வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

[ஜெயமோகனின் செய்தொழில் பழித்தல் என்ற சமீபத்திய கட்டுரை குறித்து பேசிக் கொண்டிருக்கையில் மைத்ரேயன் எழுதித் தந்த கட்டுரை இது. “ஒரு அரசுடைமை நிறுவனத்தில் சில பத்தாண்டுகள் கூட்டமான ஊழியர்கள் நடுவே பணியாற்றி அன்னியமாகி இருப்பது இயல்பாகவே ஆகிப் போன அனுபவத்தை இன்னமும் மறக்காது இருப்பதாக” கூறும் அவருடைய பல தள வீச்சும், ஆழமும் கொண்ட இக்கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் – ஜடாயு]

depression_manசெய்யும் தொழிலைப் பழித்துக் கொண்டு, அதல்லாது வேறு ஏதோ பெரும் படைப்பு சக்தி உள்ள ஒரு தொழிலைச் செய்தால, ஆகா, எவ்வளவு அருமையாக இருக்கும் வாழ்க்கை என்று எண்ணுவது ஒரு கணிசமான எண்ணிக்கை இளைஞருக்கு காலம் காலமாக வழக்கமாகி இருக்கிறது. அர்த்தமற்ற மரபுச் சுழல்களில், அல்லது நெறி பிறழ்ந்த சமூக அமைப்புகளில், அல்லது தமக்கு உற்சாகமூட்டாத வகை வேலைகளில் தாம் சிக்கி இருப்பதால் தம் இளமையும், வேகமும், கற்பனை சக்தியும், ஜீவனும் முடக்கப்பட்டு, தம் ஆத்மாவே அல்லது தம் அர்த்தமே அழிகிறது என்று கற்பனை செய்யும் தன்மை இளைஞருக்கே உரியது. வாழ்க்கை என்பது அருமையான விஷயம், அது அருமைகளே நிரம்பியதாக இருப்பதுதான் சரி, அதுதான் மனிதம் என்று எண்ணும் ஒரு (விசித்திர?) மனோபாவம் இது. எதையும் கேட்டுப் பெறக் கொடுத்து வைத்திருப்பதாகத் தம்மை நினைத்துக் கொள்ளும் ஒரு தோல் தடித்த நிலை இது. இதை இங்கிலீஷில் ‘sense of entitlement’ என்று மிக நேசத்துடன் குறிக்கின்றனர். ஒரு புறம் சமத்துவமும் பேசிக் கொண்டு இன்னொரு புறம் தமக்கு விசேஷமான வாழ்க்கை கிட்டவேண்டும் என்றும் கருதும் உள்முரண் பற்றிக் குற்றவுணர்வில்லாத தன்மை இந்த வகை இளைஞர்களிடம் உண்டு.

[இவர்களிலும் ஒரு சிறு கூட்டம் கடும் உழைப்பும், பொதுநலத் தொண்டும், தியாகமும், பொதுவுடைமை ஜோதியில் கலப்பதுமே தம் வாழ்வுடைய மொத்த அர்த்தமே என்று கருதி ஜார்கண்ட் காடுகளில் பதுங்கி இருந்து, சுற்றி உள்ள கிராமங்களில் நெற்றியில் நாமமிட்ட மனிதரை மொத்த மனித குலத்தின் எதிரிகள் என்று கருதிச் சுட்டுத் தள்ளும் வேலையில் இறங்கி இருப்பதும் உண்டு. அவர்கள் மனிதரின் பரிணாமத் தாவலைத் துரிதப்படுத்துகிறார்கள். நாம் எல்லாரும் சீக்கிரமே மனிதக் குரங்காவது அவர்கள் தொலைக்காலத் திட்டம். பரிணாமத் தாவல் மனிதர் மேலும் மனிதராவதில்தான் என்று எங்கே சொல்லி இருக்கிறது? ]

அப்படியானால் வாழ்க்கை என்பது அருமையானதில்லையா? அருமைகள் நிரம்பியதில்லையா? அப்படி இருப்பதுதானே மனிதத்தின் குறிக்கோள். இன்று வாழ்க்கையில் சிக்கலும், அடைசலும், குப்பையும், சீரழிவும், வக்கிரமும் —இத்தியாதி இத்தியாதி எதிர்குணங்களும் நிரம்பி இருப்பது ஏதோ ஒரு சிறு கூட்டம் மனித விரோதிகள் பொதுமக்களின் வாழ்வைத் திட்டமிட்டு அழிப்பதாலும், சுயநலத்தால் பொதுநலம் வளராமல் தடுப்பதாலும், தனிமனித உரிமைகளுக்காக குழு உரிமைகள் தணிக்கை செய்யப்படுவதாலும்தானே? இந்தச் சிறு கூட்டத்தை அழித்து, சுயநலத்தை ஒழித்து, பொது நலத்தை முன்னிறுத்தி, எல்லாரையும் சமமாக்கி, அனைத்து வசதிகளையும் அனைவருக்கும் திறந்து விட்டு, எல்லா வளங்களையும் ஒரே சமமாக எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டால், ஆகா, மனிதரிடையே அன்பும் பரிவும் நேசமும், பாசமும் மலர்ந்து உலகமே மலர்ப்பூங்காவாகி விடாதா?

அதற்குப் பிறகு, கொசுக்களோ, மூட்டைப் பூச்சியோ, ஃப்ளூ ஜுரமோ, ஜலதோஷமோ, மூட்டு வியாதியோ, புற்று நோயோ, பசியோ, முதுமையோ, கற்பனை வறட்சியோ… இன்னும் எதெல்லாம் மனிதரைப் பீடிக்கின்றனவோ அது எதுவும் இல்லாத சொர்க்கம் உடனே கைவசப்பட்டு விடாதா? அதற்காகத்தானே உலகெங்கும் இளைஞரை, ‘பொங்கி எழு, ….. (எதாவது ஒரு அடையாளத்தை அந்த காலியிடத்தில் நிரப்புங்கள், இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய, பொதுவுடைமை, தமிழ், கன்னட, இந்தி, அஸாமிய, குரோவேசிய, உய்குரிய இத்தியாதி அடையாளங்கள் இங்கு பொருந்தும்) காளையே, நாளையை இன்றாக்குவோம்’ என்று எவனாவது ஒரு சூனியக்கார தொப்பை போட்ட மொட்டைத் தலைஞன், அல்லது மீசை, தாடி நரைத்து குழி விழுந்த கிழவன் உசுப்பேற்றுகிறான்? எத்தனை சுவரொட்டிகள், எத்தனை ஊடகக் காட்சிகள், எத்தனை பொதுமேடைக் கூச்சல்கள்?

அதற்காகத் தானே இந்த இளைஞரும் ஒரு போரைக் கிளப்பி அதில் விழுந்து தம்மை மாய்த்துக் கொள்கிறார். அல்லது போரில்லாத காலங்களில் சிறுபத்திரிகைகள், வலைப்பதிவுகள், பரஸ்பரக் கடிதங்கள், காதலி/ காதலர்களுக்கு லிகிதங்கள்/ கவிதைகள், சில நேரம் அதிசயமாக ஒரு வாய்ப்பு கிட்டினால் குறும்படங்களே கூட எல்லாம் தயாரித்து தம் ஆதங்கத்தை, பெரும் சலிப்பை எல்லாம் வெளிப்படுத்தி விட்டு, ஓய்ந்து போய் சிகரெட், மது, கஞ்சா, செக்ஸ் என்று இறங்கி வீணாகப் போகிறார். இந்த வகைப் ‘பெரும் கலைஞ ஆளுமை’களில் கூட ஒரு கால் சதவீதத்துக்குதான் தான் பாத்ரூம் போவதைக் கூட ஒரு கிளுகிளுப்பூட்டும் கட்டுரையாக எழுதி மந்தைகளுக்கான பத்திரிகைகளில் பிரசுரித்து மந்தைகளுக்கு எளிதில் கிட்டாத கார், வீடுகளை வாங்கிக் கொள்ளத் தெரிகிறது.

இதுவும் பல பத்தாண்டுகளாக ஏதோ விதங்களில் வடிவங்களில் நடப்பதுதான்.

எதார்த்தமாகப் பார்த்தால் வாழ்க்கை அருமையானதுதான், ஆனால் எப்போதும் அல்ல. எப்போதும் அது அருமையாகவே, மணமாகவே, வெளிச்சமாகவே, உன்னதமாகவே இல்லாததால்தான் அருமை, மணம், வெளிச்சம், உன்னதம் ஆகியன என்ன என்றும், அவை வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பன என்றும் நமக்குத் தெரிகிறது. பேதோவன் (வேறு ஏதாவது ஒரு கர்நாடக இசைக் கலைஞரைப் பற்றிச் சொன்னால் நம் இளைஞர் இன்று முகம் சுளிப்பர். ஜாதிப் பெயரைச் சொல்லி ஏச்சு வரும். அதனால் பேதோவன் (Beethoven) பேரைச் சொல்வோம். உங்களுக்கு வேண்டுமானால் பங்கஜ் மல்லிக், ஹாரிஸ் ஜெயராஜ் என்று யாராவது அபிமான இசையாளர் பெயரைப் போட்டுக் கொள்ளுங்கள்) வாழ்வில் ராஜ போகம் கிட்டி இருந்தால் கூடத் தமக்கு வேண்டுகிற வகை இசையை இசைக்க அவர்களுக்குத் தொடர்ந்து தம்முடனும், இயற்கையுடனும் போரிடுவது தவிர்க்க ஒண்ணாத தவிப்பாகவே இருக்கும். அந்தத் தவிப்பு இல்லாத படைப்பு மிகக் குறைவு. உழைப்பு இல்லாத படைப்பும் குறைவு. ஏனெனில் மேதைகளும் எந்நேரமும் மேதைகளாகவே இருப்பதில்லை. அவர்களும் கழிவறைக்குப் போய்த்தான் தீர வேண்டி இருக்கிறது. கழிப்பிலும் தான் மேதையாகத்தான் இருப்பேன் என்று எந்த மேதையும் அடம் பிடித்ததாக எனக்குத் தெரியவில்லை. ஃபிரெஞ்சு அரச குலத்தினர் தங்கத்தில் கழிவுக்கான பாத்திரங்களை வைத்திருந்ததாக ஒரு வதந்தி உண்டு. அது அவர்களின் உடல் உபாதையை ஒரு சிறிதும் மாற்றி இருக்க வாய்ப்பில்லை.

எல்லா மேதைகளும் இனவிருத்தி செய்ய முயன்றிருப்பர், அல்லது அந்த உந்துதல் அவர்களுக்கு இருந்திருக்கும். அவர்களும் தாகத்துக்கு ஷாம்பெய்னும், விஸ்கியும் மட்டுமே அருந்தவில்லை. தண்ணீரே குடிக்காத மேதை இதுவரை உலகத்தில் எந்த நாட்டிலும் இருந்ததில்லை. தாயின் உதரத்தில் இருந்து இறங்காத மனிதரோ, சக்கரவர்த்திகளோ, பேரதிபர்களோ, பெருந்தனிகரோ, மேதைக் கலைஞரோ, அறிவியலாளரோ இல்லை. மண்ணில் தோன்றாத தாவரம் இல்லை, மிருகம், தன்னில் இல்லாத மனிதன் இல்லை. சாதாரணம், நாமாக அதைக் குத்திக் கிளறி, ஊதிப் பெருக்கி, ஆடம்பரம் எல்லாம் செய்யாத வரை சாதா- ரணமாகக் கூட இராது. கவனிக்கத் தக்கதாக இல்லாமல் இருப்பதுதான் அதன் லட்சணம், அது வெளியை நிரப்பி இருப்பதுதான் மனிதருக்கு ஆசுவாசம் தருகிறது. எந்நேரமும் உன்னதத்திலேயே இருப்பது கொம்பை நட்டு அதன் காலணா அகல வட்டத்தில் உச்சியில் புட்டத்தை வைத்து உட்கார் என்று சொல்வதை ஒத்தது. நூற்றுக்கு 99.99 சதவீதம் பேர் அங்கு இருக்க, வாழ்நாள் பூரா அங்கேயே கழிக்க விரும்ப மாட்டார், ஒப்ப மாட்டார், சித்திரவதை செய்தாலும் அங்கே இருக்க மாட்டார், கீழே குதிக்கத்தான் முயல்வர். உச்சஸ்தாயியிலேயே நிரந்தரமாக ரீங்கரித்துக் கொண்டிருக்க மனித நுரையீரல் இடம் தராது.

சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசுகையில் சொன்னேன் – என்றும் எப்போதும் காம உணர்விலேயே தோய்ந்திருப்பவன் ஒருவன் செய்கை தேவைப்படும் நேரத்தில் அனேகமாக பயனற்றவனாகவே இருப்பான் என்று. எப்போதும் ‘சிந்தித்து’ க் கொண்டிருப்பவன் செயல் திறனற்ற மலட்டு மனிதனாகத்தான் இருப்பான் என்று நான் கருதுகிறேன். சாதாரணம்தான் படைப்பை சாத்தியமாக்குகிறது. இன்னொரு முறை யாராவது மேதை வந்து ‘நாம் அன்னியமாகி விட்டோம்’ என்று ஆர்ப்பரித்தால் காதைப் பொத்திக் கொண்டு போனால் நம் புத்தி நம்முடையதாக இருக்கும் என்று நான் சிபாரிசு செய்கிறேன். அந்த மேதைக்குப் பிறரை உருப்படாத மனிதராக ஆக்குவதுதான் பெரும் படைப்பு என்று ஒரு மனம் பிறழ்ந்த நிலை இருக்கிறது என்பதை நாம் துரிதமாக அறிவது நம் மனிதம் நம் கையிலேயே இருக்க உதவும்.

இந்த வகை அருமை தம் வாழ்வில் சம்பவிக்கவில்லையே என்று மனம் மருகி அதைப் பற்றிப் பத்திரிகைகளிலும், இன்றளவில் வலைப் பதிவுகளிலும் குறைசொல்லி இருப்பது பலருக்கு ஒரு தவிர்க்கவியலாத வாழ்வம்சமாக ஆகி இருக்கிறது. இது ஒரு கோணத்தில் அர்த்தமற்ற சிலம்பம் சுழற்றல். வேலை என்பது சிக்கலமைப்புள்ள சமுதாயங்களில் தவிர்க்க இயலாதது. வாழ்வின் அன்றாடப் பாதுகாப்பு என்பது பல கோடி மக்கள் பல கோடிகளிலும் தத்தம் வலைக் கணுக்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் கிட்டுவதே. மக்கள் எல்லாம் பெருவலையின் இயக்கத்திலிருந்து தொடர்ந்து உயிர் பிழைப்புக்கான ஆதாரங்களையும், எந்தக் கணுக்களில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதற்கு மேலும் வசதிகளையும் பெறுகிறார்கள். வலைக்கு வெளியே இருக்க முடியாதா என்றால் முடியும். அது ஒன்று பரதேசி வாழ்க்கை, அல்லது யாருமற்ற காட்டுக்குள் எப்படியோ பிழைத்து இருக்க முடியும் வாழ்க்கை. வலையை பெரும் வசதி படைத்தவர் வெளியில் இருந்து இயக்குகிறார் என்று கருதி அவர்களாகத் தாம் ஆக வேண்டும் என்று கனவுதல் நிறைய பேருக்கு சாத்தியம். அது ஒரு சுகமான கனவுதான்.

சாமானியருக்கு இன்றளவு என்றுமே எந்த சமுதாயத்திலுமே பாதுகாப்பு இருந்திருக்குமா என்பது எனக்குச் சந்தேகமே. இந்த காப்பான நிலை இன்னும் எத்தனை பத்தாண்டுகள் நீடிக்கும் என்பது எனக்குச் சந்தேகமே. இது இன்றைய சமுதாயங்களில் பெரும் அவலங்களில் ஒரு கணிசமான எண்ணிக்கை மனிதர்கள் சிக்கிப் பெரும் துன்பங்கள் அடைகிறார்கள் என்பதைக் கருதியும் சொல்லப்பட்டதுதான். அவர்கள் அத்துன்பங்களில் சிக்கி இருப்பதை என்னால் மாற்றி விட முடியாது, அதைப்பற்றி நானும் அங்கலாய்த்துக் கண்ணீர் சிந்தி போராட்டங்களில் இறங்கி சமர்க்களமாக சமூகத்தை ஆக்கினால் அவர்களுடைய துன்பம் இன்னும் சில தலைமுறைகளுக்குக் கூட மாறி விடாது. எதார்த்தம் என்பதை நான் அதுதான் சரி என்று ஏற்கவில்லை. ஆனால் எதார்த்தம் என்று இல்லை, இருக்கக் கூடாது என்றும் கருத என்னால் இயலவில்லை. எதார்த்தத்தில் கூட்டத்தில் விளிம்பு இருக்கும், மையமும் இருக்கும், அதிகாரம் இருக்கும், அறியாமையும் கூடவே இருக்கும். அதனால் இருளும், வக்கிரமும் இருக்கும். அவை இன்னும் பல நூறாண்டுகளுக்குக் கூட போய்விடாது.

இதனால் சொல்கிறேன், அன்னியமாதல் என்பது அபபடி ஒன்றும் குரூரமான நிலை அல்ல.

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்

அதை ஒழிப்பதைத் தன் பிரதான கடமையாகக் கருதிய மார்க்ஸ் தான் வழக்கமாக எல்லாவற்றையும் உருப்பெருக்கி எழுதுவது போலவே, ஒரு பெரும் வாழ்வுப் பிரச்சினையே அதில் இருப்பது போல எழுதினார். அதுவல்ல வாழ்வுப் பிரச்சினை. மனிதன் தன்னை இயற்கையில் இருந்து விலகியவனாகவும், அதை ஆளப் பிறந்தவனாகவும் கருதிக் கொண்டு அந்த மன உளைச்சலுடன் அத்தனை மனிதரும் ஏதோ தேவப் பிறவியாகத்தான் ஆக வேண்டும் என்றும் வீறாப்பு கொண்டு கண்ணில் பட்டதை எல்லாம் உடைத்தால் தமக்கு சிறகுகள் முளைத்துப் பறந்து விடலாம் என்று என்று அவர் சொன்னதுதான் வாழ்வில் பிரச்சினையைக் கூட்டியது. இறுதியில் பிறரை எல்லாம் எதற்கு விமர்சித்தாரோ அதேயாக அவரும் ஆகிப் போனார்- கனவு வியாபாரியாக. சாமர்த்தியமாக அதைக் கனவு இல்லை, எதார்த்தத்தில் ஊறிய ஜிலேபி என்று விற்றதுதான தனித் திறமை. அதை வேண்டுமானால் மேதமை என்று நாம் கருதலாம், கரியை வைரம் என்று விற்பது மேதமை என்று நாம் ஒத்துக் கொள்ளத் தயாரானால்.

கனவுகளை உருவாக்குவதும் விற்பதும்தான் எத்தனை எளியதாக இருந்திருக்கிறது, இன்னமும் இருக்கிறது? அதை நடைமுறைக்குக் கொணர (பல கோடி) மக்களின் கால்களைத் தாம் முன்கூட்டியே தைத்து வைத்த செருப்புக்கு வெட்ட வேண்டி இருக்கிறது. உண்மையான அன்னியமாதல் அங்குதான் துவங்குகிறது.

இரண்டாம் மனிதனே ஒரு அன்னியன் தான் என்ற இன்னொரு இடது சாரி சார்த்தரும் ஏதும் புதிதாகச் சொல்லவில்லை. தான் உலகத்துக்கே பொறுப்பு என்ற அளவில் பிரக்ஞையை ஆழப்படுத்திக் கொள்ளச் சொன்ன இவர் இரண்டாம் மனிதன் நரகம் என்றும் கருத்துச் சொன்னார் என்பது அவருடைய மன/மலச் சிக்கலை வெளிப்படுத்துகிறதே அன்றி நமக்கு உபயோகமான கருத்துகள் இல்லை அவை. இரண்டாம் மனிதர் இருப்பதுதான் சமூகம் என்று அறியப்படுகிறது. அவர் இருப்பது வேறு ஒரு இடவெளியில் என்பதால்தான் நமக்கு நம் இடத்தில் நாம் இருக்கக் கூட முடிகிறது. மொத்த பூமியில் ஒரே ஒரு மனிதன் இருந்தால் அவனைப் போல அன்னியமான மனிதன் யாராவது இருப்பானா என்பது எனக்கு சந்தேகமே? அவன் தனக்குத் தானே அன்னியனாகி இருப்பான். ஏனெனில் விலகி இருந்து யோசிப்பதே மனிதனை மிருகத்தில் இருந்து எழுப்புகிறது, காலத்தில் பயணிப்பதை அர்த்த புஷ்டியோடு செய்யத் தூண்டுகிறது, நினைவைப் பதிக்கச் சொல்கிறது. சுவடை ஆவணப் படுத்தச் சொல்கிறது. கல்வெட்டு எழுதச் சொல்கிறது. கலை அன்னியத்தில் இருந்துதான் துவங்கி அன்னிய வெளியில் பதிந்து அர்த்தம் பெற்று, போஷிக்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டு, கூர்மை பெற்று, மறுபதிப்பாகி பேருருவாகிறது.

அன்னியமாதல் எதிரி அல்ல. துணை. உதவி, உந்துதல், ஏன் அழகு கூட. பின் அறமும் அதில் இருந்துதான் கிட்டுகிறது.

Autism எனப்படும் மனநிலைப் பிரச்சினை உள்ள சிறுவருக்கு அன்னியமாதல் அத்தனை சுலபமாகவில்லை. தன்னில் பிறரைப் பார்க்கும் திறனை அந்தக் குழந்தைகள் இழந்திருக்கிறார். தன்னில் பிறரைப் பார்த்தல் தன்னில் இருந்து விலகிப் பிறரை அறிந்து பிறராகி அந்த அறிதலைத் தன்னதாக்குவதில்தான் இருக்கிறது. பிறரை அறியும் தருணம் தானாகவே இருந்தால் பிறரை அறிய முடியாது. எத்தனைக்குத் தன்னை விடுகிறோமோ அத்தனைக்குப் பிறரை அறிய முடியும். இதற்கு சாதாரண மொழியில் ‘பரிவுணர்வு’ என்று பெயர் என நினைக்கிறேன். இதை இங்கிலீஷில் ‘empathy’ என்று சொல்கிறார். இந்த பிறரைத் தன்னில் அறியும் தன்மை மிக அதிகமாகிப் போனால் அதைப் போல உபாதையோ, மன உளைச்சலோ கிடையாது என்றும் சொல்லப் படுகிறது.

புறம் என்று எது எப்போது இருந்தாலும் அதெல்லாம் அன்னியம்தான். அதோடு ஒன்றி இருக்க முடிந்த மனிதன் கூட க்ஷண நேரம் அங்கிருந்தாலும் மீண்டால் மறுபடி அன்னியம்தான் அவனை/ளைச் சுற்றுகிறது. அதை வெறுக்கவோ, அத்தோடு போர் தொடுக்கவோ தேவை இல்லை. அதன் குரூர வடிவங்களை வேண்டுமானால் ஒழிக்கலாம். அதன் வீரியத்தையும் அதன் வெறுமையின் தீவிரத்தையும் மட்டுப்படுத்த முயலலாம்.

எனக்குத் தெரிந்து உலக ஜனத் தொகை இன்றுள்ளதில் பாதியானாலே ஒழிய அத்தகைய வசதி சாத்தியமாகாது.

அன்னியமாதலைப் பற்றியும், சமூகத்தின் அரவணைப்பில் ஊறி இருப்பதையும், பிறருடைய துன்பங்களைத் தம்முடையதே போலவும் உணர்வதையும் பற்றி அருமையான நாவல்களை எழுதியவரும் என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவருமான ஆக்டேவியா ஈ. பட்லரைப் பற்றிய ஒரு அஞ்சலிக் கட்டுரையை இங்கே காணலாம். நியுயார்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரை இது. இதில் கட்டுரை ஆசிரியர் ஆக்டேவியா பட்லரின் சில கருத்துகளைச் சொல்லி இருக்கிறார். கடைசி வரிகள் இவை.

“We are a naturally hierarchical species,” she said. “When I say these things in my novels, sure I make up the aliens and all of that, but I don’t make up the essential human character.”
https://www.nytimes.com/2006/03/01/books/01butler.html

ஆக்டேவியா பட்லர்
ஆக்டேவியா பட்லர்

ஆக்டேவியா பட்லர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க பெண் அறிவியல் நவீன எழுத்தாளர். Empathy அல்லது பரிவுணர்வு என்பதை மையமாகக் கொண்ட இவரது சில நாவல்கள் அமெரிக்க அறிவியல் நவீனத் துறையில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுபவை. அங்கு பல்கலைகளில் யாரும் அரசியல் நோக்கத்துக்காகத் திணித்து, மாணவர்களை மூளை சலவை செய்யும் நோக்கமில்லாது, அவற்றின் அறிவு பூர்வமான சிந்தனைத் திறனுக்காகவே இலக்கியப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டவை.

ஆக்டேவியா பட்லர் இறக்கும்போது புகழோடு இறந்தாரென்றாலும் தன் நடுவயது வரையிலும் வெளித்தெரிய வருவதற்கு நிரம்பப் பாடுபட்டார். உணவு விடுதிகளில் தட்டுக் கழுவியும். பல வகைக் கடை நிலை ஊழியங்கள் செய்தும் உடலுழைப்பை மையமாகக் கொண்டும் வாழ்க்கை நடத்தியபடியே இந்த நாவல்கள் சிறுகதைகளை எழுதினார். இப்படியேதான் இவர் ஒரு கல்லூரிப் பட்டதாரியாகவும் ஆனார். அந்தக் கடின உழைப்பையோ, அல்லல்களையோ குறித்து அவர் அதிகம் மனத் துன்பம் அடையவில்லை. தம் எழுத்துகள் திரும்பத் திரும்ப பிரசுரமாகாமல் திருப்பி அனுப்பப் பட்டதைத் துன்பமாகக் கருதினார். இருந்தும் தன் எழுத்து மைய வாழ்வுக்குத் தேவையான சுதந்திரம் மாற்று உழைப்பு இருந்த வாழ்வில் கிட்டுவதாகக் கருதினார் போலும்.

அமெரிக்காவில் எழுத்தாளர், கலைஞர் நிலை சந்தையில் ஓரளவு வலுவாக உள்ளது என்று நாம் கருத இடம் உண்டு. அங்கேயுமே, ஏதேதோ வேலைகள் செய்து கொண்டு உயிர்பிழைப்பை உறுதி செய்து கொண்டுதான் எழுத்தாளர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். சமீப வருடங்களில் பெரு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கிட்டி, புத்தக்ம் வெளிவந்தால் கூட, சரியான விதத்தில் அப்புத்தகம் முன்வைக்கப் படாமல் புத்தகங்கள் விற்பனையாகாமல் கிடக்கும். இதற்கு அந்தப் பெருநிறுவனத்தின் அதிகாரிகள், செயலர் எல்லாம் காரணம். எழுத்தாளரின் ஏஜெண்ட் அல்லது விற்பனையாளர், அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் அதிக செல்வாக்கு இல்லாதவராக இருந்தால், அவர்கள் எழுத்தாளரைப் பிரசுரித்து விட்டு அதை விற்பதில் அக்கறை காட்ட மாட்டார்கள். இதனாலே கூட ஏற்கனவே பிரசுரமான புத்தகங்களில் பாதிக்கு மேல் புத்தகக் கடைகளின் அலமாரிகளில் தக்க இடம் பெறாமல் நேரே கிடங்குக்குப் போய்க் கிடந்து சில வருடங்களில் அழித்துக் கூழாக்கப்பட்டு விடும்.

சந்தையே இல்லாத சோவியத் யூனியன் வகை அரசு அமைப்புகளில் வைக்கோல் போரைக் காத்த நாய்களாக, கம்யூனிஸ்டு கட்சியின் காவல் நாய்கள் ( party bureaucrats) அரசு உதவியையோ, அரசுப் பதிப்பகத்தையோ நல்ல மேலும் அசாதாரணத் திறமை கொண்ட எழுத்தாளர்கள் (கூட) சுலபத்தில் அணுகி விடாமல் காப்பதோடு, பார்வைக்கு வரும் பிரதிகளை வைத்து விமர்சக எழுத்தாளர்களை வேட்டையாடி, கட்டாய உழைப்பு முகாம்களில் அடைக்கவும் முயல்வர்.

இதனால் அமைப்பை விமர்சித்தோ, அதிலிருந்து விலகியோ யோசிப்பவரும், சில நேரம் அமைப்பைச் செழுமைப்படுத்த வேறு மேலும் சுத்தமான வழிகளைத் தேட முயன்றவர்களும் கூட, சோவியத் யூனியனில் ஸாமிஸ்டாட் (Samizdat ; Russian: самиздат) எனப்படும் கள்ளப் பிரசுர அமைப்பு வழியாகத்தான் ஒரு 70 ஆண்டுகள் போல முக்கியமான எழுத்தாளர்கள், அதாவது ஜால்ரா போடத் தயாராக இல்லாதவர்களில் பெரும்பாலானர், தம் படைப்புகளை இவ்வழியில் ’பிரசுரம்’ செய்தனர். ‘பிரசுரம்’ என்றால் அச்சடித்த புத்தகங்கள் அல்ல. தட்டச்சு செய்து நான்கைந்து பிரதிகள் எடுத்து, கார்பன் பிரதிகளை மறைவாக விநியோகம் செய்வர். ஒவ்வொரு வாசகரும் தாம் வாசித்ததற்குக் கைம்மாறாகத் தம்மளவில் சில பிரதிகளைத் தட்டச்சு செய்வர்.இப்படி ஒரு சில நூறு பிரதிகள் நாடெங்கும் வலம் வரும். அதிகாரிகள் அவ்வப்போது ‘எதிரிகள்’ எனக் கருதுவோர் வீட்டில் ‘சோதனை’போட்டு இந்தப் பிரதிகள் சிக்கினால் அதற்காகவே கடுங்காவல் சிறைத் தண்டனை எல்லாம் கொடுப்பர், அப்பிரதிகளில் சில குற்றப் பத்திரிகை வாசிக்க நிரூபணமாகவும், சில ஆவணங்களிலும சேமிக்கப் பட்டன. பெரும்பாலானவை அழிக்கப்பட்டன.

இலக்கியம் என்பதற்கு இத்தனை சோதனைகள். சந்தையானாலும், மந்தையானாலும் இருவகை அரசிலும் பலவகைகளில் தடைகள் உண்டு. நடுவாந்திரத்தில் மக்களையும், அரசையும், பண்பாட்டையும் தொங்கவிட்டு, எந்தப் பக்கமும் முன்னேறத் தெரியாத, அதற்கு உழைக்கச் சற்றும் விருப்பமில்லாத இந்திய அரசு/சமூக அமைப்பில் கேட்கவே வேண்டாம். இதில் சந்தைக்கே ஜால்ரா போட்டால்தான் வழி. மந்தைக்கு வழி அதிகாரத்துக்குப் பாதம் தாங்கினால் கிட்டும்- நூலகங்களில் புத்தகம் வைக்கப் படும். இல்லை முன்னாள் எதிரி, இந்நாள் புரவலர் முதல்வருக்கு முன் போய் வழிய வேண்டும். அவர் அரசுப் பணத்தைக் கொடுபபதை தாம் ஏதோ புரவலர்/அரசர் போல இருந்து பொற்கிழி கொடுப்பார். அதை முகத்தில் அவலம் வழிய ஆனாலும் சிரிப்பதாகக் காட்டியபடி வாங்கி, மீசையில் மண் ஒட்டியதால் அதையும் வழித்து விட்டு வெளியுலகில் வலம் வர வேண்டி வரும்.

இப்படியாகத்தானே விமர்சனம் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. ஒன்று அன்றாட‘புவாவுக்கு’ என்று வேலைச் சங்கிலியில் கட்டிக் கொண்டு மண்ணை அள்ளிப் போட வேண்டும். அதை ’வேலை செய் என்னும் உங்கள் சொற்கள் குசுப்போல நாறக் கழிவறை உலகம் செய்தீர்’ என்று வீரம் பேசினாலும், தம் வார்த்தை லாகவம் அதற்காகவே மதிக்கப்பட்டு வாழ்க்கை வசதிகள் கொடுக்கப் பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் கவிஞர் இப்படி எதிர்ப்பு தெரிவித்து ஒரு பயனும் இல்லை. அவர் வேலைக்குப் போகவில்லை என்றால் வேலைக்கு சீட்டு கிழிப்புக்கு நோட்டீஸ் வீடு வரும். வேறு யாராவது வேலைக்குப் போய்த்தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்.

ஆனால் ஒரு நியாயமான கேள்வியை நாமும் இவர்களும் எதிர் கொண்டுதான் தீரவேண்டும். கேள்வி என்னவோ ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோரும், கணவன்/ மனைவியரும், ஏன் பிள்ளை பெண்களும் எழுப்புவதுதான். ’இந்தக் கதை, கவிதையால் எல்லாம் என்ன பிரயோஜனம்? உப்புப் பெறாத சமாச்சாரம்.’

ஏனெனில் கதை, கவிதை (பாட்டு) களில் ஒரு அரை சதவீதம்தான் ஏதோ காசுக்கு வழி செய்கிறது. மற்ற எழுத்தெல்லாம் செய்தித்தாள்களில் பத்தி பத்தியாக அடைத்து அரைத்த சொல்மாவால் சுட்டுப் பதித்த தகவலெழுத்து. அதற்குக் கூட கூலியாக ஏதோ கிடைக்கிறது. அதுவும் ஐ.டி போல கூலிவேலை தான். விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள்.

உலகம் செயற்கை அறிவும், பிரக்ஞையும் கொண்ட எந்திரங்கள் உருவாகி உலக வாழ்விற்கான உழைப்பை ஏற்கும் நாளை எதிர் நோக்கி இருக்கிறது. மின்னணு இயக்கத்தால் இயங்கினாலும் அவை இப்போதைக்கு எந்திரம் என்றுதான் அழைக்கப் பட முடியும். ரோபோக்களுக்கு வேறு ஏதாவது பெயர் நாம்தான் இனி சூட வேண்டும். யூதர்கள் அதைக் ‘கோலெம்’(Golem) என்று அழைத்து தொல்யுகத்திலேயே நாமகரணம் செய்தாயிற்று. வேலைச் சலிப்பு/அன்னியமாதல் போன்ற கருத்துகள் மார்க்சியத்திடம் இருந்து புறப்பட்டவை என்று நாம் நம்பினாலும், அதன் வேர் இன்னும் பின்னே யூதச் சிந்தனையின் ரைஃபிகேஷன் (Reification), கோலெம் போன்ற சில கருத்தாக்கங்களிலும் உள்ளது.

அன்னியமாதல் பற்றிய சர்ச்சைகளின் ஒரு நீட்சியாக ஜெ.மோவின் இந்தக் கட்டுரையையும் காணலாம்.

satavahana_soldiersநம் பண்டைக் கதைகளில் ஒன்றான விக்கிரமாதித்தன் கதையில் விக்கிரமாதித்தனுக்கு எதிராகக் களிமண் வீரர்களுக்கு உயிர் கொடுத்து அனுப்பும் சிறுவன் (சாலிவாகனன்) கதை ஒன்றைப் படித்திருப்பீர்கள். அது நம்மிடமும் மனிதன் இறைக்கு ஈடாகும் கனவு உண்டு என்பதைச் சுட்டுகிறது. படைக்கும் மனிதரும் தம் போலவே வன்முறையாளராக ஆக வேண்டும் என்று ஏன் நாம் கதை கட்டினோமோ? இந்த மரபும் இன்னும் மேற்கின் அறிவியல் நவீனங்களில் தொடர்கிறது. தத்துவச் சிந்தனையை ஆழம் காண முயலும் ரோபோ ஒன்றைப் பற்றி கதை எழுதிய ஆர்தர் சி. க்ளார்க்குடன் இணைந்து ஒரு அபூர்வப் படத்தை இயக்கிய ஸ்டான்லி குப்ரிக் கூட அந்த ரோபோ தத்துவச் சிக்கல்களில் மூழ்கி விடை தெரியாது அடக்கு முறையாள எந்திரமாகத் திரிந்து போனதாகத்தான் படமெடுத்தார்.

எதார்த்தப் பார்வை என்பது உண்மையிலேயே கிட்டுவதற்கு அரிய பொருள் போல இருக்கிறது. (Sanity is apparently a really rare commodity).

இந்த வகை எந்திரங்கள் மனிதரின் வேலைகளை எல்லாம் எடுத்துச் செய்தால் மனிதருக்குப் பொருளற்ற உடலுழைப்பில் இருந்து விடுதலை கிட்டும் என்று ஒரு கனவு பல நூறாண்டுகளாக இருக்கிறதா? அதற்கும் ஆய்வறிவு அல்லது எதார்த்த அணுகல் என்பது ஏதாவது சொட்டை சொல்லும். அந்த சமூகத்தில் கூட மனிதரின் கோணல் புத்தியால் குற்றங்கள் இழைக்கும் கூட்டம் இன்னும் இருக்கும். அந்தக் கூட்டத்தை ஒடுக்க யாராவது உளவு வேலை, போலிஸ் வேலை, நீதி வழங்கும் வேலை எல்லாம் செய்தாக வேண்டும். இவை எல்லாம் சங்கிலியில் கட்டிய அடிமை வேலைதானே? ஒழுங்கை உடைப்பதும், விதிகளை மீறுவதும் மனிதரை இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் நிறுத்தும். அப்படித்தான் படைப்பு சக்தி தன்னை வெளிப்படுத்துகிறது, அப்படித்தான் மிருகமும் வெளி வருகிறது. ஆனால் மிருகம்தான் படைப்பாக்கத்துக்கு உதவுகிறதா என்று கேட்காதீர்கள். அது வெறும் தற்செயல் ஒற்றுமை நிகழ்வுதான்.

இறுதியாக ஒன்று. உலகில் பெரும்பாலானோர் கேளிக்கைக்கு கலை, இசை, இலக்கியப் பாடாவதிகளையெல்லாம் பயன்படுத்தலாம். அவரவர்களே பங்கெடுத்துப் படைக்க வேண்டுமென்று எல்லா மனிதரும் இறங்க வேண்டுமென்பது சமூகத்தின் எதிர்பார்ப்பானால், அது கூலிவேலை என்றோ, அன்னியப்படுத்தும் வேலை என்றோ, இது என்னய்யா தலைவலி என்றோ கருத நூற்றுக்கு 90 சதவீதம் பேர் தயாராக இருப்பார் என்பது என் கணிப்பு.

ஒரு கடிதம் எழுதக் கூடத் திறமை இல்லாத மனிதரே இன்று வரையில் கூட பேரதிகம். இதைக் குறையாக நான் கருதவில்லை. ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கத் தெரியாத எத்தனையோ ஆண்களையும், சில பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதை ஒரு குறையாகக் கருதினாலும், அவர்கள் என் கருத்தை லட்சியம் செய்யவில்லை என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன். எனக்குப் பாட வரவில்லை என்று பீம்சேன் ஜோஷி என்னைப் பற்றி இழிவாகக் கருதுகிறாரா என்று எனக்குத் தகவல் கிட்டவில்லை! :))

எல்லாருக்கும் எல்லாமும் அற்புதமாகச் செய்யத் தெரிய வேண்டும் என்று விரும்புவது குறித்து எவருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் அதுதான் சமூகத்தின் நிலையாக இருக்க வேண்டும் என்று எல்லாரையும் உதைத்து, அடித்துக் குத்திக் கொலை செய்து அப்படி ஒரு சமூகத்தைக் கட்ட முயல எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் அந்த உரிமை தமக்கு இருப்பதாகவே பல நாடுகளிலும் பல லட்சம் இளைஞர்கள் (அல்லது தாம் இன்னும் இளைஞர்களே என்ற கனவில் மூழ்கி இருக்கும் கற்பனை வறண்ட நடுவயது/ மூத்த வயதுக்காரர்கள்) கருதுகிறார்கள், அதற்காக அவர் பெரும் திரள்களைக் கொன்று குவிக்கத் தயங்க மாட்டார் என்பது நான் முன்பு இக்கட்டுரையில் எழுதிய ஒரு வரியை உறுதி செய்கிறது. மிருகம் (என்பது) தன்னில் அடங்காத மனிதர் எவரும் இல்லை. என்பது அந்த வரி.

6 Replies to “வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்”

 1. தமிழ் இந்துவில் இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.. இது விடாமல் தொடரவேண்டும்..மதக்காழ்ப்பு இல்லாமல் உண்மைகளை மட்டும் சொல்லி பலநேரங்களில் ஆன்மீகமும், அறிவியலும், மானுடமும் பேசி வரும் தமிழ் இந்துவுக்கு வாழ்த்துக்கள்.

  இனி கட்டுரை பற்றி…

  //அர்த்தமற்ற மரபுச் சுழல்களில், அல்லது நெறி பிறழ்ந்த சமூக அமைப்புகளில், அல்லது தமக்கு உற்சாகமூட்டாத வகை வேலைகளில் தாம் சிக்கி இருப்பதால் தம் இளமையும், வேகமும், கற்பனை சக்தியும், ஜீவனும் முடக்கப்பட்டு, தம் ஆத்மாவே அல்லது தம் அர்த்தமே அழிகிறது என்று கற்பனை செய்யும் தன்மை இளைஞருக்கே உரியது. //

  ஆமாம். ஆனால் அதையே பிடித்துக்கொண்டு நினைத்துக் கொண்டிருந்தால் இருக்கும் வேலையையும் இழப்பதுதான் மிஞ்சும்.. அதேசமயம் இளமை காரனமாக அப்படி நினைக்காமலும் இருக்க முடியாது… இது தவிர இதுபோன்ற சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்யநேரும்போது நாம் படித்த படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமலேயே ஒரு வேலையைச் செய்ய முடிகிறது என்ற மகிழ்ச்சியும் சேர்ந்தல்லவா வரவேண்டும்????

  //அன்னியமாதல் எதிரி அல்ல. துணை. உதவி, உந்துதல், ஏன் அழகு கூட. பின் அறமும் அதில் இருந்துதான் கிட்டுகிறது. //

  இதன்மூலம் அன்னியமாதல் எதிரி அல்ல என்பதை உனர்ந்தாலும் பிறர் செய்யாத ஒரு வேலையை, அதுவும் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் ஒரு வேலையை செய்யுபோது உங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து நீங்கள் அன்னியமாவது நிகழும் என நினைக்கிறேன். உங்கள் எழுத்தோ, சிறப்பான படைப்போ கவனம் பெறாமல் போகும்போது அன்னியமாதல் நிகழ வாய்ப்பே இல்லை இல்லையா?? அப்படி கலையிலோ, எழுத்திலோ சோபித்து அன்னியப்பட்டுவிட்டால் தரையில் நடப்பதன் மூலம் அன்னியமாதலை தவிர்த்து விடலாம் இல்லையா??? பலருக்கு அன்னியமாய் இருத்தலே சிறப்பு என்ற எண்னமும் உண்டு…

  மற்றபடி பலதளங்களில் தொட்டுச் செல்லும் உங்கள் கட்டுரை ஒரு விருந்தென்றால் மிகை இல்லை.

  அன்புடன்,

  வெற்றிச்செல்வன்

 2. // தன்னில் பிறரைப் பார்த்தல் தன்னில் இருந்து விலகிப் பிறரை அறிந்து பிறராகி அந்த அறிதலைத் தன்னதாக்குவதில்தான் இருக்கிறது. பிறரை அறியும் தருணம் தானாகவே இருந்தால் பிறரை அறிய முடியாது. எத்தனைக்குத் தன்னை விடுகிறோமோ அத்தனைக்குப் பிறரை அறிய முடியும். //

  Very profound, yet immensely simple thought.

  The article’s articulation style is intellectual and scholarly.. and the ideas presented are thorough and many-sided … and refreshingly it is highly non-judgemental overall, in spite of the strong words used for Marxist thoughts. It has be to read 2-3 times to fully comprehend its import.

  Thank you Mr. Maithreyan for such a wonderful article.

  I could never imagine I will encounter such an article here. This website is full of surprises!

 3. மைத்ரேயனின் அறிவு சார்ந்த இடுகை. பலமுறை ஆழ்ந்து படித்தால்தான் இதில் சொல்லப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளமுடியும். சேமித்து வைத்துப் படிக்க வேண்டிய கட்டுரை

 4. //….. …….. ……உச்சஸ்தாயியிலேயே நிரந்தரமாக ரீங்கரித்துக் கொண்டிருக்க மனித நுரையீரல் இடம் தராது…….. …….. ……//

  கவிதை !!

  இந்த எழுத்துக்காரரை நான் இதுவரை எப்படிப் படிக்கத் தவறினேன்?

  இவ்வளவு உயரிய எழுத்து நடையும், களமும், கருத்தும் உள்ளவர் புதிய எழுத்தாளராகத் தெரியவில்லை. நீங்கள் எழுதிய புத்தகங்கள், படைப்புகள் எங்கே கிடைக்கும்?

 5. அன்புள்ள ஜடாயு ,
  மைத்ரேயனின் கட்டுரை பல விஷயங்களை உள்ளடக்கி உள்ளது . ஆனால் அவை நன்றாக குழம்பி இருப்பதால் படிப்பது சற்று சிரமமாக இருந்தது.

  அந்நியமாதல் என்ற சொல்லை பல அர்த்தங்களில் பயன்படுத்தி உள்ளீர்கள்.
  செய்யும் தொழிலை வைத்து..
  மனிதர்கள் பொதுவாக செய்யும் செயல்களை வைத்து..
  //கழிப்பிலும் தான் மேதையாகத்தான் இருப்பேன் என்று எந்த மேதையும் அடம் பிடித்ததாக எனக்குத் தெரியவில்லை.// 🙂 🙂

  ஆனால் செய்தொழில் பழித்தல் என்பது செய்யும் தொழிலில் உள்ள பிரச்சினையை குறித்தது மட்டுமே ஒழிய மற்ற சாதாரண விஷயங்களை அல்ல . தனது தகுதியை கண்டுகொள்ளாமல் பலனை மட்டும் எதிர் பார்த்து வேலை செய்தால் அந்த வேலை யாருக்கும் பயனற்றுப் போய் விடுகிறது. அந்த தகுதியின்மை மற்றும் அதனால் விளையும் உள்ளார்ந்த வெறுப்பு மற்றும் அதன் பலன் மீது கொள்ளும் பேராசை வேலையையும் வேலை செய்பவரையும் சேர்த்தே அழித்து விடுகிறது. வியாபார திறமை உள்ளவர் ஆசிரியரானாலோ அல்லது ஆசிரிய திறமை உள்ளவர் அரசியல்வாதி ஆனாலோ விளைவுகள் என்னவாகும் என்பது தெரிந்ததே .. கம்பர் நாட்டை ஆண்டிருந்தாலோ அல்லது ராஜராஜன் காப்பியம் எழுத முயற்சித்திருந்தாலோ முற்றிலும் எதிர்மறையான பலன்களே கிடைத்திருக்கும்.

  இதற்கு பதிலாக தனது இயல்புக்குரிய செய்யும் போது ஒரு உள்ளார்ந்த திருப்தி , ஆழமான அமைதி கிடைக்கிறது. ஒரு வகையில் இது தான் மனிதன் பெறக்கூடிய ஆகச் சிறந்த செல்வம். அப்துல் கலாம்,ஸ்ரீனிவாச ராமானுஜன், சி.வி.ராமன், தாகூர், மகாத்மா காந்தி, ஜெயமோகன் என பல உதாரணங்களை சொல்லலாம்.இவர்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காகவோ, பெயர், புகழுக்காகவோ செயலாற்ற வில்லை. செயலை செய்யும் பொது கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே செயல் புரிந்தனர். அதனால் மேன்மை அடைந்தனர்.

  //ஒரு புறம் சமத்துவமும் பேசிக் கொண்டு இன்னொரு புறம் தமக்கு விசேஷமான வாழ்க்கை கிட்டவேண்டும் என்றும் கருதும் உள்முரண் பற்றிக் குற்றவுணர்வில்லாத தன்மை இந்த வகை இளைஞர்களிடம் உண்டு. //

  இதில் என்ன முரண்பாடு உள்ளது? சமத்துவம் என்பது எல்லாருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பது. விசேஷமான வாழ்க்கை என்பது ஒவ்வொருவரும் தன உழைப்பின் மீது சம்பாதிப்பது..

  //எந்நேரமும் உன்னதத்திலேயே இருப்பது கொம்பை நட்டு அதன் காலணா அகல வட்டத்தில் உச்சியில் புட்டத்தை வைத்து உட்கார் என்று சொல்வதை ஒத்தது. நூற்றுக்கு 99.99 சதவீதம் பேர் அங்கு இருக்க, வாழ்நாள் பூரா அங்கேயே கழிக்க விரும்ப மாட்டார், ஒப்ப மாட்டார், சித்திரவதை செய்தாலும் அங்கே இருக்க மாட்டார், கீழே குதிக்கத்தான் முயல்வர். உச்சஸ்தாயியிலேயே நிரந்தரமாக ரீங்கரித்துக் கொண்டிருக்க மனித நுரையீரல் இடம் தராது.//

  படைப்புத் திறன் வெளிப்பாட்டை போதையோடு ஒப்பிடும் தங்களின் திறமை அபாரமானது.. போதை நிலையில்லாதது. படைப்புத் திறன் வெளிப்பாடு என்பது தொடர்ந்து வருவது . நிலையானது..

  //எப்போதும் ‘சிந்தித்து’ க் கொண்டிருப்பவன் செயல் திறனற்ற மலட்டு மனிதனாகத்தான் இருப்பான் என்று நான் கருதுகிறேன். சாதாரணம்தான் படைப்பை சாத்தியமாக்குகிறது. இன்னொரு முறை யாராவது மேதை வந்து ‘நாம் அன்னியமாகி விட்டோம்’ என்று ஆர்ப்பரித்தால் காதைப் பொத்திக் கொண்டு போனால் நம் புத்தி நம்முடையதாக இருக்கும் என்று நான் சிபாரிசு செய்கிறேன். அந்த மேதைக்குப் பிறரை உருப்படாத மனிதராக ஆக்குவதுதான் பெரும் படைப்பு என்று ஒரு மனம் பிறழ்ந்த நிலை இருக்கிறது என்பதை நாம் துரிதமாக அறிவது நம் மனிதம் நம் கையிலேயே இருக்க உதவும். ///
  சம்பந்தமில்லாத உளறல் …. ஜெயமோகனின் குறிப்பிட்ட கட்டுரையை நன்றாக படியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *