இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

4233-night-sky-at-25-degreeமனிதன் எப்போதும் ஒளியைத் தேடுகின்றான். ஆனால் ஒளியிலேயே நீண்டகாலம் அவனால் வாழமுடியாது. இருளைக் கண்டு அவன் அஞ்சுகிறான்,  ஆனால் இரவு தரும் உறக்கத்திற்காக, ஓய்விற்காக அவன் அதை நாடியே ஆகவேண்டும்.  இயற்கையின் விசித்திரம் இது. உயிர்கள் அனைத்தும் ஓய்ந்து,  லயமடையும் காலம் இரவு.  இரவின் ஆழ்ந்த உறக்கத்தில் மனித  மனம் அறிந்த உலகில் இருந்து அறியாத உலகத்திற்குப் போகிறது, மீண்டும் அறிந்த உலகிற்குத் திரும்புவதற்காக.

இரவு அச்சமூட்டுவது, வசீகரிப்பது,  மர்மங்களும் ஆழ்ந்த அமைதியும் கொண்டது. அதனால் தான் நம் மரபில் இரவைப் பெண்ணாக, தேவியாக உருவகித்தார்கள் போலும்!  ’ராத்ரி’  என்ற சொல்லுக்கு  ஓய்வும் அமைதியும் அளிப்பவள் (ரா+த்ரி) என்று சம்ஸ்கிருதததில் பொருள் உண்டு.  ராத்ரி என்னும் தேவியைக் குறித்து ரிக்வேத ரிஷி செய்த தொல்பழம் பாடல் அழகானது.  ஆழ் இருளிலும்  ஒளி காணும் சத்தியதரிசியின் கவிமனம் அதில் புலப் படுகிறது.

இரவுத்  தேவி வந்துவிட்டாள்
கண்ணால் எங்கும் பார்க்கிறாள்
ஆபரணங்கள் அனைத்தையும் பூண்டுவிட்டாள்.

அகண்ட ஆகாயத்தையும், பள்ளங்களையும் மேடுகளையும்
அவள் நிறைத்து விட்டாள்
ஒளியால் இருளை விரட்டி விட்டாள்.

காவல் பொறுப்பை உஷையிடம் இருந்து ஏற்றுவிட்டாள் அவள்.
இருள் பயந்து ஓடுகிறது.

மரத்தில் உள்ள கூட்டுக்குச் செல்லும் பறவைகள் போல
நீ வந்ததும் வீடு  திரும்பினோம் நாங்கள்.

ஊரார்கள், கால்நடைகள், பறவைகள்
பேராசைப் பருந்துகள் கூட
வீடு திரும்பிவிட்டன.

அலைபோல் ஊரும் இரவுத்தேவி
ஓநாய்களை விரட்டு
வழியில் பயமில்லாமல் நாங்கள் போகவேண்டும்.

கருப்பாக அணிகள் அணிந்து
கடன் போல் வந்துள்ள
இருளை நீக்கிவிடு.

மாடு  ஓட்டுவது போல்
இந்த ஏழை இறைஞ்சலை, துதிகளை
உன்னிடம் அனுப்புகிறேன்.
இரவுத் தேவி,
வெற்றி வீரனுக்கு அளித்த புகழ்மாலையாக
இதை ஏற்றுக் கொள்.

–  அமரர் தி.ஜானகிராமன் எழுதிய “அம்மா வந்தாள்”  என்ற நாவலில் இருந்து.  ராத்ரி ஸூக்தம் (ரிக்வேதம் 10.127) என்ற மந்திரத்தின் நேரடி  மொழியாக்கம் இது.

உயிரினங்கள்  அனைத்தும் ஒடுங்கும் இரவில் தான் நம் அகம் விழிப்படையும் தருணங்களும் பொதிந்துள்ளன.  உலகின் வெளித்தோற்றங்கள் அனைத்தும் காரிருளில்  கரைந்து  மறையும்  அந்தக் காலவெளியை, அக எழுச்சியை விழையும் அனைத்து விதமான மாந்தர்களும் சரணடைகிறார்கள் – ஞானிகள், கலைஞர்கள், கவிஞர்கள், போகிகள், யோகிகள், இலக்கின்றித் தவிப்பவர்கள்  யாராயினும்.

”எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், முனி விழித்திருக்கிறான்; மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரம் எதுவோ, அதுவே முனிக்கு இரவு”  என்று  தன்னைக் கட்டிய முனிவனின் தன்மை பற்றிக் கீதை கூறுகிறது.

”சொற்கள் அடங்கி, பொய்மைகள் எல்லாம் நீங்கி , இந்தப் பரந்து விரிந்த  உலகம் உறங்குகிறது. நான் மட்டும் தான் விழித்துக் கொண்டிருக்கிறேன்” என்று  தன்னை இழந்து காதல் வயப்பட்ட பெண் தன் பேதை நெஞ்சிடம் புலம்புகிறாள் –

நள்ளென்றன்றே யாமம்  சொல்லவிந்து
இனிதடங்கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே.

(பதுமனார், குறுந்தொகை).

மெதுவாகக் கவியத் தொடங்குகிறது இரவு.  காதல் வசப்பட்டுத் தவிக்கும் உள்ளத்தில் அது ஜ்வாலையாகப் பற்றிக் கொள்கிறது. நேரம் செல்லச் செல்ல,  அது கவிந்து எரியத் தொடங்குகிறது. இரவோ நீண்டு முடிவில்லாமல் தொடர்கிறது.   உலகமே கடலில் மூழ்கி பிரளய காலமாகி விட்டதோ என்று ஆதுரம் பொங்கும் அந்த நெஞ்சம் அலைபாய்கிறது –

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதனால்….
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே? வல்வினையேன் ஆவி காப்பார் இனியே?

(நம்மாழ்வார், திருவாய்மொழி).

இரவும், அதன் இயல்பான இருளும்  ஆக்கம், அழிவு இரண்டுக்குமே காரணமாகின்றன.  இந்து சிந்தனை மரபில்  சிருஷ்டி,  பிரளயம் ஆகிய இரண்டையும் பற்றிக் கூறும்  தத்துவ வெளிப்பாடுகளிலும், கவிதைகளிலும் இருள் குறிப்பிடப் பட்டுள்ளது.  பிரபஞ்ச சுழற்சியில் மாறி மாறித் தொடரும் முடிவின்மையின் இரு கூறுகளே ஒளியும், இருளும் – ஆக்கமும், அழிவும் என்பதை நம் சிந்தனை மரபு ஆதியிலேயே கண்டுகொண்டது.

இருள் இருளால் மூடப்படிருந்த வெளி
ஏதுமின்மையால்  வேறுபாடற்றிருந்த,
எங்கும் நீராக இருந்த வெளி
முடிவற்ற வெம்மையால் (தவத்தால்)
தானே  இருப்பாக (”சத்”) ஆகியது.

ரிஷிகள் தங்கள் அகத்துள் தேடி
இன்மையில் (அசத்) இருப்பைக் (சத்) கண்டனர்.
அதன் ஒளிக் கதிர்கள்  இருளில் விரிந்தன.

– நாஸதீய சூக்தம்,  ரிக்வேதம்  (இது பற்றிய ஒரு விளக்கத்தை இங்கே படிக்கலாம்).

புற இருள் போன்று  மனித அகத்தில் படரும் இருளே தீமையாக  உருவெடுக்கிறது.   இந்த மன இருளே  எதிர்மறையான காம, குரோதமாகவும்,  பேராசையாகவும், வெறியாகவும் மாறி தீமைகளை விளைக்கிறது.  பெரும் தீய குணங்கள் எதுவும் இல்லாத மாந்தரிடத்தும், எஞ்சியிருக்கும் அக இருளின் கீற்று தான்  குறுகிய எண்ணங்களாகவும், பேதபுத்தியை விளைவிக்கும் அகங்காரமாகவும், அறியாமையாகவும் தொடர்கிறது.  இந்த இருள் தம்மைப் பற்றாதிருக்க வேண்டும் என்று  அடியார்கள்  இறை சக்தியை வேண்டுவதை நம் பக்தி இலக்கியம் நெடுகிலும் காண்கிறோம்.  “மனத்திருள் மூழ்கிக் கெடலாமோ”  என்று  திருப்புகழும்,

… அடியேன் மனத்து
இருளேது மின்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

என்று அபிராமி அந்தாதியும் வேண்டுகின்றன.

புராணங்களில்  தேவ-அசுர யுத்தமாக உருவகிக்கப் பட்டிருப்பதும் இந்த அக இருளே.  மார்கண்டேய புராணத்தில்  அன்னை பராசக்தியின்  பெருமையைக் கூறும்  தேவி மகாத்மியம் என்ற பகுதி உள்ளது,  இது இப்புராணத்தின் கண் அடங்கிய தனி நூல் என்றும் கூறலாம். சாக்த மதத்தின் தோத்திர, சாத்திர, புராண நூலாகக் கருதப் படும்  தேவி மகாத்மியம் பகவத்கீதை போன்றே  700 சுலோகங்களை உள்ளடக்கியது. மன இருளின் வெவ்வேறு பரிமாணங்களாக வரும் தீய அரக்கர்களை தேவி பல வடிவங்கள் எடுத்து வதம் செய்யும் புராணக் கதைகளும்,  அதன் ஊடாக சக்தி தத்துவத்தை விளக்கும் தோத்திரங்களும் இதனுள் அடக்கும்.

இதில் முதல் அத்தியாயமாக வருவது மது கைடபர் வதம்.

sheshashayi_vishnu_madhukaitabha_and_adishakti_hh23கல்பம் என்ற காலச் சுழற்சியின் முடிவில் எங்கும் நீர்பரவி பிரளயம் ஏற்படுகிறது. அதன் நடுவில் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கிறார் மகாவிஷ்ணு. அவரது காதில் உள்ள அழுக்கிலிருந்து  (கர்ண-மலம்) மது, கைடபர்கள் என்ற இரு பயங்கர அரக்கர்கள் தோன்றுகின்றனர்.  சிருஷ்டியின் தொடர்ச்சிக்காக  விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் தோன்றிய படைப்புக் கடவுளான பிரம்மதேவரை,  அவர்கள் கொல்ல முயற்சிக்கின்றனர்.  உறங்கும் தெய்வீக சக்தி எழ வேண்டி அதனை தியானிக்கிறார் பிரம்ம தேவர் –

பிரபஞ்சத்தின் இருப்பிற்குக் காரணமான மகாமாயையின் மகிமையின் விளைவல்லவோ இது?  இந்த  மகா மாயையே உலக நாயகனாகிய ஹரியின் யோக நித்திரையாகிறாள்.   அவளால் உலகம் மயக்கப் படுகிறது. ஞானிகளுடைய சித்தங்களையும்  தேவி பகவதி வலுவில் கவர்ந்து மோகத்தில் செலுத்துகிறாள்.  அதனால் அல்லவோ   அசைவதும், அசையாததுமான இந்த சராசரம்  சிருஷ்டிக்கப் படுகிறது!   (தேவி மகாத்மியம் 1.54-56)

கால ராத்ரி: மஹா ராத்ரி: மோஹ ராத்ரிஸ்ச  தாருணா
த்வம் ஸ்ரீ: த்வம் ஈஸ்வரீத்வம் ஹ்ரீ: த்வம் புத்தி: போதலக்ஷணா

காலமாகிய இரவும், பேரிரவும், மோகமாகிய இரவும், பயங்கர வடிவினளும் நீயே.
நீயே திரு,  நீயே இறைவி, நீயே இதயம், நீயே தெளிந்த அறிவு.
(தேவி மகாத்மியம் 1.79)

உடனே, விஷ்ணு தன் அறிதுயிலில் இருந்து எழுந்து,  அரக்கர்களுடன் போரிட்டு அவர்களை அழித்தார். பிரபஞ்ச இயக்கம் தொடர்ந்தது என்று  கூறிச் செல்கிறது புராணம்.

durga_faceஇந்த ஆழ்ந்த ஆன்மிகத் தத்துவ வெளிப்பாடுகளை நடைமுறையில் நாம்  உள்வாங்கிக் கொள்வாதற்காகவே நவராத்திரி என்ற அற்புதமான பண்டிகை ஏற்பட்டுள்ளது.  பாரத தேசம் முழுதும் ஒன்பது இரவுகள் கொண்டாடப் படும் இந்தப் புராதன பண்டிகை “சரத்காலே மஹாபூஜா க்ரியதே யா ச வார்ஷிகீ”  (சரத்காலத்தில் வருடம் தோறும் கொண்டாடும் மகாபூஜை)  என்று தேவி மகாத்மியத்திலேயே  (12.12) குறிப்பிடப் படுகிறது.  உலக வாழ்வில் பிடிப்பையும், செயல்திறனையும், மகிழ்ச்சியையும், நல்நெறிகளையும் வேண்டி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றின் உருவகமாக மகா காளி, மகா லக்ஷ்மி, மகா சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும்  வணங்குகிறோம்.   தத்துவ நோக்கில், மூலப் பிரகிருதியின்  முக்குணங்களாக உள்ள  தாமச குணம் (இருள் இயல்பு), ராஜஸ குணம் (செயலூக்க இயல்பு), சத்துவ குணம் (நல்லியல்பு)  இவை மூன்றையும் கடந்து சென்று  ஒருமை நிலையை அடைவதற்காக  மூன்று தேவியரின் தியானம்  என்றும் கூறுவர்.  தாந்திரீக நெறிகளில்  நவராத்திரியின் ஒவ்வொரு இரவுக்குமான பல்வேறு  சாதனைகளும், வழிபாட்டு  முறைகளும் கூறப்பட்டுள்ளன.

பெண்மைக்கு ஏற்றம் தரும் இத்திருவிழா பெண்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை செய்து கொள்ளும் விழாவாகவும்,  ஊரெங்கும் மகிழ்ச்சிக் களியாட்டங்களும், ஆரவாரமும் பொங்கும் விழாவாகவும் உள்ளது.  தீமையை  தெய்வீக சக்தி வெற்றி கொண்ட திருநாளாக இறுதி நாளான விஜயதசமி விளங்குகிறது.

Get this widget | Track details | eSnips Social DNA

ராத்ரி ஸூக்தம்: வேத பண்டிதர் ஸ்ரீராம் கிருஷ்ணமூர்த்தி குரலில் (கேட்க மேலே உள்ள ப்ளேயரில் க்ளிக் செய்யவும்)

நவராத்ரியின் ஒவ்வொரு நாள் பூஜை முடிவிலும்,  முதலில் குறிப்பிட்ட ராத்ரி ஸூக்தம் என்னும்  ரிக்வேத துதி ஓதப் படவேண்டும் என்று பல்வேறு  சக்தி வழிபாட்டு நூல்களும் கூறுகின்றன.  இப்பண்டிகையின் தொன்மையான பண்பாட்டுத் தொடர்ச்சிக்கு இதுவும் ஒரு சான்று.

சக்தி தத்துவத்தைப் பூரணமாக தன் வாழ்நாளில் உணர்ந்த மகாகவி பாரதி பாடுகிறார் –

பின்னொர் இராவினிலே – கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு,
கன்னி வடிவமென்றே – களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! – இவள்
ஆதிபராசக்தி தேவி யடா ! – இவள்
இன்னருள் வேண்டுமடா! – பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!

செல்வங்கள் பொங்கிவரும்! – நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே – இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை – இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை – நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

12 Replies to “இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..”

 1. Pingback: tamil10.com
 2. Friends,

  Presently, Navrathri is being celebrated only by certain sect of hindus. We should take steps for celebrating Navrathri by all Hindus.

  The PANDAL culture from Calcutta for Navrathri should be brought in to Tamil Nadu, Andra and Kerala.

  Hindu Organizations should work for that.

  Athiravi

 3. அன்பர் ஜடாயு இந்துசமயத்தின் ஒரு சிறப்பான அம்சத்தை இந்த இடுகையில் தந்துள்ளார்கள். இது அற்புதமான நினைவூட்டு.

  மணிவாசகப் பெருமான் , “வல்வினையேன் தன்னை, மறைந்திட மூடிய மாய இருளை” என இறைவனை அழைக்கின்றார். இருள் + ஐ= இருளை. இங்கு இருள் என்றது திரோதானசத்தி. இதுவும் அருட்சத்தியே. இறைஞானம் பெறுவதற்குப் பக்குவம் பெறுகின்றவரைக்கும் அம்மையின் அருட்சத்தி உயிரை உலகியலில் ஆழ்த்தும். “பொருளே பொருள் முடிக்கும் போகமே, அரும்போகம் செய்யும் மருளே”என்றார் அபிராமபட்டர். இந்தமருளைச் செய்வதுதான் திரோதானமாகிய இருள்.”சோதியனே துன்னிருளே” (சிவபுராணம்72), “இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம்பலம்” (திருக்கோவையார் 73) இருளும் உயிருக்கு அருளும் சிவசத்தியின் வடிவமே .”இருள்சேர் இருவினை” என்ற திருக்குறளில் கூறப்பட்ட இருள் வேறு. இங்குச் சிவபுரானத்தில் கூறப்பட்ட இருள் வேறு. அது ஆணவ இருள். அறியாமையை விளைவிப்பது. இந்த இருள் போகமாகிய மருளைத் தந்து உயிரைப் பக்குவப்படுத்துவது.

  இன்னொரு இருளையும் மணிவாசகர் கூறுகின்றார். “நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே’ இந்த இர்ருள் பேருழிக் காலத்தில் தோன்றும் இருள். உலகங்கள் அனைத்தும் முதற்காரணமாகிய மாயையில் ஒடுங்கி, மாயையும் இரைவன் திருவடியில் தங்கும் நிலை. ஒளிதரும் முச்சுடரும் இனமையால் இருலாயிற்று. இதனைக் காரன கேவலம் என சைவசாத்திரம் கூறும். இந்த இருளில் பிறப்பிறப்பில் வாடிய உயிர்கள் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ளும். போதிய ஓய்வு எடுத்துக் கொண்ட உயிர்கள் மீண்டும் முத்திநிலையை நோக்கிய ஆன்மயாத்திரையைத் தொடரும் நிலையில் இருக்கும். அவற்றிற்கு உடல் கருவிகள் அனுபவம் உலகு ஆகியவற்றைப் படைத்து அளிக்க இறைவன் ஐந்தொழிற்கூத்து நடத்துவான். இதுவே நள்ளிருளில் அவன் பயிலும் நட்டம்.

  கரிய இரவும் அன்னையின் அழகிய கோலம். நன்றி ஜடாயு. இத்தகைய உயரிய இந்துப்பண்பாட்டுச் சிந்தனைகள் ஒருசிலருக்காவது சென்று சேரத் தமிழ் இந்து வழி செய்கின்றது.

 4. ஜடாயு சார்,

  அந்த ராத்திரி சூக்தம் மேகிண்டோஷ் சஃபாரி வலை உலாவியில் ஒலிக்க மறுக்கிறது, சிரமம் பார்க்காமல் யூடியூபில் ஏற்றிவிட்டு இங்கே கொடுத்துவிடுங்களேன்.

 5. எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறீர்கள்! எத்தனை விஷய ஞானம்!! நவராத்திரிப் பண்டிகைக்கு இதைவிடச் சிறந்த படையல் என்ன இருக்க முடியும்?

 6. // ஜடாயு சார்,

  அந்த ராத்திரி சூக்தம் மேகிண்டோஷ் சஃபாரி வலை உலாவியில் ஒலிக்க மறுக்கிறது, சிரமம் பார்க்காமல் யூடியூபில் ஏற்றிவிட்டு இங்கே கொடுத்துவிடுங்களேன். //

  வஜ்ரா, இந்த இணைப்பில் போய் mp3 ப்ளே செய்யலாம் என்று நினைக்கிறேன் –

  https://www.esnips.com/r/hmfl/doc/bc790540-0093-42b8-b7d5-52b4eed22121/Ratri_Suktam_Rigveda

 7. அன்புள்ள ஜடாயு,

  இறைமை ததும்பும் இரவுகள் என்ற இக்கட்டுரை நவராத்திரி சமயத்தில் எனக்கு படிக்க பாக்கியம் கிடைத்தது. உங்களது இக்கட்டுரை மிகவும் அற்புதம்.இறை உணர்வுகளை மிக அற்புதமாக தூண்டிவிடும் உங்களது எழுத்துக்கள் மேலும் மேலும் வளர்ந்து எல்லோருக்கும் இன்பமும், இறைஅருளும் அளிக்க எல்லாம் வல்லான் அருள் புரியட்டும்.

  இந்தக்கட்டுரையின் மீது திரு சி.என்.முத்துக்குமாரசாமி அவர்களின் மறுமொழியும் மிக அற்புதம். உம்மிருவர் பணியும் தொடர மீண்டும் மீண்டும் பிரார்த்திக்கிறேன்.

  சு.பாலச்சந்திரன்
  12.10.2010
  7.06 AM IST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *