பைத்ருகம் – ஒரு பார்வை – 2

உள்ளூரில் ஏற்கனவே ஒரு தோழரின் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு பிரிவாக நாஸ்திக இயக்கம் கன ஜோராக வளர்ந்து வருகிறது, தாடி வளர்த்துக் கொண்டு, ஒரு ஜோல்னா பையும் கண்ணாடியுமாக ஏகப்பட்ட தண்டத் தடிராமன்கள் மக்களை எப்படி இந்து மதத்தின் கோரப் பிடியிலிருந்து மீட்பது என்று ராப்பகலாக பீடி வலித்துக் கொண்டும், சாயா குடித்துக் கொண்டும், தோழரின் வீட்டிலும், காட்டிலும், மேட்டிலுமாக அமர்ந்து இதைப்பற்றியே யோசிக்கிறார்கள். தீர்மானம் போடுகிறார்கள். நரம்பு புடைக்க கோஷம் போடுகிறார்கள். அவர்கள் குறி உள்ளூர் கோவிலும், நம்பூதிரியும், அவர் எப்பொழுதாவது நடத்தும் யாகங்களும், மக்களின் நம்பிக்கைகளும்தான். அவற்றை அடித்து நொறுக்கி மக்களை இந்து மதத்தின் வர்ணாசிரமப் பிடியில் இருந்து ரட்சித்து விடுதலை பெற வைக்கத் தலைகீழாக நிற்கிறார்கள்.

அந்தத் தோழருக்கு ஓர் அழகான மகளும் இருப்பார் என்பதை இந்நேரம் நீங்கள் யூகித்திருக்க வேண்டும். அவர் தோழருக்குமேலே படு புரட்சிக்காரியாக வேறு இருக்கிறார். டெல்லியில் இருந்து கிளம்பிய சோமதத்தன் தோழரின் இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். அங்கு ஏராளமான லட்சியவாதிகளுக்கு மார்க்சையும், பகுத்தறிவையும் கிளாஸ் எடுத்து வளர்க்கிறான். உணர்ச்சிப் பிழம்பாக கோஷம் போடுகிறான்

மகன் புரட்சிக்காரனாக இருப்பதை அறியும் நம்பூதிரி எதுவும் சொல்வதில்லை. கேரள காம்ரேடு மந்திரி ஒருவர் ரகசியமாக நள்ளிரவில் நம்பூதிரியின் வீட்டுக்கு ஆள் அனுப்பித் தனக்கு சுதர்சன யாகம் செய்து தரும்படி வேண்டுகோள் வைக்கிறார். (மார்க்சிஸ்டு கட்சியில் இருந்து கொண்டே தாடியுடனும் டர்பனுடனும் திரிந்த ஹரிகிஷன்சிங் சுர்ஜித், தன் பிள்ளைகளுக்குப் பூணூல் போட்டு சடங்கு நடத்தும் சோம்நாத் சட்டர்ஜி, மஞ்சள் துண்டு மகான்கள் போன்ற ஆஷாடபூதிகள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.) மிகுந்த தயக்கத்துக்குப் பின் மந்திரிக்கு இருக்கும் நம்பிக்கையை மதித்து அவருக்கு வீட்டில் யாகம் செய்கிறார் நம்பூதிரி. அந்த விஷயம் தெரிந்தவுடன் நாஸ்திக சமாஜத்து ஆட்கள் தங்கள் கட்சி வேடதாரியின் கபட வேடத்தைக் கிழிக்குமுகமாக மந்திரி வீட்டின்முன் தர்ணா செய்கிறார்கள். யாகத்தைத் தடை செய்கிறார்கள். மறுநாள் நம்பூதிரி, 5000 வருடங்கள் தொடர்ச்சியாக அந்தத் தரவாட்டில் தொடரும் நம்பிக்கைக்கும் பாரம்பரியத்துக்கும் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதனால் அதில் நம்பிக்கையுள்ளவர் மட்டுமே அந்த வீட்டில் இருக்கலாம் என்று கடுமையாகச் சொல்லிவிடுகிறார்.

கடுமையான விவாதத்துக்குப் பிறகு சோமதத்தன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். அந்த ஊரில் பேய்கள் வசிப்பதாக நம்பப் படும் ஒரு பாழடைந்த வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறுகிறான். வீட்டைச் சுற்றி இருக்கும் சர்ப்பக் காவை இடித்து விடுகிறான். தோழரின் மகளுக்கும் சோமதத்தனுக்கும் ஒரே லட்சியம் இருப்பதால் இருவரும் மனமொப்பிக் கலப்புத் திருமணம் வேறு செய்து கொள்கிறார்கள் (அதைத் தவிர பெரிதாய் வேறு காதல் கத்திரிக்காய் நடனம் எல்லாம் அவர்களுக்குள் கிடையாது, அது ஒரு லட்சியத் திருமணம்)

இரண்டாம் மகனும் கோவிலின் அர்ச்சகருமான பானு நம்பூதிரிக்கு கோவிலுக்கு வரும் ஒரு நம்பூதிரிப் பெண்மேல் காதல் உண்டாக, அவளது ஜாதகத்தையும் தனது ஜாதகத்தையும் பொருத்தம் பார்க்க நேரும்பொழுது தனக்கு ஆயுள் இன்னும் ஆறு மாதம் மட்டுமே என்று தன் தந்தை குறித்திருப்பதை அறிகிறான். மற்றொரு சோழி ஜோசியரும் அவ்வாறே சொல்கிறார். தன் தகப்பனாரின் ஞானத்திலும் சொல்லின்மீதும் அபரிதமான நம்பிக்கை வைத்துள்ள பானு, பயத்தால் அல்லது தன் தந்தையின் பாண்டித்யம் தப்பாகப் போய்விடக் கூடாது என்ற அக்கறையினால் கோவிலின் அருகே மரித்துப் போகிறான்.

அதைக் கண்டு மிகுந்த சினம் கொள்ளும் சோமதத்தன் தன் தந்தையின் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும் மக்களை விடுவிப்பதும் தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்கிறான். முன்னைவிட அதி தீவிரமாக நாஸ்திகப் பிரசாரம் நடக்கிறது. அந்த சூன்யமான வீட்டிற்குக் குடிபோகும் எவருக்கும் புத்திரபாக்கியம் நிலைக்காது என்பது நம்பூதிரியின் வாக்கு. அதையும் மீறிக் குடிபோகும் சோமதத்தனின் நாஸ்திக மனைவிக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆகிறது, அடுத்த முறை கர்ப்பம் தரித்தவுடன் டாக்டரிடம் போகிறார்கள். தன்னால் முடிந்ததைச் செய்கிறேன் மற்றது ஆண்டவனிடம்தான் இருக்கிறது என்கிறார் டாக்டர். “படித்த டாக்டரே இப்படிக் கடவுளை நம்பலாமா?” என்கிறான் சோமதத்தன். “நான் மருத்துவ சாஸ்திரம் படித்ததினால்தான் அப்படிச் சொல்லுகிறேன், இறப்புக்கு அப்பால் என்னவென்று யாருக்குத் தெரியும்?” என்கிறார் டாக்டர். மூடநம்பிக்கை படித்தவர்களிடமும் பரவிக் கிடப்பதைக் கண்டு மனம் நோகிறான் சோமதத்தன்.

பழுத்த நாஸ்திக இயக்கப் போராளியான காயத்ரியின் கனவில் பாம்புகள் வருகின்றன. அவள் மெதுவாக மனம் மாறுகிறாள், தனக்கு நேரும் அபார்ஷன்களுக்குக் காரணம் தனது நாத்திகம்தான் என்றும் அந்த வீட்டில் குடியேறி நாகர்களை அகற்றியதும்தான் என்று மெதுவாக நம்ப ஆரம்பிக்கிறாள். வீட்டைச் சுற்றிப் பார்க்கும்பொழுது தன் கணவனால் இடித்துப் போடப்பட்ட ஒரு சர்ப்பக் காவைக் காண்கிறாள், உடனே பதற்றம் கொண்டு அவற்றை மீண்டும் நிர்மாணித்து, விளக்கு ஏற்றுகிறாள் அவளது நாஸ்திகக் கொள்கை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்து விளக்கில் இருந்து வரும் புகையாய்க் கரைகிறது,. கடவுள் நம்பிக்கை கொண்டவளாய் மாறுகிறாள். கணவன் “உன் லட்சியத்துக்காகத்தான் திருமணம் செய்து கொண்டேன், என் கொள்கைகளுக்கு மாறாகப் போனால் எனக்கு அப்படிப்பட்ட மனைவி தேவையில்லை” என்று சொல்லிவிட, வீட்டைவிட்டு வெளியேறும் கர்ப்பிணியான காயத்ரியை அவளது நாஸ்திகத் தந்தையும் புறக்கணிக்க, பெரிய நம்பூதிரியிடம் தஞ்சம் அடைகிறாள்.

அவளுக்கு மகன் பிறக்கிறது. மகன் பிறந்ததை அறிந்த தேவதத்தன் தன் தந்தையை எச்சரிக்கிறான். தன் மகனை ஒரு நம்பூதிரியாக வளர்க்கக் கூடாது, ஒரு மனிதனாக வளர்க்க வேண்டும் என்றும், தன் மகன் எப்படி வளர வேண்டும் என்று நிர்ணயிக்கும் உரிமை தனக்கு மட்டுமே உள்ளது என்றும் ஆவேசமாகச் சண்டை போடுகிறான். அமைதியாகக் கேட்டுக் கொள்ளூம் அப்பா நம்பூதிரி, அப்படியானால் நான் உன்னை என்னைப்போல் அல்லவா வளர்த்திருக்க வேண்டும் என்று சொல்ல பதில் சொல்லமுடியாமல் வெளியேறுகிறான்.

இதற்கிடையில் நாட்டில் மழையின்மையால் கடுமையான வறட்சியும் தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்படுகிறது. உள்ளூர் பெரியவர்கள் நம்பூதிரியிடம் வந்து அதிரத யாகம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். மக்களுக்கு யாகங்களில் எல்லாம் விசுவாசம் இல்லாமல் போய்விட்டது, அதனால் தன்னால் நடத்த முடியாது என்று தயங்குகிறார். ஊர்க்காரர்கள் வற்புறுத்தலால் பிரமாண்டமான யாகம் நடத்த ஒப்புக் கொள்கிறார். யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் தயாராகின்றன. விஷயம் கம்யூனிஸ்டுகளுக்குப் போகிறது. அது மக்களை ஏமாற்றும் சூழ்ச்சி, பிராமணர்கள் செய்யும் சதி, ஆதிக்க வகுப்பு ஒடுக்கப்பட்டவர்களை ஏமாற்றும் சதி என்றெல்லாம் ஆவேசப்படுகிறார்கள். யாகத்தை எப்படியேனும் தடுத்து நிறுத்துவது என்று தீர்மானிக்கிறார்கள். யாகத்துக்குப் புறப்படும் தந்தைக்கும் தனயனுக்கும் பலத்த விவாதம் ஏற்படுகிறது. தனது யாகத்தால் யாருக்கும் எவ்விதத் தீமையும் இல்லையென்றும் அதன் பலன் லோகக்ஷேத்துக்கு மட்டுமே என்று கெஞ்சுகிறார்.

இல்லை லிட்டர் லிட்டராக நெய்யும் தானியங்களும் ஏழைகள் உணவுக்கு வழியில்லாத நிலையில் வீணாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று சோமதத்தன் கடுமையாகப் பேசுகிறான். இறுதியில் இந்த யாகம் நடத்தியும் மழை பெய்யா விட்டால் நம்பூதிரி தன்னைப்போன்று ஒரு நாஸ்திகராக மாறிவிட வேண்டும் என்றும் மழை பெய்தால் தான் தோற்றதாக அர்த்தம் என்றும், அதற்குத் தயாரா என்று சவால் விடுகிறான். மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகும் நம்பூதிரி, இப்படித்தான் நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு யாகம் நடத்தப் போய்விடுகிறார். யாகம் விமரிசையாக நடக்கிறது. குதிரைகள், பசுக்கள், ஆடுகள் எல்லாம் யாகசாலைக்கு அழைத்து வரப்படுகின்றன. ஆனால் பலியிடப் படுவதில்லை. யாகத்தின் நியமங்கள் அனைத்தும் மிக விளக்கமாகக் காண்பிக்கப் படுகின்றன.

யாகம் நடந்து முடிந்தவுடன் மழை பெய்ததா? தேவதத்தன் ஆஸ்திகன் ஆனானா அல்லது நம்பூதிரி நாஸ்திகன் ஆனாரா என்பதை அப்புறமாகச் சொல்லுகிறேன். இப்பொழுது படத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல ஆரம்பிக்கிறேன்…

12 நாட்கள் நடந்த யாகம் முடிகிறது. யாகசாலைக்குத் தீ வைத்து விடுகிறார்கள் (சடங்கில் ஒரு பகுதி என்று நினைக்கிறேன்) மனைவி பின்னால் குடைபிடித்து வர நம்பூதிரி வீடு திரும்ப எத்தனிக்கிறார். எதிரில் சோமதத்தனின் தலமையில் கருப்புக் கொடி (தி.க) ஏந்திய நாஸ்திக சங்கத்தினர் கோஷம் போட்டபடி வருகின்றனர். பலப்பிரயோகம் செய்யவும் தீர்மானம் செய்ய்திருக்கின்றனர். ஆக்ரோஷமான உரையொன்றைச் சோமதத்தன் நிகழ்த்துகிறார். மனிதன் எதையும் கேள்வி கேட்டுத்தான் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறான். 5000 ஆண்டு பழமையான நம்பிக்கை அவனது பகுத்தறிவை மழுங்கச் செய்ய அனுமதிக்க மாட்டோம், இது ஏமாற்று வேலை என்று வீராவேசமாக முழங்குகிறான். 12 நாட்கள் யாகம் நடத்தியும் ஒரு மேகத் துண்டைக்கூட வானத்தில் காணோமே, வானம் வறண்டு கிடக்கிறது. யாகம் நடத்திய பூமி ஒரு புல், பூண்டு கூட முளைக்க முடியாமல் வறண்டு கிடக்கிறதே. இதுதான் யாகத்தின் பலனா, ஏன் இந்த ஏமாற்று வேலை என்று கொந்தளிக்கிறார்கள். கார்மேகம் எவ்விட போய் என்று கடுமையாய்க் கேள்வி எழுப்புகிறார்கள்

ஆவேசமாக சோமதத்தன் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே மக்களும் ஏமாற்றமடைந்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது, லேசாக, லேசாக ஒரு சிறு துளி, சின்னத் துளி, எங்கிருந்தோ வந்து சோமதத்தனின் மூக்கில் அறைகிறது. அடுத்து இன்னும் ஒரு துளி நெற்றிப் பொட்டில் அறைகிறது. அடுத்து அடுத்து அடுத்து மழைத் துளி அவனை அறைகிறது. அவன் அகங்காரத்தை அறைகிறது, அவனது நாஸ்திக எண்ணங்களை அறைகிறது, அவன் ஆதர்சங்களள அடிக்கிறது, கடவுளின் மீதான அவனது அவநம்பிக்கைகளை அறைகிறது. நம்ப முடியாமல் வானத்தைப் பார்க்கிற்றன், எவ்விட போய் என்று கேட்கப்பட்ட கார்மேகங்கள் ஆக்ரோஷத்துடன் “இதோ வருகிறேனடா. நான் எங்கும் போய் விடவில்லை. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்குதான் இருக்கிறேன் மூடனே புரிந்து கொள்!” என்று முகத்தில் அறைகிறது. அதிர்ச்சியில் பேச்சு மூச்சில்லாமல் உறைந்து நிற்கிறான் சோமதத்தன். மக்கள் கூட்டத்தில் இருந்து சிலர் நாஸ்திகர்கள் மீது கல்லெறிகிறார்கள்.

மழை கொட்டுகிறது. வானம் இடிந்து விழுந்தாற்போல் கொட்டுகிறது. ஓவென்ற பேரிரச்சைலடன் பூமியை அதிரச் செய்கிறது. வறண்ட பூமியும், ஜீவராசிகளும் குளிரக் குளிரக் கொட்டுகிறது பிரளயம் வந்தாற்போல் பொழிகிறது. (சினிமா மழை அல்ல நிஜ மழையில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.)

அதிர்ச்சியில் பேச்சு மூச்சற்று உறைந்து போகும் சோமதத்தன் வீட்டைநோக்கிக் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு ஓடுகிறான். தரவாட்டின் வாசலில் நின்று “அம்மே ஞான் திருச்சி வந்நு” என்று கதறுகிறான். “அச்சா ஞான் தோற்று, ஞான் தோற்று அச்சா, ஞான் தோற்று, க்ஷமிக்கணும் அச்சா” என்று கதறுகிறான், அச்சனிடம் இருந்து பதில் இல்லை, பயந்து போய்க் கதவைத் தட்டிக் கதறுகிறான்.

உள்ளே தானே வைத்துக் கொண்ட ஒரு நெருப்புப் பிழம்பில் அச்சன் ஆண்டவனோடு கலந்து கொண்டிருக்கிறார். கதவுகளை உடைத்து உள்ளே போவதற்குள் முழுக்க எரிந்து போகிறார். சோமதத்தன், மனைவி தாழங்குடை பிடித்து அமர்ந்திருக்க அக்னி வளர்க்கிறான், செம்மாந்திரிப்பாடு நம்பூதிரியின் வாரிசாக, அந்தத் தரவாட்டின் 5000 கொல்லத்து பாரம்பரியத்தைத் தொடர்கிறான், அவனது மனைவியின் மடியில் அவனிடமிருந்து அக்னியையும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து எடுத்துச் செல்ல அவனது வாரிசு அமர்ந்திருக்கிறான்

கதை நிறைவுற்றது. பார்வை தொடரும்…

பைத்ருகம் – ஓர் அறிமுகம்…

பைத்ருகம் – ஒரு பார்வை – 1

13 Replies to “பைத்ருகம் – ஒரு பார்வை – 2”

 1. மிக மிக நன்றி விஸ்வாமித்ரா. அருமையான கதை சொல்லி நீங்கள். நெகிழ நெகிழ சொல்லிவிட்டீர்கள். இந்து தருமத்தின் சடங்குகள் ஆச்சாரங்கள் ஆகியவை ஒரு மாபெரும் மானுடப்பாரம்பரிய பொக்கிஷம் ஒரு போலி பகுத்தறிவின் பெயரில் அதனை அழித்தொழித்தால் இழப்பு நமக்கும் நம் சந்ததிகளுக்கும். மட்டுமல்ல – வேதச்சடங்குகளை நாம் காப்பாற்றுவதென்பது நமது சமுதாயம் முழுமைக்கும் கொடுக்கப்பட்ட பொறுப்பு அதனை நாம் நிறைவேற்ற தவறினால் மானுடவரலாற்றின் முன் மிகப்பெரிய குற்றவாளியாக ஒட்டுமொத்த இந்துசமுதாயமும் நிற்க வேண்டி வரலாம். குற்றவாளிக்கூண்டு நம் குழந்தைகளுக்கான அகதிகள் முகாமாகவோ அல்லது தெருக்களில் வெடிகுண்டுகளால் வெடித்து சிதறும் நம்முடைய பிண்டங்களாகவோ இருக்கலாம்.

 2. Great,
  Thanks for publishing this.
  Extraordinary INSIGHT.
  The film DVD must be made available now for us and all.
  Your efforts are highly valuable.
  Best Regards,
  srinivasan.

 3. Can I get the VCD of this movie in Chennai or Bangalore ? Please let me know.

 4. அரவிந்தன்

  அருமையாகச் சொன்னீர்கள். நீஙகள் சொல்வதைத்தன் இந்தத் திரைப்படமும் சொல்கிறது. ஜெயராஜ் இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். பிழைப்புக்காக அவ்வப் பொழுது மசாலா சினிமாக்களும் செய்ய வேண்டிய நிலையில் இருந்தாலும் அவரைப் போல நம் பாரத நாட்டின் கலாச்சாரச் செழுமைகளைப் போற்றும் இயக்குனர் இன்னொருவர் இல்லை. அவரது களியாட்டம், தேஷாடானம் போன்ற படங்கள் அகில இந்திய அளவில் சிறந்த படங்களுக்கான விருதுகளைப் பெற்றிருக்கின்றன. உலக அளவில் பெரிதும் மதிக்கப் படும் இயக்குனர். இந்தப் படம் முடிந்த பின்னால் இந்த படத்தில் ஒரு நடிப்புக்காக சர்ப்பக் காவைக் கலைப்பது போல நடிக்க நேர்ந்ததினால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான நடிகர் சுரேஷ் கோபி அப்படி நடிப்பிற்காகவேண்டி கூட ஒரு பாவத்தைச் செய்ய நேர்ந்தமைக்காக பல்வேறு பரிகாரங்களைச் செய்திருக்கிறார். கோவில் கோவிலாக ஏறி மனமுருகி மன்னிப்பு வேண்டியிருக்கிறார்.

  பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் பாராட்டுக்கள் எல்லாம் படத்தைத் துணிந்து இயக்கிய ஜெயராஜுக்குப் போக வேண்டும், நான் உங்களிடம் கொண்டு சேர்த்த ஒரு கருவி அவ்வளவுதான்.

  இந்தப் படம் டி வி டி யிலோ வி சி டி யிலோ கிடைப்பதாகத் தெரியவில்லை. நானும் சென்னை, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம் என்றெல்லாம் அலைந்து தேடிப் பார்த்து விட்டேன். இந்தப் படம் வெளிவந்தது 1993ம் வருடத்தில். கம்னியுஸ்டுகளின் கடும் எதிர்ப்பினால் அதிகம் பேசப்படாமலேயே போய் விட்டது. ஒரு வேளை அவர்களின் எதிப்பினால் வி சி டி கூட வராமல் போயிருந்தாலும் ஆச்சரியமில்லை. இந்தப் படம் உங்களுக்குக் காணக் கிடைக்காது என்பதினாலேயேதான் நான் இவ்வளவு தூரம் கதை சொல்ல நேர்ந்தது. படத்தின் மீதச் சிறப்புக்களை அடுத்த பதிவில் படியுங்கள்

  அன்புடன்
  விஸ்வா

 5. பல வருடங்களுக்கு முன் “பைத்ருகம்” ஏஷியானெட்” சேனலில் பார்க்க நேர்ந்தது. கதாநாயகன் வெற்றி பெறுவதுதான் “தமிழ்” ஃபார்முலா. ஆனால் இஙுகு கதாநாயகன் தனது தந்தையின் மரபு வழி நம்பிக்கை வென்றது என உணர்ந்து அவர் வழியைத் தொடர்கிறான். இந்தப்படத்தின் இயக்குனர் திரு ஜெயராஜ் சோபானம், தேசாடனம் போன்ற ரசமான படங்களைத் தந்தவர். நன்றி விஸ்வாமித்ரா!

 6. சர்ப்பக் காவு என்றால் என்ன?

  காடுகள் அழிந்துவரும் சூழலில், அது இயற்கை பாதுகாப்பில் பங்கு வகிக்கிறதா?

 7. சர்ப்பக் காவுகள் பற்றியும் அவற்றின் சூழல் விளைவுகள் பற்றியும் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதை தமிழ் இந்துவில் பதிப்பிக்கும் படி ஆசிரியர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்துடன் தொடர்புடைய கட்டுரை அது.

  இந்தப் படத்தின் வி சி டி ஐ இந்தத் தளத்தில் 50 ரூபாய்களுக்கு வாங்கலாம் என்று தெரிகிறது

  https://www.maebag.com/details.php?ItemCode=399&&ItemName=Paithrukam

  அன்புடன்
  விஸ்வா

 8. Thank you tamilhindu.com and Viswamithra.
  Can we in our dreams imagine such a movie in Tamil?
  Warm regards
  naren

 9. //இந்தப் படத்தின் வி சி டி ஐ இந்தத் தளத்தில் 50 ரூபாய்களுக்கு வாங்கலாம் என்று தெரிகிறது.//

  இருப்பில் இல்லை (Out of Stock) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 10. ஒரு நல்ல கதை சொல்லி நிங்கள் விஸ்வாமித்ரா. அருமையான விமர்சனம்.. படத்தைப்பற்றிய குறிப்புகளில் தற்குறிப்பேற்றம் செய்யாமல் உள்ளதுபோல சொல்லி இருக்கிறீர்கள். ஒரு நாட்டை அழிக்கவேண்டுமெனில் அதன் பாரம்பரியத்தை அழிக்காமல் அது சாத்தியமில்லை. எனவேதான் இஸ்லாமிய அரசர்கள் படையெடுப்பில் முதல் வேலையாக ஒவ்வொரு கோவிலாக இடித்து தள்ளினர். அதன் மூலம் அச்சத்தை உருவாக்கி அவர்களை மதம் மாற செய்தனர். நமது பாரம்பரியத்தின் வலுவினால் இன்றும் இந்தியாவில் இந்துமதம் தழைத்து வளர்கிறது. இந்தப்படம் எதிர்காலத்தில் ஒரு ஆவணமாக மாறலாம், இப்போது நடக்கும் கலாச்சார ஒழிப்பு வேகத்தைப் பார்க்கும்போது..

  மிக நன்றி விஸ்வமித்ரா..

  ஸ்ரீதர்

 11. //இருப்பில் இல்லை (Out of Stock) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.//

  அங்கே உங்கள் மெயில் ஐ.டி. கொடுங்கள். ஸ்டாக் வந்ததும் தெரியப்படுத்துவார்களாம்.

  யாராவது வைத்திருந்தால் ஒரு காஃப்பி அனுப்புங்களேன்…

  srinivasank77@gmail.com

 12. நன்றி திரு. விஸ்வாமித்ரா. மிக அருமையான பதிவு. எனது நட்புவட்டத்தில் நான் சிபாரிசு செய்யும் மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று. ஓரு சிறிய விளக்கம், பானு அவன் தந்தை கணித்தபடி பாம்பு தீண்டித்தான் இறந்து போகிறான். நானும் பாதி மளையாளிதான்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *