பெரியாரின் மறுபக்கம் – பாகம் 4 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு – தொடர்ச்சி)

periyar_marubakkamமசூதியில் தமிழ்: ஈ.வே. ரா போராடதது ஏன்?

சரி, வழிபாடு எந்த மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று ஹிந்துக் கோயிலுக்கு மட்டும்தானா? மற்ற மதக்காரர்களுக்கு இந்த அறிவுரை இல்லையா? முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழர்கள்தான் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது அந்தத் தமிழர்களுக்கு தி.கவினர் போராட முன்வர வேண்டும் அல்லவா! எப்பொழுதுதாவது மசூதியில் தமிழில் குரான் ஓதப்பட வேண்டும் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதுண்டா? அல்லது வீரமணிதான் சொன்னதுண்டா? இல்லையே ஏன்?

இதோ, நெல்லை மேலப்பாளையம் ரகுமானியாபுரம் வடக்குத் தெருவில் வசிக்கும் முஸ்லிம் மக்களில் 11 குடும்பங்களை சேர்ந்த சுமார் 75 பேர், பள்ளிவாசலில் தமிழில் குரான் வாசித்ததற்காகவும், மார்க்க விளக்கக்கூட்டம் போட்டதற்காகவும் ஜமாத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். (குமுதம் ரிப்போர்ட்டர் 18.05.2003) தமிழுக்காக ஏங்கும் அந்த முஸ்லிம்களின் அழுகுரல் கேட்கிறதே! அந்த அழுகுரல் தமிழர் தலைவரான உங்கள் காதுகளில் விழவில்லையா? அல்லது விழுந்தும் பயத்தில் வேர்த்து இருக்கிறீர்களா?

கோயிலில் தமிழ் அர்ச்சனை வேண்டுமா, வேண்டாமா என்று பட்டிமன்றம் முதல் மாநாடு வரை கூடி விவாதிக்கும் தமிழ் அறிஞர்கள் மற்றும் தி.க. வினர் இந்த சமயத்தில் மட்டும் எங்கு தொலைந்து போனார்களோ தெரியவில்லை!

தமிழில் மசூதியில் வழிபாடு நடத்தக்கூடாது என்று சொன்ன முஸ்லிம்களை இதுவரை வீரமணி கண்டிக்காதது ஏன்? இதுவரை அதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தாதது ஏன்? தமிழில் வழிபாடு நடத்தியதால் ஜமாத்திலிருந்தே விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றால் விலக்கியவர்கள் தமிழ்மேல் எவ்வளவு வெறுப்பு கொண்ட முஸ்லிம்களாக இருக்கவேண்டும்? அவ்வளவு வெறுப்புக் கொண்ட முஸ்லிம்களை இதுநாள்வரை வீரமணியோ, மற்ற தமிழறிஞர்களோ கண்டிக்க முன்வரவில்லையே! இதுதான் தமிழ்பற்றா? இதுதான் தி.க.வினர் தமிழுக்கு ஆற்றும் தொண்டா?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்துகளைத் தாங்கிவரும் இதழ் ‘நந்தன் இதழ்.’ ஈ.வே. ராமசாமி நாயக்கரை யாராவது விமர்சித்ததால் உடனே ‘நந்தன்’ இதழில் மறுப்புரை வரும். தலையங்கத்திலேயே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் படம் போட்டுதான் வரும். அந்த அளவுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரை துணைகொண்டு வரும் ‘நந்தன்’ (99 நவம்பர் 1-15) இதழ், ‘குழப்பவாதிகள்’ என்னும் தலையங்கத்தை எழுதியிருக்கிறது.

இதோ அந்தத் தலையங்கம்:-

‘முதல் மாதம் என்பதற்காகச் சித்திரையில் விதைப்பதில்லை. மூத்தவர்கள் சொல்வதெல்லாம் தத்துவங்கள் ஆவதில்லை.

அண்மையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகக் கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஆளுநர் சி. சுப்ரமணியம் அவர்கள் இந்தியாவின் இரண்டாவது ஆட்சிமொழியாக ஆங்கிலம் நிரந்தரமாக ஆக்கப்படவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் இந்நேரத்தில், இத்தகைய குழப்பமான, பிற்போக்கான கருத்துக்களை சி. சுப்ரமணியம் போன்றவர்கள் வெளியிடுவது அவர்களை மூத்த அறிஞர்களாகக் காட்டவில்லை. முதிர்ந்த குழப்பவாதிகளாகத்தான் காட்டுகிறது. தினமணி போன்ற ஏடுகள் இக்கருத்தை ஆதரிப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கின்றது.

கால் நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த மொழிப்போராட்டத்தின்போது ஒரு வரலாற்றுப் பிழை நேர்ந்தது. இந்தி மொழியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் ஒரு சேர எதிர்க்கத் தவறியதால் நேர்ந்த பிழை அது! இந்தி எப்படி நமக்கு அந்நிய மொழியோ ஆங்கிலமும் அப்படித்தான். இதனை நாம் கணிக்கத் தவறிய காரணமத்தினால்தான் ‘பேச்சுத் தமிழ்’ ஆங்கிலத்தின் ஆக்கிரமிரப்பால் சீரழிந்து போய்விட்டது. ‘மணிப்பிரவாள’ நடையில் இருந்து தமிழை மீட்டு தமிங்கில நடைக்குத் தாரை வார்த்துவிட்டோம். இந்த வரலாற்றுப் பிழையை நேர் செய்தாக வேண்டும். ‘தொடர்பு மொழியாக’ ஆங்கிலம் வேண்டும் என்பதெல்லாம் இந்த விஞ்ஞான யுகத்தில் அறியாமையின் விளைவால் எழும் வீண்வாதங்கள். ஒலியின் வேகத்தையும் விஞ்சுகிறது கணினிகளின் மொழிமாற்றும் திறன்வேகம்!

இந்நிலையில் இந்தி, ஆங்கிலம், இந்த இரண்டு அந்நிய மொழிகளின் ஆதிக்கங்களையும் அகற்றிவிட்டுத் தமிழைத் தமிழ்நாட்டின் ஒரே பயிற்று மொழியாக தமிழ்நாட்டில் ஒரே ஆட்சி மொழியாக, இந்தியாவின் ஆட்சி மொழிகளில் தமிழையும் ஒன்றாக ஆக்குவது ஒன்றே தமிழை வாழ்விக்கும், தமிழரை வாழ்விக்கும் ஒரே வழியாகும்.

இன்று இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருந்து வருகிறது. இரண்டாவது ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் அரியணையில் ஏற்றிவிட்டால் தமிழ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும்.

தமிழைத் தமிழ்நாட்டின் பயிற்று மொழியாகவும் இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் கொண்டுவருவதற்காக, தமிழ் உணர்வாளர்கள் போராடுவது மட்டும் போதாது. ஆங்காங்கே முளைவிடும் இத்தகைய அடிமைச் சிந்தனைகளையும் நாம் மூர்க்கமாக எதிர்த்திட வேண்டும்.
இல்லையென்றால் எதிர்வரும் நூற்றாண்டிலும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகக்கூட அல்ல, மூன்றாந்தரக் குடிமக்களாகத்தான் வாழநேரும்.’’

இந்தத் தலையங்கத்தில் ‘நந்தன்’ இதழ், இரண்டு முக்கிய விஷயங்களை தெளிவுபடுத்துகிறது.

1. ஹிந்தியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் எதிர்க்க தவறிவிட்டோம்.

2. தமிழ் ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பால் சீரழிந்து விட்டது. அதனால் ஆங்கிலம் வேண்டாம்.

இந்த இரண்டு விஷயங்களை ஆராயும் முன் ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம்.
‘தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்காதே’ என்ற கோஷம் 1926-ப் பிறகுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரால் எழுதப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் ஹிந்தியை வித்திட்டவர் யார் தெரியுமா? சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்காதே என்று எந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரோ அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழ்நாட்டில் இந்திக்கு வித்திட்டார்.

கவிஞர் கலைக் களஞ்சியம் இதைப்பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதோ அந்தக் கட்டுரை!

‘பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர். இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.

‘திரு.வி.க. வின் வாழ்க்கை குறிப்புகள்’ என்ற நூலில் பக்கம் 436-ல் ‘ராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே’ என்ற திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டு வரை பார்ப்பனர்களின் தாசனாக விளங்கி வந்த பெரியார் ஈ.வே. ரா. 1925-க்குப் பிறகு அவர் பார்ப்பனர்களின் சிம்ம சொப்பனமாய் விளங்கி அவர்களின் எதிரியானார். அவர் தனது முதல்கட்டமாக அவரால் வித்திடப்பட்ட இந்தி மொழியை எதிர்க்க ஆரம்பித்தார்.

‘சித்திர புத்திரன்’ என்ற புனைபெயரில் பெரியார் ஈ.வே.ரா. 07-03-1926-ல் தனது குடியரசு இதழில் ‘தமிழுக்குத் துரோகமும் இந்தி மொழியின் ரகசியமும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

அரசுப் பணியாளர்கள்தான் அரசுக்குப் பயந்து தங்கள் கட்டுரைகளை இதழ்களில் புனைபெயர்களில் வெளியிடுவார்கள். ஆனால் பெரியார் ஈ.வே.ரா. அவர்களோ அரசு பணியாளர் அல்ல. அப்படியிருக்க அவர் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் அக்கட்டுரையை எழுத வேண்டிய அவசியம்தான் என்ன?

பெரியார் ஈ.வே.ரா. இந்தி எதிர்ப்புக் கட்டுரையை தனது பெயரில் வெளியிடாமல் புனைபெயரில் வெளியிட்டமைக்குக் காரணம், பெரியார் ஈ.வே.ராதான் அக்கட்டுரையை எழுதினார் என்ற உண்மையை பார்ப்பனர்கள் அறிவார்களேயானால் அவர்கள் பெரியார் ஈ.வே.ராவைப் பார்த்து ‘நீதானே தென்னாட்டில் இந்திக்கு வித்திட்டாய்’ என்று பரிகாசம் செய்வார்களே என்பதற்குப் பயந்தே அவர் அவ்வாறு செய்தார்.

1917-ல் ஹிந்தியை காந்தி ஆதரிக்க, அதை நீதிக் கட்சியினர் எதிர்த்த போது நீதிக்கட்சிக்கு ஆதரவாக அந்நாளில் ஹிந்தியை எதிர்க்காத பெரியார் ஈ.வே.ரா. 1926-ல் ஹிந்தியை எதிர்க்க அப்படி என்ன அவசியம் வந்தது?

மூன்றாம் வகுப்புவரை திண்ணைப் பள்ளியில் படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் கற்று 11 வயதில் நான்காவது வகுப்பு தேறியதும் படிப்பை நிறுத்திவிட்டு தனது தந்தையாரின் மண்டியில் வேலை செய்ய ஆரம்பித்த கன்னடத்துக்காரரான பெரியார் ஈ.வே.ராவுக்கு தமிழர்களில் எவருக்குமே இல்லாத அளவிற்கு தமிழர்களின் மீதும், தமிழ்மொழியின் மீதும் திடீரென்று அவரது 47-வயதில் பாசமும், பற்றும், பீறிட்டுவரக் காரணம்தான் என்ன? அவருக்கு ஆகாத பார்ப்பனர்களுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்தெழ வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம்.

தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் பற்றுடையவர் போல நடந்து கொண்டு வந்த பெரியார் ஈ.வே.ரா நாளடைவில் அவரது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

1.6.1954-ல் வெளியான ‘விடுதலை’ இதழில் பெரியார் ஈ.வே.ரா, ‘நீ ஒரு கன்னடியன். எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம் என்று என்னைக் கூடக்கேட்டார்கள். தமிழன் எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா என்றேன். இதற்குக் காரணம் ஒரு தமிழன் இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக்கொண்டிருக்கவே மாட்டான்’ என்கிறார்.

‘‘தமிழ் மொழி நம்முடைய தாய்மொழி; அஃது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி, சமயத்தை வளர்க்கும் மொழி; பழமையின் மொழி; உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லப்படுகின்ற காரணத்தால் நான் ஹிந்தியை எதிர்த்துப் போராடவில்லை’’ என்றும் “ஹிந்தி எதிர்ப்புத் தமிழுக்காக அல்ல’’ என்றும் ‘‘என்னைப் பொருத்தவரையிலும் ஹிந்தியைப் பற்றிக் கவலை இல்லை. தமிழைப் பற்றிய பிடிவாதமும் இல்லை’’ என்றும் அவர் பலமேடைகளில் பேசியும், கட்டுரைகளாக பல்வேறு ஏடுகளில் எழுதியும் வந்தார் என்று டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் ‘தந்தை பெரியார் சிந்தனைகள்’ என்ற தனது நூலில் வெளியிட்டு இருக்கிறார்.

1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் 03.03.1965-ல் ‘‘விடுதலை’’ இதழின் தலையங்கத்தில் ‘‘இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகிவிட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதிவருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழை கெடுத்துவிட்டார்கள்” என்றும், “காமராஜர் ஆட்சி அவசியமா, இந்தி ஓழியவேண்டியது அவசியமா என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்’’ என்றும், 08-03-1965-ல் ‘விடுதலை’ இதழின் தலையங்கத்தில் ‘‘தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை, தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும் இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ, வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி’’ என்றும் அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்.

1965-ல் தமிழ்நாட்டில் நடந்தேறிய மாணவர்களது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவே 1967ல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்று அத்தோடு அக்கட்சி தமிழ்நாட்டில் தலைதூக்க முடியாமல் வீழ்ச்சியுற்றது.

kamarajar-anna1967-ல் நடந்த தேர்தலில்போது பெரியார் ஈ.வே.ரா ஆதரித்து வந்த காங்கிரசும், காமராஜரும் தோற்று, அறிஞர் அண்ணா முதல்வரானதை விரும்பாத பெரியார் ஈ.வே.ரா. 01.10.1967ல் ‘விடுதலை’ .இதழில் ‘‘தமிழனுக்கு இன உணர்ச்சி இல்லை. ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் துரோகச் செயல், ஒருவன் மீது ஒருவன் பொறாமை கொள்ளும் இழிசெயல் இல்லாத தமிழன் அரசியலிலோ, மத இயலிலோ, தமிழ் இயலிலோ, தமிழனில் நூற்றுக்கு பத்து பேர் இருக்கிறார்கள் என்று யாராவது காட்டமுடியுமா?’’ என்று வெளியிட்டுள்ளார். அதன் பொருள் தமிழனாகிய அறிஞர் அண்ணா மற்றொரு தமிழனாகிய காமராஜரை காலைவாரிவிட்டார் என்பதுதான்.

“பெரியார் ஈ.வே.ராவின் பேச்சுக்களையும் செயல்களையும் வைத்துப் பார்க்கும்போது அவர் தமிழர் மீதும், தமிழ் மொழி மீதும் வைத்திருந்த பற்றும், பாசமும் உண்மை இல்லை என்பதும், இந்தியை அவர் உள உணர்வோடு எதிர்க்கவில்லை என்பதும், பார்ப்பனர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்புதான் இந்தியை அவர் எதிர்க்க காரணம் என்ற உண்மையுமன்றோ புலப்படுகிறது’’
(புதிய கோடாங்கி, ஏப்ரல்-2003)

கவிஞர் கலைக்களஞ்சியம் சொல்வதுபோல ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஹிந்தி மொழி எதிர்ப்புக்குக் காரணம் பார்ப்பனர்களின் மேல் இருந்த வெறுப்புதான் என்பதை அறியலாம்.

மேலும் ஒரு கருத்தை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும் கூறுகிறார்.

paavaanar1பாவாணர், ‘‘(பெரியார்)… இந்தியையும் தமிழ்ப்பற்றால் எதிர்க்கவில்லை. பேராயத்தைத் தாக்க இந்தியெதிர்ப்பு ஒரு நல்ல கருவியாய்க் கிடைத்ததென்றே வெளிப்படையாய்ச் சொன்னார்’’ என்று கூறுகிறார். (நூல்: பாவாணர் வரலாறு)

ஆக இந்தியெதிர்ப்பு தமிழ்ப் பற்றால் அல்ல என்பது தெளிவாகிறது.

இனி நந்தன் இதழ் விஷயத்திற்கு வருவோம். ஹிந்தியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் எதிர்க்க தவறிவிட்டதற்கு காரணம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான். ஆம். அந்த வரலாற்றுப் பிழையைச் செய்து ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இருந்த ஆங்கிலப் பற்றுதான், அதை எதிர்க்க தவறிவட்டதற்கு காரணம். நாம் ஏற்கனவே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆங்கிலமோகம் பற்றி பார்த்தோமல்லவா!

மேலும், நந்தன் இதழ் கொண்டாடுகிற ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆங்கில மோகத்தைப் பார்ப்போம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

*நான் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் சொல்லித்தர வேண்டும் என்றும் மூன்றாம் வகுப்பிலிருந்து மாத்திரமல்லாமல் எழுத்தாணிப் பால் குடிக்க வைக்கும் போதே ஆங்கிலத்தில் துவைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுகிறேன்.
(விடுதலை. 18-10-1962)

*ஆங்கிலம் சீர்திருத்தத்திற்கு ஏற்ற பொருள் உள்ள மொழி, எளிதில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழி. ஆங்கிலம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு நாம் அறிவு பெற முடியும். ஆகையால் ஆங்கிலம் வளர வேண்டும்.
(விடுதலை. 06-07-1968)

*மற்ற உலக நாடுகள் பெற்றுள்ள வளர்ச்சியும் விஞ்ஞான அறிவும் நமக்கு வேண்டாமா? தமிழையும் இந்தியையும் பார்த்துக் கொண்டிருந்தால் எந்த அறிவுதான் நமக்கு வரும்? உலக அறிவைப் பங்கு போட்டுக் கொள்ள ஆங்கிலமொழி அவசியம் நமக்குத் தேவை.
(விடுதலை. 29-06-1968)

*ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பிவர இயலும்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுதி-II)

இதிலிருந்து தெரிவதென்ன? ஆங்கிலத்தை எதிர்க்காததற்குக் காரணம் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கில மோகம்தான் என்பது தெளிவாகிறதல்லவா!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கருத்துக்களைத் தாங்கி வரும் நந்தன் இதழ், ஆங்கிலம் வேண்டும் என்று சி. சுப்பிரமணியம் சொன்னதால் அவரை முதிர்ந்த குழப்பவாதி என்கிறது. ‘நந்தன்’ வழிப்படிப் பார்த்தால் ஆங்கிலம் வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூட முதிர்ந்த குழப்பவாதிகள்! ஆம். ‘நந்தன்’ கொள்கைப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் குழப்பவாதிதான்.

நந்தன் இதழ், ஆங்காங்கே முளைவிடும் இத்தகைய (ஆங்கிலம் வேண்டும்) அடிமைச் சிந்தனைகளையும் நாம் மூர்க்கமாக எதிர்த்திட வேண்டும் என்று சொல்கிறது. ‘நந்தன்’ வழிப்படி, முதலில் எதிர்க்க வேண்டியது ஆங்கிலம் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிமைச் சிந்தனைகளைத்தான்.

ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கிலமோகம் பற்றியக் கருத்துக்களை தமிழர்கள் படிக்கும்போது அந்த அடிமைச் சிந்தனையில் அகப்பட்டுக்கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்ன ஆங்கில மோகம் பற்றியக் கருத்துக்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய அறியாமையின் விளைவால் எழும் வீண்வாதங்கள் என்று கருதி தமிழர்கள் அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.

நந்தன் சொன்னபடி, எதிர்வரும் நூற்றாண்டிலும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகக் கூட அல்ல, மூன்றாந்தரக் குடிமக்களாக வாழ நேரிடும் அவலநிலைக்கு வராமல் தடுக்க வேண்டுமென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கிலமோகம் பற்றியக் கருத்துக்களை தமிழர்கள் முதிர்ந்த குழப்பவாதியின் கருத்தாகக் கருதி அதை ஒதுக்கிவிட வேண்டும்.

(‘நந்தன்’ இதழின்படிப் பார்த்தால், ‘நந்தன்’ இதழ் எதிர்க்க வேண்டியது ஈ.வே. ராமசாமி நாயக்கரைத்தான், சி. சுப்பிரமணியத்தை அல்ல. ஆங்கிலம் வேண்டும் என்று சொன்ன சி. சுப்பிரமணியம் மட்டும் முதிர்ந்த குழப்பவாதியாம். ஆனால் ஆங்கிலம் வீட்டுமொழியாக, நாட்டுமொழியாக ஆக வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் மட்டும் தமிழுக்காக பாடுபட்டவராம். ‘நந்தன்’ இதழின் இந்த ஓரவஞ்சனையை என்னவென்று சொல்லுவது?

ஈ.வே.ராவைப் பற்றி பாவாணர்:

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழுக்காக என்ன செய்தார் என்ற கேள்வி நமது உள்ளங்களிலே எழுமானால் அதற்கு விடையாக ஒன்றுமில்லை என்ற பதில்தான் வரும். ஆனால் தமிழுக்காக ஒன்றுமே செய்யாத ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆங்கிலத்திற்காக நிறைய செய்திருக்கிறார். இதை நாம் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதிலிருந்து பல தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அந்த கடிதம்!

தமிழ் நாட்டுத் தந்தை ஈ.வே.ரா. பெரியார் அவர்கட்கு ஞா. தேவநேயன் எழுதுவது, வேண்டுகோள்.

அன்பார்ந்த ஐயா,

வணக்கம்.

தாங்கள் இதுவரை அரை நூற்றாண்டாகக் குமுகாயத்(சமுதாய) துறையிலும் மதத்துறையிலும் தமிழ்நாட்டிற்கு செய்து வந்த அரும்பெருந்தொண்டு அனைவரும் அறிந்ததே. ஆயின் மொழித்துறையில் ஒன்றும் செய்யவில்லை. ஒரு நாட்டு மக்கள் முன்னேறும் ஒரேவழி அவர் தாய்மொழியே. ஆசிரியப் பயிற்சிக் கலைக்கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உரூபா மானியமாக உதவினீர்கள். இந்நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை.

ஆதலால், தாங்கள் பெயர் என்றும் மறையாமலும் தங்கள் தொண்டின் பயன் சிறிதும் குறையாமலும் இருத்தற்குக் கீழ்க்காணுமாறு பெரியார் தென்மொழிக் கல்லூரி எனச் சென்னையில் ஒரு கல்வி நிலையம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகிறேன்.

அன்பன்
ஞா. தேவநேயன்.

குறிப்பு:- திருவள்ளுவர் ஆண்டு 2000 ஆடவை கங-ஆம் பக்கத்தில் 25-06-1969 அன்று இதன் சுருக்கம் வேலூர் நகர சபைத்தலைவர் திரு.மா.பா.சாரதி அவர்களின் தம்பி மகன் திரு.அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை.

ஞா.தே.
(தென் மொழி. 7:10, 11 பக்கம்-22-24)
(நூல்:- பாவாணர் வரலாறு)

இந்த கடிதத்திலிருந்து நமக்கு தெரிவதென்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் மொழித்துறையில் அதாவது, தமிழுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று, நாம் கூறவில்லை; தமிழுக்காக தன் வாழ்நாள் எல்லாம் உழைத்திட்ட பாவாணர் கூறுகிறார். இத்தனைக்கும் பல ஆண்டுகள் பாவாணர் ஈ.வே. ராமசாமி நாயக்கருடன் இணைந்து சமூகப் பணியாற்றியவர். ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழக மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழித்திட்டவர் என்றெல்லாம் பாராட்டிய பாவாணர் தான் ஈ.வே.ரா. மொழித்துறையில் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுகிறார்.

மேலும் ஆங்கில கலைக்கல்லூரிக்கு ஈ.வே.ரா ஐந்திலக்கம் ரூபாய் கொடுத்துள்ளார். தமிழ்வழிக் கல்லூரிக்கு அல்ல. தமிழுக்கு ஒன்றுமே செய்யாத ஈ.வே.ராவைத்தான் தமிழுக்காகப் பாடுபட்டவர் என்று சொல்லித் திரிகின்றோம். இது வெட்கக்கேடான விஷயமல்லவா!

இதிலே கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம், பாவாணர் கடிதத்தை நேரில் கொடுத்தும் ஈ.வே. ராமசாமி நாயக்கரிடமிருந்து பதில் இல்லை. ஈ.வே.ராவுக்கு தமிழ்மொழிமேல் பற்று இருந்தால்தானே பதில் கடிதம் அனுப்புவார்? அவரிடமிருந்து பதில் எதிர்பார்த்தது மலடியிடம் பிள்ளையை எதிர்ப்பார்ப்பது போல்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழ்மொழியை மட்டும் வெறுக்கவில்லை. தமிழ்ப் புலவர்களைக் கூட வெறுத்தார். சங்ககாலப் புலவராகட்டும் அல்லது அவருடன் வாழ்ந்த பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த கவிஞர்களாகட்டும் – அவர்கள் தமிழ் புலவர்களாக, கவிஞர்களாக இருந்தால் அவர்களின் மேல் ஈ.வே.ராக்கு வெறுப்புத்தான் இருக்கும்.

தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர் போன்ற சங்ககாலப் புலவர்களை ஈ.வே.ரா. எப்படியெல்லாம் திட்டினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அதேப்போல் பாரதிதாசனும், பட்டுக்கோட்டை அழகிரிசாமியும் ம. பொ. சிவஞானமும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வெறுப்புக்குத் தப்பவில்லை. இவர்கள் ஆதரிப்பவர்களையும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் வெறுத்தார். அந்த உண்மைகளைச் சற்றுப் பார்ப்போம்.

பாரதிதாசனுக்குப் பணம் எதற்கு?

bharathidasan_01பாட்டின் மூலம் நாட்டின் மறுமலர்ச்சிக்குத் தேவையான பகுத்தறிவுச் சிந்தனையையும், தனித்தமிழ்ப் பற்றையும் வளர்த்த பெருமை பாவேந்தர் பாரதிதாசனையே சாரும். அவரை சிறப்பிப்பது தமிழன்னையைச் சிறப்பிப்பது போன்றதாகும் என்று அண்ணா கருதினார். ஆகவே தோழர்கள் முல்லை முத்தையா, டி.என். இராமன் முதலானோரின் ஓத்துழைப்புடன் கவிஞருக்கென ரூ. 25,000 ரூபாய் திரட்டப்பட்டது.

28.07.1946 ஆம் ஆண்டு ஞாயிறு அன்று நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பாரதிதாசனுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

பகுத்தறிவுவாதிகளுக்கெல்லாம் அன்று ஒரே சந்தோஷம்.

ஏன் தெரியுமா?

சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்ட பாரதிதாசன் அவர்களது தமிழுக்கு அங்கீகாரம் பெற்ற விழா எனலாம் இதனை! அதோடு மாற்றார் எவ்வளவு இருட்டடிப்புச் செய்திடினும் எங்களாலும் பணம் சேர்த்து முடிப்பு அளிக்க முடியும் என்பதை உணர்த்திய விழா.. சுயமரியாதைக்காரன், நாஸ்திகன் என்று ஏளனமாகக் கருதப்பட்டவர்களுக்கும் ஒரு கவிஞன் உண்டு. அவன் புரட்சிக் கவிஞன் என்றெல்லாம் சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

ஆனால் ஒரே ஒரு தலைவருக்கு மட்டும் இதில் உடன்பாடு இல்லை. அவர் யார் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான்.

அவருக்குத்தான் இதில் சற்றும் உடன்பாடு இல்லை. ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘பாரதிதாசனுக்கு என்ன வந்தது? இரண்டு பாட்டுப் பாடிவிட்டால் ஒரு புலவர். அவருக்கெல்லாம் பண முடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாத்துரையின் முயற்சி. எதற்கும் கேட்டுச் செய்ய வேண்டாமோ’’ என்று கண்டித்தார்.

(நூல்: பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு – மறைமலையான்)

பாரதிதாசனுக்கு பணமுடிப்பு என்று சொன்னவுடன் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு எவ்வளவு வெறுப்புப் பாருங்கள். இவருக்கு பணமுடிப்பு கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார். ஆனால் பாரதிதாசனுக்கு பணமுடிப்புக் கொடுத்தால் வெறுப்பைக் கக்குவார்.

கேட்டுச் செய்ய வேண்டாமோ என்று கேட்கிறார். கேட்டிருந்தால் கண்டிப்பாக ஓத்துக் கொண்டிருக்கமாட்டார் என்பதை அவரது பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரும் பல விஷயங்களை கழகத்தவரை, முக்கியமாக அப்போது பொதுச் செயலாளராக இருந்த அண்ணாதுரையை, கேட்காமலேயே செய்திருக்கிறார். 1947-ஆகஸ்ட்டு 15ம் நாள் திராவிடருக்குத் துக்கநாள் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் எவரையும் கலக்காமல் அறிக்கைவிட்டார். தன்னுடைய திருமணம் போன்ற விஷயங்களில் கூட கழகத்தவரை கேட்காமலேயே செய்திருக்கிறார்.

அதனால் கேட்டு, செய்ய வேண்டாமோ என்ற கேள்வியை கேட்க ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குத் தகுதியில்லைதானே!

– தொடரும்.

5 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 4 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு – தொடர்ச்சி)”

 1. // மசூதியில் தமிழ்: ஈ.வே. ரா போராடதது ஏன்? //

  மிக அருமையான கருத்துகள்.

  நானும் பலகாலமாக கேட்கும் கேள்வி இது. யாரும் இதுவரைக்கும் பதில் சொல்லவில்லை 🙁

 2. // மசூதியில் தமிழ்: ஈ.வே. ரா போராடதது ஏன்? //

  மசூதியில் தமிழனும் தமிழும், இந்த அளவுக்கு இழிவுப்படுத்த படவில்லை..

  கோயில் நுழைவு போராட்டம் நடத்தும் கட்டாயத்தை, இந்து மதம்தான் ஏற்படுத்தியதேயல்லாமல்…..மசூதிகள் ஏற்படுத்த வில்லை.

  இஸ்லாத்தில் அனைவரும் சகோதரர்கள்..

  இந்து மதத்தில் தேவர், பறையர்….

  உண்மையிலேயே சமூக அக்கறை இருந்தால், முதலில் இதை கண்டியுங்கள்….

 3. திரு மகிழ்நன் அவர்களின் 29 ஜூன் கடிதத்தில் “மசூதியில் தமிழும் தமிழனும் இந்த அளவுக்கு இழிவு படுத்தப் படவில்லை” என்று கூறிய கூற்று “எந்த அளவுக்கு?” என்று விளங்கவில்லை. பொதுவாக நபிகள் பெருமானால் அருளப்பட்டதாகச் சொல்லப்படும் திருக்குரானை அதன் மூல மொழியில் தான் தமிழர்கள் உட்பட உலகின் எந்த மொழியினரும் படித்து வழிபடுவதாகவே நாம் அறிகிறோம். மறை நூலில் உள்ள மூலத்துக்கு விளக்கம் வேண்டுமானால் தமிழ் உட்பட அவரவர் மொழிகளில் சொல்லப்படலாம்.
  தமிழ் அல்லாத வேற்று மொழியில் இருப்பதால் அதைப் புனித நூலாக ஏற்க முடியாது என்று எந்த இஸ்லாமிய சகோதரரும் சொன்னதாகத் தெரியவில்லை.
  மற்றபடி தமிழ் அங்கு இழிவு படுத்தப் படுவதாக நாம் கூறவில்லை.
  ஆனால் கோயில்களின் கதையே வேறு. இங்கு தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றை அவை தமிழில் இருப்பதற்காக யாரும் நிராகரிக்கவில்லை. மாறாக, சம்ஸ்கிருத வழிபாட்டு மந்திரங்களையும் ஸ்தோத்திரங்களையும் தான் ஒரு சாரார் வெறுத்து உமிழ்கிறார்கள்.
  ஒரு மொழியில் அர்ச்சனை செய்வது இன்னொரு மொழியை அவமதிப்பதாக இங்கு திட்டமிட்டு வெறுப்புணர்ச்சி கிளறப்பட்டு வந்துள்ளது. கோயில்களில் வழிபடுவதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதாக யார் சொன்னார்கள்?
  இதில் இஸ்லாத்தையும் ஹிந்து சமயத்தையும் ஒப்பீடு செய்யத் தேவையே இல்லை.
  அடுத்தது ஜாதிப் பாகுபாடு பற்றியது. இஸ்லாத்தில் எல்லோரும் சகோதரர்கள் என்கிறார் திரு மகிழ்நன். சகோதரத்துவம் அங்கு இருப்பது பற்றி எழுதினால் மகிழ்ச்சி. அனால், அரச வம்சத்து ஸ்ரீ ராமனும் படகோட்டி குஹனும் பறவை இனத்து ஜடாயுவும் குரங்கு இனத்து சுக்ரீவனும் அரக்கர் இனத்து விபீஷணனும் உறவினர் என வாழ்ந்து காட்டிய பரம்பரைப் பெருமையைச் சிறுமையாகக் கருதும் பிரிவினருக்கு ஹிந்து சமயத்தில் ஜாதி ஏற்றத் தாழ்வு இருப்பதாகத் தான் தெரியும். பிராமணனாகப் பிறந்த எல்லோரும் கோயில்களில் கருவறையில் நுழைந்துவிடுவதில்லை. ஏதோ கருவறையில் நுழைந்துவிட்டால் உடனே ஒருவருக்கு முக்தி கிடைத்துவிடுவது போலவும் அங்கு நுழைய உரிமை இல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள், அவர்களுக்கு முக்திக்கு வழி மறுக்கப்படுகிறது போலவும் அவர்கள் ஒதுக்கப் பட்டவர்கள் என்பது போலவும் நடத்தப் படுகின்ற பிரச்சாரங்களை உண்மை என்று நம்புமுன் தயவு செய்து ஹிந்து சமயத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று ஆத்திகம் நாத்திகம் என்று விவாதியுங்கள்; அல்லது ஹிந்து சமயமா இஸ்லாமா? என்று விவாதியுங்கள். இந்த இரண்டு தலைப்புகளும் வெவ்வேறானவை என்பதையாவது புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

 4. brilliant
  the article has taken the mask off EVR and the so-called ‘self-respect(less) frauds.
  all they are interested in is money and power and nothing else

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *