இன்று மலர்ந்தது சுதந்திரம்

india-flag

சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்களுக்கு மேலாகின்றன. மக்கள் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், செயல் சுதந்திரம் வேண்டுமென்று போராடிப் பெற்ற சுதந்திரமானாலும், அந்த சுதந்திரம் பெற்று அறுபது வருடங்களுக்கு மேலானாலும், நம் எல்லோருக்கும், நம் ஒவ்வொருவருக்கும், நமது அரசுக்கும், நிர்வாக துறைகளுக்கும், சுருக்கமாக யாருக்குமே, சுதந்திர உணர்வு என்பதை அறிந்து கொள்வதும், அதைப் பெற்று அனுபவிப்பதும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எவ்வளவு நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்திருக்கிறோம்! அவ்வளவு காலமும் யாரோ நமக்காகச் சட்டம் இயற்றுவதும் அதற்கு நாம் கேள்விமுறையில்லாது அடிபணிந்து நடப்பதும் நம்மை அறியாமலேயே நமக்குப் பழக்கமாகியுள்ளது. நமது ரத்தத்திலேயே சட்டதிட்டங்களுக்கு அடிபணிவது என்பது ஊறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு அடிமையாயிருக்கிறோம் என்பதையே நாம் உணர்வதில்லை. படிப்படியாகவே நாம் இதைக் களைய வேண்டியிருக்கிறது. அது உடனே நேர்வதில்லை. படிப்படியாகவே நாட்கள் செல்லச் செல்லத் தான், ஆண்டுகள் பல கழிந்தபின் தான் இது நமக்குள் உறைக்கிறது. அதுவும் பிறர் தம்மையறியாமலேயே சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கும் போதுதான், அவர்கள் தம் சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது நமக்குப் புலனாகத் தொடங்குகிறது.

அவரவர் தம் சுதந்திரச் செயல்பாட்டை செயல்படுத்தும்போது, சுதந்திரம் என்கிற கருதுகோளே ஒரு புதிய அர்த்தம் பெறுவதாக, புதிய விளக்கம் பெற்றுவிடுவதாகத் தோன்றுகிறது. காலத்துக்கேற்ப, நம் தேவைகளுக்கேற்ப புதிய அர்த்தங்களையும் விளக்கங்களையும் பழைய கருத்துக் கோட்பாடுகளுக்குக் கொடுக்கும்போது தான் நாம் உண்மையிலேயே சுதந்திர ஜீவிகளாக வாழ்கிறோம் என்று அர்த்தம். திருக்குறளுக்கும் பகவத் கீதைக்கும் அவ்வப்போதைய தேவைகேற்ப புதிய விளக்கங்கள் கொடுத்து நம் நினைப்புகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வளைத்துக் கொள்வதில்லையா? அது போலத்தான், எந்த யுகத்திலோ சுதந்திரம் என்ற சொல்லுக்குக் கொடுத்த அர்த்தத்தையே இப்போதும் நாம் கொடுத்துக்கொண்டிருந்தால், கிளிப்பிள்ளைப் பாடமாக அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தோமானால், நாம் ஒரு விதத்தில் பழைய சிந்தனைகளுக்கும், யாரோ எந்த ஜன்மத்திலோ கொடுத்துச் சென்ற சிந்தனைகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம், சுய சிந்தனையாளர்களாக நாம் ஜீவிக்கவோ, செயல்படவோ இல்லை என்பது பொருள். பின் சுதந்திரம் பெற்றதற்கும், நம் முன்னோர்கள் சுதந்திரம் பெறப் போராடியதற்கும் என்ன பொருள்?

இன்னம் தெளிவாகச் சொல்லவேண்டும். இப்படிச் சொல்லிக்கொண்டே போனால் ஒரே புகைமூட்டமாகத் தோன்றும். எனக்குத் தோன்றுகிறது, சுதந்திரம் பெற்ற பின்னும், நம் பழைய சட்ட திட்டங்கள், ஆங்கிலேய அரசு நம்மை அடிமைப்படுத்தி அடக்கி ஆள வகுத்த சட்டங்களையே பாதுகாத்து வந்திருக்கிறோம். அந்த எண்ணம் மாற, நாம் சுதந்திரமாக சிந்திக்க, செயல்பட பல பத்தாண்டுகள் தேவையாக இருந்திருக்கிறது. ஒரு புதிய அணுகுமுறை, புதிய சிந்தனை முறை, ஒரு புதிய தலைமுறை தோன்றிய பிறகு தான் புதிய சுதந்திரமான வாழ்க்கை முறையும், சமூக மதிப்புகளும் தோன்றுவது சாத்தியமாகியுள்ளது. அதுவும் படிப்படியாகவே நிகழ்ந்துள்ளது. பழைய மதிப்புகளையும், சிந்தனைகளையும் கழித்துக்கட்டுவது என்பது அவ்வளவு சுலபமில்லை.

இது எப்படி சாத்தியாமாகியுள்ளது என்பதை, இத்தகைய புதிய வாழ்க்கை முறைகளைத் தொடங்கி வைத்தவர்கள் தம் சரித்திர ஆரம்பங்களைப் பற்றிப் பேசும்போது தான் நமக்கே இவையெல்லாம் தெளிவாகிறது. நாமே நம் பழைய அடிமைச் சிந்தனைகளிலிருந்து, பழைய சட்டதிட்டங்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெறவில்லை என்பதைத் தான் இது தெளிவாக்குகிறது. “ஆக்கிரமிப்பு என்று சொல்கிறார்கள். பொது இடம், எங்களுக்குச் சொந்தமில்லாத இடம் இது, என்று சொல்கிறார்கள். முப்பது வருடங்களாக இங்குதான் குடிசை போட்டுக்கொண்டு வாழ்கிறோம். முப்பது வருட அனுபவ பாத்தியதை, யாரும் கேள்வி கேட்காத அனுபவ பாத்தியதை எங்களுக்கு இருக்கும்போது எங்கள் உரிமையை யார் பறிக்க முடியும்?” என்று கேட்கிறார்கள் குடிசைகள் போட்டு வாழும் எளிய மக்கள். அவர்களுக்கு ரேஷன் கார்டு இருக்கிறது, இலவச மின்சார இணைப்பு இருக்கிறது, ஏதோ ஒரு கட்சிக்கு வாக்கு அளித்து அந்தக் கட்சியை அரியணை ஏற்றி வந்திருக்கிறார்கள், ஒரு தலைமுறைக்கும் மேலாக. வாக்குரிமை கொண்ட இந்த ஜனநாயக யுகத்தில், மிக வன்மையான கேள்விகள் இவை. நீரும், நெருப்பும், நிலமும், வளியும், ஆகாயமும், எல்லோருக்கும் பொதுவல்லவா? எந்தத் தனிமனிதராவது இந்த ஆகாயம், இந்த நீர் எனக்குத் தான் என்று சொந்தம் கொண்டாடமுடியுமா? வாக்குரிமை கொடுத்து, குழாய் நீர் கொடுத்து, மின்சார இணைப்பு கொடுத்து, வாக்குச் சீட்டு கொடுத்து அரசு எங்களுக்கு வாழ் உரிமை கொடுத்த இடமல்லவா? குத்தகைக்குக் கொடுத்த நிலத்தையோ வீட்டையோ கூட பறிக்க முடியாது என்று சட்டம் இருக்கிறதே? – என்று அவர்கள் 30 வருட பாத்தியதையை வலியுறுத்தும் போதுதான் அவர்களது சுதந்திரச் சிந்தனையையும், செயல்பாட்டையும், அது எப்போது தொடங்கியது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். அப்போதுதான் நமக்கு ஏஞ்செல்ஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது. Primitive communism நிலவிய காலத்தில், எது யாருக்குச் சொந்தமாக இருந்தது? நில உடமையும், குடும்பமும், வாரிசுகளும் பின்னர் ஏற்பட்டது தானே, மோசமான நில உடமைச் சமுதாயத்தின் விளைச்சல்கள் அல்லவா இவையெல்லாம்?.

free2acrelandஇந்தத் தெளிவு நமக்குக் கிடைக்கத் தொடங்கியது சுதந்திரம் கிடைத்த உடன் அல்ல. அதன்பின் வெகு காலம் கழித்துதான். அதைத்தான் ‘ஆக்கிரமிப்பாளர்’ என்று குற்றம் சாட்டப்படும் சுதந்திரக் குடிசை வாழ் மக்கள் முதன்முறையாக தம் சுதந்திரத்தை உணர்ந்து சுதந்திரமாகச் செயல்படத்தொடங்கியவர்கள் என்று சொல்கிறோம். இதை அங்கீகரிக்கும் சுதந்திர மனது நமது இன்றைய முதல்வருக்கு இருந்துள்ளது. அதனால்தான் பொது இடங்களில், புறம்போக்கு இடங்களில் குடிசைகள் தோன்றத் தொடங்கியதும் அந்த சுதந்திர வாழ்வுணர்வை அவர் அன்றே உணர்ந்தார் என்று சொல்ல வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு ரேஷன் கார்டு, இலவச மின்சாரம், வாக்குச் சீட்டு இத்யாதி பல சலுகைகள் கொடுத்து அவர்கள் உரிமைக்கு அங்கீகாரம் கொடுத்திருப்பாரா? இப்போது ஒரு பெரும் சுதந்திர அங்கீகரிப்பையும் அவர் இம்முறை வெளியிட்டுள்ளார் இவர்கள் வாழுமிடத்துக்கு பட்டா அளிக்கப்படும். பத்து வருடங்கள் தொடர்ந்து எந்த மனையும் ஒரு ஏழை வசம் இருக்குமானால் அவருக்கும் அந்த பட்டா அளிக்கப்படும். இதன் பொருள் என்ன? ஏற்கனவே நாமெல்லாம் அநியாயமாகக் குறை சொல்லும் ‘ஆக்கிரமிப்புக்காரர் களுக்கு’ மாத்திரமல்ல, இனி எந்தப் புறம்போக்கு நிலத்திலும் குடிசை போட்டுக் கொள்பவர்களுக்கும் பத்து வருடங்கள் கழித்து பட்டா அளிக்கப்படும் என்ற வாக்குறுதியுமாகும். அது வரைக்கும் அவர்கள் காத்திருக்க வேண்டும். அந்தந்த இடத்து கட்சி கவுன்ஸிலர்கள் அவர்கள் குடிசைகளுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். இது தேர்தல் காலத்திய வாக்கு வேட்டையின் காரணமாகப் பிறந்தது என்று குற்றம் சாட்டுபவர்கள் புதிய சிந்தனையை ஏற்காதவர்கள். ஒரு சுதந்திரச் சிந்தனை எப்போது தோன்றினால் என்ன? அந்தச் சிந்தனையின் குணத்தையும் பலனையும் பார்க்கவேண்டுமே ஒழிய எப்போது என்ற கேள்வி அதன் குணத்தை மாற்றிவிடாது.

நில உடமை என்பதே ஒரு சமூகக் குற்றம் அல்லவா, இயற்கைக்கு மீறியது என்பது மட்டுமல்லாமல்? அதனால் தான் என்றோ ஒரு யுகத்தில் யாரோ அரசர் கோவில்களுக்கு மான்யமாக கிராமம் கிராமமாக நிலங்களைக் கொடுத்தால் அதை இந்த சுதந்திர நாட்டிலும் கட்டிக் காக்கவேண்டும் என்பது என்ன நியாயம்? கோவில், ஆத்திகம், பக்தி, எனபனவெல்லாம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய மக்கிப் போன பழைய மூட நம்பிக்கைகள் அல்லவா? அந்த மூட நம்பிக்கை அடிமை உணர்விலிருந்து சுலபத்தில் விடுதலை பெற முடியாது. எழுபது வருடங்களாகப் போராடியும் இன்னமும் இந்தக் ‘காட்டுமிராண்டித்தனங்கள்’ தொடர்கின்றன. ஆனால் அதற்காக நாம் கோவில்களை நிலச் சுவான்தார்களாக ஆக்கமுடியுமா? ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்து எவ்வளவு காலமாயிற்று? கோவில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்தவர்களை கோவில்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும். அதைச் செய்தாயிற்று. கோயில்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்வதற்கு அவற்றிற்கும் ‘சுதந்திரம்’ கொடுத்தாயிற்று. பகுத்தறிவையும் விரிவாக்கியாயிற்று. நில உடமைச் சமுதாய எச்ச சொச்சங்களையும் ஒழித்தாயிற்று. தஞ்சை குத்தகை விவசாயிகள் சட்டம் வந்த பிறகு எந்த நிலச் சுவான்தாரருக்கு நிலம் திரும்பப் போயிற்று?

இந்த சுதந்திர உணர்வு பல பரிமாணங்களில் செயல்படும் குணம் கொண்டது. நீர் யாருக்குச் சொந்தம்? மழை பொழிகிறது. ஆற்றில் நீர் நிரம்பி சமுத்திரத்தை நோக்கி ஓடுகிறது. இயற்கையின் கொடை இது. இது எல்லோருக்கும் சொந்தம். ஆற்றங்கரையின் ஒரு இடத்தில் நின்று கொண்டு குடத்தில் நீர் நிரப்பிக்கொள்பவன் இன்னொருவனும் சற்றுத் தள்ளி அதே காரியத்தைச் செய்பவனைக் குறை சொல்ல முடியுமா? ஆற்றில் நீர் வந்தால், ‘ஐயா நீ குடி, அம்மா நீயும் குடிச்சுக்கோ” என்ற சம தர்மம் நிலவும். இல்லையெனில் யாருக்கும் இல்லை. மேட்டூர் அணையை தமிழ் நாட்டில் கட்டிக்கொண்டார்கள். அதே போல கர்நாடகத்தில் காவிரி பாயுமிடமெல்லாம் அணைகள் கட்டி நீரைத் தேக்கிக் கொண்டார்கள். அது அவர்கள் சுதந்திரம். அதை நம் முதல்வர் என்றாவது மறுத்ததுண்டா? இல்லை. சுதந்திர சிந்தனையாளர்கள் நம் அரசியல் தலைவர்கள். “அணையின் நீர்த்தேக்கத்தைப் உயர்த்திக்கொள்,” என்று உச்சநீதி மன்றம் அனுமதி அளித்த போதிலும் நம் அரசு, கேரள மக்களின் உணர்வுகளையும் மதித்துத்தான் வாளாவிருக்கிறது. அது போல் தான் ஆந்திரா பாலாற்றில் அணை கட்டும் போதும். அது போல்தான் கர்நாடகாவுடனும். நம் சுதந்திரம் போல் அவர்கள் சுதந்திரமும் மதிக்கப்படவேண்டும் அல்லவா? நமக்கு நீர் மறுக்க அவர்களுக்கு சுதந்திரம் உண்டு என்பதை உணரும், சுதந்திரம் என்ற தத்துவத்தின் பன்முகப் பரிமாண விரிவை அறியும் பக்குவ மனது இருக்கிறதே அதைப் பெற்றுள்ள அரசியல்வாதிகள் மிகவும் அரிது. இப்படித் தான் சுதந்திரம் என்ற தத்துவத்திற்கு ஒரு விரிவான சிருஷ்டிபூர்வமான பொருள்கொள்ள வேண்டும்.

அண்டை மாநிலத்தார் உணவின்றி தவிப்பதை நாம் பார்த்துrationricebags-seized வாளாவிருப்பது சுதந்திரமாகாது. நம் சுதந்திரத்தை அவர்களுடன் பங்கிட்டுக் கொள்வதில் தான் உண்மை சுதந்திர வாழ்வும் மனதும் உள்ளது. 16 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் அரிசி விற்கும் நிலையில் இரண்டு ரூபாய்க்கு கொடுப்பதென்றால் எவ்வளவு நூறு அல்லது ஆயிரம் கோடி ருபாய் நஷ்டத்தில் நம் அரசு இந்தத் திட்டத்தைப் பிடிவாதமாக பற்றிக்கொண்டுள்ளது! அதனால் என்ன? நம் மக்கள் அதை 8 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் விற்று லாபமடைகிறார்களே, அந்த ஏழை மக்களின் சிரிப்பில் இறைவனல்லவா உறைகிறான்! இதனால் அந்த ஏழைகள் மாத்திரமல்ல, பங்கீட்டுக் கடைக்காரர்கள், இடைத் தரகர்கள், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், அதை பாலிஷ் செய்து உயர் ரக அரிசியாக விற்க உதவும் மில்காரர்கள், பின் அண்டை மாநிலங்களில் நல்ல லாபத்துக்கு விற்கும் வியாபாரிகள், பின் அண்டை மாநிலங்களில் மலிவாக வாங்கும் ஏழை மக்கள், இவ்வளவு பெரிய கூட்டமே இதனால் லாபம் அடைகிறதென்றால், இவ்வளவு பேர்களின் சுதந்திர வியாபார வாழ்க்கையில் நம் அரசிற்கு ஏற்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் தடையாக இருக்கலாமா?

sand-theftஇதே சுதந்திரக் கண்ணோட்டம்தான்– நம் ஊர் வற்றிய ஆறுகளிலிருந்து சுரண்டப்படும் மணலை தினம் எத்தனை ஆயிரம் லாரிகள் ஒவ்வொரு ஆற்றிலிருந்தும் எடுத்து அண்டை மாநிலங்களுக்குச் சென்று கொட்டி வருகின்றன! அவர்களுக்கு பாவம் மணல் கிடைப்பதில்லை. அவர்கள் ஆறுகளில் வற்றாது நீர் ஓடிக்கொண்டிருந்தால் அவர்கள்தா என்ன செய்வார்கள்? அவர்களுக்கும் உதவுவது நம் கடமை. அதனால் நம் கட்சிக்காரர்கள், லாரிக்காரர்கள் எவ்வளவு பேர் வாழ்க்கை வளம் பெறுகிறது! எவ்வளவு நம் குத்தகை எடுத்துள்ள தலைவர்கள் வாழ்க்கை வளம் பெறுகிறது. மணல் எனது என்று யாருக்கு பட்டா எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது? இயற்கையின் கொடை அது. அதனால் நம் நிலத்தடி நீர் வற்றிப் போகுமே என்பது எல்லாம் வெகு தூரத்துச் சமாச்சாரங்கள். நாளையை கண்டது யார்? இன்றைய மனிதனின் இன்றைய முகத்தில் இந்த நிமிடத்திய சிரிப்பைக் காணவேண்டும். ஆக, அதைப் பற்றி எல்லாம் இப்போது நாம் கவலைப் பட்டுக்கொண்டு இப்போதைய நம் சுதந்திர செயல்பாட்டை நிறுத்துவதற்கில்லை. இது போல்தான் இலவச கலர் டிவி, இலவச காஸ், இலவச மனைப் பட்டா, இலவச இரண்டு ஏக்கர் நிலம் (இது பின்னால் ஒரு கையளவு நிலமாக சிறுத்துப் போனாலும்), அது தரப்படும். நிலம் நிலம் தானே. கையகல நிலமானாலும் இலவசமாகக் கிடைக்கும் ஒன்றைக் காணும் ஏழையின் முகத்தில் சிரிப்பு மலராதா என்ன்? அதில் இறைவன் உறைய மறுப்பானா என்ன?

எப்படியோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். freetvdistribution“சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்பது எங்கள் தந்தை பெரியார் வழி, அறிஞர் அண்ணா வழி வந்த புதிய கொள்கை, டிவியை இலவசமாக வாங்கி விற்றுவிடுவதாகச் சொல்கிறார்கள். அதனால் என்ன. அவர்களுக்கு இலவசமாக 1000 ரூபாய் கிடைக்கிறது. வாங்கிய வியாபாரிகளுக்கும் அதில் லாபம் கிடைக்கிறது. வாங்கியவர்களும் விற்பவர்களும் ஒரு வேளை கட்சித் தலைவர்களாக இருக்கலாம். அப்படி இருந்தாலும் கட்சிப் பணிக்கான பரிசாக அதைக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும், அவர்கள் வளம் பெறுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. நியாயம், நீதி, சட்டம், ஒழுங்கு என்பதெல்லாம் இந்தப் பொற்காலப் பொன்னாட்சியைக் கண்டு எரிச்சல் படுபவர்களின் புலம்பல். வரிப்பணம் வீணாகிறது என்று ஒப்பாரி வைப்பவர்களும் உண்டு. அது யார் பணம்? மக்களிடமிருந்து பெற்ற பணம். அது மக்களுக்கே திருப்பித் தரப்படுகிறது. கொடுக்க முடிந்தவர்களிடமிருந்து பெற்று, பெறத் தகுதி படைத்தவர்களுக்குத் தரப்படுகிறது. இதைவிட சமுதாய தர்மம், பொது உடமைச் செயல் எது இருக்க முடியும்? இதுவே சமூக நீதி. இதுவே சமுதாய தர்மம்.

நீதி, நியாயம் சட்டம் என்று பேசுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?. இந்த சட்டங்கள் எப்போது இயற்றப் பட்டவை? இந்தியக் குற்றவியல் சட்டம் 19-ம் நூற்றாண்டில் ஒரு வெள்ளைக்கார அரசால் எழுதப்பட்டது. அதன் படி இன்றைய சமுதாயத்தை ஒழுங்கு படுத்தவேண்டும் என்றால் அது பகுத்தறிவின் பாற்பட்டதாகாது. காலத்திற் கேற்றவாறு, இன்றைய வாழ்க்கையின் கதிக்கு ஏற்றவாறு நாம் சுதந்திரமாகச் சிந்திக்கவேண்டும். பின் சுதந்திரத்திற்காக போராடியதெல்லாம் அர்த்தமற்றுப் போகும். எந்தக் கட்டுப்பாடும், ஒழுங்கும், சட்டமும், என்றோ எழுதியதை இன்றைக்கும் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருக்க முடியாது. நாம் சிருஷ்டி பூர்வமாக, பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும்.

இதைத்தான் சமயம் நேர்ந்த போது அமைச்சர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. “நீங்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா?” என்று நீதிபதிகளை நோக்கிக் கேட்டார் ஓர் அமைச்சர். இன்னொருவர், “நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சேர்ந்தவர்கள். நீங்கள் இந்த வேலைக்கு அரசால் நியமிக்கப்பட்டவர்கள். எங்களை விட நீங்கள் உயர்ந்தவர்களா? கட்டைப் பஞ்சாயத்து நடத்துவது போல இருக்கிறது,” என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. “இரண்டு நீதிபதிகள் சேர்ந்து ஒரு நாட்டின் விதியை, 120 கோடி மக்களின் விதியைத் தீர்மானிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று நம் முதல்வர் கேட்ட கேள்வி ஆணித்தரமானது. இந்திய அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தைத் தான் sovereign என்று சொல்லியிருக்கிறது. இது போன்ற யாரோ எழுதி வைத்துவிட்டதை வைத்துக்கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு நடப்பது என்பது சுதந்திரமாகாது. எதற்கும் கடைசித் தீர்வு சட்டமன்றமும், நாடாளுமன்றமும்தான். அந்தச் சட்டமன்றத்தை வழி நடத்துவது பெரும்பான்மைக் கட்சியின் தலைமையே அல்லவா? அவர் வழி நடத்தல்தானே சட்டமன்றத்தின், பின் அரசின் கொள்கையாகவும் செயல்பாடாகவும் ஆகிறது?

எந்தக் கட்டுப்பாடும், ஒழுங்கும், சட்டமும் சுதந்திரச் சிந்தனைக்கும் செயலுக்கும் முற்றிலும் விரோதமானவை. போன நூற்றாண்டுச் சட்டம் இன்றைய நிலைக்கு தமிழ் நாட்டு நிலைக்கு எப்படிப் பொருந்தும்? அதனால்தான் மக்களும் அந்தந்த கிராமத்து ஊர் கட்சித் தலைமைகளும் அவ்வப்போதைய ஊர் சம்பந்தப்பட்ட சண்டைச் சச்சரவுகளை தாங்களே தீர்த்துக் கொள்கிறார்கள். அதைத்தான் நம் பழம் தமிழ் வரலாறு “பஞ்சாயத்து” என்று சொல்கிறது. பொது உடமை சமுதாயமாக மலர்ந்துள்ள சைனாவில் இதை “மக்கள் நீதி மன்றம்” என்று சொல்கிறார்கள் எந்த வழக்கும் பத்து வருடம் இருபது வருடம் என்று இழுத்தடிக்கப்படுவதில்லை. “இந்த மனிதன் ஏழைகளின் வயிற்றில் அடித்து சொத்துசேர்த்தவன். கட்சி சொன்னதை மதிக்காதவன். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? சுட்டுக் கொல்லலாமா? சிறையில் அடைக்கலாமா? கட்டாய வேலை இத்தனை வருடம் என்று விதிக்கலாமா?” என்று மக்களிடம் கேட்கப்படும். அவர்கள் “சுட்டுத் தள்ளு” என்று கூச்சலிட்டால் உடனே அவன் சுட்டுத் தள்ளப்பட்டு விடுவான். இது தான் செலவற்ற, சுலபமான, எளிய, விரைவான நீதி முறையாகும். அமைதி காக்கப்படுவதோடு மக்கள் குரலும் மதிக்கப்படுகிறது. இதைத் தான் “கட்டைப் பஞ்சாயத்து” என்று எதிரிகள் வசைபாடுகிறார்கள். இதை இப்போது தமிழ் நாட்டில் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதால், காவல் துறை கூட இந்த விரைவு நீதி முறையைக் கையாளத் தொடங்கியுள்ளது. செலவும் கிடையாது. சச்சரவுகளும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. இதுதான் கிராம அளவிலான, தெருக்கள், வார்டுகள் அளவிலான அரசும், நீதி மன்றமும், எல்லாமுமான கலப்பு. இதைத்தான் சிருஷ்டிபரமான சுதந்திரச் செயல்பாடு எனச் சொல்லவேண்டும். இதில் ஏதும் எழுதப்பட்ட சட்டம் கிடையாது. கிராமத்துக்கு கிராமம், சம்பந்தப்பட்ட மனிதர்கள், தலைமைகளுக்கு ஏற்ப சச்சரவும், முடிவுகளும் நீதியும் மாறுபடும். அமெரிக்கச் சட்டம் இந்தியாவில் செல்லுமா? செல்லாது அல்லவா? அது போலத்தான் வாடிப்பட்டி கட்டைப் பஞ்சாயத்தின் ஒரு சண்டையின் தீர்வு செம்பட்டி கட்டைப் பஞ்சாயத்துச் சண்டையின் தீர்விலிருந்து மாறுபடும். எதுவும் எதற்கும் வழிகாட்டி அல்ல. சமயத்திற்கும் மனிதர்களுக்கும் ஏற்ப தீர்ப்பு மாறும். இதைத்தான் சுதந்திரம் என்கிறோம். எந்த எழுதப்பட்ட சட்டத்திற்கும் அவர்கள் அடிமைகள் அல்லர்.

சிறைச்சாலை சீர்திருத்தம் என்று நிறைய பேசுகிறார்கள். ஆனால் சிறைக் கைதிகளையும் மனிதர்களாக யார் பார்க்கிறார்கள்? அவர்களும் மனிதர்கள் தானே. மக்கள் நாயகத்தில் ஒரு மனிதனிடமிருந்து மற்றவனை வேறுபடுத்த முடியுமா? இதை எண்ணித்தான் கோயம்புத்தூர் வெடி வழக்கில் சிக்கியவர்களை, அவர்கள் சிறைக் கைதிகள் என்று தோன்றாதவாறு மனித நேயத்தோடு சில சௌகரியங்கள் செய்து கொடுத்தோம். கைதிகள் என்றால் அவர்கள் கூட்டாளிகளோடு பேச, கோஷா அணிந்த பெண் உறவினர் வந்து போக, அவர்களுக்கு வேண்டிய செல்ஃபோன்கள் எல்லாம் கொண்டு கொடுக்க வசதி செய்தோம். அவர்களுக்கு அவர்கள் கேட்கும் மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தோம். ஜெயிலர்களும் அவர்களுக்கு வசதி செய்வதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். கேரள முதன் மந்திரியே அவர்கள் நலத்தில் மிக்க அக்கறை காட்டினார். அதனால் தான் மதானி விடுதலை அடைந்ததும் உரிய மரியாதையோடு அவர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஏன் ஷாஹ்புதீனும், பப்பு யாதவும் இன்னும் பல பெரிய பிரமுகக் கைதிகளுக்கு, வேண்டிய சௌகரியங்கள் சிறையில் செய்து கொடுக்கப்படவில்லையா? அவர்களும் மக்கள் பிரதிநிதிகள் அல்லவா? கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் என்ன? அவர்கள் வாக்கும் மன்மோகன் சிங் அரசைக் கவிழாமல் காப்பாற்றவில்லையா? குற்றவாளியும் கூட நாட்டைக் காப்பாற்ற உதவத்தான் செய்கிறார்கள். நம் சரித்திரமே இம்மாதிரியான மா மனிதர்களால் ஆனதுதானே. நேரு சிறையில் இருந்தபோதுதானே புத்தகங்கள் பல எழுதினார்? காந்தி நூல் நூற்றுக் கொண்டிருந்தார்? ஏன், வால்மீகியும், திருமங்கை ஆழ்வாரும், பட்டினத்தாரும், அருணகிரிநாதரும் தம் ஆரம்ப கால வாழ்க்கையில் என்னவாக இருந்தார்கள்? மாணிக்க வாசகர் எதற்கோ கொடுத்த அரசுப் பணத்தை எதற்கோ செலவழிக்கவில்லையா? அதுவும் கையாடல்தானே? அந்த மனிதர் தேனினும் இனிய திருவாசகம் எழுதவில்லையா என்ன?

லக்ஷக்கணக்கில் மந்திரிகளும், எம்.பிக்களும் தொலைபேசிக் கட்டணம் கட்டவில்லை என்று உச்ச நீதி மன்றம் குற்றம் சாட்டுகிறது. பதவி போன பின்பும் அநேக மந்திரிகள் அரசு மாளிகைகளை வருடக்கணக்கில் காலி செய்வதில்லை என்று இன்னொரு குற்றச்சாட்டு. அவர்கள் மக்கள் பிரதிநிதிகள்; மக்கள் சேவையில் தானே இதெல்லாம் நடக்கிறது? விஷயம் என்னவென்றால், எந்த நீதி மன்றமும் சுதந்திரமாக சிந்தனை செய்வதில்லை. எழுதி வைத்த சட்டத்தைத்தான் பார்க்கிறார்கள். பின் எதற்காக சுதந்திரம் பெற்றோம், ஒரு நூற்றாண்டு போராட்டத்திற்குப் பிறகு? நீதிபதிகளா போராடினார்கள்? போராடியது இவர்கள் குற்றம் சாட்டும் மந்திரிகளின் கட்சி முன்னோர்கள் அல்லவா? தாத்தா சொத்து பேரனுக்கு வராதா?

மக்கள் அபிமானம் பெற்ற தலைவர்கள் என்றால் அது தனிரகம்தான். என்ன குற்றமும் சாட்டட்டுமே, அவர்களைத் தொட்டு விடமுடியுமா? எத்தனை பேருந்துகள் கொளுத்தப்படும்? எத்தனை பத்திரிகை அலுவலகங்கள் தீக்கிரையாகும்? பாவம் எத்தனை பேர் கட்டிடத்தில் அகப்பட்டுத் தீயில் கருகிச் சாவார்கள்? தம் அபிமானத் தலைவருக்காக மக்கள் சீறியெழும்போது இவ்வாறெல்லாம் நேரத்தான் செய்யும்? தலைவர்களை கோர்ட்டுக்கு வரவழைப்பது சுலபமா என்ன? தொண்டர்கள் கூட்டம் வழியெங்கும், கோர்ட்டு வளாகமெங்கும் நிரம்பி வழியாதா? என்ன கூச்சல், என்ன நெரிசல்? போலீஸின் அதிகாரம் மக்கள் சீற்றத்தின்முன் என்ன செய்யும்? இதுதான் மக்கள் நாயகம். இது தான் சுதந்திரம். கார்ல் மார்க்ஸே இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேயே ஒரு பெரிய தீர்க்க தரிசனமாகச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அரசு, அதன் அங்கங்கள் எல்லாமே ‘instruments of coercion’ என்று. அதாவது கொடுங்கோல் கருவிகள். அதைத் தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள். இதை சுதந்திரம் வந்த உடனே உணர்ந்து விட முடியாது. கடந்த 40 ஆண்டுகளாகத்தான் படிப்படியாக மக்கள் இதை உணர்ந்துள்ளார்கள். அப்படி உணர்ந்ததன் அடையாளமாகத்தானே, கடந்த உள்ளாட்சித் தேதலில், வாக்குச் சாவடிக்குள் கட்சிகாரர்கள் புகுந்து வாக்குச் சீட்டுக்களை வரிசையில் மணிக்கணக்காக் நிற்கும் வாக்காளர்களுக்கு சிரமமில்லாமல் தாமே முத்திரை குத்தி வாக்குப் பெட்டியில் போட்டுக் கொண்டார்கள் வெளியில் நின்றிருந்த காவல்துறைப் பட்டாளம் வாளாவிருந்ததைப் பற்றிக் கேட்டதும் காவல்துறை ஆணையர் என்ன சொன்னார்? “நாங்கள் வாக்குச் சாவடிக்குள் போகக்கூடாது. வெளியில் இருந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டும். உள்ளிருப்பவர்கள் அவர்களாகவே வெளியே வந்தபின்தான் எங்கள் பணி தொடரும்,” என்று சொல்லவில்லையா? அரசாங்கத்தின் இன்னொரு instrument of coercion- பல் பிடுங்கப்பட்டு விட்டதல்லவா? முதல்வர் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே, பதவி ஏற்கும் முன்னரே, காவல் துறை முழுதுமே பூச்செண்டுகளுடன் முண்டியடித்துக்கொண்டு கட்சி அலுவகத்துக்கு விரைந்ததைப் பார்க்கவில்லையா நாம்? உலகத்தில் வேறு எந்த நாட்டில் இத்தைகைய காட்சியைப் பார்க்கமுடியும்? அன்றே அவர்கள் பல் பிடுங்கப்பட்டுவிட்டதுதானே!

encroachmentசென்னை என்ன, தமிழ் நாடு எங்கிலும் மக்கள் எங்கு வேண்டுமானாலும், குடிசை போட்டுக்கொள்ளலாம். குடும்பம் நடத்தலாம். கூவம் நதியின் கரையே ஆகட்டும். எந்தப் புறம்போக்கு நிலமாகட்டும்; அல்லது எந்த காலி மனியாகட்டும்; அல்லது நகரத்தின் நடைபாதையே ஆகட்டும்; கடை பரப்பலாம். உஸ்மான் ரோடு இரு பக்கமும் நடைபாதைகளில் இதைப் பார்க்கலாம். உதாரணத்துக்காகத்தான் உஸ்மான் ரோடைச் சொன்னேன். தமிழ் நாடு எங்கிலும் இந்தக் காட்சிகளைப் பார்க்கலாம். ஜனங்கள் நடமாடும் இடமல்லாமல் வேறு எங்கு கடை பரப்புவதாம்? கரிசல் காட்டிலா? ஆளில்லா பொட்டலிலா? இப்போதைக்கு வேண்டுமானால் பக்கத்துத் தெருக்களில் இடம் பெயரலாம். வாகனப் போக்குவரத்துக்கு இடமில்லை, நடை பாதையில் மக்கள் நடக்க இடமில்லை என்கிறார்கள். இந்த மாதிரியான முரண்கள் வாழ்க்கையில் எங்கும் எப்போதும் உண்டு. ஜனங்கள் இருக்குமிடத்தில் தான் வியாபாரமும் நடக்கும். அதுதான் மக்கள் பணி என்பதை நகராட்சி புரிந்து கொள்வதில்லை. கடைசியில் பார்க்கப் போனால் மார்க்ஸே சொல்லவில்லையா, நகராட்சியும் ஒரு கொடுங்கோல் கருவிதான். அதனால்தான் குடிசை வாசிகளும், நடைபாதைக் கடைகளும், மாடிமேல் மாடியாக அனுமதியின்றி கட்டிக்கொண்டு போகும் பெருந்தனக் காரர்களும், “ஆக்கிரமிப்பாளர்களாக” சித்தரிக்கப்படுவது மக்கள் நாயகமோ சுதந்திரமோ இல்லை. ஆக்கிரமிப்பாளர்களும் அவ்வப்போது எல்லோருக்கும் உதவித்தான் வந்திருக்கிறார்கள். காவல் துறையை, ஊராட்சியினரை, அதிகாரிகளைக் கேட்டுப் பாருங்கள்.

மார்க்ஸ் மேலும் சொல்லியிருக்கிறார். எல்லாம் பொதுencroachments உடைமையாக்கப் பட்டு விட்டால், அரசு என்னும் கொடுங்கோல் கருவிக்கு தேவையே இராது. அரசு என்பதும் நாடு என்பதும் உதிர்ந்து போகும். உருகிக் கரைந்து போகும், இல்லாமாலே போகும். என்று. The State will wither away. எத்தகைய பொன்னான வாக்கியம் இது! எத்தகைய தீர்க்க தரிசனம் இது!. இந்திய மக்களும், குறிப்பாக இந்தக் கட்டுரையின் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களும் அனுபவித்து வரும், மற்றோரும் அனுபவிக்க வழிகாட்டும் இக்கால கட்டமே, மக்கள் சுதந்திர உணர்வு முற்றாக மலரத் தொடங்கிய காலம் என்று சொல்ல வேண்டும். அரசு கரைந்து போகிறது. போகிறது என்ன! போய் விட்டது!. அதனால் தான் யாரும் எங்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம். போலீஸ், அரசு தலையிட்டு அதிகாரம் செய்யாது. அதனால் தான் நம் முதல்வரும் மற்ற அமைச்சர்மார்களும் சினிமா, ஆட்ட பாட்டங்கள் என பார்த்துக்கொண்டும், திறப்பு விழாக்கள், மண விழாக்களில் பங்கு கொண்டும், விருதுகள் பாராட்டுகள் பெற்றுக்கொண்டும், அளித்துக் கொண்டும் காட்சி தருகிறார்கள். அரசு கரைந்தே போய்விட்டது என்பதை இது தமிழ் நாட்டின் பொற்காலம் என்று வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும். இதன் நிரூபணத்தை சென்னை நகரமெங்கும் நாளின் ஒவ்வொரு கணத்திலும், நமது நகர ஆட்டோக்காரர்களின் கட்டுப்பாடற்ற சுதந்திர வாழ்வைக் கண்டே, அரசு என்பது கரைந்தே போய் இல்லாமல் போய்விட்டதை அறியலாம். தம் உயிரை விட தம் தலை அலங்காரமும், தலையில் அணிந்துள்ள பூக்கூடையும் கலையாமல் இருப்பதையே விரும்பும் நம் மகளிர், ஒரு குடும்பத்தையே இருசக்கர வாகனத்தில் அமர்த்திச் செல்லும் குடும்பத் தலைவர்கள் ஹெல்மெட் அணிய கட்டளை இட்ட அரசை துச்சமென உதறும் சுதந்திரம் உலகில் வேறு எந்த நாட்டில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் சாத்தியமாகியுள்ளது? தமிழ் நாடுதான் சுதந்திர உணர்வுகளுக்கு வழிகாட்டி.

இந்திய அரசும் அப்படித்தான். மார்க்ஸ் சொன்ன இன்னொரு தீர்க்க தரிசனம் நாடு என்பதும் கரைந்து போகும் என்றார். பங்களா தேஷூக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லைக் கோடு என்பதே இருந்தாலும் இல்லையென்றாகியுள்ளது. வெகு எளிதாக, சுதந்திரமாக பங்களா தேஷிலிருந்து இந்தியாவுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் அல்ல. நூறல்ல, ஆயிரமல்ல. கோடிக்கணக்கில். முதலில் அங்குள்ள அரசால் பங்களா தேஷ் இந்துக்கள் விரட்டப்பட்டு இங்கு சரணடைந்தார்கள். ஆனால் கடந்த 30-35 வருடங்களாக பங்களா தேஷ் முஸ்லீம் மக்களும் இந்தியாவுக்குத் திரள் திரளாக வந்தவண்ணம் உள்ளார்கள். வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் தில்லியில் மட்டும் ஒன்றரை லக்ஷத்துக்கும் மேல் பங்களா தேஷ் முஸ்லீம்கள் குடிபெயர்ந்திருக்கிறார்கள். இப்போது எவ்வளவு இருக்குமோ தெரியாது. வருபவர் திரள் போக வந்தவர்களின் குடும்பப் பெருக்கம் வேறு. மற்ற முஸ்லீம் நாடுகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு இந்தியாவில் முஸ்லீம் மதத்திற்கு விரோத செயலாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்து வருவோர் நூறு அல்லது ஆயிரக்கணக்கில்தான் இருக்கும். அவர்கள் இங்குள்ள முஸ்லீம்களோடு உறவாட, கூடிச் செயல்பட வருபவர்கள். சில சமயம் அவர்கள் ஓடிப்போய்விடுவார்கள். ஆனால் பங்களா தேஷ் முஸ்லீம்கள். இப்போது கோடிக்கணக்கில் இந்திய பிரஜைகளாகவே ஆகியுள்ளனர். ஆகாதவர்களை நாம் திருப்பி அனுப்ப முடியாது. அஸாம், திரிபுரா, மிஸோராம் பகுதிகளில் அங்கு இருந்த இந்தியக் குடிமக்களை விட பங்களா தேஷிலிருந்து வந்த முஸ்லீம்கள் பெருந்தொகையினராகி, அஸாம், திரிபுரா, மிஸோராம் மாநிலங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றும், அல்லது அவற்றின் தலைவிதியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு கொள்ளும் அதிகாரம் பெற்றவர்களாகியுள்ளது அங்குள்ளவர்களுக்கு பீதியளிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள்தான் அவர்களுக்குக் குடியுரிமை அளித்து, பங்கீட்டு அட்டைகள் கொடுத்து, வாக்குரிமையும் பெற்றுத் தந்துள்ளனர். தில்லியில் வி.பி.சிங் அவர்களை தில்லி பிரஜைகளாக்க என்ன செய்யவேண்டுமோ அவ்வளவு உதவிகளையும் செய்துள்ளார். மக்கள் நாயகத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெறுவதில் ஒரு ஆரோக்கியமான போட்டா போட்டி காரணமாக, பங்களா தேஷ் முஸ்லீம்கள் தமக்கு வாக்குரிமை கொடுத்த கட்சிகளுக்கு இதுகாறும் நன்றியறிதலுடன் வாக்களித்து வந்துள்ளார்கள். லக்ஷக்கணக்கில் எப்படி இந்தியாவுக்குள் வரமுடியும்? இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை எதற்கு இருக்கிறது? என்று கேள்விகள் எழலாம். அவர்களுடைய ஒத்துழைப்பும் பங்களா தேஷின் பெங்கால் ரேஞ்சர்ஸின் ஒத்துழைப்பும் இதற்குப் பதில் சொல்லும். அவர்களது பரஸ்பர ஒட்டுணர்வும், சகாயமும் இரு படைகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதல்லாமல், லக்ஷக்கணக்கில் பங்களாதேஷிலிருந்து வரும் மக்கள் அதிக சிரமமும், பணச்செல்வும் இன்றி இந்திய பிரஜைகளாகவும் வசதி செய்து கொடுக்கிறது. எல்லோரும் இதில் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் இந்தியாவும் பங்களாதேஷும் எல்லைகள் என ஒன்று இருந்தும் இல்லாதது போலக் கரைந்து வருவது மார்க்ஸின் தீர்க்க தரிசனம் பலித்து வருவது. மார்க்ஸ் தன் கல்லறையிலும் புன்னகைக்க வங்காள கம்யூனிஸ்ட் அரசும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. சுமார் ஒரு நானுறு பேரை வாஜ்பாயி காலத்தில் பங்களா தேஷுக்குத் திருப்பி அனுப்ப முயன்ற போது, வங்க பெருந்தலைவர் ஜ்யோதி பாசு, “இது என்ன காட்டுமிராண்டித்தனம்” என்று கர்ஜித்தார்.

அவர்களும் மக்கள் தானே. மக்கள் நாயகத்தில் அவர்களுக்கும் இந்தியராக நாடு எல்லைகள் கடக்க சுதந்திரம் உண்டுதானே. சுதந்திரம் என்பது துண்டு போடப்படக் கூடியதல்ல. Freedom is not divisible அது முரண்படக் கூடிய தல்ல, உனக்கு வேறு எனக்கு வேறு என்று. இதை இந்தியாவும் தமிழ் நாடும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனன. இந்தியா உலகத்துக்கே வழிகாட்டி என்றால். தமிழ் நாடு இந்தியாவுக்கே வழிகாட்டி.

“ஆடுவோமே, பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று (ஆடுவோமே..)”

roads

கடைசியாக ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. அ.மார்க்ஸ் என்னும் தமிழ் நாட்டுப் பேராசிரியர், அறிஞர் ஒரு பொன்மொழியை நமக்கு வழங்கியிருக்கிறார். “ஒழுங்கு, கட்டுப்பாடு, சுத்தம், போன்ற எல்லாமே ஃபாஸிஸத்தின் கூறுகள்” என்று. இதை அவர் அறிந்து கொண்டது, அவரது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின் போது. ஜெர்மன் நாடு முழுதும் அவர் கண்ட ஒழுங்கு, கட்டுப்பாடு, சுத்தம் எல்லாமே அவருக்கு, ஹிட்லர் மறைந்த பின்னும் ஹிட்லர் விட்டுச் சென்ற ஃபாஸிசத்திலிருந்து ஜெர்மனி இன்னும் விடுதலை பெறவில்லை என்பதையே காட்டுகிறது என்று சொல்லியிருக்கிறார். இப் பொன்மொழியின் முழுப் பொருளையும் இப்போதுதான் நான் தெளிந்து தெளிவு பெறுகிறேன்– என் வீட்டைச் சுற்றி, தெருவைச் சுற்றி, இந்த மடிப்பாக்கத்தைச் சுற்றி குவிந்துள்ள குப்பைக் கூளங்கள், நிரம்பி தெருவில் வழியும் சாக்கடைத் தண்ணீர், குண்டுக்கிரையானது போன்ற தெருவின் குண்டும் குழியுமான சிதைவுகள் எல்லாம் நாம் முற்றிலுமாக ஃபாஸிசத்திலிருந்து விடுதலை பெற்று விட்டோம் என்பதன் அடையாளங்கள் என்று. சுதந்திரம் மட்டுமல்ல. ஃபாஸிஸத்திலிருந்தும் விடுதலை தேவை. தமிழக அரசு கரைந்துவிட்டது போல எங்கள் ஊர் பஞ்சாயத்தும் கரைந்து மறைந்து விட்டது.

13 Replies to “இன்று மலர்ந்தது சுதந்திரம்”

 1. An excellent satire. Do you need to teach the fish to swim? And Ve.Saa is NOT just a fish but a whale! One leading daily requested me to write an exclusive article for its Independence Day Spl Pull Out years ago. And it had the shock of its life on reading my article. It did NOT expect that kind of article for publication on the auspicious day of independence! The editor pleaded his inability to publish it and apologised. The daily is DINAMANI when it was being edited by Sri Iravatam Mahadevan. I was one of the frequent edit page columnists during the days of Iravatam.

  Similarly, he could NOT publish my article on the demolition of the national shame called Babri Memorial because one of my arguments related to the topic was that the faith cannot be decided by the court of law, as if it is a civil dispute. The isssue should NOT have been taken to Court and it was absurd to accept that step was my stand. For a Mohmedan it was mere real estate interest whereas, for a HIndu, it is a matter of his faith. Ayodhya is one of the seven holiest palces of Hindustan and no symbol of any alien faith has business to be present on its soil. Kollan Pattariyil Eekku Enna Velai was the title of my article. Its English version was rejected by Deccan Herald!

  Another article Iratavatam could not publish was my article on the visit of Yasser Arafat! And that was enough for me to call it a day to contribute to Dinamani!

  It was after many years that I wrote again in Dinamani at the request of some Sri Ramakrishna Mutt people, who asked me to write when there was a talk that there was a proposal to take back Vivekananda House by the TN Govt. The article paid dividends, as Sri Karunanidhi announced in the State Assembly that there was no such proposal. I touched the right chord in my Dinamani article reminding that it was Anna who supported Sri Vivekananda Rock Memorial at Kanyakumari while the Congress objected to it in tune with its Christian vote bank policy. I also reminded in that article that it was Karunanidhi who did NOT yield to the pressure to install a staue of Rajah of Ramnad in the memorial (the pressure was from some Dravidian fanatics). Anna had said it is a matter of pride for TN to have been associated with Swami Vivekananda and that was pointed out in my article in Dinamani entitles Gnyaapagam Varutey!
  MALARMANNAN

 2. அமிலத்தைத் தேனில் கலந்து, அதில் அஜீரண மருந்துகளைக் குழைத்து மசியாக்கி எழுதியிருக்கிறார் வெ.சா அவர்கள்.

  அங்கதம் தான், நையாண்டியும் தான் – ஆனால் நம்மை சிந்திக்கத் தூண்டும், உள்ளூர்த் தெரு தொடங்கி, தேச எல்லை வரை நடக்கும், நாம் நாள்தோறும் காணும் அவலஙக்ளைப் பற்றிய பிரக்ஞையை ஊட்டும் அங்கதம்.

  அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

 3. அனைவருக்கும் சுததந்திர தின நல் வாழ்த்துக்கள்!

  சுவரை வைத்து தான் சித்திரம் வரைய முடியும்.

  இந்தியா இல்லாவிட்டால் நாம் யாருமே இல்லை.

  இந்தியாவின் 115 கோடி மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!

  இந்திய மக்கள் எந்த அளவுக்கு கடமை உணர்ச்சியும், பொறுப்பு உணர்ச்சியும், நாகரீகமும் உள்ளவர்களாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு இந்தியா மேன்மை பெரும்.

  இந்தியா எந்த அளவுக்கு மேன்மையும், நியாயமும், வலிமையும் உடையதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உலகத்திற்கு நல்லது.

 4. நல்ல பதிவு.

  நீங்கள் கூறிய அனைத்தும், சுடும் உண்மை.

  அனைத்து சகோதர சகோதரிகளுக்கு சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

  2020 இந்தியா வல்லரசாக பாடுபடுவோம்.

  ஜெய்ஹிந்த்

 5. நாட்டு நடப்பை இவ்வளவு தெளிவாய், கொந்தளிக்காமல், செவிட்டில் அறைந்ததுபோல அருமையாக எழுதி இருக்கிறார் வெங்கட் சாமிநாதன். மான, ரோஷமுள்ள எந்த அரசியல்வாதியும் இதைப்படித்தானெனில் அன்றுமுதல் சோற்றில் உப்பிட்டு உண்ணமாட்டான்..அல்லது தவறு செய்யமாட்டான்..

  எத்தனை முரன்பாடுகள், எத்தனை அராஜகங்கள், எத்தனை சட்டவளைத்தல்கள், வலைதல்கள்.. எல்லாம் ஜனநாயகம் என்ற அருமையான விஷயத்தைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திய அரசியல்வாதிகளால் விளைந்தது. இருப்பினும் பல்லுக்குப் பல், தலையை வெட்டு, கையை வெட்டு என இருக்கும் காட்டுமிராண்டி சட்டங்களுடன் ஒப்பிடும்போது ஜனநாயகமே சிறந்தது…

  அருமையான கட்டுரை தந்த வெங்கட்சாமிநாதன் அவர்களுக்கு, பதிப்பித்த தமிழ் ஹிந்து குழுவுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.

 6. நல்ல கட்டுரைக்கு மிக்க நன்றி.

 7. this article highlighted our democratic misusing our people, why happen like this, when will change our nation, we will try to change occasion as early as posible. we will try this is possible. so our heart prepare to sefishness then everything will automatic grow our nation, whoever sacrificed our nation freedom, they will happy that, that is really freedom.untill we will strugle.

 8. சுதந்திரம் கிடைத்துவிட்டால், சுதந்திரம் கிடைத்ததுபோல நடந்துகொள்ள வேண்டும்.

  நாட்டின் வளர்ச்சிக்கு, மக்களின் நல்வாழ்விற்குச் செயல்படாமல் உலக நாடுகளிடையே நல்ல பெயரைப் பெறுவதுதான் லட்சியம் என்று இருக்கும் அரசாங்கம் திருத்தப்படவில்லை.

  நாட்டின் நில, நீர், கனிம, ஆற்றல் மூலாதாரங்கள் சரியாகக் கையாளப்படவில்லை.

  கிறுத்துவ, இசுலாமிய, கம்யூனிச இழிமதங்களின் மதவெறிக் கொலைகளைப் பற்றியும், தவறான செயல்பாடுகளைப் பற்றியும் வெளியே பேச சுதந்திரம் இல்லை.

  அவர்களிடம் காசுவாங்கிக்கொண்டு ஆட்சி நடத்துபவர்களின் அக்கிரமங்கள் தடுக்கப்படவில்லை.

  அதற்குப் பதிலாக வெட்டித்தனமான சாதி, மத, பொருளாதார, மொழி பிரிவுகளின் அடிப்படையில் வேலை செய்யும் அரசியல்கள் அழிக்கப்படவில்லை.

  ஒற்றுமையையும், வளர்ச்சியையும் பிரச்சினையாக முன்வைக்காமல், வேற்றுமையையும், போலிசெக்யூலரிசத்தையும் முன்வைத்து இயங்குகின்ற அரசியல்-சமூகப் போக்கு திருத்தப்படவில்லை.

  நாகலாந்து ஏசுவிற்கே என்ற கோஷங்களோடு தனிநாகலாந்து நாடு கேட்கிற தீவிரவாதக் குழுக்கள் அழிக்கப்படவில்லை.

  போனவாரம் கேரளாவில் இசுலாமியர்களுக்குத் தனிநாடு கேட்டு போராட்டம் ஆரம்பித்திருப்பவர்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

  தனித்தமிழ்நாடு கேட்பவர்களை ஊக்குவிக்கும் தமிழ்நாட்டு சர்ச்சுகளை யாரும் கவனிப்பதில்லை.

  இந்தியாவிலேயே அகதிகளாக வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றி யாரும் பேசுவதில்லை. காஷ்மீரப் பண்டிதர்களும், ரியாங்குகளும் இதுவரை நடந்த வரலாற்று விளைவுகள். ஹிந்துக்களாக இருந்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் அவர்கள் செய்யவில்லை.

  ஆனால், இந்த நிலை நமக்கு ஏற்படாது என்ற கற்பனை உலகில் இருந்து மற்ற இந்தியர்கள் வெளிவரவில்லை.

  இந்த நாடு இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளில் பலதுண்டுகளாகச் சிதறப்போகிறது என்ற உண்மையை சொல்லாமல், 62 ஆண்டுகால சீரழிவின் ஆரம்பத்தைக் கொண்டாடுவது, இந்தியா-பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது தேசபக்தி என்று புரிந்துகொள்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

 9. //போனவாரம் கேரளாவில் இசுலாமியர்களுக்குத் தனிநாடு கேட்டு போராட்டம் ஆரம்பித்திருப்பவர்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.//

  In our nation, some people are always making comedies. Those ppl wh are asking for a separate state are the best comedians of the year 🙂 🙂

 10. டிராஃபிக் ராமசாமி நாட்டுக்குச் செய்துள்ள சேவை மகத்தானது. தாக்குதலில் ஒரு கண்ணை இழந்தபோதும் விடாது போராடி தி.நகரில் விதிகளை மீறிக்கட்டிய கட்டடங்களை இடிக்க சுப்ரீம்கோர்ட்டில் ஆணை வாங்கினார். சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றக் குழுவை நியமிக்க வைத்தார். இதற்காக அரசு இவரை இருமுறை கைது செய்தது.

  இவருக்கு பத்மஸ்ரீ வழங்கக் கோரி 28 செப்டம்பர் 2009 அன்று தனியார் ஒருவர் பரிந்துரை செய்திருக்கிறார். அதனை ஆதரித்து நல்லோர் அனைவரும் கீழ்க்கண்ட முகவரிக்குக் கடிதம் அனுப்பக் கோருகிறேன்.

  The Padma Awards Committee
  Ministry of Home Affairs
  North Block
  Central Secretariat
  New Delhi 110 001

 11. ட்ராபிக் ராமசாமி அவர்கள் கட்டிட விதிமீறல் பற்றி போராடியது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. ஆனால், ஹெல்மெட் விவகாரத்தில் அவர் செய்தது சரியல்ல. ஹெல்மெட் அணிந்து கொள்ளை அடிக்கிறார்கள். கொள்ளையனை அடையாளம் காட்ட இயலவில்லை. நிற்க, ஹெல்மெட் அணிவது , அவரவர் விருப்பம் என்று விட்டுவிடவேண்டும். சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்துவது ஒரு தவறான செயல் என்றே அனைவரும் கருதுகிறார்கள்.

  மேலும், வயதுமுதிர்ந்த பெரியோருக்கு ( senior citizen above 60) ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு கொடுக்க வேண்டும். முதியவர்கள் பலரும் கழுத்துவலியால் அவதிப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *