சாமியே சரணம் ஐயப்பா!

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற புகழுடைய இந்த பூமிக்கு கிடைத்த கலியுக தெய்வம் ஐயப்பன். நம்பியவர்களுக்கெல்லாம் நல்வாழ்வை அள்ளித்தரும் வரதன். ஐயப்பனை வார்த்தையால் விளக்கிச் சொல்ல முடியாது – ஐயப்ப பக்தியை அனுபவித்தாலே புரியும்.

தமிழகமெங்கும், தர்மசாஸ்தா, அய்யனார், பதினெட்டாம்படி கருப்பு என்று வெவ்வேறு விதமாக கொண்டாடப்பட்டாலும், சாஸ்தாவுக்கு உரிய தலம் கேரளாவில்தான் அமைந்திருக்கிறது. பம்பையில் நீராடி பெரிய பாதையில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்று ஒவ்வொரு ஐயப்ப பக்தருக்கும் ஆசை இருக்கும். மகர ஜோதியை தரிசிப்பது மிக முக்கியமானது.

iyappa1மணிகண்டனுக்கு எல்லா ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் வித்தியாசம் பாராட்டாமல் பக்தர்களாக இருமுடி ஏந்தி வருகிறார்கள். கரையாத மனங்களிலும் பக்திரசத்தை பெருகச் செய்து கரைத்து ஆட்கொண்டு விடுகிறான் ஐயப்பன். தன்னுடைய பெயரையே தன் பக்தர்களுக்கும் கொடுத்த ஒரே தெய்வம் ஐயப்பன் தான்.

தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்காக சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளும் விரதங்கள் ஒரு மண்டல காலத்துக்குள் அவர்களை பக்தியில் திளைத்துக் கரைகண்ட முனிவர்களுக்கு ஈடாகவே ஆக்கிவிடுகிறது. சிலர் மாதந்தோறுமே விரதம் இருந்து ஐயப்ப தரிசனம் செய்வது உண்டு. ஐயப்ப பக்தியில் காணப்படும் சில விசேஷ அம்சங்கள் நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகின்றன.

சபரி மலைக்கு மகர ஜோதி தரிசிக்கச் செல்லும் பக்தர், முதலில் மாலை அணிந்து கொள்கிறார். ஹரிஹர சுதனான ஐயப்பனுக்காக அணியும் இந்த மாலை பரமசிவனுக்கான ருத்ராட்சமாகவோ, மகாவிஷ்ணுவுக்கு உகந்த துளசி மாலையாகவோ இருக்கலாம். மாலை அணிந்த பின் என்ன ஆச்சரியம்! அந்த பக்தரின் கண்முன் தென்படுவது அத்தனையும் ஐயப்ப ‘சாமி’யாகவே ஆகிவிடுகிறது. மாலை போட்டுக்கொண்டவர் பொருளாதார ரீதியாகவும் வயதிலும் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் அவரையும் மற்றவர்கள் ‘சாமி, சாமி’ என்று மரியாதையாக அழைக்கிறார்கள். எல்லாமே அந்தக் கடவுள் வசிக்கும் இடம் என்று இதைவிட எளிதாக காட்ட ஓர் வழியும் உண்டோ!

மாலை போட்டுக் கொண்டவர் சிந்தனை, சொல், செயல் எல்லாவற்றிலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இவ்வாறு ஒரு மண்டல காலம், அதாவது நாற்பது நாட்கள், ஒருவர் உண்மையிலேயே இருப்பாரானால் அவர் இயல்பாகவே இறைச் சிந்தனையும் ஒழுக்கமும் கொண்டவராக மாறிவிடுவார். தற்காலத்தில் ஒரு வாரம், இரண்டு வாரம் என்றெல்லாம் விரதமிருந்து செல்கிறார்கள். கேட்டால் ‘அந்த வழியில் போகத்தான் 40 நாள் விரதம்’ என்று சொல்லிவிடுகிறார்கள். விரதம் என்பது தவமும்கூட. அந்தத் தவம் நம்மை மேம்பட்ட மனிதர்களாக்க வேண்டும். அவ்வாறில்லாமல் மலையிலிருந்து திரும்பிய உடனே நாமும் நம் பழைய வழிகளுக்குச் சென்றுவிடுவோமானால் அந்த விரதம் நம்மை மாற்றவில்லை, நம்முள் இருக்கும் இறைத்தன்மையை நாம் கண்டடையவில்லை என்று பொருள்.

இந்திய ஆன்மீக சிந்தனையில், சைவமும் வைணவமும் இரு பெரும் நதிகளாகப் பொங்கிப் பிரவகிக்கின்றன. ஒரே இறைவனை அதாவது பிரம்மத்தை சிவமயமாகவும், விஷ்ணு மயமாகவும் இரு வண்ணங்களில் நமது ஆன்மீக முறைகள் சித்தரிக்கின்றன. இந்த இரு பெரும் நதிகளின் சங்கமமாக ஐயப்பன் இருக்கிறான். சைவ வைணவ பக்தியை இணைய வைத்து, ஆன்மீக முழுமையை ஏற்படுத்துகிற தெய்வம் ஐயப்பன்தான்.

பகவான் ஐயப்பனின் அவதாரம், ஸ்ரீமத் பாகவதத்தில் எட்டாவது காண்டத்தில், பரம சிவன், மோஹினி அவதாரத்தில் இருக்கும் மகா விஷ்ணுவைப் பார்த்து மயங்குவதில் தொடங்குகிறது. இப்படி பரமசிவனுக்கும் மோஹினிக்கும் பிறந்த குமாரன் தர்ம சாஸ்தா. தர்ம சாஸ்தாவின் அவதாரம்தான் மணிகண்டன். மகிஷாசுரனின் சகோதரியான மகிஷியை அழிக்க இந்த மண்ணில் வந்து சாஸ்தா ஐயப்பனாக அவதரித்தார். தர்ம சாஸ்தாவுக்குப் பூரணை, புஷ்கலை என்று இரண்டு மனைவியர். ஆனால் ஐயப்பனுக்கு மனைவியர் இல்லை. எப்படி ராமன் ஏக பத்தினி விரதனாகவும், கிருஷ்ணன் பகுபத்னி பாவத்தையும் வெளிப்படுத்துகிறார்களோ, அதே போலவே தர்ம சாஸ்தாவும், ஐயப்பனும் இருக்கிறார்கள். இதனாலேயே ஐயப்ப பக்தர்கள், விரத காலத்தில் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்கிற கட்டுப் பாடுகள் இருக்கின்றன.

பகவான் கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையைப் போல, சாஸ்தாவின் அவதாரமான ஐயப்பன், தன்னை வளர்த்த தந்தையான பந்தள நாட்டு அரசனுக்கு, மோக்ஷத்தை அடையும் விதமாக உபதேசித்தவைகள் “பூதநாத கீதை” என்ற பெயருடன் விளங்குகிறது. பக்தி மார்க்கம் மட்டும் அல்லாமல், யோக மார்க்கத்திலும் ஐயப்பனுக்கு தொடர்பு உண்டு. பகவான் ஐயப்பன் அமர்ந்திருக்கும் நிலைக்கு யோகத்தில் என்றும் இளமையை தக்க வைக்கக் கூடிய ஆசன முறை என்று கூறுவர்.

நமது இந்து மத ஆன்மீகத்தில், பக்தியை காதலாக கொள்ளுவது புதிதல்ல. கண்ணனுக்கு ஆண்டாளைப் போல, ஐயப்பனைக் காதலித்த பெண் உண்டு. ஐயப்பனுக்கு தற்காப்பு, போர் கலைகள் கற்றுக் கொடுத்த குருவிற்கு லீலா என்ற பெயருடன் ஒரு மகள் இருந்தாள். சிறு குழந்தையாக இருந்த போதிருந்து ஐயப்பன் மீது காதலும் பக்தியும் கொண்டிருந்தாள். ஆனால் நித்ய பிரம்மச்சாரியாக இருக்க நினைத்த ஐயப்பன் அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளவில்லை. என்றைக்கு கன்னிச்சாமியாக (முதல் முறை வரும் ஐயப்ப பக்தர்) ஒருவர் கூட வரவில்லையோ அன்று திருமணம் செய்வதாக ஐயப்பன் வாக்கு கொடுத்ததாகவும், அதன் பின், அந்த பெண் சபரிமலையிலேயே மாளிகைப் புறத்து அம்மனாக குடி கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

ayyappa2நமது ஆன்மீகத்தில், பதினெட்டு என்னும் எண் பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. பதினெட்டுப் புராணங்கள், பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள், மகா பாரதத்தில் பதினெட்டு பர்வங்கள் என்று பதினெட்டு முக்கிய இடம் பெற்றுள்ளது. ஐயப்ப வழிபாட்டிலும் தான். பதினெட்டுப் படி பூஜை என்பது மிக முக்கியம். பக்தர்கள் விரதமிருந்து நெய் விளக்கேற்றி, பயபக்தியுடன் இந்த படிபூஜை செய்வார்கள்.

அன்னதானம் செய்வதும் ஐயப்ப பூஜையின் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐயப்பனை ‘அன்ன தானப் பிரபுவே’ என்று அழைக்கின்றனர். இந்த ஐயப்ப வழிபாட்டினை, தானாகவே செய்வது வழக்கமில்லை. ஒரு குருவை தெரிந்தெடுத்துக் கொண்டு, அவரது வழிகாட்டுதலின் பேரில்தான் மேற்கொள்ள வேண்டும். அந்த குருசாமியையும், ஐயப்பனாகவே நினைக்க வேண்டும். இப்படி ஹிந்து தரும ஆன்மீகத்தின் அடிப்படைகள் அத்தனையும், ஐயப்ப வழிபாட்டில் மிக சுலபமாக அமைந்திருக்கின்றன.

யேசுதாசின் ஹரிவராசனம் பாடலை ஒருமுறையாவது கேட்டுப் பாருங்கள். கான கந்தர்வனான யேசுதாஸ் சிறந்த ஐயப்ப பக்தரும் கூட. மாத்ரு பூமி இணைய பக்கத்தில் வெளிவந்த யேசுதாசின் பேட்டியில் இவ்வாறு சொல்கிறார் “சுவாமிப் பாடல்களைப் பாடுகின்ற ஒரு சாதாரண சன்னிதானப் பாடகன்தான் நான். எனது கைகளில் ஜெபமாலை இல்லை. இருப்பதோ மந்திர சுருதி சேர்க்கும் தம்புரு மட்டுமே. பத்மராக கீதம் பாடி, அவனது திருப்பாதங்களில் படிந்து கிடக்கும் துளசிப்பூக்களாகவேண்டும் என்ற ஆசைப்படும் ஆயிரக்கணக்கான பக்தர்களில் ஒருவன் மட்டுமே நான். சங்கீதம் என்னும் ஊடகத்தின் வழியாக நான் சமூகத்திடம் தொடர்பு கொண்டுள்ளேன். அந்நிலையில் என்னால் இயன்றதையெல்லாம் செய்திருப்பதாகக் கருதுகின்றேன். ஓர் அனுஷ்டானம்போல் ஆண்டுதோறும் புதுப்புதுப் பாடல்களைப் பாடுவதும் ஒருவிதமான ஐயப்பசேவை என்றே எண்ணுகின்றேன்”.

3 Replies to “சாமியே சரணம் ஐயப்பா!”

 1. சுவாமியே சரணம் ஐய்யப்பா!

  இருள்வினை நீங்கும், எம‌னையும் வெல்ல‌லாம்
  நின் திருவ‌டி ச‌ர‌ண‌டைந்தால்.

  \\\பத்மராக கீதம் பாடி, அவனது திருப்பாதங்களில் படிந்து கிடக்கும் துளசிப்பூக்களாகவேண்டும்///

  அடியேனுக்கும் அதுவே அவா.

  சுவாமியே சரணம் ஐய்யப்பா!
  சுவாமியே சரணம் ஐய்யப்பா!
  சுவாமியே சரணம் ஐய்யப்பா!

 2. சுவாமியே சரணம் ஐயப்பா. நின் சன்னதி இன்பமே மெய்யப்பா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *