போகப் போகத் தெரியும் – 8

பெஞ்சமின் டிஸ்ரேலி என்ற பிரெஞ்சுக் கவிஞன்!

shah-jahan1ஷாஜஹான் தங்கியிருந்த ஆக்ரா கோட்டையை ஒளரங்கசீப் முற்றுகையிட்டான். கோட்டைக் கதவுகள் அனைத்தையும் மூடும்படி ஷாஜஹான் உத்தரவு கொடுத்தான். ஒளரங்கசீப் விரும்பியதும் அதுவே.

ஏனெனில் ஆக்ரா நகரத்தின் உட்பகுதியில் குடிதண்ணீர் கிடையாது. நகரத்திற்கான குடிநீர் யமுனை ஆற்றிலிருந்து வரவேண்டும். ஒளரங்கசீப் தன் படையின் பெரும்பகுதியை நீர்க்கரையில் நிறுத்திக் கோட்டைக்குள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகமுடியாமல் செய்துவிட்டான்.

தந்தை ஷாஜஹான் சரணடைந்தான். அதற்கு முன்பு நெஞ்சை உருக்கும் கடிதம் ஒன்றை மகனுக்கு எழுதினான். “ஹிந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்குக் கூட நீர்க்கடன் செலுத்திகிறார்கள். முசல்மானாகிய நீ உயிரோடிருக்கும் தகப்பனாருக்கே குடிதண்ணீர் தர மறுக்கிறாய்” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

பாரதி போற்றிய பன்னரும் உபநிடத நூல் / தி.சா.ராஜு / வானதி பதிப்பகம்

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த அரசனுக்கே ஹிந்துப் பண்பாட்டின் சிறப்பு புலப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர்களுக்கு மட்டும் பார்வைக் கோளாறு. அவர்களுக்கு ஹிந்து என்பதே இழிசொல்; இஸ்லாம் என்பதோ புண்ணிய பூமி. புண்ணிய பூமியில் போய்ச் சேரப் போவதாக வெகு காலமாக அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தம்மை இஸ்லாமை அனுசரிப்பவர் என்றும் திராவிட சமயமும் இஸ்லாமும் ஒன்று என்றும் பெரியார் சொல்லியுள்ளார். சேலம் மாநாட்டில் பேசும்போது (1944), பாகிஸ்தானுக்கு உட்பட்டு வாழ்ந்தாலும் வாழலாமே ஒழிய ஆரியருடன் வாழக்கூடாது என்று அவர் கூறினார்.

பக்கம் 60 / பெரியார்? /அ.மார்க்ஸ் / பயணி வெளியீடு

இப்படியெல்லாம் அந்த மார்க்கத்தின் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினாலும் அவர்கள் எச்சரிக்கையோடு இருக்கிறார்கள். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் வெளியிடும் உணர்வு இதழில் (டிச.26, 2008-ஜன.1, 2009) பெரியார் இயக்கத்தவரை ‘போலி பகுத்தறிவுவாதிகள்’ என்று தலைப்பிட்டு அறைகூவல் விடும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதிலிருந்து ஒரு பகுதி இதோ:

போலி பகுத்தறிவுவாதிகளின் மற்றொரு மூட நம்பிக்கையானது உருவப்படத் திறப்புகளும், அதற்கான விழாக்களும்… உருவப்படங்கள் திறப்பதை நியாயப்படுத்தி பெரியார் எடுத்து வைக்கும் வாதங்கள் எதுவும் பகுத்தறிவு பூர்வமானதாக இல்லை…

பெரியாரிடம் ஆழமான சிந்தனை எதுவும் இருந்ததில்லை என்பதும், அவரைப் பின்பற்றுவோர் கண்களை மூடிக் கொண்டுதான் பின்பற்றுகின்றனர் என்பதும் மேலும் தெளிவாகிறது.

இஸ்லாத்தில் இவர்களைச் சேர்ப்பதாக இல்லை; இந்துக்களோடு இருக்கும் தொப்புள் கொடி உறவைத் தானாகவே அறுத்துவிட்டுத் தவிக்கிறார்கள். இவர்கள் கதை இப்படிக் கந்தலானதற்குக் காரணம் என்ன?

கொள்கையில் உள்ள கோளாறு முதல் காரணம். இருப்பதையாவது இறுகப் பிடித்துக் கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. உறுதியின்மை இரண்டாவது காரணம்.

அடாவடிகளை அறிக்கைகளாகவும், தவறான தகவல்களைத் தத்துவங்களாகவும் அரைகுறைப் படிப்பை அநுபூதியாகவும் கொண்டு வளர்ந்ததே ஈ.வே.ரா.வால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம்.

மேடைப் பேச்சின் கவர்ச்சி, சினிமாவின் வீச்சு, ஆழமும் அகலமும் இல்லாத மொண்ணைத்தனமான எழுத்து ஆகியவை சேர்ந்த சரக்கு, துவக்கத்தில் படித்தவர்களையும் நாளடைவில் பாமரர்களையும் மயக்கியது. அந்த மேடைகளில் பொருள் ஏதும் இல்லாத பூச்சுவேலை அதிகம்.

“Everybody remains in a state of rest or of uniform motion in a straight line என்று ஏசுநாதரைப் பற்றி எழுதிய கவிதையில் பிரெஞ்சுக் கவிஞன் பெஞ்சமின் டிஸ்ரேலி கூறியதைப் போல…” என்று சொல்லி, நிறுத்தி சோடா குடித்துக் கொண்டார் கழகப் பேச்சாளர் ஒருவர். அவருடைய கன்னிப்பேச்சு அது. அவருக்கு எதிரே இருந்த மக்கள் தொகையில் அரை டவுசர்களே அதிகம். இடம் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலம்; ஆண்டு 1964.

இங்கிலாந்துப் பிரதமரை பிரெஞ்சுக் கவிஞராகவும் யூத மதத்தைச் சேர்ந்தவரை ஏசுவின் புகழை எழுதியவராகவும், நியூட்டனின் விதியை இலக்கியமாகவும் மாற்றும் ரசவாதம் கண்மணிகளிடம் உண்டு.

வார்த்தைப் பந்தல்களால் வளர்க்கப்பட்ட இயக்கத்தைப் பற்றி இந்தத் தொடரில் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். தொடரின் முந்தைய பகுதியில் ஊடகங்களின் பயன்பாடு பற்றி எழுதியிருந்தேன்.

நண்பர் மைத்ரேயா மறுமொழியாகக் கேட்கிறார் என்னுடைய தீர்மானத்திற்கு அடிப்படை என்னவென்று. அது இங்கே தரப்படுகிறது.

சுதந்திரம் பெற்ற பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படத் துறையை முறையாகப் பயன்படுத்தத் தொடங்கியது. சுதந்திர இந்தியாவின் தணிக்கைக் கொள்கைகளால் தி.மு. கழகத்தின் பகுத்தறிவுக் கொள்கைகளும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களும் திரைக்கு வந்தன.

விடுதலைக்குப் பின் தேசிய முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. நகரங்களைத் தாண்டி மின்சாரம் கிராமங்களுக்கும் செல்லத் தொடங்கியது. கிராமங்கள் மின்சார மயமாகத் தொடங்கியதும் டூரிங் டாக்கிஸ்களும் சினிமாப் படங்களைத் தூக்கிக் கொண்டு கிராமப் புறங்களுக்குள் பிரவேசித்தன. 1931-1947 ஆண்டுகளில் தரிசிக்க முடியாதிருந்த சினிமாப் படத்தைக் கிராம மக்கள் காணுகிற வாய்ப்புகள் உருவாகத் தொடங்கிய (1947-1956) காலத்தில் சினிமாவின் சக்தியைப் புரிந்தவர்களாகத் தி.மு.கழகத்தினர் விளங்கினர்.

தமிழ் சினிமாவின் கதை / அறந்தை நாராயணன் / நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

பட்டி தொட்டியெல்லாம் பாடல்கள் மூலம் பகுத்தறிவும் திராவிடமும் பரவி வந்த வேளையில் தேசியவாதிகள் என்ன செய்தனர்? காங்கிரஸ் ஆதரவுக் கலைஞர்களின் பங்களிப்பு என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள மீண்டும் அறந்தை நாராயணன்:

veerapandiya-kattabommanதேசியவாதியான நடிகர் பி.ஆர்.பந்துலு 1959-ல் தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தை கேவா கலரில் படமாக்கி லண்டன் சென்று அதை டெக்னிகலராக மாற்றி வெளியிட்டார். சுதந்திரம் பெற்ற தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டம் பற்றியதோர் கதை 12 ஆண்டுகளுக்குப் பிறகே வெளிவந்தது.

சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ஜாவர் சீதாராமன் பானர்மென்னாகவும் நடித்தனர். எஸ்.வரலட்சுமி, பத்மினி ஆகியோரும் நடித்த இந்தப் படத்தின் கதை ஆலோசனைக் குழுத் தலைவராகத் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ. சிவஞானம் இருந்தார்.

‘பராசக்தி’, ‘மனோரமா’ படங்களில் நீளநீளமான வாக்கியங்களில் வசனம் பேசிய சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனில் சக்தி கிருஷ்ணசாமியின் வித்தியாசமான வசனங்களைப் பேசினார்.

“நீலவானிலே செந்நிறப் பிழம்பு! அந்த வட்ட ஒளியின் பெயர் சூரியன், சுட்டெரிக்கும் செஞ்சுடர்! அதுதான் நீ என் நெற்றியிலே இட்ட இந்த வட்டமான இரத்த நிறப் பொட்டு…”

ஏராளமான பொருட் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார் பந்துலு. அவரே படத்தை இயக்கினார். வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் வீரபாண்டியக் கட்டபொம்மன் பட்ட கஷ்டங்களை விட காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தச் சினிமா கட்டபொம்மன் அதிகச் சிரமங்களை அனுபவிக்க நேர்ந்தது….

voc1961-ல் பந்துலு ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தை வெளியிட்டடர். ஆங்கிலேயக் கம்பெனிகளோடு போட்டி போட்டுக் கப்பல் கம்பெனி நடத்தி, அதனால் ஆட்சியாளர்களின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகி சுதந்திரப் போராட்டத்தில் பங்கும் கொண்டு சிறை சென்று சிறையில் செக்கிழுத்த தியாகி வ.உ. சிதம்பரனாரின் கதை….

சுருங்கச் சொன்னால் எடுத்தவர்கள், நடித்தவர்கள், பார்த்தவர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தார்கள்.

ஆனால்-

வியாபாரக் கலை விஷம் போல மலிந்து வியாபித்துத் தமிழர் ரசனையை வக்கரிக்கச் செய்திருந்ததால் படம் வசூலில் வெற்றி பெறவில்லை. தேசியவாதி, காங்கிரஸ்காரர் பி.ஆர். பந்துலு நொடித்துப் போனார்…. வேடிக்கையொன்று சொல்லட்டுமா?

கேளிக்கை வரியை ரத்து செய்து குறைந்த கட்டணத்தில் அனைவரையும் ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தைப் பார்க்கச் செய்ய காங்கிரஸ் ஆட்சியாளருக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் செய்யவில்லை.

1967-ல் ஆட்சிக்கு வந்த தி.மு. கழகம்தான் ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்துக்கு வரிவிலக்கு அளித்தது.

vanchi-maniyachiவாஞ்சிநாதன் குடும்பத்தாருக்கு காங்கிரஸ் அரசு பென்ஷன் தரவில்லை என்பதைச் சென்ற பகுதியில் எழுதியிருந்தேன். தி.மு.க். அரசுக்குத்தான் அந்தப் பெருமையும் கிடைத்து.

மக்களோடும் காங்கிரசுக்குத் தொடர்பில்லை; மக்கள் தொடர்புச் சாதனங்களோடும் நல்ல சகவாசம் இல்லை. அதனால்தான் மாநிலக் கட்சிகள் முன் மண்டியிடும் நிலைமை.

‘பராசக்தி’ படம் வெளிவருவதற்கு மணிக்கொடி சீனிவாசன் உதவினார் என்று எழுதியிருந்தேன். ஆதித்யா என்ற நண்பர் இந்தச் செய்தி கழக இதழ்களில் வரவில்லையே என்று கேட்கிறார். அதற்கு ‘அறிவாலயம்’தான் பதில் சொல்ல வேண்டும். அறிவாலயம் சொல்லாததை ‘தாயகம்’ சொல்கிறது. தாயகமும் மணிக்கொடி சீனிவாசனைப்பற்றி சொல்லவில்லை. ம.தி.மு.க. சார்பு உடையவரும் சிறந்த பத்திரிக்கையாளருமான திரு. க. திருநாவுக்கரசு எழுதிய திராவிட இயக்கமும் திரைப்பட உலகமும் என்ற நூலில் பக்கம் 56/57-ஐப் பார்க்கலாம்.

பராசக்தி படம் தணிக்கைக்குழுவின் முன் திரையிடப்பட்ட போது பெரியதொரு விவாதம் நடைபெற்றது. பல காட்சிகளை வெட்ட நினைத்த போது குழுவின் உறுப்பினராக இருந்த ‘சண்டே அப்சர்வர்’ திரு. பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கடுமையாக வாதிட்டு பராசக்தியை வெளியிடத் துணை நின்றார். வாசகர்களின் திருப்திக்காக கணையாழி, செப்டம்பர் 2000 இதழில் ‘மணிக்கொடியின் பிதாமகர்’ என்ற தலைப்பில் சிட்டி.பெ.கோ. சுந்தரராஜன் எழுதிய கட்டுரையின் பகுதியைக் கொடுக்கிறேன்:

தணிக்கை அதிகாரியாக இருந்த சீனிவாசன் அனுமதித்த ஒரு படம் சர்ச்சைக்கு உள்ளாகித் திரைப்பட வரலாற்றில் தனி இடம் பெற்றுவிட்டது.

அதுதான் பகுத்தறிவு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ‘பராசக்தி’ என்ற படம்…

நமது கலாசாரத்தையும் ஆன்மிகத்தையும் குறிப்பாக பார்ப்பனீயத்தையும் சாடும் முறையில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது என்று சிலரால் கருதப்பட்டது. திரைப்படத் தணிக்கைக் குழுவில் அரசாங்க முறையில் அல்லாத தனிப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்த ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியர், சீனிவாசனின் செயலைக் கண்டிக்கும் முறையில் தமது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ராஜாஜி கூடத் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சருக்கு இதுபற்றிப் புகார்க் கடிதம் எழுதியதாகச் சொல்லப்பட்டது. காஞ்சி பரமாசாரியாரும் படத்தின் தன்மையை அறிவதற்காக இரண்டு பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார். எதிர்த்தவர்கள் கருதியபடி படத்தில் ஆட்சேபகரமான அம்சங்கள் இல்லை என்று அவர்கள் தங்களுடைய கருத்தை மடாதிபதியிடம் தெரிவித்தார்கள்.

சினிமாவைப் பற்றிச் சொல்லும் போதே திரைப்படப் பாடல்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். திரைப்படம் என்ற போர்முனையில் பாடல்களை எழில்மிகுந்த ஏவுகணைகள் என்று சொல்லலாம். பத்து ரீல்கள் செய்ய முடியாததை ஒரு பாடல் செய்துவிடும்.

பாட்டுப் புத்தகங்களின் அட்டையில் தி.மு.க. தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்டன. வசனப் புத்தகங்களும் பெருமளவில் விற்கப்பட்டன. காந்தியத்திற்கு வெள்ளை என்றால் திராவிடர் இயக்கத்திற்குக் கறுப்பு; காங்கிரசுக்குக் கதர் என்றால் தி.மு.க விற்கு கைத்தறி என்று எதிர்மறையாகவே எல்லாம் நடந்தது.

மக்கள்தொகையில் ஒரு பகுதி நெசவுத் தொழில் ஜீவனமாகக் கொண்டிருந்த வேளையில் ‘சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி’ என்ற பாடலை எழுதியவர் பொதுவுடமைவாதியான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஆனால் இதைத் தி.மு.க.வினரே பயன்படுத்தினர்.

‘மலைக்கள்ளன்’ (1954) திரைப்படத்தின் கதை தேசியவாதியான நாமக்கல் கவிஞரின் எழுத்தில் உருவானது. இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர்., வசனம் மு.கருணாநிதி. இந்தப் படத்தில் ‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற பாடல் இடம்பெற்றது. பாடலாசிரியர் நாமக்கல் கவிஞர். படம் வெளிவந்தபோது இந்த வரிகளை மேற்கோள் காட்டாத தி.மு.க. மேடைகளே இல்லை. இதே நாமக்கல் கவிஞர் ‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்று உப்புச் சத்தியாகிரகத்தைப் பாடினார். அது எத்தனை காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியும்?

‘திராவிடர் இயக்கத்தில் திரைப்படப் பாடல்களின் தாக்கம்’ என்று ஒரு புத்தகமே எழுதலாம்; வசனத்திற்கு இன்னொன்று.

மேற்கோள் மேடை:

ஹிந்து மதத்தில் எவரும் சேர்த்துக் கொள்ளப்படுவதும் இல்லை; எவரும் விலக்கப்படுவதும் இல்லை. ஒரு முஸ்லீமும் கிறிஸ்தவனும் ஆக்கப்படுகிறான். ஒரு ஹிந்து பிறக்கிறான். மற்ற மதங்களுக்கு அவன் மாறிப் போவது ஏதோ உத்யோகம் பார்க்க உடை மாறிப் போவது மாதிரிதான்.

– ஜெயகாந்தன் / ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்

3 Replies to “போகப் போகத் தெரியும் – 8”

  1. சுப்பு ஐயா,

    கலக்குகிறீர்கள். இவ்வளவு தகவல் கருவூலமாக தங்களின் கட்டுரைகள் அமைந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் தொண்டு.

  2. சுப்பு அய்யாவின் கட்டுரைகள் அவரது பல ஆண்டு உழைப்பின் தொகுப்பு. அருமையாக தொகுத்தளிக்கிறார். வாழ்க பல்லாண்டு சுப்பு அய்யா அவர்கள்.

  3. சுப்புவை எத்த்னை போற்றினாலும் போதாது. அன்னாருக்கு மிக்க நன்றி. இவைகளை வெளியிட்ட வ்லைத்தளத்துக்கும் நன்றி

    சே. ராஜகோபாலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *