கம்பனின் கும்பன்

கம்பனின் கும்பன்

ஹரி கிருஷ்ணன்


கம்பனின் பாத்திரப் படைப்புகளில் தனிச்சிறப்புடன் விளங்கும் பாத்திரங்களில் கும்பகருணனும் ஒன்று. சொல்லப் போனால், வான்மீகியின் படைப்பில் முரடனாகவும் ஒரு சில வெற்றிகளைப் பெற்ற போதினும், தூங்கித் தூங்கியே தன் ஆயுளைக் கழித்தவனாகவும் சித்திரிக்கப்படும் கும்பகருணன், கம்பன் கைகளில் தனிப் பொலிவும் உயர்வும் பெறுகிறான். “அயன் படைப்பைத் திருத்தியோர் அழகு செய்தான்” என்று கவிமணி பாடுவது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. ஒரு ரோஜாவையோ மல்லிகையையோ மேலும் அழகுள்ளதாக ஆக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்தான் கம்பன். வான்மீகியின் படைப்பே ஒரு முழுமையான படைப்பாக இருக்கும்போது அதற்கு இன்னொரு பரிமாணத்தை உருவாக்க முடியுமா? கம்பனால் முடியும். கம்பனால் மட்டுந்தான் முடியும். மிகப் பெரும்பாலும் வான்மீகியை ஒட்டியே அமைத்தாலும், a shade here and a stroke there என்பதைப்போல் கும்பகருணனின் பாத்திரத்தை அதியுன்னதமான பாத்திரமாக நிறுத்துகிறான் கம்பன்.

இருந்த போதும் இராவணன் நின்றெனத்
தெரிந்த மேனியன் திண்கட லின்திரை
நெரிந்த தன்ன புருவத்து நெற்றியான்

என்று ஓரு பயங்கரமான சித்திரத்தைத் தீட்டுவான் கம்பன். கும்பகருணன் சம்மணமிட்டு அமர்ந்தால் எத்தனை உயரமோ அத்தனை உயரம்தான் இருப்பானாம் இராவணன்! உங்கள் வீட்டிலிருக்கும் இரண்டு வயதுக் குழந்தை உங்களுக்கு முன் எத்தனை உயரமோ அத்தனை உயரம்தான் இராவணன் – கும்பகருணனின் முன்னிலையில். கற்பனை செய்து கொள்ளுங்கள். இராவணன் எப்படிப்பட்டவன்?

தாய்மை வணங்கா தசகண்டன்

புலியின்அதள் உடையானும் பொன்னாடை
புனைந்தானும் பூவி னானும்
நலியும் வலத்தர் அல்லர்; தேவா¢ன் இங்கு
யாவர்இனி நாட்ட வல்லார்?
மெலியும்இடை தடிக்கும்முலை வேய்இளந்தோள்
சேயா¢க்கண் வென்றி மாதர்
வலியநெடும் புலவியினும் வணங்காத
மகுடநிரை வயங்க மன்னோ.

இராவணனை வெல்ல சிவனோ திருமாலோ பிரமனோ மற்ற தேவர்களோ வலிமை உடையவர் அல்லர். மகளிர் ஊடல் நாளிலும் வணங்குதல் என்ற தன்மை இலாதவன் இராவணன். இப்படிப் பட்ட இராவணன் உருவத்தையும் அவன் நடந்து வருவதையும் இருபத்தோரு பாடல்களால் பாடிக் காட்டுகிறான் கம்பன், சுந்தர காண்டம் நிந்தனைப் படலத்தில். அத்தகைய இராவணன், கும்பகருணன் முன்னிலையில் சிறு குழந்தையைப் போல் தோற்றமளிப்பான் என்றால் கும்பகருணன் உருவத்தை எப்படிச் சொல்வது?

காலனார் உயிர்க் காலனாம் என்பான் கம்பன். எமனுக்கு எமன். இந்திரனோடு போர் புரிந்தவன் கும்பகருணன். அப்போரில் ஐராவதம் என்ற தன் யானையின் மீதிருந்து இந்திரன் தொங்கிக் கொண்டிருக்க அவனை யானையோடு தலைக்குமேல் தூக்கிச் சுழற்றியவன். சிவன் தந்த சூலாயுதத்தை வைத்திருப்பவன். திருமால் அறிதுயிலிலிருந்து எழுந்தால் அரக்கர் என்ன பாடு படுவரோ, அத்தனைப் பாட்டையும் கும்பகர்ணன் ஆழ்ந்த துயிலிலிருந்து எழுந்தால் தேவர் படுவராம்!

வலுக்கட்டாயத் துயில் எழுப்பல்

“தானுயர்ந்த தவத்தினால் வானுயர்ந்த வரத்தினான்” என்று கம்பன் சொன்னாலும் உத்தர காண்டத்தில் ஒட்டக்கூத்தர் சொல்வது வேறு விதமாக இருக்கிறது.

கும்பகருணனுக்கு வரம் கொடுக்கும் நேரத்தில் தேவர் அஞ்சினர். இவனுக்கு வரம் வேறு கொடுத்து விட்டால் என்ன ஆகும் என்று நடுங்கினர். அந்த நேரத்தில் கலைமகள் கும்பகருணன் நாவில் இருந்து அவனை உளறச் செய்தாள். நித்தியத்துவம் கேட்க நினைத்து நித்திரத்துவம் கேட்டான் கும்பகருணன். இது ஒன்றுதான் அவன் பெற்ற வரம் என்று தெரிகிறது. எனவே கம்பன் (வீடணன் இராமனுக்குப் போர்க்களத்தில் கும்பகருணனைச் சுட்டி, அறிமுகப்படுத்தும்போது) சொன்னது ஒரு பேச்சுக்காவே என்று கொள்ளலாம். அதாவது, வரபலம் இல்லாமல் தேகத்து மற்றும் நெஞ்சத்து உரபலம் ஒன்றாலேயே பெருஞ்செயல்களைச் செய்தவன் கும்பகருணன். சிவன் தந்த சூலம் போன்ற சில வரங்களைப் பெற்றிருக்கலாம்.

அறத்தின் பால் நின்ற கும்பகருணன் அனுமன் இலங்கையை எரித்துத் திரும்பிய பின் இலங்கையைப் புதுக்கி, தன் நம்பிக்கைக்குரியவர்களைக் கூட்டுகிறான் இராவணன். செய்யத்தக்கது என்ன என்று ஆராய மந்திராலோசனை நடத்துகிறான். உண்மை என்னவென்றால், இராவணனுக்குத் தேவை செய்யத்தக்கது என்ன என்ற அறிவுரை யன்று. அவன் கருத்தில் கொண்டதை நிறைவேற்றிக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்ற ஆலோசனை மட்டுமே! ஒரு குரங்கு சுட்டு எரித்ததால் குல மானமே போய்விட்டது என்று உரை நிகழ்த்துகிறான் இராவணன்.

சுட்டது குரங்கு; எரி சூறையாடிடக்
கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும்
பட்டனர் பாபவம் பரந்தது எங்கணும்
இட்டதில் அரியணை இருந்தது என்னுடல்.

இத்தனை நடந்தபோது நானா அரியணையில் வீற்றிருந்தேன்? கிடந்தது என் உடலல்லவா? வேறெது இல்லாவிட்டாலும் இங்கே வந்து, இந்நகரை எரியூட்டித் திரும்பிய அந்த வானரம் இறந்தது என்ற செய்தி கூட கிடைக்கப்பெற்றிலேன். இப்படி ஒரு பழி நம்மைச் சேர்ந்ததே என்று இராவணன் ஆரம்பிக்கவும் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிக்கின்றனர். என்ன பேசுவார்கள்? முகஸ்துதியைத் தவிர வேறென்ன இராவணன் செவியில் ஏறும்?

தமிழ் ஹிந்துக்களின் உயிரை தட்டி எழுப்பிய மஹாகவிபண்டோர் இராவணனும் சீதைதனைப் பாதகத்தால்
கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின் கூட்டமுற
மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே
செந்திருவைப் பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால்
தக்கது நீர்செய்தீர் தருமத்துக் கிச்செய்கை
ஒக்கும் எனக்கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேயரசு செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள்!

என்ற பாரதி வாக்குப் படியேதான் அன்றைய மந்திராலோசனை நடந்தது – கும்பகருணன் பேச எழும் வரையில்! கும்பகருணன் எழுந்ததும் விழுந்தது இராவணனுக்கு முதல் இடி! குலத்து மானம் போயிற்று என்று புலம்புகின்றாயே, இன்னொருவன் மனைவியின் கால்களில் அன்றாடம் வீழ்ந்து என்னை ஏற்றுக்கொள் என்று நீ அவளைக் கெஞ்சுவதும் அவள் உன்னை மறுப்பதும் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் என்று நினைக்கிறாயா (“ஒருத்தன் மனை உற்றாள் பொன்னடி தொழத்தொழ மறுத்தல் புகழ்போலாம்!”) எப்போது நீ மாற்றான் மனைவியைச் சிறை வைத்தாயோ அன்றே அரக்கர் மானம் அழிந்ததல்லவா?

ஆசில் பரதாரம் அஞ்சிறை அடைப்பேம்
மாசில் புகழ் காதலுறுவேம் வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானிடரை நன்றுநம் கொற்றம்.

அடைப்பேம் காதலுறுவேம் என்று சொற்களை மாற்றி உதிர்க்கும் போது தெறிக்கும் கிண்டலையும் குத்தலையும் உணர்ந்து அனுபவிக்கலாம். நமக்கு ஒரு தவறும் இழைக்காத மாற்றானின் மனைவியைச் சிறையில் வைப்போம். அவள்பால் “குற்றமற்ற புகழ்பெறத்தக்க” காதல் உறுவோம். என்ன கூத்து இது? வாய்க்கு வாய் மானத்தைப் பற்றிப் பேசினாலும் வளர்த்துக் கொண்டிருப்பது காமம் அல்லவா? இந்த அழகில் மானிடரைக் கண்டு அஞ்சி இந்த மந்திராலோசனையையும் கூட்டியிருக்கிறோம். நம் கொற்றம் எத்தனை சிறப்பு மிக்கது! முதலிரு அடிகளில் குத்தலும் மூன்றாம் நான்காம் அடிகளில் சட்டென வெளிப்படும் சீற்றமும் கம்பன் கவிதை நெசவின் வனப்பிற்குச் சான்று. ஒரு சோறு பதம்.

இவ்வாறெல்லாம் இடித்துரைத்தாலும் அண்ணனை விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை கும்பகருணன். நீ செய்தது தவறே என்றாலும், இப்போது சீதையைத் திருப்பித் தந்தால் அது நம்மை பலவீனர்களாகக் காட்டும். இப்போது போர் மேற்கொள்வதே சிறந்தது. ஒரு வேளை அந்த மானிடர் வலியாராயிருந்து நாம் இறக்க நேரிடினும், அத்தகைய மரணம் நன்றே. பழியின்பாற் பட்டதன்று . இனியும் காலம் தாழ்த்தாது அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்மேல் போர் தொடுத்தலே செய்யத்தக்கது. காலம் தாழ்த்தினால் அவர்களுடன் தேவரும் ஒன்று சேர்வர். எனவே அவர்களே வெல்வதாயினும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களைச் சந்திப்பதே சாலச் சிறந்தது என்று சொல்கிறான் கும்பகருணன்.

ஒன்றைக் கவனிக்க வேண்டும். நீ செய்தது சரியே என்று சொன்னானில்லை. நாமே வெல்வோம் என்றும் சொன்னானில்லை. வெல்வதற்குரிய நோக்கம் சரியானதாக இருக்கவேண்டும். அது நம்மிடம் இல்லை. இருந்தாலும் பரவாயில்லை. விட்டுக் கொடுக்காமல் போர் செய்வோம் என்ற தொனியே மந்திரப் படலத்தில் கும்பகருணன் பேசுவதில் ஒலிக்கிறது. சீதையைக் கவர்ந்து வந்தது தவறென்ற கருத்தை முதன்முதலில் இராவணன் முன்னிலையில் எடுத்து வைத்தவன் கும்பகருணன். மந்திரப் படலத்தில் எல்லோருக்;கும் முன்னதாகப் பேச எழுந்த ஒரு படைத்தலைவன் இத்தகைய ஒரு கருத்தை மிகத் தயங்கித் தயங்கி சொல்கிறான்.

வஞ்சனை மனிதரை இயற்றி வாள்நுதல்
பஞ்சுஅன மெல்லடி மயிலைப் பற்றுதல்
அஞ்சினர் தொழில் என்று அறிவித்தேன். அது
தஞ்சுஎன உணர்ந்திலை உணரும் தன்மையோய்.

இப்படி ஆரம்பித்தாலும் சட்டெனத் தன் போக்கை மாற்றிக் கொள்கிறான். எளியன் வேறென் செய்வான். அந்தச் சபையில் இராவணனைக் கண்டித்த முதல் பேச்சாளன் கும்பகருணனே.

இதே இடத்தை வான்மீகி எப்படிச் சொல்லியிருக்கிறாரென்று பார்ப்போமா?

“Hearing the wail of Ravana, who was overwhelmed with passion, Kumbhakarna flew into a rage and spoke the following words: “Even as the river Yamuna fills the depression near its source the moment it descends on earth, your mind ought to have sought careful deliberation (with us) the very moment when the aforesaid Sita was actually borne away here by force after a single impulsive thought from the hermitage of Rama, who was accompanied by Lakshmana. All this doing (of yours), O great king, is unworthy of you. Deliberation ought to have been held with us at the very beginning of this act. A monarch who discharges his kingly duties with justice, his mind having determined his purpose (in consultation with his counsellors), does not (have to) repent O Ravana! Actions which are undertaken without recourse to fair means and run counter to the principles of righteousness beget sin even as oblations used in impure sacrfices (undertaken or malevolent purposes)……….

Before Rama strikes me violently once more with a second arrow, I shall drink his blood. Therefore be fully restored to confidence. By making short work of Rama (son of Dasaratha) I shall try my best to bring victory which will conduce to your happiness. Nay, having killed Rama along with Lakshmana, I shall devour all the leaders of monkey hordes. Enjoy life fully, drink the most excellent wine and, rid of anxiety, perform actions (which are) conducive to your welfare. When Rama for his part has been dispatched to the abode of death by me, Sita will submit to your will for long.” (The Valmiki Ramayana, Gita Press, Gorakhpur -Vol II Page 265.)

இந்த இடத்தில் வவேசு ஐயர் சொல்லியிருப்பதைச் சற்று பார்ப்போம்.

At the war council, in Valmiki, Kumbakanan’s speech is not properly worked up. There he charges him with having provoked the war without having consulted his ministers. He does not at all touch upon the moral aspect of the affair in his speech, which does not fit in either with what goes before or what comes after.” (Kamba Ramayanam – A Study – VVS Aiyar. Page 130).

கம்பனின் கும்பகருணன், அரக்கர் குலமே வெல்லும் என்றும், சீதையை அடைவது நடக்கக் கூடிய ஒன்றே என்றும் பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வான்மீகியின் கும்பன் அரக்கன். கம்பனின் கும்பனோ அறத்தன்.

(தொடரும்….)

One Reply to “கம்பனின் கும்பன்”

 1. ” பண்டோர் இராவணனும் சீதைதனைப் பாதகத்தால்
  கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின் கூட்டமுற
  மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே
  செந்திருவைப் பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால்
  தக்கது நீர்செய்தீர் தருமத்துக் கிச்செய்கை
  ஒக்கும் எனக்கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
  பேயரசு செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள்! “- இது போன்ற பிறன் மனை கவரும் அரக்கர்கள் இன்றைய உலகிலும் ஏராளம் உள்ளனர். என்ன செய்வது ?மனித இனம் ஏன் படைக்கப்பட்டது என்று தெரியவில்லை. படைத்தவனுக்கு பயப்படுவது அறியாமை. அவனை உதாசீனப்படுத்துவது அதைவிட பெரிய அறியாமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *