இவரை மறக்கலாமா?

Swami Vivekanandaஇந்திய அரசு ஜனவரி 12ஐ தேசிய இளைஞர் தினமாக அறிவித்திருப்பது யாருக்காவது நினைவிலிருக்கிறதா என்று தெரியவில்லை, இந்திய அரசு உட்பட. 1863ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகமாக விளங்கிய வீரத்துறவி விவேகானந்தர் பிறந்தார். அவருடைய சொல்லும் சிந்தனைகளும் ஒரு சூறாவளித் தாக்கத்தை மானுட குலத்தில் ஏற்படுத்தின. ஆனால் இப்போதிருக்கும் ‘மதச்சார்பற்ற அரசியல்’ விவேகானந்தரை மறப்பதில் லாபம் காண்கிறது. என் கண்ணில் பட்ட நாட்காட்டிகளில்கூட விவேகானந்தர் பிறந்த தினம், அல்லது தேசிய இளைஞர் தினம் என்ற குறிப்பு இல்லை. இளைஞர் தினம் என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் வாட்டிகன் கத்தோலிக்க இளைஞர்களுக்காக அறிவித்த பன்னாட்டு இளைஞர் தினம் கிடைக்கலாம். ஐ.நா. சபை ஆகஸ்டு 12ஐப் பன்னாட்டு இளைஞர் தினமாக அறிவித்தது கிடைக்கலாம். ஆனால், பாரத தேசத்தை உலக அரங்கில் தலைநிமிர்ந்து பீடுநடை போடச் செய்த விவேகானந்தரைப் பற்றி எதுவும் கிடைக்கவில்லை.

எந்தச் சினிமா நடிகரோ நடிகையோ வந்து விவேகானந்தரைப் பற்றித் தமது மேலான கருத்துக்களை வாரி வழங்க இயலாதென்பதால் டி.வி. நிகழ்ச்சிகளும் கண்ணில் படவில்லை.

நாம் மறந்துவிட்டோம். நமக்கு நல்லது செய்பவர்களைச் சுத்தமாக மறந்து விடுகிறோம். நமக்குத் தீமைசெய்வதையே தமது முழுநேரப் பணியாகக் கொண்டு, அதன்மூலம் சம்பாதிக்கிறவர்களை நாம் விழுந்து விழுந்து கொண்டாடுகிறோம்.

தமிழ் இந்துவால் எப்படி மறக்க முடியும்? இந்த தேசத்தின் வரலாறு, கலாசாரம், வேதாந்தம், சித்தாந்தம், இலக்கியம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவரும், இசையிலும் கவிதையிலும் தேர்ந்தவரும், இந்த தேசத்து மக்கள் தாழ்ந்து அடிமைத்தனத்தில் கிடக்கும்வரை தனக்கு மோட்சம் கிடைத்தாலும் வேண்டாம் என்று கூறியவருமான அந்த இணையற்ற மகானை எப்படி மறக்க முடியும்!

விவேகானந்தர் 1891ல் ஆல்வார் நகர இளைஞர்களுடன் பேசும்போது கூறினார்:

“நுண்மையாகக் கற்றுக்கொள்ளுங்கள். படியுங்கள், உழையுங்கள் – சரியான நேரம் வரும்போது நமது வரலாற்றை அறிவியல் பூர்வமாக எழுதலாம். பாரதத்தின் வரலாறு இன்று குழம்பிக் கிடக்கிறது. காலவரிசைப்படிச் சரியாகச் சொல்லப்படவில்லை. நமது வீழ்ச்சியைப் பற்றியே பேசும் ஆங்கில எழுத்தாளர்களால் எழுதப்பட்ட வரலாறு நம் மனதை வலுவிழக்கச் செய்வதாகத்தான் இருக்கும். நமது பழக்கவழக்கங்களையும், சமயத்தையும், தத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியாத அந்நியர்கள் எப்படி மெய்யான, நடுவுநிலைமையான வரலாற்றை எழுதமுடியும்?”

ஆனால், இந்தியர்களே கற்றுத் தேர்ந்து இந்திய வரலாற்றை எழுதுகிற நிலைமை வந்தபோது முழுவதுமாக மேனாட்டுக் கல்வியால் மூளை மழுங்கிப் போய்விட்டனர் என்று தோன்றுகிறது. இந்தியம், இந்துமதம் எல்லாவற்றையும் கீழே போட்டுத் தரையில் மிதிப்பதுதான் சரித்திர மறுவாசிப்பு என்கிற முற்றடிமை நிலைக்குப் போய்விட்டார்கள். அப்படி எழுதுகிறவர்களுக்குத்தான் பன்னாட்டு விருதுகள் தேடி வருகின்றன. உண்மை பேசுகிறவர்கள் அவமதிக்கப் படுகிறார்கள்.

விவேகானந்தர் எப்படிப்பட்டவர் என்பதைச் சில சம்பவங்கள் வழியே இந்த நல்ல நாளில் நினைவு கூருவோம்:

சொல்லும் செயலும் மாறுபடாத சன்னியாசி

ஆகஸ்ட் 1888. சுவாமி ஆக்ராவிலிருந்து நடந்தே பிருந்தாவனத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பிருந்தாவனம் வரப்போகிறது. ஒரு மனிதர் புகையிலையை ‘சில்லம்’ எனப்படும் மண்ணாற் செய்த புகைபிடிப்பானில் அடைத்துப் பிடிப்பதைப் பார்க்கிறார். (அந்தச் சமயத்தில் புகைபிடிப்பதைப் பற்றிய இத்தனை விழிப்புணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. எல்லா வட இந்தியக் குடும்பங்களும் ஹூக்கா, சில்லம் அல்லது பைப் இவற்றிலே புகையிலையை அடைத்துப் புகைப்பது மிகச் சாதாரணமாக இருந்தது புத்தகங்களில் தெரியவருகிறது. ஆங்கிலேயர்கள் விருந்துக்குப் பின் பெண்களானால் காப்பி குடிக்கவும், ஆண்களானால் ‘புகைக்கும் அறை’க்கும் செல்வார்கள் என்று அக்காலத்தியப் புதினங்கள் பேசுகின்றன.)

நடந்து களைத்த தனக்கு ஒரு இழுப்பு நல்லது செய்யும் என நினைக்கிறார். “அதைக் கொடுப்பீர்களானால், ஒரு முறை புகையை இழுத்துவிட்டுத் தருகிறேன்” என்றார் துறவி. சில்லம் வைத்திருந்தவர் பின்னுக்கிழுத்துக் கொள்கிறார். “நான் மாட்டேன். இதைக் கொடுப்பதன்மூலம் உங்களை நான் அசுத்தப் படுத்திவிடுவேன். நான் ஒரு தெருக்கூட்டும் தொழிலாளி” என்றார். சுவாமி அங்கிருந்து நகர்ந்தார்.

“என்ன! நான் ஒரு சன்னியாசி. சாதி, குடும்பம், கவுரவம் என்னும் எண்ணங்களைத் துறந்தவன். இருந்தாலும் நான் ‘தோட்டி’ என்றதும் தயங்கினேன். என்னால் அந்தக் குழாயில் புகைபிடிக்க முடியவில்லை. நெடுங்காலப் பழக்கத்தின் அடிமைத்தனம்தான் என்ன!” இந்த எண்ணம் அவரைத் துன்புறுத்தியது.

திரும்பி வந்து அவரருகிலேயே அமர்ந்துகொண்டார். “சகோதரா! ஒரு குழாய் புகையிலை எனக்குக் கொடு” என்றார். “ஐயா, நீங்களோ துறவி. நானோ தீண்டத்தகாதவன்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார் அந்தத் துப்புரவுத் தொழிலாளி. சுவாமியா அதைக் கேட்பவர், விடவேயில்லை.

நெடுநாட்களுக்குப் பின் இதை கிரிஷ்சந்திர கோஷ் என்ற நண்பருக்குச் சொன்னபோது அவர் சொன்னார் “நீ புகையிலைக்கு அடிமை. ஆகவே ஒரு தோட்டியிடம் கெஞ்சிக் கூத்தாடிப் புகைபிடித்தாய்”. “இல்லை கிரீஷ், என்னை நான் சோதித்துக்கொள்ள விரும்பினேன். சன்னியாசத்துக்குப் பின் ஒருவன் தன்னைத் தானே ‘நான் நிறத்துக்கும் சாதிக்கும் அப்பால் தாண்டிப் போய்விட்டேனா?’ என்று சோதித்துக்கொள்வது அவசியம். சன்னியாசத்தின் உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பது கடினம்: சொற்களுக்கும் செயலுக்கும் நடுவே மாறுபாடு இருக்கக் கூடாது” என்றார்.

பின்னொருமுறை ஒரு சீடரிடம் பேசிக்கொண்டிருந்த போது சுவாமி சொன்னார்: “சன்னியாசத்தின் லட்சியங்களைக் கடைப்பிடிப்பது எளிதென்று நினைக்கிறாயா மகனே? வாழ்வில் இதைவிடக் கடினப் பாதை வேறெதுவும் இல்லை. சிறிது வழுக்கினாலும் அதல பாதாளத்தில் விழுவாய். அந்தச் (தோட்டியிடம் புகைபிடித்த) சம்பவம் ‘யாரையும் வெறுக்காதே, எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தாம்’ என்ற பெரிய பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தது”

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

என்பது உண்மையிலேயே துறவுநெறி பூண்டு, அதில் நிலைபெற்றோருக்கே இயல்வதாக இருக்கிறது. மற்ற எல்லாரும் ஏதோ ஒரு வகையில் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம் அல்லவா?

இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்து வாரி வழங்கிய அந்த வள்ளலுக்குத் தோட்டியும் ஒன்றே, கோடீஸ்வரனும் ஒன்றே.

ராக்ஃபெல்லரின் முதல் நன்கொடை

1894ன் ஆரம்பப் பகுதி. சிகாகோவில் விவேகானந்தர் தங்கியிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் இல்லத்தரசர் ஏதோ வகையில் ஜான் டி. ராக்ஃபெல்லருடன் தொழில்வகைத் தொடர்பு கொண்டவர். அவரும் பிற நண்பர்களும் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அற்புத சன்யாசி பற்றிப் பலமுறை கூறி அவரை அழைத்தும், ராக்ஃபெல்லர் பிடிவாதமாக வர மறுத்துவிட்டார்.

ராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்.

சுவாமியைச் சந்திக்க விரும்பாவிட்டாலும் ஒரு நாள் ஏதோ ஒரு உந்துதலில், திடீரென நண்பரின் வீட்டுக்குள் நுழைந்து, “ஹிந்து சாமியாரைப் பார்க்கணும்” என்று பட்லரிடம் சொன்னார். பட்லர் வரவேற்பறையில் அழைத்துக்கொண்டு போனார். அதற்குள் மளமளவென்று இவர் விவேகானந்தர் இருந்த படிப்பறைக்குள் சென்றார். அங்கே மேசையருகில் அமர்ந்திருந்த சுவாமி நிமிர்ந்துகூடப் பார்க்காதது இவருக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.

சற்று நேரத்துக்குப் பின் சுவாமி ராக்ஃபெல்லரின் வாழ்வில் நடந்த, வேறு யாரும் அறிந்திருக்க முடியாத சில விஷயங்களைச் சொன்னார். “உன் செல்வம் உனக்கே உரியது என்று நினைத்துவிடாதே. நீ ஒரு வழங்கு குழாய்தான். உனது கடமை உலகுக்கு நன்மை செய்தல். கடவுள் அதற்கு ஒரு வாய்ப்பை இந்தச் செல்வத்தின் மூலம் அளித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள். மக்களுக்கு நன்மை செய்”.

(சுவாமி தனக்கு நன்கொடை கொடு என்று யாரையும் கேட்டது கிடையாது. தான் பேச்சுக்கள் மூலம் ஈட்டியதை அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்ததும் உண்டு. ஒருமுறை பால்டிமோரில் வ்ரூமன் சகோதரர்கள் துவங்கத் திட்டமிட்டிருந்த ஒரு பன்னாட்டுப் பல்கலைக் கழகத்துக்கு அவ்வூரில் பேசியதில் வந்த பணத்தை வழங்கினார்.)

ராக்ஃபெல்லருக்கு எரிச்சல் வந்தது. இந்தப் பாணியில் யாரும் இதுவரை அவரிடம் பேசமுனைந்ததோ, இன்னது செய் அன்று உபதேசித்ததோ கிடையாது. ‘போய்வருகிறேன்’ என்று கூடச் சொல்லாமல் வெளியே நடந்தார் ராக்ஃபெல்லர்.

ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் அங்கு வந்து சுவாமியை அதே அறையில் பார்த்தார். ஒரு அமெரிக்கப் பொது நிறுவனத்துக்குப் பெரிய தொகையை வழங்குவதற்கான திட்டம் குறித்த ஒரு ஆவணத்தை சுவாமியின் மேசைமேல் வைத்தார். “இப்போது உங்களுக்குத் திருப்தியாக இருக்கவேண்டுமே, எனக்கு நன்றி சொல்லவேண்டும் நீங்கள்” என்றார் ராக்ஃபெல்லர்.

சுவாமி அசையவோ, கண்களை உயர்த்தவோ இல்லை. அந்தத் தாளை எடுத்துப் பார்த்துவிட்டு “நீயல்லவா எனக்கு நன்றி செலுத்தவேண்டும்” என்றார். பொதுநலப் பணிக்கு ராக்ஃபெல்லர் கொடுத்த முதல் நன்கொடை அதுதான்.

மரம்பழுத்தால் வௌவாலை வாஎன்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை – சுரந்துஅமுதம்
கற்றா தரல் போல கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்

(நல்வழி, ஔவையார், பாடல்: 29)

உலகத்தவர் தம்மவர் ஆகவேண்டும் என்று எண்ணுகிறவர் எப்படிப் பசு தன் கன்றுக்கு மறைத்துவைக்காமல் பால் தருகிறதோ அதே அன்போடு தம் செல்வத்தைத் தரவேண்டுமாம். செல்வமுடையவருக்கு அவ்வெண்ணம் வராத போது நினைவூட்டுதல் தன்னலமற்ற துறவியரின் பணியாக இருந்திருக்கிறது.

உங்களுக்குத் தெரிந்த கல்விக் கூடங்களில், அலுவலகங்களில், சேவை அமைப்புகளில், குடியிருப்புச் சங்கங்களில், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஜனவரி 12ஐ இளைஞர் தினமாகக் கொண்டாட வற்புறுத்துங்களில். விவேகானந்தரை உலகுக்கு நினைவுபடுத்துங்கள். மீண்டும் ஆன்மீக, கலாச்சார, தேசீயத் தன்மான விழிப்புணர்வுக்கு வழி செய்யுங்கள்.

விவேகானந்தரை மறந்தால் பாரதத்துக்கு உய்வு கிடையாது.

15 Replies to “இவரை மறக்கலாமா?”

 1. நம்மோடு எப்பொழுதும் உடனிருக்கும் நண்பரை திருமணத்திற்கு அழைக்க மறந்து விடுவோம். இது தவறு என்றாலும் ரசிக்கக் கூடிய தவறுதான். விவேகானந்தரை மறப்பதும் அப்படிதான்.

  அநீதிக்கு எதிராக புஜபலம் தென்படுகின்ற இடத்தில், அடக்கமும், ஆன்மிகமும் இரண்டறக் கலந்திருக்கும் சமயத்தில், தாய்திரு நாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பும் கமேண்டோக்களின் கண்களில், உழைப்பவரின் உற்சாகத்தில் பசியாற்ற முன்வரும் பரிசாரகர் வடிவத்தில், அழகெல்லாம் அன்னை என்று கொண்டாடப்படும் திருவிழாக்களில், சாத்திரப்பயிற்சியில், அறிவியல் முயற்சியில், குழந்தைகளின் குதூகலத்தில், கலைகளின் வெளிச்சத்தில், நதிநீர் பெருக்கில், இந்தியாவின் எழுச்சியில், இமயத்தின் உச்சியில் இருக்கிறார் விவேகானந்தர்.

  ‍‍‍‍சக்திப்ரியன்

 2. இந்திய மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட புதிய விழிப்புணர்வுகளை ஒருங்கிணைத்து நவீன பாரதத் தலைவர்களை உருவாக்கியவர் விவேகானந்தர். அப்படிப்பட்ட ஒரு புனித நெருப்பைப் பற்றி மதுரபாரதி மிக மிக அருமையாக எழுதியுள்ளார்.

  விவேகானந்தருக்குப் பின் வந்தவர்கள் அனைவருமே அவரால் பாதிக்கப்பட்டவர்கள்தாம். “இந்துத்துவா” என்னும் தத்துவப்போக்கு அவரால்தான் உருவானது.

  விவேகானந்தரால் ஒளியேற்றப்பெற்று, மேலும் பல யாக குண்டங்களை இவர்கள் உருவாக்கிவருகிறார்கள்.

  அவரால் ராக்ஃபெல்லர் போன்ற அனைவரும் அறிந்த தலைவர்கள் மட்டும் அல்ல, பலர் அறியாதவகையில் ஆனால் அறியாதவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் சேவை செய்துவருபவர்களும் அநேகம் பேர். இவர்களில் துறவிகளும் உண்டு. இல்லறத்தாரும் உண்டு.

  அப்படிப்பட்ட ஒரு யாக குண்டத்தைப் பற்றி திண்ணையில் மிக அருமையாக ஒருவர் எழுதியிருந்தார். “என்ன செய்துவருகிறார் விவேகானந்தர்?” என்ற கேள்விக்கு விடை தரும் கட்டுரை இது.

  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40312044&format=html

  நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)

  எழுதியவர்: அரவிந்தன் நீலகண்டன்

  [.. இக்கட்டுரையை திண்ணை இணைய இதழில் வாசிக்கலாம்.]

 3. எங்கோ கியூபாவில் பிறந்த புரட்சி வீரன் சேகுவாரா-வின் படத்தை டீ-ஷர்ட்டில் பதித்துக் கொண்டு நடமாடுகிற கலாசாரம் சமீப காலமாக தமிழ்நாட்டு இளைஞர்கள் இடையே பரவி உள்ளது !

  ஆனால் நம் நாட்டு வீரத் துறவி இவருக்கு அந்த கவுரவம் இன்னும் கிடைக்கவில்லை. அவர் தான் ஹிந்து ஆயிற்றே ?
  தமிழனுக்கு ஹிந்து என்ற அடையாளம் தான் அருவருப்பான ஒரு விஷயமாயிற்றே………

 4. இந்த புனித நாளை எப்படி மறந்தேன்? சென்ற வாரம் கூட நினைவுப் படுத்திக்கொண்டேனே? நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. அவரின் கூற்று இன்றும் பொருத்தமானதாவகவே இருக்கிரறது. வேத மதத்தைப் பற்றி அவரின் விளக்கங்கள் ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய ஒன்று. அவர் ஹிந்து என்ற வார்த்தையை பயன்படுத்தவே மாட்டார். வேத மதம், வேதாந்தி என்று தான் கூறுவார். காரணம்… ஹிந்து என்பது சிந்து நதிக்கு இப்புறம் உள்ள அனைவரையும் குறிக்கும் சொல். மேற்கத்தியர்கள் தான் அப்படி அழைப்பார்கள். நான் அப்படி அழைக்கமாட்டேன் என்று கூறுவார். இந்தப் புனிதரை மறந்தால் இந்தியாவிற்கு விடிவு இல்லை.

 5. அமெரிக்காவின் ராக் ஃபெல்லரை மட்டுமல்ல, இந்தியாவை உலகம் மதிக்கக் காரணமான பல நிறுவனங்களும் விவேகானந்தரால் எழுந்தவை.

  உதாரணமாக, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியற் கழகம் (IISc) மற்றும் கொல்கத்தாவில் உள்ள போஸ் அறிவியல் மையம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

  இந்திய அறிவியலிலும் வல்லமை பெற விவேகானந்தர் உழைத்தார். இது குறித்து தமிழ்நாட்டின் பிரபலமான அறிவியல் விமர்சகர் திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் எழுதிய மற்றொரு கட்டுரை:

  ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்

 6. அம்பேத்காருடைய கருத்துக்களும், விவேகானந்தரின் கருத்துக்களும் ஒன்றாக இருப்பது குறித்த மற்றொரு கட்டுரையை படிக்கக் கீழேயுள்ள லிங்கை க்ளிக்கவும்:

  ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்

 7. விவேகானந்தரால் தூண்டப்பட்டு எழுந்த பல நிறுவனங்கள் அவருடைய பெயரை வெளிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால், சில நிறுவனங்கள் அவருடைய பெயரிலேயே செயல்படுகின்றன.

  உதாரணமாக, தமிழ் நாட்டில் விவேகானந்தரால் தூண்டப்பட்டு நடந்துவரும் நூற்றுக்கணக்கான நற்பணி அமைப்புகளில் ஒன்றான “விவேகானந்த கேந்திரம்” குறித்தும், அதன் அளப்பரிய பணிகள் குறித்தும் மற்றொரு கட்டுரை தெரிவிக்கிறது. ஹிந்துத்துவ கொள்கையின்படி நேர்மையோடு எழுதப்பட்ட இக்கட்டுரை கிருத்துவரான ஒரு பெருமானைப் பற்றியும் குறிப்பிடுகிறது. கட்டுரையைப் படிக்கக் கீழேயுள்ள லிங்கை க்ளிக்கவும்:

  ஜோஸப் குமரப்பா, சுவாமி விவேகானந்தர், சாணி அடுப்பு

 8. சுவாமிஜி ஒரு யுகபுருஷன். ஒரு அன்பர் மேற்சொன்னது போல் அவரால் உந்தப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் இறங்கியவர் பலர், உ.ம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

  சுவாமிஜியே சொன்னது போல் ‘இன்னொரு விவேகானந்தன் வந்தால் தான் இந்த விவேகானந்தன் என்ன செய்தானென்று தெரியும்’.

  உலகமனைத்திற்கும் போதனையான அவரின் பொன்மொழிகளைக் கேட்டால் அமைதி நிச்சயம். அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இந்த மனித இனம் புனிதம் நோக்கி நடைபோட இந்த மஹாபுருஷரின் வாக்கினை வேத வாக்காகக் கொள்வது மிக முக்கியம்.

 9. சுவாமி விவேகானந்தரை பற்றிய அற்புதமான கட்டுரையை வழங்கி இருக்கிறார் மதுரபாரதி அய்யா அவர்கள்.

  அந்த வீர மனிதனை மீண்டும் ஞாபகப் படுத்திய மதுரபாரதி அய்யாவுக்கு நன்றிகள் பல.

  சக்திப்பிரியனின் மறுமொழி அருமை.

  ஸ்ரீதர்

 10. Unfortunately we Indians are Xenophilic. WE cannot understand the greatness of our own great people. This article is an eyeopenner. In India hardly there was a leader who was not influenced by Swamiji during the freedom struggle. Present day politicians are ignorant of Swamiji since illiterates and sycophants are the members in many of the political parties.

 11. மகான்களை மதிக்கிறோமோ இல்லையோ, அவர்களை சிறுமைப் படுத்தாமல் இருந்தாலே போதும் என்ற நிலை தான் இன்று.

  இந்த பதிவை பாருங்கள்

  http://www.writerpara.net/archives/453#comments

 12. மதுரபாரதி அவர்களுக்கு மிக்க நன்றி.
  அற்புதமான, சிந்தனையைத் தூண்டும் ஆக்க‌பூர்வமான கட்டுரை.

  சுவாமி விவேகானந்தர் பன்னாட்டு அரங்கில் செயல்பட்டது என்னவோ பத்து ஆண்டுகள்தான்.
  ஆனால் அதற்குள் அவர் தத்துவம், மதம், மனஇயல், சமூக இயல், அறிவியல்,
  வரலாறு, புவியியல், வானஇயல், கலை, இசை என அனைத்திலும் முத்திரை பதித்துவிட்டார்.

  அவரது நினைவு நாள் பிப்ரவரி 4 என்பதை இந்தச் சமுதாயத்திற்கு நினைவூட்டூவோம்.

  ரமாகுருமூர்த்தி

 13. //இந்தியர்களே கற்றுத் தேர்ந்து இந்திய வரலாற்றை எழுதுகிற நிலைமை வந்தபோது முழுவதுமாக மேனாட்டுக் கல்வியால் மூளை மழுங்கிப் போய்விட்டனர் என்று தோன்றுகிறது. இந்தியம், இந்துமதம் எல்லாவற்றையும் கீழே போட்டுத் தரையில் மிதிப்பதுதான் சரித்திர மறுவாசிப்பு என்கிற முற்றடிமை நிலைக்குப் போய்விட்டார்கள். அப்படி எழுதுகிறவர்களுக்குத்தான் பன்னாட்டு விருதுகள் தேடி வருகின்றன. உண்மை பேசுகிறவர்கள் அவமதிக்கப் படுகிறார்கள்.//

  விவேகானந்தர் சொன்னது இன்னமும் மாறவில்லை என்பதுதான் நமது சோகம்.

 14. “நம்பிக்கை,நம்பிக்கை,நம்பிக்கை!

  நம் மீது நம்பிக்கை. கடவுள் மீது நம்பிக்கை!

  நமது முப்பத்து முக்கோடி தேவர்களிடத்தும் மேலும் அவ்வவப் போது மற்ற நாட்டவர் நம் மீது திணித்த தெய்வங்களிடத்தும் நம்பிக்கை வைத்து, நம் சொந்த முயற்ச்சியில் நம்பிக்கை இல்லை என்றால் பலன் எதுவும் இல்லை!”

  -சுவாமி விவேகானந்தரின் கருத்து

 15. Swami Vivekananda had to show his muscle power also when it was necessary.
  And he was already a Sanyasi, when he had to show his muscle power. He also said football should be the first priority than Bhagvat Geeta to today’s youngsters. It is valid even now. This should be understood in the correct perspective. Improve physical strength, learn any one martial art atleast. Sanyasis from Tirumoolar TO Swamiji advise to manitain good physique. UDAMBAAR AZIYIN UYIRAAR AZIVAR.

  MALARMANNAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *