இயற்கையைப் போன்றே ஆதியந்தமில்லாத இந்துமதம் இப்புவியையும், இயற்கையையும் இறையம்சமாக எண்ணிப் போற்றுகிறது, நேசிக்கிறது. உலகின் மிகப்பழமையான நூல்களான வேதங்களும், எல்லா இந்து ஆன்மீக சாத்திரங்களும் இயற்கையைக் காப்பதில் மிகுந்த முனைப்பு காட்டுகின்றன.
மரங்களிலும், மலைகளிலும், நதிகளிலும் புண்ணிய பூமியைக் கண்டு இயற்கையோடு இணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழும் கலையே நம் இந்துமதம் காட்டும் வழி. செழிக்கும் பயிரையும், உழைக்கும் பசுக்களையும் போற்றி வணங்கும் ஆன்மீக பாரம்பரியத்தின் மூலம் இயற்கையை பொக்கிஷமாகக் காக்கும் உணர்வு நம் இதயத்தில் பதிந்து, இரத்தத்தோடு கலந்துவிடுகிறது.
சைவத்தின் தேவாரப் பதிகங்களும், வைணவத்தின் பிரபந்த பாசுரங்களும், நம் நாட்டின் திருத்தலங்களையும், திவ்யதேசங்களையும் குறிப்பிடுகையில், அவற்றின் இயற்கை வளத்தையும், மரம், செடி, கொடிகளும், சோலைகளும் செழித்திருக்கும் அழகையும் தவறாமல் வர்ணித்துப் போற்றுகின்றன. இவற்றைப் பாடிய அடியார்கள் இந்த இயற்கை எழிலில் இறைவனையே தரிசித்தனர் என்பது கண்கூடு.
குன்றெலாம் குயில் கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருவையாறே.
– திருஞானசம்பந்தர், தேவாரம்
குரவமே கமழும் பொழில்களினூடு குயிலொடு மயில்கள் நின்றாட
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணி கண்டேனே
– திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி
பார்க்க: தமிழக இந்துக் கோயில்கள் பாதுகாக்கும் புனித வனங்கள் (sacred Groves)
இந்திய அறிவியல் அறிஞர் ஜகதீஷ் சந்திரபோஸ் மனித தசை-திசுத்தன்மைக்கும்
செடிகளின் உட்திசுக்களின் தன்மைக்கும், சில உலோக கடத்திகளின்
தன்மைகளுக்குமான இணை அம்சங்களை வெளிக்கொணர்ந்தார். தாவரங்களையும், விலங்குகளையும் பிரிப்பதாகக் கருதப்பட்ட சில தடைகள் தவறானவை என அவர் தமது பரிசோதனைகள் மூலம் நிரூபித்து உலகை வியப்படையச் செய்தார். அனைத்திலும் ஜீவசக்தியையும், இறைமையையும் காணும் அத்வைதப் பார்வை இதற்கு உதவியதாக அவர் தமது நூல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
தமஸா பஹூரூபேன வேஷ்டிதா: கர்மஹேதுனா |
அந்த:ஸம்ஞா பவன்யேதே ஸூகதுக்க ஸமன்விதா: ||
– மனுஸ்மிருதி 1.49
பொருள்: “உயிர்களில் வித்தியாசம் கிடையாது. வினைப்பயனாக ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு உடல் கிடைத்திருக்கலாம். இந்த உடல்களில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் இன்ப துன்பங்களில், உணர்வுகளில் இல்லை”.
இப்படி மரம், செடி கொடிகளையே மனிதனுடன் சமமாகப் பேசும் இந்துமதம், எக்காலத்திலும் மனிதர்களில் உயர்வு தாழ்வு பாராட்டும் கொள்கைகளை முன்வைத்திருக்க முடியாது என்பதும் இதனால் வெளிப்படையாகின்றது.
பல ஆயிரம் வருடம் முன்பே, வாழும் நிலம் எங்கும் கானகங்களும், நீர்நிலைகளும் நிறைந்திருந்த காலங்களிலேயே, இயற்கையின் இன்றைய நாகரீகத்தால் அச்சுறுத்தப்பட்ட நிலையை அனுமானிகக்கும் வேத ரிஷிக்ள் தீர்க்கதரிசிகளே. இயற்கையே நம் பொக்கிஷம் என்று அவர்கள் வற்புறுத்துகின்றனர்.
“ஸ்வதிதே மைனஹ்ம் ஹிம்ஸீ:” – கிருஷ்ண யஜூர்வேதம். தை.ஸ. 1.3.5
ஸ்வதிதி என்பது கோடரி. “ஏ கோடரியே, இதை துன்புறுத்தாதே” என்கிறது இந்த மந்திரம். இங்கே இது என்பது மரங்களைக் குறிக்கிறது. கூடுமானவரை இயற்கையை அழிக்காதே என்பது சாரம். இதுவே இந்து ஆன்மீகத்தின் அறிவுரை.
இன்றியமையாத காரணங்களுக்காக மரம், செடி, கொடிகளை வெட்டும்போது ஓதப்படவேண்டிய சாந்தி மந்திரங்கள் வேத, சாத்திரங்களில் நிறைய உள்ளன. இவை தான் நுகரும் இயற்கையை அதை உபயோகிப்பதற்காக மன்னிக்கும்படி கேட்டு நம் வாழ்க்கையை வளமாக்கப் பிரார்த்திக்கின்றன. துளசி, வில்வம் இவைகளைப் பறிக்கும்போது “பூஜைக்காக உன் இலையை பறிக்கிறேன், பொறுக்கவேண்டும்” என்ற பொருளுடைய மந்திரங்களும், தன் உபயோகத்துக்கு மரம் செடி கொடிகளை பறிக்கும்போது சொல்லவேண்டிய பிரார்த்தனைகளும் வேதங்களில் காணக்கிடைக்கின்றன.
உதாரணமாக, தர்ப்பைப்புல் கொய்யும் போது சொல்லப்படும் மந்திரம்:
“தேவானாம் பரிஷூதமஸி வர்ஷவ்ருத்தமஸி, தேவபர்ஹிர்மாத்வா…..விவயஹ்ம் ருஹேம!” – யஜுர்வேதம், தை.ஸ 1.1.2.1
“தர்ப்பமே, நீ தேவர்களின் பொருட்டு சேகரிக்கப்படுகிறாய். மற்றும் மழையால் வளர்கிறாய். உன்னை அறுப்பதற்கு கத்தியை வைக்கிறேன். உன்னை அறுப்பவனாயினும் நான் குறைவற்றவனாக இருக்கவேண்டும். தர்ப்பமே, நீ நூற்றுக்கணக்கான தளிர்களாய் தளிர்த்து இனிது தழைப்பாயாக”
இந்த அற்புதமான துதியில் இயற்கையும் தாமும் இணைந்து வளம்பெரும் ஒரு இன்றியமையாத ஒட்டுணர்வு புலப்படுகிறது.
தர்ப்பம் கேவலம் ஒரு புல். அதை அறுக்க யாரிடமும் கேட்க வேண்டாம். ஆனால், இந்து மதப் பார்வையில் அதுவும் ஒரு வாழும் உயிரே, அதற்கும் இந்த புவியில் எல்லா உரிமையும் இருக்கிறது. அதிலும் இறைத்தன்மை இருக்கிறது என்பதை இந்த மந்திரம் நமக்கு உணர்த்துகிறது. வேத நெறி காட்டும் இந்த மரபின் நீட்சியே “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலாரிடத்திலும்,
“கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கனலுமே நான்”
என்று பாரதியிடத்திலும், இயற்கையுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ளும் மாபெரும் மனிதநேயமாகப் பரிணமிக்கிறது.
“ஹிம்ஸௌஷதீனாம்… த்ருமணாமவபாதனம்!” (யாக்ஞியவல்கிய ஸ்மிருதி 3.240, விஷ்ணுபுராணம்– 37.24, மனு 11.143, 145)
மரங்களையும் மற்ற இயற்கை உயிர்களையும் அவசியத்திற்காக உபயோகப்படுத்துவதிலும் மிக சீரிய நிபந்தனைகள் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, விறகுக்காக பச்சை மரத்தை வெட்டுவது கூடாது, காய்ந்த மரத்தையே கூடியவரை வெட்ட வேண்டும். பச்சை மரத்தை வெட்டுவது “உபபாதகம்” என்ற பாவ வகைகளில் சேரக்கப்படுகிறது. “மரங்களினின்றும் தன்னிடையே கீழே விழும் பொருள்களையே நாம் சொந்த உபயோகத்திற்காக எடுக்கலாம்” (நாவிப்ரயுக்தமாஷதி வனஸ்பதீனாம் அங்கமுபாததீத) என்று கௌதம ஸூத்திரம் (3.9) அறிவுறுத்துகிறது.
அவசியத்திற்கு அதிகமாக மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது என்பது சாத்திரம். “கோடரியை கண்டதும் மரம் பயந்து நடுங்குகிறது” (ஸ்வதிதேர்வ்ருக்ஷஸ்ய பிப்யத:) என்று வேதம் இதற்கு விளக்கம் சொல்கிறது. இந்த உருவகத்தின் மூலம் மரத்தை உணர்வும், அறிவுமுள்ள ஒரு ஆன்மாவாகக் கற்பித்து அதை மதிக்கக் கற்றுத்தருகிறது வேதம்.
விளையாட்டுத்தனமாக செடி தளிர்களை கிள்ளுவதும் ஒரு பாவச்செயலாகும். நம் குழந்தைப் பருவத்தில் துறுதுறுக்கும் குழந்தைக் கைகளுக்கு நம் பெரியோர்கள் சொல்லி வைத்த பாடம் இது!
இயற்கையைப் போற்றவும், மதிக்கவும், பாதுகாக்கவும் கற்றுத் தரும் இது போன்ற ஏராளமான தெய்வ வாக்குகளை இந்துமத நூல்களில் காணலாம். ரிஷி, முனிவர்கள் வகுத்துவைத்த வாழ்க்கை முறையும், இந்த சீரிய கோட்பாடுகளை அன்றாடம் நடைமுறையில் கடைப் பிடிக்க உந்துதல் தரும் வண்ணம் அமைந்துள்ளது. ஒவ்வொரு இந்து இல்லமும் துளசி மாடமும், மலர்ச் சோலையும், மரங்களும், காய்கறித் தோட்டமும் கொண்டதாகவும், ஒவ்வொரு இந்துத் திருக்கோயிலும் நந்தவனமும், ஸ்தலவிருட்சமும், பசுமடமும், தெப்பக் குளமும் அமைந்திருக்கப் பெற்றதாகவும் அழகுற வகுத்துவைத்த நம் இந்துக் கலாசாரத்தின் இயற்கை அன்பை எண்ணிப் பார்க்கையில் மகிழ்ச்சியும், பெருமிதமும் ஏற்படும்.
இந்துமதம் போதிக்கும் இந்த இயற்கை அன்பை நாம் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கிறோம் என்றும் எண்ணிப் பார்க்கவேண்டும். நம் நதிகளையும், மரங்களையும், சோலைகளையும் அசுத்தம் செய்யாமலும், அழிக்காமலும் போற்றிப் பாதுகாப்பது சமுதாயக் கடமை மட்டுமல்ல தெய்வீகக் கடமையும் ஆகும் என்று உணரவேண்டும்.
அருமையான தகவல்
மயான பூமியில் சடலத்திற்கு நெருப்பிடும்போது் எறும்பு, கறையான் போன்ற சிற்றுயிர்களும் எரிந்து போக வாய்ப்பு உள்ளது.
அதற்காக மன்னிப்புக் கோருவதோடு, அவற்றுக்கு நல்ல கதியை வேண்டும் மந்த்ரங்களும் உள்ளன.
மனிதன் இயற்கையின் ஒரு கூறு என்பதே நான் மறைகளின் உட்கருத்து.
தேவ்
அருமையான கட்டுரைக்கு நன்றி ஜெயராமன். நம் மரபு எந்த அளவு இயற்கையோடு இசைந்தது என்பதனை அழகாக வெளிக்கொணர்ந்துள்ளீர்கள்.
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஜயராமன். மகிழ்ச்சி.
இந்து மதம் இயற்கையை வணங்கச் சொல்கிறது.
வாழ்க்கையே ஒரு “வேள்வி” என்றும் அந்த வேள்வி ஒழுங்காக நடைபெற பிரார்த்திக்கும் போது, படைக்கப்பட்ட அத்தனையும் வேள்விப் பொருட்களாகவும் அவற்றிற்கு மங்கலம் உண்டாக வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறது ஒரு சாந்தி மந்திரம்.
ஒம் தச்சம்யோராவ்ருணீமஹே….என்று தொடங்கும் அந்த மந்திரத்தில்
“ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்;
சன்னோ அஸ்து த்விபதே;
சம் சதுஷ்பதே”
என்று சொல்லப் பட்டுள்ளது.
அதாவது
“செடி கொடிகள் மேலோங்கி வளரட்டும்;
நம்மிடம் உள்ள இரண்டு கால் ஜீவன்களுக்கு மங்கலம் உண்டாகட்டும்;
நான்கு கால் பிராணிகளுக்கு நன்மை உண்டாகட்டும்”. என்று கூறுகிறது அந்த சாந்தி மந்திரம்.
படைப்பில் உள்ள அனைத்தையும் வணங்கி அவற்றிற்காக பிரார்த்தனையும் செய்யும் ஒரே சமூகம் இந்து சமூகம் மட்டும் தான். இப்பேர்ப்பட்ட பெருமை வேறு எந்த சமூகத்திற்கும் கிடையாது. இதை எண்ணி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
இந்துக்கள் இயற்கையை இறைவனாகக் காண்பவர்கள். இறைவனில் இயற்கையை காண்பவர்கள். தங்களிடத்திலும் இயற்கையையும் இறைவனையும் உணர்பவர்கள்.
பஞ்ச பூத கோட்பாடே அது தானே!
இறைவன், இயற்கை, இந்து மதம் என்கிற மூன்றுமே ஒன்றில் ஒன்று பிணைந்தது தானே!
பாராட்டுக்கள் ஜயராமன்!
நன்றி-அன்புடன்
ப. இரா. ஹரன்.
ஐயன்மீர்,
தங்களின் மேலான ஊக்கமூட்டுதலுக்கு மிக்க நன்றி.
இந்த கட்டுரையின் பல அருமையான கருத்துக்கள் வித்தகர் ஜடாயு ஐயாவால் வழங்கப்பட்டு மெருகேற்றப்பட்டது. அவருக்கும் என் நன்றி உரித்தாகுக.
நன்றி
ஜயராமன்