வீடணனை உன் சாதி புத்தி விடாதா என்று கேட்கிறான். அதாவது இங்கு சாதி என்பது அரக்க சாதி. பிராமண சாதி இல்லை. பிராமண குலமாகிப் போகிறது. யார் வேண்டுமானாலும் அரக்கராக குணத்தால் ஆகலாம் என்கிறது புராணங்கள். அதுவே சாதிக்கும் வைக்கிறான் கம்பன். அவன் காலத்திய ஒரு வழக்காக இதைப் பார்க்கலாம்.

இரண்டாவதாக சாகும் போது அவன் கேட்ட இரண்டாம் வரம். என் மூக்கு போய்விட்டால் அழகு போய்விடும். என்னை கேலி செய்வார்கள் என்று நாணும் ஒரு சராசரி பகட்டு மனிதனை பார்க்கிறேன். இது விசித்திரம். இனி நான் தொடர்ந்து எதிர்பார்ப்பது தங்கள் வரையும் கும்பனின் சித்திரம்.

ஹரி கிருஷ்ணனின் பதில்

🙂 நன்றி.

> கும்பகர்ணன் ராவணனை அண்ணனாக பாசமாக >பார்த்தான். ஆனால், ராவணன் அவனை அப்படி
> பார்க்கவில்லை. சண்டைக்காகவே அவனை கூட வைத்திருந்தான். போருக்காகவே
> உனக்கு மதுவும், மாமிசமும் கொடுத்து வளர்த்தேன் என்று ராவணனே கும்பனிடம்
> சொல்கிறான். போரில் உதவ மாட்டான் தம்பி என்று அவனுக்குத் தோன்றி
> இருக்குமானால் கும்பனுக்காக சாப்பாட்டு பட்ஜட் ஒதுக்கி இருக்க மாட்டான் அவன்.

அற்ப பதரே, சீ போ !

முழுக்க அப்படிச் சொல்லிவிட முடியாது. கும்பகர்ணனுடைய போர் அந்தப் பக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கயில் இந்தப் பக்கம் சீதையை வசமாக்க இன்னொரு திட்டம். மாயா சனகனை உண்டாக்கி, அவன் மூலமாக ராவணனை ஏற்றுக் கொள்ளப் பரிந்துரைக்கும் திட்டம். மாயா சனகப் படலத்தில் தன் தந்தைதான் வந்திருக்கிறான் என்று முதலில் சீதை நினைப்பதும் பிறகு ‘அது’ ராவணனை ஏற்றுக் கொள்ளச் சொன்னதும் ‘சீ போ!’ என்று சினக்கிறாள் சீதை.

‘வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வது உண்டோ-நாயினும் கடைப்பட்டோனே!

நாயினும் கேடுகெட்ட நாயே, யாரைப் பார்த்து என்ன சொன்னாய்? சிங்கத்தோடு வாழ்ந்தவள் நான். சாக்கடையில் அழுக்கைத் தின்னுகின்ற நரியோடு வாழ்வதும் நடக்கின்ற காரியமா’

அறவாழி சிங்கத்துடன் அன்னை வாழ்வு

என்றும்

‘அல்லையே எந்தை; ஆனாய் ஆகதான்; அலங்கல் வீரன்
வில்லையே வாழ்த்தி, மீட்கின் மீளுதி; மீட்சி என்பது
இல்லையேல், இறந்து தீர்தி; இது அலால், இயம்பல் ஆகாச்
சொல்லையே உரைத்தாய்; என்றும் பழி கொண்டாய்’

என்னச் சொன்னாள்.

‘நீ என் அப்பனாக இருக்க முடியாது. ஒருவேளை அப்படியே அவனாகத்தான் இருப்பாயானால் நீ எக்கேடும் கெட்டுப்போ. ராவணனுடைய சிறையில் கிட. ராமனுடைய வில்லை வாழ்த்தி, ஒருவேளை அவன் உன்னை மீட்டான் என்றால் மீண்டுகொள். இல்லாட்டி செத்துத் தொலை’ என்றும் சொன்னதை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

இந்தப் பேச்சுகள் நடந்துகொண்டிருக்கும் போதுதான் கும்பகர்ணன் களத்தில் இறந்த செய்தி வருகிறது. சீதைக்கு எதிரிலேயே அதைச் சொல்கிறான் தூதன். அப்போது ராவணன் புலம்பியதை அப்படியே தருகிறேன். பொருள் அனேகமாகத் தேவைப்படாது. எளிய நடைதான். நான் தந்திருப்பது ஒருசில விருத்தங்களைத்தான்.

தம்பியோ! வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ! நான்முகத்தோன் சேய்மதலை தோன்றாலோ!
நம்பியோ! இந்திரனை நாமப் பொறி துடைத்த
எம்பியோ! யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ!

ஐராவதம் ஏறி ஆள வரும் இந்திரன்

தும்பி: யானை. வானவர் என்ற தாமரைக் காட்டை நாசப்படுத்தும் யானையே, பிரமனுடைய பேரனே, இந்திரனுடைய புகழைத் துடைத்தவனே…நீ இறந்த செய்தியையும் நான் கேட்குமாறு நேர்ந்ததே!

‘மின் இலைய வேலோனே! யான் உன் விழி காணேன்,
நின் நிலை யாது என்னேன், உயிர் பேணி நிற்கின்றேன்;
உன் நிலைமை ஈது ஆயின், μடைக் களிறு உந்திப்
பொன்னுலகம் மீளப் புகாரோ, புரந்தரனார்?

மின்சுடரும் வேலை உடையவனே, என்னால் உன்னை இனிப் பார்க்க முடியாதா! உன் நிலைமை இப்படி ஆன பின்னாலும் நான் உயிர்வாழ்கின்றேனே! நீயே இப்படிச் செத்துப் போனாய் என்றால், இந்திரன் ஐராவதத்தில் ஏறி ஆட்சிக்குத் திரும்பிவிடுவான் இல்லையா!

எல்லாவற்றுக்கும் மேல் இந்தப் பாட்டைச் சொல்வேன்:

‘செந் தேன் பருகித் திசை திசையும் நீ வாழ,
உய்ந்தேன்; இனி, இன்று நானும் உனக்கு ஆவி
தந்தேன், பிரியேன், தனி போகத் தாழ்க்கிலேன்,
*வந்தேன் தொடர; மதக் களிறே! வந்தேனால்*’.

நான் இதுவரை வாழ்ந்தேன் என்றால் அது எப்படி? நீ நல்ல மதுவை அருந்தி நாலு திசையிலும் சென்று வெற்றிகளைப் பெற்றுத் தந்தாய். எனவே நான் வாழ்ந்தேன்.

(ராவணனுடைய மொத்த வெற்றியும் கும்பகர்ணனுடையதன்று; அதில் ஒரு பெரும்பங்குக்கு உரியவன். என்றாலும் அன்பின் மிகுதியால் சொல்வது இது.) நீ போய்விட்டாய்
என்னும்போது, உன்னைப் பிரிந்து நான் மட்டும் வாழ்வேனோ! ஐயா, நானும் இதோ வருகிறேன். நானும் உன்பின்னாலேயே வருகிறேன்!

லக்ஷமணன் மேல் ராமன் வைத்திருந்த அன்புக்கு இணையான அன்பு இது. பிரமாஸ்திரம் தைத்து வீழ்ந்து கிடக்கும் லக்ஷமணனை மடிமேல் போட்டுக் கொண்டு ராமன் கதறுவது இது:

தந்தை இறந்தும், தாயர் பிரிந்தும், தலம் விட்டும்,
பின் தனி மேவும் மாது பிரிந்தும், பிரிவு இல்லா
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன்; இது காணேன்;
*வந்தனென், எம்பி! வந்தனென், எந்தாய்! இனி வாழேன்!*

லக்ஷமணனைப் பற்றி ராமன் பேசுவதும், கும்பகர்ணனைப் பற்றி ராவணன் பேசுவதும் எப்படி ஒன்றேபோல் இருக்கிறது என்பதைப் பாருங்கள். ஆகவே, ராவணன் கும்பகர்ணன்மேல் வைத்திருந்த அன்பை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது. என்ன, அவன் இப்படிச் செத்துப் போகப்போகிறான் என்று அவன் கண்டானா! தம்பி உள்ற போனா அல்லாம் சப்ஜாடா காலி அப்படின்னு இல்ல அவன் நினைச்சான். போக மறுக்கிறவனை எப்படி அனுப்புவது? அதுக்காகப் பேசிய குத்தல் பேச்சு அது.

ராவணனுக்குக் கடைசி வரையில் எதிரியின் பலம் புரியவில்லை. இந்திரஜித்தே வந்து கேட்டுக் கொண்ட போதிலும், ‘போப்பா, நீபோயி ரெஸ்ட் எடுத்துக்கோ. ரொம்ப களைச்சப் போயிருக்க. நான் பாத்துக்கிறேன்’ என்று சொன்னவன்தானே. கடைசி கடைசியில் இந்திரஜித்தின் சாவு இல்லையா அவனுடைய மயக்கத்தைக் கெடுத்தது! ‘இன்றுபோய் போருக்கு நாளைவா’ என்று அனுப்பி வைத்ததே இவனைத் தீர ‘தற்பத்தைத் துடைக்க’ அன்றோ!

கடைசிப் போரில் இறங்கும்போதுதான் ராவணன் உண்மையில் ராவணனாக வந்தான். சீதைமேல் இருந்த மையல் விட்டுப் போயிருந்தது. ‘இன்னிக்கு ஒண்ணு சீதையின் மாங்கல்யம் அறுந்துபோய் அவள் வயிற்றில் அடித்துக் கொண்டு அழவேண்டும். இல்லாவிட்டால் மயன்மகள் (மண்டோதரி) அந்த கதிக்கு வரணும்’ என்றல்லவா கடைசியாகத் தேர் ஏறும்போது பேசுகிறான்.

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உள்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

என்று கதறுகிறாளே மண்டோதரி அவள் சொல்வதும் இதைத்தானே. ‘இன்னும் உன் மனசில் அந்த மைதிலிமேல் வைத்த காதல் உள்ளே இருக்கிறதா என்று பார்ப்பதற்காகத்தான் இத்தனை அம்புகள் உன் நெஞ்சில் பாய்ந்து ஆழ்ந்து துழாவிக் கொண்டிருக்கின்றனவா’ என்று. அப்படி, கடைசி கடைசியாக, எல்லா மையலையும் துறந்தவனாக வந்து நிற்க வேண்டும் இவன் என்பதற்காக அல்லவா அன்று அவனுக்கு நாளைவா என்று வாய்தா கொடுக்கப்பட்டது.

எங்கெங்கியோ பேசப் போயிட்டேன். இந்த கட்டங்கள் என்னை அவ்வளவு ஆழமாகப் பாதித்தவை. மற்றவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

இதை கும்பன் நன்றாக அறிந்தவன். கும்பனே இதை வீடனனிடம் சொல்கிறான்.

> இதுதான் கும்பனுக்கும் வீடணனுக்குமுள்ள வித்தியாசம். உடம்பால்
> கடமைப்பட்டவன் கும்பன். அதனால் தன் உடம்பை அண்ணனுக்காக வழங்குகிறான்.
> செஞ்சோற்றுக் கடன். அதனால்தான் தன் உடம்பை அரக்கனுக்கு பக்கத்தில் கிடக்க
> வேண்டும் என்று பூடகமாக சொல்கிறான்.

செஞ்சோற்றுக் கடன்தான். ஆனால் வெறும் சோற்றுக் கடன் இல்லை. அப்படித்தான் என்றால், இரண்டு கைகளும் இரண்டு கால்களும் போய் வெறும் முண்டமாக மிஞ்சியிருந்த கும்பகர்ணனுடைய போர் நிற்காமல் தொடர்ந்ததையும், அதன் விளைவையும் பார்க்கப் போகிறோம். சோத்துக்காகச் செய்தது என்றால், ரெண்டு கை போன உடனேயே யுத்தத்தை நிறுத்தியிருக்கலாம்.

அடுத்த தவணையையும் பாருங்கள்.

> கும்பனின் படைப்பில் இரு பரிமாணங்கள் கொஞ்சம் விசித்திரமானவை. வீடணனை உன்
> சாதி புத்தி விடாதா என்று கேட்கிறான்.

சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய் என்று கேட்டதைச் சொல்கிறீர்கள். இன்றைய பார்வையில் இந்தத் தொடரைப் பார்ப்பது அவ்வளவாகப் பொருத்தமில்லை.

> இரண்டாவதாக சாகும் போது அவன் கேட்ட இரண்டாம் வரம். என் மூக்கு போய்விட்டால்
> அழகு போய்விடும். என்னை கேலி செய்வார்கள் என்று நாணும் ஒரு சராசரி பகட்டு
> மனிதனை பார்க்கிறேன்.

கும்பகர்ணன் வீழ்ந்து கிடக்கும் போது அவனருகில் வர அஞ்சிய, எதிரில் நிற்கவும் நடுங்கிய தேவர்கள் டமாலென்று களத்துக்குள் வந்து, கை, கால் அற்றுக் கிடக்கும் அவனருகில் வந்து ‘மூக்கில்லையே.. மூக்கில்லையே’ என்று கூத்தாடிவிட்டு வந்தவேகத்தில் பறந்த காட்சியையும் கம்பன் காட்டுகிறான் அல்லவா? அப்படி ஒரு நிலையில்–நம்மைப் பார்த்து அஞ்சியவர்கள், நாம் வந்தால் எழுந்து நின்றவர்கள், வினாடிப் போதில் நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும் நிலையில்–நாம் என்ன செய்வோம்? நமக்கு மான உணர்ச்சி பொங்காதோ?

வாசகர் எதிர்வினை

ஹரி சார்,

உருக்கி விட்டது கும்பகருணனின் வார்ப்பு. கண்களில் நீர் பனித்தது உண்மை.

ஹரி கிருஷ்ணனின் பதில்

நன்றி. அது கம்ப சித்திரத்தின் மாயம்.

இன்று இதை எழுதியிருந்தால் இவ்வளவு சுருக்கமாக (!) எழுதியிருக்க மாட்டேன். நிறைய சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்லாமல் விட்டிருக்கிறேன். அன்று இதுவே
அதிக நீளம் என்று தோன்றியது. இன்று எழுதினால் சுமார் நூறு பக்கங்கள்
தேவைப்படும்.

அப்போதெல்லாம் இந்த மாதிரியான கட்டுரைகளை மற்றவரிடம் காட்டத் தயக்கமே ஏற்படும். ‘அது என்ன மாதிரியான சித்திரம், அதை நம்ம எழுத்துல எந்த அளவுக்குக் கொண்டு வர முடியும்’ என்ற தயக்கம் நிறையவே இருந்தது. கம்பனுக்கே இந்தத் தயக்கம் இருந்தது. ‘வாங்கரும் பாதநான்கும் வகுத்த வான்மீகி என்பான்’ என்று தொடங்கி, ‘இது வான்மீகி பாடிய உன்னதமான காவியம். இதை நான் பேசப் புகுந்தது எப்படியிருக்கிறது என்றால் ‘மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியல் உற்றேன்’ ஊமை பேசத் தொடங்கியதுபோல் நான் பேசத் தொடங்கியிருக்கிறேன்’ என்ற வார்த்தையில் போலித் தன்னடக்கம் தெரியவில்லை. சத்தியமான உணர்வுதான் தெரிகிறது. It was the Gothic presence of Kamban in my mind that has been causing that hesitation.

இன்று ‘நம்மாலும் முடிகிறது’ என்பது ஓரளவுக்குத் தெரிகிறது. அன்றும் ‘நம்மால்
முடிந்திருக்கிறது’ என்பதைத் தெரிந்து கொண்டேன். அதற்காக விசேஷ நன்றி.

வாசகர் எதிர்வினை

ஹரிகி ஐயா,

இந்த கட்டுரைக்கு மிக்க நன்றி. கம்பனின் கும்பனின் பல பரிமாணங்களையும், வியக்கும் அவன் குணங்களையும் நீங்கள் எடுத்துச் சொல்லும் விதத்தில் என் போன்ற பாமரர்களுக்கு தேனாய் இருக்கிறது. நான் சொன்ன சந்தேகங்களுக்கும் விடை இந்த கட்டுரையில் நீங்கள் வைத்தது சந்தோஷம்.

மூன்று தம்பிகளில் கும்பன் தாமஸ குணத்தின் உருவகம். (ராவணன் ரஜஸமும், வீடணனும் சத்வமும்).

ரஜோ குணத்தை விட தாமஸம் மேலானது. (கேவல அத்வைதத்தில் தாமஸ குணமே பிரம்மத்தின் நிலைக்கு அருகிலானது. மனமும் ஒடுங்கிய தாமஸ நிலையே சமாதி). தாமஸத்தை விட சத்வம் சிறந்தது.

ரஜஸ குணத்துக்கு தான் என்ற உணர்வு நீங்கியதும், தாமஸ குணத்துக்கு இயக்கங்கள்
நீங்கி முழு சமாதியிலும் இறைநிலை. ராவணன், கும்பன் மரணங்களை ராமன் நிகழ்த்திய விதம் இதை ஒட்டியே அமைகிறது.

இதுவே நான் கும்பனின் மரணத்தில் படித்த பாடம்.

வாசகர் எதிர்வினை

ஹரிகி சார்,

அற்புதமாக, உருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். கம்பனையே முக்கியமாகப் பேசவிட்டு தேவையான இடங்களில் மட்டும் உங்கள் மணியான விளக்கங்களைத்
தருகிறீர்கள்.. அருமை.

இந்தக் கட்டத்தில் வரும் முக்கியமான ஒரு பாடலைக் குறிப்பிடுவீர்கள் என்று பார்த்தேன். .. தங்களை அது கவரவில்லையோ..

நீர்க்கோல வாழ்வை நச்சி நெடுதுநாள் வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்து விட்டார்க்கு உயிர்கொடாது அங்கு போகேன்.
தார்க்கோல மேனிமைந்த! உறுபதம் தருதியாயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி, கடிதின் என்றான்..

அவையடக்கம் பற்றிய பாடலைக் குறிப்பிட்டீர்கள்…

// ‘மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியல் உற்றேன்’ //

இதில் மூங்கையான் என்பது புளியமரத்தடியில் பலவருடம் மௌனியாக இருந்த நம்மாழ்வாரைக் குறித்தது என்று ஒரு சொற்பொழிவில் கேட்டேன்.. “குருகை நாதன்
குரைகுழல் காப்பதே” என்றும் இன்னொரு பாயிரப் பாடலும் உண்டு. சடகோபர் மீது கம்பர் பெரும் பக்தி பூண்டவர், மறுப்பதற்கில்லை.. ஆனால் இந்தப் பாடலில் “என்ன” என்ற சொல் தெளிவாக இது ‘ஊமை பேசுவது போல’ என்று உவமையைக் கூறுவதாகக் கொள்வதே பொருத்தமாக இருக்கிறது.

ஹரி கிருஷ்ணனனின் பதில்

> இந்தக் கட்டத்தில் வரும் முக்கியமான ஒரு பாடலைக் குறிப்பிடுவீர்கள் என்று
> பார்த்தேன். .. தங்களை அது கவரவில்லையோ..

நான் பிஏ படிக்கும்போது கும்பகர்ணன் வதைப் படலத்திலிருந்து 80 பாடல்கள் செலக்ஷன் தந்திருந்தார்கள். மொத்தநீளமான நாலில் ஒரு பங்குக்கும் கீழ். எனக்கு அந்த 80ல் 60 மனப்பாடமாக இருந்தது. நீர்க்கோல வாழ்வை நச்சி, இப்போதும் மனப்பாடமாகவே இருக்கிறது. நான் கம்பராமாயணத்தை முழுமையாகப் படிக்கவேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தியதே இந்தப் படலம்தான்.

அதான் ஆரம்பத்திலேயே சொன்னேனே, ரொம்ப நீளமாய்விட்டதோ என்று பல விஷயங்களை விட்டுவிட்டேன். இன்று இதை எழுதினால் மேற்படிப் பாடல் மட்டுமில்லை, எழுதியிருப்பதிலேயே

தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார்
தாய்அவை தந்தைமார்என்று உணர்வரோ தருமம் பார்ப்பார்?
நீஅவை அறிதி அன்றே நினக்குநான் உரைப்பது என்னோ?
தூயவை தொடர்ந்த போது பழிவந்து தொடர்வ துண்டோ?

என்று பொருள் சொல்லாமலேயே மேம்போக்காக விட்டுவிட்ட சில பாடல்களுக்கும் எழுதவேண்டிவரும். புத்தக வடிவத்தில் வரும்போது செய்யலாம்.

> அவையடக்கம் பற்றிய பாடலைக் குறிப்பிட்டீர்கள்…

> // ‘மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியல் உற்றேன்’ //

> இதில் மூங்கையான் என்பது புளியமரத்தடியில் பலவருடம் மௌனியாக இருந்த
> நம்மாழ்வாரைக் குறித்தது என்று ஒரு சொற்பொழிவில் கேட்டேன்..

கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் ரொம்ப வலிந்து இந்தப் பொருளைக் காணவேண்டியிருக்கிறது.

“குருகை நாதன் குரைகுழல் காப்பதே” என்றும் இன்னொரு பாயிரப் பாடலும் உண்டு.

> சடகோபர் மீது கம்பர் பெரும் பக்தி பூண்டவர், மறுப்பதற்கில்லை.. ஆனால் இந்தப்
> பாடலில் “என்ன” என்ற சொல் தெளிவாக இது ‘ஊமை பேசுவது போல’ என்று உவமையைக்
> கூறுவதாகக் கொள்வதே பொருத்தமாக இருக்கிறது.

இந்தப் பாடலைப் படிக்கும்போதெல்லாம்

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம்

என்ற கீதை தியான ஸ்லோகம்தான் நினைவுக்கு வரும். அவையடக்கம் என்றால், அவைக்கு அடக்கமாகச் சொல்லுதல் என்றும் பொருள் கொள்ளலாம். அவையை அடக்குதல் என்றும் சொல்லலாம். பணிவாகச் சொல்லிக் கொள்ளும்போதே, ‘நான் ஒண்ணும் சாதாரண ஆள் இல்லையாக்கும்’ என்று லேசாசகக் கோடிகாட்டுவது. அப்படி, ‘ஊமை பேசியதுபோல நான் பேசியிருக்கிறேன்’ என்று சொல்லிக் கொள்ளும்போதே ‘யத் க்ருபா’ எனக்கு அவனுடைய க்ருபை பரிபூரணமாக இருக்கிறது என்பதையும்; அந்த க்ருபை சித்தித்ததன் காரணம், வான்மீகத்தைக் கற்றதால் ஏற்பட்டதாகிய அன்பு என்ற தேனைப் பருகியதால் என்பதையும் உணரவைக்கும் நயமாக எனக்குப் படுகிறது.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!

என்று, பாற்கடலை நக்கிக் குடிக்க நினைத்த பூனையைப் போல நான் ராம காதையைப் பாடத் தொடங்கியிருக்கிறேன் என்று சொன்னாலும், இந்தப் பூனை அந்தப் பாற்கடலை நக்கியே குடித்ததா இல்லையா. அவையடக்கத்தின் ஒவ்வொரு பாடலிலும் இந்த இரட்டை வீச்சைப் பார்க்கலாம். ‘அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்’ பாடலில், முறையில் நூலுணர்ந்தார்களும் முனிவரோ என்று முடிக்கும்போது, நல்லா படிச்சவங்கள்ளாம் இதைக் குறைத்து மதிப்பிடுவார்களோ’ என்ற பவ்யமும் அதேசமயத்தில், ‘நல்லா படிச்சவனால் இதைக் குறை சொல்லவும் முடியுமா’ என்ற கம்பீரமும் கலந்து வெளிப்படும். பணிவிலும் கம்பீரம் இருப்பதல்லவோ சக்ரவர்த்திக்கு அழகு.

அப்படித்தான் எனக்கு மூங்கையான் பேசலுற்றான் படுகிறது. சடகோபர் நினைவு எழவில்லை. எனக்கு மட்டுமில்லை, வைணவப் பெருங்கீர்த்தியரான வைமுகோவுக்கும் இப்படித் தோன்றவில்லை. ‘அன்பெனும் நறவம் மாந்தி’ என்பதற்கு அவர் வேறொரு நயம் சொல்வார்.

என்றபோதிலும், இன்னொரு நயவுரை; அப்படிச் சொல்லவும் இடம்கொடுக்கும் உரை என்ற அளவில் ரசிக்கலாம்.

One Reply to “கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்”

  1. வாசகர் எதிர்வினையும், அதற்கு ஆசிரியர் திரு ஹரிகிருஷ்ணன் அவர்களின் பதில் உறையும் நன்றாக உள்ளன. மிக்க மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *