வாரண முகவன் வல்லபை கணவன்
நாரணன் மருகன் நம்பிய வர்க்கருள்
பூரணப் பொருளன் புண்ணியர் மனத்தன்
காரண காரியம் கைகொடுப் பவனாம்.
உண்மை யன்புடன் உள்ளங் குவிந்து
பண்ணுடன் பாடிப் பரவிப் பணிமின்!
கண்ணில் நிறையுங் களிற்றுக் கடவுள்
எண்ணம் முடிக்கும் இணையில் தெய்வம்
அம்மை யப்பன் அடிதொழும் வேந்தன்
தம்மைப் பரவுந் தமருள மகலான்;
வெம்மை நீக்கிநல் வேதப் பொருளின்
செம்மை காட்டிச் சிலிர்த்திட வைப்பான்.
இம்மை மறுமை இரண்டுவ ழிக்கும்
நன்மை தருவான் நலமுறச் செய்வான்
உண்மை பக்தியே உயர்ந்ததென் றுள்ளம்
விம்மும் விதமாய் விக்கினந் தீர்ப்பான்.
தடைகள் பொடியாய்த் தடம்விட் டோட
மடையகல் வெள்ளம் போலருள் சுரப்பான்;
சடைவிரி கடவுள் சக்தியென் தாயும்
படைபதி குகனும் பணியுமிவ் வேழம்.
இந்தப் பிள்ளையாரை நான் தூக்கிகிட்டுப் போயிடப் போறேன். 🙂
நன்றாய் இருக்கிறது கவிதை.. அனைவருக்கும் விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள். பிள்ளையாரும், மூஷிகமும் கொள்ளை அழகு..
🙂
பிள்ளையார் கொள்ளை அழகு! அவர் தான் பிள்ளையார் ஆயிற்றே! பார்வதி பரமேச்வரர்களின் பிள்ளை ஆயிற்றே!
கவிதை வெகு அழகு, பிள்ளையாரைப் போலவே!
அழகிய கவிதை. மிக்க நன்றி. பிற பாடல்களையும் படித்தேன். தங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்லவனை வேண்டுகிறேன்.