இந்திய இசை அமைப்பில் மிக முக்கியமான அம்சம் ரஸபாவம். ஒரே ஒரு ராக ஆலாபனையை பல மணிநேரங்கள்கூட செய்ய முடியுமென்றால் அதற்கு ரஸபாவமே காரணம். ஆரோகனம்,அவரோகனம் என ஏறி இறங்கும் சுரக்கோர்வை, மீண்டும் மீண்டும் மாற்றங்களுடன் பாடும் சுரங்கள் என அலைபோல இருக்கும் இசை வடிவம் இந்திய இசையின் அடிநாதம். ஏற்ற இறக்கங்கள் இல்லாத இசை கோர்வைகளே இருக்காது. தட்டையான வடிவத்தில் இந்திய இசையில், குறிப்பாக கர்நாடக இசையின் எல்லைகளைத் தொட முடியாது.
கொஞ்சம் கொஞ்சமாக சுரங்களை பின்னிப்பின்னி ஒரு சுரமாலையைக் கட்டுவர். அவை கொள்ளும் வெவ்வேறு வடிவங்களே ராகமாகும். பல ராகங்களை ஒன்றாய் வரிசையாகப் பாடுவது ராகமாலிகா எனப்படும். நம் கர்நாடக இசை ராகங்களை அடிப்படையாகக் கொண்டதனால், வடிவத்திலும் கட்டமைப்பிலும் அவற்றை மீற முடியாது.
ஒவ்வொறு ராகத்திற்கும் சில ரஸங்களுண்டு. ரஸங்களை நாம் அழகியலோடு ஒப்பிட முடியும். காலை ராகம், மாலை ராகம், கோபம் / அழுகை / சிரிப்பு போன்ற உணர்ச்சிகளையும் ராகத்திற்கான அர்த்தங்களாய் கொள்ளலாம். காலப்போக்கில் இந்த அர்த்தங்கள் அழிந்து வந்தாலும், இன்றும் திரைப்படங்களில் மெல்லிசை பாடல்கள் அந்தந்த உணர்வுகளை மீட்கவே ராகங்களின் அடித்தள அர்த்தங்களைக் கொண்டு எழுதப்படுகின்றன.
அடிப்படையில் கர்நாடக சங்கீதம் பக்தி பாவத்திற்கே முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளது. இதற்கு மும்மூர்த்திகள் ஒருகாரணாயிருந்தாலும், அடிப்படையில் கர்நாடக சங்கீதத்தின் சாரம் வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் இருப்பதாய் கூறுகின்றனர். இதன் உண்மையை பற்றி ஆராயாமல், பக்தி பாவத்தின் ஒருங்கிணைப்பை கர்நாடக சங்கீதத்தில் பார்க்கலாம். தென் இந்தியாவில் இசை, குறிப்பாக கர்நாடக இசை ஒரு ஒலி வடிவமாய் மட்டும் இல்லை. பல நூற்றாண்டுகளாக நடனத்திற்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருக்கிறது. சாத்தனார் இயற்றிய கூத்த நூலில் நாட்டியத்திற்கான அடிப்படை விளக்கப்பட்டுள்ளது. ஒன்பது பகுதிகளைக் கொண்ட கூத்த நூலில் 108 தாளஙகளும், சுவை மற்றும் தொகை பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. பரதரும் நாட்டிய சாஸ்திரத்திற்கு அடிப்படை நூலை எழுதியுள்ளார்.
இவை இரண்டிலும் இருக்கும் ஒரு பொதுத்தன்மை – இசைக்கும் நாட்டியத்திற்கும் இருந்த தொடர்பு. இசை உணர்த்தக்கூடிய ரஸங்களை, கேட்பவர் தன் மனதில் மட்டும் வடிவமைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பார்வையாலும் அதை உணர முடியும். கோபம் / சிரிப்பு / காதல் / பக்தி போன்ற உணர்வுகளை நாட்டியக் கலைஞர்கள் தங்கள் அவயங்களால் நிகழ்த்துவர். ஒலி நிகழ்த்தும் இந்த உணர்வு பரிமாற்றம், நம் நடனக்கலைஞர்களுடன் சேர்ந்து கண்களுக்கும் விருந்து படைக்கும்.
கர்நாடக சங்கீத கட்டமைப்பிற்குள், ராகம் மற்றும் தாளம் இன்றியமையாதவை. முதல் முறை கேட்கும் போது சம்பந்தமேயில்லாத இசை வடிவம் போல காட்சியளிக்கும். ஒரே மாதிரியான சுரங்களை ஒப்பிப்பதும், ராக ஆலாபனை என சுரங்களை நீட்டி முழக்குவதும் கேட்பதற்கு வித்தியாசமாகவே இருக்கும். ஒத்திசைவு வடிவம் போல பல வாத்தியக் கருவிகள் கிடையாது, ஏற்ற இறக்கங்களை சீரான வேகத்திலோ கால அளவிலோ கணக்கெடுக்க முடியாது, மிக நுண்ணிய ‘ம்ருகா’ எனச் சொல்லப்படும் வேகமான ஏற்ற இறக்கங்கள் புரியாது. எப்படி கர்நாடக சங்கீதத்தை அணுக முடியும் /கேட்க முடியும்?
இதற்கு ராகங்களைப் பற்றி சிறு எளிய விளக்கம் தேவை.
ராகங்கள் வரிகளைப் போன்றவை. ஒரு வரியை எழுத எப்படி நமக்கு இலக்கணம் தெரிந்திருக்க வேண்டுமோ, அதேபோல் ஒரு ராக அமைப்பிலும் இலக்கணம் உண்டு. ஒரு வரியை நம்மால் எப்படியும் எழுத முடியாது. அதற்கான சரியான வார்த்தைகள் வேண்டும். இந்த வார்த்தைகளே ச முதல் நி வரையான சுரங்கள். ஏழே வார்த்தைகள். இந்த ஏழு வார்த்தைகளைக் கொண்டு எத்தனை வரிகள் (ராகங்கள்) எழுத முடியும் ? எண்ணிலடங்கா.
ராகத்திற்கான இலக்கணம் போல, அதைப் பாடவும் ஒரு கட்டமைப்பு உள்ளது. ராகத்தில் நான்கு பகுதிகள் உண்டு.
ஆலாபனை – மெதுவாக, அதே சமயம் கால வரையறையற்ற அமைப்பு.
ஆரோகனம் – ஏறு முகத்தில் இருக்கும் சுர வரிசை.
அவரோகனம் – இறங்கு முகத்தில் இருக்கும் சுர வரிசை.
ஆரோகனம் மற்றும் அவரோகனத்தில் எல்லா சுரங்களும் இருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஒரு ராகத்தில் எல்லா சுரங்களும் அதே வரிசைப் படி இருந்தால் அது சம்பூர்ண ராகம் என்று பெயர்.
ஆலாபனை மிக முக்கியமானதொரு பகுதி. இந்தப் பகுதியில் பாடகர் தான் பாட இருக்கும் ராகத்தின் வளைவு நெளிவுகளில் வளம் வருவார். பல சமயங்களில் அதிகமான நேரம் ஆலாபனை செய்ய செலவாகும். ஒரு பாடலுக்கு நேர்த்தி சேர்ப்பது ஆலாபனையே. சுரவரிசை மற்றும் சுர சஞ்சாரங்களில் பவனிவரும் பாடகர், கேட்பவர்களை ஒரு பயணத்திற்கு கூட்டிச் செல்கிறார். அந்தப் பயணத்தில் சுரங்கள் ஏறும் இறங்கும், ஒரே சுரத்தில் பல மணிநேரம் கூட சஞ்சாரிக்க முடியும். வேகவேகமாய் உச்சாணியில் ஏறி சுரத்தை நிறுத்தமுடியும். இறங்குவது பாடகருக்குத் தோணும் கால அளவுக்குள் கொண்டு வர முடியும். பாதி அவரோகனத்தில், மீண்டும் ஏறு முகத்தில் பயணிக்க முடியும்.
இதைப் போல பல சாகசங்கள், யுத்திகளையும் பாடுபவர் கையாள்வார். அப்படி பாடும்போது கேட்பவர்களை ஒரு விளையாட்டில் இழுத்துவிடுகிறார். அந்த விளையாட்டில் மயங்கவைப்பதே ரஸபாவத்தின் செயலாகும்.
இப்படி அடுக்கடுக்காக கட்டப்பட்ட ஆலாபனை என்னும் சுவற்றை சுரவவரிசையால் கடப்பர். சுரங்களை இந்த விதத்தில் பாடும்போதே அவற்றின் உணர்ச்சியும் வெளிப்படும். ஒரு ராகத்தின் உணர்வை இப்படி தக்கவைப்பதில் ஆலாபனைக்கு மிகுந்த பங்குண்டு.
ராகங்களை வகைப்படுத்த கடபயாதி திட்டம் என்ற அமைப்பு உள்ளது. கடபயாதி திட்டம் குறித்த அடுத்தப் பகுதியில் பார்க்கலாம். அதற்கு முன்னர் ஒரு தாய் ராகத்திற்கான இலக்கணத்தைப் பார்ப்போம் –
அ. ஆரோகணத்திலும், அவரோகணத்திலும் ஏழு சுரங்களும் வர வேண்டும்.
ஆ. அந்த ஏழு சுரங்களும் வரிசையாக இருக்க வேண்டும் (ச,க,ம,ரி என இருக்கக் கூடாது)
இ.ஆரோகண சுரமும் அதன் இடமும் அவரோகணத்திலும் இருக்க வேண்டும்.
இதைப் போல 72 தாய் ராகங்கள் உள்ளன.
கட்டுரைத் தொடர் சுவாரசியமாகச் செல்கிறது.
தாய் ராகம் என்பது ஜன்ய ராகம் என்று அடைப்புக்குறிக்குள் எழுதினால் இசைஇலக்கணப் பண்டிதர்களின் பரிபாஷை எல்லோருக்கும் எளிதாகப் புரியும் என்று கருதுகிறேன்.
தென்னிந்திய இசையின் அமைப்பினை அறிந்து இராகபாவங்களை அடையாளம் கண்டு இசையை அனுபவிக்கும்போது அதில் விளையும் இன்பம் பெரிதுதான். “ம்ருகா”மிக நுண்ணிய ‘ம்ருகா’ எனச் சொல்லப்படும் வேகமான ஏற்ற இறக்கங்கள் புரியாது. எப்படி கர்நாடக சங்கீதத்தை அணுக முடியும் /கேட்க முடியும்?
இந்தத் தொடரில் உள்ல “ம்ருகா” னும் கலைச்சொல் “ப்ருகா” என இருக்கவேண்டும். அச்சுப்பிழை என நினைக்கின்றேன்.
‘சாமகானம்’ இசைத்தல் என்றாலும் அதில் இன்று நாம் இசை என்று கூறும் சங்கீதம் இருக்கமுடியாது. ரிக்வேதம் எல்லாமே ஒரெ ஸ்வரத்டில்தான் சொல்லப்படிருக்கிரது என்றும், கடைசியாக வந்த ஸாமவேதம் மூன்று ஸ்வரங்களில் சொல்லப்பட்டன
என்றும், மூன்று ஸ்வரங்களில் ஒரு இராகம் அமையாது. குறைந்தது ஐந்து ஸ்வரங்கள் ஒரு இராகம் அமைய இன்றியமையாமல் வேண்டப்படும் என்றும் கூறுவர். முதலில் ஐந்திசைப்பண்கள் தோன்றிப் பின் ஏழிசைப் பன்களாக வலர்ச்சியடைந்திருக்க வேண்டும் ஐந்ய்திசைப்பன்களில் தோன்றிய இராகங்கள் மோஒகனம், மத்தியமாவதி, இந்தோளம், சுத்தசாவேரி, சுத்ததன்யாசி என்பன.
இது போன்ற கட்டுரைகள் இசையை அனுபவிக்கப் பெரிதும் துணை செய்யும்
நல்ல முயற்சி.
தாய் ராகம் என்பது மேளகர்த்தா ராகம்; ஜந்ய ராகங்கள் அவற்றிலிருந்து தோன்றியவை.
தேவையான இடங்களில் ராகங்களுக்கு நிகரான தமிழ்ப்பண்ணின் பெயர்களையும்,
ஹிந்துஸ்தானிப் பெயர்களையும் தரலாம். நல்ல வரவேற்பைப் பெற வாழ்த்துக்கள்.
தேவ்
thank q for the nice trip. please keep going. we will folow you.