நவராத்திரிப் பாட்டு – பொழுது புலர்கிற வேளையிது…

புன்னகை எழுதுக பூவிதழே- நல்ல
பொழுது புலர்கிற வேளையிது
மின்னலை எழுதும் கிரணங்களால்-வான்
மிளிர்ந்து மலரும் நேரமிது
தன்னிலை உணர்ந்தநல் ஞானியரும்-ஒளி
தனக்குள் தேடிடும் சாதகரும்
அன்னையின் தளிர்க்கரம் தீண்டியதில்-தம்
ஐம்பொறி அவிக்கும் காலமிது

cosmic_goddess_bhuvaneshvariவெண்ணிற முகில்கள் வான்பரப்பில்-ஒரு
விசித்திர லஹரியில் மிதந்திருக்கும்
பண்ணொலி மிழற்றும் பறவைகளும்-அன்னை
புகழினை எங்கும் ஒலிபரப்பும்
கண்களில் அமுதம் கசிந்திருக்க-தவம்
கனிந்த உயிர்கள் சிலிர்த்திருக்கும்
வண்ணங்கள் விசிறும் தூரிகையால்-கீழ்
வானத்தின் கன்னம் சிவந்திருக்கும்

ஆதவக் கீற்றுகள் அவள்கொடைதான் -அந்த
அருவியின் தாளங்கள் அவள்நடைதான்
மாதவம் புரிபவர் மனக்கதவம்-தொடும்
மலர்க்கரம் அன்னையின் அருளொளிதான்
பாதங்கள் பதித்தவள் பவனிவர-நீலப்
பட்டுக் கம்பளம் வான்வெளிதான்
நாதமிசைக்கிற கடலலைகள்- எங்கள்
நாயகி நகைத்ததன் எதிரொலிதான்

தத்துவம் அவளது கால்விரல்கள்-அன்னை
திருவடி இரண்டும் மறையொளியாம்
வித்தகர் அறிவே பட்டாடை-அவர்
விநயம் அன்னையின் அணிகலனாம்
சித்திரக்காரர்தம் தூரிகைகள்-இன்னும்
சிந்திக்காதது அவள்நிறமாம்
நித்தில நிலவொளி புன்னைகையாய்-மின்ன
நயனங்கள் தருவதே கதிரொளியாம்

2 Replies to “நவராத்திரிப் பாட்டு – பொழுது புலர்கிற வேளையிது…”

  1. Pingback: tamil10.com
  2. முத்தான மரபின் மைந்தன் முத்தையா – இந்து
    மரபிற்கொரு கவிதை தந்தமைக்கு நன்றியையா!
    சத்தான தங்கள் மொழி யறிவையா – சொத்தாக
    வரட்டும் தமிழ் இந்து தளத்திற்கையா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *