“நான் அவன் சகோதரனே இல்லையாக்கும். எனக்கு அப்படி ஒரு சகோதரன் இருந்ததையே மறந்துவிடப் போகிறேன். இதோ அவனோடு இணைக்கப்பட்டதால் எங்கள் குடும்பப் பெயரையே துறந்துவிடப் போகிறேன்.” இலண்டனின் ஆகஸ்ட் மாதக் குளிர்க் காற்றுக்கு இதமாக கணப்பின் அருகே கைகளை வைத்துத் தேய்த்தபடி பஜன்லால் தன் ஆங்கிலேய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான், “ஒரு கொலைகாரனின் சகோதரன் என்பதே எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது. என் தந்தையார், அவன் என் மகனே அல்ல என்றும் அவனது உடலை எங்கள் குடும்பத்துக்கு அனுப்பி எங்களை அவமானப்படுத்தவேண்டாம் என்றும் மாட்சிமை தாங்கிய அரசருக்கு மனு அனுப்பிவிட்டார்.”
அதே நேரத்தில் அதே இலண்டனில் ஆங்கிலேய அதிகார வர்க்கத்தின் உச்சாணிப் பிரமுகர்கள் ஓர் அறையில் அதே கொலைகாரனைக் குறித்து, பேசிக்கொண்டிருந்தார்கள். “ஒரு தேசபக்தன் என்கிற விதத்தில் அவனை மதிக்கத்தான் வேண்டி இருக்கிறது,” என்றார் இலையாட் ஜியார்ஜ் (Lloyd George). அருகே அமர்ந்திருந்த பருமனான மனிதர் தலையாட்டினார்; “அவன் அன்று நீதிமன்றத்தில் பேசினானே… என்னைக் கேட்டால் தேசபக்தியின் பெயரில் நான் கேட்ட பேச்சுகளிலேயே மிகவும் அற்புதமான உரை அதுதான். நாம் ரெகுலஸையும் காரக்டாக்கஸையும் புளூடார்க்கின் வீரநாயகர்களையும் நம் நினைவில் வைத்திருப்பது போலவே அவனது பெயரையும் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் இந்தியர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அவனது பேச்சை நாம் வெளியில் வராமல் தடுத்துவிட்டோம் அல்லவா? …” அந்தப் பருமனான மனிதர்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாகப் போகும் வின்ஸ்டன் சர்ச்சில்.
அதே நேரத்தில் பிரிட்டிஷ் சிறையில் அந்தக் ‘கொலைகாரனை’ப் பார்க்க ஒரு ஒல்லியான இளைஞர் வந்திருந்தார். “நான் தூக்குத் தண்டனைக் கைதியைப் பார்க்க அனுமதியுடன் வந்திருக்கிறேன்.” கைதியிடம் அழைத்துச் செல்லப்பட்டார் அந்த மனிதர். சிறைக் கம்பிகளுக்கு இரு புறங்களிலும் நின்ற அந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒருவர் முகத்தில் புன்னகை; மற்றவர் கண்களில் கண்ணீர் அரும்பியது. “தங்கள் தரிசனத்தை யாசித்து வந்திருக்கிறேன்… நான் உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா?” என்றார் பார்க்க வந்தவர். சிறைக்குள் இருந்தவரோ, “தயவு செய்து ஒரு சீப்பு தரமுடியுமா? நாளை என் மணப்பெண்ணை முத்தமிடும் போது கலைந்த தலையுடன் இருப்பதை நான் விரும்பவில்லை,” என்றார். சீப்பும் சில தாள்களும் கைமாறின.
சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் விடைபெற்ற அந்த மனிதர் வீர சாவர்க்கர்.
இந்திய தேசபக்தர்களுக்கு கடுமையான தண்டனைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டு வந்த காலகட்டம் அது. இந்தத் தண்டனைகளில் முக்கிய பொறுப்பதிகாரியாக விளங்கியவன் கர்ஸன் வில்லி. இந்திய இம்பீரியல் செண்டரில் நடக்கும் விசுவாசமான இந்திய பிரஜைகளுக்கான கூட்டத்தில் அவன் கலந்து கொள்வதாக இருந்தது. ஜூலை 1, 1909 அன்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மதன்லால் திங்க்ரா சென்றார். நீலநிற பஞ்சாபித் தலைப்பாகையுடன் சென்ற அவர் கர்ஸான் வில்லியை ( Curzon Wyllie) நேருக்கு நேராகச் சுட்டு எமனுலகு அனுப்பினார். கூட்டம் பதறிச் சிதறி ஓடியது; திங்க்ரா போலிஸ் வரும்வரை நின்றார். பின்னர் செய்தியாளர்கள் எழுதினார்கள்: “அந்தக் கூட்டத்திலேயே அமைதியுடன் காணப்பட்டது திங்க்ரா மட்டும்தான்” திங்க்ரா நினைத்திருந்தால் அங்கிருந்த மக்கள் மீது குண்டுகளைப் பொழிந்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம். ஐரிஷ் புரட்சியாளர்கள் உதவியுடன் தப்பிச்சென்று பிரான்ஸில் அரசியல் அகதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் திங்க்ரா அதனைச் செய்யவில்லை. இலண்டனிலேயே இந்திய தேசியத்தின் சிங்க முழக்கத்தைக் கேட்கச்செய்துவிட்டார் திங்க்ரா.
பிரிட்டிஷ் கவிஞர் வில்ப்ரைய்ட் ஸ்காவென் ப்ளண்ட், (பிரிட்டிஷ் ராஜ்ஜிய விவகாரத் துறை உயர்பதவி வகித்தவர்) எழுதினார்: “எந்த ஒரு கிறிஸ்தவ இறைசாட்சியும் தனக்கு எதிரான தீர்ப்பினை இத்தனை மாட்சிமையுடனும் அச்சமின்மையுடனும் எதிர்நோக்கியதில்லை… இந்தியா இவரைப் போல 500 இளைஞர்களை உருவாக்கினால் நிச்சயமாக விடுதலையை அடைந்துவிடும். அந்த விசாரணையின் போது மருத்துவ அதிகாரி மதன்லால் திங்க்ராவின் நாடித் துடிப்பு கூட முதலில் இருந்து இறுதிவரை தனது இயல்பு நிலையிலிருந்து மாறவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.” ஐரிஷ்காரரான ப்ளண்டின் 69 ஆவது பிறந்தநாளும் மதன்லால் திங்க்ராவின் பலிதான தினமும் ஒன்றாக அமைந்தது. “என்னை திங்க்ரா பெருமைப்படுத்திவிட்டார்; இந்த நாள் இனி விடுதலை வீரர்களின் தியாகங்களின் நினைவுதினமாக அனுசரிக்கப்படும்” என அறிவித்தார் ப்ளண்ட்.
மதன்லால் திங்க்ராவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து டைம்ஸ் பத்திரிகை எழுதியது: “தண்டனை அறிவிக்கப்பட்ட போது கொலைகாரன் எவ்வித சலனமும் இன்றி இருந்தது அவனது மாட்சிமைக்குச் சாட்சியாக அமைந்தது. இங்கிலாந்து நாட்டு விசாரணைகளில் காணப்பட முடியாத அம்சம் இது. விசாரணைக் கூண்டிலிருந்து திங்க்ரா புன்னகையுடன் வெளியேறியதைக் காணமுடிந்தது.”
ஆகஸ்ட் 17, 1909 காலை 9:00 மணி இலண்டனின் பெண்டோன்வில்லி சிறையில் மதன்லால் திங்க்ரா அவரது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். ஹட்ஸன் எனும் ஒரு கிறிஸ்தவ பாதிரி வழக்கம்போல அவருக்காக பிரார்த்தனை செய்ய முன்வந்தார். “நான் ஒரு ஹிந்து; உங்கள் பிரார்த்தனை எனக்குத் தேவையில்லை” எனப் புன்னகையுடன் மறுத்துவிட்டார் திங்க்ரா.
இறுதி ஆசைகள் குறித்த கேள்விகளை நிராகரித்து நடந்தவர் முகத்தை மூடும் துணியையும் நிராகரித்தார். பிரிட்டிஷ் தலையாரி பியர்பாயிண்ட்டுக்கு எந்த வேலையும் வைக்காமல் அவரே தூக்குக் கயிறை முத்தமிட்டு கழுத்தில் சூடிக்கொண்டார். கால்களின் கீழிருந்த பலகை இழுக்கப்பட்டது. பிரிட்டிஷ் விதிகளின் படி அரைமணிநேரம் சடலம் தொங்கிய பிறகு எடுத்து வரப்பட்டது. மரண சான்றிதழ் வழங்கும் இடத்தில் சாவர்க்கரும் இருந்தார். மதன்லால் திங்க்ராவின் பூத உடலில் புன்னகை உறைந்திருந்தது. ஹிந்து முறைப்படி தகனம் செய்ய திங்க்ராவின் தோழர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் பிரிட்டிஷ் அரசுக்கான இராஜ விசுவாசத்துடன் அவரது உடலை வாங்க மறுத்துவிட்ட நிலையில் அவரது உடல் சிறையில் புதைக்கப்பட்டது.
பாரிஸில் இருந்த சர்தார் சிங் ராணாவுக்கு மதன்லால் திங்க்ராவின் இறுதி அறிக்கை சென்றது. மதன்லால் திங்க்ரா தூக்கிலிடப்பட்ட அன்று (17 ஆகஸ்ட், 1909) அவருடைய படத்துடன் வந்தே மாதரம் எழுதித் திகழ அதன் கீழ் இந்த அறிக்கை வெளியானது. இலண்டனிலும் அவை வெளிப்பட்டன. விரைவில் இந்தியாவுக்கும் அனுப்பப்பட்டன. அரசாங்கம் கருமசிரத்தையாக அதனைத் தடை செய்தது. “சவால்” எனும் தலைப்பில் வெளியான அந்த அறிக்கை கூறியது:
நான் கருணையை யாசிக்கப்போவதில்லை. உங்களுக்கு என் மீது எந்த அதிகாரமும் இல்லை. எப்படி ஜெர்மனி இங்கிலாந்தை ஆளமுடியாதோ அது போல பாரதத்தை இங்கிலாந்து ஆள முடியாது; கூடாது. நான் அன்று ஆங்கில இரத்தத்தை சிந்த வைத்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அது அடக்கத்துடன் நான் என் இந்திய தேசத்தின் தேசபக்த இளைஞர்களுக்கு தூக்குத் தண்டனைகளையும் நாடுகடத்தல் தண்டனைகளையும் அளித்து வந்தமைக்கான ஒரு எளிய பழிவாங்கும் முயற்சியே ஆகும். இந்த முயற்சியில் நான் என் மனசாட்சியைத் தவிர வேறு எவராலும் தூண்டப்படவில்லை என்பதனை சொல்லிக்கொள்கிறேன். நான் என் கடமையை செய்தேனே தவிர வேறு எவருடனும் சதியாலோசனை செய்யவில்லை.
அன்னியத் துப்பாக்கிகளால் அடக்கப்பட்டிருக்கும் ஒரு தேசமானது நிரந்தரப் போரில் ஈடுபட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். நிராயுதபாணிகளாக்கப்பட்ட ஒரு தேசத்துக்கு வெளிப்படையான யுத்தம் சாத்தியமில்லை. எனவே நான் எதிர்பாராத நேரத்தில் தாக்கினேன். போர் துப்பாக்கிகள் மறுக்கப்பட்டதால் நான் என் கைத்துப்பாக்கியால் தாக்கினேன்.
ஒரு ஹிந்து என்ற முறையில் என் தேசத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் என் தெய்வத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம். என் தேசத்தாயின் சேவை ஸ்ரீ ராமனின் சேவை. அவளுக்கு செய்யப்படும் சேவை ஸ்ரீ கிருஷ்ணனுக்குச் செய்யப்படும் சேவை. புத்திபலத்திலும் உடல்பலத்திலும் சக்தியில்லாத என்னைப் போன்ற ஒரு மைந்தன் என் அன்னைக்கு என் உதிரத்தைத் தவிர வேறு எதைத் தந்துவிட இயலும்? எனவே என் இரத்தத்தை அவள் சந்நிதியில் நான் சமர்ப்பித்தேன்.
இந்த விடுதலை யுத்தமானது பாரதத்துக்கும் இங்கிலாந்துக்குமிடையே தொடரும். ஆங்கிலேயர் எனும் இனத்துக்கும் ஹிந்துக்களுக்கும் இடையே இந்த இயற்கைக்கு முரணான ஏற்பாடு இருக்கும் பட்சத்தில் அந்த இரு இனங்களும் இருக்கும் வரை இந்தப் போராட்டம் முடிவின்றித் தொடரும்.
இறைவனிடம் என் ஒரே பிரார்த்தனை இதுதான்– நான் என் தேசத்துக்காக மீண்டும் இதே தேச அன்னைக்குப் பிறப்பேனாக. மீண்டும் இதே புண்ணிய கைங்கரியத்தில் மரணத்தைத் தழுவுவேனாக. உலக மானுடம் அனைத்துக்கும் அவள் நன்மையை அருளவும் ஈஸ்வரனின் மகோன்னதத்தை பிரகடனப்படுத்தவும், அவள் விடுதலையை அடையும்வரை நான் மீண்டும் மீண்டும் பிறந்து இதே கைங்கரியத்துக்காக மரணத்தைத் தழுவுவேனாக. இன்று என் பாரத தேசம் படித்துக்கொள்ள வேண்டிய ஒரே பாடம் எப்படி தேசத்துக்காக மரணத்தை ஏற்றுக்கொள்வது என்பதுதான். அதனை கற்பிக்க ஒரே வழி, நாமே அந்தப் பாதையை ஏற்று வழிகாட்டுவதுதான். எனவே நான் மரணத்தை ஏற்றுக்கொள்கிறேன் அந்தப் பிராண தியாகத்தில் பிரகாசிக்கிறேன். வந்தே மாதரம்.
இன்று பாரத அன்னையின் விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரனின் நூறாவது பலிதான தினம். இரண்டாயிரம் ஆண்டுகள் இந்தியர்கள் இவரது நினைவைக் கொண்டாடுவார்கள் என அன்னியனையே வியந்து சொல்லவைத்த அந்த வீர மைந்தனின் நூறாவது பலிதான தினம். இந்தத் தேசத்தின் விடுதலையின்பால் கொண்ட அன்பினால், பிறந்த குடும்பத்தால் நினைவு துறக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, உறவு அறுக்கப்பட்டு, அனாதையாகப் புதைக்கப்பட்ட வீரனின் நினைவுதினம். நாம் அவரை நினைவில் வைத்திருக்கிறோமா? இத்தகைய தியாகங்களால் பெறப்பட்ட விடுதலைக்கு நாம் பாத்தியர்களாக இருக்கிறோமா? நாம் உண்ணும் உணவின் ஒவ்வொரு உப்புக் கல்லிலும் உறைந்திருப்பது வீரத் தியாகிகளின் உதிரமும் வியர்வையும் அவர்களை நேசித்தோர் சிந்திய கண்ணீரும். அதனை நாம் எண்ணிப் பார்க்கிறோமா? மதன்லால் திங்க்ராவின் நூறாவது நினைவுதினத்தன்று ஒவ்வொரு பாரத மைந்தனும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.
அநாதையாகப் புதைக்கப்பட்டவர்களின் நினைவு அநாதையாக்கப்பட்டால்….
சாவர்க்கர் குறித்த வரலாற்று ஆதாரங்கள் அந்தமான் சிறையிலிருந்து அகற்றப்படும்.
நான் என்ன செய்ய முடியும்?
மதன்லால் திங்கராவின் நினைவில் இன்று ஒரு நாள் உணவு உண்ணாமல் இருப்பதைத் தவிர…
எம் கடமையை நினைவுபடுத்திய அரவிந்தனுக்கு நன்றிகள்.
பால கங்காதர திலக், வீர சாவர்கர், மதன்லால் திங்ரா, போன்ற மாவீரர்கள் வாழ்ந்த சமயத்தில் நான் பிறக்கவில்லையே என ஏக்கம்தான் மனதில் எழுந்தது. மனம் கசிந்ததது.
அப்படி தன் இன்னுயிர் ஈந்த மாவீரர்கள் செய்த தியாகத்தினால் தான் இன்று இந்திய நாடு சுதந்திரம் பெற்றுள்ளது.
எம்ஜிஆர் போன்ற (தியாகி?????????????????? எதற்கு எதைத் தியாகம் செய்தார்)க்கு ‘பாரதரத்னா’?
வீர சாவர்கர் நினைவிலேயே இல்லை! என்ன அநியாயம்.
இந்திய நாட்டு பாரம்பரியத்தையும், தியாகத்தை அறியாதவர்கள் நாட்டில் இன்று கோலோச்சுகிறார்கள்.
இந்திய நாட்டை ஆள இன்று இத்தாலியிலிருந்து வந்தவர் சூபர் அட்வைசராக இந்திய அரசாங்கத்தை ஆள்கிறார்.
அன்று “போகாதே போகாதே எங்கணவா?” என பிலக்கணம் பாடிய திராவிடபரம்பரை இன்று தமிழ் நாட்டை ஆள்கிறது, மத்திய அரசையும் ஆட்டிவைக்கிறது. ஏதோ புது சட்டையை மாட்டிக்கொண்டு இந்திய தேசீய மூவர்ணக்கொடியை இன்று சென்னைக் கேட்டையில் கொடியேற்றி சல்யூட் அடிக்கிறது.
என்ன விபரீதம்!!
I too have decided not to eat any food today.
”வீரர் முப்பத்திரண்டு கோடி விளைவித்த
பாரத மாதாவின் பதமலர்க்கே..”
என்று தொடங்குகிறது பாரதியின் பாடல் ஒன்று. அன்னிய ஆதிக்கத்திற்கெதிராக தேசம் முழுதுமே வீறுகொண்டு எழ வேண்டும் என்ற கவிஞனின் அழைப்பு அது. அத்தகைய மாவீரர்களில் ஒருவர் அல்லவோ மதன்லால் திங்க்ரா!
”வீர் சாவர்க்கர்” என்ற ஹிந்தி திரைப்படத்தில் (4-5 ஆண்டுகள் முன்பு வந்தது) திங்க்ராவின் வீரச் செயல்,விசாரணை ஆகிய நிகழ்வுகள் அருமையாக எடுக்கப் பட்டிருந்தன. இந்தத் திரைப்படமும் சிறப்பாக இருந்தது.
சிலிர்ப்பூட்டும் தியாகம் மதன்லால் திங்க்ராவுடையது. அந்த மாவீரரின் புனித நினைவுக்கு என் அஞ்சலி. இந்த தியாக நினைவு எம் தலைமுறையினரிடமும் தேச பக்தியைத் தூண்டட்டும்!
இந்தியாவுக்கு கிடைத்த சுதந்திரம் இதைப்போன்ற உண்மையான பாரதமாதாவின் புதல்வர்களால் கிடைத்தது.. ஆனால் அந்த சுதந்திரத்தை இன்று கடைச்சரக்காக்கி அதற்கு விலைவைத்து விற்கும் நிலைவரை கொண்டுசென்றுவிட்டனர் நம் இன்றைய அரசியல்வாதிகள் என்ற பெயரில் உலவும் தேசவிரோதிகள். திங்க்ராவை நன்றியுடன் நினைப்போம் நாமும் நமது அடுத்த தலைமுறைகளும்…
வந்தேமாதரம்…
மிக அருமையான கட்டுரை. படிக்கும்போது கண்கள் பணிக்கின்றது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு அடித்தளம் நாட்டிய அந்த தியாகச் செம்மலுக்கு எனது மனமார்ந்த உளமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். கட்டுரையாளரின் சீரிய பனி தொடர வாழ்த்துக்கள். நன்றி.
அருமையான கட்டுரை. படிக்கும்போது கண்கள் பணிக்கின்றது. பாரதத்தின் சுதந்திரத்திற்கு அடித்தளம் நாட்டிய அந்த தியாகச் செம்மலுக்கு எனது மனமார்ந்த உளமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.
இன்று தான் படிக்க வாய்த்தது. நேற்று மதன் லால் திங்ரா தியாகத்தின் நூறாவது நினைவு தினம் என்பது அரவிந்தன் சொல்லித் தான் எனக்குத் தெரிகிறது. இதை அரவிந்தன் தான் சொல்லவேண்டியிருக்கிறது, அதைச் சொல்லக் கிடைத்துள்ள மேடை தமிழ் ஹிந்து தான் என்பது காலத்தின் கோலம். வேறு யாராவது எங்காவது, பஞ்சாபிலாவது நினைவு கூறுகிறார்களா என்பது தெரியவில்லை. நேற்று முரசொலி மாறனின் நினைவு தினம் தில்லியிலும் சென்னையிலும் கொண்டாடப்பட்டது என்று பத்திரிகை செய்தி. இதுவும் காலத்தின் கோலம். எனக்கு அரவிந்தன் எழுதிய பிறகு தான் திங்ராவின் நினைவு தினம் தெரியவருவதும் காலத்தின் கோலம்.
ஒரு அரவிந்தனாவது, ஒரு தமிழ் ஹிந்துவாவது கிடைத்துள்ளதே என்று வேண்டுமானால் மனம் சமாதானம் கொள்ளலாம். வேறென்ன சொல்ல?
ஆமாம் மதன்லால் திங்ரா தன்னை ஒரு ஹிந்து ஒரு சொல்லிக்கொள்கிறானென்றால், அவனும் தூக்கு மேடை ஏறிய பயங்கரவாதிதான். ஹிந்துத்வா பயங்கர வாதம் அன்றே தொடங்கிவிட்டது என்று நிறையப் பேர் சொல்லக்கூடும். ஹிந்து என்பதே இப்போது சில வருஷங்களாக வசைச் சொல்லாகி வருகிறது.
That sincerity dedication all we had lost where we will go to get people like our freedom figters to make a strong clean india pray for our country
Sir,
Excellent article. What is more concerning me is that younger generation grow with out even proper information about such Martyrs…None of the text books today talk about Savarkar, Dhingra & Va.Ve.Su.Aiyar…Kids reads about Cricketing stars and Matinee idols who have done nothing in comparision to these great…
Vande Mataram!
Krishna
Wonderful article.
time has come to create more and more dhingaras now.
Cant Control My tears after reading this. Forgive my motherland, your sons hands are tigfhed in family circle. responsibilities.
this poor son can cry for you…. the day will come, your son will give his soul for you mother….
JaiHindu
அற்புதமான கட்டுரை !
பாரதத்தின் உண்மையான வரலாறு எழுதப்படவேண்டும்.
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு மகனாக பிறக்கட்டும் இப்பிறவியில். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் பிறவிப்பயனை அடைவேன்.
உடல் உள்ளம் நாடி நரம்பு சதை ரத்தம் சிந்தனை என அப்பழுக்கற்ற ஒரு தேச பக்தன் மதன் லால் திங்காரா ஜி.
படிக்கும் போதே கண்ணில் நீர் வழிகிறது.