தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-3

கடந்த இருபதாண்டுகள் என நான் வேலி கட்டிக்கொண்டாலும், இப்போது மௌனமாகிவிட்ட தோப்பில் முகம்மது மீரான் இவ்வேலிக்குள் தான். முஸ்லீம் சமுதாயத்தினுள்ளிருந்து வெளிவந்த முதல் விமர்சனக் குரல் இது. என்னை ஆச்சரியப்படவைத்தது. இது எப்படி எழுந்தது, எப்படி இக்குரல் அனுமதிக்கப்பட்டது என. ஆனால் மீரான் நிகழ்காலத்தில் கால் பதிக்க வரும்போது மௌனமாகிவிட்டார். அதை முன்னெடுத்துச் சென்றுள்ளது, அந்தச் சமுதாயத்தில் ஒரு அடக்கப்பட்டுள்ள குரலாக நாம் நினைக்கக்கூடும் சல்மா. அவரது இரண்டாம் ஜாமங்களின் கதை இன்றைய தமிழ் நாவல் வளர்ச்சியில் ஒரு முக்கிய நிகழ்வு. எத்தகைய தயக்கமோ, ஒளிவு மறைவோ, சுற்றி வளைத்த கதையளப்போ இல்லாத நேரான வெளிப்படையான சமூக சித்திரம். இதுவும் ஒரு சுய விமரிசனம்தான், தெரிந்தோ தெரியாமலோ.

இவரது ஒன்றிரண்டு கவிதைகளில் கையாண்ட சொற்களைப்பற்றி எனக்குக் கேள்விகள் உண்டு. வடமொழிப் பிரயோகங்கள் ஏன் என்று. அதே விஷயங்கள் பொருட்கள் அவற்றின் தமிழ்ப் பேச்சுருவில் நாவலில் நிறைய வெகு ஆக்கிரோஷமாக வெளிப்படும்போது, நாவலில் அது மனிதர்களின் மொழியாக அது நியாயம் பெறுகிறது. அதற்கு நான் மாறு சொல்லவில்லை. ஆனால் கவிதை மொழி கவிஞரது. இங்கு கவிதையில் பழகு சொற்களை விடுத்துக் கவிஞர், அவரது மற்றக் கூட்டாளிகளைப் போல வடமொழிச் சொற்களைத் தேடிப் போவானேன் என்று, அதற்கு என் மறுப்பு. பாவனைகளின்றி கூச்சமின்றித் தன் உணர்வுகளையும், தான் அறிந்த அனுபவங்களையும் வெளியிடும் சல்மா, தம் கவிதைகளில் பாவனைகளில் சரணடைவானேன்?

ஆனால் மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த, எத்தகைய விமர்சனத்தையும் அனுமதிக்கும் கருத்துச் சுதந்திரமற்ற முஸ்லீம் சமுதாயத்தில் சல்மா பாக்கியவதி என்றுதான் சொல்லவேண்டும். தஸ்லீமா நச்ரீனுக்கும், ஹெச்.ஜி. ரசூலுக்கும் கிடைக்காத சுதந்திரம் அவருக்குக் கிடைத்துள்ளது எனக்குப் புதிராகவே உள்ளது. இந்த கருத்துச் சுதந்திரம் அவருக்குக் கட்சியில் கிடைக்காது என்பது நிச்சயம்.

இன்னொரு பயங்கர முரண், இப்பெண்ணியக் கவிஞர்களின் ஆணாதிக்கச் சீற்றம் உண்மைதானா அல்லது வெறும் பாவனையா, என்று சந்தேகப்படும் காரணங்கள் முன்னெழுகின்றன, இவர்கள் பிராபல்யம் நாடி, பதவி நாடி, அரசியல் கட்சியில் தம்மை இணைத்துக் கொள்ளுவதைப் பார்த்தால். இது ஒன்றும் இயக்கமல்ல, சுதந்திரப் போராட்ட காலத்துக் கட்சிகள் போல. அவரவர் தம் தனித்வத்தோடு தனிமனிதர்களாக ஒரு போராட்டத்தில் ஒன்று சேர்ந்தது போன்றதல்ல இது. அது ஒரு காலத்தில் இயக்கமாக, போராட்டமாக இருந்தது. அதுபற்றிய என் விமர்சனம் என்னவாக இருந்தாலும், இப்போது அது ஒரு அரசியல் கட்சி. ஒரு தலைவனின் சுயதேவைகள் கட்சியின் கொள்கையாக ஆன கட்சி. அதன் ஆரம்ப காலத்திலிருந்தே அது பெண்களை வெகு அநாகரீகமாகத்தான் பேசி வந்தது. பெண்களைப் பற்றி கொச்சையாக, ஆபாசமாக சப்புக்கொட்டிக்கொண்டு பேசிக் கூட்டத்தில் கிளுகிளுப்பு ஏற்படுத்துவதில்salma அதன் தலைவரையும் சேர்த்து அதன் பேச்சாளர்களுக்குத் தனி உற்சாகமே உண்டு. இதை நான் என் பள்ளிநாட்களிலிருந்தே அறிவேன். அவர்கள் பேச்சில் கண்ணகி நினைத்த போதெல்லாம் வந்து போனாலும், பெண் என்றாலே அவர்களிடம் காண்பது ஆணாதிக்கமும் கொச்சையான பேச்சும்தான். அத்தகைய கட்சியில்தான் இந்த பெண்ணிய வாதிகள் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பேசும் பெண்ணியம் எத்தகைய பெண்ணியம்?

G.N.Balasubramaniyamஇன்னொரு வேதனையான திருப்பத்தைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். சினிமா ஒரு வெகுஜன ஊடகம் என்பது தெரிந்ததுதான். ஆனால் ஒரு காலத்தில், இந்த வெகுஜன, பாமர ஊடகத்தில்தான், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, ஜி.என். பாலசுப்ரமண்யம், தண்டபாணி தேசிகர், ராஜரத்தினம் பிள்ளை, என்.சி. வஸந்தகோகிலம், பாபநாசம் சிவன் போன்றோர் தடம் பதித்தனர். இந்தக் கூத்தாடிகள் கூட்டத்தில் சேர்ந்ததினால் அவர்கள் கூத்தாடிகளாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தாமாகத்தான் இருந்தார்கள். அவர்கள் வெகுஜன ஊடகம் என்பதற்காக தம்மை மலினப்படுத்திக் கொள்ளவில்லை. தம் தனித்வத்தை இழந்தவர்கள் இல்லை. ஒருவேளை அது ஒரு காலம், வேறு யுகம் போலும். அந்த யுகம் மறைந்தது.

இடையில் தமிழ் சினிமா லக்ஷ்மி, அகிலன் போன்றவர்களின் எழுத்துக்களை எடுத்தாண்டது. லக்ஷ்மியும் அகிலனும் தமிழ் சினிமாவானார்கள். அதனால் யாருக்கும் காயம் சேதம் ஏற்படவில்லை. ஆனால் தன்னை, தன் தனித்வத்தை தமிழ் சினிமாவுக்கு எடுத்துச் சென்ற தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒருவர்தான். ’உன்னைப் போல் ஒருவ’னில் நாம் காண்பது ஜெயகாந்தனைத் தான். இந்த நிகழ்வு தொடரவுமில்லை. எத்தகைய ஆழ்ந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒரு நீர்க்குமிழியாக வந்தவண்ணமே மறைந்தும் விட்டது. இந்தப் பழைய விவரங்களையெல்லாம் அவை நிகழ்ந்த காலத்து அவற்றின் குணத்தைச் சொல்லத்தான். வெகுஜன ஊடகமானாலும் தம்மை இழப்பவர்கள் இழப்பார்கள். தம்மை இழக்க மறுப்பவர்கள் தம் தனித்வத்தின் மூர்த்திகரத்தின் முத்திரையை எங்கும் பதித்துத்தான் செல்வார்கள் என்பதை வலியுறுத்தத்தான். இப்போது எழுதும் கடந்த இருபது வருட கால நிகழ்வுகள் என்ற சந்தர்ப்பத்தில், சமீப காலமாக, இன்றைய பாமரத்தனமான தமிழ் சினிமா கூட ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா போன்றவர்களை – (இவர்களுக்கு சினிமா என்றால் என்ன என்று தெரியும். அதிலும் எஸ் ராமகிருஷ்ணன் உலக சினிமா முழுதுக்கும் தன் தளத்தை விரித்து ஒரு பெரிய தலையணை மொத்த புத்தகமும் எழுதியிருக்கிறார். இவ்வளவு பிரம்மாண்டத்திற்கு விஷயம் தெரிந்தவர்கள் உலகில் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது தமிழ் நாடு செய்த பாக்கியம்) அரவணைத்துக் கொண்டுள்ளது. சந்தோஷமான விஷயம்.
Jeyakanthan
மார்வாடிக் கடை கணக்கப்பிள்ளை போலத் தமிழ் சினிமாவில் நடத்தப்பட்டு வந்தவர்கள் இன்று லக்ஷக்கணக்கில் சம்பாதிப்பவர்களாகவும் பிரபலங்களாகவும் ஆகியுள்ளதும் சந்தோஷமான விஷயம்தான். நம் சந்தோஷம் அத்தோடுதான் நிற்க வேண்டும். இவர்கள் கூலிக்குக் கணக்கு எழுதுபவர்கள் இல்லைதான். அவரவர் ஆளுமை அவரவர்க்கு உண்டுதான். ஆனால் அந்த ஆளுமையை இவர்கள் தாம் சம்பந்தப்பட்ட படங்களில் நாம் காணவில்லை. நாம் காண்பது ரஜனியையும் சங்கரையும் தான். இந்த சினிமா பிரபலங்களின் அவர்கள் படங்களின் அபத்தத்திலும் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சுஜாதா எல்லோருமே தம்மைக் கரைத்துக் கொண்டுவிட்டவர்கள்தான். இது அவர்களுக்கோ நமக்கோ பெருமை தருவதல்ல. ஜெயகாந்தனைச் சொன்னேன். சினிமா என்றால் இப்படி அபத்தத்தில் மூழ்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒரு படத்தில் ஜெயமோகனின் எழுத்து பேசப்படுகிறதென்றால் அதில் அவர் முத்திரையை நாம் காணவேண்டும்.

விஜய் டெண்டுல்கர் என்னும் மராத்தி நாடகாசிரியர் ஐந்தாறு ஹிந்திப் படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அது அவர் கூலிக்கமர்த்தப்பட்ட காரியமில்லை. எனக்குத் தெரிந்து நிஷாந்த், மந்த்தன், ஆக்ரோஷ், அர்த் சத்யா என நான்கு படங்கள். இப்படங்கள் ஒவ்வொன்றும் நம் முன் விரிக்கும் உலகோடு டெண்டுல்கர் உலகும் ஒன்றிணைவது. மாறுபட்டதோ, முரண்பட்டதோ இல்லை. அவரது வசனங்கள் சின்னச் சின்ன வாக்கியங்களால் ஆனவை. நறுக்குத் தெறித்தாற்போல என்பார்களே அதுபோல. சக்தி வாய்ந்தவை. கூரிய தாக்குவலு கொண்டவை. அவர் சம்பந்தப்பட்ட படங்கள் ஒவ்வொன்றிலும் டெண்டுல்கரே வியாபித்திருப்பார். டெண்டுல்கர் பற்றி எனக்குச் சில விமர்சனங்கள் உண்டு. அது வேறு விஷயம். ஆனால் அவர் இந்திய நாடக உலகில் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்த ஒரு சிலரில் ஒருவர். அது போல அவர் சம்பந்தப்பட்டுள்ள இப்படங்களும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் அர்த்தமுள்ள, சமூக உணர்வுள்ள படங்களாக இடம் பெற்றுள்ளவை. டெண்டுல்கர் எப்படியோ அப்படி. வெற்று வசனகர்த்தாவாக அவர் இருந்ததில்லை.

தமிழ் நாட்டு உதாரணங்களைச் சொல்ல வேண்டுமானால், கருணாநிதி, அண்ணாதுரை போன்றோரைச் சொல்லலாம். அவர்களை எந்த சினிமாவுக்கு கதை வசனம் எழுதச் சொன்னாலும், தம் முத்திரையை அதில் பதிப்பிக்க அவர்கள் தவறியதில்லை. ஆனால் கடைசியில் அதை அவர்கள் அரசியல் மேடையாக்கி விடுகிறார்கள் என்பது வேறு விஷயம். இனி கடைசியாக தமிழ் இலக்கியம் பெற்றுள்ள தலித் குரல்கள். இமையம், சோ. தர்மன் இருவரும் மிக முக்கியக் குரல்கள். இவர்கள் அரசியல் வழி, சித்தாந்த குருக்கள் வழி செல்ல மறுக்கும் உண்மைக் குரல்கள். தன் சமூக விமர்சனக் குரல்கள். தலித்துகளின் வாழ்க்கை முழுதும் அரசியல் வாய்ப்பாடுகளில், சித்தாந்திகளின் பொய்களில் அடைபடுவன அல்ல. தலித் சமூகத்திலும் ‘பொட்டு கட்டுதல்’ உண்டு. அங்கும் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ‘தாசிகள்’ (செடல்) இருப்பதைக் கண்டு நாம் திகைப்படைகிறோம். அதற்கு அடிபணிய மறுக்கும், வாழ்நாள் முழுதும் போராடும் பெண்களும் தலித்துகளிடம் உண்டு என்பது ஆச்சரியம் தரும் புதிய செய்திகள்.

கிறிஸ்துவிடம் சரண் அடைந்தாலும், தலித்துகளின் அடிமை வாழ்க்கை தொடரத்தான் செய்யும் (கோவேறு கழுதைகள்). பாதிரிமார்களோ, ஒரு சிறிய அரசு நாற்காலியோ, கொஞ்சம் பணமோ கிடைத்துவிட்ட காலனி வாழும் தலித்துகளோ தம் கீழ் ஒரு சமூகம் வதை படுவதையே காண விரும்புவார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இவர்கள் அறிந்தவர்களாதலால், ‘இவர்களை மன்னியுங்கள்’ என்று இயேசுகூட கர்த்தரிடம் பிரார்த்தித்துக் கொள்வதில்லை. சோ. தருமன் தன் இரண்டு நாவல்களிலும் (‘தூர்வை’, ‘கூகை’) நமக்குச் சொல்லப்படாத, மறைக்கப்பட்ட தலித் சமூகச் சித்திரங்களை பதிப்பிக்கிறார். காலந்தோறும் நசுக்கப்பட்டவர்கள் தாம். நசுக்கப்படுபவர்கள் தாம். ஆனால், அது யாரால் என்பதுதான் மறைக்கப்படுவது. தலித்துகளிலும் சௌகரியமாக, தம் நிலபுலன்களோடு வாழ்ந்தவர்கள் உண்டு.

இவ்விருவரோடு ’கருக்கு’ எழுதிய பாமாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக இப்போது கனடாவிலிருந்து எழுதும் தேவகாந்தனைக் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். ஈழத் தமிழர்களின், அவர்கள் ஈழ வாழ்க்கையின், பின் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் சிதைவுகள், போராட்டங்களை, அதன் கடந்த 20 வருட வரலாற்றை, அதன் நிகழ்வின் போதே இவ்வளவு உடனுக்குடன் சுமார் 1300 பக்கங்களுக்கு ஐந்து பாகங்களில் விரிந்துள்ள தேவகாந்தனது ’கனவுச் சிறை’ மிக முக்கிய ஆவணமுமாகும். அப்படி ஒரு ஆவணமாகும் நாவலைத் தமிழ் நாட்டு வரலாறு இதுகாறும் பெற்றதில்லை.

இதுகாறும் நான் சொன்னதெல்லாம் தமிழுக்குச் சேர்ந்துள்ள மிக வளமான பங்களிப்புகளை. ஆனால் இப்பங்களிப்புகள் ஏதும் ஒரு ஆரோக்கியமான சமூக, இலக்கிய சூழலில் பிறந்தவை அல்ல. தம் இருப்பை வலியுறுத்தும் தம் தனித்வத்தைச் சொல்லும் எதிர் குரல்கள் எத்தகைய இருளிலும் வானம் கண் சிமிட்டும். வழி காட்டும். சாயும் வாழையின் அடியில் கன்று முளை விட்டிருக்கும்.

6 Replies to “தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-3”

 1. அற்புதமான பார்வை. ஒரு வீச்சில் எப்படி இவரால் ஆழ்ந்த அலசலின் முடிவாற்றல்களை இவ்வளவு லகுவாக படைக்க முடிகிறது? இவரது வரிகள் தொட்டுச்செல்லும் ஒரு சில கணங்களில் மிகப்பெரிய பார்வைகளை மிக சாதாரணமாக வைத்துச் சென்றுவிடும் அனுபவமும், ஆழமான பார்வையும். இந்த அற்புதத் தொடரை இங்கு வலையேற்றும் இந்த தளத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

 2. //ஆனால் மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த, எத்தகைய விமர்சனத்தையும் அனுமதிக்கும் கருத்துச் சுதந்திரமற்ற முஸ்லீம் சமுதாயத்தில் சல்மா பாக்கியவதி என்றுதான் சொல்லவேண்டும். தஸ்லீமா நச்ரீனுக்கும், ஹெச்.ஜி. ரசூலுக்கும் கிடைக்காத சுதந்திரம் அவருக்குக் கிடைத்துள்ளது எனக்குப் புதிராகவே உள்ளது. இந்த கருத்துச் சுதந்திரம் அவருக்குக் கட்சியில் கிடைக்காது என்பது நிச்சயம்.//

  சல்மா அந்தக் கட்சியில் இருப்பதால் தான் அவரின் சமுதாயம் அவருக்குக் கருத்துச் சுதந்திரம் (வேறு வழியில்லாமல்) கொடுத்திருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது.

  //அவர்கள் பேச்சில் கண்ணகி நினைத்த போதெல்லாம் வந்து போனாலும், பெண் என்றாலே அவர்களிடம் காண்பது ஆணாதிக்கமும் கொச்சையான பேச்சும்தான். அத்தகைய கட்சியில்தான் இந்த பெண்ணிய வாதிகள் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பேசும் பெண்ணியம் எத்தகைய பெண்ணியம்?//

  சரியாகக் கேட்டுள்ளீர்கள் அய்யா!

  கட்டுரையின் மூன்று பாகங்களும் அருமையாக இருந்தன. மிக்க நன்றி அய்யா.

  அன்புடன்

  தமிழ்ச்செல்வன்.

 3. அன்புள்ள அய்யா, அருமையான அலசலுக்கு நன்றி. தங்களது கட்டுரையின் மீது உள்ளர்த்தம் கற்பிக்க நினைக்கும் சிலர் திண்ணையில் எழுதி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் காலம் பதில் சொல்லட்டும். உங்களது இந்த அருமையான தொடரை தொடர்ந்து எழுதுங்கள். எங்களைப்போன்ற வாசிப்பாளர்களுக்கு உதவியயும் தரம்பிரித்தறியவும் உதவும்.

  உங்களுக்கு எனது வணக்கங்கள்.

 4. கவலைப் படாதீர்கள், ஜெயகுமார். தாஜ் கொஞ்சம் பழைய வாடிக்கைக் காரர். கொஞ்சம் மலர் தூவி, பின் தடியாலும் அடிப்பார். என்னை மதவெறியன் என்று கணித்திருப்பவர். அவருடைய சகாவான சூஃபி கவிஞரின் பெயரைச் சூடிக்கொண்டுள்ள இன்னொருவரும் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொள்வார்கள். தமிழ் எழுத்துலகில் பலருக்கு இருவரையும் நன்கு தெரியும்.

 5. தனது சொந்த ஊரில் பர்தாவுக்குள் தன்னை மறைத்துக் கொள்பவர்களை எல்லாம் தன்னை அப்படியே வெளிப்படுத்திக் கொள்ள தயங்காத ஜெயகாந்தனுடன் ஒப்பிட வேண்டாமே! சில விசயங்களை சொல்ல நினைக்கிறேன். ஆணாதிக்கம், தீண்டாமை என்பதெல்லாம் ஹிந்து என்ற சமூகத்தை மட்டும் தாக்க மட்டுமே எடுக்கப் படும் ஆயுதங்கள். தர்காவுக்குள் பெண்களை அனுமதிக்காதது பற்றி சல்மா தன் ஊரில் கூட பேச முடியாது. தலாக்கை எதிர்த்து தன் ஊர் ஜமாத்தில் பேச உள்ளே நுழையவே முடியாது என்பது தான் உண்மை. கண்ணகி பற்றி இவர்கள் பேசியது என்ன? மாரை திருகி எரிந்தால் மதுரை பற்றி எரிந்தது என்றால், அவளது மார் என்ன பெட்ரோல்பாமா என்றது தான் அவர்கள் கண்ணகி பற்றி கூறியது. ம.பொ.சி.யின் நூல்களில் ஆதாரம் உள்ளது.

 6. சில காலம் முன்பு ஒரு ஜமாஅத் தீர்ப்பு – அது என்னவென்றால் மாமனாரால் கெடுக்கப் பட்ட பெண் அதற்குப் பிறகு தனது கணவனை மகனாகப் பாவிக்க வேண்டுமாம் .அதுவும் அப்போது அவள் கர்ப்பிணி வேறு .பேஷ் பேஷ்

  இந்த பெண்ணுரிமை வாதிகளுக்கு இதெல்லாம் (காந்தி குரங்குகள் போல்) காதிலேயே விழாது, கண்ணுக்கே தெரியாது ,வாயே திறக்காது ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *