பச்சை பச்சையாகச் சில விஷயங்கள்

அண்மையில் ஜியோ (Geo) எனும் சர்வதேசப் பத்திரிகை ஒன்றை இந்தியாவில் அவுட்லுக் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். இதிலுள்ள பல நல்ல கட்டுரைகளுள் ஒன்று, ஹென்றி நோல்டி எனும் ஆக்ஸ்போர்ட் தாவரவியல் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள ‘காகிதப்பூக்கள்’ (‘Paper flowers’). ராபர்ட் விட் (Robert Wight, 1796-1872) எனும் ஸ்காட்டிஷ் மருத்துவர் இந்தியத் தாவரங்களைச் சேகரிப்பதிலும் வகைப்படுத்துவதிலும் பெரும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். இவர் இந்தியாவில் வாழ்ந்த 31 ஆண்டுகளில் (1817-1848) குற்றாலம், சிவகிரி, பழனி ஆகிய மலைப் பகுதிகளில் பல தாவர இனங்களை வகைப்படுத்தி அவற்றுக்கு தாவரவியல் பெயர்களை இட்டார். இப்பெயர்கள் இன்றளவும் தாவரவியல் துறையில் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

ஏறக்குறைய 256 தாவர இனங்கள் (species) அவருடைய பெயரைத் தாங்கியுள்ளன. அவரது பத்தாண்டு உழைப்பின் விளைவாக வெளிவந்த ‘இந்திய தாவரவியல் சித்திரங்கள்’ (Illustrations of Indian Botany – hand illustrated) என்ற அரிய நூல் 2462 படங்களைக் கொண்டதாக இருந்தது. பிரிட்டிஷ் காலனிய நாடுகளிலேயே இவ்வளவு விளக்கமான தாவரவியல் தரவுகள் வெளிக்கொணரப்பட்டது வேறெங்கும் இல்லை எனலாம். இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் ரங்கையா (Rungiah) மற்றும் கோவிந்தன் (Govindoo) எனும் பெயர்களைக் கொண்ட தஞ்சாவூரைச் சார்ந்த ஓவியர்கள். ஒரு மாதத்துக்கு 10-12 ஓவியங்கள் வரை இவர்கள் தீட்டினர். ஹென்றி நோல்டி இக்கட்டுரையின் இறுதியில் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். இந்திய உதவியாளர்களால் ஓரளவுக்கு மேல் – அதாவது படங்கள் வரைவதற்கு அப்பால் – தாவரவியலுக்குப் பங்களிக்க முடியவில்லை என்பதே அது. ஏன்? நோல்டி கூறுகிறார்: “விட் (Wight) வாழ்ந்த காலகட்டத்தில் இந்தியர்கள் மேற்கத்தியப் பாரம்பரியத்தின் தாவரவியலுக்கு பங்களிப்பதென்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும். லின்னயன் (Linnaean) வகைப்படுத்தலியலின் விதிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய இந்தியர்களின் அறியாமையே இதற்குக் காரணம்” [1]

Linnaeusலின்னயன் வகைப்படுத்தல் என்பது ஸ்வீடனைச் சார்ந்த உயிரியலாளரான கார்ல் லின்னயஸ் (1707-1778) என்பவரால் உருவாக்கப்பட்ட – விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்களை – வகைப்படுத்தும் முறை. இந்த வகைப்படுத்தலை அவர் தெரிவித்த நூல் 1735ல் நெதர்லாந்தில் வெளியிட்ட ஸிஸ்டமா நேச்சுரே (Systema Naturae) எனும் 11 பக்கங்கள் கொண்ட நூலாகும். 1758ல் அது பத்தாவது பதிப்பை எட்டிய போது அதில் 4400 விலங்கினங்களும், 7,700 தாவரங்களும் வகைப்படுத்தப் பட்டிருந்தன. இந்த வகைப்படுத்தலியலின் ‘விதிகள் மற்றும் வழிமுறைகளின் காரணமாக’ இந்திய பங்களிப்பினை உதவியாளர் என்ற அடிப்படைக்கு அப்பால் சாத்தியமில்லாததாக்கிற்று’ என நோல்டி குறிப்பிடுகிறார். நமக்குப் பொதுவாக கிடைக்கும் சித்திரம் உலகெங்கும் பரவிய மேற்கத்திய நாகரிகத்தின் பிரதிநிதிகள் ஆங்காங்குள்ள செடிகொடிகள் விலங்குகளை ஆராய்ந்து அவற்றினை ஒரு அறிவியல் முறைப்படிப் பாகுபடுத்தி அந்த வகைப்படுத்தல் அறிவியலை உலகெங்கும் பரப்பினர் என்பதுதானே? ஆனால் இந்த லின்னயன் வகைப்படுத்தலியலின் வேரினைத் தேடுகையில் நமக்குக் கிடைக்கும் தகவல்களில்தான் ஒரு வேதனையான வரலாற்று முரண்-நகை (irony) இருக்கிறது.

லின்னயன் வகைப்படுத்தலியல் குறித்து பிரிட்டனைச் சார்ந்த அறிவியல்-வரலாற்றாசிரியரான (historian of science) ரிச்சர்ட் க்ரூவ் (Richard Grove) கூறுகிறார்: “தெற்காசியாவுக்கே உரித்தான வகைப்படுத்தல் முறைகளே ஐரோப்பிய உலகெங்கும் பரவினவே தவிர ஐரோப்பாவிலிருந்து வகைப்படுத்தலியல் தெற்காசியாவுக்குச் சென்றிடவில்லை.” (the diffusion of indigenous South Asian methodologies of classification throughout the European world, rather than the reverse.”)[2] இங்கு க்ரூவ் குறிப்பிடுவது ஈழவ சமுதாயத்தில் விளங்கிய பாரம்பரியத் தாவரவியல் அறிவையே ஆகும்.

hortus malabaricusடச்சு நாட்டைச் சேர்ந்த காலனிய அதிகாரியும் தாவரவியல் ஆர்வலருமான ஹென்றிக் வான் ரீட் டோட் ட்ராகென்ஸ்டைன் (Hendrik van Reede tot Drakenstein) கேரளத்தின் மலப்புரப்பகுதியின் தாவரங்களைச் சேகரித்து தொகுத்து ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ் (Hortus Malabaricus – மலபாரின் தோட்டம்) எனும் பெயரில் 12 பாகங்களாக (1678-1693) வெளியிட்டார். இதற்காகத் தகவல் திரட்டித் தந்த வான் ரீட்டின் தகவலாளர்கள் – வெறுமனே தகவல் தருபவர்கள் மட்டுமன்று – அவர்கள் வெகுவாகப் படித்தவர்கள். மொழி பெயர்ப்பாளராகச் செயல்பட்ட விநாயக பண்டிதரைத் (Vinaique Pandito) தவிர மற்றவர்கள் சமுதாயத்தில் மிகவும் மதிக்கப்பட்ட வைத்தியர்கள் [3]. அவர்களது பெயர்கள் ரங்க பட்டர் (Ranga Boto), அப்பு பட்டர் (Apu Boto), இத்தி அச்சுதன் (Itti Achuden) என அறிகிறோம். ஈழவரான அச்சுதனின் கள அறிவு மற்ற அனைவரைக் காட்டிலும் சிறந்ததாக அமைந்திருந்தது.

Nativ Punditக்ரூவின் கணிப்புப்படி லின்னயஸ் இந்தியப் பகுப்பு முறையின் அடிப்படையில் ஏறக்குறைய 240 தாவரங்களை தனித்தனியான தாவர இனங்களாக பாகுபடுத்த முடிந்தது.[4] ஒவ்வொரு தாவரத்தையும் குறித்த தகவல்கள் அவற்றின் மருத்துவப் பயன்பாடுகள் செய்யுள் வடிவத்தில் அவர்களால் தெரிவிக்கப்பட்டன. இவற்றுள் சில செய்திகள் மிகத் தொன்மையான பழஞ்சுவடிகளிலிருந்து வந்தவையாக இருந்தன.[5] இந்தத் தாவரத் தொகுப்பியல் ஐரோப்பாவில் வெகுவாகப் பரவியது. கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் அன்னா லோவென்ஹப்ட் ட்ஸிங் (Anna Lowenhaupt Tsing) இதனை விளக்குகிறார்: “தாவரவியலின் இலக்கணம் குறித்து எழுதிய ஜான் ரே (John Ray) வான் ரீட்டினை வாசித்திருந்தார். என்ற போதிலும் உயிரினம் (species) குறித்த அறிவினை அவரிடம் சேர்த்த ஈழவர்களின் பங்களிப்புக்கு அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அந்த வகைப்படுத்தல் என்னும் அமைப்பே அறிவாகக் கருதப்பட்டதே அன்றி அந்த அமைப்பின் உள்பகுதிகள் அவ்வாறு கருதப்படவில்லை.

நவீன உயிரியல் வகைப்படுத்தலியலின் தந்தையாகக் கருதப்படும் கார்ல் லின்னயஸ் தான் செய்வதை உணராமலேயே – வான் ரீட் அவர்களின் மலப்புரப் பகுப்பினையே – தமது வகைப்படுத்தலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டார் (unself-consciously adopted). அவரைப் பொறுத்தவரையில் எல்லா சரியான அறிவும் ஒரு உலகார்ந்த முறையின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இங்கு உரையாடலின் மூலம் பெறப்படும் அறிவுக்கு – அதுவும் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவரல்லாதோருக்கும் இடையே நடக்கும் உரையாடலின் மூலம் பெறப்படும் அறிவுக்குச் சற்றும் இடமும் கிடையாது.”[6]

லின்னயஸ் எந்த அளவுக்கு இந்தியர்களுக்குக் கடமைப்பட்டிருந்தார் என்பதனை லின்னயஸின் விமர்சகர் ஒருவர் 1858ல் பின்வருமாறு கூறுகிறார்: “மொட்டமைப்பு, கனியாதல் ஆகிய தன்மைகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள வரிசைகளில் உள்ள தாவரங்களின் பல பெயர்கள் ரீட் அவர்களின் “ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ்” நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. அவற்றுள் பல இலத்தீன் பெயர்கள் – அல்லது பழமையான பெஹலவி அல்லது அசிரிய மொழிகளின் – இலத்தீன் கிரேக்கம் மற்றும் சமஸ்கிருத மூலமாக அமைகின்ற – பெயர்களாகும். லின்னயஸ் (தாவரங்களுக்கு) இந்துப் பெயர்களை எடுத்துக்கொள்ளவில்லை என்பது விசித்திரமாக இருக்கிறது. தமது ‘ஜெனீரா ப்ளேண்டாரம்’ (Genera Plantarum) நூலின் முகவுரையில் லின்னயஸ் தாம் கடன்பட்டிருக்கும் இரு நபர்களில் ஒருவராக ரீட்டை குறிப்பிடுகிறார் என்ற போதிலும் லின்னயஸ் இந்தியப் பெயர்களைப் பயன்படுத்துவதை எதிர்க்கிறார்.”[7]

ஈழவர்களின் பங்களிப்பினை க்ரூவ் கொஞ்சமாக மிகைப்படுத்தியதாக ஹென்றி நோல்டி கருதுகிறார் அதே நேரத்தில் மிக முக்கியமான கோட்பாடான ‘உயிரினம்’ (species) எனும் கருத்தமைப்பினை லின்னயஸ் கேரளத்தின் பாரம்பரியப் பாகுபாட்டமைப்பிலிருந்தே பெற்றதை அவர் ஒத்துக் கொள்கிறார். ஆனால் அதற்கு மேலாக அமைக்கப்பட்ட பாகுபாட்டில் இந்தியப் பாகுபாட்டியலை லின்னயஸ் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறுகிறார். அவரது வார்த்தைகளில்: “எதுவானாலும் இந்தியர்களின் இந்தத் தெளிவான பகுத்தலே லின்னயஸை இந்த அனைத்து தாவர இனங்களையும் தமது வகைப்படுத்தும் திட்டத்தில் பொருத்த உதவியது. பின்னாட்களில் மேற்கத்திய வகைப்படுத்தலியலாளர்கள் ‘இந்தியப் பகுப்புக்களை’ தமது புதிய பாகுபாட்டமைப்பில் உள்வாங்கிக்கொண்டனர்.”[8]

ஆக, இன்றைக்கு மேற்கின் மூலம் நம்மை மீண்டும் வந்தடையும் பல அறிவுசார்ந்த விஷயங்களின் அடிப்படைக் கோட்பாடுகளில் நம்முடைய பாரம்பரிய அறிவின் கனிகள் இருந்து வருகிறது என்பது தெளிவு. கடந்த இரு நூற்றாண்டுகளாக நம்மை மூடிய காலனிய ஆதிக்கத்தின் விளைவாகவும், இன்றும் தொடரும் காலனியத் தாக்கம் கொண்ட கல்வியின் விளைவாகவுமே இருக்கிறது. இதன் விளைவாக, ஏதோ இந்தியப் பாரம்பரிய அறிவு, அறிவியல் தன்மையே இல்லாதது என்றும் அல்லது இந்திய மெய்ஞானம் சார்ந்த ஈடுபாடு அதன் புறம்-சார்ந்த அறிவியல் வளருவதைத் தடுத்துவிட்டதாகவும் நம்மை நினைக்க வைக்கிறது. ஆனால் மேற்கின் அறிவியல் சாதனைகள் என அறியப்படுவன உண்மையில் நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகமான அளவில் கிழக்கின் பங்களிப்பைக் கொண்டதாகும் என்பதனை ஆராய்ச்சிகள் நமக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. அதுமட்டுமல்ல, ஐரோப்பிய அறிவு அமைப்புகள் தம் இயல்பிலேயே எப்படித் தமக்குப் புறமானவற்றை – அவற்றின் உதவியுடன் உருவாகியிருந்தாலும் கூட – தம் அமைப்புக்குள் நுழையவிடாத இறுக்கம் கொண்டவையாக விளங்குகின்றன என்பதையும் இது காட்டுகிறது.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

[1] ஹென்றி நோல்டி (Henry Noltie), ‘Paper flowers’, ‘Geo’, August 2008.
[2] ரிச்சர்ட் க்ரூவ் (Richard Grove), Green Imperialism: Colonial Expansion, Tropical Island Edens and the Origins of Environmentalism, 1600-1860, Cambridge University
Press, 1995, பக். 80
[3] ஜே. ஹெனிகெர், J. Heniger, Hendrik Adriaan Van Reede Tot Drakenstein (1636-1691) and Hortus Malabaricus: A Contribution to the History of Dutch Colonial
Botany, CRC Press, 1986 பக்.43
[4]ரிச்சர்ட் க்ரூவ், 1995, பக். 90-91
[5] ரிச்சர்ட் மில்லர் (Richard Millar), Disquisitions in the History of Medicine: Exhibiting a View of Physic as Observed to Flourish, During Remote Periods, in Europe
and the East,Blackwood, 1811, [Original from Oxford University Digitized 4 Dec 2006] பக்.170
[6]அன்னா லோவென்ஹப்ட் ட்ஸுங் (Anna Lowenhaupt Tsing), ‘Friction: An Ethnography of Global Connection’, 2005, Princeton University Press, பக்.93-4
[7] சார்ல்ஸ் வாட்கின்ஸ் (Charles R W. Watkins), Principles and rudiments of botany,1858, Original from Oxford University Digitized 12 Sep 2006, பக்.12
[8] ஹென்றி நோல்டி: இக்கட்டுரையாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து (செப்டம்பர் 12)

3 Replies to “பச்சை பச்சையாகச் சில விஷயங்கள்”

  1. தாவரவியலின் அடிப்படையான பகுப்பியலை உருவாக்கியவர்கள் இந்துக்கள் என்பதை எவ்வளவு அக்கிரம புத்தி இருந்தால் மறைத்திருப்பார்கள்?

    நாம் இந்த உண்மை தெரியாமல் இருக்கிறோம். அதை உபயோகப்படுத்திக்கொண்டு எவாலிஞ்சக்கர்களால் ஏற்படுத்தப்பட்ட திராவிடர் கழக மடங்களும், விவேக், எம்.ஆர். ராதா போன்ற பொய்சொல்லிகளும் இந்துக்கள் மூடநம்பிக்கியாளர்கள், அறிவியல் பார்வை அற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள். அந்த மடையர்களை நமது அறியாமை நம்ப வைக்கிறது.

    அநியாயம். இந்த முன்வைத்து அறிவியக்க வரலாற்றை உண்மையை ஏற்க செய்யவேண்டும்.

  2. வணக்கம், நமது சித்த மற்றும் ஆயுர்வேத வைத்திய முறைகளே சிறந்தவை. ஆங்கிலேய ஆட்சியின்போது அவர்களது உற்பத்திப்பொருட்களை நம்மிடம் சந்தைப்படுத்துவதற்காக நமது அறிவு சுரண்டப்பட்டு, அழிக்கப்பட்டு, வலுவிழக்கச் செய்யப்பட்டன. நமது அலோபதி வைத்தியர்களிடம் போய் கேட்டால், நமது தைலங்களை உடலில் தேய்த்தால் உள்ளே போய்விடுமா என்று நக்கலாக கேட்பார்கள். ஆனால் ஜெர்மன். இங்கிலாந்து நிறுவனங்கள் தயாரிக்கும் கிரீம்கள், ஆயன்மின்ட்கள் எல்லாம் தோலை ஊடுருவி உள்ளே போய்விடும் என்பார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே நமது சித்தர்கள் மூலிகைகளை ஆராய்ந்து வைத்தியம் செய்தார்கள் ( பக்க விளைவுகள் இல்லாமல்). ஆனால் ஒன்று, நமது கலைகள் வாய்வழியாக வந்ததால் அவர்களால் ( ஆங்கிலேயர்களால்) அழிக்க முடியவில்லை. இன்று மேல் நாடுகளில் நமது சித்த ஆயுர்வேதங்கள் பிரபலமாகி வருகிறன.

  3. //மேற்கின் அறிவியல் சாதனைகள் என அறியப்படுவன உண்மையில் நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகமான அளவில் கிழக்கின் பங்களிப்பைக் கொண்டதாகும் என்பதனை ஆராய்ச்சிகள் நமக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. அதுமட்டுமல்ல, ஐரோப்பிய அறிவு அமைப்புகள் தம் இயல்பிலேயே எப்படித் தமக்குப் புறமானவற்றை – அவற்றின் உதவியுடன் உருவாகியிருந்தாலும் கூட – தம் அமைப்புக்குள் நுழையவிடாத இறுக்கம் கொண்டவையாக விளங்குகின்றன என்பதையும் இது காட்டுகிறது.//

    உண்மையே. டார்வினின் பரிணாம கொள்கையை ‘அறிவியல்பூர்வ’ மேற்குலகில் ஒரு பெரும்பான்மை எதிர்ப்பதே இதற்கு சான்று.

    திரு . அரவிந்தன், இந்த கட்டுரையின் மூலம் சில நுண்ணிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *