அனுமன் வேதம் – கவிதை

கடல் தாண்டும் கால்கள்
கதிவரனைப் பிடிக்க நீளும்
கைகள்
அரக்கப் பதர்களைப்
பொசுக்கி அழிக்கும்
அக்கினிப் பார்வை

இரும்பினால் உடல்
எஃகு நரம்புகள்
இடியை உண்டாக்கும்
இதயம் அதனுள்

‘எடுத்த காரியம்
முடித்தே தீருவேன்
என்னவாயினும் ‘ எனும்
இலட்சிய தாகம்

இன்னிசை பொழியும்
எழில்மிகு திருவாய்
தன் நிலை உணர்ந்த
தத்துவ தரிசனம்

ஐம்புலன்களின்
அவாக்கள் அனைத்தையும்
ஆமை போல் அடக்கிய
ஆன்ம யோகம்

உள்முக ஆற்றல்
ஒருமுகப் பட்டு
உன்னதம் எய்திய
ஒழுக்க சீலம்

தளர்வு தகர்க்கும்
சோம்பல் துடைக்கும்
மயக்கம் அறுத்து
மனம் தெளிவிக்கும்
மாண்பு பெருக்கும்
மாருதி மந்திரம்

அச்சம் தவிர்
அச்சம் தவிர் என
அறைந்து முழங்கும்
அனுமன் வேதம்

8 Replies to “அனுமன் வேதம் – கவிதை”

  1. கவிதை மிக நன்றாக உள்ளது.

    அனுமனின் உருவத்தில் ஆரம்பித்து, அவருடைய குணங்களை கோடி காட்டி, கடைசியாக குணங்களையும் மீறிய அவருடைய ஆன்ம பரிபக்குவத்தை சுருக்கமாக அதே சமயம் அழகாக சொல்கிறது கவிதை.

    ஒரே ஒரு சந்தேகம்: அது என்ன “இன்னிசை பொழியும் எழில்மிகு திருவாய்” ? அனுமன் சங்தீகதத்திலும் விற்பன்னரா ? இல்லை ‘இராம இராம’ என்று இடைவிடாமல் சொன்னது பக்தருக்கு சங்கீதமாக ஒலிக்கிறதா ?

  2. மனோ, தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    // ஒரே ஒரு சந்தேகம்: அது என்ன “இன்னிசை பொழியும் எழில்மிகு திருவாய்” ? அனுமன் சங்தீகதத்திலும் விற்பன்னரா ? இல்லை ‘இராம இராம’ என்று இடைவிடாமல் சொன்னது பக்தருக்கு சங்கீதமாக ஒலிக்கிறதா ? //

    அனுமன் சகல கலைகளிலும் வித்தகன் என்று ராமாயணம் கூறுகிறது.

    “இல்லாத உலகத்தெங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக்
    கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
    சொல்லாலே தோன்றிற்றன்றே! யார்கொல் இச்சொல்லின் செல்வர்?”

    என்று அனுமனைப் பார்த்தவுடனே ராமன் லட்சுமணனிடம் கேட்பதாகக் கம்பர் பாடுவர். (இவன் கல்லாத கலை என்று உள்ளது என்றால் அது இல்லாத உலகத்தில் தான் இருக்கவேண்டும்!!!).

    குறிப்பாக, அனுமனின் சங்கீத மேதைமை பற்றி புராணங்களில் கதைகளே உண்டு. இன்று தோடி என்று பிரபலமாக அழைக்கப் படும் ராகத்தின் அஃபீஷியல் பெயர் (மேளகர்த்தா ராக பட்டியலில்) ஹனுமத்தோடி! சங்கீதமேதை தியாகராஜரும் சில பாடல்களில் அனுமனை இசை வித்தகன் என்று போற்றியுள்ளார்.

    ராம நாமம் அந்த இசையை இன்னும் இனிமையாக்குகிறது.

  3. மிக அருமையான கவிதை.
    அனுமனின் அளப்பரிய ஆற்றல்களையும்,இயல்பையும் அழகாக வடித்துள்ளீர்கள்.
    இதே போன்ற (காப்பிரைட் இல்லாத) பிரம்மாண்டமான அனுமன் படம் இணையத்தில் எங்கே கிடைக்கும் என்று கூறுவீர்களா?
    அதைப் பெரிய அளவில் பிரிண்ட் போட்டு,உங்கள் கவிதையையும் அதில் அச்சிட்டு,எங்களது பிரசன்ன ஹனுமான் கோவிலில் லேமினேட் செய்து வைக்க விருப்பம்.நன்றி.

  4. Sir
    I have heard about Hanuman’s prowess on music.
    Once, Lord Hanuman was asked by sage Narada whether he knew to sing.Hanuman asked naradar to sit himself on a rock and he started singing.His singing was so soulful that it seems that the rock melted and naradar was stuck to it.Such was his prowess
    Both Valmiki and Kamban have already mentioned about Hanuman’s coimmunication skills and language skills

  5. சிறப்பான விளக்கம் – அருமை அருமை ஜடாயு அவர்களே…

    அனுமனின் நற்குணங்களும், வீரமும், புத்தி சாதுர்யமும் இருந்து, அளிவலா பணிவும் பக்தியும் ஒருவருக்கு இருந்துவிட்டால், இராமனை அடைந்து, இராமனாகவே ஆவதைத் தவிர அவருக்கு வேறு வழி உண்டோ ?

    இந்து மத புராணங்களின் தலையான படைப்புகளில் தலைசிறந்தவன், போற்றுதற்குரியவன் நம் அனுமன்.

    இதோ எனது மகிழ்ச்சியின் விளைவு, சில பாக்களை உங்களிடம் சமர்ப்பித்து நன்றி கூறுகிறேன்.

    மனமாங் குரங்கை அழிக்கவும் கூடும்
    அனுமன் அடிபணிந் தால்.

    மதியும் பணிவும் நிறைந்திடும் பக்தியும்
    சத்திய வாக்கும் செயலும் செழிப்புறும்
    நித்தியம் இன்பமே வீசிடும் தென்றலின்
    புத்திரன் புன்னகைத் தால்.

    வாயு புதல்வன் அரும்புகழ் பாட்டே
    ஓயா மனத்தினுக் கோய்வு.

  6. திருக்குடந்தை ஸ்ரீ ராமஸ்வாமி ஆலயத்தில் திருக்குடந்தை ஸ்ரீ ராமஸ்வாமி ஆலயத்தில் மாருதி வீணை ஏந்திய
    திருக்கரத்தினராகக் காட்சி தருகிறார்.
    தேவராஜன்

  7. தாங்களின் இக்கவிதையை https://vayusutha.in/ ல் பதிக்கலாமே. அனுமன் பக்தர்களுக்கு விருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *