அள்ளக் குறையாத அமுதம் – 3

[சென்ற வாரங்களில்: அள்ள அள்ளக் குறையாமல் உணவைத் தரும் அட்சய பாத்திரம் கிடைத்தது ஆபுத்திரனுக்கு. ஆனால் மதுரையில் வளம் மிகுந்துவிடவே, அங்கிருந்து வறட்சியால் வாடும் வேறிடம் நோக்கிச் சென்றான் தவிப்போருக்கு உணவளிக்க. கோவலன் தன் கைப்பொருளை இழந்து, கண்ணகியின் சிலம்பை மதுரையில் விற்றுப் பிழைக்கலாம் என்று அழைத்துப் போக, ஒரு சமயம் தான் இவளுக்குச் செய்வது அநீதியோ என்று தோன்ற, அதைக் கண்ணகியிடம் சொல்கிறான். அவளோ, எந்த இழப்புக்கும் வருந்தாது ‘விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’ என்று அவ்வாறு நல்லோருக்கும் இல்லாருக்கும் உணவளிக்க முடியாது போனதே பெரும் இழப்பு என்று கூறி வருந்துகிறாள். தன் வீட்டுக் குப்பைமேட்டில் வளர்ந்த வேளைக்கீரையை நகத்தால் கிள்ளி, சமைத்து அதைத் தன் பெருங்கூட்டமான உறவினரோடு பகிர்ந்துகொள்வதைப் சிறுபணாற்றுப் படை காட்டுவதையும் பார்த்தோம். இனி…]

விருந்தோம்பல் பெண்களுக்கு மட்டுமேயான கடமையா?

இதையே கணவனுடன் உடனிருந்து செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! செல்வந்தனோ இல்லையோ, தன்னிடம் இருக்கும் உணவை வருகின்றவர்களோடு பகுத்து உண்டு வாழுவதைப் ‘பாத்தூண்’ என்று திருக்குறள் உட்பட்ட பழைய இலக்கியங்கள் குறிக்கின்றன. நாமும் இப்போது ‘பாத்து ஊண்’ செய்கிறோம், சுற்றுமுற்றும் யாரும் நம் சோற்றைப் பிடுங்கிக்கொள்ள வரவில்லையே என்று கவனமாகப் பா(ர்)த்துப் பின்னால் மூடிமூடி வைத்துச் சாப்பிடுகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் சொன்னது இதையல்ல.

உங்களுக்குப் பசியென்கிற கொடிய பிணி வராமலே இருக்க வேண்டுமா? அதற்கு ஒரு வழி உண்டு. இந்துப் பெருஞானி திருவள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள்:

பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

(திருக்குறள்: 227)

[மரீஇயவனை – வழக்கமாகக் கொண்டவனை]

யாரொருவன் பசியென்று வந்தவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து அவர்கள் பசியை ஆற்றிவிட்டுப் பிறகு தான் உண்கிறானோ அவனைப் பசி என்ற கொடிய துன்பம் தீண்டக்கூட முடியாது’ என்று தீர்மானமாகச் சொல்கிறார் திருவள்ளுவர். ஆனால் அவன் மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணும் உணவு நியாயமான வழியிலே சம்பாதித்ததாக இருக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் வைக்கிறார்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

(திருக்குறள்: 44).

[தவறான வழியிலே பொருளீட்டுவதற்கு அச்சம் கொண்டு, அப்பொருளையும் பகுத்து உண்டு வாழ்பவனுக்கு வாழ்க்கையில் எக்குறையும் வராது.]

தன்னைப் பெற்ற தாய் பசியோடு துடிப்பதைப் பார்த்தாலும்கூட, ஒழுக்கமுடையவர்கள் தவறு என்று சொல்லும் செயலைச் செய்யாதே (திருக்குறள்: 656) என்று சொன்னவராயிற்றே, அவரிடமிருந்து வேறெதை எதிர்பார்க்கமுடியும்!

உழைக்காமல், நியாயமும் ஒழுக்கம் இல்லாத வழிகளில் சம்பாதித்து, அதனால் வருகின்ற உணவை உண்பதற்கும் ஒரு பெயரிருந்தது: கைத்தூண். இதை மணிமேகலையில் வரும் ஒரு காட்சியின் மூலம் புரிந்துகொள்வோம்.

கோவலன் இறந்ததும் மாதவி துறவறம் பூண்டுவிடுகிறாள். அவளது தாயான சித்திராபதிக்கு இச்செயல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. போதாக்குறைக்குப் பெயர்த்தி மணிமேகலையும் சோழ இளவரசனான உதயகுமாரனை அணுகவிடாமல் துறவுக்கோலம் பூண்டு அட்சய பாத்திரத்தோடு அலைகிறாள். எனவே சித்திராபதி சொல்கிறாள்:

“புருஷன் செத்தால் அப்படியே போய்க் கூடவே நெருப்பில் விழும் பத்தினிக் குலத்திலா வந்தாள் இவள்? பாணன் இறந்துபோனால் யாழும் என்ன அழிந்தா போய்விடுகிறது? (இன்னொரு பாணன் எடுத்து வாசித்துவிட்டுப் போகிறான்!) கணிகையான இவள் இந்தச் சாமியாரிணி வேஷம் போட்டுப் போய் மடத்தில் புகுந்துகொண்டதைப் பார்க்கச் சிரிப்புத்தான் வருகிறது! மயக்கு வித்தையால் மற்றவர்கள் பொருளைக்கவர்ந்து உண்ணும் ‘கைத்தூண்’ வாழ்க்கைதானே நமக்கு இயற்கையானது” என்று புலம்புகிறாள் பாட்டிகாரி.

கோவலன் இறந்தபின் கொடுந்துயர் எய்தி
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகு தக்கதன்றே?…….
…………………………………………
காதலன் வீயக் கடுந்துயர் எய்தி
போதல் செய்யா உயிரொடு புலந்து
நளியிரும் பொய்கை ஆடுநர் போல
முளியெரிப் புகூஉ முதுகுடிப் பிறந்த
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம்
கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே
பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில்
யாழினம் போலும் இயல்பினம்

(மணிமேகலை: உதயகுமாரன் அம்பலம்புக்க காதை: 7-18)

[நகுதக்கது – சிரிக்கத் தக்கது; நளியிரும் பொய்கை – குளிர்ந்த பெரிய குளம்]

எனவே பிறர் பொருளைக் கவர்ந்தும், ஏமாற்றியும் அதிலே உண்பது கைத்தூண். பிறரைச் சார்ந்திருந்து அவர் கையாலே உண்பதும் கைத்தூண்தான். அப்படிப்பட்ட உணவிலே அன்பு, மரியாதை, சுதந்திரம், தன்மானம் ஆகியவை இல்லை. எனவே அதனை உண்பதிலே மகிழ்ச்சி இல்லை.

என்றால், எப்படிப்பட்ட உணவை உண்பதில் மகிழ்ச்சி உள்ளது? அதற்கும் வள்ளுவர் பதில் சொல்கிறார்: ‘பழியஞ்சி’ வந்த உணவாக இருக்கவேண்டும் என்பதை முன்பே பார்த்துவிட்டோம். அது போதுமா? குவையத்தில் வாழும் இந்திய லாரி டிரைவர்களைப் பாருங்கள். நன்கு உழைத்துத்தான் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அதனால் வந்த உணவை அவர்களால் ரசித்து உண்ணமுடிகிறதா? மனைவி அருகில் இல்லை, ‘சிறுகை அளாவிய’தால் இனியதாகுமா என்றால் குழந்தைகள் அருகே இல்லை. உணவு தருகின்ற கைகள் அதை அன்போடு அவனுக்கென்று சமைத்துப் பரிமாறவில்லை. அப்படிப்பட்ட உணவு எப்படி இனியதாக இருக்கமுடியும்?

இன்னொரு காட்சி. கோவலன் மாதவியின் வீட்டில் இருந்தான். பெரும் வணிகன். அவளும் எல்லாக் கலைகளையும் பயின்று பேரழகு கொண்ட தலைக்கோல் பட்டம் பெற்ற நாடகக் கணிகை. அவளது இல்லத்து உணவு கைதேர்ந்தவர்களால் சிறந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகத்தான் இருந்திருக்கும். ஆனால்… அது சிறந்த உணவா கோவலனுக்கு?

எனவேதான் வரம்பு விதிக்கிறார் வள்ளுவர்: “ஒருவன் தன் வீட்டில் இருந்து உண்ணவேண்டும்”. அதுவே தனது சொந்தவீடென்றால் இன்னும் நல்லது. அது அவனது பொருளாதாரப் பாதுகாப்பைக் குறிக்கிறது. ஏதோ ஒரு கண்காணாத தொலைவிலோ, அல்லது இல்லத்தில் மனைவி ஏங்கியிருக்க, கோவலன்போல் ஒரு பிறமனையிலோ இருந்து உண்ணும் உணவில் ருசி இல்லை.

தனது வீட்டில் உண்டதாலேயே உணவு ருசித்துவிடுமா? இல்லை என்கிறார் வள்ளுவர். அவன் ‘தனது பங்கை உண்ணவேண்டும்’ என்கிறார். அது என்ன ‘தனது பங்கு’? ‘விருந்தோம்பிய பின், இல்லத்தில் மற்றவர்க்கும் உணவு இருக்கிறதா என்று பங்கு போட்டபின்’ தனக்குக் கிடைக்கிறதே, அதுதான் தனது பங்கு. அவ்வாறு எஞ்சிய பங்கை உண்பவனின் வயலிலே விதை போடாவிட்டாலும் விளையுமாம்.

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்?

(திருக்குறள் : 85)

[மிச்சில் – மீதம் இருக்கும் உணவு]

அதனால்தான் பெரியபுராணம் போன்ற பக்திநூல்களில் காணப்படும் சிவனடியார்களில் சிலர் அந்த ஊருக்கு வருகைதரும் சிவனடியார்களுக்கு அமுது செய்விக்காமல் தாம் உணவருந்துவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.

சரி, வள்ளுவன் உணவு சுவையாக இருப்பதற்குச் சில நியதிகள் விதித்தான்: 1. தன் வீட்டில் இருந்து உண்ணவேண்டும், 2. இல்லாத்தோருடனும் விருந்தினருடனும் பகிர்ந்துகொண்டபின் தனது பங்கை உண்ணவேண்டும். முதலில் பார்த்தபடி அவ்வுணவு அவனது நேர்மையான உழைப்பால் வந்ததாக இருக்கவேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்வோம். அப்படிப் பட்ட உணவு எவ்வளவு சுவையாக இருக்கும்?

மனிதன் அறிந்த மிகப்பெரிய இன்பம் எது? இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னால் மேற்கண்ட கேள்விக்கும் பதில் தெரியும். ஒருவன் துறவியாகவோ, ஞானியாகவோ, ஓரினச் சேர்க்கையாளனாகவோ இல்லாத பட்சத்தில் மனிதன் தன் புலன்களால் அறியும் மிகப்பெரும் இன்பம் பெண்ணுடனே சேருகிற இன்பம்தான். சரியா? அப்பெண்ணும் உணவுக்குக் கூறினாற்போலவே, தனது இல்லத்தில், நியாயமான முறையில் கிட்டியவளாக இருக்கவேண்டும். அதாவது அவள் தன் மனைவியாக இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல, அவள் தக்க பருவம் எய்தியவளாக இருக்கவேண்டும். வள்ளுவன் வார்த்தையில் அவள் ‘அரிவை’ ஆக இருக்கவேண்டும். அரிவை என்பவள் இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குட்பட்ட பெண் என்று சொல்லும் தமிழ் நூல்கள்.

அவ்வாறு தனது இல்லத்தில், தனது பக்குவமடைந்த மனையாளுடன் சேருகின்ற இன்பத்தை வள்ளுவன் மேலே கூறிய உணவின்பத்துக்கு ஒப்பிடுகிறான் வள்ளுவன்:

தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

(திருக்குறள்: 1107)

[தம்மில் -> தம்+இல் – தனது வீடு; பாத்து – பகுத்து உண்ணும் பங்கு; முயக்கு – பெண்ணுடன் சேரும் இன்பம்]

அந்த இன்பம் எவ்வளவு விரித்துரைக்க இயலாத அளவு அதிகமானது என்பதைச் சொல்ல “அம்மா!” என்ற ஒரு வியப்புச் சொல்லையும் சேர்த்தான் பாருங்கள் வள்ளுவன். உலக இலக்கியத்திலேயோ அல்லது நீதி நூல்களிலேயோ இவ்வாறு காமத்துப் பாலில் அறவழியைச் சொல்வதை வேறெந்தப் புலவனும் செய்திருப்பானா என்பது சந்தேகம்தான்!

சரி, “இந்தப் புலவர்களே இப்படித்தான் பொய் சொல்வதில் வல்லவர்கள். உண்மையாகவே அக்காலச் சமுதாயம் இந்த அறங்களைக் கடைப்பிடித்ததா?” என்று நீங்கள் கேட்கலாம். உணவு விடுதிகளும், சத்திரங்களும் தோன்றுவதற்கு முந்தைய காலம் ஒன்று இருந்தது. அக்காலத்தில் பயணம் மேற்கொண்டவர்களுக்கு உணவு எங்கிருந்து கிடைத்தது என்று யோசிக்கவேண்டும். சாப்பிடுவதற்குமுன் வாசலுக்கு வந்து யாரேனும் விருந்தினர் வருகிறார்களா என்று பார்க்கும் வழக்கம் அக்காலத்தில் நிச்சயம் இருந்தது. அதேபோல ‘ஐயம் இட்டுண்’ என்ற நீதிமொழியும் விருந்தினருக்கு மட்டுமல்ல, வறியவர்க்கும் உணவு இட்டபின்னர்தான் உண்ணவேண்டும் என்று வற்புறுத்தியது.

ஃபா சியன் (Fa Xien) என்ற ஒரு சீன யாத்திரிகர் இந்தியாவுக்கு கி.பி. நான்காம் நூற்றாண்டில் வந்தார். அவரது முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள புத்தத் தலங்களைத் தரிசிப்பது. அவர் எழுதிய நூலில் குறிப்பிடுவதைப் பாருங்கள்: “(இந்திய) நாடு மிக வளமானது. மக்கள் ஒப்பிடமுடியாத செழிப்போடும் மகிழ்ச்சியோடும் வாழ்கிறார்கள். மற்ற நாட்டவர் வந்தால் அவர்களை நன்கு கவனித்து, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.”

எனவே, பாரதத்தின், இந்துக்களின் விருந்தோம்பல் வெறும் புலவர்களின் கற்பனை அல்ல.

தனது வீட்டில் இருந்து, தனது பக்குவமடைந்த மனைவியிடம் பெறும் இன்பமும், தனது உழைப்பில் பிறரோடு பகிர்ந்து உண்ணும் இன்பமும் சமமானவை மட்டுமல்ல, அது ஆபுத்திரனின் அட்சயபாத்திரத்திலிருந்து கிடைப்பது போல அள்ள அள்ளக் குறையாததும் ஆகும் என்பதில் சந்தேகமில்லை. இந்த விழுமியங்களை மேற்கொண்டால் நமது சமூகமும் மீண்டும் உயர்வும், சிறப்பும், மகிழ்வும் கொண்டதாக மலரும். நாடும் குறைவற்ற வளம் பெறும்.

முந்தைய பதிவு

முற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *