வழித்துணை

மனித வாழ்வில் எந்த நிலையில் பார்த்தாலும் ஒரு துணை தேவைப் படுகிறது. மனிதன் பிறந்ததும் தாயின் துணையோடு வாழ ஆரம்பிக்கிறான். கொஞ்சம் பெரியவனாகி விளையாடும் பருவம் வந்ததும் விளையாட ஒரு துணை தேவைப்படுகிறது. பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் பக்கத்து வீட்டுப் பெரிய பையனோ, பெரிய பெண்ணோ, ஆயாவோ துணைக்குவருகிறார்கள். பள்ளியிலோ பாடங்களுக்குப் பாடவாரியாகத் துணைவன்! நாங்கள் படித்த காலத்திலெல்லாம் இந்தத் துணைவன் கிடையாது. இப்பொழுதோ 2, 3ம் வகுப்புகளுக்குக் கூட துணைவன் வந்து விட்டது!

பரீக்ஷை வந்து விட்டால் பேப்பரில் ஸரஸ்வதி துணை. முருகன் துணை என்று மாணவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களைத் துணைக்கு அழைக்கிறார்கள். படித்து முடித்து பட்டம் பெற்று வேலைக்காக நேர்கணலுக்காக புதிய இடத்திற்குச் செல்லும் போது ரயிலில் நல்ல துணையாகப் பார்த்து அனுப்புகிறோம். என் சகோதரி டில்லியிலிருந்து குழந்தைகளுடன் வந்து விட்டுப்போகும் போது நல்ல துணை கிடைத்தால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். வேலை கிடைத்து திருமணம்! வாழ்க்கைத்துணை! வாழ்க்கைத்துணை நலம் என ஒரு அதிகாரமே பாடியுள்ளார் வள்ளுவர். முன்பெல்லாம் கடிதம் எழுதி முடித்ததும் மஹா கணபதி ஸஹாயம், ஆதிமூலஸ்வாமி ஸஹாயம் என்று எங்கள் பெரியவர்கள் எழுதுவார்கள். இப்பொழுதும் கல்யாணப் பத்திரிகைகளில் இந்த ஸஹாயம் அல்லது துனை என்று எழுவதைப் பார்க்கலாம்.

இப்பொழுதும் லாரிகளிலும் ஆட்டோக்களிலும் பார்வதியம்மன் துணை, ஐயா துணை, பேச்சியம்மன் துணை என்று எழுதப்படுகிறது.எங்கள் வீடுகளில் யாராவது வெளியூர் சென்றால் என் தாயார் விளக்கேற்றி வைத்து மார்க்க பந்து ஸ்தோத்திரம் சொல்லி விபூதி இட்டு அனுப்பி வைப்பார்கள். “மார்க்கபந்து” என்றால் வழித்துணை என்று பொருள். வழித்துணையாக சிவபெருமான் வந்து காக்க வேண்டும் என்று அந்த தோத்திரம் சொல்கிறது.இப்படி நமது வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் துணை தேவைப் படுகிறது.

மார்க்கபந்து ஸ்தோத்திரதைக் கேட்டு வழித்துணை பெறுங்கள்!

[audio:https://tamilhindu.com/wp-content/uploads/shri-margabandhu-stotram.mp3]

பிறக்கும் பொழுது தனியாகப் பிறக்கும் நாம் இறுதியாத்திரை செல்லும் பொழுது நான்கு பேர் தோள்மீது தான் செல்கிறோம். வாழ்க்கைதான் முடிந்து விட்டதே இனி நமக்குத் துணை எதற்கு என்று தோன்றுகிறதல்லவா?அருணகிரிநாதர் சொல்கிறார் ”மக்களே, அப்பொழுது தான் உங்களுக்த உயிர்த் துணை தேவை” என்று அறிவுறுத்துகிறார். பிறப்பு உண்டேல் இறப்பும் உண்டு. ஆனால் பிறந்த மனிதன் எங்கு எப்படி எப்பொழுது போகப்போகிறான் என்பது தான் தெரியவில்லை. அப்படி இறந்த பின் இந்த உயிர் போகும் தொலையாத வழியிருக்கிறதே அங்கு யார் துணையாக வரப் போகிறார்கள். ”பயந்த தனிவழிக்கு முருகனின் ஆயுதமான வேலும் வாகனமான மயிலும் வரும்” என்கிறார் அருணகிரியார்.

இந்த உலகில் இருக்கும் இடங்களுக்குச் செல்வதற்கே நாம் துணை தேடுகிறோம். வெளியூர்களுக்குச் செல்லும்போது வழியில் கஷ்டப்படக் கூடாதே என்பதற்காகக் கையில் கட்டுச் சாதம் எடுத்துக் கொண்டு போகிறோம். இறுதிலே செல்லப்போகும் தொலையாத வழிப் பயணத்திற்கு என்ன கொண்டு போகப் போகிறோம்? கெட்டுப் போகாத சாதம் வேண்டுமே? நாம் இந்த உலகில் வழங்கும் இரு பிடி சோறே நமக்கு தொலையாத வழியில் பொதிசோறாக வந்து உதவும்

என்கிறார் அருணகிரியார். இந்த உலகில் நாம் செய்யும் தான தருமங்களும் தண்ணீர் பந்தல்களுமே நமது இறுதிக் காலத்தில் பொதிசோறாகவும் தண்ணீராகவும் வந்து உதவும். ஏழைகளுக்கு இங்கு வயிறார உணவு கொடுத்தவன் வயிறு, வானுலகத்தில் அமுதால் நிறையும்.தானம் என்றும் இடுங்கோள் என்கிறார்.”அறம்செய விரும்பு’ என்கிறாள் ஒளவையும்.அறம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் தோன்றினாலே போதும். மற்றவையெல்லாம் தானாகவே வந்து விடுமாம்

100 பாடல்கள் அடங்கிய ”கந்தரலங்காரம்” என்ற நூலில் பலமுறை பலவகையாக நமது மனதில் நன்கு பதியும் படி உபதேசிக்கிறார் அருணகிரியார். அறம் செய்ய வேண்டும். யாருக்குச் செய்ய வேண்டும்? வயிறு நிறைந்து புளித்த ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பவனுக்கா? வள்ளுவர் சொல்கிறார்

வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரதுடைத்து

வறியார்க்குக் கொடுக்கும் போதும் நான் கொடுக்கிறேன் என்ற ஆணவமின்றிக் கொடுக்க வேண்டுமாம். ஷண்முகா என்று நினைத்துக் கொடுக்க வேண்டும் என்கிறார் அருணகிரியார்.

பொருபிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தருபிடி காவலா,ஷண்முகா எனச் சாற்றி நித்தம்
இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரும் வினையோம்
இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணா மாய உடம்பிதுவே

தருமம் செய் என்று சொல்கிறீர்களே, தருமம் செய்ய என்னிடம் நிறைய பொருள் இல்லையே என்று சொல்பவர்களுக்காகவே அருணகிரியார் இப்படிச் சொல்கிறார். நாம் தினமும் இந்த வயிற்றை நிரப்புவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். ஆனால் இந்த ஒரு சாண் வயிறு என்றைக்காவது தூர்ந்து போகுமா? பெரிய பெரிய குளங்கள் ஏரிகள், கிணறுகள் எல்லாம் கூட தூர்ந்து போய் விடுகின்றன.ஆனால் இந்த வயிறாகிய கசம் மட்டும் தூர்வதேயில்லை!இந்த தூராக் குழியை இட்டு நிரப்பும் நீங்கள் வறியவர்க்கும் இருபிடி சோறாவது கொடுங்கள் என்கிறார்.நீங்கள் எத்தனை தானங்கள் செய்தாலும் அன்னதானம் செய்வதே சிறந்தது என்கிறார்.ஐந்து ரூபாய் தானம் கொடுத்தால் அதைப் பெற்றவர்களுக்கு பத்து ரூபாய் கொடுத்தால் என்ன என்று தோ.ன்றும். 10 கொடுத்தால் 50 கொடுத்தால் என்ன என்று தோன்றும்.நூறு ரூபாய்க்குப் புடவை கொடுத்தால் கூட இன்னும் கொஞ்சம் ஜரிகை போட்ட புடவை தரலாமே என்றூ தோன்றும்.ஆனால் ஒருவனை உட்காரவைத்துச் சோறு போட்டால் வயிறு நிரம்பிய பின் அதற்கு மேல் ஒரு பிடி சோறு கூட வேண்டாமென்று சொல்லிவிடுவான்.போதும் போதும் என்று கையால் தடுத்து விடுவான்.அதனால் தான் தானங்களில் எல்லாம் சிறந்தது அன்ன தானம் என்று போற்றப்படுகிறது.

திருமூலரும்’யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி’ என்கிறார்.இதையே காஞ்சிப் பெரியவர்களும் வலியுறுத்தி பிடியரிசித் திட்டத்தைச் செயல் படுத்தினார்கள். சாப்பிட்டுச் சாப்பிட்டு வளர்க்கிறோமே இந்த உடம்பு, இது இறந்தபின் யாருக்காவது பயன்படுமா? மிருகங்கள் இறந்தால் அதன் ரோமம்,தோல், கொம்பு, எலும்பு, பல் என்று எல்லாம் பயன் படுகின்றன. பறவைகளின் இறகுகளும் கூட பயன் படுகிறது.ஆனால் ஆறடி மனிதன் உடம்பு? ஒருபிடி சாம்பலும் காணாத மாய உடம்பு! வெயிலுக்குக் கூட நிழல் தராத மாய உடம்பு! வெயிலில் செல்கிறோம் களைப்பாக இருக்கிறது. நமது உடம்பின் நிழலாவது நமக்குப் பயன் படுகிறதா? இல்லை. நமது உடம்பின் நிழலே நமக்குப் பயன் படுவதில்லையே,நாம் சேர்த்து வைத்த பொருளா நமக்குப் பயன்படப்போகிறது?அதனால் நீங்கள் உயிரோடு இருக்கும் போதே தருமம் செய்யுங்கள் என்கிறார். உங்கள் வீட்டில் ஒருபிடி சோறும் இல்லையா? பரவாயில்லை, குருணை இருக்கிறதா? அதுவும் இல்லையா? சரி, நொய் இருக்கிறதா? அது போதுமே!

வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள் உங்கட்கு இங்கு
வெய்யிற்கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல்
கையிற்பொருளும் உதவாது காணும் கடை வழிக்கே

நமது உடம்பின் நிழலும் நமக்கு உதவுவதில்லை,பாங்கில்
சேர்த்துவைத்த பணமோ நகையோ நஞ்சை புஞ்சைகளோ
வீடுகளோ எதுவுமே நம்மோடு வருவதில்லை. இதையே தீதுற்ற
செல்வமென் தேடிப்புதைத்து வைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே

என்கிறார் பட்டிணத்தார்.

முன் காலத்தில் இப்பொழுது உள்ளது போல் வங்கி பாதுகாப்புப் பெட்டகங்கள் எல்லாம் கிடையாது.பணத்தைச் சேமித்தவர்கள் அதை தங்க நாணயங்களாக மாற்றி ஒரு பானையில் போட்டு புதைத்து வைப்பார்கள். புதைத்து வைத்தவர்கள் அதை எடுக்காமல் யாரிடமும் கொடுக்காமலும் இறந்து விட்டால் அதுவே புதையலாகி விடுகிறது. இப்படி ஆழத்திலே புதைத்து வைக்கிறீர்களே இந்தச் செல்வமெல்லாம் நீங்கள் இறுதி யாத்திரை போகும் நாளில் உங்களோடு வரப்போகிறதா? வாழும் போதும் அனுபவிக்காமலும் தான தருமங்களும் செய்யாமலும் போகும் போதும் கொண்டு போக முடியாத அந்த செல்வத்தால் என்ன பயன்?

பாடுபட்டுப் பணத்தைத் தேடிவைத்த
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்
கூடு விட்டிங்கு ஆவி தான் போனபின்
யாரே அனுபவிப்பர் பாவிகாள் அந்தப் பணம்?

இப்படி ஒளவை நம்மைப் பார்த்து வினவுகிறாள். அருணகிரியாரும் நமது அறிவின்மையைப் பார்த்து பரிதாபப் படுகிறார்.

உங்கள் வங்காரமும் சிங்கார வீடும் மடந்தையரும்
சங்காதமோ கெடுவீர் உயிர் போம் அத்தனி வழிக்கே

ஆனல் நாம் என்றோ எங்கோ கொடுத்தது நமக்குத் துணையாக வரும் என்கிறார்.

பொங்கார வேலையில் வேலைவிட்டோன் அருள் போல் உதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க்கிட்டது

வங்கிகளிலோ பெரிய கம்பெனிகளிலோ நாம் பணம் போட்டு வைத்தால் 5 வருடம் 7வருடம் 10 வருடம் என்று நாம் முன்பு போட்டு வைத்த பணம் வட்டியோடு கிடைக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், வளைகுடா நாடுகளிலும் வசிக்கும் நம்மவர்கள் அங்கு டாலராக சேமித்து வைக்கிறார்கள்.அதை இங்கு கொண்டு வந்து இந்திய நாணயமாக மாற்றிக் கொள்கிறார்கள். நாம் என்றோ எங்கோ போட்டு வைத்த பணம் இங்கு நமது நாணயமாக நமக்கு உதவுவது போல் நாம் செய்யும் தான தருமங்களின் பலன் பின்னால் தக்க சமயத்தில் உதவும். காலமெல்லாம் கர்ணன் செய்த தருமம் தான் அவனைக் கவசமாகக் காத்தது. தானங்களிலே சிறந்தது அன்னதானம் என்று முன்பே பார்த்தோம். ஏனென்றால் பசி என்னும் பாவி ஒருவனை எந்த நிலைக்கும் தள்ளி விடும்.

குடிப்பிறப்பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்வி பெரும்புணை விழூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூணணி மாதரோடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி

பசிப்பிணி போக்குவதே உயர்ந்த அறமாகும் என்று மணிமேகலையும் வலியுறுத்துகிறது

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

பசித்து வந்தவர்களுக்குக் கொடுக்க நம்மிடம் நிறைய இருக்க வேண்டும் என்பதில்லை உங்களிடம் கொடுக்க நிறைய கறிவகைகள் இல்லையே என்று கவலைப் பட வேண்டாம். கீரை இருந்தாலும் போதும். நள்ளிரவிலே பசியோடு வந்த சிவனடியாருக்காக அன்று விதைத்த நெல்லையும் முளைவந்த கீரயையும் தானே பறித்துவந்து பசியாற்றினார் இளையான்குடிமாற நாயனார்? நல்ல இருட்டு மழைவேறு. கண்களுக்கு வெளிச்சம் தெரியவில்லை

காலினால் தடவிச்சென்று கைகளால்
சாலிவெண்முளை நீர் வழியச் சார்ந்தன
கோலி வாரி இடாநிறையக் கொண்டு
மேலெடுத்துச் சுமந்தெல்லை மீண்டார்.

வழி நடந்து வந்த களைப்பாலும் பசியாலும் சிவனடியார்
வருந்துவாரே என்று அன்பினில் பொலிந்து சென்று
குழி நிரம்பாத புன்செய் குறும்பயிர் தடவிப்
பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்கினார்

இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரும் ”நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்” இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்மின்கள்”என்றெல்லாம் சொல்கிறாரே இதனால் நமக்கு என்ன பயன்?இக்காலத்தில் எதற்கும் ஒரு பலனை எதிர்பார்க்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. நாலு கிழமை கோவிலுக்குப் போனால் இன்ன பலன் கிடைக்கும் ஒரு மண்டலம் கோவிலைச் சுற்றினால் கல்யாணமாகும் அல்லது வேலை கிடைக்கும். ஒரு மண்டலம் அர்ச்சனை,அபிஷேகம்

செய்தால் பரீக்ஷை பாசாகும்,இந்த இந்த ஸ்லோகங்களைச் சொன்னால் பிரமோஷன் கிடைக்கும், என்றெல்லாம் பலனை எதிர் பார்த்தே காரியம் செய்யும் உலகம் இது. சகல காரிய சித்தியும் ஸ்ரீமத் ராமாயணமும் என்றூ ஒரு புத்தகமே வந்து விட்டது! பலனை எதிர் பார்க்கும் மக்கள் இயல்பைப் புரிந்து கொண்ட அருணகிரியார் தருமம் செய்யுங்கள், அந்தப் பலன் தொலையாத வழியில் வந்து உதவும் என்கிறார்.

மலையாறு கூறெழ வேல் வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ நும்மை நேடி வரும்
தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்
இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்தேற்றவர்க்கே

என்று பலனையும் துணையையும் காட்டுகிறார்.மேலும்”ஏற்பவர்க்கு இட்டது, உயிர் போம் தனிவழிக்குத் துணையாக வரும் என்கிறார்.எப்படி வரும்?பொங்கார வேலையின் வேலை விட்டானே முருகன், அவன் அருள் போல் வரும்.தொலையாத வழிக்கும் உயிர் போம் அத்தனிவழிக்கும் துணை காட்டியவர் நமது விழிக்கும் மொழிக்கும் பழிக்கும் தனி வழிக்கும் துணை காட்டுகிறார்.

விழிக்குத் துணை மென் மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே

கண்கள் படைத்த பயன் கந்தனை சேவிப்பதே. ஞானமயமான அந்த மென்மையான பாதங்களேநமது கண்களுக்குத் துணை. சிலம்பும்,சதங்கையும் தண்டையும் இலங்கும் அந்தச் சிற்றடிகளின் பெருமையோ அளவிடமுடியாதது. உலகில் எதையும் மாற்றலாம் ஆனால் தலை எழுத்தை மாற்றமுடியாது என்று சொல்கிறார்கள். ஏனென்றால் தலையெழுத்தை நிர்ணயிப்பவன் பிரும்மா. ஆனால் அந்த பிரும்ம லிபியையே அழித்துவிடும் இந்தச் சிற்றடிகள்!

அவன் கால்பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன்
கையெழுத்தே!

முருகனின் பாதங்கள்,சிற்றடிகள் நம் தலைமேல் பட்டவுடன் (நம் தலை முருகனின் பாதங்களில் வணங்கியவுடன்) தலையெழுத்து அழிந்துவிடுமாம். நமது வழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள். நாம் முன்பு செய்த பாபங்களையெல்லாம் போக்க உறுதுணையாக இருப்பது அவன் பன்னிரு தோள்களாகும். பயந்த தனிவழியென்பது எல்லோரும் பயப்படும் தனி வழி. இறந்த பின் செல்லப்போகும் தனிவழி!

புதிதாக ஒரு ஊருக்குப் போகிறோம். இருட்டி விடுகிறது. லைட்டும் இல்லை. மழைவேறு வரும் போலிருக்கிறது. எப்படிப் போய்ச்சேரப் போகிறோம் என்று கவலையாகவும் பயமாகவும் இருக்கிறது.அப்பொழுது பாதை நன்கு தெரிந்த அவ்வூர்வாசி ஒருவர் “என்னுடன் வாருங்கள் நான் அழைத்துக் கொண்டு போகிறேன்” என்றால் நமக்கு எவ்வளவு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்? இந்த உயிர் போக வேண்டிய ஊர் ஒன்றிருக்கிறதே. அந்த ஊருக்குப் போகும் வழி

எப்படியிருக்குமாம், ”எரிவாய் நரகக்குழியும் துயரமும் தாகவிடாயுமாக” இருக்குமாம். அந்தக் கூற்றுவன் ஊருக்குச் செல்ல இந்த உயிருக்கு எவ்வளவு பயமாக இருக்கும்? பயந்த அந்த தனி வழிக்குத் துணையாக முருகனின் ஆயுதமான வேலும் வாகனமான மயிலும் துணையாக வரும். அதாவது முருகனே துணையாக வருவான். ஆதி சங்கரரும் செந்தூர் முருகனே துணையாக வருவான் என்கிறார், புஜங்கப் பாமாலையில்

புலனடங்கி நெறிமயங்கி பொறிகலங்கி கபம் அடைக்க
பலம்நலிந்து செயல் மறந்து பயம் மிகுந்து உடல் நடுங்க
நலம் நசிந்து உயிர்மறைந்து நமனை நாடும் போதிலே
உலகறிந்த துணைகள் வேறு உதவிடுமோ உன்னையல்லால்

முருகனே துணையாக வருவதால் நாமும் அருணகிரியைப் போல் தைரியமாகப் பேசலாம். பெருமையோடு பேசலாம். அவர் பேசுவதைப்பாருங்கள்,

மரணப்ரமாதம் நமக்கில்லையாம் என்றும் வாய்த்த துணை
கிரணக் கலாபியும் வேலுமுண்டே

சூலம் பிடித்து எமபாசம் சுழற்றித் தொடர்ந்து வரும்
காலன் தனக்கு ஒருகாலும் அஞ்சேன் கடல் மீதெழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையுமுண்டே நமக்கொரு மெய்த்துணையே

இப்படி வேலோடும் மயிலோடும் முருகன் வாய்த்த துணையாக, வழித்துணையாக, மெய்த்துணையாக வர வேண்டுமென்றால் கவி கற்க வேண்டும். எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும். அயில் வேலன் கவியை அன்பால் கற்க வேண்டும் அது நம்மை அழித்துப் பிறக்கவொட்டாமல் காப்பாற்றும். எனவே

அயில்வேலன் கவியை அன்பால் எழுத்துப் பிழையறக் கற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *