பாரதி: மரபும் திரிபும் – 5

பாரதி: மரபும் திரிபும் – பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4

ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.

(தொடர்ச்சி…)

இந்நாட்டிற்குப் பெயர் பாரதம் என்று பயன்படுத்தியது ஏன்?

இந்தியாவை ‘பாரதம்’ என்று சொல்வதிலேயே கவனமாக இருந்திருக்கிறார்.

‘இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே’

– என்ற ஒரு இடத்தைத் தவிர, தன் கவிதைகள் எல்லாவற்றிலும் ‘பாரத தேசம் என்று தோள் கொட்டுவதி’லேயே குறியாக இருந்திருக்கிறார்.

‘பாரதம், பரதன் நிலை நாட்டியது. இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இந்நாட்டை இவன் ஒன்று சேர்த்து, அதன் மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு பாரத தேசம் என்று உருவாயிற்று – என்று புளுகுகிறார் என்றால், அது மகாகவியை கேவலப்படுத்தியதாகும். அதனால் ‘வரலாற்று ஆதாரங்களை அள்ளித் தருகிறார்’ என்று நாம் புளுகி வைப்போம்.

மதிமாறனின் மற்றொரு விமர்சனம் இது.

பாரதி கவிதைகளில் ‘இந்தியா’ என்ற பெயரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிடுகிறார் என்று சொல்லுகிறார் மதிமாறன். ஆனால் மதிமாறன் தன் புத்தகத்தில் (பக்.25) பயன்படுத்தியிருக்கும் ‘வாழ்க நீ எம்மான்’ என்ற பாட்டிலேயே பாரதி ‘இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.

‘‘பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் – ஒத்துழை யாமை
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத் தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே’’

பாரதியின் கவிதைகளை முழுமையாகப் படித்திருந்தால் இந்த வரியும் மதிமாறனின் ‘மதி’க்கு எட்டியிருக்கும்.

மற்றோரு இடத்திலும் ‘இந்தியா’ என்ற பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்.

‘எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்

என்று மூன்றுமுறை பாரதி அடித்துக் கூறுகிறார். மற்றொரு கவிதையான பாரதமாத நவரத்தின மணிமாலையில் இந்தியா என்ற பெயரை குறிப்பிடுகிறார்.

‘‘திறமிக்க நல்வயிரச் சீர்திகழுமம் மேனி
அறமிக்க சிந்தனை அறிவு – பிறநலங்கள்
எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன்
கண்ணொத்த பேருரைத்தக் கால்’’

இவ்வாறு சில இடங்களில் இந்தியா என்ற பெயரை குறிப்பிடுகிறார். ஆனால் மதிமாறன் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிடுவதாக கூறுகிறார். நல்ல விமர்சன ஆராய்ச்சி!

ஆனால் மதிமாறன் குறிப்பிடுவதுபோல பாரதி தம் கவிதைகளில் சில இடங்களில் மட்டும் இந்தியா என்பதையே பயன்படுத்துகிறார். மீதி இடங்களில் எல்லாம் பாரதம் என்பதையே பயன்படுத்துகிறார்.

பாரதி கவிதைகளில் ‘இந்தியா’ என்ற பெயரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிடுகிறார் என்று புளுகும் மதிமாறன், சொல்ல மறந்த செய்தி ஒன்று உண்டு.

பாரதி கவிதைகளில் ‘இந்தியா’ என்ற பெயரை குறிப்பிடாவிட்டாலும் தன் கட்டுரையில் பல இடங்களில் இந்தியா என்ற பெயரை பயன்படுத்தி இருக்கிறார். பாரத தேசம் என்று தோள் கொட்டுவதிலேயே குறியாக இருந்த பாரதி தம் கட்டுரையில் ‘இந்தியா’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறாரே அதற்கு ஏதாவது பார்ப்பனிய குறி வைத்திருக்கிறாரா என்று மதிமாறன்தான் சிஐடி வேலை பார்க்க வேண்டும்!

இந்து என்பதின் திரிபே இந்தியா என்பதுதான் பாரதியின் கருத்து என்று சொன்னால் மதிமாறனின் விமர்சனம் தேவையற்றது. ‘பாரதம், இந்தியா’ என்ற வார்த்தைகள் பாரதி பயன்படுத்தியிருப்பது பார்ப்பனியச் சிந்தனையின் வெளிப்பாடு என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம். அப்படியில்லாமல் மதிமாறன் பாரதி இந்தியா என்ற பெயரை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை என்று தனியாக விமர்சனம் வைக்கிறார். அதனாலேயே நாம் மேற்கண்டக் கேள்வியைக் கேட்கிறோம்.

காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த பாடலுடன் தன் கல்வியை ஆரம்பிக்கின்றார்கள்.

‘‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீர் இளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!’’

பொருள் : அலைகடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரதநாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம்….
என்று இதன் பொருள் நீண்டுகொண்டே போகிறது.

பார்ப்பனீய பூச்சாண்டியைக் காட்டி வளர்ந்த திமுக அரசு ஜூன் 1970ல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக இந்தப் பாடலை அறிவித்தது. பார்ப்பினிய எதிர்ப்பில் ஊறித்திளைத்த திமுக அரசாங்கம் இந்தப் பாடலில் பரதகண்டம் வருகிறதே – இது பார்ப்பனியச் சிந்தனைதானே – இதை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று யோசிக்கவில்லைபோலும். மாணவர்களின் மனதிலே இந்த தேசத்தை பரத கண்டம் என்று சொல்வதன்மூலம் பார்ப்பனியச் சிந்தனையை வளர்க்கிறோமே என்று தயங்கவில்லையே ஏன்? மதிமாறனாவது திமுக ஆட்சியிருக்கும்போது சொல்லியிருக்கக்கூடாதா?

சரி விஷயத்திற்கு வருவோம்.

ஆரியத்திற்கு கடும் வைரி என சொல்லப்படுகின்ற (உண்மையில் அப்படியில்லை) ‘மனோன்மணீயம்’ பெ.சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதி, 1891ல் வெளியிடப்பட்ட மனோன்மணீயத்தில் வருகிற இந்தப் பாடலில் (இந்த தேசத்திற்குப் பெயர்) ‘பரதகண்டம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் பெ.சுந்தரம்பிள்ளை பார்ப்பனியச் சிந்தனையில் ஊறியிருந்தாரா? இவர் ஏன் இந்த தேசத்திற்கு பரதகண்டம் என்று புளுக வேண்டும்?

பெரியாரின் தாசனான(?) பாரதிதாசன் தன் கவிதைகளில் ‘இந்தியா’வை எந்தச் சொல்லில் பயன்படுத்தியிருக்கிறார்?

‘‘பல நூற்றாண்டாய்ப் பாரத நாட்டில்
போரே இல்லை; அதனால் மக்கள்பால்
அஞ்சாமை என்பதே இல்லாத மிழ்ந்தது;
நாட்டன்பு காட்ட வாய்ப்பே இல்லை.’’

கதர் இராட்டினப் பாட்டில்,
‘அடல்வளர்த்தும் பாரதநற் புத்திரன்நான் ஆக
உடல்வளர்த்த நாடுஎன் உயிர்’

‘பாரத தேசத்தில் எங்கும் – எனில்
பண்டைமுதல் இழை நூற்பதிலே யாம்’

இராட்டினச் சிறப்பு கவிதையில்,
‘பாரதத் திலே பிறந்த
ராட்டினப் பெண்ணே’

‘பாரத நாட்டுக்குத் தாயடி நீ – உன்
பாரதத்தை நம்பியசேயடி யான்!’

ஈவேராவுக்கு தாசனாக இருந்ததாக சொல்லப்படுகிற பாரதிதாசன் (உண்மையாகவா?) தான் பாரததேசம் என்று தோள் கொட்டுவதிலேயே குறியாய் இருந்திருக்கிறார். அதாவது பார்ப்பனிய சிந்தனையில் இருந்திருக்கிறார்.

பாரதிதாசன் – ‘பாரதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இவர் ஏன் புளுக வேண்டும்?

அதுமட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கர் ‘பாரத’ என்கிற வார்த்தைக்கு எவ்வளவு மதிப்புக் கொடுத்திருந்தார் என்பதைப் பார்த்தால் மதிமாறனுக்கு தலையே சுற்றிவிடும்.

‘பாரத்’ என்ற சொல்லில் புரட்சியாளர்அம்பேத்கருக்கு அலாதியான பிரியம் இருந்தது. அதனால்தான் தன்னுடைய வார இதழுக்கு ‘பகிஷ்கிருத் பாரத்’ என்று பெயரிட்டார். அவருடைய அச்சகத்தின் பெயர் ‘பாரத் பூஷன் பிரிண்டிங் பிரஸ்’ என்பதாகும்.

புரட்சியாளர் அம்பேத்கர் – ‘பாரத்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இவர் ஏன் புளுக வேண்டும்? பாரதம் என்ற அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட தேசத்திற்கான திட்டவட்டமான வரலாற்று ஆதாரங்கள் இல்லை தான். ஆனால், கலாசார ரீதியாக ஒன்றுபட்டிருந்த தேசத்திற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இத்தேசம் புராதன நூல்களிலும், மொழிகளிலும், (வடமொழி, பிராகிருதம்) பாரதம் என்றே அறியப்படுகிறது. அதனாலேயே அக்காலக்கட்டத்தில் பலரும் ‘பாரததேசம்’ ‘பாரதம்’ என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். ஏனென்றால் அப்பெயரால் இந்நாட்டவர் தொன்று தொட்டு (புராணங்கள் மூலம் வெளிப்பட்டதால்) அழைத்துக் கொண்டு வந்தனர்.

பிரிட்டிஷ்காரர்கள் வைத்த பெயரைவிட – நம்மால் – நம் மக்களால் பெருமிதமாக அழைக்கப்படும் பாரதம் என்பதையே குறிப்பிட அன்று எல்லோரும் விரும்பினர். இந்நாட்டை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களுள் சிலர் ‘பாரத்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி யிருக்கின்றனர் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

சீனப் படையெடுப்பின்போது ‘இமயமலைக்குத் தெற்கே அமைந்துள்ள நிலப்பரப்பு முழுவதும் பாரதம்தான் என்பதை உலகத்திற்கு நிலைநாட்டுவதற்காக, டாக்டர் ராதாகிருஷ்ணன்,

‘‘உத்தரம் யத் சமுத்திரஸ்ச ஹிமாத்ரேஸ் சைவ தக்ஷிணாம்
வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர ஸந்ததி’’

என்கிற விஷ்ணு புராண ஸ்லோகத்தை எடுத்துக்காட்டினார். ஏனென்றால் அந்நியர்களால் அடிமைப்படுத்தப்பட்டு சுரண்டப் படுவதற்கு நெடுங்காலம் முன்பிருந்தே தான் ஒரே நாடாக – அந்நாட்டிற்கு ஒரே பெயராக இருந்ததை உலகத்தின் முன் நிரூபித்துக் காட்டுவதற்காக அவர் பறைசாற்றினார். இந்த எண்ணமே பாரதிக்கு இருந்தது.

இங்கு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கும் ‘பாரத்’ என்ற பெயரை இணைத்தே வைத்தனர். காரணம் அது இந்நாட்டினுடைய தொன்மையான பெயர் என்பதனால்.

இதில் எங்கே தெரிகிறது பார்ப்பனியம்?

(தொடரும்)

8 Replies to “பாரதி: மரபும் திரிபும் – 5”

 1. தெளிவாக விளக்கி உள்ளீர்கள். துதிபாடிகள் பொய்யாக , தவறான கருத்துக்களை எழுதியதற்காக வருத்தம் தெரிவித்தால் அவர்களுக்கு நல்லது. ஆனால் நாம் அவர்களிடம் இதனை எதிர்பார்க்கவில்லை. இது என்ன பிழைப்போ என்று வியக்கிறேன்.

 2. உண்மைதான் பாரதியின் கவிதைகளை வாசித்தாவது பார்த்து இருந்தால் இந்தியா என்ற வார்த்தையை அவர் ஒருமுறை தான் பயன் படுத்தி இருக்கிறார் என்றாவது சொல்லாமல் இருந்திருப்பார் பாவம் புத்தகம் எழுதி தன்னை முட்டாள் என நிரூபிக்க எத்தனை நேரமும் பணமும் செலவழித்தாரோ!.
  அவனின் கவிதைகளைப் படித்து அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முதலில் மனிதனாக மாத்திரமே தனித்து நிற்கவேண்டும். அது மாத்திரமே போதும். அப்படி இல்லாது சாதி இனவெறியோடு நோக்குபவர்களுக்கு என்ன தெரியும் என்பதைவிட எது புரியும்… தெரிந்ததெல்லாம் ஒன்று மாத்திரமே. அதிலும் இவருக்கு சொல்லவே வேண்டியதில்லை… பாரதியின் கவிதைகளைப் புரட்டி கூடப் பார்க்காமல் எழுதத் துணிந்த மகா அறிஞர்.

  வீதிச் சண்டையில் வசை மாறிப் பொழிபவர்களைக் கண்டால் தெரியும் அவர்களின் வாயிலே வரும் வார்த்தைகள் எல்லாம்; அவர்கள் மற்றவர்களை சாடும் வார்த்தைகள் எல்லாம் அவர்களுக்குத் தொடர்பு உடையதாகவே இருக்கும். அப்படி தான் என்னால், பாரதியை விமர்சித்த விசமத்தனம் மிகுந்த இவரையும் பார்க்கத்தோன்றுகிறது.

  இவர் என்னமோ மூலக்கடையில் உட்கார்ந்து வேறொரு விசமியின் அரைகுறையான உளறலை கேட்டுவிட்டே புத்தகம் எழுத முயன்றிருக்கிறார் என்றேத் தோன்றுகிறது. காரணம் இவர் பாரதியின் கவிதைகளை ஒரு பார்வை கூடப் பார்க்க வில்லை என்பதே இங்கு தெளிவாகத் தெரிகிறது. எதையும் முழுமையாக படித்துப் புரிந்துக் கொண்டு தன்னறிவுக்கு தகுந்த மாதிரியாவது விமர்சித்தால் அதை வாசிப்பவரிடம் இவரின் கருத்து ஏதாவது யோசிக்கச் செய்கிறதா என்றாவது நினைக்கலாம். அதை விடுத்து தீர்க்கமாக இந்தியா என்ற வார்த்தையே ஒரு முறை தான் பயன் படுத்தி இருக்கிறான் பாரதி (மற்ற குற்ற சாட்டுகள் இருக்கட்டும்) என்பது; எவ்வளவு ”முட்டாள் தனமான” உளறல் என்பதை அறிந்துக் கொள்ள கூட குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத போது; இது முட்டாள் தனம் அல்ல வடிகட்டின முட்டாளின் கிறுக்குத் தனம் என்றேக் கூறவேண்டும்.

  அப்பேர்ப் பட்ட அந்த நபரைப் பார்த்து பரிதாபப் படத்தான் வேண்டி இருக்கிறது. ஐயா இத்தனை முட்டாளா? நீவீர். எந்த ஊருயா நீங்க? உங்களுக்கு தமிழ் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர் இதை அறிந்தால் தன்னையே நொந்து கொள்வார். பள்ளிக் கூடமே போகாத ஒருவனிடம் கூட இப்படி பாரதியை விமர்சனம் செய்ய முடியுமா என்பது கூட யோசிக்க வேண்டியதே.

  சரி இன்னும் என்னவெல்லாம் வருதென்று பார்ப்போம்.

  இந்த முட்டாளின் கிறுக்கல்களை பற்றி பேசும் போது…..
  மீண்டும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையை நமக்குள் பகிரவும், ரசித்து ருசிக்கவும் வழி கிடைக்கிறது என்பது தான் தீமையிலும் நன்று.

  கட்டுரையாளர் அவர்களுக்கு இனிய வணக்கங்களும் வாழ்த்துக்களும். நன்றிகள் ஐயா!
  வாழ்க! வளர்க!! மகாகவியின் விருப்பங்கள் யாவும்!!!

 3. இந்த போலி பகுத்து அறிவு வியாதிகள், உண்மை இல் மக்களை திராவிட மாயை கொண்டு முட்டாள் ஆக்கி வைத்து இருந்தார்கள் . ஆரியம் என்பதே இந்த தேசத்தில் பிரித்து ஆளுபவர்களின் சூழ்ச்சி. உண்மை சொல்ல போனால் ஆரியர்களின் உடல் கூறு தத்துவத்தின் படி ஆரியர்கள், குறைந்த பட்சம் ஆறு அடி உயரம் இருக்கவேண்டும், கூந்தல் பொன்னிறமாக இருக்கவேண்டும்,கண்மணிகள் நீலநிறத்தில் இருக்க வேண்டும் , உடல் அமைப்பு ஒரு போர்வீரனுக்கான கட்டுஅமைப்புடன் இருக்கவேண்டும், தோல் நிறம் பொன் போல இருக்கவேண்டும், இவையெல்லாம் ராகுல சாங்கிருதியாயனின் ரிக் வேத கால ஆரியர்கள் என்ற புத்தகத்தில் உள்ள வர்ணனைகள் ஆகும். அவர் கம்யூனிஸ்ட் எழுத்தாளர் ஆவார். உண்மையில் இங்கு இந்த போலி பகுத்து அறிவு வியாதிகள் கூறும் ஆரியர்கள் யாரவது இந்த வர்ணனைஇன் பால் உள்ளார்களா? இந்த பாரத தேசத்தை பொலிவு இழக்க செய்ய மாற்று மதத்தினர் செய்யும் சூழ்ச்சிகளே இந்த ஆரியம் திராவிடம், ஜாதி பேதம். உண்மையில் முற்காலத்தில் ஜாதி என்பதே பிறப்பின் அடிப்படையில் இல்லை. எந்த வர்ணத்தின் பால் பிறந்திருந்தாலும் ஒருவன் கற்கும் கல்வியும், செய்யும் தொழிலுமே அவனின் ஜாதியை நிர்ணயம் செய்யும். முற்காலத்தில் ஜாதிகள் கிடையாது. நான்கு வர்ணங்கள் மட்டுமே.

  இங்கு ஆரியம் திராவிடம் பேசி ஹிந்து தர்மத்தை கொச்சை படுத்துபவர்கள், கூட காசு கிடைக்கும் என்றால் பெற்ற தாயை விலைபேசுபவர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  (edited and published)

 4. வழக்கம் போலவே அற்புதமாக ஆதரங்களை தொகுத்து எழுதப்பட்டக் கட்டுரை.

  நமது தேசிய கீதத்தில் வரும் பாரதம் மதிமாறனுக்குத் தெரியாமல் போனதில் வியப்பில்லை.

 5. அருமையான மறுப்புரை அன்புத் தம்பி வெங்கடேசன்! தொடரட்டும் இந்த நற்பணி.

  // இத்தேசம் புராதன நூல்களிலும், மொழிகளிலும், (வடமொழி, பிராகிருதம்) பாரதம் என்றே அறியப்படுகிறது. அதனாலேயே அக்காலக்கட்டத்தில் பலரும் ‘பாரததேசம்’ ‘பாரதம்’ என்ற பெயரையே பயன்படுத்தினார்கள் //

  பண்டைத் தமிழிலும் பாரதம் என்ற பயன்பாடு இருந்திருக்கிறது.

  பாடல்சால் சிறப்பின் *பரதத்து* ஓங்கிய
  கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி
  கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
  தான் நிலை திரியாத் தண் தமிழ்ப் பாவை

  என்று காவிரி நதியை மணிமேகலை புகழ்கிறது.

  ஜம்பு த்வீபம், பாரதவர்ஷம், பரத கண்டம் – என்று புராணங்கள் கூறும் புவியியல் கருத்தாக்கம் பண்டைத் தமிழ்ப் பண்பாட்டிலும் காணக் கிடைக்கிறது. சம்பு தீவு என்றும் நாவலந்தீவு (ஜம்பு = நாவல் பழம்) என்றும் பழந்தமிழ் நூல்கள் குறிப்பிடுவது ஜம்புத்வீபம் என்ற நிலப்பரப்பையே. சங்கத் தமிழர் வாழ்வியல் குறித்து ஆய்வு செய்த தமிழறிஞர் சண்முகம் பிள்ளை இமய மலை, கங்கை, இமயம் தொடங்கி கிழக்கிலும் மேற்கிலும் கடல்சூழ்ந்த நிலம் ஆகியவை பற்றீய குறிப்புக்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் பல இடங்களில் பயின்று வருவதை சுட்டிக் காட்டியுள்ளார்.

  மதிமாறன் போன்ற காழ்ப்புணர்வாளர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் தான் “பாரதம்” கடுப்பு ஏற்படுத்தும். உண்மையான தமிழ்ப் பண்பாட்டிற்கும், தமிழ் மரபிற்கும் “பாரதம்” என்ற கலாசார தேசிய உருவகம் முற்றிலும் ஏற்புடையதே.

 6. இதையெல்லாம் படித்த பின்னர் திருந்தும் அளவு பக்குவம் இருந்தால் ஏன் இப்படி குப்பைகளை கொட்டப்போகிறார்கள்?

  அட்டகாசமான மறுப்பு.. வாழ்க நீங்கள் ..

 7. மலையைப் பார்த்து சில கலைத்தாலும் மலை மலை தான்;
  எம்மான் பாரதி பாரதிதான்.

 8. It is unfortunate that such “Thamizh” folks have a polarized view on poets like Bharathi. If you can place the passion of Bharathi for Thamizh on one pan of the scale and the passion of thousand madhimARans in the other pan, the madhimARan pan would still be way up. These guys are so full of hatred for brahmins that they forget the yeoman service rendered by so many brahmins to the cause of Thamizh.

  (edited and published)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *