ஏமா(ற்)ற உதவிய சுயமரியாதைத் திருமணம்
எம். பி. ஏ பட்டதாரியான சர்மிளா கரூர் வைஸ்யா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றுகிறார். ஐ. பி. எஸ் அதிகாரியான சாமுவேல் ஜம்முவில் இந்தியன் ரிஸர்வ் போலீசின் 13-ஆவது பட்டால்லியன் கமாண்டராக பணியாற்றி வருகிறார். இருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சர்மிளா இந்து யாதவ சமூகத்தையும், சாமுவேல் கிறுத்தவ யாதவ சமூகத்தையும் சேர்ந்தவர்கள். ஆனால், சாமுவேல், அவர் பெற்றோர், நண்பர்கள் அனைவரும் சாமுவேல் குடும்பத்தினர் இந்து மதத்திற்கு மாறி விட்டதாக சாதித்து சர்மிளா குடும்பத்தினரை நம்ப வைத்துத் திருமணம் பேசி முடித்தனர். இருவருக்கும், மாநில அமைச்சர் சுப தங்கவேலு அவர்கள் முன்னிலையில் கடந்த ஃபிப்ரவரி மாதம் 2-ஆம் தேதியன்று சென்னையில் ‘சுயமரியாதைத் திருமணம்’ நடந்தேறியது.
சாமுவேல் இந்து அல்ல கிறுத்துவர் என்பதும், மற்றும் பல உண்மைகளும், திருமணத்திற்குப் பிறகு தெரிய வர, மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார் சர்மிளா. சென்னையிலிருந்து ராமநாதபுரம் சென்று சில நாட்கள் தங்கி, பின்னர் மதுரையில் சாமுவேலின் நண்பர் வீட்டில் சில நாட்கள் தங்கி, கடைசியாக ஜம்முவிலும் சில நாட்கள் தங்கியுள்ளனர். முதல் இரவில் ஆரம்பித்த சித்திரவதை சர்மிளாவிற்குத் தொடர்கதையாகிப் போனது. கணவர் செய்த ஏமாற்று வேலைகளையும், சித்திரவதைகளையும் சொல்லி, சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் சர்மிளா. பதிலுக்கு சர்மிளாவின் நடத்தை சரியில்லை என்று சொல்லி ஜம்முவில் புகார் அளித்துள்ளார் சாமுவேல். மேலும் சென்னைக்கு வந்து சர்மிளாவின் புகாருக்குப் பதில் அளிக்கும் விதமாக ஜம்முவில் செய்த அதே புகாரைச் சொல்லியுள்ளார் சாமுவேல். விசாரணைக்காக சர்மிளா ஜம்முவிற்கும், சாமுவேல் சென்னைக்கும் மாறி மாறி போய்வந்துகொண்டிருக்க வேண்டும் என்பதால், இருவரையும் சென்னையிலேயே வைத்துப் பேசி இருவருக்கும் சம்மதமான ஒரு முடிவை எடுக்கும் திட்டத்தில் காவல் துறை இருப்பதாக செய்தி வந்துள்ளது. இவை அனைத்தும் இந்த மாதம் முதல் வார இறுதியில் ஊடகங்கள் வாயிலாக பரபரப்பாகப் பேசப்பட்ட செய்திகள்.
இரு தனி நபர்கள் சம்பந்தப்பட்ட சொந்த குடும்பப் பிரச்சனையைப் பற்றி நாம் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும். ஆனால் இந்த வழக்கில் தமிழகம் சம்பந்தப்பட்ட ஒரு சட்டப் பிரச்சனை இருப்பதால், அவ்விஷயத்தைப் பொதுவில் வைத்து அனைத்து சமூக/மத மக்களின் கவனத்தையும் ஈர்த்து, அதன் மூலம் ஒரு நல்ல முடிவைக் காணுவது நமது கடமையாகும்.
சர்மிளா, சாமுவேல் இருவரும் தி. மு. க. அரசின் அமைச்சர் சுப தங்கவேலன் முன்னிலையில் “சுயமரியாதைத் திருமணம்” செய்து கொண்டார்கள் என்பதை பார்த்தோம். தன்னை இந்து என்று சொல்லி சர்மிளாவை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்ட சாமுவேல், தான் உண்மையிலேயே கிறுத்துவர் என்றும், அதனால் அவர்களின் திருமணம் செல்லாது என்றும் சொல்லி சர்மிளாவை பயமுறுத்தியிருக்கிறார். மேலும் தனக்கு அரசியல் பிரமுகர்கள், அரசாங்க மற்றும் காவல் துறை அதிகாரிகள் நிறைய பேர்களைத் தெரியும் என்றும் சொல்லி மிரட்டியிருக்கிறார். காவல் துறையினர் அவர்களைப் பிரித்து வைப்பார்களோ அல்லது சேர்த்து வைப்பார்களோ நமக்குத் தெரியாது. ஆனால் எந்த முடிவு ஏற்பட்டாலும், இந்த “சுயமரியாதைத் திருமணம்” என்கிற, நம் பழம்பெரும் தமிழ் கலாசாரத்திற்குச் சற்றும் பொருந்தாத, ”திராவிடக் கூத்து”, எப்படி அவ்வாறு திருமணம் செய்துகொள்ளும் நம் தமிழ் மக்களின் சுயமரியாதையைக் காற்றில் பறக்குமாறு செய்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி, திராவிட மாயையில் மயங்கி இருக்கும் நம் மக்களை மீண்டும் உண்மையான தமிழ் இந்து கலாசாரத்தின் பக்கம் திருப்புவது நம் இன்றியமையாத பணியாகும்.
ஈ. வெ. ரா. வும் சுயமரியாதை இயக்கமும்
ஈ. வெ. ராமசாமி நாயக்கர் 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கினார். பல ஜாதிகள் கொண்ட சமூகத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் தமது சுயமரியாதையை காத்துக்கொள்ள ஊக்குவிப்பதும், பிற்படுத்தப்பட்டவர்களின் மனித உரிமையை நிலைநாட்டுவதும், சமூக நீதி அடைந்திடுவதும் இந்த இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக ஈ. வெ. ரா. பிரகடனப் படுத்தினார். ஒரு மனிதன் தன் சுயமரியாதையை வளர்த்துக் கொண்டால், அவனது தனித்தன்மையும் கூடவே வளரும். பின்னர் அவன் யாருக்கும் அடிபணியத்தேவையில்லை. ஜாதிகளிடையே காணப்படும் உயர்வு-தாழ்வு நீங்கினால்தான் நாம் உணமையான சுயமரியாதை அடைந்தவர்களாவோம் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
சுயமரியாதை என்பது தம் உயிர் போன்றது என்றும் அதைப் பாதுகாப்பதுதான் தமது பிறப்புரிமையே தவிர சுயராஜ்யம் அல்ல என்றும் முழங்கிய ஈ. வெ. ரா, காந்திஜி முதலான விடுதலை போராட்ட வீரர்கள் முன்னிறுத்தும் தேச விடுதலை பயனில்லை என்றும், சுயமரியாதை இயக்கமே உண்மையான விடுதலை இயக்கம் என்றும், அதை அடைந்த பிறகு தான் அரசியல் சுதந்திரம் கிடைக்கும் என்றும் கூறினார். அதற்கு ’அறிவு விடுதலை இயக்கம்’ என்றும் ஒரு பெயர் சூட்டினார். (https://en.wikipedia.org/wiki/Self-Respect_Movement)
சமூக நீதியையும், ஜாதி ஒழிப்பையும் முக்கிய குறிக்கோள்களாகச் சொல்லிக்கொண்டாலும், சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் அனைத்திற்கும் பிராம்மணர்களையே குற்றம் சொல்லி அவர்கள் மீது பழி சுமத்திய ஈ. வெ. ரா, பிராம்மணர்களையும், பழங்காலம் தொட்டு கடைபிடிக்கப்பட்டு வந்த இந்துமத சடங்கு சம்பிரதாயங்களையும், கலாசாரப் பழக்கவழக்கங்களையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற தன்னுடைய “உயரிய” நோக்கத்திற்காகவும், அதன் மூலம் அரசியல் லாபம் பெறுவதற்காகவும், தன் சுயமரியாதை இயக்கத்தைப் பெரிதும் பயன்படுத்தினார். அதற்கான திட்டங்களுள் ஒன்றாக “சுயமரியாதைத் திருமணம்” என்கிற கேலிக்கூத்தை தோற்றுவித்தார்.
ஈ. வெ. ரா. கண்ட சுயமரியாதைத் திருமணங்கள்
காரைக்குடியில், ஜூன் 29, 1929-ல் சோ. முருகப்பன் என்கிற தொண்டருக்கும் மரகதவல்லி என்கிற விதவைப் பெண்மணிக்கும் சுயமரியாதைத் திருமணம் நடந்தது. ஈ. வெ. ரா. திருமணக் கூடத்திற்கு வருகை தந்ததும், மணமக்கள் இருவரும் மோதிரமும், மாலைகளும் மாற்றிக்கொண்டனர். பின்னர் மணமகன், “மரகதவல்லியை என் முழுமனதுடன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்கிறேன். அவளிடம் இருந்து நான் என்னென்ன உரிமைகள் எதிர்பார்க்கிறேனோ, அவ்வுரிமைகள் அனைத்தும் நான் அவளுக்கு வழங்குகிறேன். நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வாழ்வோம்” என்று உறுதி அளிக்க, அதே போல் மணமகளும் உறுதி கூற திருமணம் இனிதே நிறைவேறியது.
பின்னர் சில நாட்கள் கழித்து கோவையில் இந்திராமணி, துரைசாமி இருவரும் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் மூன்று நிமிடத்தில் முடிய ஈ. வெ. ரா நாற்பத்தைந்து நிமிடங்கள், தன் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி “பகுத்தறிவு” பொங்கப் பேசி மணமக்களுக்கு ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சி, ’குடியரசு’ நாளிதழில், “ஒரு சீர்திருத்த திருமணம்” என்கிற தலைப்பில் வெளியானது.
குஞ்ஜிதம் மற்றும் குருசாமி ஆகிய இருவரும் 1929-ல் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டபோது, அவர்களே திருமண கூடத்தை சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பிரசாரம் செய்யும் மேடையாக மாற்றினர். அப்போது பேசிய மணமகள் குஞ்ஜிதம், “தெய்வீகத் திருமணம் என்கிற பெயரில் நம்மை நம் பெற்றோர்கள் ஆடு மாடுகளைப்போல் நமக்குப் பிடிக்காத ஆண்மகனுக்கு விற்கின்றனர். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. வெறுத்து ஒதுக்கவேண்டும்” என்று பகுத்தறிவுடன் பெண்ணுரிமை பேசினார். இந்த சுயமரியாதைத் திருமணங்கள் பெண்களுக்கு சுதந்திரம் தருவதோடு மட்டுமல்லாமல், கற்பு என்கிற விலங்கை உடைத்து விடுதலை பெற்றுத்தரும் பகுத்தறிவுச் செயலாகவும் தொடர்ந்து பிரசாரம் செய்யப்பட்டு வந்தது.
சுயமரியாதைத் திருமணம் பற்றிய தன் கருத்தை முன்வைத்த ஈ. வெ. ரா, “திருமணத்திற்குக் கடவுளை ஏன் அழைக்க வேண்டும்? திருமணத்திற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? கடவுளின் தேவை என்ன? ஓட்டலுக்கும், கக்கூசுக்கும் போகும்போது கடவுளை அழைக்கிறோமா என்ன?” என்று பகுத்தறிவு மிக்க கேள்விகள் கேட்டார். மேலும், “நம் திருமணத்தை ’கல்யாணம்’, ’கன்னியாதானம்’ என்றெல்லாம் சொல்வதை நிறுத்தி, ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்றே கூறவேண்டும். இரண்டு நண்பர்கள் சேர்ந்து ஒரு வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும்போது ’ஒப்பந்தம்’ போட்டுக்கொள்கிறர்கள். அதைப்போல் வாழ்க்கையும் ஒரு வியாபாரம்தான். வியாபாரம் செய்ய ஒப்பந்தம் மூலம் முயற்சி செய்வதைப் போல், ஆணும் பெண்ணும் தங்களுக்கிடையே ஒரு உறவு ஏற்படுத்திக்கொண்டு, ஒன்றிணைந்து வாழ்வதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மணமகனும், மணகளும் மாலை மாற்றி உறுதி மொழி எடுத்துக்கொள்வதன்மூலம் தங்கள் ஒப்பந்தத்தை நிலைநாட்டி முடிவை எடுக்கவேண்டும்” என்று சுயமரியாதைத் திருமணத்திற்குப் பகுத்தறிவு விளக்கம் கொடுத்தார். விவாகரத்து பற்றிய விளக்கத்தைக் கொடுக்கும்போது, “மணமக்கள் இருவரும் தாங்கள் பொருத்தமானவர்கள் என்றுணர்ந்தால் மனம் ஒன்றி ஓருயிராக வாழலாம். இருவரும் பொருத்தம் இல்லையென்று உணர்ந்தார்களேயானால், அவர்கள் பிரிந்து தங்களுக்குப் பொருத்தமான வேறு ஒருவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்” என்று கூறினார்.
சுயமரியாதைத் திருமணங்கள் தொண்டர்களுக்கு மட்டுமே
வயதுப் பொருத்தமில்லாமலும், மணமக்கள் விருப்பம் இல்லாமலும் பெற்றோர் அவர்களாகவே நடத்தும் திருமணங்கள் சுயமரியாதையற்ற திருமணங்கள் என்பது ஈ. வெ. ரா அவர்களின் கருத்து. இதைத் தன் மேடைப் பேச்சுக்களிலும், ’குடியரசு’ பத்திரிகையிலும் அவர் கூறியிருக்கிறார். தன் இயக்கத்துத் தொண்டர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் நூற்றுக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் நடத்தி பெரிதும் ஊக்கமளித்து வந்த ஈ. வெ. ரா. 09-07-1949 அன்று தன் 72-ஆவது வயதில், தன்னை விட 46 வருடங்கள் சிறியவரான 26 வயதான மணியம்மையைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும், தொண்டர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலர் நிலைகுலைந்து போயினர். வயது பொருத்தமில்லாத திருமணங்கள் சுயமரியாதையற்றவை என்று மேடைகள் தோறும் முழங்கி வந்த சுயமரியாதை இயக்கத்தலைவர், சுயமரியாதையற்ற பதிவுத் திருமணம் செய்துகொண்டது அவருடைய உண்மையான சுயரூபத்தையே காண்பித்ததாக பலர் எண்ணலாயினர்.
ஈ. வெ. ராவின் இரண்டாவது திருமணத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களுள் அண்ணாவும் ஒருவர். அந்தத் திருமணத்திற்குப் பிறகு ‘திராவிட நாடு’ பத்திரிகையில், அதைக் கண்டித்தும், அதைப் பற்றிப் புலம்பியும், ஈ. வெ. ராவின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியும் பல கட்டுரைகள் தொடர்ந்து எழுதியுள்ளார் அண்ணா. (”ஈ. வெ. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்” – ம. வெங்கடேசன் – பக்கம் 118-137)
மற்றுமொறு தலைவரான திரு இராம அரங்கண்ணலும் ஈ. வெ. ராவின் இடண்டாவது திருமணத்தைச் சகியாதவர். ”மனச்சாட்சியின்படி நடக்க விரும்பியவர்களில் ஒருவர் இராம. அரங்கண்ணல். அவர் தன்னுடைய எதிர்ப்பை நூதனமான முறையில் தெரிவித்தார். ‘வயதானவர்கள் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது’ என்ற பொருள்பட ஈ. வெ. ரா பல மேடைகளில் முழங்கியிருந்தார். அந்தப் பேச்சுக்களைத் தொகுத்து ஈ. வெ. ரா-வுக்குத் தெரியாமல் இந்த (அ)சந்தர்ப்பத்தில் விடுதலை இதழில் அச்சேற்றிவிட்டார் அரங்கண்ணல். அவர் விடுதலை இதழில் துணையாசிரியராக இருந்தார். விடுதலை இதழின் உரிமையாளர் ஈ. வெ. ரா. அதில் வெளிவந்ததோ ஈ. வெ. ராவின் பேச்சு. தன்னுடைய கையால் தன் கண்ணைக் குத்துகிறார்களே என்ற கோபம் ஈ. வெ. ராவுக்கு; அரங்கண்ணல் வெளியேற்றப்பட்டார். பகுத்தறிவாளர்களின் பயணத்தில் இது இன்னொரு மைல்கல்” என்று தன்னுடைய ”போகப் போகத் தெரியும்” தொடர் கட்டுரையில் தெரிவிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சுப்பு அவர்கள்.
தன்னுடைய சுயநலத்திற்காக சற்றும் வயது பொருத்தமில்லாத சுயமரியாதையற்ற பதிவுத் திருமணம் செய்துகொண்ட ஈ. வெ. ரா அதன் பிறகும் தன் தொண்டர்கள் மத்தியில் சுயமரியாதைத் திருமணத்தைப் பற்றி பிரசாரம் செய்துவந்துள்ளார். 20-04-1962 தேதியிட்ட ‘விடுதலை’ இதழில், “பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும்தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக்கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம்’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?” என்று எழுதி, சுயமரியாதைத் திருமணத்தில் சம உரிமையும் விளங்குகிறது என்றும் கூறுகிறார். (”ஈ. வெ. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்” – ம. வெங்கடேசன் – பக்கம் – 137)
சுயமரியாதைத் திருமணத்திற்கான சட்ட அங்கீகாரம்
1925-ல் சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதன் போதைமிகு பிரசாரத்தில் மயங்கிபோன அப்பாவித் தொண்டர்கள் நூற்றுக் கணக்கில் சுயமரியாதைத் திருமணங்கள் செய்து கொண்டனர். தங்கள் குடும்பத்தாருக்கும் செய்து வைத்தனர். இத்திருமணங்கள் நாற்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. ஆனால் ஒரு திருமணத்திற்காகவாவது சட்ட அங்கீகாரம் கிடையாது. பகுத்தறிவுப் போதையில் மயங்கிக் கிடந்த அப்பாவித் தொண்டர்கள், தங்கள் திருமணங்கள் ச்ட்டப்படி செல்லாது என்பது தெரியாமலும், தாங்கள் கலாசாரமும் பாரம்பரியமும் கொண்ட பெரும்பான்மையான மக்களின் முன்னால் சுயமரியாதையை இழந்து நிற்கிறோம் என்பது புரியாமலும், உழன்று கொண்டிருந்தனர். கடைசியாக 1967-ல் தி. மு. க. தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தான், முதலமைச்சராக இருந்த அண்ணா சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
பகுத்தறிவுப் போதையில் மயங்கிக் கிடந்திருந்த அப்பாவித் தொண்டர்களுக்கு தங்கள் இயக்கம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய மயக்கமும் சேர்ந்துகொள்ள, தாங்கள் இழந்திருந்த சுய மரியாதையைத் திரும்பப் பெறவேண்டும் என்ற எண்ணமே ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக, ஆரம்பித்திலிருந்து நாற்பது ஆண்டுகளில் நடைபெற்றுள்ள அனைத்து சுய மரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்குமாறு வழிவகை செய்தது அண்ணாவின் அரசு.
கிறுஸ்துவ, இஸ்லாமியர்களின் சுயமரியாதை
ஆனால், அப்போது இருந்த, இப்போதும் இருக்கின்ற, ஒரு மிகப்பெரிய பிரச்சினை, இன்று வரை வெளிச்சத்திற்கு வராமல் இருக்கின்றது. நாற்பது ஆண்டு காலமாக நூற்றுக் கணக்கான தொண்டர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர் என்று பார்த்தோம். அதில் கிறுஸ்துவ, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தொண்டர்களும் பலர் அடக்கம். அவர்கள் அனைவரும் சுயமரியாதையை இழந்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் முட்டாள்தனத்தினால் பின்னாளில் ஏற்படப்போகும் பல பிரச்சினைகள் பற்றி எதுவும் தெரியாமல் இருந்திருக்கின்றார்கள். ஏனென்றால், சுயமரியாதைத் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான சட்டத் திருத்தம், இந்துத் திருமணச் சட்டத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இந்திய கிறிஸ்துவ மற்றும் இந்திய இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் எந்த விதமான திருத்தங்களும் செய்யப்படாததால், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் செய்துகொண்டுள்ள சுயமரியாதைத் திருமணங்கள் இன்றுவரை செல்லாது என்பதே உண்மை. இந்த மிகப்பெரிய குற்றம் இன்றளவில் களையப்படாமலே இருக்கின்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில் புரிந்து வரும் வழக்குரைஞர் எஸ். ஸ்வாமிநாதன் அவர்கள், “சட்டத் திருத்தம் 1955-ல் போடப்பட்ட இந்து திருமணச் சட்டத்தில் தான் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்துக்கள் செய்துகொள்ளும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு மட்டுமே சட்ட அங்கீகாரம் உண்டு. சிறப்புத் திருமணங்கள் சட்டத்தில் (Special Marriages Act) எந்தவிதமான திருத்தமும்கொண்டு வராததால், கிறுஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் செய்து கொள்ளும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு இன்றுவரை சட்ட அங்கீகாரம் கிடையாது. எனவே அவை செல்லாது” என்று தெளிவுபடக்கூறுகிறார். மேலும் பல வழக்குரைஞர்களும் இதை ஆமோதிக்கின்றனர். அனைத்திலும் ”சமூக நீதி” காணத்துடிக்கும் திராவிட இயக்கத்தினர், சுயமரியாதை திருமணத்தில் மட்டும் அதை மறந்து போனது நல்ல நகைமுரண்.
ஆனால் சுயமரியாதை இயக்கத்திற்கு ஆரம்பத்திலிருந்தே கிறிஸ்துவர்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு இருந்தது என்றும், இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்த கிறிஸ்தவர்களை கத்தோலிக்க சபை கடுமையாக எச்சரித்தது என்பதையும், பின்னர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் மனம் திருந்தி இயக்கத்திலிருந்து வெளியேறத் தொடங்கினர் என்பதையும், எழுத்தாளர் சுப்பு அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக சுய மரியாதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான திரு. எ. டி. பன்னீர்செல்வம் அவர்களைக் கூறலாம். கத்தோலிக்க திருச்சபை எச்சரித்ததும் சுயமரியாதை இயக்கத்திலிருந்து மெதுவாகக் கழன்று கொண்டவர் அவர். ஆனாலும் இன்றும் திராவிடக் குஞ்சுகள் அவரைத் தங்கள் இயக்கத்தினராகவே சொல்லிக் கொள்வார்கள்.
எனவே, வெளிப்படையாக தங்கள் திராவிடத் தலைவர்கள் முன்னிலையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட கிறிஸ்துவர்கள் பின்னர் ரகசியமாக சர்ச்சுகளில் பாதிரியார்கள் முன்னிலையில் தங்கள் வழக்கப்படி (இந்திய கிறுஸ்துவ திருமணச் சட்டம்) திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்லாமியர்களும் இதே நிலைப்பாடு கொண்டதாகத்தான் தெரிகிறது. மேலும் நாளடைவில் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் சுயமரியாதை இயக்கத்தில் சேருவதே குறைந்து போனது. கடவுள் மறுப்புக் கொள்கையுடன் நாத்திகம் பேசுபவர்கள் இரு மதங்களிலும் இல்லாததும் அதற்கு ஒரு முக்கியமான காரணம்.
இஸ்லாமிய கிறுஸ்துவ மத நிறுவனங்களைப் பொருத்தவரை, திராவிட இயக்கங்கள் இந்துக்களுக்கு எதிராகச் செய்யும் நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரிக்கவே செய்தன. அவர்களின் அரசியலுக்கும் அது மிகவும் உதவியாயிருந்தது. திராவிட சுயமரியாதை இயக்கங்களின் கொள்கைகள் அவர்களுக்கு ஒவ்வாததாக இருந்தாலும், இந்து எதிர்ப்பு என்கிற கோட்பாட்டில் அவை ஒன்றாகச் சேர்ந்துகொள்வது, நாட்டு நடப்புகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் சுயமரியாதைத் திருமணத்தைக் கூவிக்கூவி விற்றவர்கள், தாங்கள் அரசு கட்டிலில் அமர்ந்தவுடன், இந்து திருமணச் சட்டத்தில் மட்டுமே திருத்தம்கொண்டுவந்துவிட்டு கிறுஸ்துவ மற்றும் இஸ்லாமியத் திருமணச் சட்டங்களை கண்டுகொள்ளாமல்விட்டு, சிறப்புத் திருமணங்கள் சட்டத்திலும் (Special Marriages Act) எந்தவிதமான திருத்தங்களும்கொண்டுவராமல் விட்டனர். இந்த ஒரு விஷயத்திலிருந்தே இந்த ”சுயமரியாதைக்காரர்கள்” இரட்டை வேடம் போடுபவர்கள் என்பதையும், இவர்களின் கடவுள் மறுப்பு கொள்கையும், பகுத்தறிவுப் பிரசாரமும், இந்துக்கள், இந்து கடவுளர் மற்றும் இந்து கலாசாரம் ஆகியவற்றை எதிர்க்கவும், தங்களின் சுயலாபத்தைப் பெருக்கிக்கொள்ளவும் மட்டுமே பயன்படுத்திய அரசியல் நாடகங்கள் என்பதையும், தெரிந்துகொள்ளலாம்.
’அரசியல் தமாஷா’வாகிப்போன சுயமரியாதைத் திருமணம்
ஐந்து நிமிட சடங்கிற்குப் பிறகு ஐம்பது நிமிட அரசியல் பிரசாரம் நடக்கும் கேலிக்கூத்துதான் சுயமரியாதைத் திருமணம் என்பதைக் கட்டுரை ஆரம்பத்தில் பார்த்தோம். ஆரம்ப காலத்தில் தீவிரமாக இவ்வகைத் திருமணம் செய்துகொண்ட தொண்டர்கள், தங்கள் தலைவர் ஈ. வெ. ரா. வே சுயமரியாதைக் கொள்கைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இரண்டாவது திருமணம் அரசாங்கப் பதிவு அலுவலகத்தில் செய்துகொண்டதையடுத்து ஊக்கமிழந்தனர். மேலும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் சுயமரியாதைத் திருமணத்தை வெறும் அரசியல் நாடகமாகவே பார்க்கத் தொடங்கி அதற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்க மறுத்ததனால், தங்கள் திருமணம் வெறும் நகைப்புக்கு இடமளிக்கும் கேலிக்கூத்தாக ஆகிப்போனதையும் அவர்கள் உணர ஆரம்பித்தனர். ஈ. வெ. ரா. வின் இரண்டாம் திருமணத்தையடுத்து மனம் வெறுத்து தி. க. விலிருந்து பிரிந்து வந்த அண்ணா, 1949-ல் தி. மு. க. தொடங்கியபின் தொண்டர்கள் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துதல் இல்லாமல் போனது. தி. மு. கவிலிருந்து பிரிந்து வந்த எம். ஜி. ஆர் அவர்கள் 1972-ல் அ. தி. மு. க. தொடங்கியதும், சுயமரியாதைத் திருமணம் சுத்தமாகவே நின்றுபோனது. தற்போது, தி. மு. கவிலும், தி. க. விலும் சிலர் மட்டுமே இந்தக் கேலிக்கூத்தைத் தொடருகின்றனர்.
இத்தருணத்தில், ஈ. வெ. கிருஷ்ணசாமி (ஈ. வெ. ரா. வின் சகோதரர்) குடும்பத்தில் நடந்த ஒரு பழைய சம்பவம் நினைவுகூரத் தக்கதாகும். ஈ. வெ. ராவின் காலத்திற்குப் பிறகு ஈ. வெ. கியின் குடும்பத்தில் ஒரு திருமணம் நடந்தது. அது சுயமரியாதைத் திருமணம் என்கிற நினைப்பில் அதில் கலந்துகொள்ள மணியம்மை எத்தனித்தபோது, அன்று காலையிலேயே இந்துமத கலாசார மற்றும் சம்பிரதாயப்படி திருமணம் முடிந்துவிட்டது என்கிற செய்தி கிட்டி அதிர்ச்சி அடைந்தார். பிறகு திருமணத்தைப் புறக்கணித்த அவரை பெரிதும் முயற்சி செய்து சமாதானம் கூறி அழைத்துப் போயினர் ஈ. வெ. கி. குடும்பத்தினர். இச்சம்பவம் தி. க இயக்கத்தின் “விடுதலை” பத்திரிகையில் விவரமாக அப்போது பிரசுரமானது.
தொண்டர்களும் தங்களின் தலைவர்கள் தலைமையில் திருமணம் நடக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக வெளிப்படையாக சுயமரியாதைத் திருமணமும், அதற்கு முன்போ பின்போ ரகசியமாக தங்கள் கலாசார வழக்கப்படியான உண்மையான பாரம்பரியத் திருமணமும் செய்துகொள்வது வழக்கமாகிப்போனது. தலைவர்களும் தங்களுக்காக நடத்தபடும் சுயமரியாதைத்திருமண மேடைகளை எதிர்கட்ச்சித் தலைவர்களைத் திட்டுவதற்கும், இந்து கலாசாரத்தை இழிவாகப் பேசுவதற்கும் ஏற்ற அரசியல் மேடைகளாக மாற்றி அறுவறுக்கத்தக்க கழகக் கலாசாரத்தை காட்டி வருகின்றனர். மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தலைவர்களின் பிறந்த நாட்கள் விழாக்களின் போது குறிப்பிட்ட எண்ணிக்கை அளவில் ஜோடிகள் “ஏற்பாடு” செய்யப்பட்டு – பாதிபேர் ஏற்கனவே திருமணம் செய்தவர்களாக இருப்பார்கள், மீதிப்பேர் கிடைக்கிற சன்மானத்திற்காக, குழந்தை குட்டிகளை வீட்டில்விட்டுவிட்டு, ‘நடிக்க’ முன்வந்திருப்பார்கள் – அவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் நடக்கும். எல்லாவற்றையும் மிஞ்சும் மிகப்பெரிய தமாஷ் என்னவென்றால், தலைவர்களின் குடும்பங்களிலேயே, கடவுள் மறுப்பும், பகுத்தறிவும், சுயமரியாதைத் திருமணங்களும் காணாமல் போனதுதான்!
முடிவுரை
தற்போது திருமணமாகியும், வேலை பார்ப்பதற்கும், வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளதால், விஸா (VISA) ஆவணங்களுக்காக பதிவுத் திருமணம் செய்வது என்பது தேவையான சம்பிரதாயமாக ஆகிப்போனதால், சட்ட அங்கீகாரம் இருந்தும் சான்றிதழ் போன்ற ஆவணம் கிடைக்க வழியில்லாததால் சுயமரியாதைத் திருமணம் உபயோகமற்றதாக ஆகிப்போனது. கலப்புச் சாதித் திருமணங்களும், காதல் திருமணங்களும் சுயமரியாதைத் திருமணங்களாகத்தான் நடக்கும் என்று பகல் கனவு கண்டுகொண்டிருந்த கருப்புச் சட்டைகள், அவைகள் மாங்கல்யத்துடன் மங்களகரமாகக் கோவில்களிலேயே நடப்பது கண்டு ஏமாந்துபோய் நிற்கின்றனர். சுயமரியாதைத் திருமணம் என்கிற கலாசாரச் சீர்கேடு குறைந்து போய் வெறும் அரசியல் கேலிக்கூத்தாக மாறியது தமிழகத்திற்கு நல்லது.
//
இந்துத் திருமணச் சட்டத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இந்திய கிறிஸ்துவ மற்றும் இந்திய இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் எந்த விதமான திருத்தங்களும் செய்யப்படாததால், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் செய்துகொண்டுள்ள சுயமரியாதைத் திருமணங்கள் இன்றுவரை செல்லாது என்பதே உண்மை. இந்த மிகப்பெரிய குற்றம் இன்றளவில் களையப்படாமலே இருக்கின்றது.
//
இது தெரிந்தே செய்த சதி. ‘சுயமரியாதை’ என்று வந்து விட்டபிறகு அது என்ன இந்து மதத்துக்கு மட்டும்? ஏன் மற்ற எல்லா மதத்தை சேர்ந்தவர்கள் நாத்தீக மதத்தில் சேர்ந்தபின்னும் அவர்களுக்கு சுயமரியாதை கிடையாதா என்று கேட்கத்தெரியாத மாங்காய்களாக
‘பகுத்தறிவு’ வியாதிகள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. உண்மையில் எல்லா மதத்துக்கும் சேர்த்து சட்டம் போட்டிருந்தால் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் கடுமையாக எதிர்த்திருப்பார்கள். அதற்கு பயந்து கொண்டே இப்படி இந்து மதத்து சுயமரியாதை திருமணம் என்று சட்டம் இயற்றியிருக்க வேண்டும்.
விவரமான மற்றும் விவகாரமான கட்டுரை. நண்பர் தமிழ்செல்வன் பேசாப்பொருளைப் பேசத் துணிந்துவிட்டார்.
சுயமரியாதை திருமணச் சட்டம் பற்றி ஒரு தகவல்: சட்டத் திருத்தத்தை அவையில் தாக்கல் செய்த முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை `ஹிந்து சமுதாயம் விவேகானந்தர் விரும்பியபடி அமையவேண்டும் `என்று கூறினார்.
இதைப் பற்றி சுமரியாதைக்கரர்கள் சொல்லப் போவது என்ன?
அன்புடன்
சுப்பு
அருமையான கட்டுரை.
சோமு
Many Hindus who undergo marriage rituals get their marriages registered these days for visa purposes. So that option is available for those who committ themselves to suyamariathai marriages.
I dont understand the logic behind this article. Registered marriage was an option even then. In the event of dispute mere non-registration would not nullify a wedding for legal purposes. All personal laws
need reform. When Ambedkar tried to initiate this the opposition came from conservative Hindus.
கல்யாண தேதிகளில் கோவில்களில் அலைமோதும் தமிழ் ஹிந்துக்களின் கூட்டம் .திரவிடவாதிகளுக்கு கொடுக்கப்படும் செருப்படி
சமீபத்தில் என் உறவினர் பெண் ஒருவர் பட்டியல் இனத்தவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்திற்கு பெண்ணின் பக்கம் இருந்து சிலர் ‘புரட்சி’ என்று நினைத்து சென்றிருந்தார்கள். அங்கே திருமணம்(!) ஆரம்பித்ததும் பறை இசையுடன் ஆரம்பித்து, தாலி கட்டியவுடன் அடுத்த ஒரு மணி நேரம் ஒரு லிஸ்ட் போட்டு அனைவரையும் திட்ட ஆரம்பித்து விட்டனர். இதை பார்த்து சிலர் நெளிந்து சிலர் வெளியே வந்து விட்டனர்.
ஒரு நல்ல நிகழ்ச்சி கூட வெறும் வெறுப்பை உமிழும் கூட்டமாக ஆகிப்போனது தான் வேதனை.