பைத்ருகம் – ஒரு பார்வை – 1

வழக்கமாக ஒரு திரைப்பட விமர்சனத்திலோ அல்லது சும்மா “ஒரு பார்வை”யிலோ கதையை முழுக்கச் சொல்லக்கூடாது, சற்றே கோடி காட்டினால் போதும் என்பது என் கட்சி. அதனாலேயே விகடனில் வரும் செழியன் என்பவரின் “உலக சினிமாக்கள்” எனக்குப் பிடிக்காமல் போனது. ஒரு விமர்சனம் என்பது கதையையும் தாண்டிப் போக வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் எழுத சினிமாவில் பூடகமாகச் சொல்லப் பட்டிருக்கும் நுணுக்கங்களை அறியும் கவித்துவமான அறிவும், கேமிரா கோணங்கள் பற்றிய அறிவும், இசைபற்றிய நுணுக்கமான அறிவும், இன்னும் எடிட்டிங், சவுண்ட் போன்றவற்றில் பரிச்சயமும் வேண்டும். அப்படித் தெரிந்துகொண்டு எழுதினால் அதுதான் சினிமா விமர்சனம். மற்றதெல்லாம் சினிமா கதை சொல்லல்தான். ஆகவே இதையும் விமர்சனத்துடன் சேர்க்க வேண்டாம். இந்த சினிமாவை நாம் விமர்சன நோக்கில் பார்க்கப் போவதும் இல்லை.

நான் என் பார்வையை இந்தப் படத்தின் கதையைச் சொல்லியே தொடங்குகிறேன். காரணம் – இந்தப் படத்தில் கதை என்பது அவ்வளவு முக்கியமானது. மேலும் இந்தப் படம் டி.வி.டி-யில் வரவில்லை. வீடியோ காசெட்டில் கூட சப்டைட்டில் கிடையாது. மேலும் தியேட்டருக்குப் போய் இந்த மலையாளப் படத்தை பார்க்கும் வாய்ப்பும் குறைவு. ஆகவே என்னைப் போல அரைகுறை மலையாளி யாராவது சொன்னால்தான் உண்டு. ஆகையால் நான் கதை சொல்வதால் யாருக்கும் எவ்வித இழப்பும் நேராது என்னும் அனுமானத்தில் சொல்லுகிறேன். (ஒருவேளை இதைப் படித்தபின் சிலர் பார்க்க ஆசைப்படலாம்). கதை வேண்டாதவர்கள் ஸ்கிப் செய்து விடவும். ஆனால் இந்தப் படத்தின் முக்கிய அம்சம், இது மதத்தை இழிவு செய்யாமலும், மிருகங்களை நம்பாமலும், விட்டலாசார்யா காட்சிகள் இல்லாமலும், காண்போர் மனத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது என்பதுதான்.

மலையாளப் படைப்பாளிகளுக்கு அற்புதமான ஒரு கலாரசனையை ஆண்டவன் வழங்கியுள்ளான். தமிழ்க் கலைஞர்களின் திறமையும், கற்பனாசக்தியும் மழுங்கிப்போய், வறண்டுபோய்க் கிடக்கிறது. போகட்டும். கேரள மக்களின் சொந்தத் தெரிவுகள் அல்லது காலத்தின் கட்டாயங்கள் எவ்விதம் இருந்தாலும் அவர்கள் படைக்கும் சினிமாவும் இயற்கையின் வனப்பும் இப்போதைக்கு நமக்குப் போதுமானது. மதி!

கேரளாவின் பாதிக்கும் மேலான மக்கள் கிறிஸ்துவர்களாகவும், முஸ்லீம்களாகவும், மீதி இருக்கும் இந்துக்களில் பெரும்பாலோர் கம்னியூஸ்டுகளாகவும் மாறிப்போக, பல்லாயிரக்கணக்கான வருடங்களாகக் கேரள மண்ணில் விளைந்த பாரம்பரியமும், சடங்குகளும், மண்சார்ந்த கலைகளும், இன்னமும் ஒரு சில நம்பிக்கையாளர்களால் போற்றிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. இருந்தாலும், கேரள மண்ணின் பாரம்பரியத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள அபரிதமான தாக்குதலால் இந்து மதமும் அதன் நம்பிக்கைகளும் கோவில்களும் சாஸ்தாக்களும் யாகங்களும் பகவதிகளும் அடுத்த தலைமுறைக்குக் கிட்டாமல் அழிந்துவிடுமோ என்று கவலைப் பட்டிருக்கிறான் ஒரு கலைஞன்! அப்படி அழியாமல், மதம் மாறாமல் மிச்சம் மீதி இருக்கும் மக்களுக்கு அதன்மீது நம்பிக்கை தளராமல் இருக்க ஓர் அதிர்ச்சி வைத்தியமாக என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ். தனக்குத் தெரிந்தது சினிமா எடுப்பதுதான் என்பதால் அதன்மூலம் மிக வலுவாக, அழுத்தமாக ஆன்மீகத்தின் சக்தியை எடுத்துச் செல்ல விழைந்ததுதான் பைத்ருகம்.

பைத்ருகம் என்றால் ஆங்கிலத்தில் ஹெரிட்டேஜ் என்று பொருள். இந்தப் படம் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் நடக்கும் யுத்தம். நாஸ்திகம் என்ற பெயரில் இந்து மதத்தைக் கம்னியூஸ்டுகள் அழிப்பதை எதிர்க்கும் ஓர் அழுத்தமான கலைப் படைப்பு. நம் பாரம்பரியத்தையும் மதத்தையும் நம்பிக்கைகளையும் காக்க, கேரள அரசியல் சூழ்நிலையில் காலத்தின் கட்டாயமாக எடுக்கப்பட்டுள்ள படம் பைத்ருகம். கம்னியூனிஸ்டு கரையான்களால் அரிக்கப்பட்ட ஒரு பூமியில் இதைச் சொல்ல அசாத்தியத் துணிச்சல் வேண்டும், அதைச் சாதித்திருக்கிறார் ஜெயராஜ். ஆயிரம் கதா காலட்சேபங்கள், ஆயிரம் இந்து முன்னணிக் கூட்டங்களால் செய்ய முடியாத காரியத்தை ஒரு சினிமா செய்துள்ளது. மக்களை யோசிக்க வைக்கும் ஒரு சின்ன முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. 1993ல் வெளியாகி கேரள கம்னியுஸ்டுகளிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது இந்த பைத்ருகம்.

அந்த ஊரின் பிரதான நம்பூதிரி வேத சாஸ்திரங்களில் விற்பன்னர். பெரிய மகான். தனது தரவாட்டை விட்டு வெளியேறாமல் பூஜை புனஸ்காரங்கள், நியமங்கள், ஆசார அனுஷ்டானங்கள் அனைத்தையும் தவறாமல் கடைப்பிடிக்கும் ஒரு யோகி. யாகங்களில் நம்பிக்கை கொண்டோருக்கு மட்டும் யாகங்கள் நடத்திக் கொடுப்பவர். தான் செய்யும் யாகங்களால் மந்திரங்களால் எந்தவொரு ஜீவனுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதிலும், அதன்மூலம் யாவருக்கும் நன்மை மட்டுமே உண்டாக வேண்டும் என்பதிலும் அக்கறையுள்ளவர். இந்து தத்துவ மரபுகளை அறிய விரும்பும் மேற்கத்தியர்கள் தேடிவந்து விளக்கம் கேட்கும் அளவுக்கு ஞானம் கொண்டவர். ஐயாயிரம் வருடங்களாகப் பராமரிக்கப்படும் ஹோம அக்னியைக் காத்து, தன் பார்யாள் தாழங்குடை பிடிக்க மந்திரங்கள் உச்சரித்து அக்னியைத் தொடர்பவர். வேத பாடசாலையில் வேதம் கற்றுத் தருபவர்.

அவருக்கு இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் வேதம் கற்றுக் கொடுக்கிறார். மூத்தவன் பாரம்பரிய முறைகளில் நாட்டம் இழந்து பட்டம் பெற்று, டெல்லிக்குப் போய் பத்திரிகை நிருபராகி விடுகிறான். கம்யூனிசத்தில் ஈடுபாடு ஏற்பட்டு புரட்சிவாத நாஸ்திகனாகி விடுகிறான். நாஸ்திகன் என்றாயிற்று, கம்யூனிஸ்டு என்றாயிற்று. அப்புறம் வேலை பார்க்கும் பத்திரிகை வேறு எதுவாக இருக்க முடியும்? டைம்ஸ் ஆஃப் இந்தியாதான் :)). ‘தி ஹிண்டு’ என்று காண்பித்திருந்தால் இன்னும் யதார்த்தமாக இருந்திருக்கும், போகட்டும்! இரண்டாம் மகன் அப்பாவுக்கு அடங்கிய பிள்ளையாக, உள்ளூர் கோவிலின் அர்ச்சகராகச் சேவகம் செய்தும், தன் அப்பாவின் யாக காரியங்களுக்கு உறுதுணையாக இருந்தும் வருகிறான். அப்பாமீது மிகுந்த மதிப்பும் அண்ணன்மீது பாசமும் உடைய ஒரு வெகுளி. அவனுக்கு அப்பா சொன்ன சொல்லே மந்திரம்

மூத்த மகனுக்கு டெல்லி வேலை அலுத்துப்போக அதை ஃப்ரீ-லான்சர் வேலையாக மாற்றிக்கொண்டு உள்ளூரில் இருக்கும் இந்துக்களை அறியாமையிலிருந்து மீட்க்கும் வேட்கையுடன், லட்சிய புருஷனாக, தார்மீகக் கோபம் கொண்ட இளைஞனாக, நாஸ்திகனாக, வர்க்கப் போராட்ட சகாவாக, புரட்சிக்காரனாக ஊருக்கே திரும்பி வருகிறான். உள்ளூரில் அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் ஞானஸ்நானம் பெறாமலும், கொள்கையிலூறிய மார்க்சிய மதத்துக்கு மாறாதவர்களாகவும், கோவில், குளம், மந்திரம், தந்திரம், யாகம், பூஜை, புனஸ்காரம், நம்பூதிரி, வெளிச்சப்பாடு, சோழி, ஜோசியம் ஆகியவற்றில் இன்னும் ஒரு நூலிழை நம்பிக்கையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். என்ன அநியாயம்? குறைந்தது ஒரு கத்தோலிக்கனாகவாவது ஒவ்வொருவனும் மாற வேண்டாமா? ஆகவே உணர்ச்சி வசப்பட்டு ஒரு தீர்மானத்துடன் ஊரையே புரட்டிப் போடுவது என்று வந்து சேருகிறான்.

(தொடரும் …)

பைத்ருகம் – ஓர் அறிமுகம்… பைத்ருகம் – ஒரு பார்வை – 2

14 Replies to “பைத்ருகம் – ஒரு பார்வை – 1”

 1. // பைத்ருகம் என்றால் ஆங்கிலத்தில் ஹெரிட்டேஜ் என்று பொருள். //

  தமிழில் “பாரம்பரிய சொத்து”. நா. கண்ணன் “முதுசொம்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

  அருமையாக எழுதியிருக்கிறீர்கள் விஸ்வாமித்ரா. அடுத்த பகுதியை ரொம்ப காக்கவைக்காமல் உடனடியாகப் போட வேண்டுகிறேன்.

 2. //அருமையாக எழுதியிருக்கிறீர்கள் விஸ்வாமித்ரா. அடுத்த பகுதியை ரொம்ப காக்கவைக்காமல் உடனடியாகப் போட வேண்டுகிறேன்.//

  எனக்கும் சேர்த்து ஜடாயு எழுதிவிட்டார்.

 3. அருமை !
  இந்த சினிமா டி வி டி இல் கிடைக்காதா ?
  எப்படியாவது பார்த்தாக வேண்டும் .
  தகவலுக்கு மிக நன்றி .அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
  சிரமப்பட்டு தமிழ் font இல் எழுதி உள்ளேன் .சரியாக பதிவு செய்ய முடிகிறதா பார்க்க வேண்டும்.முடியா விட்டால் மன்னிக்கவும்.

 4. ஏன் பரக்ராப்களை முழுமை செய்யாமல் விட்டுவிடுகிரிர்கள்?

  உதாரணமாக பாறா நான்கு முழுமை செய்யாமல் விடப்பெற்றிரிக்கிறது

  இதனை சரி செய்யவும். எப்பொழுது இந்த தொடர் வெளியாகும் என்ற அவாவை உண்டாக்குகிறது . முழு கட்டுரையையும் ஒரே சமயத்தில் வெளியிட்டால் என்ன?

 5. ரொம்பவும் காக்க வைக்கிறிர்கள் . ஜடாயு சொன்னபடி உடனே இதன் பாக்கியையும் வெளியிட்டுவிடவும்

 6. மிக மிக அருமையாக எழுதப்பட்டுள்ள, நடைமுறை பிரச்சினைகளை அலசுகிற, ஆர்வத்தை தூண்டுகிற நடையில் உள்ள கட்டுரை. வாழ்க விஸ்வாமித்திரா.

  தமிழ் ஹிந்துவிற்கு தரமான வாசகர்களை அதிகரிக்கும் கட்டுரைகளை எழுதுவதில் ஹரிகிருஷ்ணன், மதுரபாரதியோடு, விஸ்வாமித்திராவையும் சேர்க்கலாம்.

 7. இந்திய திரைத்துறையில் மலையாள சினிமாவுக்கென்று எப்போதும் தனி இடம் உண்டு. எனக்குத்தெரிந்தவரை மலையாள சினிமாவில் இரண்டே விதம் உண்டு.. ஒன்று மிகச்சிறந்த படங்கள்.. இல்லையெனில் மோசமான படங்கள்.. அந்த வகையில் இந்த பைத்ருக்கம் முதல்வகையில் வரும். நல்லவிதமான நேரான விமர்சனம்.. தமிழ் சினிமாவில் அறிவுஜீவி ஒளிவட்டம் வேண்டுமெனில் இந்து மதத்தை கிண்டல் செய்தால் ஒழிய கிடைக்காது. ஏதாவது ஒரு திரைப்பட விழாவாவது பூஜை செய்யாமல் அரம்பிக்கப்பட்டதுண்டா. சகுனம் பார்க்காமல் யூனிட் படப்பிடிப்புக்கு கிளம்பியதுண்டா?? இந்து மதத்தின் எல்லா நம்பிக்கையையும் பயன்படுத்திக்கொண்டு அதனை தூற்றுவதையே வேலையாகக் கொண்டவர்கள் தமிழ் சினிமா உலகத்தினர்.. குறைந்தபட்சம் மலையாள சினிமாவாவது அதுபோல் இல்லாமல் இருப்பதை நினைத்து மகிச்சி கொள்ள வேண்டியதுதான்..

  ஸ்ரீதர்

 8. என்ன அருமையாக இருக்கிறது! கட்டாயமாக திரைப்படத்தை பார்த்தே ஆக வேண்டுமென ஏங்க வைக்கிறது. மிக அருமையாக உள்ளது பைத்ருகம் குறித்த தொடர்.

 9. பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

  சந்திரமொளலீ (நீங்கள் ப்ளாக் நடத்தும் அதே சந்திரமொளலீஸ்வரரா?)

  முழுமையடயாத பாராக்களைச் சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி. இந்தப் கட்டுரைத் தொடர் முழுவதுமே கட்டுரை பாணியில் எழுதப் பட்டதல்ல. ராம நாராயணம் படங்களைச் சிலாகித்து அவை இந்து மதப் பெருமையைச் சொல்வதாக அறியாமையில் ஒரு நண்பர் ஒரு சின்ன நண்பர்களின் மின்னஞ்சல் வட்டத்தில் சொல்லப் போக அதற்கு நான் எழுதிய பதில்களே இவை. ஆக ஒரு சில தனிப்பட்டக் குறிப்புக்களை நீக்கி விட்டு இங்கு அந்தப் பதில்களை ஒருங்கே இணைத்து ஒரு கட்டுரை வடிவில் அளித்திருப்பதினால் ஒரு சில பாராக்கள் அப்படியே முழுமையடையாமல் தொங்குவது போல இருக்கும். இந்தக் கட்டுரைக்கான அனைத்து பகுதிகளையும் நான் ஏற்கனவே அனுப்பி வைத்து விட்டேன். அடுத்து புதிதாக எழுதப் போகும் கட்டுரைகளில் இது போன்ற முழுமையடையாத பாராக்களை அவசியம் தவிர்க்கிறேன்

  அன்புடன்
  விஸ்வா

 10. என் துரதிர்ஷ்டம் இப்போது தான் இதைப் பார்க்கிறேன். ஏன் இது தொடரப்படவில்லை. நவம்பர் 1 மாலை வரை தொடரப்படவில்லை என்று தெரிகிறது. மலையாள படங்கள் பற்றி ஸ்ரீதர் எழுதியது, நம் ஊராரைப்பற்றி எழுதியுள்ளது, முற்றிலும் உண்மை. நம்மிடம் ஏன் இவ்வளவு வேஷதாரித்தனம்?

  அன்புடன் வெ.சா.

 11. நன்றி, வெ.சா சார்.

  நாளை காலை (நவம்பர் – 3) இதன் அடுத்த பகுதி வெளிவரும். அவசியம் அதனை வாசித்து தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

  ஆசிரியர் குழு

 12. இல்லை விஸ்வா அய்யா அவர்களே இது வேறே சந்திரமௌலீ

  இந்த வ்யாதி உங்கள் மறுமொழியிலும் வந்து விட்டது பார்த்திர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *