கம்பராமாயணம் – 17 (Kamba Ramayanam – 17)

பாலகாண்டம்

03. நகரப் படலம் – Canto of the City. (06 – 10)

தங்குபேர் அருளும் தருமமும் துணையாத்

தம்பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்

பொங்குமா தவமும், ஞானமும், புணர்ந்தோர்

யாவர்க்கும் புகலிடம் ஆன

செங்கண் மால் பிறந்து, ஆண்டு, அளப்ப அருங் காலம்

திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்,

அம்கண்மா ஞாலத்து இந்நகர் ஒக்கும்

பொன்நகர் அமரர் நாட்டு யாதோ? 6

சொற்பொருள்: பொங்கு மா தவம் பொங்குவதான, மேலும் மேலும் வளர்வதான தவம். திரு திருமகள். அவித்தல் அழித்தல், அடக்குதல் (‘பொறிவாயில் ஐந்து அவித்தான் குறள்)

தம்மிடத்தில் தங்கி நிறைந்திருக்கும் மிகுதியான கருணையையும், அறத்தையும் துணயாகக் கொண்டு, ஐம்புலன்களை அடக்கி, எப்போதும் தொடர்ந்து வளர்வதான தவத்தையும் ஞானத்தையும் பெற்றவர்கள் எல்லோருக்கும் புகலிடம் என்பவன் (யாரோ என்றால், அவன்) சிவந்த கண்களை உடைய திருமாலே. அப்படிப்பட்ட திருமால் பிறந்து, அளவில்லாத நெடுங்காலம் திருமகளோடு சேர்ந்து அரசாண்டான் (இந்நகரிலிருந்து) என்றால், இதைப் போன்ற இன்னொரு நகரம் தேவலோகத்திலும் இருக்கிறதா என்ன?

Translation: To all those who are abundantly benign, compassionate, and full of rectitude, Vishnu of eyes so red is the only refuge. If it was He, that Vishnu, descended down on this earth and ruled over from here along with His Consort, for numberless years, is there another city that can match Ayodhya, even if it be the very Amaravati (Indraloka).

Elucidation: Vishnu, unto whom all the noble, compassionate and upright souls surrender, who is the only refuge for all such noble souls, decided to come down to earth and it was here that he was born and ruled over for a long time, presiding over with His Consort. Then, tell me, where is that other place, which may ever come anywhere near Ayodhya, including the very town of the Celestials!

அரைசுஎலாம் அவண; அணிஎலாம் அவண;

அரும்பெறல் மணிஎலாம் அவண;

புரைசைமால் களிறும், புரவியும், தேரும்,

பூதலத்து யாவையும் அவண;

விரைசுவார், முனிவர்; விண்ணவர், இயக்கர்,

விஞ்சையர், முதலினோர் எவரும்

உரைசெய்வார் ஆனார்; ஆனபோது, அதனுக்கு

உவமை தான் அரிதுஅரோ, உளதோ? 7

சொற்பொருள்: அவண அவ்விடத்தில் உள்ளன. புரைசை யானையின் கழுத்தில் கட்டும் கயிறு. விரைசுதல் விரசுதல் (எதுகை நோக்கி விரைசு என்று ஆனது) கூடுதல்; சேர்தல், சேர்ந்து இருத்தல் To gather. இயக்கர் யட்சர், யக்ஷர். விஞ்சையர் வித்தியாதரர்கள். விஞ்சையம்பதி என்ற உலகைச் சேர்ந்தவர்கள். அரோ அசைநிலை (பொருள் இல்லாதது)

(உலகத்தில் உள்ள) எல்லா அரசர்களும் அங்கேதான் இருந்தார்கள்; எல்லா ஆபரணங்களும் அங்கேதான் இருந்தன; எல்லா வைர வைடூரிய மணிகளும் அங்கேயே இருந்தன. கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றோடு (பழக்கப்பட்ட) யானைகளும், குதிரைகளும் தேர்களும், மற்றும் உலகத்தில் என்னவெல்லாம் உண்டோ அவை அனைத்தும் அங்கே இருந்தன. முனிவர்களும், தேவர்களும், யட்சர்களும், வித்தியாதரர்களும் இன்னும் பிறரும் அயோத்தியைச் சிறப்பித்துப் பேசுகிறார்கள் என்றால், அந்த நகரத்துக்கு உவமை சொல்ல மற்றொரு நகரம் இருக்கிறதோ?

இந்த உலகினர் மட்டுமல்லாமல் வேற்றுலகத்தவரும் வியக்கும் நகரம்.

Translation: (You could see) All the Kings (ruling various lands) gathered there (in Office). All the wealth of the world was with Ayodhya. All those precious stones that could be found in this world belonged to Ayodhya. There were a number of (numberless) elephants with ropes around their necks, steeds and chariots at the service of the King. Many were the Munis, Yakshas, Vidhyadharas and others, who stood there, showering praises on the riches and the richness of that City.

Elucidation: Do not get the impression that it was only the people who live in this world looked with awe at Ayodhya. See the array of inhabitants of other worlds (Yaksha, Vidhyadhara, etc.) who could not find a city that equals this one.

நகர மதிலின் மாட்சி – On the Bulwarks of the City

நால்வகைச் சதுரம் விதிமுறை நாட்டி

நனிதவ உயர்ந்தன, பனிதோய்

மால்வரைக் குலத்துஇனி யாவையும் இல்லை;

ஆதலால், உவமை மற்று இல்லை;

நூல் வரைத் தொடர்ந்து, பயத்தொடு பழகி,

நுணங்கிய நூலவர் உணர்வே

போல்வகைத்து; அல்லால், ‘உயர்வினோடு உயர்ந்தது

என்னலாம்பொன் மதில் நிலையே. 8

சொற்பொருள்: நனி, தவ உரிச்சொற்கள். ஆங்கிலத்தில் very என்பதற்கு இணையானவை. நூல்வரை சாத்திரங்களின் எல்லை வரையில். பயத்தொடு பழகி பயன்களை நன்குணர்ந்து. நுணங்கிய சூட்சுமம் நிறைந்த.

சிற்பநூலில் உள்ள விதிப்படி நாற்சதுரமாக அமைக்கப்பட்ட அயோத்தி மாநகரின் மதிலுடைய உயரத்துக்கு இணையாகச் சொல்லவேண்டுமானால், பனிபடர்ந்த மலைச்சிகரங்களின் வரிசையில் இனிமேல் உவமை சொல்வதற்கு எதுவுமே இல்லை. (ஒன்றுவேண்டுமானால் சொல்கிறேன்.) சாத்திரங்களை அவற்றின் எல்லைவரையில் சென்று கற்று (முற்றிலும் கற்று) அவற்றின் பயன்களையும் நன்கு தேர்ந்து தெளிந்தவர்களுடைய அறிவு எவ்வளவு உயரமாக இருக்கிறதோ அவ்வளவு உயரமானது இந்த மதில் என்று சொல்லலாம். இதைத் தவிர இந்தப் பொன்மதிலுக்கு உவமை காட்ட வேறு எது இருக்கிறது?

சதுரம் என்றாலே நான்கு பக்கமும் சம அளவில் இருப்பதுதான் என்னும்போது ‘நால்வகைச் சதுரம் என்று அடைமொழி கொடுத்துத் தனியாகச் சொல்வானேன் என்றால், சமபக்க முக்கோணத்தைப் பழந்தமிழில் முச்சதுரம் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது. ஆகவே இதனை நாற்சதுரம் என்று குறிப்பிட்டார். இது வைமு கோபாலகிருஷ்ணமாசார்யார் சொல்வது.

Translation: Constructed according to rules of architecture in a square, the walls towered high up yonder to the skies. There is not a single mountain, in the entire range of ice-capped hills, to which can this rampart of the city be compared. (If at all there be one for comparison, well, let me say this) The bulwark of the city was as tall, as high, as the knowledge secured by scholars of scriptures, who have reached the very peaks of their subject and have mastered its fruits. There is nothing else that can be compared to the heights of the walls that have been built around this city.

Elucidation: They are as tall as tall can be. Only the height of wisdom of great scholars can match them in height.

மேவஅரும் உணர்வு முடிவு இலாமையினால்,

வேதமும் ஒக்கும்; விண் புகலால்,

தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும்,

திண் பொறி அடக்கிய செயலால்;

காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்;

சூலத்தால், காளியை ஒக்கும்;

யாவையும் ஒக்கும், பெருமையால்; எய்தற்கு

அருமையால், ஈசனை ஒக்கும். 9

சொற்பொருள்: திண்பொறி அடக்கிய செயல் சிலேடை. திண்மையான எந்திரப் பொறிகளை (பாறைகளையும், எறி ஈட்டிகளையும் பிற ஆயுதங்களையும் வீசுவதற்கான எந்திர அமைப்புகள்) உள்ளடங்கி இருப்பது மதில்; ஐம்புலன்களாகிய பொறிகளை அடக்கியவர்கள் முனிவர்கள். கலை ஊர் கன்னி கலைமானை வாகனமாகக் கொண்டு ஊர்பவளான துர்க்கை.

‘இதன் முடிவு எது என்று அறிவால் ஆராய்ந்து தெளிந்துகொள்ள முடியாத காரணத்தால், இந்த மதிற்சுவர் வேதங்களையும் ஒக்கும். வானத்தைச் சென்று அடையும் காரணத்தால், (விண்ணில் உலாவுகின்ற) தேவர்களையும் ஒக்கும். வலிய பொறிகளைத் தம்முள் அடக்கியிருக்கும் காரணத்தால் முனிவர்களை ஒக்கும். நகரத்துக்குப் பாதுகாவலாக இருக்கின்ற காரணத்தால், கலைமான் வாகனத்தைக் கொண்டவளான துர்க்கையையும் ஒக்கும். மிகப் பெரிய அளவில் அமைந்த எல்லாப் பொருள்களையும் ஒக்கும். எல்லோராலும் எளிதில் அடைய முடியாத (உச்சியைக் கொண்ட) தன்மையால், ஈசனையும் இது ஒக்கும்.

வேதங்களின் முடிவு எது என்பதை அறிவால் ஆராய்ந்து தெளிவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் இந்த மதிலின் உயரம் எங்கேபோய் முடிகிறது என்பதைக் கண்டு அறிவது.

Translation: This (the wall) may be compared to the Vedas, in that, no genius can ever find its end. It may be compared to Devas, the celestials, because this also reaches the heavens. And since within it are contained the ‘instruments of action’ you may even say that this wall is similar to the Rishis. Because it provides security and protects from external attacks, it is very much like Durga, the Goddess of warriors, whose divine carrier is the stag. And because it cannot be scaled and reached with ease for all (‘for all’ necessarily means and includes ‘but for a few’), it may be likened to the Lord, the Supreme Himself.

Elucidation: That it cannot be measured by knowledge, by intelligence makes it comparable to Vedas. ‘Immeasurable’ the common attribute, common quality of the two. The fortress ‘contains’ weapons or instruments of action—that throw rocks and lances on enemies who surround it. The ‘instruments of action’ or the five senses that let the mind wander after desires, lust and other baser instincts are ‘contained’ (or, controlled, kept under check) by the Rishis. The pun on the word ‘contain’ is employed to make the comparison possible.

பஞ்சி, வான் மதியை ஊட்டியது அனைய

படர் உகிர், பங்கயச் செங் கால்,

வஞ்சிபோல் மருங்குல், குரும்பைபோல் கொங்கை,

வாங்குவேய் வைத்தமென் பணைத் தோள்,

அம் சொலார் பயிலும் அயோத்தி மா நகரின்

அழகுடைத்து அன்று என அறிவான்,

இஞ்சி வான் ஓங்கி, இமையவர் உலகம்

காணிய எழுந்தது ஒத்துளதே! 10

சொற்பொருள்: பஞ்சி செம்பஞ்சுக் குழம்பு. படர் உகிர் வரிசையான நகங்கள் (இந்த இடத்தில், கால்நகம்). வஞ்சி நீர்வஞ்சிக் கொடி. குரும்பை முற்றாத இளம் தெங்கின்காய். வேய் மூங்கில். இஞ்சி மதில்.

பல சந்திரன்களை வரிசையாக அமைத்துச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டியதைப் போன்ற கால்விரல் நகங்களையும், தாமரை மலரைப் போன்ற பாதங்களையும், வஞ்சிக் கொடி போன்ற மெல்லிய இடைகளையும், முற்றாத இளம் தெங்கின் குரும்பையை ஒத்த மார்பகங்களையும், வளையக் கூடிய மென்மையான மூங்கில் குருத்துகளைப் போன்ற திரண்ட தோள்களையும், இனிமையான சொற்களையும் உடைய அயோத்தி நகரத்துப் பெண்களைக் காட்டிலும் வானுலக மகளிர் அழகில் சிறந்தவர்களா என்று பார்ப்பதற்காகத்தானோ என்னவோ இந்த மதில் இப்படி வானுலகைப் பார்ப்பதற்காக எழுவதைப் போல உயர்ந்திருக்கிறது.

Translation: (The women of Ayodhya glowed with their lustrous beauty of) Toenails resembling a row of moons, painted with red-dye, lotus like feet, waists slender as tender creepers, breasts like young, unripe coconuts, shoulders of tender bamboo shoots and soft spoken sweet words. Is this wall of the city rising up to the heavens to have a peep into the land of celestials, to see if someone is more beautiful than these maids of Ayodhya!

Elucidation:

முந்தைய பகுதி

அடுத்த பகுதி

3 Replies to “கம்பராமாயணம் – 17 (Kamba Ramayanam – 17)”

 1. ஐயா,

  இந்த அருமையான தொடரின் அடுத்த பகுதி வருவதில் ஏன் இத்தனை காலதாமதம்?

  தயை செய்து தொடருங்கள், விரைவாக.

  நன்றி

  ஜயராமன்

 2. Sir,
  NAMASKARAM,
  I received your Book on Hanuman, 2 months ago through my brother in chennai, and I have kept it in my POOJA ROOM here. I am yet to dwell deep into it.
  These great commentary on Kambaramayanam, is very touching and soul soothing.
  Our salutes to your EFFORTS.
  Anbudan,
  Srinivasan. V.

 3. நண்பர் ஜயராமன்: மற்ற சில பணிகளின் காரணமாக இது தடைப்பட்டு நிற்கிறது. இன்று/நாளை (10 அல்லது 11 நவம்பர் 2008) முதல் தொடர்கிறேன். இந்தப் பணி செவ்வனே முடிய தெய்வம் துணை நிற்கட்டும்.

  திரு ஸ்ரீனிவாசன் வெங்கடராமன்: புத்தகத்தைக் குறித்த உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி. விரைவில் அதைப் படித்து, கருத்தும் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *