மனீஷா பஞ்சகம்
ஆதி சங்கர பகவத்பாதர்
தமிழாக்கம்: ராமகிருஷ்ண மடம், சென்னை
சண்டாளர் கேட்டது:
அந்தணவரரே! உணவினால் உருவான இந்த உடலிலிருந்து அதே உணவினால் உருவான உங்கள் உடல் விலக வேண்டுமா? அல்லது என்னிடம் உள்ள சைதன்யத்திலிருந்து உங்கள் உடல் விலகவேண்டுமா? அல்லது என்னிடம் உள்ள சைதன்யத்திலிருந்து உங்களிடமுள்ள சைதன்யம் விலகவேண்டுமா? எதைப் போய்விடு போய்விடு என்று சொல்கிறீர்கள்? எது தொலைவில் செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
கங்கை நீரிலும் அசுத்த நீரிலும் பிரதிபலிக்கிற சூரியனிடம் வேற்றுமை ஏதாவது உண்டா? பொன் பாண்டத்திலும் மண் பாண்டத்திலும் உள்ள வெளியில் (space) வேற்றுமை இருக்கிறதா? அலையில்லாத சுபாவத்தைக் கொண்ட அளவில்லாத பேரானந்த கடலான உள்ளார்ந்த ஆன்மாவில், இவன் பிராம்மணன் இவன் நாய்மாமிசம் உட்கொள்பவன் என்ற இந்த மகத்தான வேற்றுமை எனும் மோகம் எங்கிருந்து வந்தது?
சங்கரர் உரைத்தது:
“விழிப்பிலும் கனவிலும் உறக்கத்திலும் எந்த தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ, பிரபஞ்சத்தின் சாட்சியாக எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல” என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ, அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் சரி, அல்லது சமுதாயத்தில் உயர்வாக கருதப்படுபவராக இருந்தாலும் சரி, அவரே என் குரு என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. [1]
நான் பிரம்மம் தான். இந்த பிரபஞ்சம் முழுவதும் பிரம்மம் தான். தூய உணர்வுதான் இந்தப் பிரபஞ்சமாக விரிந்துள்ளது. சத்வம் ரஜஸ் தமஸ் மற்றும் அறியாமையினால் நான் பொருட்களைப் பிரம்மம் அல்லாததாகக் கருதுகிறேன். ஒன்றும் மீதமில்லாமல் அனைத்தும் என் கற்பனையே. பேரானந்தமான அழிவில்லாத தூயவடிவமான பிரம்மம்தான் எங்கும் நிறைந்துள்ளது என்று யாருக்கு உறுதியான ஞானம் உள்ளதோ அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் சரி அல்லது சமுதாயத்தில் உயர்வாக கருதப்படுபவராக இருந்தாலும் சரி அவரே என் குரு என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. [2]
குருவின் உபதேசம் மூலம் இந்தப் பிரபஞ்சம் எப்பொழுதும் அழியக்கூடியது என்று உறுதி பெற்றுக்கொண்டு சஞ்சலமில்லாத தூய்மையான மனதுடன் இடைவெளியில்லாத பிரம்மத்தை தியானிப்பதால் கடந்தகால வருங்கால கர்மங்களையும் மற்றும் பாவச் செயல்களையும் தூய உணர்வான நெருப்பில் எரித்து விட்டு இந்த உடல் பிராப்த கர்மத்தினிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதுதான் என்னுடைய உறுதியான நம்பிக்கை. [3]
எந்த தூய உணர்வு மிருகம் மனிதன் மற்றும் தேவர்களால் நான் என்று அகத்தில் தெளிவாக உணரப்படுகிறதோ: எதன் பிரகாசத்தினால் ஜட இயல்பைக் கொண்ட மனம் புலன்கள் உடல் விஷயங்கள் இவனையனைத்தும் விளங்குகின்றனவோ; சூரியன் மேகங்களால் மறைக்கப்படுவது போல காணப்படும் பொருட்களினால் அந்த தூய உணர்வு மறைக்கப்படுகிறது. அந்தத் தூய உணர்வை எப்பொழுதும் தியானம் செய்து கொண்டு யோகி அமைதியான மனதை அடைகிறார். அவர் என் குரு என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. [4]
எந்தப் பேரானந்தக் கடலின் சிறு துளியினால் கூட இந்திரன் போன்ற தேவர்கள் திருப்தி அடைகிறார்களோ; முற்றிலும் அமைதியான மனதை அடைந்து முனிவர்கள் நிறைவு பெறுகிறார்களோ; அந்த அழிவற்ற பேரானந்தக் கடலில் ஒன்றுபட்டவர் பிரம்மத்தை உணர்ந்தவர் ஆவார். மட்டுமல்லாமல் அவரே பிரம்மம் ஆவார். அவர் யாராக இருந்தாலும் சரி; இந்திரனால் பூஜிக்கப்பட வேண்டிய பாதங்களை உடையவர் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. [5]
ஐயா,
/// ஆன்மாவில் இவன் பிராம்மணன் இவன் நாய்மாமிசம் உட்கொள்பவன் என்ற இந்த மகத்தான வேற்றுமை எனும் மோகம் எங்கிருந்து வந்தது? [2] ///
சங்கரரின் பாடலில் “பிராமணன்” என்று குறிப்பிடப் படவில்லை. த்விஜன் என்று இருக்கிறது. இது எல்லா சாதி-இந்துக்களையும் குறிக்கும். இன்றைய சூழலில் வேற்றுமை பாராட்டுவது என்ற கொடுமையைச் செய்வது பிராமணன் மட்டும் இல்லை! சொல்லப்போனால் பிராமணர்கள் அவ்வாறு செய்வதாக சமீபத்தில் நான் அறிந்ததே இல்லை. சாதி-இந்துக்களின் இந்த வேற்றுமை வெறி என்று ஒழியும் என்று தீர்க்க தரிசியாக அன்றே இந்த சங்கரர் இப்படி எழுதிவைத்திருக்கிறார்.
உனக்குள் இருக்கும் இறைதான் எனக்குள்ளும் இயங்கி என்னை ஆள்கொள்கிறது என்னும் பரந்த சமத்துவ கோட்பாட்டை உள்வாங்கும் எந்த ஒரு இந்துவும் சங்கரர் சொன்னதுபோல எங்கும் அந்த பரப்பிரும்மத்தையே காண்பான்!
நன்றி
ஜயராமன்
அன்புள்ள ஜெயராமன்,
நீங்கள் கூறும் அந்த சுலோகத்தில் விப்ர என உள்ளது அது ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பில் பிராம்மணன் என்றே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழ் இந்து.காம்
/// நீங்கள் கூறும் அந்த சுலோகத்தில் விப்ர என உள்ளது அது ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பில் பிராம்மணன் என்றே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. //
திருத்தத்திற்கு நன்றி. நான் மூன்றாவது செய்யுளை இரண்டாவதாக தவறாக குழப்பியதால் வந்த புரிதல் அது. மூன்றாவதில் சண்டாள-த்விஜ என்று இருக்கிறது. இரண்டாவதில் சண்டாள-விப்ர என்று இருக்கிறது. சரியாகத்தான் மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.
நன்றி
ஜயராமன்
இந்த பதிவில் நீங்கள் சொல்லாமல் விட்டது..சங்கராசாரியருக்கே கடவுள் ப்ராமணரல்லாதவர் உருவத்தில் வந்து அவருக்குள்ளேயும் இருந்த பாகுப்பாட்டை காண்பித்தார் என்பது..நீங்கள் எழுதி நான் படிக்காவிட்டால் மன்னிக்கவும்…
/// அவருக்குள்ளேயும் இருந்த பாகுப்பாட்டை காண்பித்தார் என்பது /////
நன்று சொன்னீர் கீதா,
நாம் பின்பற்றவேண்டியவர்களின் முதல் தகுதி தங்களுடைய தவறுகளை தாங்களே அழிக்கும் வலிமை.
அதைவிட மிக முக்கியமான தகுதி தவறு யாரிடம் இருந்தாலும் அது தவறு என்று சொல்லப்படவேண்டும் என்பதற்கு தனது வாழ்வையே எடுத்துக்காட்டும் நேர்மை.
அதிலும் இன்னொரு முக்கிய பண்பு இதை வெளிப்படையாகச் சொல்லுவதோடு நிறுத்தாமல் அனைவரும் அறியப் பரப்பும் தைரியம்.
சங்கரருக்கு இருக்கும் இந்த தைரியம், நான் எனும் அகம்பாவம் இல்லாதவருக்குத்தான் சாத்தியம்.
சாதி உயர்வு தாழ்வு பார்க்கும் பழக்கம் தன்னுடைய இயல்பினால் ஏற்படவில்லை; சமுதாயத்தில் இருக்கும் கலாச்சாரத்தால் ஏற்பட்டது. இருப்பினும், ஒரு தவறு தவறுதான், அது சமுதாய கலாச்சாரம் முன்வைப்பதாக இருந்தாலும் என்று சமூகத்தினை எதிர்த்து புரட்சி செய்கிறார் நம் சங்கரர்.
சமூகக் கட்டுடைப்பு ஹிந்து மதத்தின் ஒரு அங்கம் என்பது இதனால் புலனாகிறது. ஆதி சங்கரர் ஹிந்து மதத்தின் பண்பை தெளிவாக முன் நிறுத்துகிறார்.
சாதி, மத வித்தியாசங்களை கடக்காத மதப் பெரியவர்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. தங்களை நம்பாதவன், தனது நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர் நரகத்திற்குத்தான் போவார், அவரை இந்த பூமியிலும் கொன்று குவிக்கவேண்டும் என்று பேசுகிற எதேச்சதிகார மதவாதிகளின் மத்தியில், சங்கரர் புரட்சியின் அடையாளமாக விளங்குகிறார்.
புரட்சி என்பது மற்றவர்களை கொன்று குவிப்பது அல்ல. தன்னை மேம்படுத்துவதே புரட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன போதனை வேண்டும்?
உண்மையான புரட்சியாளர் ஆதி சங்கர பெருமான். அவரது அத்வைத சித்தாந்த நூல்கள் நம் சிந்தனையை தூண்டுபவை ஆகும். நம் நாட்டில் சாதி அமைப்பு விரைவில் ஒழியும். அதற்கு தடை செய்வோர் நம் அரசியல் தலைவர்களே.