மஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்

wolf_and_dog
ஓநாய்:- ஐயா, உம்முடைய அந்தஸ்தென்ன? நீ வஸிக்கும் இடம் எங்கே? இக்காட்டிற்கு வந்த காரணமென்ன? உமக்கு இவ்வளவு சுகமான வாழ்க்கை எங்ஙனம் ஏற்பட்டது?

வீட்டு நாய்:- நாம் உக்கிரசேன பாண்டியனிடத்தில் இருக்கிறோம். அவர் நமக்கு ராஜோபசாரஞ் செய்து வருகிறார். நமக்கும்அவரிடத்தில் பக்தியுண்டு. நம்மை அவர் மற்றெந்த நாய்களைக் காட்டிலும் மேலாக மதித்து வருகிறார்.

ஓநாய்:- அண்ணா, என் வாழ்க்கையும்ஒரு வாழ்க்கையா? காற்றிலும் மழையிலும், வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரைதேட வேண்டியிருக்கிறது. பசியின் கொடுமையைச் சகிக்க முடியாததாய் இருக்கிறது.

வீட்டு நாய்:- தம்பி, உன்னுடைய ஊழ்வினைப் பயனை நீயே அனுபவித்துத் தீரவேண்டும். பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாய் நமக்கு இப்போது இந்தப் பதவி கிடைத்தது.

ஓநாய்:- நாயாரே, நானும் உக்கிரசேனனுடைய நட்பை நாடி வரலாமா? சுகதுக்கங்களே ஸமரஸமாய் இருந்தால் மாத்திரமே இவ்வுலக வாழ்வு சகிக்கத்தக்கது. என்னுடைய கஷ்டகாலத்திற்கும் ஓர் வரை வேண்டும்.

வீட்டு நாய்:- நல்லதப்பா, என் கூட வா.

இருவரும் சம்பாஷித்துக் கொண்டே வழிநடந்தார்கள். திடீரென்று ஓநாய்க்கு ஒரு சமுசயம் தோன்றிற்று. பகதூரின் கழுத்தைச் சுற்றி அகலமானதழும்பு இருந்தது. ஓநாய் அதைப் பார்த்தவுடன் ஒருகேள்வி கேட்டது.

ஓநாய்:- பகதூர், உமது கழுத்தில் அவ்வளவு பெரிய தடம் படக் காரணமென்ன?

பகதூர் (வீட்டு நாய்):- ஓ, அது ஒன்றுமில்லை எனக்குக் கழுத்தில் தங்கப்பட்டை போட்டிருந்தது. அதன் தடம் தெரியலாம்.

ஓநாய்:- அந்தப் பொன் பதக்கம் எங்கே?நீர் ஏன் அதைப் போட்டுக்கொண்டு வரவில்லை?

பகதூர்:- என்னை வெள்ளிச் சங்கிலியால் கட்டும் பொழுதுதான் அதை என் கழுத்தில் போடுவார்கள்.

ஓநாய்:- உம்மை ஏன் கட்டவேண்டும், யார் கட்டுகிறார்கள்?

பகதூர்:- என்னுடைய எஜமானன் என்னைக் கட்டுவார். அவரைப் பார்க்க வரும் மனிதர்கள் என்னைக் கண்டு அஞ்சாதிருக்கும்படி என்னைக் கட்டிவைப்பார்.

ஓநாய்:- தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா? நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப் பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன். எனக்கு எஜமானனும் இல்லை, சங்கிலியும் இல்லை. கஷ்ட வாழ்வாய் இருப்பினும் நான் சர்வ சுதந்திரன். யதேச்சையாய் எங்கும் செல்வேன், எதையும் தின்பேன், எதையும் சொல்வேன், எவரோடும் சேர்வேன். பராதீனம் பிராண சங்கடம்; ஒருவருடைய ஆக்கினைப்படி வரவோ போகவோ, உண்ணவோ உறங்கவோ, மலம் ஜலம் கழிக்கவோ ஸம்மதித்து இருப்பவன் மகா நீசனாய் இருக்கவேண்டும்.

இவ் வார்த்தைகளைக் கேட்ட பகதூர் வெட்கமடைந்து திரும்பிப் பாராமல் ஓடிப்போய்விட்டது.

5 Replies to “மஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்”

  1. Bharathiyaars quest for Liberation is commendable.

    as long as we live in ignorance, darkness, we are slaves only.

    Until we see the light and truth we are all slaves only.

  2. சகிப்பு தன்மை (சகிப்புதன்மை இல்லாதவர்களையும் சகித்துக்கொள்வது) தாழ்வுமனப்பான்மை அடிமை புத்தி என்ற குணங்கள் பல தலைமுறை அன்னியர் ஆதிக்கத்தால் நம் ரத்தத்தில் கலந்துவிட்டது. எனவேதான் இன்று தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிறான். இந்தநிலைமை மாற இன்னம் பல நுறு ஆண்டுகள் ஆகும் !!!

  3. கதையில் வரும் நாய் நமது நாட்டில் உள்ள அரசியல் வாதிகள்,ஊடகத்தில் உள்ளவர்கள்,அறிவு ஜீவிகள் என்ற வேஷம் போட்டுக் கொண்டிருப்பவர்களை ஞாபகப் படுத்துகிறது.
    ஹிந்து விரோத,தேச விரோத எஜமானர்கள் கட்டிய கழுத்துச் சங்கிலியுடன் அவர்கள் போடும் ‘பிஸ்கோத்தை’ தின்று கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *