தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி

அருட்திரு காளிதாஸ் சுவாமிகள் அகில இந்திய தலித் இந்து மக்கள் ஆன்மிக சங்கத்தின் தலைவர் இவருடனான பேட்டி Hinduism Today இதழில் அண்மையில் வெளிவந்தது. அதனைத் தமிழில் இங்கு அளிப்பதில் தமிழ்இந்து.காம் பெருமகிழ்ச்சி அடைகிறது.

தலித்துகள் இன்றைக்கு எதிர்கொள்ளும் சமுதாய விலக்கங்கள் என்ன?

arulthiru kalidas swamigalமுதலில் தலித் எனப்படும் மக்கள் இந்து சமுதாயத்தில் மட்டும் காணப்படும் ஒரு சமூக நிகழ்வு அல்ல. அனைத்து மதங்களிலும் அனைத்துச் சமுதாயங்களிலும் அனைத்து இனங்களிலும் வரலாறு முழுவதிலும் தலித்துகளாக்கப்பட்ட சமுதாயங்கள் உள்ளன. இது ஒரு இந்து சமுதாய நிகழ்வு எனக் கருதுவதே தவறானது. நமது முக்கியமான பிரச்சனை வறுமையாகும். நமது குழந்தைகளுக்கு இட ஒதுக்கீட்டினாலும் கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்காததற்கு ஒரு முக்கியக் காரணம் கற்க வேண்டிய வயதிலேயே அவர்கள் வேலைக்கு அனுப்பப் படுகிறார்கள். தண்ணீரும் உணவுமே வேண்டிய அளவு கிடைக்காத நிலையில் இருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு இருப்பதால் என்ன பயன்? அடிப்படை வாழ்வாதாரங்கள் சரியாக்கப் படாதவரையில் இட ஒதுக்கீட்டினால் ஓரளவுக்குத்தான் பயன் இருக்கும். அத்தகைய வாழ்வாதாரங்களை எங்கள் சமுதாயத்தில் பெற்றவர்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக முன்னேறியிருக்கிறார்கள்.

ஆனால் இந்து சமுதாயத்தில் 25 விழுக்காடு இருக்கும் எங்களுக்கு இந்தச் சமுதாயத்தின் பல துறைகளில் பிரதிநிதித்துவம் போதிய அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. எங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களும் எங்களிலிருந்து ஆட்கள் வர இயலாமையினால் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படாமலே போகின்றன. மத அடிப்படையில் பார்த்தீர்கள் என்றால் தலித்துகளுக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை இந்த நாட்டுக்குக் கொண்டு வருகின்றனர். ஆனால் இந்து அமைப்புகளில் அவ்வாறல்ல. இதனால் தலித் மக்களுக்கு சக இந்துக்கள் தங்களை குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பது போன்ற எண்ணத்தைத் தோன்ற வைக்கிறது.

சாதியம் அழிவது எமது சமுதாயம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும். ஆனால் அதுவும் கூட எங்களுக்கு வறுமையிலிருந்து மீண்டுவரப் போதுமானதல்ல. முதலில் உணவும், நீரும் உறையுளும் ஒரு மனிதனுக்குத் தேவை. அவை இருந்தால்தான் அவன் அடுத்தபடியாகக் கல்வியிலும் சமுதாய மேம்பாட்டிலும் கவனம் செலுத்த முடியும். எங்களுக்கு மட்டுமல்ல அனைத்துச் சமுதாயத்துக்கும் பல பிரச்சனைகளுக்கான அருமருந்தாகக் கல்வி அமைகிறது. ஆனால் மிகவும் அறிவுடைய தலித் சிறுவர் சிறுமியருக்கு இன்றைக்கும் கல்வி எட்டாக்கனியாகவே உள்ளது. காரணம், வறுமை மிக்க குடும்பச் சூழல் அவர்களைச் சிறுவயதிலேயே கட்டாய உழைப்புக்குத் தள்ளிவிடுகிறது.

தலித் சமுதாயம் எப்படி உருவானது? சைவத்துறவிகளில் மூன்றில் ஒருபங்கினர் இன்று தலித்துகள் என பேசப்படும் சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகத்தானே இருந்திருக்கின்றனர்?

பண்டைய காலங்களில் சாதி அமைப்பானது அடுக்கு முறையாக அமைந்திடவில்லை. இதனால் இன்றைக்குத் தாழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் சமுதாயங்களிலிருந்து பலர் அன்று மேல்நிலைக்கு வரமுடிந்தது. இதற்குத் தமிழ் இலக்கியங்களிலிருந்து மட்டுமல்ல பாரதம் முழுதிலிருந்தும் பல பண்டைய இலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் அளிக்க முடியும். சாதி அமைப்பு உறைநிலை அடைந்தது பிற்காலங்களில்தான்.

ஹிந்து தருமம் என்பது தலித் சமுதாயத்துக்கு எத்தகையதாக உள்ளது?

ஹிந்து தருமம் தலித் சமுதாயத்துக்கு மிகவும் அன்யோன்யமான ஒன்றாக உள்ளது. கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாமுக்கோ எம் மக்கள் மதம் மாறினால் கூட அவற்றை அன்னியமாகத்தான் உணருகிறார்கள். நீங்கள் மசூதிக்கோ சர்ச்சுக்கோ போகிறீர்கள். ஆனால் சிவபெருமானுடனும் கணபதியுடனும் முருகப்பெருமானுடனும்தான் வளர்ந்தீர்கள். எனவேதான் மதம் மாறிச் சென்ற பலர் அங்கே ஒட்டியிருக்க முடியாமல் தாய்மதத்துக்குத் திரும்பிவிடுகின்றனர். மேலும் மற்ற மதங்களில் தலித்துகளை நன்றாக நடத்தியதாக இல்லை என்பதும் தாய்மதம் திரும்ப மற்றொரு காரணம்.

தலித் சமுதாயத்தின் சமயச் சடங்குகள் என்ன? உங்கள் சமுதாயத்துக்கென்று தனிக் கோவில்கள் பூசாரிகள் என உண்டா?

எங்களது வழிபாட்டு முறைகள் இதர ஹிந்துக்களிலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டவை அல்ல. எமது உணவுப் பழக்கங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் கோவில் திருவிழாக்கள் ஆகிய அனைத்துமே இதர ஹிந்துக்களைப் போன்றவைத்தாம். எங்கள் சமுதாயத்துக்குள் உள்பிரிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

தீண்டாமை தீட்டு போன்ற கருத்தமைப்புகளை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

நாங்கள் செய்யும் செயல்களை இதர ஹிந்துக்கள் செய்வதில்லை என்பதால் நாங்கள் செய்துவரும் தொழில்களை தலித் தொழில்களைத் தீட்டு உண்டாக்குபவை எனச் சொல்வது மிக அநீதியான, நேர்மையற்ற விஷயமாகும். இத்தகைய முத்திரை குத்தும் வேலை மனக்கசப்பை உண்டாக்குகின்றது.

தலித் சமுதாயம் மேம்பட்டு வளர என்ன செய்யவேண்டும்?

பல தலித்துகள் முன்னேறியுள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் சமுதாயத்தின் கஷ்டப்படும் இதர சகோதரர்கள் வளர வழி செய்ய வேண்டும். அதனை அவர்கள் செய்வதில்லை. அதைச் செய்தால் தலித் சமுதாயம் மேம்பட்டு வளர்வது எளிதாகும்.

ஏன் தலித்துகள் கிறிஸ்தவத்துக்கு மாறி, பிறகு தாய்மதம் திரும்புகின்றனர்?

தலித்துகள் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு உதவுவதாகக் காண்கின்றனர் அத்துடன் கிறிஸ்தவர்கள் தலித்துகளைக் குறித்து இதர ஹிந்துக்கள் கவலைப்படுவதில்லை என்னும் பிரச்சாரத்தையும் செய்கின்றனர். இவை இரண்டுமே தவறுதான். பிற மதங்களுக்கு மாறிய தலித்துகள் எவ்விதத்திலும் நன்மை அடைவதில்லை. எனவே அண்மைக்காலங்களில் பல தலித்துகள் தாய்மதம் திரும்பியுள்ளனர். எப்படியும் போராடித்தான் ஆகவேண்டும் என்றால் தாய் மதத்துக்குள்ளேயே, தான் வளர்ந்த மதத்துக்குள்ளேயே போராடலாமே எனத் திரும்பி வருகின்றனர்.

நன்றி: ஹிந்துயிஸம் டுடே

அருட்திரு காளிதாஸ் சுவாமிகள்
அகில இந்திய தலித் இந்து மக்கள் ஆன்மிக சங்கம்
சங்கராலயா, சேத்துப்பட்டு, சென்னை – 600031

16 Replies to “தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி”

  1. தலித்துக்களாக ஆக்கப்பட்டார்கள் என்பதே உண்மை, பிராமணர்களின் ஆதிக்கம் எப்போது வழிபாட்டுமுறையில் நுழைந்ததோ, அன்று முதல் அவர்களின் பொருளாதார பாதுகாப்பிற்க்காகவும், ஆதிக்கத்தை நிலைநாட்டவும், தொழில் செய்பவர்களை வர்ண ரீதியில் பிரித்தாளும் தந்திரத்தை அமைத்தார்கள். ஆட்சியில் இருந்த‌வர்களும் கண்மூடித்தனமாக அதை ஆமோதித்து அமல்படுத்தினார்கள். வேதங்களும், மணுதர்மங்களும் இதற்க்காகவே அவர்கள் எழுதிக்கொண்டது. இன்றும் எந்த வேதபாட சாலையிலாவது ஒரு பிராமணண் அல்லாதவர் வேதம் பயில அனுமதிப்பார்கள?

    தொட்டால் வரும் தீட்டு, தொடும்போது என்ன நடக்கும் எதாவது வேதியல் மாற்றமா?

    ஒரு பிராமணனை கொன்றால் ஏதோ தோசம் (பிரம்மஹத்ஹ்தி என்று நினைக்கிறேன்)
    பிராமண பெண்ணை திருமணம் செய்தால் அது ஒரு தோசம்
    ஒரு தலித் குறுக்கே வந்தால் அது ஒரு தோசம்
    இதெல்லாம் கடவுளோ, அல்லது ரிஷிகளோ எளுதியது அல்ல, வேறு யார்?

    தங்களை தற்க்காத்துக்கொள்ள சுயநலம் படைத்த, மேல் ஜாதிக்காரர்கள் தாங்களாக எழுதிக்கொண்டது.

    இப்படி இருக்க தலித்துக்களுக்கு கிறிஸ்தவத்திலும் சால்வேசன் ஆர்மி என்ற தலித் பிரிவு தனியாக உள்ளது. இவர்களை கத்தோலிக்கர்கள் சிறிதும் மதிப்பது இல்லை. இதுதான் கிறிஸ்தவத்தின் சமதர்ம சமத்துவம்.
    ஆக தலித் சமுதாயம் மேம்பட வழி?

  2. /// தலித்துக்களாக ஆக்கப்பட்டார்கள் என்பதே உண்மை, பிராமணர்களின் ஆதிக்கம் எப்போது வழிபாட்டுமுறையில் நுழைந்ததோ, அன்று முதல் அவர்களின் பொருளாதார பாதுகாப்பிற்க்காகவும், ஆதிக்கத்தை நிலைநாட்டவும், தொழில் செய்பவர்களை வர்ண ரீதியில் பிரித்தாளும் தந்திரத்தை அமைத்தார்கள். ஆட்சியில் இருந்த‌வர்களும் கண்மூடித்தனமாக அதை ஆமோதித்து அமல்படுத்தினார்கள். ///

    இது சரியல்ல. தலித்துக்களின் அடக்குமுறை என்பது வழிபாட்டுமுறையில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தவேண்டி ஏற்படுத்தப்பட்டது என்று சொல்வது சம்பந்தமில்லாதவற்றை இணைக்க முயல்வது. வழிபாட்டுமுறையில் ஆதிக்கத்திற்கு பிராமணர்கள் முயன்றனர் என்று வைத்துக்கொண்டாலும் அதற்கு தலித்துக்கள் என்றுமே தடையாகவோ, ஒரு குறிக்கீடாகவோ இருந்திருக்க முடியாது. வழிபாட்டுமுறையை தவிர்த்து மற்றபடி பிராமணர்கள் எந்த ஒரு ஆதிக்கத்திற்கும் முயன்றதாக வரலாறு காட்டவில்லை. மேலும், மற்றபடி ஆட்சியில் இருந்தவர்கள் “கண்மூடித்தனமாக” ஆமோதித்தனர் என்பது ஆட்சியில் இருந்தவர்களை ஒரு கைப்பாவையாக உருவகிக்கும் ஒரு முயற்சி. இதற்கும் எந்தவொரு ஆதாரமும் இல்லை. இவரின் கூற்றில் பிராமண காழ்ப்பு தெரிகிறதே தவிர ஆதாரம் எதுவும் தெரியவில்லை.

    /// இன்றும் எந்த வேதபாட சாலையிலாவது ஒரு பிராமணண் அல்லாதவர் வேதம் பயில அனுமதிப்பார்கள? ///

    உண்டு. பல பாடசாலைகளில் பிராமணர் அல்லோதோர் உண்டு. மேலும் புராணங்களிலும் பல இலக்கியங்களில் வேதம் படித்தோர் என்பனர் பிராமணர்கள் அல்லர். பல இறைவர்களின் அவதாரம் பிராமணர்கள் இல்லை, ஆனால் அவர்கள் வேதம் பயின்றிருக்கின்றனர். கிருஷ்ணர் வளர்ந்த இனம் இடையர் இனம். அவர் வேதம் படித்ததை புராணங்கள் விவரமாக குறிப்பிடுகின்றன. இன்றும் திருப்பதி தேவஸ்தானம் முதலியோர் நடத்தும் பல்லான வேத பாடசாலைகளில் பிராமணர் அல்லோதோர் பலர் வேதம் பயின்று வருகின்றனர்.

    கிருத்துவ மற்றும் இந்துவிரோத சக்திகளின் ஆதாரமில்லாத அபத்தங்களை ஏற்று யாரும் முடிவெடுக்க கூடாது.

    இங்கு அன்பர் பாலாஜியின் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் இந்த உண்மைகளை தெளியப்படுத்த உதவியுள்ளன. அதற்கு அவருக்கு நன்றி

    ஜயராமன்

  3. /// அருட்திரு காளிதாஸ் சுவாமிகள்
    அகில இந்திய தலித் இந்து மக்கள் ஆன்மிக சங்கம்
    சங்கராலயா, சேத்துப்பட்டு, சென்னை – 600031 ///

    இது காஞ்சி காமகோடி மடத்தின் சென்னை முகவரி. இந்து மதத்தின் இரு பெரும் ஆன்மீக குழுக்கள் இணைந்து பணி புரிவதை இது காட்டுகிறது. இந்து மதத்தின் இந்த ஒற்றுமையே இந்து மத விரோதிகளை அதிர்ச்சியுறச்செய்கிறது. அதனாலேயே இந்த இந்து மத விரோதிகளால், இந்து மதத்தை தூற்றும் பல காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. இந்து மதத்தினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

    நன்றி

    ஜயராமன்

  4. அருட்திரு காளிதாஸ் சுவாமிகளின் நேர்கானலை வெளியிட்ட தமிழ் இந்து குழுவுக்கு நன்றி. தன்நலமற்ற தலைவர்களும், யோகிகளும் ஞானிகளும் பிறந்த இந்த பாரத பூமியில் சாதியின் பெயரால் நமக்குள் சண்டையிடுவதை நிறுத்தி அனைவரும் இணைந்து வாழ வேண்டும். நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே என்றார் பாரதியார். அது நமது மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பொருந்தும். இதுபோன்ற ஆன்மீகத்தலைவர்களின் நேர்காணல்களை வெளியிடுமாறு தமிழ் இந்து வலைத்தள நிர்வாகிகளை வேண்டுகிறேன்.

    ஸ்ரீதர்

  5. இந்துக்களின் தலைமுறையில் தீண்டாமை இருந்தது வரலாற்று உண்மைதான். ஆனால் அந்த நோயைச் சரி செய்வதற்கான முயற்சிகள் உள்ளிருந்தே நடத்தப்பட்டன என்பதும் உண்மைதான். “முட்டை வைப்பேன். முழுகோழிதான் வைப்பேன். தட்டு பீங்கானில் தாயே தயாபரியே” என்று அராஜகமாக அன்பு செய்த குணங்குடி மஸ்தான் சாஹிபையும் இந்துக்கள் ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். பக்தி இயக்கமே ஏற்றத் தாழ்வுக்கு எதிரான நிலைதான். ராமானுஜரின் ஆச்சாரியன் பிராமணர் அல்ல என்பதை உணர வேண்டும். இந்து தர்மத்தில் இரண்டறக் கலந்த பெரியோர்களான விவேகானந்தர், மகாத்மா காந்தி, பாரதியார் போன்றவர்களின் முயற்சியாலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் தீண்டாமை பெரும்பாலும் அகன்றுவிட்டது. சந்தேகம் இருப்பவர்கள் காலை நேரங்களில் மின்சார ரயிலில் பயணம் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

    சாதிக் கட்டமைப்புகள் தளர்ந்து கொண்டே வரும் போது அரசியல் அமைப்புகள்தான் அவற்றைத் தாங்கிப் பிடிக்கின்றன.

    மஹாராஷ்ட்ராவில் பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டக்கூடாதென்ற போராட்டம் வெடித்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் அம்பேத்கர் அணியினருக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.

    இன்னொரு சமயம் இந்து மதத்தின் அனைத்துப் பிரிவு பீடாதிபதிகளையும் கூட்டி “தீண்டாமை பாபகரமான செயல்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய வரலாற்றில் முக்கியமான நிகழ்வு இது. இதைச் செய்து காட்டியவர்கள் விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தினர்.

    வேதங்களைப் பொறுத்தவரை ராமகிருஷ்ண மிஷன் விடுதிகளில் ஆன்மிக சீலரான அண்ணா சுப்ரமணியம் அவர்கள் முயற்சியால் சாதி பேதமின்றி வேதம் ஓதுவிக்கப்பட்டது. சின்மயா மிஷன் போன்ற அமைப்புகளில் ஆயிரக்கணக்கான சமய நூல்களைப் படிப்பதற்கு சாதித்தடை எதுவும் இல்லை. சத்யசாய் பாபாவை வழிபடும் பக்தர்கள் உலகத்தின் அனைத்து மூலைகளிலும் இருக்கிறார்கள். அங்கே, எந்நாட்டவரும் வேதம் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ரமணாச்ரமத்தில் முதலில் விலங்குகளுக்கு உணவளித்துவிட்டுப் பிறகுதான் மனிதர்களுக்கு பரிமாறுகிறார்கள். இதைவிடச் சிறந்த நடைமுறை வேறு எங்காவது இருக்கிறதா?

    வார்த்தைகள் போதாது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருமுறை சபரிமலைக்கு போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும்.

    – ஜெய்லோகு

  6. ஐயா பாலாஜி நீங்கள் பிராமனர்கள் பற்றி மட்டும் புகார் கூறுகிறீர்கள், ஆனால் முற்காலத்தில் இரு பிறப்பாள வர்ணங்கா; அனைவருக்கும் வேத பாடம் சொல்லி தரப்பட்டது. சூத்திரர்கள் உட்பட அனைத்து வர்ணத்தாரும் சமமாக நடத்தப்பட்டன/ ர். ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒரு கடமை ஒதுக்கப்பட்டது அதன்படி பிராமனர்க்கு வேத ஒதுதல், கற்ப்பித்தல், யாகங்களை நடத்துதல் போன்ற வேலைகளும், சத்திரியர்க்கு வேதம் கற்தல், குடிகளை பாதுகாத்தல் முதலிய வேலைகளும், வைசியர்க்கு வணிகம், வேளான்மை முதலிய வேலைகளும், சூத்திரர்க்கு தொழில்கள், வேளான்மை முதலியன ஒதுக்கப்பட்டன. சூத்திரர்களின் வேலை உடல் உழைப்பு மிக்கது ஆகையால் அவர்களுக்கு வேதம் படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. யோகத்தில் கர்ம மார்க்கம் என்று உள்ளது அதன்படி தனக்கு இடப்பட்ட வேலையை செய்து மோட்சம் அடையலாம். ஔபாசனை என்று ஒரு வேத சடங்கு உள்ளது, அதை அனைத்து வருணத்திரும் தினபும் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது இதன் மூலம் சூத்திரர்களை நாம் ஒதுக்கி வைத்துவிடவில்லை என்பது நிரூபனம் ஆகிறது. விஷ்னு சகஸ்ரநாமத்தில் பிராமனர்க்கு வேதத்தின் கருத்துகளும், சத்திரியர்க்கு போரில் வெற்றியும், வைசியருக்கு தனமும் , சூத்திரர்க்கு சுகமும் கிடைக்கவேண்டும் என்று கோரப்படுகிறது. தீண்டாமை என்பது ஒரு இடையில் ஏற்ப்பட்ட ஒரு பழக்கம், அது கண்டிக்க தக்கது ஒழிக்கப்படவேண்டியதும் கூட.

    நன்றி
    ராம்குமரன்

  7. திண்ணியத்தில் 2 தாழ்த்தப்பட்டோரை மேல் சாதியினர் மலம் தின்ன வைத்தனர்..காரணம் அவர்கள் அந்த ஊர்த்தலைவரைக் கேள்வி கேட்டதால்..

    மலம் தின்ன வைத்த தலைவ்ர் தி.மு.க் வைச் சேர்ந்தவர்..

    இதைப் பற்றி ஞாநி விவரமாக எழுதியதைப் படித்திருக்கிறீர்களா..?

    யாழ்வாணன்.

  8. மிகவும் நன்றியும் கடமையும் பட்டுள்ளேன்,

    மறுமொழிகள் அருமையாக அய்யத்தை தீர்ப்பதாக இருந்தாலும் முழுமையான விடையோ அல்லது தீர்க்கமான வழியோ சொல்லப்பட வில்லை, பிராமாணத்தை மட்டுமல்ல மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்பவர்கள் எல்லோரையும் தான். பிராமாணத்தை முன் வைக்கும் போது அலறி அடித்து பூசி மெழுகி பதில் எழுதப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது.
    நான் கேட்பது சென்னை சமதர்மத்தை பற்றியது அல்ல. இன்றளவும் தமிழகத்தின் கிராமங்களில் அல்லல் பட்டும் கோவில்களில் வழிபாடு செய்யமுடியாமல் இருந்துவரும் கீழ்மட்ட வர்ணத்தைப்பற்றி. அல்லது இவர்கள் ராம்குமரன் கூற்றுபோல் \\\விஷ்னு சகஸ்ரநாமத்தில் பிராமனர்க்கு வேதத்தின் கருத்துகளும், சத்திரியர்க்கு போரில் வெற்றியும், வைசியருக்கு தனமும் , சூத்திரர்க்கு சுகமும் கிடைக்கவேண்டும் என்று கோரப்படுகிறது. தீண்டாமை என்பது ஒரு இடையில் ஏற்ப்பட்ட ஒரு பழக்கம், அது கண்டிக்க தக்கது ஒழிக்கப்படவேண்டியதும் கூட//// ஒவ்வொருவருக்கும் ஒன்று கோரப்பட்டால் தீண்டாமை தானாக தலைதூக்கிவிடும், மேலும் அப்படியனால் விஷ்னு சகஸ்ரநாமம் தீண்டாமையை போதிக்கிறது என்றுதானே அர்த்தம்?
    கன்யாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையன் சன்னதியில் பக்தர்கள் பூசாரிகளால் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதே ஒரு சாட்சி இன்னும் நாம் தீண்டாமையில் இருந்து மீழ்வில்லை என்பது. (ஏய் ஒதுங்குங்கோ,ஒதுங்குங்கோ. ஏய் யாரும்மா நீ தள்ளினில்லும்மா சாமி வாராருல்லே எங்கிருந்துய்யா வாரே நீ)

    தொட்டால் வரும் தீட்டு, தொடும்போது என்ன நடக்கும் எதாவது வேதியல் மாற்றமா?

    விளக்கம் தரமுடியுமா?
    சிவ தொண்டன் பாலாஜி….

  9. பாலாஜி,

    நீங்கள் சொல்வதும் உண்மைதான். ஜெய்லோகு போன்றவர்கள் சொல்வதும் உண்மைதான்.

    பழைய இந்து சமுதாயத்தில் தீண்டாமை இருந்ததோ இல்லையோ, ஜாதி பாகுபாடுகள் இருந்ததும் அதே சமயம் அதை நீக்க முனைந்தவர்களின் முயற்சிகள் இருந்ததும் உண்மைதான். அதே போல ஜாதிகள் கீழ் மேல் என்று அடிக்கடி மாறியதும் உண்மைதான். மேல் ஜாதி என்று கருதப்பட்ட ஜாதிகள் கீழ் ஜாதிகள் ஆனதும், கீழ் ஜாதிகளாக கருதப்பட்டவை மேல் ஜாதிகளாக ஆனதும் – அப்படி மேலே சென்றவுடன் அந்த ஜாதிகள் கீழே சென்ற ஜாதிகளை தாழ்வாக கருதியதும், நடத்தியதும் சரித்திரத்தில், நாட்டார் வழக்குகளில், கதைகளில் காணக்கிடைக்கின்றன.

    இப்பிரச்சினை இந்து சமுதாயத்தில் மட்டுமல்ல, உலகமெங்கும் ஒரு காலகட்டத்தில் இருந்தது உண்மைதான். இங்கே அது மதத்தின் அங்கமாக ஒரு கட்டத்தில் ஆகி, அப்படியே நிலை பெற்றுவிட்டது. மற்ற சமுதாயங்களில், சமுதாய வழக்கமாக நிலைபெற்றுவிட்டது. இன்றும் இஸ்லாமிய சமூகங்களில் ஜாதி ஒழிந்தபாடில்லை. முதன் முதலாக இஸ்லாம் வந்திறங்கிய சிந்து பிரதேசத்தில் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் மேல் ஜாதி முஸ்லீம், கீழ் ஜாதி முஸ்லீம் வித்தியாசம் இருக்கிறது. அஷ்ரப் – அஜ்லஃப் – அர்சால் வேற்றுமை வட இந்தியாவில் வலுவாக இன்னுமிருக்கிறது.

    ஆனால், இதையெல்லாம் சொல்லி இந்து சமுதாயத்தில் இதெல்லாம் இல்லவே இல்லை என்றோ, இன்று இல்லை அல்லது இதற்கெல்லாம் அந்நிய மதத்தவர் சமுதாயங்கள் தாம் காரணம் என்று சொல்லி நமது பொறுப்பை கைகழுவுவதும் தவறு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதில் நாம் இன்று செய்ய வேண்டியது என்ன? – குறை சொல்லலாம், நிந்திக்கலாம். ஆனால், அத்துடன் நின்றுவிடாமல் அதனுடன் கூடவே என்ன செய்து இதற்கு தீர்வு காண்பது என்றும் யோசிக்கவேண்டும். நாம் தீர்வு காண்கிறோமோ இல்லையோ இன்றைய பொருளாதார முன்னேற்றமும், நகரமயமாதல், உலகமயமாதல், சடங்குகள் நீங்கிய ஆன்மீகத்தின் பரவல் ஆகியவை இயல்பாகவே இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டன என்றே தோன்றுகிறது.

    பல புராதன ஆலயங்கள் கவனிப்பாரின்றி கிடக்கின்றன. அவற்றை அப்பகுதியில் இருக்கும் தலித்துகளிடமும், ஏனைய சமூகங்களிடமும் கொடுத்தால் நல்லபடியாய் பார்த்துக் கொள்வார்கள். பல ஆலயங்களில் பாரம்பரிய அர்ச்சகர்களுக்கு இந்து மதத்தைப் பற்றி, தத்துவங்களைப் பற்றி, எண்ணற்ற ஆன்மீகப் பெரியோர்களைப் பற்றி எதுவுமே தெரியாது. இது போன்ற ஆலயங்களில், ஆன்மீகப்பிடிப்புள்ள அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கலாம். இதெல்லாம் சமுதாயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

    கோவில் வழிபாட்டு உரிமைகளில் ஜாதிகளுக்குள் பிரச்சினை ஏற்படும் போது இந்து அமைப்புகள் அங்கே சென்று அதற்கு தீர்வுகாண முயலவேண்டும். ஜாதி வேற்றுமை பாராட்டுவது தவறு என்ற பிரச்சாரத்தை கோவில்களிலிருந்து துவக்கிட வேண்டும். முதல் கட்டமாக சில முக்கிய, பிரபல கோவில்களிலாவது தலித்துகளை அர்ச்சகர்களாக்க முயற்சி எடுக்க வேண்டும்.

    நம் அளவில் எவ்வித ஜாதி வேற்றுமையையும் இன்று பார்க்க முடிவதில்லை. திருமண சமயத்தில் தான் பலருக்கு ஜாதி தேவையாயிருக்கிறது. அதுவும் கூட கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது. இதுவே ஆரோக்கியமானதும் கூட. இது போன்ற ஒரு விஷயம் கோவில்களிலும் வர வேண்டும். ஏற்கெனவே இது மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. பல பாரம்பரிய பிராம்மண குடும்பங்களில் உள்ளவர்கள் கூட மாதா அமிர்ந்தானந்தமயி போன்றவர்களை ஏற்கின்றனர். எனவே இந்த மாற்றம் வந்துவிடும் என்றே தோன்றுகிறது. நாம் இதை துரிதப்படுத்தலாம், மேலே கண்ட முயற்சிகளை எடுத்தால்.

  10. ” வேதங்களும், மணுதர்மங்களும் இதற்க்காகவே அவர்கள் எழுதிக்கொண்டது. ”

    Veda Vyasa himself was not a Brahmin. And Vedas were never authored first of all. They were not written, just realized !

  11. அருமையான பதிப்பு மற்றும் மறுமொழிகள். சகோதரர்கள் பாலாஜி, ராஜா, நேசகுமார், யாழ்வாணன், ராம்குமார், ஸ்ரீதர், ஜெய்லோகு, ஜயராமன் மற்றும் அனைவருக்கும் ஒரு ஜெய்!

    உண்மை பாலாஜி அவர்களே, வர்ணாஸ்ரமத்தை சரியாக புரியாதவர், வேதத்தை (க்றிஸ்தவர் தம் புத்தகத்தை வேதமென்று அழைக்கிறார், அது வேதமல்ல, வேதமென்பது நான்கே நான்கு – ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களே அவை) சரியாகப் புரியாதவர் ப்ராமண ஜாதியிலும் உண்டு. சமுதாய சீர்கேட்டில் ஒரு பங்கு ப்ராமணருக்கும் உண்டு. ஆனால் ஹிந்து மதம் என்பது இத்தகைய குழப்பங்களைத் தோற்றுவிக்கவில்லை. அது இவர்கள் (மேல் ஜாதியினர் (?!), அரசியல்வாதிகள், சந்தர்பவாதிகள்) உருவாக்கிக் கொண்டது.

    வர்ணாஸ்ரமம் என்பது ஒரு Open Source அல்லது அதற்கு இணையானது. இதை சரியாக புரிந்து கொள்ளாதவர் தான் அதிகம்.

  12. அருமையான நேர்காணல். வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

    // முதல் கட்டமாக சில முக்கிய, பிரபல கோவில்களிலாவது தலித்துகளை அர்ச்சகர்களாக்க முயற்சி எடுக்க வேண்டும். //

    இதைப் பாருங்க –
    பீகாரின் தலித் அர்ச்சகர்கள்: ஒரு புதிய புனித அத்தியாயம் :
    https://jataayu.blogspot.com/2007/10/blog-post_10.html

  13. தீண்டாமை என்பது இப்போதும் கடைபிடிக்கபடுகிறது. எஙகே என்கிறீர்களா? சமதர்ம சோஷலிச சமுதாயம் படைப்போம் என்று வெற்று குரல் கொடுக்கும் கட்சிகளிடையேதான். 1000 வருடங்களாய் தாழ்த்தப்பட்டோர் தலை நிமிரவேண்டும் என்றும் பிராமணர்கள்தான் தீண்டாமையை கட்டிக் காப்பதாகவும் கதை விட்டுக் கொண்டிருக்கும் திராவிடகும்பல்களில் தலித் தலைவர்கள் உண்டா? சாதிக் கலவரஙளுக்கு காரணம் பிராமணர்களா? நண்பர் பாலாஜி இந்த‌ விஷயங்களை நடுநிலையுடன் அணுக வேண்டும்.

  14. நேசக்குமார் அவர்களுடைய பதில் சாதி என்ற பிரச்சினையை தீர்க்க விரும்புபவர்களுக்கான கையேடு.

    இந்து மதத் தலைவர்கள் கையில் எப்போதும் இருக்கவேண்டிய செயல்முறை விளக்கம்.

    இப்பிரச்சினை தீரத் தேவையான வழிமுறை மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

  15. IT IS INDEED SADDENING TO SEE THE STATE OF AFFAIRS. AS THE GOVERNING POWERS WILL NOT DO ANYTHING IN THESE MATTERS FOR A VARIETY OF REASONS IT IS UPTO US TO DO SOMETHING CONCERETE TO SEND THE MESSASGE THAT THE MAJORITY COMMUNITY , SO CALLED HINDUS , DO NOT LIKE THE ATTITUDE OF THE MEDIA, BOTH PRINT AND ELECTRONIC.

    STOP SUBSCRIBING TO THE MAGAZINES WHICH ARE CHEAP AND PUBLISH IN THE NAME OF SECULARISM AND PROGRESSIVENESS/RATIONALSIM ANYTHING AGAINST HINDUS/HINDUISM. DO NOT WATCH THOSE PROGRAMMES EVEN IF ONE IS CURIOUS TO KNOW WHAT IT IS ABOUT AS THEY ARE SURE TO HAVE CONTENTS AGAINST HINDUS/HINDUSIM. TRY TO AVOID BUYING THE PRODUCTS OF THE ESTABLSHMENTS WHO SPONSOR SUCH PROGRAMMES. PLENTY OF OTHER ALTERNATIVE PRODUCTS ARE AVAILABLE. AFTER ALL THE COST OF SUCH ADVERTISEMENTS ARE BULT IN THE PRICE OF SUCH PRODUCTS WHOSE MANUFACTURERS DO THE ANTI HINDU CAMPAIGN INDIRECTLY. IT IS IMPORTANT AND NECESSARY TO EDUCATE THE FAMILY MEMBERS WHOSE COOPERATION IS NEEDED TO ACHIEVE THIS. WE SHALL SUCCEED.
    PRANAMS TO ALL

  16. காளிதாஸ் சுவாமிகள்
    அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *